சீவக சிந்தாமணி (உரைநடை)/முத்தி இலம்பகம்

விக்கிமூலம் இலிருந்து

12. முத்தி இலம்பகம்

எதிர்பாராத நிலையில் தவம் செய்யச் சென்ற அச்சணந்தி ஆசிரியர் அங்கு வந்து சேர்ந்தார்.

இவன் அடைந்த வெற்றிகள் கேட்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அருச்சுனன் களத்தில் நின்று வில்லைக் கீழே போட்டு விட்டு அயர்ந்த நிலையில் கண்ணனை விழித்துப் பார்த்தான்; அந்த நிலையில்தான் சீவகன் இருந்தான்.

“அறிதோறும் அறியாமை இதில் உள்ள இன்பம் குறைந்துவிட்டது. எல்லாம் பழமையாகி விட்டது” என்றான்.

“முதுமையின் அறிகுறி இது; முதிர்ந்து அறிவு பெறுகிறாய் என்பதற்கு இது அடையாளம்” என்றார்.

“எல்லாம் யோசித்துப்பார்க்கையில் உண்பதும் உறங்குவதாக முடியுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.”

“வாழ்க்கைக்கு நாம் தான் பொருள் காண வேண்டும்; புதிய கடமைகளில் இறங்க வேண்டும்; உன் பார்வையும் மாற வேண்டும்” என்றார்.

“எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை” என்று அவரிடம் கூறினான்.

“காரனம் ?”

“அந்த நிகழ்ச்சியைப் பிறகு கூறுகிறேன்; இந்த ஆட்சியை என்மகன் மூத்தவன் சச்சந்தனுக்குத் தந்து விட்டேன்” என்றான்.

“அந்த நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிவிட்டது; எண்ணிப்பார்க்கிறேன்.”

“இங்குத் துறவிகள் வருகிறார்கள்; வாழ்க்கையின் தத்துவங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். திருத்தக்கதேவர் எழுதிய நூல் ஒன்றனையும் படித்தேன், அவர் இளமை, செல்வம், யாக்கை நிலையாமையை அதில் வற்புறுத்துகிறார்; அழகிய மனைவியரை அக்காவிய நாயகன் பிரிந்து விடுகிறான்; அவர்கள் அதற்கு வருந்தி அழும் அழுகை, நெஞ்சைப் பிளக்கிறது; அவனை நம்பித்தானே அவர்கள் அவனை மணந்து கொண்டார்கள். அவர்களைக் கைவிட்டுத் துறவு கொள்வது நியாயமா! எனக்கு ஏதோ கொடுமை இழைப்பதுபோல் தோன்றுகிறது. அந்த நூலைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை” என்றான்.

“அவர் வாசகங்கள் உன்னால் அறிய முடியாமல் இருக்கலாம்; நோக்கத்தை நீ அறிவது நலம்.”

“அறம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிலையாமைகளை நம் பெரியோர்கள் வற்புறுத்துகிறார்கள்.”

“நிலையாமையை உணர்வதால் நாம் இருக்கும் வாழ் நாளைத் தக்கபடி பயன்படுத்துவோம். அதற்காகத்தான் இவ்வறங்களைக் கூறுகிறார்கள்.”

“இந்தத் தத்துவங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் அவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.”

“வாழ்க்கை நிலைத்த ஒன்று. பொய்யாய்ப் பழங்கதை யாய்ப் போனது என்பது வறட்டு வேதாந்தம்.”

“வாழ்க்கை ஒரு நீரோட்டம் போன்றது. அதனை யாரும் தடை செய்ய முடியாது.”

“குழந்தை வாலிபன் ஆகிறான்; வாலிபன் முதியவன் ஆகிறான். இவை பருவ மாறுதல்கள்; இவை ரசாயன மாறு தல்கள், மரணம் என்பது இயற்கை நியதி. அதுதான் உலகத்தை இளமையாக்கி வைத்துள்ளது. நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பேசுவது அதுதான் இந்த உலகத்தின் பெருமையே; தனிப்பட்டவர் மறையலாம். ஆனால் மனிதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும், இயற்கையின் படைப்பு அழியாத ஒன்று.”

“செல்வம் என்பது கல்வி, கேள்வி, பொருள் மட்டுமல்ல; மக்கள், மனைவி, குடும்பம் இவை அத்துணையும் செல்வமே. மனிதருக்குப் பயன்படுபவை அனைத்தும் செல்வம் ஆகும். இந்த இயற்கைப் படைப்பே மாபெரும் செல்வம் ஆகும். மனிதன் எவற்றைப் போற்றுகிறானோ அதுதான் செல்வம் எனப்படுகிறது” என்று விளக்கினார்.

அவன் மனத்தில் அரித்துக் கொண்டே இருந்த காட்சி இதுதான்.

அவன் தன் இன்னுயிர்த் துணைவியருடன் சோலைக்கு இனிது பொழுது போக்கச் சென்றிருந்தான்.

மந்தியின் ஊடலைத் தீர்க்க அதன் நந்தியாகிய ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்று பறித்துச் சுளைகளை எடுத்துத் தந்தது. அது தின்பதற்கு முன் அதனினும் உரிமை உடைய தோட்டத்துக்குக் காவலன் அதைத் துரத்தி விட்டு அவன் அதைத் தன் மனைவிக்குத் தந்தான்.

