சிலம்போ சிலம்பு/மூவேந்தர் காப்பியம்
1. மூவேந்தர் காப்பியம்
மன்னராட்சி நடைபெற்ற பண்டைக் காலத்தில் மன்னர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டனர். குடியரசாட்சி புரியும் இருபதாம் நூற்றாண்டிலும் போருக்குக் குறைவில்லை. நாட்டுத் தலைவர்களின் தூண்டுதலால் நாடுகள் ஒன்றோடொன்று போரிடுகின்றன. போரூக்கம் என்னும் இயல்பூக்கம் எல்லாருக்கும் உண்டெனினும் அதை அமைதி (Sublimation) செய்து திசை திருப்பி வெல்வதற்கு உரிய பொறுப்பு பெரும்பாலும் அரசுத் தலைவர்களிடம் இருப்பதாகத் தோன்றவில்லை.
குறிப்பாகத் தமிழகத்தை எடுத்துக் கொள்ளினும் பண்டைக் காலத்தில் சோழர், பாண்டியர், சேரர் என்னும் முடியுடை மூவேந்தர்களும் அவர்களைச் சார்ந்த அல்லது சாராத சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் இடைவிடாது தொடர்ந்து ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டனர். வரலாறு என்னும் தலைப்பில் உலகில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்கின், பெரும்பாலும் போர்களைப் பற்றிய செய்திகளே இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
பண்டு தமிழகத்தில் ஒளவையார் போன்ற புலவர்கள் சிலர் வேந்தர்களிடையே தூது சென்று அமைதி காக்கப் பாடுபட்டதாகத் தெரிகிறது. புலவர்கள் சிலர் தம்மை ஆதரித்த மன்னர்களைப் போற்றிப் புகழ்ந்த பாடல்களைக் காண்கிறோம். சேர - பாண்டிய - சோழர் ஆகிய முடியுடை மூவேந்தர்களையும் ஒத்த நோக்கில் காணும் உயரிய ஒருமைப்பாட்டுப் புலவர் ஒருவர் இருந்தார் எனில், அவர் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகளே என்று கூறலாம்,
அடிகள் தமது நூலை, (சோழர்க்கு உரிய) புகார்க் காண்டம், (பாண்டியர்க்கு உரிய) மதுரைக் காண்டம், (சேரர்க்கு உரிய) வஞ்சிக் காண்டம் என முப்பெருங் காண்டங்களாகப் பகுத்து அமைத்துள்ளமையால், அவரது நூலாகிய சிலப்பதிகாரம் மூவேந்தர் காப்பியம் என்னும் பெருமையுடைத்து. இதற்கு இன்னும் சான்றுகள் பல உள.
வேனில் காதை
வேனில் காதையில் இளவேனில் காலம் வந்தது பற்றி ஆசிரியர் கூறுகிறார். வடக்கே திருவேங்கடமும் தெற்கே குமரியும் எல்லையாக உள்ள தமிழகத்தில், மதுரை, உறந்தை, வஞ்சி, புகார் ஆகிய இடங்களில் அரசு செய்கின்ற மன்மதனின் துணை யாகிய இளவேனில் வந்தது என்று பாடியுள்ளார்:
“நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம் பறுத்த தண் புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ் துணை யாகிய
இன்னிள வேனில் வந்தனன்” (1—7)
என்பது பாடல் பகுதி. இளவேனில் காலம் வந்தது என்று சொல்ல வந்த இடத்தில், மூவேந்தர்களின் தலைநகர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. அப்படியிருந்தும், பாண்டியர்க்கு உரிய மதுரையையும், சோழர்க்கு உரிய உறந்தையையும் புகாரையும், சேரர்க்கு உரிய வஞ்சியையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தமது ஒருமைப் பாட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தற்கு இந்த இடத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர்.
