உள்ளடக்கத்துக்குச் செல்

சேதுபதி மன்னர் வரலாறு/iii. பவானி சங்கர சேதுபதி

விக்கிமூலம் இலிருந்து


III பவானி சங்கர சேதுபதி

தஞ்சை மராத்திய படைகளுக்குத் தலைமை தாங்கி வந்த பவானி சங்கரத் தேவர் கி.பி.1725ல் சேதுபதி மன்னராக இருந்த சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி மன்னரைப் போரில் கொன்று அவரே சேதுபதி மன்னரானார்.

ரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான இந்த மன்னரது கனவு 15 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்பொழுது நிறைவேறியது என்றாலும் மிகக் குறுகிய ஆட்சிக்காலத்தில் அவர் இயற்றிய கோவில் திருப்பணிகளில் நயினார் கோயில் திருக்கோயிலுக்கு அண்டக்குடி என்ற ஊரினைத் தானமாக வழங்கிய கல்வெட்டு மட்டும் கிடைத்துள்ளது.

இராமநாதபுரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தஞ்சை மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பவானி சங்கரத் தேவர் இராமநாதபுரம் சேதுபதியானதும் சேதுநாட்டின் வடபகுதியாக விளங்கிய சோழமண்டலப் பகுதிகளைத் (பட்டுக்கோட்டை சீமையை) தஞ்சை மன்னருக்கு விட்டுக்கொடுக்காத படியினால் கோபமுற்ற தஞ்சை மன்னர் பவானி சங்கர சேதுபதியின் எதிரிகளுக்கு உதவி செய்து மற்றுமொரு படையெடுப்பின் மூலம் சேதுநாட்டின் மீது போர் தொடுத்தார். அந்தப் போரினுக்கு மறைந்த சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரர் கட்டையத்தேவரும், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மருகர் ஆன சசிவர்ணத் தேவரும் தலைமை தாங்கி வந்தனர். ஓரியூர் அருகில் நடந்த போரில் பவானி சங்கரத் தேவர் தோற்கடிக்கப்பட்டார். அவர் சிறைபிடிக்கப்பட்டு தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார். அவரது முடிவு பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.