சுழலில் மிதக்கும் தீபங்கள்/14

விக்கிமூலம் இலிருந்து

14

மாலைநேர நெருக்கடியில் பஸ்ஸில் இருந்து இறங்குவதே கடினமாக இருக்கிறது. சாலையோரங்களில் புழுதி பறக்குமளவுக்கு வெயில் தொடர்ந்து காய்கிறது. பெண்கள் விடுதி நிறுத்தத்தில், கலகலவென்று இறங்கிப் படிகளில் ஏறும் சில பெண்களுக்குக் கிரிஜா பார்த்தால் சிரிக்குமளவுக்குப் பழகி யிருக்கிறாள். யாரிடமும் யாரும் திருமண அந்தஸ்தை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், உள்ளே ஆண்கள் யாரும் வருவதில்லை. அபுகூட அன்று மேலே வர வில்லையே? வருபவர்கள் கீழே உள்ள பார்வையாளர்கள் வட்டத்தில் மட்டுமே இருக்கலாம். சாப்பாட்டுக் கூடத்தில், விருந்தினராக அழைத்து வரலாம்...அங்கு, சுருள் சுருளாகப் புகைவிடும் வனிதையர் புதிதில்லை. உடையணிவதிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனி, பத்து நாட்களாக இவளுக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு வெளியே எங்கோ உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாளாம்.

இரண்டாம் மாடி ஏறிப்போகுமுன் முட்டி வலிக்கிறது. இலேசாக மூச்சு இறைக்கிறது. எதிரே புரளும் நீண்ட விட்டங்கியில், அழிந்த சாயமும் கிறங்கிய கண்களுமாக ருனோ இறங்கிப் போகிறாள். ஆல்கஹால் வாசனை நாசியில் படுகிறது.

இங்கு எல்லாம் சர்வ சகஜம்...

கதவுச்சாவி இருக்கிறது. திறந்து கொண்டு உள்ளே செல்கிறாள்...

கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள்.

எப்போதும் அணியும் பொன்வடமில்லை. சிறுசிறு சிவப்பு மணிகளாலான மெல்லிய சரம், அழகாகத்தானிருக்கிறது.

இரண்டு மூக்குத்துவாரங்கள். ‘விடுதலை’ என்றறிவிக்கிறது. செவிகளில் சிறுதிருகாணி மட்டும் போட்டிருக்கிறாள்.

கைப்பையைத் திறந்து, கற்றை நோட்டுக்களை எண்ணிப் பார்க்கிறாள். ஆயிரத்தைந்நூறு...வங்கி...ரசீது...

தனக்குத் திருநீர்மலைக்கோயிலில், சாமு அந்தச் சங்கிலியைப் போட்ட நேரம் நினைவில் வருகிறது. அது ஒன்றுதான் அவளே சம்பாதித்துச் சேர்த்துச் செய்து கொண்ட பொன்னகை. கல்யாணத்துக்கென்று அவள் பணத்தில்தான் தாலிக்கொடி பண்ணக் கொடுத்தார்கள். அதன்மீது எத்தனை புனிதம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது! பொற்சங்கிலி, தனியாக மஞ்சட்சரட்டுத்தாலி என்று இரண்டு போட்டுக் கொண்டிருந்தாள் வெகுநாட்களுக்கு. பரத் பிறந்த பிறகு வெறும் தங்கக் கயிற்றுத்தாலி மட்டும் போட்டுக்கொள்வதென்றுவிடுத்தாள். ரோஜாமாமி அதைத்தான் குறிப்பாகச் சொல்லிக் காட்டினாள். இப்போது, இந்த அவசரத்துக்கு அது உதவுகிறது. வங்கியில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறாள்.

ஆனி வருகிறாள்.

“ஹலோ-?...சித்தரஞ்சன் பார்க் போனிங்களா கிரிஜா?”

