செங்குந்தர் துகில் விடு தூது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழகத்தில் பல சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடி உள்ளனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் இருந்தாலும் கூட, சில சாதியருடைய பண்டைக் கால வழக்க வொழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைக்கிறது. செங்குந்தர் துகில்விடு தூது என்னும் இந்நூல் செங்குந்தர் மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.

Wikipedia-logo-v2.svg
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

காப்பு[தொகு]

தேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்
சூடுந் துகில்விடு தூதுக்குக்-கூடுஞ்சத்
தைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்
கைம்முகனும் சண்முகனுங் காப்பு.

நூல்[தொகு]

முருகன்பிறப்பு[தொகு]

திருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்
சூர்மன்னன் வாதைத் துயர்க்கிரங்கிப்-பேர்மன்னு
வானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்
ஆனனங்க ளாறா யணிநுதலின்-நீள்நயனம்
......ஆறிற்கெம.......பலவர்க்கச்
சீறு மழற்பெருக்காய்த் தேவரஞ்சி-ஊறுறுங்கால்
அஞ்சலென்று.......பொறியை வானதியில்
அஞ்சா வணத்துள் மாவுசெய்யச்-செஞ்சுடர்கள்
ஆறுமகவ.......ங்கா......க்
கூறுநறு முலைப்பா லுண்டிருப்ப-ஏறின்மிசை
அம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்
செம்மையுட னொன்றாகச் சேர்ந்தெடுப்பச்-செம்முகங்கள்
ஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை
கூறுமழ காங்குழந் தைக்கு-மீறுந்
திருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி
இருவர் மகிழ்வாகியிருப்ப-நெருநலுமை
.......ந்தப் பொறிப்பயத்தால் பயந்தோடச்
சந்தப் பதச்சிலம்பு தாக்குதலால்-சிந்தும்
நவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை
நவசத் திகளாய் நணுகச்-சிவனுற்றுப் 10

பார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்
சேர்த்திடுமே யம்மீகைத் திறலோடும்-ஆர்த்து

.........த்தலைவன் முதலாய் நவவீர
ரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க .........
.........யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்
உம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் .........

முருகன், பிரமனின் செருக்கை அடக்கியது[தொகு]

ஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்
தீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் - தாமருளால்

முருகன், சிருட்டித் தொழில் செய்தது[தொகு]

எவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்
அவ்வரனுக்கோத வவர்வந்து - வவ்வுசிறை 15

சிவனால், பிரமன் சிறை மீண்டது)[தொகு]

விட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு
மட்டறியாத் தாரகத்தின் வான்பொருளைச்-சுட்டியுரை

முருகன். தகப்பன்சாமி ஆகியது[தொகு]

என்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்
அன்றுரைக்க முத்தையனா மென்று-நன்றுரைத்துத்

முருகன், சக்திவேல் பெற்றது[தொகு]

தந்தைதா யும்மகிழ்ந்து சக்திவடி வேலுதவிப்
பைந்தடந்தேர் பூதப் படைகூட்டி-வந்துததித்த

முருகன், சூரபதுமனை வென்றது[தொகு]

.........நீயுமே சூர்முடித்துத் தேவர்சிறை
யாதரவாய் மீட்டுவா வையவென - ஓதலினால்
மாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்
மாயவே லேவி மயேந்திரத்தைப்-போயடர்க்க 20

கந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி
செந்நிதங்கிச் சூர்பதுமுன் சிங்கமுகன்-மைந்தர்பலர்
பானுகோபன் முதலாம் பற்றலர்கள் நாற்படையின்
ஊனுடல்போய்ப் புள்விலங்குண் டோடவே-வானவர்க்காய்

முருகன்,தெய்வானையை மணந்தது[தொகு]

சங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்
சிங்காரங் கண்டு தினமகிழுஞ்-சங்கிராம

செங்குந்தர் பரம்பரை இதுவென்றல்[தொகு]

வீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்
தீரவாகைப் புயத்துச் செங்குந்தர்- பாராட்டி
ஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்
காலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-மோலைவிட்டோர் 25

செங்குந்தரின் கடவுள்பற்று[தொகு]

கயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்
மயிலவன்பொற் பாதமறவார்- இயல்பறிய
தோராமலாண்டுதொறுஞ் சூரசங்கா ரத்திருநாள்
சீராய் நடாத்துந் திறலினார்- ஓரெழுத்தும்
அஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்
அஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்- ரஞ்சிதமாய்

செங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்[தொகு]

தொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு
மண்டலம் நாடாளு மரபினார்- கொண்டிடுநூல்
மேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்
நோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச் 30

செய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்
நெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர்- வையகத்தில்
சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலைசெய்யும்-நேரிலொட்டக்
கூத்தரெனப் பேர்பெறுசெங்குந்தப் புலவர்தமிழ்
சாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர்- ஆத்திபுனை
சொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன
வல்லானை வென்று வரிசைபெற்றோர்- நல்லநவாப்
பட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்
அட்டலட்சு மீகரனா மாண்சிங்கம்- பட்டமுள்ள 35

கந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்
சந்ததியில் வந்த தளவீரன்-சந்ததமும்

தேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்
வாசற்பிர தானிமெச்ச வாழுவோர்-வாசபுகழ்

கற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்
சொற்பெரிய தம்பித் துரைமகிழ்வோர்-நற்பரமாம்

