உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்/அத்தியாயம் 4

விக்கிமூலம் இலிருந்து

நாலு பேருக்குத் தெரியாமல் நடந்த
கலியாணத்தைப் பற்றி நாலு பேர்...

 4 

றுநாள் காலை; கையில் ஒரு சிறு பெட்டியுடன் தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்றாள் மதனா. அப்போது அவளுக்கு இருந்த கவலையெல்லாம் ஒரே கவலைதான். அதாவது, தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வந்து, தன்னை இந்தக் கோலத்தில் பார்த்து, 'என்ன, ஏது?' என்று விசாரிப்பதற்கு முன்னால் பாழும் பஸ் வந்து தொலைய வேண்டுமே என்ற கவலைதான் அது.

அவளுடைய கவலை பஸ்ஸுக்குத் தெரிகிறதா? அது, 'இந்தக் காலைப் பனியில் நனைந்தால் ஜலதோஷம் வந்தாலும் வந்துவிடும்' என்று பயந்தோ என்னவோ, நன்றாக வெயில் ஏறிய பிறகே வந்து சேர்ந்தது. பஸ் வந்து நின்றதும் நிற்காததுமாக இருக்கும்போதே, அவசரம் அவசரமாக அதற்குள் ஏற முயன்றாள் மதனா. கண்டக்டர் அவளைத் தடுத்து, "கையில் என்னம்மா, அது?" என்றான்.

"இருட்டில் எருமை தெரியாவிட்டாலும் பரவாயில்லை; பகலில் பசு கூடவா தெரியாது உமக்கு? பெட்ட்ட்ட்டி!" என்றாள் அவள், ஒரு பாவமும் அறியாத 'ட்'டன்னாவை ஒரே அழுத்தாக அழுத்தி.

"அது தெரிகிறது; பெட்டிக்குள் என்ன இருக்கிறது?" என்றான் அவன்.

அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை: "கள்ளத் தங்கம்! அது சரி, நீர் என்ன, பஸ் கண்டக்டரா? இல்லை, சுங்க இலாகா அதிகாரியா?" என்று சீறினாள்.

அவ்வளவுதான்; அவளை ஏற்றிக் கொள்ளாமலே, போப்பா, ரைட்!" என்ற கண்டக்டர், 'சரியான ராத்திரி கிராக்கி!' என்று தனக்குத் தானே சொல்லி, ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டான்.

மதனாவோ, 'இந்த அதிகாரப் பித்து யாரைத்தான் விடுகிறேன் என்கிறது? ஒரு தெரு நாய்கூட, இன்னொரு தெரு நாயின் மேல் அதிகாரம் செலுத்தத்தான் விரும்புகிறது!' என்று தனக்குத் தானே பொருமியபடி, அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நின்றாள்.

அப்போது, "இது என்னடியம்மா, கூத்து! நேற்றுத்தான் நீ யாரையோ கலியாணம் பண்ணிக் கொண்டதாகச் சொன்னார்கள். இன்று, இங்கே, இப்படி ஒற்றைக் காலில் வந்து நிற்கிறாயே?" என்று நீட்டி முழக்கினாள் அவளுக்குத் தெரிந்த மூதாட்டி ஒருத்தி அங்கே வந்து.

'அப்பப்பா வயசுப் பெண்களெல்லாம் கண் தெரியவில்லை என்று கண்ணாடி போட்டுக்கொள்ளும் இந்தக் காலத்தில், இவளைப் போன்ற கிழவிகளுக்கு மட்டும் ஏன்தான் இந்த எக்ஸ்ரே கண்களோ?' என்று முணுமுணுத்த மதனா, வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, "நான் எங்கே ஒற்றைக் காலில் நிற்கிறேன்? எல்லாம் இரட்டைக் காலில்தான் நின்று கொண்டிருக்கிறேன்" என்றாள்.

"நான் அதைச் சொல்லவில்லையடி, உன் அகத்துக்காரர் எங்கே என்று கேட்கிறேன்!"

"அவர்தான் 'அகத்துக்கார'ராச்சே. அகத்தில்தானே இருப்பார்?"

"பரிகாசம் பண்ணாதே! எடுக்கும் போதே நீ இப்படியெல்லாம் தனியாக வந்து நிற்கக் கூடாது. எங்கே போனாலும் சேர்ந்து போகணும், எங்கே வந்தாலும் சேர்ந்து வரணும்..."

"ஆகட்டும், பாட்டி! இனிமேல் அப்படியே வரேன்; அப்படியே போறேன். போய்விட்டு வருகிறீர்களா?" என்று பெட்டியைக் கீழே வைத்துவிட்டு அவளுக்குக் கை கூப்பி, 'சென்ட் ஆப்' கொடுக்க முயன்றாள் மதனா.

பாட்டி நகரவில்லை; "நானும் பஸ்ஸுக்குத் தாண்டியம்மா, வந்திருக்கிறேன்!" என்று நின்ற இடத்திலேயே நின்றாள்.

'இதென்ன தொல்லை?' என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தபோது ஒரு டாக்ஸி அப்போது அந்தப் பக்கமாக வந்தது. சட்டென்று அதைக் கை தட்டி நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டு, "அப்போ நான் வரேன், பாட்டி! என்னை இங்கே இந்தக் கோலத்தில் பார்த்ததாக ஒருத்தர் வீட்டைக் கூடப் பாக்கியாக விடாமல் சொல்லிக்கொண்டு வருகிறீர்களா? மறந்துவிடப் போகிறீர்கள்!" என்றாள் மதனா, தன் வயிற்றெரிச்சலை வாய் வரையில் கொண்டு வந்து நிறுத்தி.

"நான் ஏண்டியம்மா, சொல்லப்போறேன்!" என்ற பாட்டி, டாக்ஸி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், "வாயைப் பார். வாயை! அப்பா, அம்மாவாப் பார்த்து ஒரு ஆம்படையானைத் தேடி வைக்கிறதுக்கு முந்தி, தானே தேடிகிட்ட கழுதையில்லே? அப்படித்தான் வாய் நீளும்!" என்று அவளை வாயார, மனமார ஆசீர்வதித்தாள்.

முக்காட்டைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த மதனாவைக் கண்டதும், அவளை ஏற்கெனவே அங்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் போல், "வரவேணும், வரவேணும்!" என்று ஏக உற்சாகத்துடன் வரவேற்றாள் அருணா.

"என்னடி, இவ்வளவு பெரிய உலகத்தில் இனி எனக்காகக் கண்ணீர் விட நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்று நான் எண்ணி வந்தால்...!"

மதனா முடிக்கவில்லை; "விடலாம்தான் என்னிடம் 'கிளிஸரைன்' இல்லையே? அதற்காக வெங்காயத்தையாவது நறுக்கித் தொலையலாமென்றால் இது வீடும் இல்லை; விடுதி. என்னை என்னடி செய்யச் சொல்கிறாய்? எனக்கோ அவையிரண்டும் இல்லாமல் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வராது!" என்றாள் அவள்.

"ஆபத்தில் உதவுவான் நண்பன் என்று அந்த நாளில் சொன்னதெல்லாம்..."

"நண்பன்தானே உதவுவான் என்று சொன்னார்கள்? 'நண்பி உதவுவாள்' என்று சொல்லவில்லையே!"

"அப்படியானால்..."

"நான் போகிறேன் என்கிறாயா? போ, தாராளமாகப் போ!"

அவ்வளவுதான்; கண்ணில் நீர் ததும்ப, வந்த வழியே திரும்பினாள் மதனா. 'ஓகோகோ' என்று சிரித்தபடி அருணா அவள் தோள்களை இறுகப் பற்றி, "அதற்குள் ஏமாந்து விட்டாயா? இப்படித்தாண்டி, நீ அந்த மாதவனிடமும் ஏமாந்து விட்டாய்!" என்று சொல்லிக்கொண்டே அவளை அப்படியே ஒரு திருப்புத் திருப்பி, அங்கிருந்த கட்டிலின் மேல் உட்கார வைத்தாள். அவள் கண்களில் ததும்பிய நீரைத் தன் முன்றானையால் மெல்ல ஒத்தி எடுத்துவிட்டு, அவளுடைய கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, "போ! போய் முதலில் குளித்துவிட்டு வா!" என்று பற்பசையையும், சோப்புப் பெட்டியையும் எடுத்து அவளிடம் நீட்டினாள்.

"நான் குளிக்கவில்லை" என்றாள் மதனா, தன் முகத்தை 'உம்'மென்று தூக்கி வைத்துக்கொண்டு.

"இது என்னடியம்மா, அதிசயமாயிருக்கிறது! நேற்றுத் தான் கலியாணம் நடந்தது; அதற்குள் 'குளிக்கவில்லை ' என்கிறாயே?" என்றாள் அருணா.

"போடி, நான் இன்று குளிக்கப் போவதில்லை என்று சொன்னால்..."

"அதுதானே பார்த்தேன்! சாந்திக் கலியாணத்துக்குப் பிறகு நீ இன்னும் ஒரு தரம் வாந்தி கூட எடுக்கவில்லையே!"

