சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கண்ணபிரான்
| title = சிவகாமியின் சபதம் | author = கல்கி | translator = | section = கண்ணபிரான் | previous = வாகீசரின் ஆசி | next = கமலி | year = | notes =
}}
முன் அத்தியாயத்தில் கூறியபடி, இதயத்தில் பெரிய பாரத்துடனே மடத்தின் வாசற்பக்கம் வந்து ஆயனர், தம் உள்ள நிலையை வெளிக்குக் காட்டாமல் சமாளித்துக் கொண்டு, சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! இப்பொழுதே நாம் ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா?" என்று கேட்டார்.
"கமலியைப் பார்த்துவிட்டுக் காலையில் போகலாம் அப்பா!" என்று சிவகாமி மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடகடவென்ற சத்தத்துடன் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் ஒன்று அங்கே நின்றது. அதை ஓட்டி வந்த சாரதி ரதத்தின் முன் தட்டிலிருந்து குதித்து வந்து, மடத்து வாசலில் ஆயனரும் சிவகாமியும் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் நல்ல திடகாத்திர தேகமுடையவன் பிராயம் இருபத்தைந்து இருக்கும்.
"ஐயா! இங்கே மாமல்லபுரத்திலிருந்து ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமி அம்மையும் வந்திருக்கிறார்களாமே, நீங்கள் கண்டதுண்டோ?" என்று அவன் கேட்டான்.
"ஓகோ! கண்ணபிரானா? எங்களை யார் என்று தெரியவில்லையா, உனக்கு?" என்றார் ஆயனர்.
"அதுதானே தெரியவில்லை? இந்தச் சப்பை மூக்கையும் இந்த அகலக் காதையும் எங்கே பார்த்திருக்கிறேன்? நினைவு வரவில்லையே?" என்று கண்ணபிரான் தன் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டு யோசித்தான்.
"என் அப்பனே! மண்டையை உடைத்துக் கொண்டு எங்கள் மேல் பழியைப் போடாதே! கமலி அப்புறம் எங்களை இலேசில் விடமாட்டாள். நீ தேடி வந்த ஆயனச் சிற்பியும் சிவகாமியும் நாங்கள்தான்" என்றார் ஆயனர்.
"அடாடாடா! இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா? எனக்கும் சந்தேகமாய்த் தானிருந்தது. ஆனால் 'கண்ணாற் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்' தீர விசாரிப்பதே மெய் என்று கும்பகர்ணனுக்கு ஜாம்பவான் சொன்ன பிரகாரம்.. இருக்கட்டும்; அப்படியென்றால், நீங்கள் தான் ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமியுமாக்கும் ஆனால், உங்களில் ஆயனச் சிற்பி யார்? அவருடைய மகள் யார்?" என்று விகடகவியான அந்த ரதசாரதி கேட்டு விட்டு, அந்திமாலையின் மங்கிய வெளிச்சத்தில் அவ்விருவர் முகங்களையும் மாறி மாறி உற்றுப் பார்த்தான்.
சிவகாமி கலகலவென்று நகைத்துவிட்டு, "அண்ணா! நான்தான் சிவகாமி; இவர் என் அப்பா; நாம் நிற்பது பூலோகம்; மேலே இருப்பது ஆகாசம்; உங்கள் பெயர் கண்ணபிரான்; என் அக்கா கமலி. இப்போது எல்லாம் ஞாபகம் வந்ததா? அக்கா சௌக்கியமா? இன்று இராத்திரி உங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணியிருந்தோம்" என்றாள்.
"ஓஹோ! அப்படியா? கும்பிடப்போன தெய்வம் விழுந்தடித்துக் குறுக்கே ஓடிவந்த கதையாக அல்லவா இருக்கிறது? நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தீர்களா?"
"ஆமாம்; வரலாமா? கூடாதா?"
"ஒருவிதமாக யோசித்தால், வரலாம்; இன்னொரு விதமாக யோசித்தால் வரக்கூடாது."
"அப்பா! நாம் ஊருக்கே போகலாம்; புறப்படுங்கள்!" என்று கோபக் குரலில் சிவகாமி கூறினாள்.
"அம்மா! தாயே! அப்படிச் சொல்லக்கூடாது கட்டாயம் வரவேண்டும். நான் இன்றைக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிய போது கமலி என்ன சொன்னாள் தெரியுமா? 'இதோ பார்! இன்றைக்கு நாவுக்கரசர் மடாலயத்துக்கு ஆயனச் சிற்பியார் வருகிறாராம். அவருடன் என்னுடைய தோழி சிவகாமியும் வந்தாலும் வருவாள். இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டுதான் இராத்திரி நீ வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும்' என்றாள். நான் என்ன சொன்னேன் தெரியுமா? 'அவர்கள் பெரிய மனுஷாள், கமலி! நம்மைப் போன்ற ஏழைகள் வீட்டுக்கு வருவார்களா? வந்தால்தான் திரும்பிப் போவார்களா?' என்றேன். அதற்குக் கமலி 'நான் சாகக் கிடக்கிறேன் என்று சொல்லி அழைத்துவா!' என்றாள்..."
