சிலம்பின் கதை/ஆய்ச்சியர் குரவை

விக்கிமூலம் இலிருந்து

17. ஆய்ச்சியர் குரவை யாடுதல்
(ஆய்ச்சியர் குரவை)

இமயத்தில் மீன்கொடி ஏற்றியவன் பாண்டியன்; அவனை அடுத்துச் சோழர் புலிக்கொடியையும், சேரர் வில் கொடியையும் ஏற்றினர். தமிழர் வெற்றி நாவலந்தீவு முழுவதும் பரவியது. இப்பாரத நாடு முழுவதும் இவர்கள் ஏவல் கேட்டனர். இச்சிறப்புக்குக் கால்கோள் செய்தவர் பாண்டிய அரசர்கள்.

நாவலந் தீவு தமிழக மன்னர்க்கு அடிபணிந்தது. பாண்டியன் அரண்மனையில் காலை முரசு ஒலித்தது. பொழுது விடிகிறது என்பதை அறிவித்தது. அன்று மாதரி மன்னவன் கோயிலுக்கு நெய்ம் முறை செய்யும் நாள்: அவள் நெய் கொண்டு சென்று தரவேண்டிய முறை வந்தது. அதனால் மாதரி ஐயையை அழைத்து மத்தும் கயிறும் கொண்டு வரச் சொன்னாள். அவற்றை எடுத்துக் கொண்டு தாழியினிடத்துச் சென்றாள்.

தீய நிமித்தங்கள்

குடத்தில் பால் உறைந்து கிடக்கும் என்று எதிர் பார்த்தாள். அது தயிராக வில்லை; உறையாகவேஇல்லை; எருது கண்ணிர் சொரிந்தது.

வெண்ணெயைக் காய்ச்ச முற்பட்டாள்; அது உருகவே இல்லை; உறைந்து கிடந்தது; ஆட்டுக்குட்டி வழக்கமாகத் துள்ளி விளையாடும்; அது அசையாமல் பள்ளி கொண்டிருந்தது.

பசுவோ என்றால் அது நடுக்கம் காட்டியது. எதற்கோ அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தது; அதன் கழுத்து மணி அறுந்து தானே கீழே விழுந்தது.

இவை தீய நிமித்தங்கள், ஏதோ தீமை வர இருக்கிறது என்பதை உணர்ந்தனர். அதைப் போக்க வழி யாது? அதற்கு ஒரே வழி தெய்வத்தை வழிபடுவது; ஆய மகளிர் கூடித் தெய்வத்தைப் பாடுவது; குரவைக் கூத்து ஆடுவது என்று முடிவு செய்தனர். கண்ணகியை அழைத்துக் கொண்டு அவள் காண ஆடுவது தக்கது என்றனர். கண்ணன் தன் முன்னவனாகிய பலராமனுடன் ஆயர் பாடியில் ஆடிய வாலசரிதை என்னும் கதையில் ஒரு பகுதி, நப்பின்னையோடு கண்ணன் ஆடியது, அதில் ஆய மகளிர் பங்கு கொண்டனர். கை கோத்து ஆடுவது அது அதனைக் குரவைக் கூத்து என்றனர். “குரவை ஆடுவோம் வா” என்றாள் மாதரி, “கன்றுகளும் பசுக்களும் துயர் நீங்குக என்று கூறி ஆடுவோம்” என்றனர்.

குரவையாடுதல்

அக்கூத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் எழுவர்; அவர்கள் வீரம் மிக்க இளைஞரையே விரும்பி மணக்கும் உறுதிப்பாடு கொண்டவர்கள். அவர்களுள் ஒருத்தி, “காரி என்ற எருதின் சீற்றத்தை அடக்கியவனையே மணப்பேன்” என்றாள். அவ் எருது கருநிறம் பெற்று விளங்கியதால் “காரி” எனப்பட்டது. அவ்வாறே ஏனையவரும் வெவ்வேறுநிறம் உடைய எருதுகளை அடக்குவோரைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர். நெற்றியில் சிவந்த சுட்டியுடையது ஒர் எருது; மற்றொன்று வலிமை மிக்க இளளருது: நுண்ணிய புள்ளிகளையுடைய எருது மற்றொன்று. பொன் புள்ளிகள் உடையது மற்றொன்று; வெற்றி மிக்க இளம் எருது மற்றொன்று; தூய வெள்ளை நிறம் உடையது மற்றொன்று. இவ்வாறு தனித்தனி எருதுகளைக் குறிப்பிட்டு அவற்றை அடக்குபவருக்கே ஆயர்மகள் உரியள் என்று வீரம் பேசினர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வோர் எருதை வளர்த்தவர்கள். இவர்களே இக்குரவையில் பங்கு கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயர் இட்டு ஆட்டத்தில் பங்கு கொள்ளச் செய்தனர். பண்கள் ஏழு; அவற்றை அவர்களுக்குப் பெயர்களாக இட்டனர். அவை முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம்.

இவ் ஆய மகளிருள் மூவர் கண்ணனாகவும், பலராமனாகவும், நப்பின்னையாகவும் நடித்தனர். மற்றவர்கள் சுற்றி நின்றனர். மாயவன் கழுத்தில் நப்பின்னை துளப மாலையைச் சூட்டினாள். “திருமகளைப் போல் இவள் பேரழகினள்” என்று மற்றவர்கள் பாரட்டினர்; நப்பின்னை கண்ணனுக்கு மாலையிட்டு அவனோடு இணைந்து ஆட ஏனைய மகளிர் மாயவனைப் பாடினர்.

