சிலம்பின் கதை/நடுகற் காதை
(நடுகற் காதை)
மகிழ்வும் மன நிறைவும்
“சேரன் வாழ்க” என்று சேயிழை மகளிர் வாழ்த்துக் கூறினர். மாலை வேளை, அவர்கள் வீடுகளில் விளக்கேற்றி ஒளி கூட்டினர். மலர்களைத் தூவி மங்கலம் ஆக்கினர்.
களம் கண்ட வீரர்கள் வீடு திரும்பினர். அவர்கள் உளம் மகிழ அவர்கள் காதலியர் அவர்களைத் தழுவி அவர்கள் மார்பில் ஏற்பட்ட தழும்புகளை ஆற்றினர்; யானைக் கோடும் வேலும், அம்பும், வாளும் பட்ட வடுக் களை அவர்கள் மார்பு அணைப்பில் ஆறவைத்தனர். காதல் மகளிர் கடைக்கண் பார்வை அவர்களுக்குப் பரிசாக அமைந்தது. வீரம் நிறைந்த அவர்கள் ஈரம் மிக்க காதலில் திளைத்தனர்.
காதலியர் கண் பார்வை அதன் நினைவுகள் போர்க் களத்தில் வீரர்களை வாட்டி வதைத்தன; அப்பொழுது அவை நோயை விளைவித்தன. இப்பொழுது அப்பார்வை நோய் தீர்க்கும் மருந்தும் ஆகியது; இவ்வாறு எல்லாம் எண்ணி அவ்வீரர்கள் மகிழ்ந்தனர். தமது துணைவியரை நண்ணி அவர்தம் பேரழகில் ஆழ்ந்து இன்பங் கண்டனர். கண்கள் உரையாடின, முரல் அவர்களை மகிழச் செய்தது; கொங்கைகள் அவர்கள் மார்பினை அணைந்து இன்பம் தந்தன.
இசை பாடும் அழகிய மகளிரைக் கொண்டு யாழ் எடுத்து இசை கூட்டிப் பாலை, குறிஞ்சி முதலிய பண்கள் பல பாட வைத்தனர். அவர்களுக்கு அவர் மனைவியர் புதிய இன்பங்களைக் கூட்டு வித்தனர்.
திங்கள் நிலவு வீசி அவர்கள் அரங்குகளையும் படுக்கை முற்றங்களையும் குளிர்வித்தது. காமன் தன் கணைகளைத் தொடுத்து அவர்கள் காதல் இன்பத்தை மிகுவித்தான்; கிளர்ச்சிகள் பெறச் செய்தான்; வீரர்கள் மகிழ்வு கண்டனர்.
அந்த இன்ப இரவில் செங்குட்டுவன் தன் அரசியோடு அமர்ந்திருந்தான். சாக்கையன் என்னும் கூத்தன் உமைய வளோடு சிவன் ஆடிய கொடிகொட்டி என்னும் ஆடலை ஆடிக் காட்டி அரசனை மகிழ்வித்தான்.
அத்தாணி மண்டபத்தில் அரசன்
அதன்பின் அரசவை கூடும் அத்தாணி மண்டபத்தைச் சேரன் அடைந்தான்.
கஞ்சுக மாக்கள் நீலனைத் தலைவனாகக் கொண்டு வஞ்சி மன்னன் முன் வந்து சேர்ந்தனர். உடன் மாடலனும் வந்திருந்தான். அவர்கள் செய்தி கொண்டு செப்பக் காத்திருந் தனர். சோழன் மூதூர் ஆகிய புகார் நகரத்திற்குச் சென்றதை யும், அங்கு அவன் சித்திர மண்டபத்தில் வீற்றிருந்ததையும், அவனிடம் தாம் ஆரிய மன்னரை அழைத்துச் சென்று காட்டியதையும், அதற்கு அவர்கள் உரைத்த மாற்றத்தையும் விளம்பினர்.
“வீரத்தைக் களத்தில் போட்டுவிட்டு வெறுங்கை யராகத் தவசிகள் கோலத்தில் தப்பிச் சென்றவர்களை மடக்கிப் பிடித்து வந்தது மடமை என்று சோழ அரசன் கூறினான்” என்றனர்.