"அடாடா! கமலிக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமா, என்ன?" என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.
"ஆம், ஐயா! ஒரு வருஷமாகக் கமலி அவளுடைய தோழியைப் பார்க்காமல் கவலைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராணனை விட்டுக் கொண்டிருக்கிறாள். முக்கால் பிராணன் ஏற்கனவே போய்விட்டது. மீதியும் போவதற்கு நீங்கள் வந்தால் நல்லது."
"அப்படியானால், உடனே கிளம்பலாம் அதற்குள்ளே இங்கே ஜனக்கூட்டம் கூடிவிட்டது" என்றாள் சிவகாமி.
உண்மையிலே அங்கே கூட்டம் கூடிவிட்டது. நகரத்தில் அந்த நெருக்கடியான பகுதியில் ஆயனரும் சிவகாமியும் அரண்மனை ரத சாரதியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி ஜனக்கூட்டத்தைக் கவர்ந்து இழுத்ததில் ஆச்சரியம் என்ன? ஆயனரையும் சிவகாமியையும் கண்ணபிரான் தான் கொண்டு வந்திருந்த ரதத்தில் ஏறிக்கொள்ளும்படிச் செய்தான். காஞ்சி மாநகரின் விசாலமான தேரோடும் வீதிகளில் இரண்டு குதிரை பூட்டிய அந்த அழகிய அரண்மனை ரதம் பல்லவ ராஜ்யத்தின் சிறந்த ரத சாரதியினால் ஓட்டப்பட்டு விரைந்து சென்றது.
ரதம் போய்க் கொண்டிருக்கையில் சிவகாமி "அண்ணா! உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று நான் சொன்னதற்கு "இன்னொரு விதத்தில் யோசித்தால் வரக்கூடாது என்று சொன்னீர்களே! அது என்ன?" என்று கேட்டாள்.
"தங்கச்சி! மடத்திலிருந்து குமார சக்கரவர்த்தியை அழைத்துப் போனேனல்லவா? அரண்மனை வாசலில் அவர் இறங்கியதும் என்னைப் பார்த்து, 'கண்ணா! ரதத்தை ஓட்டிக் கொண்டு மடத்துக்குப் போ! அங்கே ஆயனரும் அவர் மகளும் இருப்பார்கள்; அவர்களை ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் மாமல்லபுரத்தில் விட்டுவிட்டு வா! அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காதே!' என்று கட்டளையிட்டார். குமார சக்கரவர்த்தி அவ்விதம் கட்டளையிட்டிருக்கும்போது, நம்முடைய வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என்று யோசித்தேன்" என்றான் கண்ணபிரான்.
"சுற்றி வளைத்துப் பீடிகை போடாமல் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாதே?" என்று சிவகாமி கேட்டாள்.
"முடியாது தங்கச்சி, முடியாது! அதற்குக் காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் நான் சின்னக் குழந்தையாயிருந்தபோது..."
"நிறுத்துங்கள்! நான் அதைக் கேட்கவில்லை. அவசரமாகக் குமார சக்கரவர்த்தி மடத்திலிருந்து போனாரே, ஏதாவது விசேஷமான செய்தி உண்டோ என்று கேட்டேன்."
"மதுரையிலிருந்து தூதுவர்கள் வந்திருக்கிறார்கள்."
மதுரையிலிருந்து தூதர்கள் என்றதும் சிவகாமிக்குத்தான் முன்னம் கேள்விப்பட்ட திருமணத் தூது விஷயம் ஞாபகம் வந்தது. எனவே, "தூதர்கள் என்ன செய்தி கொண்டு வந்தார்கள்?" என்று கவலை தொனித்த குரலில் கேட்டாள்.
"அந்த மாதிரி இராஜாங்க விஷயங்களையெல்லாம் நான் கவனிப்பதில்லை, தங்கச்சி!" என்றான் கண்ணபிரான்.
அதைக் கேட்ட ஆயனர், "ரொம்ப நல்ல காரியம், தம்பி! அரண்மனைச் சேவகத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது" என்றார். அப்போது ரதம் தெற்கு ராஜவீதியில் அரண்மனையின் முன் வாசலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. வீதியின் ஒரு பக்கத்தை முழுவதும் வியாபித்திருந்த அரண்மனையின் வெளி மதிலையும், முன் வாசல் கோபுரத்தையும், அதைக் காவல் புரிந்த வீரர்களையும் உள்ளே தெரிந்த நெடிய பெரிய தாவள்யமான சுவர்களையும், படிப்படியாகப் பின்னால் உயர்ந்து கொண்டுபோன உப்பரிகை மாடங்களையும் சிவகாமி பார்த்தாள். தன்னையும் தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த சுகுமாரரையும் பிரித்துக் கொண்டு இத்தனை மதில் சுவர்களும் மாடகூடங்களும் தடையாக நிற்கின்றன என்பதை எண்ணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.