சுபத்திரையின் சகோதரன்/சந்திப்பு
ஓராண்டு சென்றது. ஆந்திர நாட்டுக் கலாசாலையொன்றில் நான் ஆசிரியனாக அமர்ந்திருந்தேன். இந்த ஒரு வருஷத்திய எனது வாழ்க்கை விவரத்தைச் சில மொழிகளில் கூறிவிடலாம். வழக்கு முடிந்ததும், நான் சென்னைக்குச் செல்ல விரும்பவில்லை. சட்டக் கலாசாலையில் தொடர்ந்து படிக்கும் நினைவையும் விட்டுவிட்டேன். சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களை மறந்திருக்க ஸ்தலயாத்திரை செய்வதே நல்ல உபாயம் என்று தீர்மானித்தேன். என் தந்தை என் மீது இரக்கங் கொண்டிருந்தார். எனவே, வேண்டிய போதெல்லாம் பணம் தவறாது அனுப்பி வந்தார். தமிழ்நாடு முழுதும் சுற்றி விட்டுப் பின்னர் வடநாட்டுக்குச் சென்றேன். இதற்கிடையில், உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தேன். யாத்திரை தொடங்கி எட்டு ஒன்பது மாதம் ஆனபோது மேற்சொன்ன கலாசாலையில் மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் சரித்திராசிரியர் வேலை கிடைத்தது. என் அதிர்ஷ்டத்தை வியந்தவனாய் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டேன். இராஜகோபான் என்றும், சுபத்திரையென்றும் இருவர் இருந்தனர் என்பதை அடியோடு மறந்துவிடப் பிரயத்தனம் செய்து வந்தேன்.
ஆம், அவர்களைப் பற்றி இந்த ஓராண்டில் நான் எதுவும் கேள்விப்படவில்லை. கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கணபதி ஐயர் மரணமடைந்த அன்றிரவே சுபத்திரைக்குச் சுரம் கண்டதாகவும், ஒவ்வொரு சமயம் பிழைப்பது அரிது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சுபத்திரையின் தந்தை நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, அந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். பின்னர், அவர்களைப் பற்றி எனக்கு எத்தகைய விவரமும் தெரியவில்லை. ஆனால், எவ்வளவோ முயன்றும் சுபத்திரையும் இராஜகோபாலனையும் மறத்தல் எனக்கு இயலாத காரியமாயிருந்தது. இரவில் என் அறையில் தன்னந்தனியே உட்கார்ந்து அவர்களை நினைத்துக் கண்ணீர் பெருக்குவேன்.
முன்னமே சொன்னதுபோல் இவ்வாறு ஒரு வருஷம் சென்றது. ஒரு நாள் கலாசாலியில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கையில், தந்திச் செய்தியொன்று எனக்கு வந்தது. யார் தந்தியனுப்பியிருக்கக் கூடுமென்று ஆச்சரியத்துடன் பிரித்துப் பார்த்தேன். "இராஜகோபாலன் மரணத் தருவாயிலிருக்கிறார். உம்மைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படவும்" என்று எழுதியிருந்தது. திருச்சிராப்பள்ளி பெரிய சிறைக்கூடத் தலைவர் அச்செய்தியை அனுப்பியிருந்தார். அதைப் படித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது. உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று, விடுமுறை பெற்றுக் கொண்டேன். அடுத்த வண்டியில் புறப்பட்டேன்.
திருச்சிராப்பள்ளி சேர்ந்ததும், நேரே சிறைக்கூடத்துக்குச் சென்று, சிறைக்கூடத் தலைவரைப் பார்த்தேன். "நல்ல வேளை! இன்னும் ஒரு மணி நேரங்கழித்து வந்திருந்தால் அவரை உயிருடன் பார்த்திருக்க மாட்டீர்கள்" என்றார். அவர் ஓர் ஐரிஷ்காரர். நிரம்ப அனுதாபத்துடன் பேசினார். இராஜகோபாலனைப் பற்றிய விவரங்கள் அறிந்து நிரம்பப் பரிதாபப்பட்டதாகவும், ஒரு மாதமாக அவன் சிறைக்கூட வைத்தியசாலையில் படுத்த படுக்கையாயிருக்கிறானென்றும், ஒரு வாரத்துக்கு முன்புதான் அவன் அறிவு தெளிவடைந்து எனக்குத் தந்திச் செய்தியனுப்பச் சொன்னதாகவும், முதலில் விலாசம் தெரிந்து கொண்டு எனக்கு தந்தியடித்ததாகவும் கூறினார். உடனே என்னை இராஜகோபாலனிடம் அழைத்துப் போகும்படி சிறைக் காவலன் ஒருவனை அனுப்பினார்.
அங்கே எனக்கு இன்னும் ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கையில் இராஜகோபாலனருகில் உட்கார்ந்திருந்தவர் யார் என நினைக்கிறீர்கள்? சுபத்திரையும், அவள் தந்தையுமே. ஆனால், இந்த வியப்பு ஒரு கணங்கூட என் மனதில் நிலைத்திருக்கவில்லை. எலும்புந் தோலுமாய் அப்படுக்கையில் கிடந்த இராஜகோபாலனைக் கட்டிக் கொண்டு 'கோ' வென்று கதறி அழுதேன். ஐயோ! கட்டழகனாய்ச் சுந்தரவடிவனாய்க் காண்போர் கண்களைக் கவர்ந்து உலாவிய இராஜகோபாலன் இவன் தானோ?
