சிலம்பின் கதை/வழக்குரை காதை

விக்கிமூலம் இலிருந்து
20. வழக்கு உரைத்தல்
(வழக்குரை காதை)

கோப்பெருந்தேவி கனவு

கோப்பெருந்தேவி தீக்கனா ஒன்று கண்டாள்; அதை அவள் தன் தோழிக்கு எடுத்து உரைத்தாள்: “அரசனின் செங்கோல் அதனோடு அவன் வெண்கொற்றக்குடை இவை சாய்கின்றன; வாயில் கடையில் வைக்கப்பட்டிருந்த மணி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது; திசைகள் எட்டும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்கின்றன; சூரியனை இருள் விழுங்குகிறது; வானவில் இரவில் தோன்றுகிறது; பகலில் நட்சத்திரங்கள் கொள்ளிக்கட்டைகள் போல நெருப்பை அள்ளி வீசுகின்றன”.

இவற்றை எடுத்துக்கூறி “அடுத்து என்ன நடக்குமோ” என்று அரசி அஞ்சினாள். “இதனை மன்னவனுக்கு அறிவிப்போம்” என்று கூறினாள். தன்னை அந்தப்புரத்துப் பரிவாரப் பணிப்பெண்கள் சூழ்ந்துவர அரசி மன்னன் அவையை அணுகினாள். “அரசி கோப்பெருந் தேவி வாழ்க” என அறிவித்த வண்ணம் ஆயத்தவர் அரசி யோடு அரசனை அணுகினர். பாண்டிமாதேவி அரசனுக்குத் தான் கண்ட தீக்கனவை எடுத்து உரைத்தாள். அரசன் அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அரியாசனத்தில் அமர்ந்திருந்தான்.

வாயிலோனை விளித்தல்

வெளியே கடுமையான குரலில் கண்ணகி வாயிற் காவலனை விளித்துக் கூறினாள்; “வாயில் காப்பவனே! அறிவிழந்து நெறிதவறிய அரசனின் காவலன் நீ! நீ சென்று அறிவிப்பாயாக! கையில் ஒற்றைச் சிலம்பை ஏந்திக் கற்றைக் குழலாள் ஒருத்தி இழந்து வாசற் கடையில் நின்று கதறுகின்றாள் என்று அறிவிப்பாய்” என்று ஆணையிட்டாள்.

அவன் உள்ளே சென்று வாழ்த்துக் கூறி அரசனிடம் வந்தவளைப்பற்றி அடித்து விழுந்து கொண்டு அலறிய வண்ணம் தெரிவித்தான். “கணவனை இழந்தவள் வாயிற் கடையில் வந்து நிற்கிறாள்; அச்சம் தரும் வடிவில் அவள் காணப்படுகிறாள். தாருகனின் மார்பைக் கிழித்த பேர்உரம் படைத்த காளிபோலக் காட்சி தருகிறாள். ஆவேசம் கொண்டவளாக இருக்கிறாள்” என்று அறிவித்தான்.

வழக்கு உரைத்தல்

“அவளை உள்ளே வரவிடுக” என்று அரசன் கூற வாயிற்காவலன் அவளை அழைத்துச் சென்று உள்ளே வர விட்டான். மன்னவனைக் கண்டாள்; அவன் இவள் கண் ணfரைக் கண்டு கருத்து அறிய விழைந்தான். “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள்.

“ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”.

“புகார் நகரில் மாசாத்துவான் என்னும் வணிகன் மகன் ஆகிய கோவலன் வாழ்க்கையைத் தேடி ஊழ்வினை துரப்ப நின் நகர் புகுந்தான். என் காற்சிலபைக் காசாக்க வந்தவனை மாசு ஆக்கி உயிர் பறித்தாய்; கொலைக்களப்பட்டான். அக் கோவலன் மனைவி நான்; கண்ணகி என்பது என் பெயர்” என்று கூறினாள்.

“கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று; அரசனது கடமை” என்று அறிவித்தான் அரசன்.

“நற்றிறம் படராக்கொற்கை வேந்தே! என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் கொண்டது” என்று எடுத்துக் கூறி னாள்; சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக வழக்கை அவள் எடுத்துப் பேசினாள்.

“எம் சிலம்பு முத்துப்பரல்கள் கொண்டது” என்று கூறியவனாய் அரசன் அதனைக் கொண்டு வந்து முன் வைக்கச் சொன்னான்.

கண்ணகி முன் சிலம்பினை வைக்க அதனை அவள் உடைக்க அதிலிருந்து பரல் ஒன்று தெறிக்க அது மன்னன் வாய் இதழில் பட்டது; மணி கண்டான்; அவ்வளவுதான், வாய்ச் சொற்கள் அடங்கி விட்டன. மனம் தளர்ந்தான்; அவன் செங்கோன்மை சீர்அழிந்தது; அவன் வெண் கொற்றக் குடை சாய்ந்தது.

“பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்; என்னால் இம்மரபு மாசுபட்டது; கெடுக என் ஆயுள்” என்று கூறித் தன் உயிரை விட்டான். அவன் இன்றித் தான் வாழ முடியாது என்பதை உணர்ந்து அரசி நடுங்கியவளாய் அவன் இணையடி தொழுது வீழ்ந்தனள், அவளும் அவனோடு உயிர்விட்டாள்.

கண்ணகி கடுஞ்சினம்

“தீமை செய்தவரை அறக்கடவுள் வாட்டும் என்பது இப்பொழுது உண்மை யாயிற்று” என்று கூறியவளாய்க் கண்ணகி, “வடுவினைச் செய்தான் மன்னவன்; அவன் தேவி நீ கடுவினை உடைய யான் இனிச் செய்வதைக் காண்பாயாக” என்று கூறிய வண்ணம் வெளியேறினாள்.

“கண்ணகியின் கண்ணிரும், சிலம்போடு வந்த தோற்றமும், விரித்த கூந்ததும், உயிர்ப்பு அற்ற தோற்றமும் பாண்டியன் உயிரைச் செகுத்தன. கூடல் நகரத்து அரசன் இப்பொழுது வெறும் கூடாயினான்” என்று உலகம் பேசியது.

புழுதிபட்ட மேனியும், அழுத கண்ணிரும், விழுந்த கருங்கூந்தலும், ஏந்திய தனிச் சிலம்பும் கண்ட அளவில் அரசன் தன் வழக்கில் தோற்றான். அவள் சொல்லைக் கேட்ட அளவில் உயிரையும் தோற்றான். இரண்டு தோல்விகள் அடுக்கடுக்காக அவனை அடைந்தன.