முத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி
நத்திரைசு வேத நதியுளார்-எத்திசைக்கும்

கோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு
வாலப்பன் கோயில்முதல் வாழுநகர்-மாலைப்பூஞ் 40

சீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி
மூர்க்கமத யானை முனைப்புரவி-யார்க்கும்

முரசுதிற லானை முறையால் நாட்டாண்மை
அரசுசெய்து வாழு மதிபர்-வரிசை

பதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய கீர்த்தி
முதலியர்க ளாகவந்த முன்னோர்-கதலிகள்சூழ்

சோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்
வாழருள்செங் குந்தர்மெச்ச வாழ்ந்திடுநாள்-ஏழையேன்

கொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்
பங்குமையா ணானைக்காப் பஞ்சநதி-பொங்குபுகழ் 45

சாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பவநாசம்
ஏற்றவலஞ் சுழிப்பட் டீச்சுரமும்-போற்றி

திருவேரகத்தில் முருகன் திருக்கோலக்காட்சி[தொகு]

திருவேரகமுந் தெரிசித்துச் செவ்வேள்
உருவே ரகசிவத்தி லுன்னிக்-குருவாழ்

மலைமேல் பொற்கோயில் வலமாக வந்து
தலைமேல் குவிகரமுஞ் சாற்றி-கொலுமேவும்

சுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்
விக்கிரமப் பிரகாசவடி வேல்கரமும்-உக்கிரமயில்

வாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்
மோகன விநோத முதிரழகுங்-கோகனகத் 50

தாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்
தோளின் மணிமாலைத் துகிலழகும்-வேளிடத்தில்

சோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்
ஆடகப்பூம் பாதத்தி லர்ச்சனையும்-நாடகத்தில்
கன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன்(பு) கைகுவித்து
சென்னியர்க ளாடுவதுஞ் சேவைசெய்தேன்-என்னிதயங்
கண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்
பண்குளிர்ந்த பாமாலை பாடினேன்-தண்கமல
பாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்
வேதம் புகல்வாரும் வேண்டுவாரும்-போதமுடன் 55

ஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்
ஞானந்தழைக்க நவில்வாரும்-மோனமே
கொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்
கண்டுதொழுதேன் களிப்பானேன்-பண்டருள்சேர்
நாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த
பாவால் துதித்துப் பதம்பணிந்து-தேவா!
சரவணபவா! சாந்த னேகந்தா!
குரவணியு நீபா! குமரா!-குரவா
முருகா! குழகா! முதல்வா! திருமால்
மருகா! விரகா! மதுரா!-பெருகும்
அருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா!
கருணைபுரி பாத கமலா!-பிரணவனே!
செந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்
இந்துலவு காவரையு மேரகமுங்-கந்தமுதல்
குன்றுதோ றாடல்செயுங் கோவே! உயர்தேவே!
மன்றுதோ ராடியுமை மைந்தனே!- நன்றருள்கூர்
ஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்
தொந்தி வயிற்றானைத் துணைவனே!-விந்தைமதி
ஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா!
ஆறெழுத்தி னுட்பொருளா மையனே!-பேறுதவும் 65

பைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய
செங்குன்ற மேமுதலாந் தெய்வதலங்-கொங்கில்
நிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்
அலையா கிரியி லடியேன்-தலைமீதில்
வைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி
மெய்த்தபதச் சொல்லுணர்த்தும் வித்தகனே!-கைத்தலத்தால்

வேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்
தாதைக் குபதேச சற்குருவே!-நாதன்முதல்
மூவர் புகழுமுனைச் சூரசங் காரா!
தேவர்சிறை மீட்ட சேவகனே!-சேவலுயுர் 70

துள்ளு மயில்வீரா!சுடர்வேற் கரகமலா!
வள்ளி தெய்வானை மணவாளா!-தெள்ளுதமிழ்
கும்பமுனிக் குரைத்த கோமானே! நக்கீரன்
வெம்புசிறை விடுத்த வீரியனே!-அம்புவியில்
சம்பந்த ராகிச் சமண்நீக்கித் தெய்வசைவ
விம்பந் தழைக்கவந்த வேதியனே!-நம்புஞ்சீர்
நித்தனே! நிமலனே! நிட்களனே! சற்குணனே!
சுத்தனே! அத்துவித சூக்குமனே!-வித்தகனே!
ஆதித்தி யானந்த அதீதபர மானந்த
சோதியா! ஞானச் சொரூபமே!-நீதியருள் 75

காரணமே! இன்பமே! காமியமே! சோபனமே!
பூரணமே! அண்ட புவனமே!-ஆரணமே!
பூதமே! கட்புலனே! புண்ணியமே! பாக்கியமே!
நாதமே! விந்துவே! நாயகமே!-கீதமே!
சத்துசித் தானந்த தற்பரமே! சிற்பரமே!
முத்திக்கு வித்தே! முழுமுதலே!-தித்திக்கும்
ஞானப் பசுந்தேனே! நல்லமுதே! கற்கண்டே!
மோனச் செழும்பாகே! முக்கனியே!-தியானிக்கும்
சற்பத்த வத்சலனே! சைதன்னிய மெய்ப்பொருளே!
கற்பித்த நீயன்னைக் காத்தல்கடன்-அற்புதனே! 80

முருகனிடத்து வேண்டுதல்[தொகு]

வேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்
தேறவென்னைக் காத்தருள் செய்யென்று-கூறியே

முருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்[தொகு]

சன்னிதியிற் போற்றித் தலைவாசஞ் செய்திடலும்
இன்னருள்சேர் தேசிகராய் என்கனவில்-முன்னியே
அன்னைதந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே
என்னை வினாவ எடுத்துரைத்தேன்-முன்னே

வினையின் வலிக்கவியான் வீணர்களைப் பாடி
உனைமறந்து நாயே னுழன்றேன்-கனவினும்

முருகனிடத்து வரம் வேண்டுதல்[தொகு]

உன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க
பொன்பொலியும் வாழ்வு புகழீகை-இன்பம் 85

தவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா!
புவனகர்த் தனேஎன்று! போற்ற-அவனோடு

முருகன் அருள் கூறுதல்[தொகு]

அவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை
எவர்கட்கு மீவ தியல்பாம்-அவையறிந்து
பைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்
நந்துணைச்செங் குந்தரிடம் நண்ணினால்-முந்துமவர்
சிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்
தந்தருள்வோ மென்றிறைவன் தானனுப்ப-வந்துடனே

கும்பகோணம் வணங்கல்[தொகு]

கும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்
சம்புவளர் கின்றமற்றத் தானங்கள்-நம்பனருள் 90

மாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்
தேமகிமை சேர்வீர சிங்கவனை!-கோமுதன்மை
சாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து
சேரன்பர் ரமடியார் சேவைசெய்து-பேரன்பாய்

திருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்[தொகு]

நாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்
பாகேஸ்வரி யைப்பணிந் தேற்றி-யோகீசர்
மெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்
அய்யர் மடமுங்கண் டடிவணங்கி-துய்யபுகழ்
முந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்
செந்திருவா ரூர்நாகை தில்லைநகர்-பந்தர்வளர் 95

காழிமா யூரங் கடவூர்வே தாரணியம்
ஏழிசைசேர் வேளூ ரிடைமருதம்-சோழவள

நாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு
காட்டின் வழியிற் கடிதேகிக்-காட்டுகின்ற

நற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்
சிற்சரன பங்கயத்தைச் சிந்தித்துச்-சற்சனரும்

மாதவர் சொர்ண மடத்தி லகத்திய
நாதர்தன வர்த்தனியை நான்பணிந்து-நீதமுள்ள

காத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்
வார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர் 100
அரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற
பெரியநா டென்றும் பெயராய்ப்-பரிவுபெறு

மன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா
டின்னார் குவாகமெனு நாடு-நன்னாட்டில்

மங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்
துங்கசெயங் கொண்ட சோழபுரம்-தென்கருப்பூர்

மன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்
நன்றருள் குவாகமெனு நாட்தனிற்-றென்றலங்காப்

பொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்
மன்னு கொடுக்கூர் மருதூருந்-துன்னுமலர் 105

கானகலா வாரியங் காவ லிலையூரும்
ஆனகல்லாத் தூருமிடைக் குறிச்சி-மானதிசேர்

வேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்
ஆண்டிமடம் விளந்தை யாதியாய்-நீண்டபதிப்

பேரியல் நாட்டாண்மை பெரியதனக்காரர்
காரியக் காரார் கர்ணீகர்-ஊரும்

உறவின் முறையாரை யோலைவிட்டுக் கூட்டித்
திறமையாய்த் திட்டமிட்டுச் சேர்ந்து-நிறைசபையோர்

பூஞ்செடிசுழ் சோலைபொது மண்டபந் தன்னில்
காஞ்சீபுர மென்னக் கதித்திருந்து-வாஞ்சையுடன் 110

தந்தப்பல் லக்குத் தலைமைநாட் டார்முதலோர்
கந்தப்பு ராணமுதல் கல்விபயின்-றிந்தப்பார்

மாராசர் மெச்சு மரியாதை ராமனெனத்
தீரா வழக்கைத் தெரிந்துரைத்துப்-போரார்

குடங்கை வலங்கையெழில் விருதுச் சண்டை
திடங்கொள்கச்சிக் கோலைவிட்டுத் தீர்த்தும்-அடங்கார்

நதிர்வைத்துக் காண நவசித்திர மான
சதிரிற் கொலுவாஞ் சமையம்-சதுர்மறைதேர்
தெய்வா லயத்துச் சிவமறையோர் நீங்கள்
செய்வான் பிரசாத மீண்டுதவ-செய்வேள்வி 115

அந்தணர்க ளக்கதையு மண்ணலடி யார்நீறுந்
தந்தருளி வாழிச் சதிர்மொழிய-நந்தவனம்
எண்ணுதிருப் பணிக ளேற்றகலியாணமுதல்
புண்ணியங்கட் கெல்லாம் பொருள்சொரிந்து-வண்ணமணிக்
கட்டழகா மம்பலவர் கட்டளையார் விரதகிரிக்
கட்டளையார் தென்பழனிக் கட்டளையார்
காணவளர் சீர்விளந்தைக் கட்டளையார்-வாணர்புகழ்
கோவிலில்வாழ் சண்முகப்பேர் கொண்டசிவ ஞானியன்பர்
தேவையில்வாழ் ஆறுமுகத் தேவருடன்-மேவியபேர் 120

