சேதுபதி மன்னர் வரலாறு/ii. சில முக்கிய நிகழ்வுகள்
இன்றைய இராமநாதபுரம் அரண்மனை கி.பி. 1690-95 முதல் சேது நாட்டு நிர்வாகத்திற்குச் சிறப்பிடமாக அமைந்து வந்துள்ளது. அங்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் கூட அறிந்து கொள்ளத்தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை எனினும் பல துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில நிகழ்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. மதுரை கத்தோலிக்க திருச்சபையின் ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மதுரை திருச்சபையைச் சார்ந்த ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692-ல் ராஜ அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டு இராமலிங்க விலாசம் அரண்மனையில் விசாரிக்கப்பட்டதும் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரது இரகசிய ஆணையுடன் ஓரியூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டு 4.2.1893-ல் கொலை செய்யப்பட்டதும் ஆகும்.
2. முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சியில், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்களைப் போன்று தெலுங்கு மொழியும் சேது மன்னரது ஆதரவுக்கு உரியதாக விளங்கியது. அரண்மனை வளாகத்தில் அமைக்கப் பெற்ற கலையரங்கில் ‘முத்து விஜய ரெகுநாத விஜயம்’ என்ற தெலுங்கு நாடகம் நடித்துக் காட்டப்பெற்று அந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் மன்னரால் பாராட்டப் பெற்றனர்.
2.அ. முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சியில் கிழவன் ரெகுநாத சேதுபதி அமைத்த கொலு மண்டபத்தின் அனைத்துச் சுவர்களும் துண்களுக்கு இடையிலுள்ள வில் வளைவுகளும் அழகும் கவர்ச்சியும் மிக்க வண்ண ஒவியங்களால் தீட்டப் பெற்றது.
2ஆ. இந்த மன்னரை இராமேஸ்வரம் தலயாத்திரை வந்து திரும்பிய மதுரை நாயக்க மன்னர் முத்து விஜய ரங்கசொக்க நாயக்கர் இந்த மண்டபத்தில் ரத்தினாபிஷேகம் செய்து பெருமைப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி பற்றிய ஓவியமும், கொலு மண்டப ஓவியங்களில் காணப்படுகிறது.
3. கி.பி. 1803 முதல் இராமநாதபுரம் ஜமீன்தாரியின் தலைவியாக இருந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியார் அவர்களது ஆட்சிக்காலத்தில் லண்டனிலிருந்து வந்த ஜார்ஜ் வாலன்டினா பிரபு என்பவர் இராணியாரைச் சந்தித்தார். இராணியாரைப் பற்றிய அவரது கருத்துக்களும் அவரது நூலில் குறிப்பிப்பட்டுள்ளது.
4. கி.பி. 1658 முதல் கொண்டாடப் பெற்ற நவராத்திரி விழா அரண்மனையில் கலை விழாவாக கி.பி. 1865 முதல் மன்னர் துரைராஜா முத்துராமலிங்க சேதுபதியினால் மாற்றப் பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் ஒன்பது நாட்கள் தமிழ்ப் புலவர்களையும், வடமொழி வித்தகர்களையும், இசைக் கலைஞர்களையும், நாட்டிய நங்கைகளையும் வரவழைத்து அவர்களது கலைப் பயிற்சியையும் திறமையையும் சேது நாட்டு மக்கள் அறிந்து மகிழுமாறு அந்தக் கலை மேதைகள் சிறப்பாகக் கவுரவிக்கப்பட்டனர்.
5. இத்தகைய நிகழ்ச்சி மன்னர் பாஸ்கர சேதுபதி ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளின் போது தஞ்சை வைகை கிராமத்தைச் சேர்ந்த பாடகர் மகா வைத்தியநாத ஐயர் அவரது இளவல் இராமசாமி சிவன், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், திருக்கோடிக்கா கிருஷ்ணய்யர், குன்னக்குடி கிருஷ்ண ஐயர், புதுக்கோட்டை மாமுண்டியா பிள்ளை, மைசூர் சேசன்னா, டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர். பழனி மாம்பழக் கவிராயர், யாழ்ப்பாணம் சிவசம்பு கவிராயர், மகாவித்துவான் இரா. இராகவ ஐயங்கார் ஆகியோர் பாராட்டப்பட்டனர். 6. அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவையில் கலந்து கொண்டு இந்திய நாட்டிற்குப் பெருமையும் புகழும் தேடித் தந்த சுவாமி விவேகானந்தர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பினார். இந்திய நாட்டில் 23-1-1897-ல் அவர் கரையிறங்கிய முதல் துறைமுக ஊர் பாம்பன் ஆகும். தமது பயணத்திற்குப் பொன்னும் பொருளும் வழங்கி வழிகோலிய மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக சுவாமிகள் 25.1.1897-ல் பாம்பனிலிருந்து இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். அவரை மன்னர் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் இராமலிங்க விலாசம் கொலு மண்டபத்தில் சிறப்பான தர்பார் ஒன்றில் வரவேற்று உபசரித்தார்.
7. இதனைப் போன்றே 1897-ல் சிருங்கேரி மடம் மடாதிபதி ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகளை மன்னர் அவர்கள் அரண்மனை கொலு மண்டபத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கி உபசரித்தார்.
8. சென்னை தாம்பரம் கிறித்துவ கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியரான பரிதி மாற் கலைஞர் என வழங்கப்பட்ட சூரிய நாராயண சாஸ்திரியின் ‘கலாவதி’ என்ற புதுமையான நாடகம் கி.பி. 1901-ல் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவையில் நடித்துக் காட்டப்பெற்று அரங்கேற்றம் பெற்றதுடன் நாடகக் கலைஞர்களுக்கும் ஆசிரியருக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
9.1925-ல் இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த ஆங்கில கவர்னர் கோஷன் துரையை மன்னர் மூன்றாவது முத்து இராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசம் அரண்மனையில் மிகுந்த ஆடம்பரத்துடன் வரவேற்று விருந்தளித்தார்.
இந்த கொலு மண்டபத்தைச் சில காலம் கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டர் ஜாக்சன் தமது கச்சேரியாகப் பயன்படுத்தி வந்தார். அவரது அழைப்பினை ஏற்றிருந்தும் பேட்டி காண வராத பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மூன்று மாதங்கள் கழித்து விசாரணைக்காக 14.9.1797ல் கலெக்டர் ஜாக்சன் முன்னர் ஆஜரானதும் இங்கு தான் கலெக்டரது கடுமையான சொற்களினால் மிகவும் பீதியடைந்த கட்டபொம்மன் நாயக்கர் இங்கிருந்து தப்பி ஓடினார். இதன் தொடர்ச்சியாக 15.10.1798-ல் கயத்தாறுவில் தூக்கிலிடப்பட்டார்.