சுபத்திரையின் சகோதரன்/கல்யாணம்
அவ்வாண்டில் கடைசி முகூர்த்த நாளாகிய ஆனி மாதம் 30 ஆம் நாளன்று எனக்கும் சுபத்திரைக்கும் மணம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இராஜகோபாலன் அன்னையின் பிரிவை ஓரளவு மறந்திருந்தான். இறுதிச் சடங்குகள் செய்து விட்டுச் சென்னைக்கு வந்து விட்டான். நானும் அவனும் சேர்ந்தே கல்யாணத்துக்கு முதல் நாள் ஊருக்குப் போவதென்று தீர்மானித்திருந்தோம்.
என் வீட்டில் யாருக்கும் இந்த விவாகம் சம்மதமில்லை. எதிர்ப்பு பலமாக இருந்தது. தந்தையும் இளைய தாயாரும் எவ்வளவோ சொன்னார்கள். அத்தனைப் பிடிவாதமும் மன உறுதியும், எனக்கு அப்போது எங்கிருந்து வந்தன என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. கடைசியாக, 'எப்படியாவது கெட்டலையட்டும்' என்று விட்டு விட்டார்கள்.
ஆனி மாதம் 28ஆம் நாள் இரவு வண்டியில் புறப்பட்டோ ம். தந்தையும் தாயும் கல்யாணத்துக்கு வரவில்லை. தந்தை வேலை அதிகமென்று சொல்லிவிட்டார். இளைய தாயார் உடம்பு அசௌக்கியமென்றாள். என் சொந்தத் தாயின் சகோதரர் மட்டும் குடும்பத்துடன் வந்தார். என் தம்பிமார் இருவரும் இரண்டொரு நண்பர்களும் கூட வந்தார்கள். ஆனால் அப்போது எனக்கிருந்த மனமகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் தாய் தந்தையர் வராததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. எல்லாரும் எழும்பூரில் ரயில் ஏறினோம்.
வண்டி புறப்பட்டதும், நண்பர்களில் ஒருவர் வாங்கிக் கொண்டு வந்திருந்த பத்திரிகையைப் பிரித்து புரட்டினேன். 'தென்னாட்டில் வெள்ளம்' 'கொள்ளிடம் பாலத்துக்கு அபாயம்' என்ற தலைப்புகளைப் பார்த்ததும், 'சொரேல்' என்றது. கீழே படித்துப் பார்த்தேன். காவேரியிலும் கொள்ளிடத்திலும் பெருவெள்ளம் வந்து பலவிடங்களில் உடைப்பெடுத்திருப்பதாகவும், ரயில் பாதை சிலவிடங்களில் உடைந்து போனதாய்த் தெரிவதாகவும், கொள்ளிடத்தின் ரயில் பாலத்தில் ஓரிடத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், அன்றிரவு வண்டிகள் பாலத்தைத் தாண்டிவிடப்படுமா என்பது ஐயத்துக்கிடமான விஷயமென்றும் செய்திகள் காணப்பட்டன. உடனே இராஜகோபாலனிடம் காட்டினேன். அவன் படித்துவிட்டு பெருமூச்சு விட்டான். "ஆண்டவனே நமக்கு விரோதமாயிருக்கிறானா என்ன தியாகு?" என்றான். இதற்குள் மற்றவர்களும் அச்செய்திகளைப் படித்தனர். எங்கள் உற்சாகம் அடியோடு போயிற்று. எல்லோரும் மனக்குழப்பமுற்றனர். நானும் இராஜகோபாலனும் தனியாக யோசனை செய்தோம். என்ன இடையூறு நேர்ந்தாலும் நாங்கள் இருவருமாவது போய்ச் சேர்ந்து விடுவதென்று தீர்மானித்தோம்.
காலை 3 மணிக்கு வண்டி சிதம்பரத்தை அடைந்தது. அதற்குமேல் போகாதென்று பிரயாணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஒருவாறு இதை எதிர்பார்த்தோமாயினும் எங்கள் ஏமாற்றம் அளவிடற்பாலதாயில்லை. ரயிலிலிருந்து இறங்கி விசாரித்தோம். கொள்ளிடம் பாலத்தில் ஓரிடத்திலே பிளவு ஏற்பட்டிருப்பதோடல்லாமல், சீர்காழிக்கும் மாயவரத்துக்குமிடையே பயங்கரமான வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறதென்றும், பல மைல் நீளம் ரயில்பாதை அடித்துக் கொண்டு போகப்பட்டதென்றும், ரயில் போவது அசாத்தியம் என்பது மட்டும் அன்றி, மனிதர்கள் அப்பிரவாகத்தைக் கடந்து செல்வது இயலாத காரியம் என்றும் தெரிய வந்தன. இந்த விவரங்களை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படியிருக்குமென்பதை வாசகர்கள் கற்பனா சக்தியினால் பாவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், என்னால் விவரிக்க இயலாது.