இன்பருளு மாண்டிமடத் தேகாம்ப ரய்யருடன்
அன்பருள் குவாகமன்று ளாடுமையர்-முன்புபெறு
ஞானப்பிர காசமுதல் நல்லோர்க்கிந் தட்டாவ
தானப்பிர தாபவித்தைச் சாதனையோர்-கானம்வல்லோர்
நட்டுக் கடாத நயினார்பொன்னம்பலப்பேர்
இட்டவன்வே டங்குமாரிக் கைகற்றோர்-திட்டமுள்ள
இந்திரசா லங்களுமா யேந்திரசா லங்கள்முதல்
தந்திரமாம் வித்துவ சனர்முகழ்-செந்தமிழோர்
மாலைபல பாட வரிசைத்திரள் கொடுக்க
ஓலையெழு தக்கணக்கு முத்தரிக்க-வாலையர்கள் 125

ஆடிநிற்கப் பஞ்சதொனி யார்ப்பரிக்கக் கட்டியர்கள்
பாடிநின்று சாமிபராக் கென்ன-கூடியே
மஞ்சள் பாவாடை வயிராக்கியர் சூழப்
பஞ்சவர்ண மாம்விருது பாங்கிலங்க-குஞ்சமும்வெண்
சாமரையு மேவிசிறி தானசைத்துக் காளாஞ்சி
காமரச மாதர் கையிலேந்த-தாமரைப்பூ
வஞ்சிமுதல் எண்வர்களும் வந்திலங்க வாணர்கலி
அஞ்சி யுலத்தரிட மாயோட-இன்சொல்
உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்போர்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழென்-றுரைத்ததும் 130

நல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்றென்ற-சொல்லுமெண்ணித்

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை ந்ன்றென்று-தோன்றி

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவரென்று-இசைவோர்

சபையரசர் மெச்சு துரைமுக நேராஞ்
சபைபுகுந்தேன் கண்டு தயவாய்-உபசரித்து

வாருமிரு மென்று மகிழ்ந்தா சனங்கொடுத்தார்
ஊருமுங்கள் பேருமென்ன வோதுமென்றார்-சேர்கொங்கில் 135

சேலம்வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
வேலரரு ளாலே விருதுகவி-நாலுதிக்கும்

நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசைசெய்து-கூட்டருள்சேர்

வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன்-ஆரவயல்

கச்சியில்வா ழேகாம்பர் காமாட்சி புத்திரரே!
உச்சிதமா மேயமிசை யுள்ளோரே!-மெச்சுகந்த

சாமிதுணை யாய்ச்சூர சங்காரஞ் செய்துசுரர்
காமியத்தைத் தந்தருளுங் காரணரே!-பூமிபுகழ் 140

ஆயிரத்தெண் மாமுடிசிங் காதெனமொட் டக்கூத்தன்
பாயிரசொற் கீந்த பரிசோரே!-தூய

அபிமான பூஷணரென் றாரும் புகழும்
அபிதான மோங்கு மவையிர்!-சுபமேவும்

வெல்லரிய வல்லானை வென்று விருதுபெற்ற
வல்லவரே! கல்விசெல்வம் வாய்த்தவரே!-தொல்லுலகில்

குன்றில் விளையாடுங் குமார குருபரனை
என்று மறவா வியல்பினரே!-என்றுசொல்லி

ஆய்ந்து தமிழ்பாடி யரங்கேற்ற வுமகிழ்ந்து
வாய்ந்தபணி செம்பொன் வரிசையுடன்-ஈ(ய்)ந்தருளும் 145

துகிலின் சிறப்புரைத்தல்[தொகு]

சோமன் தலைப்பாகு துப்பட்டிச் சால்வையங்கி
மாமடவார் சேலைமுதல் வர்க்கமே!-பூமறையோன்
மாலின் கலையும் வரைமான் திருவாணி
மேலின் கலையுமுந்தன் மேற்குலமே!–மாலயன்தேர்
அண்ணா மலையார் அணிமுடிமேற் சோதிதந்து
கண்ணாற் கண்டோற்குக் கதிகொடுத்தும்-வெண்ணீற்றான்

ஆடும்பொன் னம்பலத்தி லண்டபுவ னந்துதிக்க
மூடுந் திரையாகி முத்திதந்தும்-பாடுகின்ற
வாணி யிசையினிரு மாமுனிவர் கந்தருவர்
பாணர்கையில் யாமுறையாம் பாக்கியமே!–வீணொருவன் 150

வாதி லருணகிரி வாக்கினால் வேலன்மயில்
மீதில்வர வுந்திரையாய் மேவிநின்றாய்!–தீதிலா
செம்புடவை யாகிச் சிவனடியா ரைச்சேர்ந்து
கும்பிடவும் பெற்ற குலக்கொழுந்தே!–நம்புமறைச்
சீரோது மீசன்முதல் தேவர்கொடி யாய்த்திருநாள்
ஆரோ கணக்கொடியு மாகிநின்றாய்!–பேரான
தேருக் கலங்காரந் தெய்வத் தலங்காரம்
ஊருக் கலங்கார மோங்குவதும் - யாருலகில்
மன்னர்க் கலங்காரம் மால்யானை வெம்புரவி
அன்னவர்கள் பல்லக் கலங்காரம்-வன்னலட்சம் 155