நெடியோன் = திருமால். தொடியோள் = தொடி யணிந்த குமரி. கடல் என்னும் பொருள் உடைய ‘பெளவம்’ என்பது, கிழக்கு எல்லை மேற்கு எல்லைகள் போல் தெற்கு எல்லையும் கடலே என்பதை அறிவிக்கிறது. குமரிக் கோடு கொடுங்கடல் கொண்டதை, இந்த இடத்திலே உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாப்பமைதி
இளங்கோவின் யாப்பமைதி ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது. முதல் சீருக்குச் சிறப்பாக மூன்றாம் சீரிலே அல்லது நான்காம் சீரிலே மோனை யமைப்பார் - அவ்வாறு மோனை யமைக்காவிடின் எதுகை அமைத்து விடுவார். மேலே தந்துள்ள பாடல் பகுதியை நோக்கின் இது புலனாகும். நெடியோன் - தொடியோள் - எதுகை. தமிழ் - தண் - மோனை. மாட - பீடார் - எதுகை. கலி - ஒலி - எதுகை அரைசு - உரைசால் - எதுகை. மன்னன் - மகிழ் - மோனை. இவ்வாறே மற்ற இடங்களிலும் கண்டு கொள்ளலாம்.
நடுகல் காதை
கண்ணகி மூவேந்தர் வாயிலாக மூன்று படிப்பினைகளை அளித்தாளாம். அரசர் செங்கோல் வழுவாது ஆண்டால் தான் பெண்களின் கற்பு சிறக்கும் என்பதைச் சோழன் வாயிலாக அறிவித்தாளம் செங்கோல் வழுவினால் நேரிய மன்னர்கள் உயிர் வாழமாட்டார்கள் என்பதைப் பாண்டியன் வாயிலாகத் தெரிவித்தாளாம். மன்னர்கள் தாம் சொன்ன சூளுரையை முடித்தாலன்றிச் சினம் நீங்கார் - முடித்தே தீர்வார் என்பதை, வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாளாம். பாடல்:
“அருந்திறல் அரசர் முறை செயின் அல்லது
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து,
செங்கோல் வளைய உயிர் வாழாமை
தென்புலம் காவல் மன்னவற்கு அளித்து,
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்
என்பது பாடல் பகுதி. ஆர் புனை சென்னி அரசர் = ஆத்தி மாலை சூடிய சோழர், தென்புலம் காவல் மன்னன் = தமிழ் நாட்டின் தென் பகுதியாகிய பாண்டிய நாட்டைக் காக்கும் பாண்டிய மன்னன். குடதிசை வாழும் கொற்றவன் = தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆளும் சேரன்செங்குட்டுவன். இந்த இடத்திலும் முப்பெரு வேந்தர்களையும் இணைத்துக் காட்டியுள்ளார் அடிகள்.
வாழ்த்துக் காதை
வாழ்த்து
வாழ்த்துக் காதையில் மகளிர் மாறி மாறி மூவேந்தரைப் பற்றிப் பாடியுள்ளார், ‘வாழ்த்து’ என்னும் தலைப்பில்,
“வாழியரோ வாழி வருபுனல் நீர் வையை
சூழு மதுரையார் கோமான்தன் தொன்குலமே.” (13)
“வாழியரோ வாழி வருபுனல் நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியர் கோமான் தன் தொல் குலமே” (14)
“காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
என மதுரையார் கோமானும் வஞ்சியார் கோமானும் காவிரி நாடனும் வாழ்த்தப்பெற்றுள்ளனர். அவர்தம் நாட்டு நீர் வளமும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. நீர் வந்து கொண்டே யுளதாம் (வருபுனல்) காவிரி நாடன் = சோழன்.
அம்மானை வரி
பெண்டிர் மூவர் கூடிக் காய் போட்டுப் பாடியாடும் ஒரு வகை ஆட்டம் அம்மானையாகும். முதலில் ஒருத்தி ஒரு வினா எழுப்புவாள். அதற்கு அடுத்தவள் விடை யிறுப்பாள். மூன்றாமவள் கருத்தை முடித்து வைப்பாள். வாழ்த்துப் பாக்களை அடுத்து, சோழனைப் பற்றிப்பாடும் அம்மானைப் பாடல்கள் நான்கு உள்ளன. அவற்றுள், மாதிரிக்காக முதல் பாடலை மட்டும் காண்போம்.
“வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கெயில் முன்றெரிந்த சோழன் காண் அம்மானை
பெண்டிர் மூவரும் தமது பாடல்வரியின் இறுதியில் அம்மானை - அம்மானை எனக் கூறி யாடுவர். இவ்வாறு இன்னும் மூன்று பாடல்கள் உள்ளன. அடுத்துப் பாண்டியனிடம் செல்லலாம்.
கந்துகவரி
கந்துகம் = பந்து. வரி = பாட்டு. பந்தாடிக்கொண்டு பாடும் பாட்டு இது. இந்தப் பகுதியில் நான்கு - நான்கு வரிகள் கொண்ட மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாட்டில் உள்ள மூன்றாவது - நான்காவது அடிகளே மூன்று பாடல்களிலும் மூன்றாவது - நான்காவது அடிகளாக உள்ளன. பாடல்:
“தென்னன் வாழ்கவாழ்க என்று சென்றுபக் தடித்துமே
என்பன மூன்று பாடல்களின் இறுதியிலும் வருவனவாகும்.
ஊசல் வரி
சோழனுக்கு அம்மானை வரி யாயிற்று; பாண்டியனுக்குக் கந்துகவரி யாயிற்று. மூன்றாவதாகச் சேரனுக்கு ஊசல் வரிப்பாட்டுகள் மூன்று பாடப்பட்டுள்ளன. ஊசல்-ஊஞ்சல். மூன்று பாடல்களின் இறுதி அடிகள் மட்டும் வருமாறு:
“கொடுவில் பொறி பாடி ஆடாமோ ஊசல்” (23)
“கடம்பெறிந்த வாயாடி ஆடாமோ ஊசல்” (24)
சேரனின் வில் இலச்சினையும் கடம்பு எறிந்த வெற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. வாழ்த்துக் காதையில் இறுதியாக மூவர்க்கும் ஒவ்வொன்று வீதம் வள்ளைப் பாட்டுகள் பாடப்பட்டுள்ளன. உரலில் ஒரு பொருளை இட்டு உலக்கையால் குற்றிக் கொண்டே ஒரு தலைவனைக் குறித்துப் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டாகும். அவை வருக!
வள்ளைப் பாட்டு
“தீங்கரும்பு கல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்
ஆழிக் கொடித் திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்” (26)
“பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
வானவர்கோன் ஆரம்வாங்கியதோள் பஞ்சவன்தன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்’
வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்” (27)
“சந்துஉரல் பெய்து தகைசால் அணிமுத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே வாண்கோட்டால்
கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்
இவை விளையாட்டுப் பாடல்களாகும். கரும்பாகிய உலக்கையாலும், பவழ உலக்கையாலும், யானைக் கோட்டு (தந்தத்து) உலக்கையாலும் குற்றுவார்களாம். உரல் சந்தன மரத்தால் ஆனதாம். சுவைத்தற்கு உரிய இலக்கியம் அல்லவா இது! மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் ‘திருப்பொற்சுண்ணம்’ என்னும் பகுதி ஒன்றுள்ளது. அதிலுள்ள இருபது பாடல்களின் இறுதியிலும் “பொற் சுண்ணம் இடித்து நாமே” என்னும் தொடர் இருக்கும்.
இந்த வாழ்த்துக் காதையை நோக்குங்கால், மூவேந்தரின் சிறப்பைப் புகழ்ந்து கூறுவதற்கே இந்தக் காதையை இளங்கோவடிகள் பயன்படுத்திக் கொண்டாரோ என்று வியக்கத் தோன்றுகிறது.
ஆய்ச்சியர் குரவை
இமய மலையில் பாண்டியர்க்கு உரிய மீன் இலச்சினையும் சோழரின் புலி இலச்சினையும் சேரர்க்கு உரித்தான வில் இலச்சினையும் பொறிக்கப்பட்ட செய்தி ஆய்ச்சியர் குரவைப் பகுதியின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
“கயல் எழுதிய இமய நெற்றியின்
என்பது பாடல் பகுதி.
கட்டுரை காதை
மதுரையின் நகர்த் தெய்வமாகிய மதுராபதி கண்ணகிக்குக் கூறுவதாக உள்ளது கட்டுரை காதை, இதிலும் மூவேந்தரின் சிறப்புகள் மொழியப்பட்டுள்ளன.
