சேரமன்னர் வரலாறு/7. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குப் பதுமன் தேவி, சோழன் மணக்கிள்ளி என இரு மனைவியர் இருந்தனர். அவருள் பதுமன் தேவியென்பவள், வேணாட்டு வேளிர் குடியில் தோன்றியவள். அவள் தந்தை வேளாவிக்கோமான் எனப்படுவன். மணக்கிள்ளி சோழர்குலப் பெண். பதுமன் தேவியென்ற இப்பெயரைக் கண்டோர், இவள் பதுமன் என்பவனுக்கு மனைவியென்று பொருள் கொண்டு இப்பதுமன்தேவி இமயவரம்பனுக்கு உடன்பிறந்தவள் எனக் கருதி இவள் மகனான நார்முடிச்சேரல் மருமக்கள் தாய முறையில் அரசு கட்டில் ஏறினான் என்று கூறிவிட்டனர். அஃது வரலாற்று உண்மையன்று.

இனி, அவ்வரலாற்று உண்மையைக் காண்பது முறையாகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு, தமிழ்நாட்டில் பேரரசு நிறுவி வாழ்ந்த சோழ வேந்தரின் மனைவியர் பெயர்களைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவர்கள், வானவன் மாதேவி என்றும், பஞ்சவன் மாதேவி என்றும், செம்பியன் மாதேவி என்றும், சேரவன் மாதேவி என்றும் பெயர் தாங்கியிருந்தனர். வானவன் மாதேவியார் இரண்டாம் பராந்தகனுக்கு மனைவி; பஞ்சவன் மாதேவி என்பது உத்தம சோழன் மனைவியது பெயர். செம்பியன் மாதேவியார் முதற் கண்டராதித்த சோழருடைய மனைவியாராவர். இவ்வாறே வில்லவன் மாதேவி, பாண்டிமாதேவி, சேரன்மாதேவி என்ற பெயருடைய அரசியர் பலர் இருந்துள்ளனர். இப்பெயர்களைப் போலவே, பண்டை நாளைத் தமிழ்ச்சேர மன்னர் மனைவியரும் பெயர் பூண்டிருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இச்சோழவேந்தர் மனைவியர் பெயர்போலக் கொல்வது நேர்மையேயன்றி வேறாகக் கொண்டு, இயைபில்லாத, மிகவும் பிற்காலத்தே நுழைந்த மருமக்கள் தாய்த முறையைக் கொணர்ந்து புகுத்திக் குழறுபடை செய்வது உண்மையாராய்ச்சி ஆகாது.

குட நாட்டை இமயவரம்பனும், குட்ட நாட்டைப் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆட்சி புரிந்து வருகையில், இளையனான நார்முடிச்சேரல், வேணாட்டிற்கு வட கிழக்கிலும், குட்ட நாட்டிற்குத் தென்கிழக்கிலும், பாண்டி நாட்டைச் சாரவும் இருந்த குன்ற நாட்டில் இருந்து நாடுகாவல் செய்துவந்தான். இப்போது அது குன்றத்தூர் நாடு என வழங்குகிறது. அப்பகுதியில் வண்டன் என்னும் பழையோன் வழிவந்தோரும் முதியர் இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். அவர்கட்குத் தலைவனாய், அவரது பேரன்புக்கு உரியனாய் நார்முடிச்சேரல் இருந்து வந்தான். குன்ற நாட்டுக்கு மேற்கிலும் வடமேற்கிலும் உள்ள குட்டநாட்டையும், குட்டநாட்டின் கிழக்கிலுள்ள பூழி நாட்டையும் குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். பாலைக் கோதமனார் நெடும்பாரதாயனார் முதலிய சான்றோருடன் கூடிச் செல்கெழு குட்டுவன் துறவுள்ளம் கொண்டு அறவேள்வித் துறைகளில் மிக்க ஈடுபாடு உடையனாகியபோது, நார்முடிச்சேரல் பூழி நாட்டுக்குக் கிழக்கில் இருக்கும் மலைநாட்டைத் தன் ஆட்சியிற்கொண்டு நாடு காவல் புரிந்தொழுகினான்.

அந்நாளில், குட நாட்டின் வடக்கிலுள்ள கொண்கான நாட்டில், நன்னன் என்னும் வேள்புல வேந்தன், சேரலாதன் வழி நின்று நாடு காவல் செய்து வந்தான். கொண்கானத்தின் வடபகுதி துளு நாடு என்றும், அதன் கீழ்ப்பகுதி புன்னாடு என்றும் வழங்கின. புன்னாட்டில் கங்கன் என்பவனும், அதன் தென்பகுதியில் கட்டி என்பவனும், அதற்குத் தெற்கிலுள்ள பகுதியில் புன்றுறை என்பவனும், பாயல் மலையை யொட்டி அதன் கீழ்ப்பகுதியில் நாடு வகுத்து அரசு புரிந்து வந்தனர். கங்கன் வழிவந்தோர் கங்கரெனவும், கட்டியின் வழியினர் கட்டியர் எனவும் வழங்கினர். கங்கனாடு மேற்கே கொண்கானத்தையும் கிழக்கே புலி நாட்டையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இப்போதுள்ள மைசூர் நாட்டைப் பண்டை நாளைக் கங்கனோடு என்றால் பொருந்தும், தென்பாற் கங்க நாட்டில் காவிரியைச் சார்ந்த பகுதியில் கட்டியர் வாழ்ந்தனர். அவருடைய கல்வெட்டுகள் சில சேலம் மாரட்டத்தில் ