உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்/அத்தியாயம் 9

விக்கிமூலம் இலிருந்து

ஒரு சந்தேகம் -
பைத்தியக்காரர்கள் உள்ளே அதிகமா,
வெளியே அதிகமா?…

 9 

தனாவைக் காணோம்!’ - எடுத்த எடுப்பிலேயே இப்படி மாதவனிடம் சொல்லிவிடவில்லை அருணா. வீட்டுக்குள் இருந்த அவனை ஜன்னல் வழியே பார்த்துக் கண் அசைத்து, வாய் அசைத்து, கையசைத்து மெல்ல வெளியே வரவழைத்துக் கொண்டதும், அவள் மேலே பார்த்தாள்; கீழே பார்த்தாள். மயங்கி மருகினாள்; தயங்கித் தடுமாறினாள். “ஏதோ சொல்லவேண்டுமென்று வந்தேன். இப்போது சொல்ல வேண்டாம்போல இருக்கிறது; வருகிறேன்!” என்று திரும்பினாள்; சிறிது தூரம் சென்றதும் அவளே திரும்பி, “நீங்கள் வரும்வரை அங்கேயே நான் காத்திருந்திருக்கலாம். அதற்குள் இங்கே வந்தது தப்பு என்று இப்போதுதான் தெரிகிறது எனக்கு” என்றாள்.

தனக்கே இயல்பான பொறுமையுடன் அவளுடைய சேட்டைகள் அத்தனையையும் கவனித்துக்கொண்டிருந்த மாதவன், “என்னதான் விஷயம். சொல்லேன்?” என்றான்.

“சொன்னால் அதை நீங்கள் தாங்குவீர்களோ, என்னவோ?” என்றாள் அவள், நகத்தைக் கடித்துக் கீழே துப்பிக்கொண்டே.

“தாங்குவேன், சொல்லு!” என்றான் அவன், அவளிடமிருந்து சற்றே விலகி நின்று.

“மனம் உடைந்து போய் அப்படியே உட்கார்ந்துவிட மாட்டீர்களே?” என்றாள் அவள், தன் கண்களை மேலே உயர்த்தி,

“மாட்டேன், சும்மா சொல்லு?” என்றான் அவன், அப்போதும் கலங்காமல். "தெறி கெட்டு எங்கேயாவது ஓடிவிட மாட்டீர்களே?"

"ஊஹும்."

"மாதவன் சார், அதைக் கேட்டு நீங்கள் அழுதால் அதை என்னால் தாங்க முடியாது, சார்!" என்றாள் அவள், தன் கைகளைப் பின்னால் கட்டி, மெல்ல ஆடி அசைந்து கொண்டே.

"அழ மாட்டேன், சொல்லு சீக்கிரம்?" என்றான் அவன், ஆடாமல் அசையாமல் நின்று.

"நீங்கள் என்னை வெறுக்கலாம்; உங்களை என்னால் வெறுக்க முடியாது, சார்!"

"யாரையும் யாரும் வெறுக்க வேண்டாம், சொல்லு?"

"பெண் தன்னுடைய ஆசையைக் கண்ணால் சொல்வதுதான் எங்கும், எப்பொழுதும் உள்ள வழக்கம். ஆனால்..."

அவள் மீண்டும் நகத்தைக் கடித்தாள்; அவன் பல்லைக் கடித்தான். "நீ வாயால் சொல்லப் போகிறாயாக்கும்? சொல்லேன்!" என்றான்.

"வெட்கமாயிருக்கிறது, சார்!" என்றாள் அவள், மென்னகையுடன்.

"வெட்கப்படுவதாயிருந்தால் சொல்லாதே!" என்றான் அவன் புன்னகையுடன்.

"சொல்லாமலும் இருக்க முடியவில்லை."

"சரி, சொல்லு?"

"நான்... நான்..."

"நான்... நான்..."

"போங்கள் சார், நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள்!"

"நான்... உங்களை..."

"நான்... உங்களை..."

"போங்கள் சார், என்னை நீங்கள் நையாண்டி செய்கிறீர்கள்; நான் சொல்ல மாட்டேன்!"

"இல்லை , சொல்லு?"

"உடல் இன்பத்துக்காக உங்களை நான் 'கா' பண்ணவில்லை சார், உயிர் இன்பத்துக்காக 'கா' பண்ணுகிறேன்."

"காவா! அது என்ன கா?"

"அதுதான் சார், கா... கா..."

"காக்காயா?"

"உக்கும், குருவி! போங்கள் சார், அதுகூடத் தெரியாதாக்கும் உங்களுக்கு?" என்றாள் அவள் சற்றே சிணுங்கி.

"தெரியவில்லையே!" என்றான் அவன், ஒரு கைக்கு இரு கைகளாக விரித்து.

"இரண்டாவது எழுத்தையும் சேர்த்து வேண்டுமானால் சொல்லட்டுமா?"

"சொல்லு?"

