உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்போ சிலம்பு/இரட்டைக் காப்பியங்கள்

விக்கிமூலம் இலிருந்து

3. இரட்டைக் காப்பியங்கள்

ஏதேனும் ஒரு வகையில் ஒற்றுமை உடைய - அல்லது - தொடர்புடைய இரண்டை இரட்டை என்பது மரபு. இரட்டைப் பிள்ளைகள், இரட்டைப் புலவர்கள், இரட்டை மாட்டு வண்டி, இரட்டை நகரங்கள் (ஐதராபாத்-செகந்தராபாத்) முதலியன இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இவ்வாறு தமிழ்நூல்களுள் இரட்டைக் காப்பியங்கள் என்றால், அப்பெயர், சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களைக் குறிக்கும். கோவலன் - கண்ணகி ஆகியோரைப் பற்றியது சிலப்பதிகாரம். கோவலன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாகிய மணிமேகலை என்பவளைப் பற்றியது மணிமேகலை. முன்னதை இயற்றியவர் இளங்கோவடிகள். பின்னதை இயற்றியவர் மதுரைக் கூல வாணிகன் சாத்தனார். இனி இரண்டிற்கும் உரிய தொடர்புகளைக் காணலாம்

கோவலன், கண்ணகி, சித்திராபதி, வயந்த மாலை, மாதவி, மணிமேகலை ஆகிய கதை மாந்தர்கள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஒன்று மகள் கதை; மற்றொன்று பெற்றோர் கதை. மாதவியின் மகளாகிய மணிமேகலைக்குக் கண்ணகியும் பெற்றோளாக (தாயாக) மாதவியால் குறிப்பிடப்பட்டுள்ளாள். இது ஒருவகை உயர்ந்த பண்பாடு. மணிமேகலை - ஊர் அலர் உரைத்தகாதையில் சித்திராபதியால் அனுப்பப்பட்ட வயந்த மாலையிடம் மாதவி இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

“காவலன் பேரூர் கனையெரி முட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை” (2:54, 55)

என்பது பாடல் பகுதி. இராமாயணத்தில், இராமன் தாய் கைகேயி - கைகேயியின் மகன் இராமன் என்றும், பரதன் தாய் கோசலை - கோசலையின் மைந்தன் பரதன் என்றும் உயரிய பண்பின் அடிப்படையில் கூறும் உறவுமுறை போன்றது இது. எனவே, இரண்டையும் ஒரு குடும்பக் காப்பியம் எனலாம்.

மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனுடன் வந்த இளங்கோவைச் சாத்தனார் கண்டு, கோவலன் கொலையுண்டதும் பாண்டியனும் தேவியும் இறந்தமையும் ஊர் எரிவும் கூறி, பின்னர்க் கண்ணகிமுன் மதுராபதித் தெய்வம் தோன்றி அவளது பழம் பிறப்புச் சாப வரலாற்றையும், பதினான்காம் நாள் கோவலனைக் காண்பாள் என்பதையும் கூறியதை யான் அறிந்துள்ளேன் எனக் கூறினார். செங்குட்டுவனிடமும் இச்செய்தி கூறப்பட்டது.

உடனே இளங்கோ, சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியம் நாம் இயற்றுவோம் என்றார். மூவேந்தர்க்கும் பொதுவாகிய அப்படியொரு நூலை இளங்கோ அடிகளே இயற்றுமாறு சாத்தனார் கூற அடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார். சாத்தனாரும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றினார்.

சிலப்பதிகாரப் பதிகத்தின் இறுதியில் உள்ள,

“உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்

கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்”
(87-89)

என்னும் பகுதியும், மணிமேகலைப் பதிகத்தின் இறுதியில் உள்ள

“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு

ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்” (95-98)

என்னும் பகுதியும் ஈண்டு குறிப்பிடத் தக்கன.

சிலப்பதிகாரத்தின் இறுதியில் ‘நூல் கட்டுரை’ என்னும் தலைப்புடைய பாடலின் இறுதியில் உள்ள

“மணிமேகலைதிேல் உரைப்பொருள் முற்றிய

சிலப்பதிகாரம் முற்றும்” (17 - 18)

என்னும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை என்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூட்டி உரைக்கப்படும் பொருள் முடிந்த சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுதல் உற்றது-என்பது இதன் பொருள்.

இதனால், இளங்கோவும் சாத்தனாரும் பேசிக் கொண்டு இரட்டைக் காப்பியங்களை ஒருவர்க்கொருவர் அறிவித்துக் கொண்டு இயற்றினர் என உய்த்துணரலாம்.

மற்றும், இரண்டு காப்பியங்களிலும் பல செய்திகள் ஒத்துள்ளன. அவை:

இரண்டிலும் முப்பது கதைகள் உள்ளன. இரண்டிலுமே ஒவ்வொரு காதையின் முடிவிலும் ‘என்’ என்னும் ஈற்றுச் சொல் உள்ளது.

பாசறை போல் பல்வேறு பறவைகள் வீற்றிருத்தல்-யானை முன் பறையறைதல்-பூதச் சதுக்கம்-முசு குந்தன் நிலை-தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் நிலை-சமண புத்தச்சார்பு-பல மதங்கள் பற்றிய விவரம்.

ஞாயிறாகிய கணவனை இழத்தல்-காலைக் காட்சி-அந்தி மாலைக் காட்சி-ஞாயிறு திங்கள் புனைவு-கடற்கரைசோலைக் காட்சிகள்-நாடு நகர அரசர் சிறப்புகள்-மணி மேகலை துறவால் நன்மணி கடலில் வீழ்ந்தாற்போல் வருந்துதல்-கற்புடைய மகளிர் தெய்வம் தொழாமை. முதலிய செய்திகள் இரண்டு காப்பியங்களிலும் இடம் பெற்றுள்ளன. விரிப்பின் பெருகும்.

இவ்வளவு ஒற்றுமைத் தொடர்புகள் இருப்பினும், இளங்கோ அடிகள் சமண சமயச்சார்புடையவர் போலவும், சாத்தனார் புத்த சமயச் சார்பினராகவும் தோன்றுதல் வியப்பாயிருக்கலாம். இக்காலத்தில், தந்தையும் மகனும் வெவ்வேறு அரசியல் கட்சியினராகவும், தமையனும் தம்பியும் வெவ்வேறு கட்சியினராகவும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் ஒருவர்க்கொருவர் வெவ்வேறு கட்சியினராகவும் இருப்பினும், பல நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்படுகின்றனர் அன்றோ? அவ்வாறே இளங்கோவையும் சாத்தனாரையும் கருதல் வேண்டும்.

இளங்கோ சாத்தனாரை, ‘தண்தமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூல் புலவன் சாத்தன்’ என்று புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.