மற்றும் பாண்டியன் அவைக்குச் சென்றபோது அவனும் அதேபோன்று கூறிச் “சிவனை வணங்கச் சிந்தை கொண்ட எளியவர்களை இழுத்துக் கொண்டு வந்தது சேரனுக்கு இழுக்கு” என்று உரைத்ததாக அறிவித்தனர். மன்னர் இருவரும் மதிக்காமல் உரைத்த மாற்றங்களை நீலன் என்பவன் எடுத்து உரைக்கக் காலன் போல் கடுஞ்சினம் கொண்டு ஞாலம் ஆள்வோன் ஆகிய செங்குட்டுவன் சீறி எழுந்தான்; அவன் தாமரை போன்ற கண்கள் தழல் நிறம் கொண்டன; எள்ளி நகையாடித் தம் ஆற்றலை மதிக்காமல் அவர்கள் தன்னைத் துற்றி விட்ட தாகக் கருதினான். நன்றி மறந்தவர்கள் என்று வென்றிக் களிப்பில் அவர்கள் செயலைக் கண்டித்தான்; அவர்கள் உறவைத் துண்டித்தான்.
மாடலன் அறிவுரை
“மாடலன் எழுந்தான்; மன்னவர் மன்ன! வாழ்க நின் கொற்றம்!” என்று தொடங்கி அவன் சீற்றத்தை ஆற்று விக்கத் தொடங்கினான்.
ஆட்சி ஏற்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன; எனினும் நீ அறச் செயலைக் கருதாது மறக்களமே கருதுகின்றாய்; காயம் இது பொய்; யாருமே உலகில் நிலைத்து வாழ்ந்தது இல்லை. எண்ணிப்பார்; புகழ்மிக்க உன் முன்னோர் மகிழ்வு மிக்க செயல்களைச் செய்து முடித்தனர்; வீரம் விளைவித்தனர்; கடம்பு எறிந்து கடலில் பகைவர்களை வென்றனர்; இமயத்தில் வில் பொறித்தனர்; வேள்விகள் இயற்றி வேத வேதியர்களுக்கு நன்மைகள் செய்து நற்புகழ் பெற்றனர் கூற்றுவனும் அஞ்சும் ஏற்றம் மிக்க வாழ்வு வாழ்ந்து காட்டினர்; யவனர்களை வென்று புவனத்தை ஒரு குடைக் கீழ் ஆண்டனர். இமயம் வரை வென்று தம் வெற்றிக் கொடியை நாட்டினர்; பகைவர்களை அவர்தம் மதிலை அடைந்து அவற்றை அழித்து அவர்களை வென்று அடிமைப்படுத்தினர்; அயிரை மலையினை அடைந்து அதனையும் கடந்து ஆழ்கடலில் மூழ்கிப் புண்ணியம் தேடினர்; நகர்க் காவலுக்குச் சதுக்க பூதங் களைக் கொண்டு வந்து நிறுவி அவற்றின் ஏவலுக்கு அடிபணிந்து மதுக்குடம் கொண்டு வந்து கொட்டி நிரப்பி யாகங்கள் செய்தனர். புகழ்மிக்கு வாழ்ந்தவர் அவர்கள் பூத உடல் இன்று அபூத நிலை எய்திவிட்டது; வாழ்ந்த சுவடுகள் மறைந்துவிட்டன; யாக்கை நிலையற்றது என்பதை இவர்கள் வாழ்க்கை வரலாறுகள் காட்டுகின்றன”. “செல்வம் நிலைக்காது என்பதனை நீயே நேரில் கண்டிருக்கிறாய்; செருக் களத்தில் உன்னிடம் தோற்றவர் கள் இன்று தெருத் தெருவாக வறியவராகத் திரிகின்றனர். செல்வம் நிலைத்து நிற்காது; அதுமாறி மாறிச் செல்லும் என்பது நீ நேரில் கண்டிருக்கிறாய்”.
“இளமை நிலையாது என்பதனை உன் தளர்ச்சிமிக்க வயதே காட்டிவிடும். நரைமுதிர் யாக்கையை நீ கண்டு விட்டாய்; அடுத்தது? சிந்தித்துப்பார்; பிறவிகள் தொடர் கின்றன. அவையும் இன்ன பிறவி என்று உறுதி கூறும் நிலையில் இல்லை. தேவர்கள் மனிதராகப் பிறக்கின்றனர்; மனிதர்கள் விலங்காகின்றனர்; விலங்குகள் நரகர் கதியை அடைகின்றன; ஆடும் கூத்தர் போல் வேறு வேறு வடிவு கொள்கின்றது இந்த உயிர் உயிர் வாழ்க்கை நிலையற்றது; பிறப்புகளும் மாறி மாறி வருகின்றன; அவரவர் செய்யும் வினைகட் ஏற்ப உயிர்கள் பிறப்புகளை ஏற்கின்றன. யாக்கை நிலைத்து இருப்பது அன்று; செல்வம் இடம் பெயர்வது; இளமை அதுவும் மாறுவது நிலையற்ற வாழ்க்கையில் எதுவும் நிலைத்து நிற்காது” என்ற விளக்கம் தந்தான். அடுத்து அவன் செய்யத் தகுவது எது என்று எடுத்துக் கூறத் தொடங்கினான்.