"கா.. த...கா...த..."

"ஓ, காதா?" என்று அவன் தன் காதைப் பிடித்துக் காட்ட, "ஆமாம், குத்தியிருந்தால் கடுக்கன் போட்டுக் கொள்ளுங்கள்; ஜமீன்தார் மாதிரி இருக்கும்!" என்று அவள் கோபித்துக்கொண்டு 'தொப், தொப்' என்று காலை எடுத்து வைத்து நடக்க, "கோபித்துக்கொள்ளாதே அருணா, சொல்வதைக் கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லேன்?" என்று அவன் அவளுக்குப் பின்னால் ஓட, "கிட்ட வாங்க, சொல்கிறேன்" என்று அவள் திரும்பி, அவனைத் தன் அருகே அழைத்து, அவன் தலையைப் பிடித்து, அவனுடைய காதைத் தன் வாயோடு அணைத்து, "காதல் பண்றேன்" என்று முகம் சிவக்கச் சொல்ல, அப்போது ஏதோ காரியமாக வெளியே வந்த 'லட்டு மாமி' அதைப் பார்த்து வேறு விதமாக நினைத்து வெறுப்படைந்து, "இது என்னடியம்மா, அக்கிரமமாயிருக்கு? பட்டப் பகல்லே, நட்ட நடு வீதியிலே, பல பேருக்கு முன்னிலையிலே, சினிமாவில் பண்ற மாதிரியில்லே இவங்க பண்றாங்க" என்று முகவாய்க் கட்டையின் மேல் கையை வைத்துக் கொண்டு நிற்க, "ஐயோ மாமி, இது ஆபீஸ் ரகசியம், மாமி வேறே ஒண்ணும் இல்லே" என்று சொல்லிக் கொண்டே மாதவன் திரும்பினான்.

"அவ்வளவு பெரிய ரகசியமாயிருந்தா, அதை அவ உள்ளே வந்து சொல்லக் கூடாதா?" என்றாள் அவள்.

"வெளியே நின்று சொல்லும்போதே நீங்கள் இப்படி நினைக்கிறீர்களே, உள்ளே வந்து சொன்னால் என்ன நினைப்பீர்கள்?" என்றாள் அருணா, 'களுக்'கென்று சிரித்து.

"சிரிப்பைப் பார், சிரிப்பை!" என்று கருவிக்கொண்டே 'லட்டு மாமி' உள்ளே செல்ல, அவள் தலை மறைந்ததும், "இதைச் சொல்லத்தானா நீ இவ்வளவு தூரம் வந்தாய்?" என்றான் மாதவன்.

"பார்த்தீர்களா? எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக்கொண்டு நிற்கிறேன் நான்! உங்களை என்று நான் முதன் முறையாகப் பார்த்தேனோ, அன்றிலிருந்து என் புத்தி இப்படித்தான் பேதலித்துக் கொண்டிருக்கிறது!" என்றாள் அவள், தன் நெற்றியை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு.

"ரொம்பக் கெட்டதாச்சே, அது!"

"கெட்டதா! என்ன ஆகும்?"

"கடைசியில் அது உன்னைக் கீழ்ப்பாக்கத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் சேர்த்துவிடும்."

"ரொம்ப நல்லதாச்சே சார், அது! பற்றற்ற நிலைக்கு ஒரு மனிதன் எப்போது ஆளாகிறான், தெரியுமா?"

"தெரியும்; பைத்தியம் பிடிக்கும்போது!"

"அந்த மேலான நிலைக்கு என்னை நீங்கள் உயர்த்த விரும்புவது பற்றி மெத்த மகிழ்ச்சி."

இதைச் சொன்னபோது அருணாவின் கண்கள் உண்மையிலேயே கொஞ்சம் கலங்கின. அதைப் பார்த்த மாதவனின் மனமும் கொஞ்சம் நெகிழ்ந்துவிட்டது. அந்த நெகிழ்ச்சியின் வசப்பட்டு அவன் சொன்னான்:

"மகிழ்ச்சிக்கு அங்கே இடமில்லை அருணா, விரக்திக்குத்தான் இடம் உண்டு."

"எதுவாயிருந்தால் என்ன, அதிலும் இன்பம் காண முடியும் என்னால். எல்லாம் அவரவர்களுடைய மனத்தைப் பொறுத்தது. மனம் மட்டும் சரியாக இருந்தால் நிறைவேறிய கனவில் மட்டுமல்ல, நிறைவேறாத கனவிலும் இன்பம் காணலாம்."

"அந்த அளவுக்கு உன் மனம் பக்குவம் அடைந்திருக்குமானால், என்னை நீ காதலிப்பதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்."

அருணா சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்று மாதவன் கேட்டான்.

"எனக்காக உங்களை ஒரே ஒரு கணமாவது கவலைப்பட வைக்காவிட்டால், எனக்காக உங்களை ஒரே ஒரு சொட்டுக் கண்ணீராவது விட வைக்காவிட்டால் நான் உங்களைக் காதலிப்பதும் ஒன்றுதான்; காதலிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்."

