உள்ளடக்கத்துக்குச் செல்

சீனத்தின் குரல்/தடையுத்தரவு

விக்கிமூலம் இலிருந்து

தடையுத்தரவு

சின்-யுவாள்-தீ என்ற மன்னன் தீக்கனல் கக்கினான். தடையுத்திரவை விதித்தான். பயனில்லை தீராப் பகைவர்களைப் போல் பகைத்துக் கொள்ளாமலே பக்குவமாக படுபாதாளப் படுகுழியை வெட்டி வைத்துவிட்டது அபினி. 'அயினி வேண்டாம்' "அபினி என் நாட்டுக்குள் வரவே கூடாது," என உறுதியான சட்டத்தைச் செய்தான். பலமான காவல்களைப் போட்டுக் கண்காணிக்கச் செய்தான். துறைமுகங்கள் தவறாமல் உருவிய வாளோடு நின்றனர் வீரர்கள். எனினும் உடலின் எல்லா இரத்தக் குழாய்களிலும் விஷம் ஒரு வினாடியில் ஊடுருவிப் . பாய்வதைப் போல் சீனநாடு முழுதும் அபினி பரவி விட்டது. புராதனச் சீனம் இந்த பொல்லாத போதையிலாழ்ந்து விட்டது. யார் அதன் போதையைத் தெளிவிக்க வல்லவர்.

எதிரியாயிருந்து ரண - களத்தில் சந்தித்தால் , பிணப் பரிசையளிக்கலாம். வாளெடுத்தால் வீர மார்பைக் காட்டலாம். வேட்டு சத்தங்களென்றால் நாட்டில் அதன் எதிரொலியைக் கேட்கலாம். வெற்றியா, தோல்வியா? என்றால் இரண்டுக்கு மிடையேயுள்ள சமாதானத்தை நீட்டலாம். வீணாசையால் வீணர்கள் படையெடுக்கின்றார்கள் என்றால் வீரத்தைக் காட்டி விண்ணதிரப் போர் செய்து வீழ்ந்து மடியலாம். ஆனால், இருட்டில் வரும் திருடன் போல், நல்ல வார்த்தைகள் பேசிக்கொண்டே கெடுக்கும் நயவஞ்சகன் போல், வழிகாட்டுவதாக வஞ்சகமாக அழைத்துச்சென்று வழியில் கத்தியைக் காட்டும் கொலைகாரன் போல், நம்மையறியாமல் வரும் தூக்கம் போல், நாட்டில் வரும் கொள்ளை நோய் போல், காட்டாற்றின் வெள்ளம் போல், ஏதோ ஒரு தின்பண்டம் போல் உள்ளே நுழைந்து விட்ட அபினியைத் தடுக்க எந்த தடையுத்தரவாலும் முடியவில்லை . அபினி அத்தியாயம் தொடங்கிய பிறகு அயல் அரசுகள் கால் ஊன்றின. அதற்கு முந்திய அத் யாயத்தில் அதன் உள்நாட்டரசர்களே அதன் குரவளையை நெரித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை கீழ்வருமாறு வர்ணிக்கிறான் பேரறிஞன் கன்பூஷியஸ்.

"மக்கள் புலியைப் பார்த்து நடுங்கிச் சாகின்றார்கள். இந்தப் புலியைவிட மகா பயங்கரமான உருக் காட்டாக புலி அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பெயர் அரசியல் புலி. அதன் உண்மையான உருவம் தென்படவில்லையென்று திகைக்கின்றார்கள், பிடிவாதக் கால்களும், கட்டாயப் பார்வையும், கடினமான அடக்குமுறை வடிவமும், சட்ட வரிகளே அதன் மேவிட்ட கோடுகளாகவும், கொடுமை என்ற கூரிய நகங்களும் கொண்டு நிமிர்ந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் புலியைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று கண்ணீரால் கேட்டான் கன்பூஷியஸ்.

கன்பூஷியஸ் சீனத்தையறிந்த சிந்தனைச் செல்வன், சீர்கெட்டிருந்த சீனத்தைச் சீலமுள்ளதாக்கிய தந்தை, மகவீனும் மகிழ்ச்சியால் கற்ப வேதனையை சகித்துக்கொண்ட தாய்ப்போன்றவன் குற்றமுள்ளவரைக் கண்டித்து குணமுள்ளோரை ஆதரித்த நீதிமான் என்று சீனம் பேசிற்று. எனினும் பெண்குலம் சபித்தது. 'வஞ்சகரை வீழ்த்த வாள் எடுத்தேன், தாய் தடுத்தாள், சாந்தமடைந்தேன். அன்னையின் அகம் குளிர்ந்தது, அயலாரும் எனக்கிருந்த தாயன்பு கண்டு அகம் குளிர்ந்து நண்பர்களானார்கள்' என்ற முறையில் சீனத்தின் செப்பேடுகள் புகலவில்லை.

