உள்ளடக்கத்துக்குச் செல்

சுபத்திரையின் சகோதரன்/கடற்கரைப் பேச்சு

விக்கிமூலம் இலிருந்து

இக்கதையின் முக்கியமான நிகழ்ச்சிகள் 1924-ம் ஆண்டில் ஆரம்பமாகின்றன. ஆனால், அவற்றைத் தொடங்குவதற்கு முன் என் குடும்ப நிலைமையைப் பற்றியும், எனக்கு இராஜகோபாலனுடன் நட்பு ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறிவிட வேண்டுவது அவசியம். என் தந்தை ஸ்ரீமான் சுந்தரமையர் மைலாப்பூரில் ஒரு வக்கீல். இப்போதுகூட அவருக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வருமானங் கிடைத்து வருமென நினைக்கிறேன். அப்போது இன்னும் அதிகமாகவே கிடைத்து வந்தது. 1917-18 வரை அவர் அரசியல் துறையில் ஆசார சீர்த்திருத்த இயக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அரசியல் கிளர்ச்சி கொஞ்சம் ஆபத்துக்கிடமான விஷயமாகப் போய்விடவே, அவர் சிறிது சிறிதாக பொது வாழ்விலிருந்து விலகி விட்டார். மேலும், அவரது இரண்டாம் மனைவியின் மூலமாகக் குடும்பம் பெருத்துவிட்டது. எனக்கு இப்போது நான்கு தம்பிகளும், இரண்டு தங்கைகளும் இருக்கிறார்களென்றால் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. இத்தனைக்கும் என் தாயார் இறந்து 12 வருஷங்கள்தான் ஆகின்றன. இப்போது எனக்குத் தெரிந்த வரை, பணஞ் சேர்ப்பது, குடும்ப நலத்தைக் கவனிப்பது இவற்றைத் தவிர, என் தந்தைக்கு வேறெவ்விஷயத்திலும் சிரத்தையிருப்பதாகத் தெரியவில்லை.

இனி, இராஜகோபாலனைப் பற்றிச் சொல்கிறேன். அவனுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட விதம் மிக வினோதமானது. இன்றைக்கு ஐந்நுறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டு மாடியின் முகப்பில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் அப்போது ஹோட்டல் இருந்தது. அதன் மாடியின் மீதிருந்த அறைகளில் மாணாக்கர் சிலர் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் அந்த மாடியின் முகப்புக்கு வந்து பாடத் தொடங்கினார். அவருடைய இனிய குரல் என் மனதைக் கவர்ந்தது. அதிலும் அவர் பாடியது பாரதியின் பாட்டு. பாரதி பாட்டென்றால் எனக்கு ஏற்கெனவே பித்து உண்டு; ஆதலின், அவர் பாடி முடிந்ததும், 'தயவு செய்து இன்னொன்று பாடுங்கள்' என்று ஆங்கிலத்தில் மரியாதையுடனும் சங்கோசத்துடனும் கேட்டுக் கொண்டேன். அவர் புன்னகை செய்து, "ஓ! ஆகட்டும்" என்றார். உடனே 'சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா' என்ற கண்ணன் பாட்டை பாடத் தொடங்கினார். அவர் பாட்டுக்கு நான் அடிமையானேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமாயிற்று. அந்தோ! அந்நட்பின் பயன் இவ்வாறு முடியும் என்று அப்போது நான் கனவிலேனும் கருதியதுண்டா?