எல்லாரும் கலந்து ஆலோசனை செய்தோம். நானும் இராஜகோபாலனும் மட்டும் கால் நடையாகப் புறப்பட்டு மாயவரம் வரையில் போய், அங்கு மீண்டும் ரயிலேறிச் செல்வதென்றும், மற்றவர்கள் அங்கேயே தங்கியிருந்து இரண்டொரு தினங்களில் ரயில் விட்டால் வருவதென்றும், இல்லாவிடில் சென்னைக்குத் திரும்ப வேண்டுவதேயென்றும் தீர்மானித்தோம். இவ்வாறு, என் கல்யாணத்துக்கு வந்த சிலரையும் விட்டுப் பிரிந்து, கவலை நிறைந்த உள்ளத்துடன் காலை நாலு மணிக்கு ரயில் பாதையோடு நடக்கலானோம். ராஜகோபாலனோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களில் யார் எவருக்குத் தேறுதலோ தைரியமோ கூறமுடியும்? பொழுது விடிந்தால் யாரேனும் தடை செய்யப் போகிறார்களோ என அஞ்சி உதயத்துக்கு முன்பாகவே கொள்ளிடம் பாலத்தைக் கடக்கலானோம். 'ஹோ' வென்ற கோஷத்துடனும், பயங்கரமான அலைகளுடனும், முட்டி மோதிக் கொண்டு ஓடிய அப்பெருவெள்ளம், என் உள்ளத்தின் நிலைமையை அப்போது நன்கு பிரதிபலிப்பதாயிற்று.
பாலத்தைத் தாண்டியாயிற்று. பொழுதும் விடிந்தது. வழி நெடுக விசாரித்துக் கொண்டே விரைவாக நடந்தோம். விசாரித்ததில் தெரிந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவனவாயில்லை. கடைசியில் சீர்காழியைத் தாண்டி அப்பால் இரண்டொரு மைல் தூரம் போனதும், மகா சமுத்திரம் போல் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒரே பிரவாகமாக வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது கண்டு திக்பிரமை கொண்டவர்கள் போல் உட்கார்ந்து விட்டோம்.
ஆனால், இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்துவிடவில்லை. என் காதலும், இராஜகோபாலன் அன்பும், எங்களை மேலும் முயன்று பார்க்கச் செய்தன. சீர்காழிக்குத் திரும்பி வந்து கொஞ்சம் உணவு அருந்தி விட்டுப் படகுக்காக விசாரித்தோம். பிரவாகத்தில் அகப்பட்ட கிராமங்களின் ஜனங்களை மீட்பதற்கென்று இரண்டொரு படகுகள் வந்தனவென்றும், ஆனால் வெள்ளத்தை மேற்பார்வை பார்ப்பதற்காக வந்த பெரிய துரையும் அவரது சகாக்களும் வெள்ளக் காட்சிகளைப் புகைப்படம் பிடிப்பதற்காக அப் படகுகளில் சென்றிருக்கின்றனர் என்றும், இன்னும் திரும்பி வரவில்லையென்றும், தெரிய வந்தது. எப்படியாவது இந்த வெள்ளத்தைத் தாண்டி எங்களைக் கொண்டு போய் விடுவோர்க்குக் கேட்ட பணம் தருவதாக அறிவித்தோம். அதன் மீது ஒரு சிலர் மரக்கட்டைகளைக் கட்டித் தெப்பமாக்கி அதில் எங்களை ஏற்றிக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக முன் வந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் பிரவாகத்தை அடைந்தபோது, எங்கேயோ பிரவாகத்தின் வேகத்தால் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்ட படகு ஒன்று வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அம் மனிதர்கள் அதைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்தார்கள். மாலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் அப்படகில் ஏறியபோது உயிருடன் பிரவாகத்தைக் கடந்து அக்கரை செல்வோம் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. எவ்வளவோ இடத்தில் படகு தலை கீழாய்க் கவிழ்ந்துவிடும் போல் இருந்தது. சிலவிடங்களில் கோலுக்கு அண்டாத ஆழம். கரையென்பதே கிடையாது. சற்று நேரத்துக்கெல்லாம் இருளும் வந்து சூழ்ந்தது. கடைசியாக எப்படியோ தட்டுத் தடுமாறி இரவு எட்டு மணிக்கு அக்கரை போய்ச் சேர்ந்தோம். பின்னர் மீண்டும் நடந்து மாயவரம் ஸ்டேஷனையடைந்த போது இரவு பத்து மணியிருக்கும். அங்கிருந்து கடைசி வண்டி போய் ஒரு மணி நேரம் ஆயிற்று என்கிறார்கள்.
அன்றிரவு ஸ்டேஷனில் படுத்திருந்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் மாயவரத்திலிருந்து புறப்படும் வண்டியில் ஏறி சுமார் பதினொரு மணிக்கு மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து இராஜகோபாலன் கிராமம் ஆறு மைல் தூரம். ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு 2 மணி சுமாருக்கு ஊரையணுகினோம். முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது 10.30 மணிக்கு. ஊரினருகில் சென்றபோது மேளச் சத்தம் கேட்டது. அப்போது என் இருதயம் அடித்துக் கொண்ட சத்தம் பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் நன்றாகக் கேட்டிருக்கும். இராஜகோபாலன் முகத்தை நான் பார்க்கவேயில்லை. நேரே வீட்டுக்குச் செல்லாமல், தெருவின் கோடியிலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். கண்ணில் அகப்பட்ட முதல் பேர்வழியை விசாரித்தோம். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சுபத்திரைக்கும், கணபதி ஐயருக்கும் கல்யாணம் நடந்து விட்டதென்றும் திருமாங்கல்யதாரணம் ஆகி அரைமணி நேரம் ஆயிற்றென்றும், அவர் அறிவித்தார்; அப்படியே ஸ்தம்பித்து மரம் போலானோம்.