"வெஞ்சமரில் வாள் எடுக்க எண்ணினேன் கை இல்லை. ஏற்கனவே எதிரிகளால் என் கைகள் துண்டிக்கப்பட்டிருப்பதை மறந்து, இந்த என் அறியாமையைப் பார்த்த எதிரிகள் எக்காளமிட்டனர்", என்று சொல்லாமல் சொல்லுவதைப் போல் சீனத்திற்கு வீரமுண்டு, வீரத்தின் வாகனமான வாள் உண்டு, வீசுவதற்கு மனம் போன்ற கையில்லை. அந்த மனம் போதையால் அசைவற்று விட்டது! என்பதைப் போல இருந்தது சீனத்தின் குரல்.

வீரத்தை. மூட்ட முடியவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்ச்சியில்லாத காரணத்தால், புத்தி புகட்ட முடியவில்லை. அவர்களுக்கு போதை தலைக்கேறியிருந்த காரணத்தால், நாட்டின் நலிவை நவில முடியவில்லை, நஞ்சொத்த மருந்துண்டு மயக்கமுற்றிருந்த காரணத்தால், அவர்கள் தங்கள் கண்களைத் திறந்து ஜெகத்தைப் பார்ப்பதற்கே நான்கைந்து நாட்களாய் விடுகின்றன. இந்த நிலையில் கடலில் எறிந்த கற்களாய் விட்டனர்: சீனப்புதல்வர்கள், கற்கள் கடலில்தான் இருக்கின்றன கண்டெடுப்புவர்கள் யார்? என்ற வினாவைப்போலத்தான்: சீனத்தின் நிலை இருந்தது. சீன மக்கள் இருந்தனர்; சீனத்தில் செல்வம் இருந்தது, ஆனாலும் சீன நாட்டில் வேற்றான் கொடி, சீன மக்கள் போதையின் பிடியில், சீனச் செல்வத்தின் பெட்டிச்சாவி சீமைத் துரைகளின் மடியில்.

பதினாலு பதினைந்தாவது நூற்றாண்டில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் நடந்த புரட்சிக்குப் பாட்டியாய், கிருஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே கொலை, கொள்ளை, அசம்பாவிதம் அறுவறுக்கத்தக்க செயல்கள், பெரும் பெரும், போர்கள், நட்பிண்மை, நயவஞ்சகம், கொடிய குற்றங்கள் முதலான சகல விதமான அராஜ ரீகச் செயல்களும் செய்து கொண்டிருந்தது.

அந்த கால மக்கள் எண்ணிக்கையாகிய 15 கோடி மக்களை ஆள்வதற்கென்று பத்தாயிரம் அரசாங்கங்கள் இருந்தன. ஆளும் மமதை அதிகரித்த அளவுக்கு அடிமைப்பட்ட மக்கள் அதிகப்படாத காரணத்தால் அரசியலை ஒரு வேட்டைக்காடாக மதித்து ஆங்காங்கே வெறிச் செயல்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று நம்ப வேண்டியிருக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில்தான் இடிந்து விழயிருந்த சீனத்தைச் செம்மையாக்க, இருண்ட சீனத்திற்கோர் ஒளி காட்ட பேரறிஞன் கன்பூஷியஸ் தோன்றினான். அவன் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லா காலத்துக்கும் ஏற்றதாயில்லையாயினும் அந்த நேரத்திற்குத் தேவைப்பட்ட அவசர வைத்தியமாயிற்று. இவனுக்கு முந்திய சீனம் இருளடர்ந்திருந்தது. பிந்திய சீனமும் அவ்வழியே சில நாட்கள் சென்றதாயினும், ஒரே அடியாக சாக இருந்த சீனத்திற்கு புத்துயிரளித்தவன் இப்பெருந்தகையோன் என்பதை நாம் மறந்தாலும் வரலாற்று வரிகள் அவன் பெயரின் பேரில் அழியாத வாசனையைத் தடவி இருக்கிறது.