அவ்வாறு பாரதியின் பாட்டினால் என் சிந்தையைக் கவர்ந்த இளைஞர் வைத்தியகலாசாலையில் முதல் ஆண்டு மாணாக்கரென்றும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரென்றும் அறிந்து கொண்டேன். நாள் ஆக ஆக எங்கள் நட்பும் வளருவதாயிற்று. அப்போது நான், இண்டர் மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் கலாசாலை விட்டதும், இருவரும் நேரே கடற்கரைக்கு வந்து சந்திப்பது என்று ஏற்படுத்திக் கொண்டோ ம். நாங்களிருவரும் கடற்கரையோரத்தில் மணலின் மேல் துணியை விரித்துப் படுத்துக் கொண்டு, உலக நினைவுகளை அடியோடு மறந்தவர்களாய் அளவாளாவிப் பேசிக் கொண்டும், பாரதியின் கவிச்சுவை சொட்டும் காதல் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும், ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டும், ஆனந்தமாகக் கழிந்த மாலை நேரங்களை நினைக்கும் போதெல்லாம், என் உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை விவரிக்க வல்லேனல்லன். நாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருஷங்களாயின. எங்கள் நட்பும் வளர்ந்தது. தினந்தோறும் புதிய புதிய சுவைகலையும், புதிய புதிய இன்பங்களையும் தந்து கொண்டு வந்தது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 1924-ஆம் ஆண்டு பிறந்தது. நான் பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில், தேறிவிட்டேன். சட்டக் கலாசாலையில் சேருவதாக உத்தேசித்திருந்தேன். இராஜகோபாலன் எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குக் கடைசி வருஷம் படிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் மாலை வழக்கம்போல் கடற்கரைக்குச் சென்று, இராணி மேரி கலாசாலைக் கெதிரில் அலைகள் வந்து மோதும் இடத்துக்கருகில் உட்கார்ந்து, இராஜகோபாலன் வரவை எதிர் நோக்கியிருந்தேன். அன்று அவன் கொஞ்சம் தாமதமாக வந்தான். அன்றியும் அவன் முகமும் வாட்டமுற்றிருந்தது. எப்போதும் கடற்கரைக்கு வந்ததும்.

மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன் மூலைக்கடலையவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்

என்றாவது,

மாலை இளவெயிலின் மாட்சி - அன்னை கண்ணெரி காட்டுகின்ற காட்சி

என்று சிறிதளவு பாரதியின் பாட்டை மாற்றியாவது பாட ஆரம்பித்துவிடுவான். இன்றோ, பாட்டுமில்லை, கூத்துமில்லை. அவன் முகக் குறியைக் கண்டு என் மனதிலும் சிறிது கவலை தோன்றியதாயினும், விளையாட்டுத்தனமாக "என்ன ராஜு? இன்றைக்கேன் 'குஷி' இல்லை? உபவாச விரதம் ஏதேனும் உண்டோ ?" என்று கேட்டேன்.

"சாப்பாடு இல்லாதது ஒன்றே உற்சாகக் குறைவுக்குக் காரணமாகக் கூடும் என்று நினைக்கிறாயா?" என்று அவன் வினவினான்.

"எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை."

"அப்படியானால் நீ பாக்கியசாலிதான்."

அப்பொழுது, அவன் கண்களில் நீர் ததும்பியதைக் கண்டேன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அது போகட்டும், விஷயம் என்னவென்று சொல்லமாட்டாயா?" என்றேன்.

இராஜகோபாலன் பதில் சொல்லாமல், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அது அவன் தகப்பனார் அவனுக்கு எழுதியிருந்த கடிதம். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது. உள்ளே, இராஜகோபாலன் தங்கை சுபத்திரையை அவ்வூர் வேம்பு ஐயர் குமாரர் கணபதி ஐயருக்கு மணஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், முகூர்த்தம் அடுத்த புதன்கிழமை நடப்பதால் உடனே புறப்பட்டு வரும்படியும் எழுதியிருந்தது. அதைப் படித்தபோது, என் ஹிருதயம் படக்கென்று வெடித்து விடும்போல் தோன்றிற்று. முன் பின் தெரியாத கணபதி ஐயர் மீது ஏனோ கோபமும் பொறாமையும் ஏற்பட்டன. "காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான்" என்னும் அசட்டுப் பழமொழி என்னையறியாமல் என் வாயினின்றும் புறப்பட்டுவிட்டது.

"சை, எப்போதும் விளையாட்டுப் பேச்சுத்தானா, தியாகு?" என்று நண்பன் கூறினான். அவன் கண்களினின்றும் கலகலவென்று நீர் பொழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை! கணபதி ஐயர் யாராயிருப்பினும் அவர் மீது நான் பொறாமை கொள்வதும் நியாயம். ஆனால், தங்கையின் கல்யாணச் செய்தியைக் கேட்டு அவன் கண்ணீர் விடுவதன் கருத்தென்ன? அவன் கண்ணீரை என் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் துடைத்து, "ராஜு, என் பிதற்றலை மன்னித்துவிடு. ஆனால் நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!" என்றேன்.

அவன் சற்றுநேரம் மௌனமாயிருந்துவிட்டு, பின்னர் "என் அருமைச் சகோதரியைப் பாழுங்கிணற்றில் தள்ளப் போகிறார்கள். நான் கண்ணீர் விடாமல் என்ன செய்வேன்?" என்றான்.