தண்டினிற் கூடாரந் தளகர்த்தர் கூடாரங்
கொண்டதுரை மக்கள் கூடாரந்-திண்டொருகு
மெத்தைமேற் கட்டிக்குடை வெற்றிக்கொடி சுருட்டித்
தத்துபரி வீரர் சவுந்தரமும்-நித்தவரும்
சாரியலங் காரஞ் சமுகவலங் காரமவர்
பாரியலங் காரமுமுன் பாக்கியமே!–வீரியமாய்
மாப்பிளையும் பெண்ணு மணக்கோல மாகவே
கோப்பழகு காட்டுங் குறிப்புநீ!–பூப்பொலியும்
கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல்நீ! கற்பில்லா
துற்புணர்ச்சிக் கள்ளியர்க்குந் தோழமைநீ!–நற்பருவ 160

வேசியர்கள் மெத்தமெத்த வேடிக்கை செய்துநித்தங்
காசுபறிப் பதுமுன் கட்டழகு!–தாசியர்கள்
சிற்றிடையில் தாழ்த்தி திருத்தி யுடுத்துவதும்
மற்றுமுலை காட்டி மறைப்பதுவுஞ் - சற்றே
நெகிழ்வதுங் கண்டிளைஞர் நெட்டுயிர்பாய்ச் சிந்தை
நெகிழ்வது முந்த னிறமே!–மகிழும்விலைக்

கன்னியர்கள் மென்துடைமேல் காம னார்மனையில்
முன்னரிடுந் திரையாய் மூடியதை–மன்னர்
தெரிசனங்கள் கண்டணைந்தோர் செம்பொன் முடிப்பு
வரிசைகொடுப் பதுமுன் வாய்ப்பு!–சரசகுண
மங்கையர்மே லாசைகொண்டு மாப்பிளைமார் கெஞ்சிநின்று
செங்கையினாற் றொட்டிழுக்குஞ் செல்வமே!–கொங்கை
குடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்
படத்தினிழல் காட்டும் படமே!–வடத்திரள்சேர்
ஏகாச மாக விளமுலையி லெந்நேரம்
வாகா யணைந்திருக்கும் வங்கணமே!–பாகின்மொழி
கொன்னியோ ருகுத்துடுக்குங் கோதையர்க்குங் காமுகர்க்குஞ்
சன்னதலீ லைக்கிசைந்த சம்பிரமமே!–நன்னுதலார்
முக்காடு போட்டு முகமினிக்கிக் கண்மிரட்டு
மிக்காயந் தொழிற்கினிய மென்றுகிலே!–முக்காலும் 170

மாதர் குளிக்கும்நறு மஞ்சளிலே நீதோய்ந்தால்
காதல் மதிமயக்கிக் கண்பறிப்போய்!–நோதலினால்
தாய்க்கிழவி தான்மகிழத் தாதிமா ரேவல்செய்ய
வாய்க்குமலர் மெத்தையின்மேல் வைத்திருந்து–வாய்க்கிணங்க
முத்தமிட்டுக் கொஞ்சி முலையணைத்து லீலைசெய்து
மெத்தவுன்மே லாசையென்று வேண்டுவதும்-எத்தியர்கள்
பொன்வகையைக் கண்டுசெய்யும் பூரிப்பா மத்தனையும்
உன்வகையைக் கண்டாலு முண்டாகும்-தன்வகையால்
தேவடிமார் செய்யுந் திருக்குகளுந் தாய்க்கிழவி
காவலென்றுந் தூரமென்றுங் காய்ச்சலென்றும்-நோவுவகை 175

பத்தியங்கள் சொல்லிப் பசப்புவது முன்பணையம்
அ(ஸ்)த்தரொக்கம் வந்நதென்றா லாணைகளுஞ்-சத்தியமாய்
வைத்திருக்கு மாப்பிளைக்கு வார்த்தைப்பா டென்றுசொல்லும்
அத்தனையு முன்னா லடங்குமே!–சத்தசுரா
பாகொழுகுஞ் சங்கீத பாடல்வித்தை யாடல்வித்தை
லாகுகர்ண வித்தை லாகுவித்தை–மோகசுக
வித்தைபல கற்றலு மேனியழ கானலுந்
தத்தைமொழி தேன்போற் சமைந்தாலும் - முத்துமணி
பொன்னா பரணங்கள் பூண்டாலும் வேசியருக்
குன்னாலே மெத்தவழகு குண்டுகாண்!–எந்நாளும் 180

ஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்
ஆனகலைல யான வசீகரமே!–மேனியணை

ஆணும் பெண்ணுக்கு மழகா யரணாகிப்
பூணு மபிமான பூஷணமே!–நாணகல
தாருவனத் தாரெனவே தங்குமயல் பெண்கள்செயல்
நேருமிடை நீங்கி நெகிழ்ந்துசொல்வாய்!–சோரும்
உடுக்கை யிழந்தவர்கை போலமற் றாங்கே
இடுக்கண் களைவது நட்பென்று–அடுத்து
தவழ்ந்து விழுமுலையைத் தாங்குவாய்! நீசற்று
அவிழ்ந்துவிழி லக்கைவந் தணைக்கும்-நவின்றிடுங்கால் 185

பொன்னைவிட்டு நீங்கலாம் பூந்துகிலே! பூவுலகில்
உன்னைவிட்டு நீங்கி உலவுவரோ?–சன்னசம்பா

அன்னமுநீ யும்நலமா யாவியுடற் கேறினால்
பொன்னணிமேற் பின்பாசை பூண்பதுகாண்!-இந்நிலத்தில்
மானிடத்தா ரானவர்க்கு மானங்காக் கும்பொருட்டாய்
மானிடத்தான் கற்பித்த வஸ்துவே!–கானவித்தை

