சீர்மிகு சிவகங்கைச் சீமை/மருது சேர்வைக்காரர்கள்
7. மருது சேர்வைக்காரர்கள்
இராமநாதபுரம் சீமை முக்குளத்தில் பழனியப்ப சேர்வை என்பவருக்கு பிறந்த வெள்ளை மருது, கறுத்த மருது என்று ஆண் மக்கள், பின்னர் பெரிய மருது, சின்ன மருது, என்ற பெயர்களில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரது அந்தரங்கப் பணியாளர்களாகப் பணியாற்றினர். சிவகங்கை சரித்திரக் கும்மியும், அம்மானையும் இந்த சகோதரர்களின் தந்தையை அடப்பம் வெள்ளைக்காலுடையார் என்று குறிப்பிட்டுள்ளன. செல்வ ரகுநாதன்கோட்டை ஆவணங்களிலும், வெள்ளையக்காலுடையார், சசிவர்ணத் தேவரது அடைப்ப பணியில் இருந்ததைத் தெரிவிக்கிறது. இந்த உடன் பிறப்புகளின் பாட்டியும் மன்னர் சசிவர்ணத் தேவரது அரண்மனையில் பணியாற்றியதாக பெளச்சி பாதிரியாரது ஆய்வுரையில் காணப்படுகிறது. கி.பி.1781-ம் ஆண்டைச் சேர்ந்த சேதுபதி மன்னரது அனுமந்தக்குடி ஒலைச்சாசனம் ஒன்றில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர் "வணங்காமுடி பளநியப்பன் சேர்வை" என்பவர்.[4]
மருது சேர்வைக்காரர்களது தந்தை மொக்கைப் பழனியப்ப சேர்வைக்காரர் சேதுபதி மன்னரிடம் தளபதியாக இருந்து இருக்க வேண்டும் என பொருத்தமற்ற ஊகத்தைப் பற்றிக்கொண்டு மருது சேர்வைக்காரர்களது பாரம்பரியப் பெருமையை நிலைநாட்ட நூலாசிரியர் ஒருவர் முயன்று இருப்பது வியப்பாக உள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த சகோதரர்கள், தொடக்கத்தில் முத்து வடுகநாதரது அரண்மனைப் பணியாளர்களாக, வேட்டைக்குச் செல்லும்பொழுது, வேட்டை நாய் பிடித்துச் செல்பவர்களாகவும் அடைப்பக்காரர்களாகவும் இருந்தனர் என பல நூலாசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உண்மையை மறைப்பதற்கு, மன்னர் முத்துவடுகநாதர்ஆட்சிக்காலத்தில் இந்த மருது சகோதரர்கள் அரண்மனை சிறுவயல், உறுதிக்கோட்டை என்ற சிற்றுர்களின் ஜமீன்தார்களாக ஆக்கப்பட்டவர் என்றும், கி.பி.1780-ல் ஆற்காட்டு நவாப் ஆட்சியில் இருந்து மீட்கப்பட்ட சில நாட்களிலேயே சிவகங்கைச் சீமையை அவர்கள் ஆளும்படி ராணி வேலு நாச்சியார் விட்டுக் கொடுத்து விட்டார் என்றும் அவர் வரைந்துள்ளார்.[5] இந்த மாபெரும் சரித்திரப் புரட்டினை எழுதுவதற்கு அந்த ஆசிரியருக்கு ஆதாரமாக இருந்த வரலாற்றுச் சான்று எது என்பது தெரியவில்லை. எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர் வரைந்துள்ள எத்தனையோ செய்திகளில் இதுவும் ஒன்று எனக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதுவரை யாரும் சொல்லாத செய்திகளைச் சொல்லி "சிறப்பு" பெற வேண்டும் என்ற ஆசை போலும். தமிழகத்தில் மூவேந்தரும், பின்னர் பல்லவரும், மறைந்த பின்னர், குறுநில மன்னர்களாகவும், சிற்றரசர்களாகவும் வேளிர்களாகவும் வாழ்ந்த நிலக்கிழார்களை கி.பி.1378 - முதல் கி.பி.1736 வரை பாளையக்காரர்களாகவும், அவர்களது கைப்பற்றில் இருந்த சொந்த நிலப்பரப்பை பாளையங்களாகவும், விஜயநகர பிரதிநிதிகளும், மதுரை நாயக்க மன்னர்களும் அறிவித்து இருந்தனர். ஆற்காட்டு நவாப்புகளின் ஆட்சியிலும், அதே பாளையங்கள் அல்லது பாளையப்பட்டு முறைதான், கி.பி.1801 வரை தொடர்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் சேதுபதி நாட்டிலும், சிவகங்கைச் சீமையிலும் பாதுகாப்பு நிலையில் “பாளையங்கள்” தான் இருந்தன. “ஜமீன்களும்” “ஜமீன்தாரி முறையும்” அப்பொழுது இல்லை. இந்த வடமாநில அமைப்பு முறையை தமிழகத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் தான் பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் புகுத்தினர். வரலாற்று நிலை இப்படி இருக்க, மன்னர் முத்து வடுகநாதர் அரண்மனை சிறுவயல், உறுதிக்கோட்டை ஜமீன்களை ஏற்படுத்தி அவைகளுக்கு மருது சகோதரர்களை ஜமீன்தாரர்களாக நியமனம் செய்தார் என்று உண்மைக்கு மாற்றமாக எழுதி இருப்பதை எப்படி நம்புவது?