"அதெல்லாம் இருக்கட்டும்டி, மாதவனிடம் நான் ஏதோ ஏமாந்து விட்டேன் என்று சொன்னாயே, அது என்னடி?"

"அதை மட்டும் என்னிடம் கேட்காதேயடியம்மா, எனக்கு ஏன் வீண் பொல்லாப்பு?"

"சும்மா சொல்லுடி?"

"ஊஹும்; எதைச் சொன்னாலும் சொல்வேன், அதை மட்டும் சொல்ல மாட்டேன்!"

"சும்மா சொல்லுடின்னா...?"

"வேண்டாம். அப்படியே சொல்வதாயிருந்தாலும் அதைக் கலியாணத்துக்கு முன்னால் சொல்லியிருக்க வேண்டும்: இப்போது சொல்லி என்ன புண்ணியம்?"

"அதற்கு நீ ஏன் நேற்றிரவு அந்தப் புத்தகத்தை ஜன்னல் வழியாக விட்டெறிய வேண்டுமாம்?"

"அதையும் கலியாணத்துக்கு முன்னாலேயே உன்னிடம் கொடுக்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அதற்குள் அந்தப் பாவி வந்து..."

"எந்தப் பாவி...?"

"மாதவன்தான்!"

"கொடுக்க வேண்டாமென்று சொல்லிவிட்டாரா?"

"ஆமாம்."

"அவர் சொன்னால் நீ அதை அப்படியே கேட்டுக் கொண்டு விடுவதா?"

"கேட்காமல்..."

"என்னைவிட அவர் உனக்கு எந்தவிதத்தில் ஒசத்தி?"

"நன்றாய்க் கேட்டாய், போ அவன் உன்னை மட்டும்தான் காதலித்துக் கொண்டிருந்தான் என்று நீ இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாயா? என்னையும் தான் காதலித்துக்கொண்டிருந்தான். ஒரு காதலன் அப்படிச் சொல்லும்போது ஒரு காதலி அதைக் கேட்காமல் இருக்க முடியுமா? அதுவும் உன்னைப் போலவே நானும் அவனைப் பரிபூரணமாக நம்பிக்கொண்டிருந்த அந்த நாட்களில்!"

"அப்படியானால்..."

"அவன் உன்னை ஏன் கலியாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறாயா? பழி வாங்கடி, பழி வாங்க!"

"எதற்காக அவர் என்னைப் பழி வாங்க வேண்டுமாம்?"

"அது ஒரு வேடிக்கையான கதையடியம்மா, வேடிக்கையான கதை!"

"அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்?"

"அப்கோர்ஸ் ஆனந்தனைத் தெரியுமா, உனக்கு?"

"ஏன் தெரியாது, நன்றாய்த் தெரியுமே! அவனும்தானே இவருடன் சேர்ந்து கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான்?"

"அவரைக் கேள், சொல்வார்!"

"அவன்தான் உன்னிடம் அந்தக் கதையைச் சொன்னானா?"

"ஆமாம்."

"அதை நீயேதான் என்னிடம் சொல்லேன்?"

"அவர் 'வேறு யாரிடமும் சொல்லக்கூடாது' என்று சொல்லி விட்டல்லவா அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்!"

"பரவாயில்லை, சொல்லு? நானும் அதை வேறு யாரிடமும் சொல்லாமல் இருக்கிறேன்!"

"அந்த மாதவன் ஒரு சமயம் எம்.யு.சி. கிரவுண்டில் கிரிக்கெட் ஆடியபோது அதைப் பார்க்க நீ அங்கே போயிருந்தாயா?"

"ஆமாம், போயிருந்தேன்."

"அப்போது பந்தை அடிப்பதற்காக மட்டையை வீசிய அவன், அப்படியே சுழன்று கீழே விழுந்தானா?"

"விழுந்தார்!"

"அதைப் பார்த்து நீ கை கொட்டிச் சிரித்தாயா?"

"சிரித்தேன்!"

"அந்தச் சிரிப்புக்காகத்தான் அவன் இப்போது உன்னைப் பழி வாங்கிக்கொண்டிருக்கிறானாம்!"

"நல்ல கதைதான், போ! திரௌபதி எதற்கோ தன்னைப் பார்த்துச் சிரித்தாள் என்பதற்காகத் துரியோதனன் அவளைச் சூதில் வென்று துகில் உரிந்தானாமே, அந்த மாதிரி கதையாகவல்லவா இருக்கிறது இது?"

