சேதுபதி மன்னர் வரலாறு/iv. இராமலிங்க விலாசம் அரண்மனை
இன்னல்களும் இடர்ப்பாடுகளும் சேதுபதிக் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் அந்நியரது ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொழுதும் சேது நாட்டின் பழம்பெருமையையும் தன்னரசு நிலைமையினையும் காலமெல்லாம் நினைவூட்டும் எச்சமாக விளங்குவது இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை ஒன்றுதான்.
இந்த மாளிகை இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. போகலூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த சடைக்கன் உடையான் சேதுபதி, கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி என்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி, ரெகுநாத திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி ஆகியோர்கள் ஆட்சியில் மன்னரது பயன்பாட்டிற்கெனத் தனியாக அத்தாணி மண்டபம் எதுவும் போகலூரில் அமைக்கப்படவில்லை.
ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னருக்கும், கீழக்கரை வணிக வேந்தரான வள்ளல் சீதக்காதி என்ற செய்கு அப்துல்காதிர் மரைக்காயருக்கும் நெருங்கிய நட்பும் தொடர்பும் ஏற்பட்ட பொழுது சேதுபதி மன்னருக்கு எனத் தனியாக அத்தாணி மண்டபம் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை மன்னருக்கு எடுத்துரைத்தார்.
இதன் காரணமாக நிலப்பரப்பிலும் வணிகத் தொடர்புகளிலும் விரிவும் பெருக்கமும் அடைந்த சேதுநாட்டின் தலைமையிடத்திற்குப் போகலூர் கிராமம் பொருத்தமாக இல்லை என்பதை மன்னர் உணர்ந்தார். சேது மன்னர்களது தலைமையிடமாக இராமநாதபுரம் மண்கோட்டை மாற்றம் பெற்றது. வள்ளல் சீதக்காதியின் அறிவுரைப்படி இராமநாதபுரம் மண் கோட்டையின் மண் சுவர்கள் அகற்றப்பட்டு செவ்வக வடிவிலான கல் சுவரினால் ஆன புதிய கோட்டை தோற்றம் பெற்றது. இதன் நடுநாயகமாக அத்தாணி மண்டபம் ஒன்றும் மன்னரது பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்டது.
கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் 65 அகலமும் செவ்வக வடிவில் 12 அடி உயரமான மேடையில் சுமார் 14 அடி உயர மண்டபமாக இந்த அரண்மனை அமைந்துள்ளது. பெரும்பாலும் கி.பி. 1790 - 1793-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த மாளிகை ஏறத்தாழ ஒரு கோயிலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த[1] மண்டபம், மகா மண்டபம் போன்ற அமைப்பில் இந்தக் கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கியுள்ள இந்த மண்டபத்தின் 16 படிகளைக் கொண்ட நுழைவாயிலின் இருபுறமும் ஒரே மாதிரியான யாளியின் சிற்பங்கள் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் உள்ள மகா மண்டபம் போன்ற விசாலமான மாளிகையின் இருபுறமும் நீண்டு உயர்ந்த 24 தூண்களைக் கொண்ட அமைப்பை அடுத்து அர்த்த மண்டபம் போன்ற இடைக்கட்டும் இந்த மண்டபத்தின் தளத்திலிருந்து நான்கடி உயரத்தில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கருவறை போன்ற விசாலமான அறை மன்னரது சொந்த உபயோகத்திற்காகக் கருங்கல்லினால் ஆன வாசலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் மேல் தளத்திலும் மற்றொரு அறையும் அதற்கு மேலே நிலாக்கால இரவுகளை மன்னரும், அரச பிராட்டியும் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இராமலிங்க விலாசம் சுவரோவியங்கள்
கி.பி. 1713-ல் சேது மன்னராக ஆட்சி பீடம் ஏறியவர் முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். இயல்பாகவே கலை உள்ளம் கொண்ட இந்த மன்னர் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட அரிய பணிகளில் இராமலிங்க விலாசம் அரண்மனையை வண்ண ஒவியங்களால் அலங்கரிக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அரசியல், சமூக, கல்வித் துறைகளில் பல நூற்றாண்டுகளாகப் பின்னடைவு பெற்றிருந்த மறவர் சீமை மக்களுக்கு இந்த வண்ண ஒவியங்கள் மகத்தான கற்பனையையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஒவியங்களைச் சேதுபதி மன்னர் இராமலிங்க விலாசம் அரண்மனைச் சுவர்களிலும் தூண்களுக்கு இடையில் உள்ள வில் வளைவுகளிலும் தீட்டுமாறு செய்துள்ளார்.