பாட்டில் பறிப்போர்பல் வித்தையோ ரும்வல்ல
வாட்டில் பிலுக்குவதுன் வர்ணணையே!–மேட்டிமையாய்

பாடங்கள் செய்யும்பல் பேச்சாய் பொன்பறிப்போர்
வேடம் பலிப்பதுமுன் வெடிக்கை!–ஓடியெங்கும் 190
தேடிவரும் ரூபாயும் செம்பொன் வராகனுமே
மூடிமுடி வதுமுன் முந்தாணி!–மோடியினால்
கால்வித்தை யென்றாலுங் கட்டழகா! உன்சிறப்பால்
மேல்வித்தை யாகவிளங்குமே–நூல்விதியால்
பஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்
விஞ்சப் பிரசங்கம் விதித்தாலுஞ்-செஞ்சொலினால்
வல்லகலைல யைமதித்து உதவார்மேல் விளங்கும்
நல்லகலை யே!யுனக்கே நல்குவார்-சொல்லும்
சரளியலங் காரசுர சங்கீதம் பாடி
திரள்வரிசை வாங்குவ துன்சீரால்!–(வில்) குரல்போல் 195

மீட்டுதம் பூருக்கும் விதக்கூத்து பொம்மல்கூத்
தாட்டுதற்கு முந்தன் அலங்காரம்!–பாட்டிசைசேர்
மெட்டுகளா லெட்டுவகை வித்தையில்பெண் ணாட்டுவிக்கும்
நட்டுவர்க்கு முன்னாலே நல்வரிசை!–நட்டுயர்ந்த
கம்பமே லாடுவித்தை காரூட வித்தைமுதல்
தம்பனவித் தையிந்திர சாலவித்தை–சம்பிரமமாம்
ஆட்டமெல்லாங் கண்டுகொடா ரம்மம்மா வுன்னுடைய
மேட்டிமைகண் டேதருவார் மேல்வரிசை!–காட்டும்
பவளச்சிர மாணிக்கம் பச்சை பதுமராகந்
தவளமுத்து நீலமுதல் சாற்றும்-நவமணியின் 200

மாலைவிலை மதிக்கும் வர்த்தகரு முன்சிறப்பால்
மேலதிக மாக விலைமதிப்பார்!–சால
உடன்கொடுப்பார் மேலணியு முன்போல் வரிசைக்
கடன்கொடுப்பார் தாமுமுன்னைக் கண்டு–திடம்பெறவே
உன்சிறப்பா லாரு முபசரிப்பார் நீயிளைத்தால்
முன்சிரிப்பார் சற்றும் முகம்பாரார்-பொன்சிறப்பாய்
எத்தில் சிறந்திடுமால் எவ்வுலகுங் காப்பதுக்காய்
பத்துப் பிறப்பான் பான்மைபோல்-வித்துருவாய்
பஞ்சாகி நூலாய்ப் பலபாடு நீபடுதல்
அஞ்சா துயிர்காக்க வல்லவோ?–மிஞ்சுசல்லா 205

துப்பட்டா சுக்கழுத்தஞ் சோடு நெடுமுழமும்
செப்புங் கிழிவு சிலம்பிரியும்-இப்படியே
கோடியினில் நீகொண்ட கோலமெடுத் துரைக்கக்
கோடிகவி சொன்னாலுங் கூடாது–நீடுபுகழ்
வர்த்தனராஞ் செங்குந்தர் வாழ்பதிக்குத் தாரறத்தில்
வர்த்தகரை யெல்லாம் வரவழைப்பாய்!–வைத்திருந்த
செம்பொன் முடிப்பெடுத்துத் தேசதே சத்தினிற்போய்
சம்பளவாள் விட்டுத் தருவித்து–டம்பமதாய்
மூட்டைகட்டிக் கூட்டி முழுதுங் கணக்கெழுதி
மாட்டுமே லாள்மேலும் வைத்துவந்து–நாட்டமுள்ள 210

எட்டுத் திசையிலும்போய் எட்டும்வியா பாரத்தால்
நட்டமொடு லாபமுமே நாட்டிவைப்பாய்!-அட்டதிக்கில்
மங்களமாங் கிட்டாம ரலக்கர் முதல்தீவு
சிங்களவங் காளமுதல் சீமையில்போய்-தங்கமணி
கப்பல் வந்துசேரந்து கரைதுறையில் வர்த்தகருக்
கொப்பந்த மாயெழுது மோலையுடன்-இப்புவியில்

எங்கெங்கு முள்ளஎழில் தொழில்செய் வர்த்தகர்க்கு
மங்கங்கே சாளிகையோ டாளனுப்பிச்-செங்குந்தர்

வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்
பூசலிட்டு மேன்மேலு போட்டுவைத்துப்-பேசு 215

நெடுமுழமே யாதியாய் நெய்யுந் தினுசைக்
குடிமேல் கணக்கெழுதிக் கொண்டு-கடிதுகட்டி

ஆயத் துறையார்க ளாதாய முண்டென்று
வாயைத் திறந்து வழிபார்க்க-நேயமுடன்

வாடகைக் காரர் வசத்தில் பொதியனுப்பிப்
பீடுபெற வேதரகர் பின்புசென்று-பாடுகவிக்

குத்தரங்கள் சொல்லிக் கொடுப்பார் தமைத்தடுக்கு
மைத்திபர்போற் றீங்குசொல்வோர் வாயடக்கி-எத்தினமோ