நான் பல முறையும் வற்புறுத்திக் கேட்டதன்மேல் அவன் பின்னுஞ் சொல்வான்:- "எங்கள் கிராமத்துப் பெரிய குடித்தனக்காரர்களில் வேம்பு ஐயரும் ஒருவர். அவருக்கு இருபது வேலி நன்செய் நிலமும் ரூ.30,000 ரொக்கமும் உண்டு. கணபதி ஐயர் அவருடைய ஏகப் புதல்வர். அவருக்கு இப்போது 45 வயதுக்கு மேலிருக்கும். ஏற்கனவே அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் இல்லை. ஒருத்திக்குக் குழந்தையே பிறக்கவில்லை. மற்றொருத்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போய்விட்டது. அப்புறம் வேறு பிறக்கவில்லை. வம்சத்துக்குச் சந்ததியில்லாமல் சொத்து வீணாகப் போகக்கூடாதென்ற எண்ணத்தினால் பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று கிழவர் உத்தேசித்திருப்பதாக முன்னமே பிரஸ்தாபமுண்டு. நாங்கள் எல்லாரும் கேலி செய்துகொண்டிருந்தோம். ஆனால், இந்தக் கதி என் தங்கைக்கே நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. கணபதி ஐயர் பார்வைக்கு மிக அவலட்சணமாயிருப்பார். வயிறு பெறுத்தவர். ஆதலால் சாதாரணமாகத் 'தொந்திக்கணபதி' என்று அவரை எல்லாரும் கூப்பிடுவார்கள். 'குள்ளநரி' என்ற பட்டப்பெயரொன்றும் அவருக்குண்டு. ஒரு சமயம் அவர், புதர் ஒன்றில் ஒளிந்திருந்து குடியானவன் களத்திலிருந்து நெற்கதிர் திருடிக் கொண்டு போனதைக் கண்டு பிடித்து விட்டாராம். அது முதல் குடியானவர்கள் 'குள்ளநரி ஐயர்' என்று அவரை அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெயர் நிலைத்து விட்டது. அவ்வளவு ஏன்? போன வருஷங்கூடக் கணபதி ஐயர் வயலில் போகும் போது 'தொந்திக்கணபதி' 'குள்ளநரி' என்று சுபத்திரை கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி ஒளிந்து கொண்டாள். ஐயையோ! அவளுக்கா இந்த விதி வரவேண்டும்?" என்று நண்பன் கதறினான்.

நான் உள்ளமுருகி விட்டேன் என்று கூறவும் வேண்டுமா? "உன் தந்தை என்ன, அவ்வளவு மோசமானவரா? தந்தைதான் இப்படிச் செய்தாரென்றால், உன் தாயார் எப்படிச் சம்மதித்தாள்?" என்று நான் கேட்டேன்.

"என் அன்னை இந்தக் கல்யாணத்துக்கு ஒரு காலும் சம்மதித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். அந்தோ! அவள் என்னென்ன எண்ணியிருந்தாள்? என் தந்தை மீது தான் குற்றம் சொல்வதில் என்ன பயன்? இரண்டு வருஷமாக அவர் அலையாத இடமில்லை. ஒன்று பொருந்தியிருந்தால் மற்றொன்று பொருந்துவதில்லை. வரன் பிடித்திருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், வரதட்சனை 2000, 3000 என்று கேட்கிறார்கள். அவர் என்ன செய்வார். பார்க்கப் போனால் நான் தான் ஒரு வழியில் இந்தப் பாதகத்துக்குக் காரணமாகிறேன். எங்கள் ஏழைக் குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் மீதியாவதை என்னுடைய படிப்புக்காக அவர் தொலைத்து வந்தார். இல்லாவிடில் இப்பொழுது பணச் செலவுக்காகப் பயப்பட வேண்டியிராது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கடன் இருக்கையில், இன்னும் 2000, 3000 எப்படி கடன் வாங்குவது, யார் கொடுப்பார்கள்? பாவி, நானாவது அவர் சொற்படி கேட்டு வரதட்சனை வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ள இசைந்தேனா? அவர் என்னையேயன்றோ நம்பியிருந்தார்?" இராஜகோபாலன் கூறினான்.