மகா மண்டபம் போன்ற இந்த முன் மண்டபத்தில் நுழைந்தவுடன் இடதுபுறம் கிழக்குச் சுவற்றில் ஒரு போர்க்களக் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மராத்தியப் படைகளுக்கும் சேதுபதி மன்னரது மறவர் படைகளுக்கும் இடையே அறந்தாங்கிக் கோட்டைக்கு வடக்கே நிகழ்ந்த போரின் காட்சியைச் சித்தரிப்பதாக இந்த ஓவியம் அமைந்துள்ளது. வலது புறம் கிழக்குச் சுவற்றில் முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் உருவமும் அதனை அடுத்து வடக்குச் சுவற்றில் வைணவக் கடவுளான பெருமாளின் பல கோலங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவைகளுக்கு எதிரே தெற்குச் சுவற்றில் சைவ சமயக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. திருச்சி உச்சிப் .பிள்ளையார் ஆலயம், தாருகாவனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக ரிஷி பத்தினிகளுடன் உள்ள காட்சி மற்றும் அவரது ஊர்த்துவ நடனம். இந்தச் சித்திரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட வண்ணங்களினால் ஒரே காலத்தில் வரையப் பெற்றவை என்று தெரிய வருகிறது. தெற்குச் சுவற்றில் கிழக்குக் கோடியில் ஆற்காட்டு நவாபின் பவனி, அரண்மனைப் பணியாளர்கள் அன்பளிப்புத் தட்டுக்களை ஏந்திச்செல்வது. சேதுபதி மன்னர் தமது மடியில் பெண் குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டு ஆங்கிலேய துரை ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருப்பது ஆகிய காட்சி இந்த ஒவியங்களில் காணப்படுகிறது. வண்ணங்களும் இந்த ஓவிய உத்திகளும் காலத்தால் பிற்பட்டவை - பெரும்பாலும் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
மண்டபத்தின் இடைக்கட்டில் வடக்குச் சுவற்றிலும் தூண்களுக்கு இடையிலான வில் வளைவுகளிலும், வேட்டையாடும் காட்சி, மீன்கள் நிறைந்த தடாகம், படுத்திருக்கும் புலவர் ஒருவரது கால்களை வருடி ஒருவர் உபச்சாரம் செய்யும் காட்சி, இவைகளுக்கு மேலே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மாடத்தில் பல புராணக்காட்சிகள், கதை உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மாளிகையின் மேற்குப்பகுதியில் கருவறை போல் அமைக்கப்பட்டுள்ள மன்னரது அறையின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் மேற்குச் சுவற்றிலும் கீழ்ப் பகுதிகளிலும் பாகவதக் கதைக் காட்சிகளும் இராமாயணக் காட்சிகளும் - இராமனது பிறப்பு முதல் சீதையின் திருமணம் வரையான காட்சிகளும் தீட்டப்பட்டுள்ளன. இந்த அறையின் வில் வளைவுகளில்,
1. இராமநாதபுரம் அரண்மனையில் உறங்கி எழுந்த அரச பிராட்டி மங்கலப் பொருள்களான கண்ணாடி, கிளி ஆகியவைகளைப் பார்க்கும் ஓவியம்
2. சேதுபதி மன்னர் அரண்மனைப் பெண்களுடன் வில்லைத் தாங்கி பறவைகள் வேட்டைக்குச் செல்லும் ஒவியம்
3. சேது நாட்டுப் பெண்கள் நீண்ட கழிகளுடன் காட்சியளிப்பது
4. சேதுபதி மன்னர் பெருமாளிடமிருந்து செங்கோல் பெறுவது
5. சேதுபதி மன்னர் முன் பண்டிதர் ஒருவர் அமர்ந்து இராமாயண விரிவுரை செய்வது
6. சேதுபதி மன்னரிடம் அளிப்பதற்காக மூன்று பரங்கிகள் அன்பளிப்புத் தட்டுக்களை ஏந்தி வருதல்
7. அரசவையில் நடன மங்கையர் நாட்டியம் ஆடுதல் இவை போன்ற கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த ஒவியங்கள் பல இந்த அறையின் சுவர்களிலும் வில் வளைவுகளிலும் விதானங்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்த ஒவியங்கள் அனைத்தும் ஆந்திர நாட்டு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளன என்பதை அந்த ஒவியர்கள் கையாண்டுள்ள உத்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறையின் மேல் வீடு மன்னரது பள்ளியறையாக அமைந்திருந்ததால் அந்த அறையின் கிழக்கு வடக்குச் சுவர்களில் மன்னர் மங்கையருடன் புனல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒவியமும் பத்துப் பதினைந்து பெண்கள் யானை போன்ற அமைப்பில் சேர்ந்து காட்சியளிப்பது.
இந்த ஓவியங்கள் அனைத்தும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1713 - 1725-ல்) உருப்பெற்றுள்ளன. சரியான காலம் அறியத் தக்கதாக இல்லை. அத்துடன் இந்த ஓவியங்கள் அனைத்தையும் ஒரு சேர ஆய்வு செய்யும்பொழுது அவை - மகா மண்டபத்தில் இடம் பெற்று இருப்பவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான ஒவியர்களாலும் இடைக்கட்டிலும், அறையிலும் வரையப் பெற்றிருக்கும் ஓவியங்கள் மற்றொரு வகையான ஓவியர்களாலும் அந்த அறையின் மேல் வீட்டில் தீட்டப் பெற்றிருக்கும் கிளர்ச்சியூட்டும் ஓவியங்கள் பிறிதொரு வகை ஓவியர்களாலும் வரையப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது. ஒவியர்களும், ஓவியங்களும் எந்த வகையை, எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் இவை சேது நாட்டிற்குக் கிடைத்துள்ள சித்திரக் கருவூலமாகப் போற்றப்பட வேண்டியவையாகும். நமது நாடு முழுவதிலும் பல ஊர்களில் பல மன்னர்களின் மாளிகைகளில் இத்தகைய ஓவியங்கள் ஆங்காங்கு காணப்பட்டாலும் இராமலிங்க விலாசம் அரண்மனை ஒவியங்களைப் போல ஒரு சேர ஒரே மாளிகையில் ஒரு அங்குலம் சுவற்றைக் கூட இடைவெளி இல்லாமல் ஒவியங்கள் தீட்டப்பட்டிருப்பது. வேறு எங்கும் காணப்படாத அதிசயமாகும். ஆதலால் இந்த மாளிகை ஓவியங்களை அஜந்தா குகை ஒவியங்களுக்கு ஒப்பாகச் சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.
- ↑ Raja Ram Rao. T - Manual of Ramnad Samasthanam (1891) Page - 232.