இதனைப் போன்றே ராணிவேலுநாச்சியார் கி.பி.1780-இல் சிவகங்கைச் சீமையை மீட்ட சிலநாட்களில், பிரதானிகளான மருது சகோதரர்களிடம், சீமையை அளித்துவிட்டார் என்பதும், இதே சிவகங்கை நூலாசிரியரது சரடுகள் ஆகும். இந்த புரட்டுக்கள் எந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பானது என்பதை சிவகங்கை அரசியல் நிகழ்வுகள் தெளிவாக அறிவுறுத்துகின்றன. சிவகங்கைச் சீமையிலிருந்து பேஷ்குஷ் தொகை (ஆண்டுத் தொகை) ஆற்காட்டு நவாப்பிற்குச் செலுத்தப்படாத காரணத்தினால், தளபதி புல்லர்ட்டன் தலைமையில் கி.பி.1783-ல் கும்பெனியாரது படைப்பிரிவு ஒன்று சிவகங்கைக்கு அனுப்பப்பட்டது.[6] இந்தப் படை எடுப்பை முறியடிக்க பிரதானிகள், முதலில் திட்டமிட்டு காளையார் கோயில் பகுதியில் பத்தாயிரம் மறவர்களை திரட்டிய பொழுதும், பின்னர் தங்களது திட்டத்தை மாற்றிக்கொண்டு, தங்களது எஜமானிக்காக, பிரதானிகளே தளபதி புல்லர்ட்டனிடம் நாற்பதினாயிரம் ரூபாய் செலுத்தினர் என்பதை தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பக ஆவணங்கள் மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டர் நெல்சன், பேராசிரியர் ராஜையன் ஆகிய நூலாசிரியர்கள் தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். கி.பி.1789-ல் கும்பெனித் தளபதி ஸ்டுவர்ட், ராணி வேலுநாச்சியாருக்கு எதிரான பிரதானிகளது கலகத்தையடக்கியதும்.[7] கி.பி. 1789 நவம்பரில் ஆற்காட்டு நவாப்பும், கும்பெனியாரது சென்னை கவர்னரும் மருது சகோதரர்களை சிவகங்கை சீமைப் பிரதானிகளாக அங்கீகரித்ததும்[8] ராணி வேலு நாச்சியாரை பதவி விலகுமாறு செய்து சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவரை சிவகங்கை மன்னராக அங்கீகரித்ததும்[9] கி.பி. 1802 பிப்ரவரியில் அவர்நாடு கடத்தப்படும் வரை, வேங்கன் பெரிய உடையாத் தேவரே சிவகங்கை மன்னராக இருந்தார்.[10] என்பதும் வரலாற்று உண்மை.
இந்நிலையில், சிவகங்கை மாமன்னராக மருது சகோதரர்கள் கி.பி.1780 முதல் கி.பி. 1801 வரை தொடர்ந்து இருபத்து ஒரு வருடம் இருந்து வந்தனர் என்று வரைந்து இருப்பது எவ்வளவு பொருத்தமானது என்பது சிந்திக்கத்தக்கது. இந்தப் பெரிய பொய்யான சரித்திரப் புரட்டுக்களைப் புறக்கணித்துவிட்டு மீண்டும் சிவகங்கைச் சீமை வரலாற்றைத் தொடர்வோம்.
புதிய அரசு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும் நிலை. நவாப்பிற்கு சிவகங்கை சீமையில் இருந்து அவரது மேலாண்மையை மதிக்கும் வகையில் செலுத்தப்பட வேண்டிய “பேஷ்குஷ்” தொகையில் ஒரு பணம் கூட சென்னைக்குச் செல்லவில்லை. நவாப் ஆலோசனை செய்தார். வழக்கம்போல் கும்பெனியாரிடம் படை உதவியை நாடினார். ஆனால் சிவகங்கை சீமைக்கு செல்லும் வழியில் உள்ள தஞ்சாவூர் சீமை முழுவதும் மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆக்கிரமிப்பில் அல்லவா உள்ளது? கும்பெனியார் நவாப்பிற்கு உதவ முடியாது காலங்கடத்தி வந்தனர். ஆனால் கி.பி. 1783-ல் திப்பு சுல்தானுடன் பரங்கியர் உடன்பாடு கண்டதால் மைசூர் படைகள் சோழநாட்டில் இருந்து திரும்பப்பெற்றன. இப்பொழுது கும்பெனியார் தளபதி புல்லர்டன் தலைமையில் சில படைப்பிரிவுகளை சிவகங்கைக்கு மேலுரர்வழியாக அனுப்பி வைத்தனர்.
அந்தப் படையணிகள் 4.8.1783-ஆம் தேதியன்று சிவகங்கையை அடைந்தன. மேலுரில் இருந்து சிவகங்கைச்சீமை செல்ல வேண்டிய வழி விவரங்களை தஞ்சையில் இருந்த சுல்லிவனிடமிருந்து பெற்று வந்த தளபதி புல்லர்டன், தமது படைகளில் பெரும் பகுதியை மேலுாரில் தங்கி இருக்குமாறு செய்துவிட்டு, அங்கிருந்து கிழக்கே இருபது கல் தொலைவில் உள்ள சிவகங்கைக்கு ஒரு சிறு அணியுடன் புறப்பட்டுச் சென்றார். இப்பொழுது அந்த தளபதியின் அறிக்கையைப் பார்ப்போம்.
- “... தகவல் தெரிந்ததும், இரு மருதுகளும், இளைய ராஜாவை அழைத்துக் கொண்டு காளையார் கோவில் காட்டிற்குள் சென்று விட்டனர். அங்கு பதினாயிரம் பேர்களைத் திரட்டினர். எனது சொல்லை மதித்து ஊருக்கு திரும்பி வருமாறு தெரிவித்தேன்.
