சேரமன்னர் வரலாறு/17. சேரமான் மாவண்கோ

விக்கிமூலம் இலிருந்து

17. சேரமான் மாவண்கோ

மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரநாட்டில் இருந்து வருகையில், கடுங்கோக் குடியில் தோன்றிய மாவண்கோ சேரர்க்குரிய கொங்குநாட்டுப் பகுதியை ஆண்டு வந்தான். அக்காலத்தில் சோழ நாட்டில் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆட்சி புரிந்து வந்தது முன்பே கூறப்பட்டது. பாண்டி நாட்டில் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி அரசு கட்டிலேறி விளங்கினான். சேரமான் மாவண் கோவை மாரி வெண்கோ எனவும் சில ஏடுகள் கூறுகின்றன.

உக்கிரப்பெருவழுதி பாண்டி வேந்தனாய் வீற்றிருக்கையில் கிழக்கில் முத்தூற்றுக் கூற்றத்தில் வேங்கை மார்பன் என்னும் குறுநிலத் தலைவன் ஆட்சி செய்து வந்தான். முத்தூற்றுக் கூற்றம் என்பது இப்போதுள்ள இராமநாதபுர நெல்வேலி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியாம். அந்நாளில் அப்பகுதியிலுள்ள கானப்பேரெயில் சிறந்த அரண் அமைந்து பாண்டியர்க்கு உரியதாயிருந்தது. உக்கிரப்பெருவழுதி அரசு கட்டிலேறிய காலத்தில் அதனை வேங்கை மார்பன் என்பான் கைப்பற்றிக்கொண்டு செருக்கினான். கானப்பேரெயில் வெயிற் கதிர் நுழையாவாறு செறியதத் தழைத்த காவற் காடும் பகைவர் நுழைதற் கரிய காட்டரணும் உடையது; மதிலரண் வானளாவி உயர்ந்தும் நீரரணாகிய அகழி நிலவெல்லைகாறும் ஆழ்ந்தும் இருந்தன. வானளாவி நின்ற மதிலின் உறுப்புகள் வானத்தின்கண் தோன்றும் மீன் போல் காட்சியளித்தன. இந்நலங்களைக் கண்ட வேங்கை மார்பன் இதனைத் தனக்கே உரியதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவா மேலிட்டதால் இதனை அவன் கைப்பற்றிக் கொள்ளலானான்.

இதனை அறிந்தான் உக்கிரப் பெருவழுதி; பெரும் படையொன்றைத் திரட்டிக் கொண்டு கானப் பேரெயிலை நோக்கிச் சென்றான். வேங்கை மார்பனும் தனது அரும்படையோடு எயில் காத்து நின்றான். வேங்கையின் படையும் பாண்டிப் படையும் கடும் போர் உடற்றின. முடிவில் பாண்டிப் படை கானப் பேரெயிலை வென்று கொண்டது. வேங்கை மார்பன் புறந்தந்து ஓடினான். பின்னர், அவ்வேங்கை மார்பன், இனிக் கானப்பேரெயிலை நாம் பெறுவதென்பது ஆகாத செயல்: “கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புண் நீரினும் மீட்டற் கரிது[1]” என இரங்கிச் செயலர் றொழிந்தான். அப்போது உக்கிரப் பெருவழுதியின் வெற்றியைப் பாராட்டி, ஐயூர் மூலங்கிழார் என்ற சான்றோர் பெருவழுதியை வியந்து, கானப்பேர் எயில் இரும்புண்ட நீரினும் மீட்டற்கரிது என, வேங்கை மார்பன் இரங்க “வென்ற” கொற்ற வேந்தே, இகழுநர் இசையோடு மாய “நின்வேல்” “புகழொடு விளங்கிப் பூக்க” என்று வாழ்த்தினர்.

உக்கிரப் பெருவழுதி கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி என்ற சிறப்புடன் மதுரை நகரை அடைந்து வெற்றிவிழாக் கொண்டாடினான். அவ் விழாவிற்குச் சான்றோர்களும் சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாவண்கோவும் வந்திருந்தனர்.

விழா விடிவில் சேர சோழ பாண்டியர் மூவரும் ஒருங்கு வீற்றிருப்பச் சான்றோர் பலர் கூடியிருந்தனர். அச் சான்றோர் கூட்டத்தே ஒளவையாரும் வந்திருந்தார். அவருக்கு முடிவேந்தர் மூவரும் ஒருங்கே கூடியிருந்த காட்சி பேரின்பம் தந்தது. அவரது வளஞ்சென்ற புலமையுள்ளத்தே உயர்ந்த ஒழுக்கத்துப் பார்ப்பார் வேட்கும் மூவகைத் தீயும் காட்சி அளித்தன. “ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர் முத்தீப் புரைய'’ இருந்த மூவரையும் நோக்கி, “கொடித்தேர் வேந்தர்களே” என்று சொல்லி, “விண்ணுலகு போலப் பெருநலம் தரும் இந்நிலவுலகு முற்றும் தமக்கே உரித்தாக உடைய ராயினும், வேந்தர் இவ்வுலகை விட்டு நீங்குங்கால், இதுவும் அவருடன் செல்வது கிடையாது. ஏற்றவர் இருந்த காலையும் தவமுடைார் எவரோ அவர் பாலே இது செல்லும்; அத்தவப் பயனையுடைய நீவிர் மூவரும் செய்யத் தக்கது இதுவே; உங்களை அடைந்து இரந்து நிற்கும் பார்ப்பார்க்கு அவர் வேண்டுவனவற்றை நீரொடு பூவும் பொன்னும் சொரிமின். மகளிர் பொற்கலங்களில் பெய்து தரும் தேறலையுண்டு மகிழ்ச்சி கூர்ந்து உறைமின். உங்களை வந்தடைந்து இரக்கும் இரவலர்க்கு அருங்கலன்களைக் குறைவின்றி நல்குமின். இவ் வகையால் உங்கட்கெனப் படைத்தோன் விதித்த நாளெல்லை முற்றும் நீவிர் வாழ்தல் வேண்டும். இவ்வாறு வாழச் செய்த நல்வினையல்லது இறுதியில் துணையாவது பிறிது யாதும் இல்லை. யான் அறிந்த அளவு இதுவே. இனி, நீங்கள் வானத்தில் தோன்றும் மீன் களினும், எங்கும் பரந்து நின்று பெய்யும் மழைத் துளியினும் உங்களுடைய வாழ்நாள் பெருகிப் பொலிக[2]” என்று வாயார வாழ்த்தினர். ஏனைச் சான்றோர் பலரும் பெருமகிழ்ச்சியுற்று வாழ்த்தினர்.

சேரமான் மாவண்கோ ஒளவையார் வழங்கிய வாழ்த்தினைப் பெற்றுக்கொண்டு ஏனை எல்லாரிடத்தும் இன்ப விடை பெற்று நீங்கினான்.


  1. புறம். 21.
  2. புறம். 67.