அப்பாடலுக்கு 'முல்லைத் தீம்பாணி' என்று பெயர் வழங்கினர்.

“கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு விளவின் கனியை உதிர்த்தவன்; அவன் இன்று நம் பசுக்கூட்டத்தில் வருவான் வந்தால் அவன் வாயில் கொன்றையம் குழ லிசையைக் கேட்போம்; தோழி” என்ற கருத்துப்படப் பாடினர்.

இவ்வாறே ஏனைய பாடல்களும் அமைந்தன; “பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடந்தவன் அவன் ஆம்பலங்குழல் இசைப்பான்” என்றனர்.

“தொழுநைத் துறையில் குருந்து ஒசித்த மாயவன் முல்லைப் பண் பாடுவான்” என்று பாடினர்.

“ஆடையை ஒளித்தான்; அவன் வண்ண அழகைப் பாடுவோம்; அந்நிலையில் நாணிக் குனிந்த நங்கையின் நளினத்தைப் பாடுவோம்”.

“யமுனை ஆற்றில் கண்ணனின் நெஞ்சம் கவர்ந்த நப்பின்னையைப் பாடுவோம். அன்று நப்பினையின் இதயம் கவர்ந்த இறைவனாகிய கண்ணனைப் பாடுவோம். இருவரையும் பாடுவோம் நாம்”

“ஆடையிழந்தாள்; வளையல்களை நெகிழ்த்தாள்; தன் கைக்கொண்டு தன் மேனியை மறைத்தாள். அந்தப் பேரழகியைப் பாடுவோம் நாம். அவள் முக அழகைக் கண்டு அகம் நெகிழ்ந்தவன் கண்ணன்; அவன் காதலைப் பாடுவோம் நாம்”.

கண்ணனுக்கு இடப்பக்கத்தும் பலராமனுக்கு வலப் பக்கத்தும் நப்பின்னை நின்றாள்.

மற்றும் இடம் மாறிநின்றாள் மற்றொரு முறை; இவ்விருநிலைகளில் நாரதனைப் போல நாதம் எழுப்பி யாழ் இசை இயற்றினர் மற்றவர்கள்.

கண்ணன் பலராமனுடனும் நப்பின்னையுடனும் ஆடிய ஆட்டத்தில் ஆயர் சிறுமியரும் பங்குகொண்டனர் தாளத்துக்கேற்ப அடிபெயர்த்து இவர்கள் ஆடிய குரவைக் கூத்தை யசோதை கண்டு மகிழ்ந்தாள். அதனைச் செப்பிப் பாடினர். உள்வரிப்பாடலாகத் திருமாலைப் போற்றிப் பாடினர்.

தெய்வப் பாட்டினுள் அரசர் வெற்றிகளை உள் வைத்துப் பாடியதால் இவை உள்வரிப் பாடல் எனப் பட்டன; பாண்டியன் இந்திரன் தந்த பொன்னாரத்தைப் பூண்டான்; சோழன் புலிக்கொடியை இமயத்தில் பொறித் தான்; சேரன் கடலில் எதிரிகளின் கடம்ப மரத்தைத் தடிந்தான். இவ்வெற்றி பெற்ற மன்னர்கள் மூவரும் கண்ணனே ஆவர் என்று பாடினர். நாட்டுப் பற்று தெய்வப் பற்றோடு இயைத்துப் பாடினர்.

முன்னிலை வைத்துத் திருமாலைப் பாடுதல்

“மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாக வும் கொண்டு நீ பண்டு ஒரு நாள் கடலைக் கடைந்தாய். அத்தகைய நீ யசோதையின் கயிற்றுக்குக் கட்டுப்பட்டுக் கலக்கம் அடையச் செய்தாய். இது முரண்பாடு; இது வியப்புத் தருகிறது.”

“நீ மண்உண்டபோது உன் வயிற்றில் இந்த உலகமே இருப்பதைப் பார்த்தனர். உலகமே உன் வயிற்றில் அடக்கிய நீ இப்பொழுது வெண்ணெய் உண்டது ஏன்? பசித்தா உண்டாய்? இது உன் விளையாட்டு ஆகாதோ? வியப்பிற்கு உரியது இது.”

“இரண்டடியில் மூவுலகு அளந்தாய், அதற்கு உரி யவன் நீ உன் திருவடி சிவக்கப் பாண்டவர்க்குத் துாதாகச் சென்றது ஏன்? மூவுலகும் உனக்கு உரிமையாகியது. அத்தகைய நீ நாடு கேட்கச் சென்றது வியப்பேயாகும்”

படர்க்கையில் வைத்துத் திருமாலைப்பாடுதல்

“தம்பியோடு காடு அடைந்து இராவணன் அரணாகிய “சோ” என்பதை அழித்தான். அந்த இராமனது வீரம், புகழ் இவற்றைக் கேளாத செவி செவியாகாது”.

“திருமாலைக் காணாத கண் என்ன கண்? இருந்தும் பயனற்றதாகும்; நாரணனை வழுத்தாத நா என்ன நா? அவன் புகழைப் பாடுவோமாக”

"குரவையுள் பாடிப் போற்றிய தெய்வம் நம் கறவை இனத்தைக் காப்பதாக பாண்டியன் வெற்றி முரசு உலகு எங்கும் கேட்பதாக! இந்திரன் முடியைத் தகர்த்து தொடி, யணிந்த அவன்தோளின் சிறப்பைப் பாடுவோமாக" என்று பாடினார்.