பார்வையிடு வார்க்கும் பாங்கித்து வாசியர்க்குஞ்
சேர்வைபெறக் காதில்மெலச் சேதிசொல்லிப்-போர்வைப்பூ 220

பச்சடந் தாம்பூலம் பனிநீர் தெளித்துதவி
மெச்சிவரா கன்கொடுக்க மீண்டபின்னர்-அச்சரக்கை

தேங்குபுக ழாற்சலவை செய்துமடித் தாலையிட்டுங்
காங்குதுவைத் துங்கிடங்கில் கட்டிவைத்தும்-பாங்குபெற

கப்பல்மே லேற்றிக் கடலேற்றிப் பொன்மணிகள்
குப்பல் குப்பலாகக் குவித்திடுவாய்-செப்பமுடன்

கொண்டகணக் குங்குடி நிலுவையும் லாபங்
கண்டகணக் குமெழுதிக் கட்டிவைத்தும்-மண்டுதொகை

சொன்ன தரகுத் தொழில்முதலி மார்களுக்குஞ்
சென்னைபட்டணங் கூடல்புதுச் சேரிமுதல்-மன்னுபுகழ் 225

மாறாக் கரைதுறையில் வர்த்தகர்க்கும் வாழ்வுதவி
ஏறாத்தீ வெங்கும்போய் ஏறுவாய்!-வேறாக

வெள்ளைக்கருப் புச்சிகப்பு மேலெழுத்துப் பட்டஞ்சில்
விள்ளு மனேகவித மானாய்-வள்ளலே!

வெண்பட்டுச் செம்பட்டு மிக்ககரும் பட்டுமஞ்சள்
வண்பட்டுப் பச்சைவகைப் பட்டும்-எண்பட்ட

பொன்சொரிந்து கொள்ளும் புதுச்சால்வை யங்கிவகை
மின்சரிகைப் பாகு விதங்களுடன்-மென்சரிகை

சேலைசந் திரகாவித் திரள்பாகு வர்க்கமுறு
மாலைகண்டைச் சாதிரா வத்திரமும்-மேலெழுத்துச் 230

சாதிராச சேலை தலைப்பா குறுமாலை
சோதி ரவணிதமாஞ் சோமன்முதல்-சாதிவகை
கட்டுவர்க்க முந்தங்கக் காசுவர்க்க மேசொரியும்
பட்டுவர்க்க முமுனது பந்துவர்க்கம்-இட்டழுத்து
குச்சிலங்க மாதர் குவிமுலைமேல் வர்ணவர்ணக்
கச்சுரவிக்‍ கையுமாய்க்கா வல்கொண்டாய்-மிச்சவலை
வச்சிரகண் டைச்சேலை மதுரைச்சல் லாச்சேலை
செச்சைப்பூ சரபந்தச் சேலையென்றும்-இச்சையுள்ள
கோலத்துப் பட்டென்றுங் குங்குமப்பூப் பட்டென்றுஞ்
சேலத் தெழுத்துநகைச் சேலைவகை-வேலையுயர் 235

மாதளம்பூச் சேலையென்றும் மல்லிகைப்பூச் சேலையென்றுஞ்
சீதளமாந் துத்திப்பூச் சேலையென்றும்-மீதெழுத்து
காந்திபெறு மாதிரிப்பாக் கத்துச்சல் லாச்சேலை
வேந்தர்புகழ் சந்திரகா விச்சேலை-சேந்த
கலசபாக்கச் சேலை காஞ்சிபுரச் சேலை
பலர்புகழுந் தஞ்சைநகர்ப் பாகு-நலமிகுத்த
வெங்களூர்ச் சால்வை விதளுருப் பச்சடமுந்
துங்கதிரு நெல்வேலிச் சோமனுடன்-தங்கு
கருப்புரஞ் சுச்சோமன் காஞ்சிபுரச் சோமன் (துரைத்)
திருநாகீச் சுரத்துச் சோமன்-திருத்தமுள்ள 240

வண்ணவண்ணச் சேலை மதித்தபட்டில் சோமன்முத
லெண்ணமுடி யாதெழில் படைத்தாய்!-நிர்ணயமாய்
கற்குங் கலைபோல் கணக்குக் கடங்காய்நீ!
விற்குங் கலையேயுன் விந்தைமெத்த-சர்க்கரைபோல்
லோகம் பிரபஞ்சம் ருசிப்பித்துக் கண்மயக்கு
மோகப்பிர பஞ்சமுந்தன் முக்கியமே!-தேகத்தில்
உள்ளும் புறமும் உயர்கலையே! நீசேர்ந்தால்
நள்ளு மிகபரமும் நன்மைசெய்வாய்!-கிள்ளைமொழி
ஆயர்மட மங்கையர் நீராட்டி லுனைக்கவர்ந்து
மாய னுதவி மயல்தீர்ந்தான்-ராயசேய் 245

கண்டீரந் நளன்முன் காட்டிலுனைக் கிழித்துப்
பெண்டீரை விட்டுப் பிரிவானான்-பண்டு
துரோபதையார் மீதிலுன்னைத் தொட்டுரிந்த தாலே
விரோதியராய் மன்னரெலாம் வீந்தார்-பராவும்

கலிங்கமென்றும் பேராய்க் கணிகையரைச் சேர்ந்து
கலிங்கம்வள வர்க்குதவிக் காத்தாய்-துலங்கும்
சகலகலை ஞானகுரு சாமியரு ளாலே
சகலகலை யே!யுன்னைச் சார்ந்தேன்-புகலுவன்கேள்!