இது முழு உண்மையன்றென்பது எனக்குத் தெரியும். இராஜகோபாலன் வரதட்சனை வாங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தானாயினும், தகப்பனார் முடிவாக வற்புறுத்தும் போது மறுத்திருக்க மாட்டான். மற்ற அம்சங்களில் எத்தகைய சிறந்த குணங்கள் உடையவனாயினும், தந்தையை எதிர்ப்பதற்கு வேண்டிய தைரியம் அவனுக்கு உள்ளபடியே இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் நாள் கலாசாலைப் பகிஷ்காரம் செய்ததும், பின்னர் தந்தையின் வார்த்தையைத் தட்ட மாட்டாமல் திரும்பப் போய்ச் சேர்ந்ததும், சிலநாள் வரை அவமானத்தில் மனமுடைந்து நின்றதும், நான் நேரில் அறிந்த விஷயங்கள். உண்மையென்னவெனில், இராஜகோபாலன் தந்தை 3000, 4000 என்று அவனை ஏலங் கூறி வந்தார். இன்னும் ஏலத்தொகை உயருமென்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குப் படித்த இராஜகோபாலன் இன்னும் பிரமச்சாரியாயிருந்த பேரதிசயத்துக்குக் காரணம் இதுதான். இவை எனக்குத் தெரிந்திருந்தும், நான் அப்பொழுது இராஜகோபாலனை மறுத்துக் கூறவில்லை. அற்ப விஷயங்களைப் பற்றி வாதிப்பதற்கு அது தருணமன்றல்லவா?

என் நண்பன் மீண்டும், "தியாகு, நீ என் உயிர்த் தோழனாதலால் என் மனத்தைத் திறந்து சொல்கிறேன். ஒரு வேளை என் தந்தை பணத்தாசையால் பீடிக்கப்பட்டிருக்கலாமோவென்று எனக்குத் சந்தேக முண்டாகிறது. சுபத்திரைக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், இரண்டு லட்ச ரூபாய் சொத்தும் அடையுமன்றோ? சை, சை! இப்பாழும் பணத்தாசையால் விளையுங் கேடுகள் எத்தனை! உலகில் பணக்காரன், ஏழை என்ற வேற்றுமை அற்றுப் போகக் கூடாதா?" என்று இரங்கினான்.

"ராஜு, நான் சொல்வதைக் கேள். இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு. என் கருத்து உனக்கு விளங்குகிறதா?" என்று நான் கேட்டேன்.

அவன் சற்று நேரம் சிந்தனையுடனிருந்து பின்னர் கூறினான்:- "உன் கருத்து விளங்குகிறது. ஆனால் அது இயலாத காரியம். முகூர்த்தம் புதன்கிழமை. நானெப்படி அதை நிறுத்த முடியும்? பிரம்மதேவன் எங்களுக்குத் துக்கத்தை விதித்துவிட்டான். நீ இப்போது இவ்வாறு தெரிவிப்பது என் துக்கத்தை மிகுதிப் படுத்துகிறதேயன்றி வேறில்லை. சுபத்திரையின் அதிர்ஷ்டம் எப்படியிருந்திருக்க கூடுமென்பதை நினைத்தால்! - தியாகு, நீ உண்மையிலேயே இந்நோக்கங் கொண்டிருந்தால், உன் உயிர் நண்பனாகிய என்னிடம் கூட ஏன் முன்னமே சொல்லவில்லை?"

"அது பெருங்குற்றந்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், இதுவரை என் மனமே திடப்படவில்லை. சென்ற வருஷம் கோடை விடுமுறையில் நீ என்னை உன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, உன் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் எனக்குப் பிரியம் உண்டாயிற்று. அவளுடைய மோகன வடிவமும் இன்ப மொழிகளும் என் மனத்தைக் கவர்ந்தன. போதாதற்கு நீ அவளைப் பாடும்படியும் சொன்னாய். குயிலுனுமினிய குரலில் அவள் பாடியது, என் ஆன்மாவைப் பரவசப் படுத்தியது. ஆனால் சுபத்திரையிடம் எனக்குண்டான ஆசை எத்தகையது என்று எனக்கே விளங்கவில்லை. பன்னிரண்டு வயதுக் குழந்தையுடன் காதல் என்னும் பதத்தைச் சம்பந்தப்படுத்துவதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிற்று. வேறு யாரேனுமாயிருந்தால், உன்னிடம் யோசனை கேட்டிருப்பேன். ஆனால் சுபத்திரையின் சகோதரனான உன்னிடம் இதைப்பற்றி எப்படிச் சொல்வேன்? நீ என்ன எண்ணி கொள்வாயோவென்று அஞ்சினேன். ஆனால், இவ்விஷயமாகத் தனிமையில் அடிக்கடிச் சிந்தித்து வந்தேன். நமது சமூக வாழ்வு உள்ள நிலைமையில் பரஸ்பரம் காதல்கொண்டு கல்யாணம் செய்து கொள்வதென்பது இயலாத காரியமாதலின், சுபத்திரையின் மீது எனக்குண்டான பிரியம் எத்தகையதாயினும், அவளை மணம் புரிந்து கொண்டால் இன்ப வாழ்க்கை நடத்தலாமெனத் தோன்றிற்று. ஆனால், ராஜு நான் ஒரு கோழை என்பது உனக்குத் தெரியுமே! என் தந்தையின் எதிர்ப்புக்கும், என் சிற்றன்னையின் சீற்றத்துக்கும் அஞ்சினேன். ஆயினும், அவர்கள் பேசிமுடித்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். சுபத்திரைக்கு வரன் தேட வேண்டுமென்று நீ சொல்லிய போதெல்லாம் என் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும் உன்னிடம் என் கருத்தை தெரிவிப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் நான் மோசம் போவேனென்று எதிர்பார்த்தேனில்லையே?"