“பார்த்தேன் மதர். ஃபர்ஸ்ட்லேந்து வேலைக்கு வாங்கன்னா...இப்ப ஃபோர் ஹன்ட்ரட்தான் அவங்களால குடுக்க முடியுமாம். எல்லாம் ஜுக்கி ஜோப்டி சில்ட்ரன், ரிஃப்யூஜி சில்ட்ரன்னாங்க.’’ -

“ஹா...ஃபர் த ப்ரஸண்ட் ஒத்துக்குங்க. உங்க வீட்ல எல்லாரும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கோம். உங்க ஸ்ர்ட்டிபிகேட், மற்ற சாமான்களெல்லாம் கொண்டு வந்து குடுத்திடறதாச் சொல்லி இருக்காங்க. மதர் இன்லா...என்ன அப்படி அழுவுது?”

கிரிஜாவுக்கு இது எதிர்பாராத செய்தி.

“அவங்க யாரும் இல்லை. உங்க மதர் இன்லா, மிஸ்டர் சாமிநாதன் தான் இருந்தாங்க. நம்ம லாயர் பிரகாஷ்தான் பேசினார். சட்டுனு இப்ப டைவர்ஸ்னு ஒண்ணும் முடியாது... அவங்க திங்ஸ்’ல்லாம் கொண்டு வந்து குடுத்திடணும்னு கேட்டோம். சரின்னிருக்காங்க...”

“வேற ஒண்னும் சொல்லல...!”

“ஏன்? காம்பரமைஸ் பண்ணிக்கவா?”

ஆனி சிரிக்கிறாள். கிரிஜாவினால் சிரிக்க முடியவில்லை.

மதர் இன்லா எதுக்கு அழுதாங்க?

ரத்னா வருகிறாள். இவள் தோற்றத்தைப் பார்த்ததும் “வெரிகுட்...?” என்று ஆமோதித்து முதுகில் தட்டுகிறாள்.

“கிரிஜா, நீங்க ரொம்ப ஃபார்வர்டாயிட்டீங்க. நம்ம அழுக்கு மரபுகளைத் தூக்கி எறிஞ்சிட்டீங்க! நான் ஒரு தமிழ் சினிமா பார்த்தேன். பேரு நினைப்பில இல்ல. அவ டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஊருக்கு வரா. வந்த இடத்தில் பழைய காதலன் அடுத்த வீட்டில், இவளையே நினைச்சு உருகிட்டிருக்கிறான். சந்திக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். காதலன் சொல்கிறான்-உன் கழுத்தில் இருக்கிறதே அந்த...அவன் போட்டது. அதை நீக்கிவிடு. என்று.இவள் இவளால் அதைக் கழற்ற முடியவில்லை. அது புனிதமானது. மிகப்புனிதமானது. மனப்போராட்டம். அதை நீக்க முடியவில்லை. காதலனை மறுத்துவிடுகிறாள். விவாகரத்துக்குப் பிறகும் அவன் கட்டிய அது புனிதமாகக் கருதப்படுகிறது கிரிஜா, சபாஷ் ....”

கையைக் குலுக்குகிறாள் ரத்னா.

அந்தக் கதாநாயகிக்கு இரண்டு வயசு வந்த பெண்கள் இருந்தார்களா என்று கேட்கத் துடிக்கிறாள் கிரிஜா.

‘...சரி, இப்ப இதைக் கொண்டாடணும். ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவோம்...வா. ஆனி...?’

ரத்னா அவளையும் இழுத்துக் கொண்டு போகிறாள்.

அவள் சென்ற ஐந்து நிமிடத்துக்குள் உள்ளே...நார் மடிப்பட்டு முட்டாக்கு தெரிகிறது...மாயா...மாயா ஒரு பெட்டியைச் சுமந்துகொண்டு வந்து வைக்கிறாள். “தீதிஜி..?” என்று பெரிதாக அழுகைக்குரல் கொடுக்கிறாள். கிரிஜா திடுக்கிட்டாற்போல் நாற்காலியை இழுத்து நகர்த்தி விட்டு மரியாதையாக (பழக்க தோஷம்) நிற்கிறாள்.

“உட்காருங்கம்மா!”