சேரர்
பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் படை மறவர்க்கு உணவு அளித்த செய்தி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் மறையவனாம் பாலைக் கெளதமனார்க்குச் செய்த உதவி, நெடுஞ் சேரலாதன் கடம்பு எறிந்த வென்றி, இமய மலையில் வில் பொறித்த வெற்றி ஆகிய சேரர் புகழ் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. பாடல்:
“பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருகிலை பெற்ற பெருநாள் இருக்கை” (55, 56)
“குலவுவேல் சேரன் கொடைத் திறம் கேட்டு” (62)
“வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேல் சேரலன்” (63, 64)
“கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூங்தண் பொருநைப் பொறையன் வாழி
என்பன பாடல் பகுதிகள். அடுத்துச் சோழர் பற்றியன:
சோழர்
புறாவுக்காக நிறைத் தட்டில் ஏறித் தசை அரிந்து தந்த சிபி, கன்றைக் கொன்ற தன் மகனைக் கொன்று ஆவுக்கு முறை வழங்கிய மனுநீதி சோழன் ஆகிய சோழரின் பெருமை குறிக்கப்பட்டுள்ளது. பாடல்:
“புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
என்பது பாடல் பகுதி. அடுத்துப் பாண்டியர் பற்றியன:
பாண்டியர்
பாண்டியன் நெடுஞ்செழியனது ஆட்சியில், மறை ஒலி தவிர, ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்ட தில்லையாம்; அவன் செங்கேல் முறை யறிந்த கொற்றவனாம்; குடிபழி துற்றும் கொடியன் அல்லனாம்:
“மறைநா ஓசை அல்லது யாவதும்
மணிநா ஓசை கேட்டலும் இலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன நல்லது
என்பது பாடல் பகுதி.
கட்டுரை
கட்டுரை காதையின் இறுதியிலுள்ள ‘கட்டுரை’ என்னும் பகுதியில் பாண்டியனின் சிறப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது. பாண்டியர்குலம் அறமும் மறமும் ஆற்றலும் உடையது. மதுரை மூதூர் பண்பு மேம்பட்டது. விழாக்களும், குடி வளமும், கூழ் (உணவு) வளமும், வையைப் பேராறு தரும் செழிப்பும், பொய்யாத வானம் பொழியும் நீர் வளமும், வரிக் கூத்தாட்டும், குரவைக் கூத்தாட்டும் மற்றும் பிற வளங்களும் உடையது. செங்கோல் தவறினமைக்காகத் தேவியுடன் அரசு கட்டில் துறந்து வீழ்ந்து இறந்து வளைந்த கோலை நிமிர்த்திய பாண்டியன் நெடுஞ்செழியனைப் பெற்றது. பாடல்:
“முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ் சுரக் தூட்டலும்
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி என்றிரு விருத்தியும்
நேரத் தோன்றும் வரியும் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்.
வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
என்பது பாடல் பகுதி.
இவ்வாறாக, இளங்கோஅடிகள், முடியுடை மூவேந்தர்களையும் ஒத்த நோக்கில் கண்டு சிறப்பித்துக் கூறியிருப்பதன் வாயிலாக, தமது சிலப்பதிகாரத்தை ‘மூவேந்தர் காப்பியம்’ என மொழியும்படிச் செய்துள்ளார். இந்த ஒற்றுமை நோக்கு இன்றைய உலகில் இடம் பெறுமாயின், இப்போது துன்ப உலகமாக இருப்பது இன்ப உலகமாக மாறும்.
குடிமக்கள் காப்பியம்
இந்தக் காப்பியம் மூவேந்தர்களையும் சிறப்பித்திருப்பதால் மூவேந்தர் காப்பியம் எனக் கூறப்படினும், காப்பியக் கதைத் தலைவனும் தலைவியுமாகிய கோவலனும் கண்ணகியும் குடிமக்கள் ஆதலின் இதனைக் குடிமக்கள் காப்பியம் எனவும் விதந்து கூறலாம்.