இராஜகோபாலன் பெருமூச்சுவிட்டான். "தலைவிதி தலைவிதி" என்று முணுமுணுத்தான். "நீ கொடுத்த கல்யாணக் கடிதத்தைப் பார்த்தபோதுதான் என் மனோ நிலையை நான் நன்கு கண்டறிந்தேன். முதலில் அந்தக் கணபதி ஐயர் மீது எனக்குப் பொறாமையுண்டாயிற்று. ஆனால் நீ கூறிய விவரங்களைக் கேட்ட பின்னர், அவர் மீது கடுங்கோபம் உண்டாகிறது. அவ்வாறே உன் தந்தை மீதும் உன் மீதும் கூட எனக்கு கோபம் வருகிறாது. சுபத்திரையை வேறொருவன் கல்யாணம் செய்து கொள்வது என்னும் எண்ணமே என்னால் சகிக்கக் கூடாததாயிருக்கிறது. அவளில்லாமல் இவ்வுலகில் நான் வாழ்க்கை நடத்த முடியாதெனத் தோன்றுகிறது. என் வாழ்க்கையை இன்பமயமாக்குவதும் துன்பமயமாக்குவதும் இப்போது உன் கையிலிருக்கின்றன" என்று கூறி முடித்தேன். "இவ்விஷயம் மட்டும் என் அன்னைக்குத் தெரிந்தால் அவள் இருதயம் பிளந்தே போய்விடும் தியாகு. அவள் என்னிடம் ஒரு நாள் என்ன கூறினாள் தெரியுமா? 'குழந்தாய், சுபத்திரைக்கு உன் நண்பனைப் போல் ஒரு கணவனைத் தேடிவர மாட்டாயா?' என்றாள் அப்போது அருகிலிருந்த சுபத்திரை புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்ததும், பின்னர் நான் தாயாரிடம் சுபத்திரை அருகிலிருக்கும்போது கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டாமென்று தனிமையில் கேட்டுக் கொண்டதும் நன்கு நினைவில் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு மட்டும் இதைச் சொல்லியிருந்தாயானால் என் அன்னை எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள்! இப்போது அவளுக்குத் துக்கமே அதிகமாகும்" என்று இராஜகோபாலன் கூறியபோது, எனக்கு மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. மனங் கசிந்து கண்ணீர் பெருகிற்று.

"ஏன் இப்படிப் பேசுகிறாய் ராஜு? இன்னும் முழுகிப் போகவில்லையே? இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு." காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடாக்கண் பணியிலே

என்றும், நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே

என்றும் பாடுவாயே? அதற்குத் தருணம் வந்திருக்கும் இப்போது ஏன் தயங்குகிறாய்?" என்று வினவினேன்.

"வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேசுவதால் கவலை அதிகமாகுமேயன்றி வேறில்லை. சுபத்திரையைப் பாழுங் கிணற்றில் தள்ளுவது முடிந்து போன விஷயம்" என்றான் இராஜகோபாலன்.

"உன் தந்தை உன்னை வளர்த்துப் படிக்க வைத்ததனால்தான் என்ன? அவருக்கு அடிமையாகிவிட வேண்டுமா? உனக்கு மனச்சான்று என்பது தனியாக இல்லையா? உன் சகோதரிக்கும் எனக்கும் உன் தாய்க்கும் துரோகம் செய்யப் போகிறாயா?"

"தலைவிதி தலைவிதி!"