- அத்துடன் பாக்கித் தொகையுடன் பக்கத்தில் உள்ள சர்க்கார் கிராமங்களைத் தாக்கி அழிமானம் செய்ததற்காக ரூ. 90,000/உடனடியாகச் செலுத்த வேண்டும் எனக் கோரினேன். தவறினாலோ, இதனை நிறைவேற்றாவிட்டாலோ அவர்களது காட்டையும், கோட்டையையும் தாக்கி சீமையில் இருந்து அவர்களைத் துரத்துவேன் என்று தெளிவுபடுத்தினேன். இந்துக்களுக்கு உரிய உணர்வுடன் அவர்கள் நாற்பதாயிரம் ரூபாயை மட்டும் செலுத்தியதுடன் பாக்கி தொகைக்கு தக்க பொறுப்பு கொடுத்தனர்.[11]
இவ்விதம் தனக்கு ஏற்படவிருந்த ஒரு பயங்கரமான அழிமானத்தில் இருந்து சிவகங்கையின் புதிய அரசு தன்னை அப்பொழுது தற்காத்துக் கொண்டது.
ஆற்காட்டு நவாப்புடன் 2.12.1781 கும்பெனியார் செய்து கொண்ட உடன்பாட்டின் படி நவாப் செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்காக நவாப்பிற்கு வர வேண்டிய வருமானங்களை வசூலிக்கவும், அவற்றில் ஆறில் ஒரு பங்கை நவாப்பின் உபயோகத்திற்கு கொடுத்து விட்டு பாக்கித் தொகையை கடன் பாக்கியில் வரவு வைத்துக்கொள்ளக் கூடிய உரிமையை, கும்பெனியார் பெற்று இருந்தனர்.[12] இந்த பணிக்கென நியமனம் செய்யப்பட்டிருந்த கும்பெனியாரது குழுமம் குறுநில மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் வசூல் பணியைத் தொடர்ந்தது. இந்தக் குழுமம் நவாப் பொறுப்பில் இருந்த திருப்புவனம் பகுதியை சிவகங்கைக்கு திருப்பிக் கொடுத்ததுடன், நவாப்பிற்கு செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையின் அளவிலும் மாற்றம் செய்தது. இவைகளுக்கு பிறகும் சிவகங்கை சீமையில் இருந்து பேஷ்குஷ் தொகை ஏதும் வரவில்லை என்பதை அறிந்த நவாப் ஆத்திரம் அடைந்தார். சிவகங்கையை அடக்கி தொகையை பெறுவதற்கு கி.பி. 1786-இல்
கும்பெனியாரது உதவியை நாடினார். ஆண்டுத் தொகையை வசூலிப்பதற்கு ஒவ்வொரு முறையும் ஆயுதப் படையை அனுப்புவது என்பது அபாயகரமானது என கும்பெனியார் நவாப்பிற்கு அறிவுறுத்தினர்.[13]
வேறு வழியில்லாமல் பொறுமையுடன் இருந்த நவாப்பிற்கு நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது. கி.பி. 1788-ல் ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சேர்வைக்காரர்களுக்கும் இடையில் பிணக்கு உச்ச நிலையை எட்டியது. சிவகங்கைக் குடிகள் ராணி வேலு நாச்சியாரது விசுவாசிகளாக ஒரு பிரிவினரும், பிரதானி சின்னமருது சேர்வைக்காரருக்கு விசுவாசிகளாக மற்றொரு பிரிவுமாக பிளவுபட்டு நின்று அப்பொழுதைக்கப்பொழுது கைகலப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த பிணக்கு பெரிதாவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது சிவகங்கைப் பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் ராணியின் அனுமதி இல்லாமல், ஒரு சிறு எல்லைத் தகராறில் சிவகங்கை படையணிகளை தொண்டமான் சீமைக்குள் அனுப்பி வைத்தது.[14] தொண்டமான் சீமையின் பெரும்பாலான மக்கள் கள்ளர் இனத்தவராக இருப்பதாலும், அவர்களுடன் பல வித தொடர்புகளை வைத்துள்ள சிவகங்கை சீமையின் கணிசமான எண்ணிக்கையிலான கள்ளர் இன மக்களது குரோதத்தை வளர்க்கும் செயலாக ராணியார் இதனைக் கருதினார்.
நாளுக்குநாள் இந்த கருத்து வேற்றுமை அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டதாக, தனிப்பட்ட செல்வாக்கினைக் கோடிட்டுக் காட்டும் ஊமைப் போராக உருவெடுத்தது. இதனை அறிந்து ஆற்காட்டு நவாப் ராணி வேலு நாச்சியாரை தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்றார்.
நவாப் முகம்மது அலியின் கணிப்பில், சிவகங்கைப் பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர், சிவகங்கை அரசின் தலைமை, பெண்ணாக இருப்பதால், தமது அதிகார வரம்பை மீறிய முறையில் நடந்துள்ளார் என்பது. இந்தக் கருத்தினைப் பின்னர் கடித மூலமும் கும்பெனித் தலைமைக்கு தெரிவித்தார். என்றாலும் சிவகங்கைச் சீமையில் பெற வேண்டிய பேஷ்குஷ் தொகையினை உரிய தவணையில் பெறுவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் தீவிரமாகச் சிந்தித்து வந்தார்.
உடனே தனது பிரதிநிதி ஒருவரை ஆற்காடு நவாப் சிவகங்கைக்கு அனுப்பி ராணி வேலு நாச்சியாரது பாதுகாப்பை பலப்படுத்தவும் அவரது நிர்வாகத்திற்கு உதவுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவும் ராணியாருடன் ஒரு உடன்பாடு கொண்டார்.[15] இதனை அறிந்த பிரதானிகள் ராணியாரது பரிவாரங்களுடன் மோதினர். முடிவு ராணியார் வேறு வழியின்றி கோட்டை வாசலை மூடிவிட்டு கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்தார். இந்த தகவல் கிடைத்தவுடன் நவாப் கும்பெனி கவர்னரைத் தொடர்பு கொண்டார்.