"கரெக்ட், அதே கதைதான் இதுவும் இல்லாவிட்டால் கலியாணத்துக்கு முன்னாலேயே அவன் உனக்கென்று ஒரு தனி வீடு பார்த்து வைக்காமல் இருந்திருப்பானா? தக்க சமயத்தில் வந்து கழுத்தை அறுக்கத் தன் மாமாவை வீட்டுக்கு வரவழைத்திருப்பானா?"

"என்னது, மாமாவை அவர் வரவழைத்தாரா?"

"வேறு யார் வரவழைத்ததாம்? அவனுடைய அப்பாவும் அம்மாவுமே அதற்குத் தடையாக இருப்பார்கள் என்று அவன் முதலில் எதிர்பார்த்தானாம். அவர்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடவே, வேறு யாரைக் கொண்டு முட்டுக்கட்டை போடுவதென்று யோசித்துக் கொண்டே 'முதல் இரவுக்கு ஏதோ வாங்கப் போகிறேன்' என்று உன்னிடம் சொல்லிவிட்டு அவன் பூக்கடைக்குப் போனானாம். வழியில் மாமா கிடைத்தாராம். ஏதோ ஓர் ஓட்டலில் தங்கப்போன அவரை வற்புறுத்தி வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு... உன்னிடம் ஒரு பாவமும் அறியாதவன் போல் அவன் நாடகமாடியிருக்கிறான்!"

"அட, பாவி! அவன் இப்படியெல்லாம் செய்வதன் நோக்கம்?"

"சீச்சீ! நான் அந்த மாதவனை 'அவன், இவன்' என்று சொன்னாலும் நீ அப்படிச் சொல்லக் கூடாது. என்ன இருந்தாலும் அவன் உன் கணவன்; நீ அவனுக்கு உன் கழுத்தைக் குனிந்து கொடுத்திருக்கிறாய்!"

"சரி, அவர்ர்ர்ர் நோக்கம்தான் என்ன?" என்று தன் ஆத்திரம் அத்தனையையும் அந்த ர்'ரில் காட்டினாள் அவள்.

"வேறென்ன, உன் வாழ்க்கையை வீணாக்குவதுதான்! இனி வேறு யாரையும் கலியாணம் செய்து கொண்டு நீ வாழ முடியாதல்லவா?"

"ஏன் முடியாது? அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில்தான் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் விரும்பவில்லையென்றால் உடனே விவாகரத்துச் செய்து கொண்டு விடலாமே!"

"அதற்கும் உன்னை அவ்வளவு லேசில் விடமாட்டான் அவன்!" யாரோ ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தன் மனைவியை விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டானாமே, அந்த மாதிரி உன்னையும் கொன்றாலும் கொன்றுவிடுவான் அவன்!"

"அதெல்லாம் என்னிடம் நடக்காது!"

"ஏன் நடக்காது? பொறுத்துப் பார், தெரியும்!"

"இனியாவது, நான் பொறுப்பதாவது? சாயந்திரம் வரட்டும். சொல்கிறேன்!" என்று 'கையில் சிலம்பில்லாத கண்ணகி' போல எழுந்தாள் மதனா.

"ஐயையோ! 'சொல்லமாட்டேன்' என்று சொல்லிக் கொண்டே நான் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லித் தொலைத்து விட்டேன்போல் இருக்கிறதே? என்னடி செய்வேன், அவன் என்னைச் சும்மா விடமாட்டானே!" என்று 'கண்ணில் நீரில்லாத நீலி'யாகக் கையைப் பிசைந்தாள் அருணா.

"பயப்படாதே நீ சொன்னதாக நான் அவர்ர்ர்ரிடம் எதையும் சொல்லமாட்டேன்!" என்றாள் அவள்.

"அதாண்டியம்மா வேணும் எனக்கு, அதாண்டியம்மா வேணும்!" என்றாள் இவள்.

அதற்குள் 'டாண், டாண்' என்று சாப்பாட்டு மணி அடிக்கும் சத்தம் அவர்கள் காதில் விழவே, "போ, போ! போய்ப் பல்லை மட்டுமாவது தேய்த்துக்கொண்டு வந்து விடு!" என்று மதனாவைக் குளிக்கும் அறைக்கு அனுப்பி விட்டுக் 'கிக்கிக்கிக்கி' என்று ஒரு 'வில்லிச் சிரிப்பு'ச் சிரித்தாள் அருணா.

அவள் வில்லனா என்ன, 'கக்கக்கக்கா' என்று தியேட்டர் அதிரச் சிரிக்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_4&oldid=1673061" இலிருந்து மீள்விக்கப்பட்டது