சீதக்காதி பற்றிய தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  சீதக்காதி பேரில் படிக்காசுப்புலவர் பாடிய தனிப்பாடல்கள்: 


01. பாடல்: 1.

  நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்
   பூசிக்கும் நின்கைப் பொருளொன்றுமே மற்றைப் புல்லர்பொருள்
   வேசிக்கும் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யும்
   தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே.

02. பாடல்: 2.

  ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
   கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
   ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
   மார்தட்டிய துரைமால் சீதக் காதி வரோதயனே.
03. பாடல்: 3.
  ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம்
  காயதிருந் தென்ன காய்த்துப் பலன்என்ன கைவிரித்துப்
  போ(ய்)யாசகம் என்று(உ)ரைப் போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்
  ஓயாமல் ஈபவன் மால்சீதக் காதி ஒருவனுமே.

04. பாடல்: 4.

  காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
  தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
  ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
  ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே.

05. பாடல்: 5.

  என்னனைக் கன்று முத்தனை குனிக்கு மிறையனை யளைக்குமே யன்று
  மன்னனைக் கன்றிப் பின்னனைக் குதவா வன்புளால் வருந்தி வாடுவனோ
  முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த முதுபகை யவன்பிதா வுறாமல்
  கன்னனைக் கொன்று விசயனைப் புரந்த கவுத்துவா காயலா திபனே.


சீதக்காதி வள்ளல் இறந்தபோது 'படிக்காசுப்புலவர்' பாடிய 'கையறுநிலை'ப்பாடல் (கையறம்)


06. பாடல்: 6.

  மறந்தா கிலும்அரைக் காசுங் கொடா மடமாந்தர் மண்மேல்
  இறந்(து)ஆவ(து)என்ன, இருந்(து)ஆவ(து) என்ன, இறந்து விண்போய்ச்
  சிறந்தாளும் காயல் துரைசீதக் காதி திரும்பிவந்து
  பிறந்தால் ஒழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே.

07. பாடல்: 7.

  விண்ணுக்கும் மணணுக்கும் பேராய்விளங்கு தேவேந்த்ரன்(எ)னும்
  கண்ணுக் கினிய துரைசீதக் காதி கமலநிகர்
  தண்ணுக் கிசைந்த வதனசந்த் ரோதய சாமியிந்த
  மண்ணுக்குளே யொளித்தான் புலவோர் முகம் வாடியதே.

08. பாடல்: 8.

  தேட்டாளன் காயல் துரைசீதக் காதி சிறந்தவச்ர
  நாட்டான், புகழ்க்கம்ப நாட்டி வைத்தான், தமிழ்நாவலரை
  ஓட்டாண்டி யாக்கி அவர்கள்தம் வாயில் ஒருபிடிமண்
  போட்டான், அவனும் ஒளித்தான் சமாதிக் குழிபுகுந்தே.

09. பாடல்: 9.

  பூமாது இருந்தென், புவிமாது இருந்தென், இப்பூதலத்தில்
  நாமாது இருந்தென்ன, நாம்இருந் தென்ன,நன் நாவலர்க்குக்
  கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த
  சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே.**
   (** இப்பாடலைப்பாடியவர் நமச்சிவாயப்புலவர் என்றுகூறுவாரும் உண்டு)