இதோ. 10.2.1789-ல் நவாப் முகம்மது அலி சென்னைக் கோட்டையில் உள்ள கவர்னருக்கு அனுப்பிய கடிதம்.[16] “அன்புள்ள நண்பரே!
சிவகங்கைச் சீமையில் வசூல் பணியில் ஈடுபட்டுள்ள மீர்குத்புதீன்கான் மற்றும் இதர ஊழியர்களிடமிருந்து எனக்கு தகவல் வந்துள்ளது. சின்ன மருது சுமார் பத்து முதல் பன்னீராயிரம் பேர்களுடன் சிவகங்கைக் கோட்டையைச் சூழ்ந்து இருக்கிறான். அங்கு பொறுப்பில் உள்ள குத்புதீன்கானைக் கொன்று கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் இந்தத் தகவல் வெளியில் செல்லாமல் தடுப்பதற்கு, சிவகங்கையில் இருந்து செல்லும் வழிகள் அனைத்தையும் மூடியுள்ளான். இந்த வழிகளில் செல்லும் சர்க்காரது அஞ்சல் சேவகர்களைக் கூட காயப்படுத்தி கொன்று போடும் நிலையில் இருக்கிறான்.
“மதுரை, இராமநாதபுரம், தொண்டமான் சீமைகளில் சில கிராமங்களைச் சூறையாடி, அங்கெல்லாம் அமைதியையும் இயல்பான வாழ்க்கையையும் சீரழித்துள்ளனர். கிளர்ச்சிகளைச் செய்து வருகின்றனர். இவரும், இவரது தமையன் பெரிய மருதுவும் முந்தைய சிவகங்கை மன்னரிடம் எடுபிடியாக, மன்னர் வேட்டைக்குச் செல்லும்பொழுது வேட்டை நாய்பிடித்துச் செல்பவர்களாக இருந்தவர்கள். பிறகு தனது எஜமானது சொத்துக்களைக் கொள்ளையிட்டதுடன், அந்தச் சீமையை நாம் கைப்பற்றிய பொழுது வத்தலக்குண்டுவிற்கு ஓட்டம் பிடித்தனர். நடந்து முடிந்த போரின் பொழுது மைசூரின் சுல்தான் ஹைதர் அலியுடன் திரும்பி வந்து, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, சிவகங்கைச் சீமைகளைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மதுரைக் கோட்டையைத் தாக்கி ஜமேதார்கள் முத்துராவையும் புஜங்கராவையும் கொன்றதுடன் இராமநாதபுரம் கோட்டையையும் தாக்கினர். கவர்னர் மக்கார்டினி நிர்வாகத்தின் பொழுது மிகவும் இழிவான முறையில் சிவகங்கைச் சீமை பேஷ்குஷ் தொகையினைத் தங்களது சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்தினர். அடிக்கடி இந்த பாக்கித் தொகையைச் செலுத்தும்படி கேட்டும் அதனை செலுத்த மறுத்து வந்ததுடன் அந்த தொகையினைக் கொண்டு தங்களது நிலையினை உயர்த்திக் கொண்டு எனது கட்டளைகளையும் புறக்கணித்துவிட்டனர்.
இப்பொழுது, இராமநாதபுரம் சீமையில் பல ஊர்களைக் கொள்ளையிட்டுள்ளனர். குடிமக்களில் ஒருவரைக் கொன்று பலரைக் காயப்படுத்தி இருக்கின்றனர். இந்த அதீதமான கொடுமையினால் அந்தச் சீமை முழுவதும் கிளர்ச்சி பரவியுள்ளது. தடுக்க இயலாத இந்த கொடுமைகளை சகித்துக் கொள்ள இயலாத நிலையில் மக்கள்
- உள்ளனர். பெரிய உடையாத் தேவரையும் விசைய ரெகுநாத தேவரது மனைவியையும், மிகவும் கொடுரமான முறையில் சிறை வைத்து இருப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றைக் கூட கொடுக்காததால் அவர்கள் ஓடிவந்து சிவகங்கை கோட்டைக்குள் பாதுகாப்பிற்காக புகுந்து கொண்டுள்ளனர். அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தவறினால், அவர்களை வன்முறையில் விடுவித்துச் செல்வதாக பயமுறுத்தி இருக்கின்றனர்.
- "இதனைப் போன்றே. முன்னர் ஒருமுறை மன்னரது உறவினர் ஒருவர். சின்ன மருதுவின் அடாவடிக்கு அஞ்சி மதுரைச் சீமைக்கு ஓடினார். ஆனால் சின்ன மருது அவரைப் பிடித்து வருமாறு செய்து அவரைக் கொன்று போட்டார். இப்பொழுது அதே சூழ்ச்சியை. அந்தப் பாளையக்காரர் மற்றும் அந்தப் பெண்மணி மீதும் கையாண்டுள்ளார். சின்ன மருதுவின் இந்த முரட்டுச் செயல்கள் சர்க்காரது தெற்கு மாவட்டங்களில் மிகுந்த குழப்பத்தையும், இடைஞ்சலையும், வரி வசூலில் எனக்கு இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பெனியாருக்குச் செலுத்தவேண்டிய தவணைத் தொகைக்கு நான் இரவும் பகலும் மிகவும் சிரமப்படுகிறேன்.
- "ஆதலால், இரண்டு மூன்று படை அணிகளை அனுப்பி கட்டுக்கடங்காத அந்த மனிதனைத் தண்டித்து சிவகங்கைச்சீமை, அதன் முந்தைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்து சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்."