அதற்கு முன்னுரையாகத் தன் நிலை யாது என்று விளக்கினான். பரிசில் பெறுவதற்காக இதைத் தான் கூற வில்லை என்று முன்னுரை தந்தான். “நீ மற்றவர்களைப் போல் உருத் தெரியாமல் மறைவதை நான் விரும்ப வில்லை. பிறந்தவர் இறப்பது பொது நெறி; அவர்களுள் சிலர் வீடுபேறு அடைவது சிறப்பு நெறி; நீ மற்றவர்களைப் போல வாழ்ந்து முடிவதை யான் விரும்பவில்லை; வீட்டுநெறி அடைவது நீ ஈட்டும் செயலாக அமைய வேண்டும்” என்று வழிகாட்டினான்.
“வேள்வி செய்வதே வீட்டு நெறிக்கு வழி கோலுவதாகும்; வேள்வி அறிந்த மறையவர் முன் இருந்து நடத்தும் பெரு வேள்வியை நீ தொடங்க வேண்டும். அதனை இன்றே செய்தல் நன்மை பயக்கும். நாளை செய்குவம் என்று தள்ளிப் போட்டால் உறுதியாக அதை ஏற்றுச் செய்ய முடியும் என்று கூற இயலாது; நல்ல எண்ணம் செயல்படுவதற்கு முன் எமன் வந்து அழைத்துச் சென்றால் என்ன செய்வது? இதுதான் நாளை நடக்கும் என்று உறுதி செய்ய இயலாது; நாளை நடப்பதை யார் அறிய முடியும்? உலகில் அத்தகையவர் யாருமே இல்லை. வேள்விக் கிழத்தியாக வேண்மாள் உனக்குத் துணையாக விளங்க வேள்வி செய்க இருவரும் இணைந்து அறங்கள் பல செய்து வாழ்விராக! மன்னர் பிறர் வந்து உன் அடிகளைப் போற்ற நீ நீடு வாழ்க!” என்று மாடலன் அறவுரை கூறினான்.
மாடலன் உரைத்த அறக் கருத்துகள் நல் வித்துகளாக அமைந்து அவை உள்ளத்தில் பசும் பயிராக வளர்ந்து செயற்பாடு பெற்றன. நான்மறை கற்ற வேத வேள்வியரை அழைப்பித்து மாடல மறையவன் சொல்லிய முறைமை யில் வேள்வியை அமைதியாக இயற்ற வழி வகைகள் செய்யுமாறு ஏவினான்.
அற வாழ்வில் அடியெடுத்து வைத்த அரசன் செங்குட்டுவன் முதற்கண் சிறைப்பட்டுக் கிடந்த ஆரிய மன்னர் ஆகிய கனக விசயரை விடுவித்து அவர்களை விருந்தினராக ஏற்றுப் பூம்பொழில் சூழ்ந்த மாளிகை ஒன்றில் தங்க வைத்தான்; “வேள்விக்கோ என்று அம்மாளிகை பெயர் பெற்று விளங்கியது; “வேள்வி முடிந்ததும் அவர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லலாம்” என்று வேண்டி உரைத்தான். பகைவர்கள் அவனுக்கு நண்பர்கள் ஆயினர். அந்நியர்கள் அவனுக்கு மன்னிய விருந்தினர் ஆயினர்; “அவர்க்கு ஆவன செய்க” என்று அமைச்சனான வில்லவன் கோதைக்கு நல்லுரை கூறினான்.