"ஏன்?"

"என்னுடைய காதல் உயிருள்ள காதலாயிருக்க வேண்டுமென்றும், அது ஏதாவது ஒரு வகையில் உங்களை உறுத்த வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன்."

"வீண் முயற்சி!"

"முயற்சி யாருடையதாயிருந்தாலும் அது எப்போதும் வீணாவதில்லை."

"சரி, அதையும் பொறுத்துப் பார்ப்போம்; அப்புறம்?"

"நான் சொல்ல வந்தது..."

"என்ன?"

"உங்கள் அருமை மதனாவைக் காணோம்!"

"என்ன!"

"இப்போது வாயைப் பிளந்து என்ன பிரயோசனம்? அப்போது நீங்கள் அவளுடன் வாழத் தவறி விட்டீர்கள்!"

"யார், நானா?"

"ஆமாம்; மற்ற உறவுகளையெல்லாம் விட்டுவிட்டு 'நீயே உறவு' என்று நீங்கள் எப்போது அவள் கரம் பற்றத் துணிந்தீர்களோ, அப்போதே நீங்கள் அவளுக்கென்று ஒரு வீட்டைப் பார்த்திருக்க வேண்டும்..."

"அது என் தவறுதான்."

"தவறு எப்போதும் தனியாக நிற்பதில்லை; அது தன்னுடன் ஒன்றன்பின் ஒன்றாகப் பல தவறுகளைச் சேர்த்துக் கொண்டே போகும்..."

"அப்படியானால் நான் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருக்கிறேனா?"

"சந்தேகமில்லாமல் 'நீயே உறவு' என்று அவளைக் கைப்பிடித்த பிறகு, உங்களுக்கு மாமா உறவு எதற்கு? மாமி உறவு எதற்கு? நீலா உறவுதான் எதற்கு?"

அவள் இப்படிச் சொன்னதும் அவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, "பாவம் நீலா, அவளும் என்னைக் காதலிக்கிறாள்!" என்றான் பெருமூச்சுடன்.

அருணா மறுபடியும் சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்று மாதவன் கேட்டான்.

"ஒன்றுமில்லை."

"என்ன, ஒன்றுமில்லை?"

"உங்களை யாராலும் காதலிக்காமல் இருக்க முடியாது என்று நினைத்தேன்; சிரிப்பு வந்துவிட்டது!"

"அப்படி என்ன இருக்கிறது, என்னிடம்?"

"மதனாவைக் கேட்டுப் பார்த்தீர்களா?"

"இல்லை."

"நீலாவைக் கேட்டுப் பார்த்தீர்களா?"

"இல்லை."

"அவர்கள் இருவரையும் கேட்காதபோது என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?"

"உன்னையும் கேட்கவில்லை; என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்!"

"சரி, கேட்டுக் கொள்ளுங்கள்; நான் வரட்டுமா?"

அவள் திரும்பினாள்; "மதனாவைக் காணோம் என்று மொட்டையாகச் சொல்லிவிட்டுப் போனால்..." என்று அவன் இழுத்தான்.

"காது மூக்கு வைத்துக் 'கதை' கட்டிச் சொல்ல எனக்குத் தெரியாதே!" என்றாள் அவள்.

"உன்னை நம்பித்தானே அவளை நான் அங்கே அனுப்பி வைத்தேன்?"

"அந்த ஒரு விஷயத்திலாவது என்னை நீங்கள் நம்பியது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அந்த நம்பிக்கைக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லையே! இரவில் என்னுடன் படுத்தவளைப் பொழுது விடிந்ததும் காணா விட்டால் அதற்கு நானா பொறுப்பு?" என்றாள் அவள்.

அவன் ஒரு கணம் யோசித்தான்; மறுகணம், "ஏதாவது கடிதம் கிடிதம் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாளா என்று பார்த்தாயா?" என்றான்.

"பார்த்தேன்; ஒன்றுமில்லை" என்றாள் அவள்.

"எங்கே போயிருப்பாள்?"

"அந்தக் கேள்வியைத்தான் அவள் காணாமற் போனதிலிருந்து என்னுடைய உள்ளமும் என்னைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது!"

இந்தச் சமயத்தில் ஆனந்தன் அவர்களை நோக்கி வர, “அதோ, ஆனந்தன் வருகிறானே, அவனைக் கேட்டால் தெரியுமா?” என்றான் மாதவன்.

சட்டென்று அவன் வாயைத் தன் கையால் பொத்தி, “ஸ், நேற்று வரைதான் அவள் உங்கள் காதலி; இன்று சாட்சாத் மனைவி. அவள் காணாமற்போன விஷயம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்; வெளியே தெரிய வேண்டாம்!” என்றாள் அருணா.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_9&oldid=1673076" இலிருந்து மீள்விக்கப்பட்டது