தலைவன் தலைவியின் ஊர் பேர் உரைத்தல்[தொகு]

என்னிறைவன் சாமிமலை யேறிவலம் புரிந்து
சன்னிதியி னின்று சரண்வணங்கி-மின்னுசுடர் 250

வேலுமயி லும்புயமு மென்முகமும் வீரதண்டைக்
காலுமழ குங்கண்டு கைதொழுது-மேலவனை
பாடிநின்ற போதில் பரதவிதத் தாலொருபெண்
ஆடினாள் மாமயில்போ லப்பொழுதே-நாடினேன்

தலைவன், தலைவி தன்னை வருத்தினாள் என உரைத்தல்[தொகு]

சக்கணியும் பெக்கணியுந் தாதியரோ டாடிநின்று
மைக்கண்வடி வேலால் வருத்தினாள்-அக்கணிக்கு

தலைவன், தலைவியை வியந்துரைத்தல்[தொகு]

வாசவனிந் திராணி வதனந்தி லோத்தமையும்
நாசியரம் பையரும் நாரிதுடை-கேசமால்
சாதிபது மினியாந் தன்மையினாற் செம்பதும
மாதை நிகராய் மதிக்கலாம்-வேதவயன் 255

மாமதனன் கண்டுருக மார்பில்வைக்க மேல்வளர்ந்த
தாமதனக் கும்பந் தனமிரண்டுங்-காமனிடை
ராகமத நூலின் ரதிகேளி யாகும்ரதி
நாககன்னி மார்வடிவே நங்கையல்குல்-ஆகுமென்று
கிட்டரிய பெண்ணரசின் கேசாதி பாதமுள்ள
கட்டழகைக் கண்டுருகிக் காதல்கொண்டேன்-நிட்டையினர்

தலைவன், காதல் கொண்டது ஊழ்வினைப் பயன் எனல்[தொகு]

யோகியரை மோகியராய் ஊழ்வினையால் செய்வதுவும்
மோகியரை யோகியராய் மூட்டுவதும்-மாகுகனே!
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீரென்னும்-நூலுரையும் 260

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடியார் கண்ணே வுளவென்று–கொண்டிரங்கி

துன்பம் பயப்பன இவையெனல்[தொகு]

கல்லார் பெருங்கூட்டங் கற்றார் பிரிவுபொரு
ளில்லா ரிளமை யிடார்செல்வம்-பொல்லாதே!

தலைவன், முருகனருளால் தலைவியை யடைவேன் எனல்[தொகு]

கல்விதந்த வேலர் கதித்தசெல் வமுந்தருவார்
செல்வி யிவளையினிச் சேர்ப்பரென்று–நல்வழியாய்
சீராய் முருகரருள் செய்தபடி செங்குந்தர்
பேராம் வரிசையுனைப் பெற்றுவந்தேன்-நேராக
யோக்கியமும் பெற்றேன் உவகைபெற்று வாழ்சகல
பாக்கியமும் பெற்றேன் பரிவுபெற்றேன்-தேக்கியசீர் 265

பெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசைகொண்டு
கண்ணுக்குக் கண்ணிச்சைக் கட்டழகை–எண்ணியெண்ணி

தலைவன், தலைவிபால் துகிலைப் புகழ்ந்து தூதுவிடல்[தொகு]

அவ்வேள் கணையா லனுதினமும் வாடினேன்
செவ்வேள் கருணையினாற் செங்குந்தர்-இவ்வேளை
தந்த பணியில் தனத்தில் துகில்வகையில்
செந்தளிர்ச்சல் லாச்சரிகைச் சேலையே!–சுந்தரர்க்காய்
பாவை யரசி பரவையிடந் தூதுசென்ற
பூவைபங்க னாகவுன்னைப் போற்றுவேன்-பூவனிதை
காமரத வல்குல் கதலித் துடையிடைமேல்
தேமல்முலை பொன்னுடல்மேல் சேர்ந்தணைய–பாமதுர 270

தேனாள்பால் தூதுவிட்டேன் சேர்ந்துனைப்போல் நான்சேர
மானாளை நீயழைத்து வா.

நேரிசை வெண்பா[தொகு]

எங்குந் துதித்ததிரு வேரகத்தில் வேளருளால்
செங்குந்தர் தந்தசெழுந் துகிலே! - இங்கிதமாய்
தூதுநினை விட்டேன் துடியிடைசேர்ந் தென்காதல்
மாதுதனை நீயழைத்து வா.

வாழ்த்து[தொகு]

செகம்வாழி! குகன்தலங்க ளாறும் வாழி!
சேவல்மயில் வேல்வாழி! சிவந்த வாறு
முகம்வாழி! யாறிருதோள் மலர்த்தாள் வாழி!
முல்லைநகை யானைவள்ளி முயங்கி வாழி!
சுகம்வாழி! கடப்பமலர் மாலை வாழி!
தொழுமடியார்........................
முகம்வாழி! மழைவாழி! செங்கோல் வாழி!
வளர்புகழ் செங்குந்த ரெங்கும் வாழி!

செங்குந்தர் துகில்விடு தூது முற்றும்.