சிறைப் பட்டுக் கிடந்த சிறுமையோரை விடுதலை செய்யுமாறு ஆணை இட்டான். மற்றும், “பிறநாட்டு அரசர்கள் வந்து குவிக்கும் திறைப் பொருள் இனித் தேவை இல்லை” என்று கூறித் தவிர்த்தான். மக்களுக்கு வரிகள் விலக்கு அளித்தான். இறை செலுத்துவதிலிருந்து அனை வருக்கும் விலக்கு அளித்து அவர்களைப் பெரு மகிழ்வு கொள்ளச் செய்தான். இப்பணியினை அழும்பில் வேள் என்னும் அமைச்சனிடம் ஒப்புவித்தான்.
கோட்டம் அமைத்தல்
அதன் பின் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்தான்; கண்ணகி வாழ்வு மூன்று பேருண்மைகளை விளக்கிக் காட்டியது. அவள் கற்பின் பெருமைக்குக் காரணம் அவள் வளர்ப்பு முறை; அவள் பிறந்த நாட்டின் பின்புலம்; கற்பு சிறப்பதற்கு அரசு நன்கு அமைந்து இருந்தது; கண்ணகி தன் கற்பின் திறத்தால் சோழ அரசன் நல்லாட்சியை உலகுக்கு அறிவிக்க இயன்றது; இது ஒன்று.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என்ற பேருண்மையைப் பாண்டிய நாட்டில் உலகுக்கு உணர்த்தி னாள். அவனுக்குப் பெருமை சேர்த்தாள். அவன் தவறு உணர்ந்து உயிர்விட்டான். அவன் புகழுக்கு உரியவன் ஆயினான்; அவன் மானத்தைத் தூண்டிவிட்டு அவனை மாண்புறச் செய்தாள். கண்ணகியின் செயல் நீதியை நிலைநாட்ட உதவியது; பாண்டியனுக்குப் பெருமை தேடித் தந்தது; அதனால் பாண்டிய நாடு பெருமை பெற்றது.
அடுத்தது சேர நாட்டை அடைந்து அரிய செயலைச் செய்ய அவள் தூண்டியவள் ஆயினாள்; வஞ்சினம் கொண்டு வாள் ஏந்திய மன்னன் வெஞ்சினத்தால் வடவரை எதிர்த்துத் தன் புகழை நிலை நாட்டி வீரச் செயல் முடித்தான் சேர அரசனின் மானம் மிக்க செயலைத் தூண்டி அவன் வீரச் சிறப்பை உலகறியச் செய்தவளும் கண்ணகி ஆவாள். எனவே கண்ணகி தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்தவள் ஆயினாள் என்று அவள் பெருமையைச் சேரன் பாராட்டினான்.
மதுரை மூதுரை எரியழலுக்கு இரையாக்கினாள்; சீற்றம் கொண்டு மதுரையை அழித்துவிட்டுச் சேர நாடு சேர்ந்த நங்கை அவள் போற்றுதற்கு உரியவள் என்று பேசிச் சிறப்பித்தான்.
அவளுக்குச் சிற்ப நூல் வல்லவரைக் கொண்டு கோயில் கட்டுவித்தான். சோதிடர்களைக் கொண்டு நாள் நியமித்தான்; அந்தணர்களைக் கொண்டு சடங்குகள் இயற்றிப் பத்தினிக் கோயில் அமைத்து முடித்தான். அதனை அடுத்துக் கண்ணகியின் படிமத்தை நிறுவி வழி பாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்வித்தான்.
வழிபாடுகள்
இமயத்தின் உச்சியில் உள்ள தெய்வமாகிய சிவனை வழிபட்டுப் பின் விழா எடுத்தான். தெய்வப் படிமத்துக்குப் பொன்னணி பூட்டினான். பூக்களைத் தூவி வழிபாடு செய் வித்தான். காவல் தெய்வங்களைக் கோயில் கடைவாயிலில் நிறுத்தினான். இதற்குக் காப்புக் கட்டுதல்” என்று கூறுவர். இது தொடக்க நிகழ்ச்சியாக அமைந்தது. அதன்பின் வேள்விகளும், விழாக்களும் நாள்தொறும் நடைபெற வழிவகைகளை வகுத்தான். “தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்வீராக” என்று செங்குட்டுவன் அறிவுறுத்தினான். பத்தினிச் சிலையை அங்கே நிறுவி அதனைக் கடவுளாக ஏற்றுப் போற்றி விழாக்கள் நடத்தினான். கோயிலில் கண்ணகி சிலை இடம் பெற்றது. கல்லை நிறுவிக் கடவுள் ஆக்கிக் கோயில் தெய்வமாகக் கண்ணகியை நிறுத்தினான்.