சீனத்தின் குரல்/செத்த பாம்பு
சர்வதேச சங்கம் தங்கள் மனுவைக்கண்டவுடனே துள்ளி எழுந்து ஜப்பானைக் கண்டித்து மஞ்சூரியாவை உடனே வாங்கித் தந்துவிடும் என்று நினைத்த சைனா முற்றிலும் ஏமாந்துவிட்டது. பாவம், சர்வதேச சங்கம் ஒரு செத்தபாம்புக்குச் சமானமானது என்று சைனாவுக்குத் தெரியாது. அது செய்த சதியால் சகிக்கமுடியாத அவமானம் கொண்டனர் சீனர்கள். பேரு பெத்தபேரு, தாகனு நீளு லேது, பெயர் மாத்திரம் பெரிய பெயர்தான், ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை என்று தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல பெயர் - மாத்திரம் சர்வதேச சங்கம், ஒரு பொடிநாடு ஜப்பான அடக்கமுடியவில்லை. எல்லாம் தொடை நடுங்கிகள் சங்கம், என்று ஆத்திரமடைந்த சீனர்கள் அதிருப்தி கொண்டனர். ஜப்பான் படையெடுப்பு, மஞ்சூரிய வீழ்ச்சி, உள்நாட்டில் அதிருப்தி, ஷேக்கின் சர்வாதிகாரம், கம்யூனிஸ்டுகளின் கலக்கம் ஆகிய சூழ்விலைகள் அவ்வளவும் ஒன்றாகத் திரண்டு உள்நாட்டிலேயே மூன்று போர்முனைகளை யுண்டாக்கிவிட்டது.