நவாப்பின் கடிதத்தில் கண்டுள்ள புகார்களைப் போன்று இராமநாதபுரம் சேதுபதி மன்னருடைய கடிதம் ஒன்றிலும் கும்பெனி கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இராமநாதபுரம் சீமைப் பகுதிகளை சிவகங்கைப் பிரதானி தாக்கி இருப்பது, சேதுபதி மன்னரது உறவினர்களான சிவகங்கை மன்னரையும், ராணியாரையும் சிறையில் வைத்து இம்சிப்பது என்பவைகளைப் பிராதானமாக குறிப்பிட்டு, இத்தகைய கொடுமைகளைக் களைவதற்கு இராமநாதபுரம் மறப்படைகள், கும்பெனியாருக்கு உதவக் காத்து இருப்பதாகவும் சேதுபதி மன்னர் குறிப்பிட்டு இருந்தார்.[17] இந்தக்கடிதங்கள்தொடர்பாக, கும்பெனியாரும் நவாப் முகம்மது அலியும் தங்கள் படைகளைச் சிவகங்கைக்கு அனுப்ப ஆயத்தம் செய்தனர். நவாப்பின் பிரதிநிதிகளான மீர்முத்தபர்கான், ஹூசைன்கான் மற்றும் கர்னல் மார்டின், புதுக்கோட்டைத் தொண்டமான், இராமநாதபுரம் மறவர்கள் ஆகியோரது உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
கும்பெனித் தளபதி ஸ்டுவர்ட்டின் தலைமையில் படை அணிகள் 29.4.1789 தேதி திருப்பத்துார் கோட்டையை அடைந்தன. புதுக்கோட்டையில் இருந்து வந்த தொண்டமானது மூவாயிரம் வீரர்களும் இந்த அணிகளுடன் இணைந்து கொண்டனர். 8.5.1789 தேதி சிவகங்கை வந்து சேர்ந்தது.[18] பின்னர் இராமநாதபுரத்தில் இருந்து தளபதி மார்டின் தலைமையில் உள்ள அணியும் இவர்களுடன் சிவகங்கையில் சேர்ந்து கொண்டது. ராணியைச் சந்தித்துப் பேசிய தளபதி ஸ்டுவர்ட், தமது அணிகளுடன் அங்கிருந்து முன்னேறியது. 13.5.1789-ம் தேதி கொல்லங் குடியைத் தாக்கியது. மிக நெருக்கமான காட்டு அரணையும் மண்சுவர்களையும் கொண்ட சிறிய ஊர் அது. அங்கு திரண்டு இருந்த மருது சேர்வைக்காரர்களது ஆதரவாளர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சண்டை இட்டனர். பயிற்சியும் மிகுந்த போர் அனுபவமும் மிக்க கும்பெனிப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் மருது சேர்வைக்காரர்கள் கிழக்கே மூன்று கல் தொலைவில் உள்ள ராம மண்டலம் காட்டுப் பகுதிக்குப் பின் வாங்கினர். நவாப்பின் அணியைச் சேர்ந்த தளபதி முத்தபர்கான் 14.5.1789-ல் நடைபெற்ற போரில் எதிரியின் குண்டுகளால் காயமுற்றார். பன்னிரண்டு பேர் உயிர்துறந்தனர். கொல்லங்குடி கோட்டை இப்பொழுது தளபதி ஸ்டுவர்ட்டின் கைவசம் வந்துவிட்டது.
கொல்லங்குடி கோட்டை பிடிப்பை ராணி வேலுநாச்சியாரது வெற்றியாகக் கருதிய இருபது நாட்டுத் தலைவர்கள் பிரதானிகளது அணியில் இருந்து விலகி ராணியிடம் சென்று வாழ்த்து தெரிவித்தனர். என்றாலும் இந்த நடவடிக்கைகள் ராணி வேலுநாச்சியாருக்கு முழுமையான ஆறுதலை அளிக்கவில்லையென்பதை அவர் 19.5.1789 தேதியன்று தளபதி ஸ்டுவர்டிற்கு வரைந்த மடல் தெரிவிக்கின்றது.[19] இதோ அந்த மடலின் மொழியாக்கம்:
- "மன்னர் பெரிய உடையாத்தேவரது குடும்பத்தினர் தங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- "தாங்களும் நவாப் முத்தபர்கானும் எம்மை சிவகங்கையில் சந்தித்தபொழுது. நீங்கள் இருவரும் எனது எதிரியை அடக்கி, எனது சீமையில் இருந்து துரத்தியடிக்கப் போவதாகத் தெரிவித்தீர்கள். இரண்டாவது நாள் இங்கிருந்து சென்று கொல்லங்குடியைக் கைப்பற்றியவுடன் இருபது கிராமங்களைச் சேர்ந்த நாட்டுத்
தலைவர்கள், மருதுவின் அணியில் இருந்து விலகி என்னிடம் வந்தார்கள். அவர்களைச் சின்னையாவின் (வேங்கன் பெரிய உடையாத்தேவர்) முகாமிற்குச் செல்லுமாறும், சீமையில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் மருதுவின் ஆட்களைத் தண்டிப்பதற்கு, அவர்க்ளைப் பிடித்துக் கொடுக்குமாறும் அவர்களுக்கு ஆணையிட்டேன். ஆனால், மீர்குத்புதீன்கான், அவர்களுக்கோ அவர்களைப் போன்று ஏதிரியின் முகாமில் இருந்து திரும்பி வருபவர்களுக்கோ, நாம் சேர்த்து கொள்வது பற்றி சரியான அறிவுரை வழங்கவில்லை. அதனால், அவர்கள் இந்தச் சீமையை நவாப் எடுத்துக் கொண்டு எங்களது குடும்பத்தின் பரம்பரை உரிமைகளைப் புறக்கணிக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். மீண்டும் அவர்கள் மருது அணிக்குச் சென்றுவிட விரும்புகின்றனர்.