“உட்காறதுக்கு என்ன இருக்கு? சர்ட்டிபிகேட், உன் சாமான் எல்லாம் இருக்கு...பாத்துக்கோ...ஆயிரங்காலத்துப் பயிர்னு நினைச்சேன். ஒரு நாழில அவச் சொல்லைத் தெறிச்சிட்டுப் போயிட்டே. புருஷனாகப்பட்டவன் கோபத்தில், நீ என்ன கிழிச்சேன்’னு சொல்றதுதான். அதை எல்லாம் மனசில, வச்சுக்கலாமா? உனக்கென்ன குறை வச்சிருந்தது? காசு பணம் குறைவா, நீ அதை செலவழிச்சே, இதை செல வழிச்சேன்னு சொன்னமா? ஒரு தீபாவளின்னா ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று புடவை வாங்கிக் குடுக்கலியா? உனக்கு என்ன செளகரியக் குறைவு இருந்தது?...இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறவன், கோபம் வந்தா பேசறது தான். பெண்ணாகப்பட்டவள் வணங்கித்தான் போகணும். குடும்பங்கறது. அதுதான். அந்தப் பொறுமைதான் பெண்ணை உசத்தறது. பதினெட்டு வருஷம் வாழ்ந்து அனுபவிச்சவ, ஒரு நிமிஷமா அதை முறிச்சிட்டு, வெளில தலைகாட்ட முடியாத மானக்குறைவை ஏற்படுத்திட்டு ஒடிப்போவாளா?... என்னமோ, ரெண்டு பெண்ணை வேறு வச்சிட்டிருக்கோம். அதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சி எப்படி ஆகுமோன்னு உருகிப்போயிட்டான். அதை உத்தேசிச்சானும் நீ இப்படி தரக்குறைவா நடந்திருக்க வேண்டாம்...”

கிரிஜாவுக்கு முகம் சிவக்க ஆத்திரம் பொங்கி வருகிறது,

“நான் என்ன தரக்குறைவா நடந்துட்டேன்? நீங்க ஒயாம எம்மேலே சகதிய வாரி எறியும்படி என்ன பண்ணிட் டேன்...?”

“இன்னும் என்னடியம்மா பண்ணனும்? ஆனானப்பட்ட சீதையையே லோகம் பேசித்து. அக்கினிப் பிரவேசம் பண்ணினப்புறமும், உனக்கு ஒண்ணுமில்ல. துடைச்சுப் போட்டுட்டுக் குடும்பத்தைவிட்டு ஒடிப்போயிட்ட, இருக்கிற வாளுக்கு மானம் மரியாதை இல்லை...?”

“இதைச் சொல்லத்தான் இங்க வந்தீங்களா?...'

“உன் சாமானெல்லாம் இருக்கு பாத்துக்கோ, கண்டதுகளும் வந்து மானம் மரியாதை இல்லாம கத்தறது. மானமா இருந்தோம், அது போயிட்டது. எல்லாம் இருக்குன்னு இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுத்தரச் சொன்னான்...”

பெட்டியைத் திறக்கிறாள். அட்டை ஃபைலில் அவளுடைய கல்வித் தகுதி மற்றும் சான்றுகள்...அதன்மேல்

பத்தாயிரத்துக்கு ஒரு செக். அதை எடுத்து வெறித்துப் பார்க்கிறாள்.

“இதென்ன, நாய்க்குப் போடும் எலும்புத்துண்டா?... எடுத்திட்டுப்போங்க!” விசிறி எறிகிறாள்.

அவள் குரலின் கடுமையில் மாமியார் பின்னடைத்திருக்க வேண்டும். வீசிய காகிதம் அவள்மேல் விழுகிறது. குத்தப் பட்ட செருக்கை விழுங்கிக்கொண்டு வெளியேறுகிறாள். மாயா “தீதீஜி...!” என்று கண்ணிரைக் கொட்டியவளாகப் போகிறாள்.

கிரிஜா வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள்.

எந்த அரவமும் செவிகளில் விழவில்லை. ரத்னாவும் ஆனியும் இன்னுமா ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார்கள்? எங்கே போனார்கள்?...