இந்தக் காட்சி அவனைச் சிந்திக்க வைத்தது. கட்டியங்காரன் கையில் இருந்து தான் பறித்துக் கொண்ட ஆட்சி நாளைக்கு யாருக்கோ என்று என்ணினான். வலியார் எளியோரை அடித்து நொறுக்குவதும், அவர் தம் உடைமையைச் சூறையாடுவதும் இயற்கையாகி விட்டது என்பதை உணர்ந்தான்.

இதனால் இரண்டு உண்மைகள் அவனுக்கு விளங்கின. பொருள் கை மாறும் என்பது; மற்றொன்று வலிமையே வெல்கிறது என்பது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் அவன் சிந்தனையைத் தூண்டின; அதனால்தான் அவனுக்கு வாழ்க்கையில் விரக்தியும் வெறுப்பும் ஏற்பட்டன. இதை அவரிடம் கேட்டு விளக்கம் கேட்டான்.

“பொருளுக்கு அழிவு இல்லை; உடைமையைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டியுள்ளது. எதுவும் தனது உடைமை என்ற பற்றுள்ளம் நீங்க வேண்டும்; எதையும் நாமே வைத்துக் கொள்ள வேண்டும் எனகிற பேராசை தவறானது ஆகும்.”

“மற்றொன்று வலிமைதான் வெல்லும் என்ற நியதியை மாற்றி அனைவரும் வாழ வேண்டும் என்ற சிந்தனை தோன்ற வேண்டும். எளியோரை வலியோர் வாட்டுவது ஒழிய வேண்டும். அவரவர் உரிமையோடு வாழ வழி வேண்டும். இதுதான் இந்த நிகழ்ச்சி அறிவுறுத்துவது” என்று உணர்த்தினார்.

காதறுந்த ஊசியும் கடை வழியே வாராது காண் என்ற புலம்பலும், கடைசிவரை யாரோ என்ற கதறலும் அர்த்த மற்றவை என்பதை உணர்ந்தான்.

கொள்கைப் பிடிப்பு அவசியம் என்பதை உணர்ந்தான்; துறவு என்ற பெயரால் தப்பித்துக் கொள்ள நினைப்பது உலகத்தை ஏமாற்றுவது ஆகும். பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளச் சமயம் நெறிகள் கற்றுக் கொடுக்கின்றன என்பது தவறான கருத்தாகும்.

தன் பழைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்தான்.

தான் விட்டுச் செல்லும் வாழ்க்கையைத் தொடரும் தன் மதலையர் சுமைதாங்கிகள் ஆகின்றனர்; இளையதலை முறை பொறுப்புகளை ஏற்கக் காத்துக்கிடக்கின்றன. அவர்களை வாழ்த்தினான்.

தன் வாழ்வுக்கு உறுதுணையாக இருந்த தோழர்களின் நட்பினை மதித்தான்; நட்பு அதற்காகச் செய்யப்படுகின்ற தியாகங்கள் இவற்றைப் போற்றினான்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி இந்த உலகத்தை வாழ வைக்கும் உழவர்களையும், தொழிலாளர்களையும், போர்க்களத்தில் குருதி சிந்திப் போராடும் வீரர்களையும், நன்மைகள் நிலைக்க அறம் போதித்த ஆசான்களையும், அழகும் இனிமையும் சேர்க்கும் இசை ஆடற் கலைஞர்களையும், செந்தமிழ்க் கவிதைகளைப் புனைந்து இவ்வுலகத்தைச் சீர் பெறச் செய்யும் கவிஞர்களையும் மதித்தான்.

தன் இனிய மனைவியரைப் பற்றி நினைக்கும்போது அவர்கள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத்தந்த ஆசான்கள் என்று போற்றினான்.

“பெண்மை வாழ்க” என்று வாழ்த்தினான்.

ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கும் பெண் பின்னால் இருக்கிறாள். அவள் துணை என்பதைத் தன் தாய் விசயமாதேவியைக் கொண்டும், மனைவி காந்தருவதத்தையைக் கொண்டும் உணர்ந்தான்.

பருவ மாறுதல்களுக்கு ஏற்ப அவன் பார்வையும் மாறியது.

காமனும் ரதியுமாக வாழ்ந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டான்.

தன் மனைவியர் இப்பொழுது சிறுவர்களின் அன்னையர்கள் என்று பார்க்கும்போது அவர்கள் தாய்மை கண்முன் நின்றது. அவர்கள் முன்னிலும் பெருமை உடையவர்கள் என்பதை உணர்ந்தான். அழகால் தன்னைக் கவர்ந்தவர்கள் தாய்மை என்ற தியாகத்தால் உயர்ந்திருப்பதை அறிந்தான்.

மெல்ல மெல்லப்பற்றுகள் நீங்கி அன்பும் அறனும் மிக்க இல்வாழ்க்கையின் முதிர்ச்சியாக அருள்விளக்கம் கண்டான். தான் மனித தர்மத்துக்குத் துணை நின்று உலகக் குடிமகனாகவும், அறிவும் ஒழுக்கமும் சிந்தனையும் மிக்க சான்றோனாகவும் திகழ்ந்தான். இறுதி மூச்சுவரை மானுடத்துக்கு உழைப்பதே தன் கடமையும் அறமும் ஆகும் எனக்கொண்டான். சாவைப்பற்றி அவனுக்குச் சிந்திக்கவே நேரம் இல்லாமல் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து காட்டினான். உலகம் போற்றும் உயர் அறிவாளன் என்ற புகழுக்கு உரியவன் ஆயினான்.