“சிறிது காலத்திற்கு முன்னர், சர்க்காரிடத்தும் (ஆற்காட்டு நவாப்பிடத்தும்) என்னிடத்தும் முரண்பாடாக நடந்து கொண்டனர். இதனை தெரிவித்து இருந்தேன். இதன் காரணமாக, என்னைக் குத்புதீன் கானின் பொறுப்பில் இருத்தி வைத்து அவர் மூலம் சீமையின் முழு நிருவாகத்தையும் என்னிடம் ஒப்படைக்க ஆற்காட்டு நவாப் விரும்பினார். இதன் தொடர்பாக, நான் சிவகங்கைக்கு வந்து தங்கினேன். இது சம்பந்தமாக, நவாப் வழங்கியுள்ள பர்வானா (அரசு கட்டளை)யை ஆஜர்படுத்த சித்தமாக இருக்கிறேன்.
"தற்சமயம், இந்தச் சீமையின் ஒரு பகுதி மட்டும் சர்க்காரது நிர்வாகத்தில் இருந்து வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. சீமையில் கள்ளர்களது தொந்தரவு மிகுந்து விட்டது. நவாப்பும் கும்பெனியாரும் எனக்கு உதவியாக இருந்தனர். எனக்கு மரியாதை அளித்து நேர்மையுடன் நடந்து கொள்ளுமாறு மருது சேர்வைக்காரர்களை உறுதியுடன் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் எனக்கு ஏமாற்றத்தைத்தான் அளித்தனர். இப்பொழுது நான் நவாப்பின் கவுலை ஏற்று இருக்கிறேன். நீங்களும் நவாப்பும் சீமையைப் பொறுப்பேற்றுக் கொள்ள எனக்கு உதவ வேண்டும். குத்புதீன்கான் மூலமாக அவருக்கு மடல் அனுப்பி உள்ளேன். பேஷ்குஷ் தொகையையும் காணிக்கையையும் செலுத்துவதற்கும் அதற்கான பொறுப்பும் கொடுப்பதற்கு.
"இதனையே நீங்கள் நவாப் முத்தபர்கானிடம் பரிந்துரைத்து, சீமையின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கும்படி சொல்ல வேண்டியது. நான் நவாப்பின் கவுல் உத்திரவை ஏற்று இங்குவந்துள்ளேன். அவர் நிர்வாகத்தை ஏற்றுள்ளார். அதனால் ஏற்படக்கூடிய புகழும் பழியும் அவரைச் சார்ந்தது. நான் நவாப்பின் குழந்தை, தங்களது முகாமில் உள்ள சின்னையா தேவையான விவரங்களைத் தங்களிடம் தெரிவிப்பார்." ராணி வேலுநாச்சியாரது கோரிக்கை பொது நிர்வாகம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், இதில் தலையிட விரும்பவில்லை என்ற கருத்துரையுடன் இந்தக் கடிதத்தை 21.5.1789ல் சென்னை கவர்னருக்கு தளபதி ஸ்டுவர்ட் அனுப்பி வைத்தார்.[20] தொடர்ந்து போர்ப்பணியில் ஈடுபட்டார். அவரது இலக்கு மருது சேர்வைக்காரர்களை அடக்கி ஒடுக்குவது மட்டும்தானே!
தொடர்ந்து, மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய கோட்டைகளில் இருந்து படையணிகள் தளபதி ஸ்டுவர்ட்டின் உதவிக்கு வந்து சேர்ந்தன. ஆதலால் கும்பெனி படைகள் இன்னும் கிழக்கே முன்னேறி காளையார் கோவில் பகுதியிலிருந்தும் மருது சேர்வைக்காரர்களது படைகளைத் துரத்தி அடித்தனர்.[21] அவர்கள் வடக்கே பிரான்மலையை நோக்கி ஓடிய பின்னர், அங்கிருந்து திண்டுக்கல் சீமைக்குள் சென்றுவிட்டனர்.[22] சிவகங்கைச் சீமை வரலாற்றில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கவிருக்கும் அரசியல் மாற்றத்தை முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் அடையாள நிகழ்வாக உற்பாதமாக தளபதி ஸ்டுவர்ட்டின் கொல்லங்குடி, காளையார் கோவில் படையெடுப்பும் மருது சகோதரர்களது தோல்வியும் அமைந்துவிட்டது. அடுத்த ஐந்து மாதங்கள் சிவகங்கைச் சீமையில் அமைதி நிலவியது.
சிவகங்கைச் சீமைப் பாதுகாப்பிற்கு ஆங்கிலப் படையணிகள் சிவகங்கை கோட்டையிலும் வடக்கு எல்லைகளிலும் நிலைத்து நின்றன. சீமையில் இயல்பு நிலை நிலவியதால், அவைகள் படிப்படியாக திருச்சிக் கோட்டைக்குத் திரும்பப் பெற்றன. வழக்கம் போல் சிவகங்கை, திருப்பத்தார் கோட்டைகளில் மட்டும் நவாப்பின் படையணி நிலை கொண்டிருந்தது.