"தியாகு அழாதே" என்று ஈன சுரத்தில் அவன் கூறியது யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசியது போல் கேட்டது. அருவிபோல் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.
"எங்கு நீ வருவதற்குள் போய்விடுவேனோவென்று இவ்வளவு நேரம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! பகவான் இந்தப் பாவியை முற்றிலும் கைவிட்டுவிடவில்லை..."
அப்போது மீண்டும் எனக்கு அழுகை வந்து விட்டது. சுபத்திரையும் அவள் தந்தையும் விம்மி அழலானார்கள்.
"வேண்டாம், ஏன் அழுகிறீர்கள்? அதற்குப் பதிலாக இந்தப் பாவியை மன்னிக்கும்படி ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்ளுங்கள். கொலைஞன் என்று பகவான் என்னை அருவருக்கமாட்டாரா?"
நான் ஏதோ பதில் சொல்லப் போனேன். அவன் கையமர்த்தி மீண்டும் சொன்னான்:- "என் உயிரையும் விட மேலாக என் அன்னையை நேசித்தேன். அவள் காலஞ்சென்றாள். மரணத்தறுவாயில், அவளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை இன்னமும் முற்றும் நிறைவேற்றி வைக்கவில்லை. இந்நிலைமையில் நான் இறந்தால் என் ஆன்மா சாந்தியுறுமா? இப்போது இவ்வுலகில் என் அன்புக்குரியவர்கள் நீங்கள் மூவருமே. நான் நிம்மதியாக உயிர்விடுவதற்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்களா? அப்பா, உங்கள் மனம் இப்போதேனும் இரங்குமா?"
அப்போதுதான், இராஜகோபாலனுடைய தந்தையையும் சுபத்திரையையும் நான் கவனித்தேன். அவர், இளைத்து மெலிந்து பாதி உடம்பாயிருந்தார். சுபத்திரை துக்கமே உருவெடுத்ததுபோல் உட்கார்ந்திருந்தாள். விதவைக்குரிய கொடுமைகள் அவளுக்குச் செய்யப்படவில்லையென்பதையும் கண்டேன். "குழந்தாய், இன்னமும் எனக்குப் புத்தி வரவேண்டுமா? உன் விருப்பத்தின்படியே செய்கிறேன். கவலைப்படாதே" என்று தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே சொன்னார்.
பின்னர் இராஜகோபாலன் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நான் எல்லாம் அறிந்து கொண்டேன். "உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நானும் மறக்கவில்லை ராஜு! ஆனால், வாக்குறுதி மட்டுமன்று. இவ்விஷயத்தில் நம்மிருவர் விருப்பமும் ஒத்தே இருக்கிறது. சுபத்திரையில்லாத வாழ்வு பாலைவனம்போல் எனக்குக் காணப்படுகிறது" என்றேன். அப்போது இராஜகோபாலனின் முகம் எவ்வாறு மலர்ச்சியுற்றது? அந்த ஒரு கணத்தில் அவன் பழைய இராஜகோபாலனாகக் காணப்பட்டான். மெலிந்து சுருண்ட தனது கையால் சுபத்திரையின் தாமரைக் கரங்களைப் பிடித்து என்னுடைய கையில் வைத்தான். அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்ப்பதைக் கண்டேன். என்னுடைய உணர்ச்சியைப் பற்றியோ யென்றால் - துன்ப சாகரத்தில் முழுகிப் போகும் தருவாயிலிருந்த என்னைத் திடீரென்று சுவர்க்க போகங்களுக்கிடையே போட்டுவிட்டது போலிருந்தது; மன்னியுங்கள். அப்போது என் மனோநிலையை வருணிக்கப் புகுதல் வீண் முயற்சியேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் இராஜகோபாலன் நிம்மதியாக ஸ்ரீராம நாமத்தை உச்சரித்த வண்ணம் இப்பூவுலக வாழ்வை நீத்துச் சென்றான்.
"நேயர்களே! உங்களில் பலருக்கு இராஜகோபாலன் சரித்திரம் ஏமாற்றமளித்திருக்கலாம். முன்னுரையில் அவனைப்பற்றிக் காணப்பட்ட புகழுரைகளுக்கு அவன் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதலாம், கொலைஞன் என்று நீங்கள் அவனை வெறுக்கலாம். எப்படியும் அவன் என் ஆருயிர் நண்பன்; என் அருமைச் சுபத்திரையின் சகோதரன். ஈ எறும்பு முதலிய ஜந்துக்களும் துன்பப்படச் சகியாத இளகிய மனம் படைத்த என் நண்பன், சுபத்திரையின் சுகவாழ்வை முன்னிட்டன்றோ கொலை செய்யத் துணிந்தான்? அவன் பாவத்தை மன்னித்தருளும்படி ஆண்டவனிடம் மன்றாடுங்கள்."