மீண்டும் மருதுவின் குழப்பம்
ஐந்து மாதங்களுக்குப் பின்னர், திண்டுக்கல் சீமையில் திரட்டிய பெரும்படையுடன் திரும்பி வந்த மருது சேர்வைக்காரர்கள் திருப்புத்துார் கோட்டையைக் கைப்பற்றினர்.[23] ராணி வேலுநாச்சியாரோ அல்லது ஆற்காட்டு நவாப்பின் அலுவலர்களோ சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சி. சிவகங்கைக் கோட்டைப் பாதுகாப்பில் முனைந்து நின்றனர். சென்னைக்கும் தகவல் சென்றது. நவாப் கும்பெனித் தலைமையைத் தொடர்பு கொண்டார். மருது சகோதரர்களை அழிப்பதற்கு மற்றுமொரு படையெடுப்பினைக் கோரினார். இந்தமுறை கும்பெனியார் மிகவும் தயங்கினர். இப்பொழுது மருது சேர்வைக்காரர்கள் மைசூர் மன்னர் திப்புவின் உதவியையல்லவா பெற்று வந்துள்ளனர். கி.பி.1783-ல் திப்புவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டை மீறுவதற்குரிய நிகழ்ச்சியாகி விடும் என்பது அவர்கள் கருத்து. மருது சேர்வைக்காரர்களுடன் போரைத் தொடங்கினால், அவர்களுக்கு மைசூர் மன்னரது உதவியும் தொடரும் அல்லவா! இந்த எதிர்மறையான சிந்தனையினால் நவாப் அதிர்ச்சியுற்றார். சிவகங்கைச் சீமை அரசியல் என்ன ஆவது? ஏற்கனவே பாக்கி பட்டுப்போன பேஷ்குஷ் தொகை வசூல்? ஒன்றுமே புரியாமல் வாலாஜா முகம்மது அலி, மருது சகேதாரர்களுடன் சமரசம் செய்து கொள்வது என்ற கும்பெனித் தலைமையின் ஆலோசனையை ஏற்றார்.[24]
நவாப்பின் அலுவலர்களும் கும்பெனித் தளபதிகளும் திருப்புத்துருக்கும் சிவகங்கைக்கும் சென்றனர். போர் நிறுத்தத்தை அடுத்து சிவகங்கைச் சீமையில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி அரசு இயந்திரத்தை எவ்விதம் தொடங்குவது? இதற்கான எத்தனையோ முன் மொழிவுகள், இரு தரப்பினரும் தங்களது நிலையில் இருந்து சிறிதும் விட்டுக் கொடுக்காமல் பேசினர். இருவரது பதவிகளுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு கூடாது.
மூன்றாவது தரப்பினராக நவாப்பும் கும்பெனியாரும் அவர்களது ஆலோசனையைச் சொன்னார்கள். மருது சேர்வைக்காரர்கள் தொடர்ந்து பிரதானியாக இருந்து வருவது. அவர்களது நடவடிக்கைகளில் வெறுப்புற்ற ராணி வேலுநாச்சியார் சுமுகமான நிர்வாகத்திற்கு உதவும் வகையில் பதவி விலகிக் கொள்ள வேண்டியது. ராணி வேலு நாச்சியாருக்குப் பதிலாக சிவகங்கைச் சீமை அரசராக அவரது மகள் வெள்ளச்சியின் கணவர் சசிவர்ண வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கைச் சீமை மன்னராகப் பதவி ஏற்பது.[25]
இந்தக் கூட்டு யோசனை, ராணிவேலு நாச்சியாருக்கு உகந்ததாக இல்லை. தனது பதவியைப் பறிப்பதற்குப் போட்டதிட்டம் என அவர் எண்ணினார் என்றாலும், தனது மருமகன் தனக்குப் பதிலாக சீமையின் அதிபதி ஆகிறார் என்ற ஆறுதல். வேறுவழியில்லாமல், ராணி வேலுநாச்சியார் இந்த ஆலோசனைகளை ஏற்றார். எதிர்தரப்பும் ஏற்றுக்கொண்டது. நவாப் முகம்மது அலி புதிய சிவகங்கை அரசை அங்கீகரித்தார். ராணி வேலு நாச்சியாரது பத்தாண்டு ஆட்சி கி.பி.1789-ல் டிசம்பரில் முடிவிற்கு வந்தது. தமிழக அரசியலில் அதுவரை, மூன்று பெண்மணிகள்தான் ஆட்சியாளராக இருந்து வந்துள்ளதை வரலாற்றில் காணமுடிகிறது. மதுரை நாயக்க மன்னர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் இறந்த பொழுது அவரது ஒரே மகனுக்கு வயது மூன்று மாதங்கள். ஆதலால் பாலகனது பாட்டியான ராணி மங்கம்மாள் மதுரைப் பேரரசின் ராணியாக கி.பி.1689 முதல் கி.பி.1706 வரை ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தார்.[26] அடுத்து, கி.பி.1732-ல் மதுரை மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்ததால் அவரது மனைவி ராணி மீனாட்சி அரசியாக கி.பி.1736 வரை ஆட்சி செய்தார்.[27]மறவர் சீமையின் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி கி.பி.1762-ல் வாரிசு இல்லாமல் இறந்த பொழுது அவரது தங்கை மகன் பதினோரு மாதங்கள் நிரம்பாத முத்துராமலிங்கம், சேதுபதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியார் கும்பெனியாரால் கி.பி.1772-ல் சிறைபிடிக்கப்படும் வரை சேதுபதி ராணியாக பதவியிலிருந்தார்.[28]
இந்த மூன்று பெண்மணிகளும் அரசுப் பணியில் இருந்த பொழுது அவர்கள் வெளிப்பகையை சமாளித்து வெற்றி காண்பதில் மட்டும் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அவர்கள் பதவியில் இருந்ததால், அவர்களுக்கு அரசு அதிகாரம் செல்வாக்கு கை கொடுத்தன. ஆனால் ராணி வேலு நாச்சியாரது நிலை வித்தியாசமானது. ஏழு ஆண்டுகள் அந்நியச் சீமையான விருபாட்சியில் தன்னந்தனியாக இருந்து கொண்டு சிவகங்கைச் சீமையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். கி.பி.1780-ல் உதவிப்படைக்கு தலைமை தாங்கி சிவகங்கையை மீட்டதுடன் சிவகங்கையின் ராணியாக ஆட்சி செய்த பொழுதும் அவர் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இவைகளுக்கு எல்லாம் மேலாக அவரது சாதனை, அவரை வீழ்த்துவதற்கு முயன்ற வெளிப்பகை உட்பகையை எதிர்த்து மோதியது. உள்ளத்துணிவையும் உயர்ந்த மறப் பண்பையும் உலகறியச் செய்த இந்த வீராங்கனையும் அவரது மகளும் முந்தைய சிவகங்கை மன்னர்களது வழியில், ஆன்மிகத்திலும் மிகவும் அக்கரை கொண்டிருந்ததை, அவர்கள் வழங்கியுள்ள சில அறக்கொடைகள் தெரிவிக்கின்றன.[29] அவைகளின் பட்டியல் பின் வருமாறு. ராணி வேலு நாச்சியாரின் அறக்கொடைகள்[30]
கி.பி. 1780 |
குளமங்கலம் | மாலையீட்டுமடம், காளையார் கோவில் குரு பூஜைக்கு, இராமலிங்க பண்டாராம். |
1782 | எஸ்.வரிச்சூர் பிறவி ஏந்தல் | பாபுராவ் தர்மாசனம் அண்ணாமலை ஐயர், தர்மாசனம். |
(ராணி வெள்ளச்சி நாச்சியார் என்ற குழந்தை நாச்சியார் பெயரில்)
1781 | குளக்கடை (மங்கலம் வட்டம்) | ஊழியமானியம். |
1782 | காக்குளம். | மடப்புரம், ஊழியமானியம் |
கல்லூரணி | ராஜேந்திர சோளீஸ்வரர் ஆலயம், இளையான்குடி. | |
மடப்புரம் | ஊழியமானியம் | |
1782 | இடையன் சருகனி | வேதாந்தம் ஐயங்கார், வரத ஐயங்கார். |
பைக்குடிப்பட்டி | ஊழியமானியம் | |
பனைக்குளம் | தண்ணிர்ப் பந்தல் தர்மாசனம். | |
முள்ளிக்குடி | சூடியூர் சத்திரம். | |
எட்டிக்குடி | தர்மாசனம். | |
நாவற்கினியானியான் (ஏந்தல்) | பெத்த பெருமாள் பண்டார மடம். | |
பிச்சைவயல், குடிகாத்தவயல் | மார்க்கண்டேசுவரர் கோயில், கீழப்பூங்குடி. | |
நம்பி ஏந்தல் | ஊழியமான்யம். | |
நெடுங்குளம் (பார்த்திபனூர் வட்டம்) | தர்மாசனம். | |
சமுதாய மேம்பாடு, விழிப்புணர்வு பற்றிய சிந்தனைகள் உறுதி பெறாத பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், அரச குலத்தில் பிறந்த இந்த மறப்பெண், மிகுந்த துணிச்சலுடன் இதிகாச புராண கால பெண்மணிகளுக்கு இணையாக மன உறுதியுடன் பதினெட்டு ஆண்டுகள், அரசியலைத் திறம்பட நடத்தி எதிர்கால பெண்ணினத்திற்கு பெருமைதரும் முன்னோடியாக விளங்கியுள்ளார். ஆதலால் ராணி வேலு நாச்சியார் தமிழக வரலாற்றில் தனித்த சிறப்பினைப் பெற்றுள்ளார் என்பதில் ஐயமில்லை.
இந்திய விடுதலை இயக்கத்தின் விடிவெள்ளியாக விளங்கும் இந்த வீர மங்கை பற்றிய விரிவான ஆய்வுகள் வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதனவாக உள்ளன.
- ↑ Edgar Thurston - Castes and Tribes of South India (1909) Vol. V
- ↑ Unpublished Manuscripts of Fr. Bouchi of Madurai - Ramnad Diocese.
- ↑ Rangacharya.K. - Topographical Inscriptions in Madras presidency (1919) wol. IIIP: 1743
- ↑ வேதாச்சலம்.வெ கல்வெட்டு (தொல்பொருள் ஆய்வுத்துறை இதழ் 18
- ↑ மருதுபாண்டிய மன்னர்கள் (1991) பக்: 293
- ↑ Williams Fullarton's report military Sundries. Vol. 66 (1784)
- ↑ Military Consultations Vol. 130/16.6. 1789. P: 1683
- ↑ Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 308
- ↑ Military Consultations Vol. 155 / 24.1.1792. P: 474
- ↑ Military Consultations 288 (A) 11.2. 1802 / P: 887-888.
- ↑ Report of General Fullarton Military Sundries. Vol.65 & 66. P:48-49
- ↑ Collection of Treaties. Vol.5. P: 181 (Tamilnadu Archives)
- ↑ Military Country Correspondence. Vol. 35. P. 209-210
- ↑ Radhakrishnan Iyer-General History of Pudukottai State (1931) P: 281
- ↑ Military Consultations. Vol. 129/26.5.1789. P: 1489
- ↑ Military Consultations Vol. 128/10.3.1789/P.783-786
- ↑ Military Consultations Vol. 12841 5.2.1789. P. 785–786
- ↑ Military Consultations Vol. 129/7.6.1789. P: 1552-56
- ↑ Military Consultations. vol. 129. P: 146-162 (Dated 19.5.1789)
- ↑ Military Consultations, Vol.129, P: 1459.
- ↑ Military Consultations Vol. 130/16.6.1789, P: 1683.
- ↑ Military Consultations Vol.130/10.11.1799. P: 1792.
- ↑ Rajayyan. Dr. K. History of Madurai (1794) P. 308
- ↑ Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 308.
- ↑ Military Consultations Vol. 155/24.1.1792. P.474
- ↑ Sathiyanatha Iyer. History of Madurai Nayaks (1928) P: 205-222
- ↑ Ibid - P: 232-233
- ↑ Military Despatches of England Vol. 7-4/20.6, 1772. P. 80-81
- ↑ சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்
- ↑ சிவகங்கை சமஸ்தானம் பதிவேடுகள்.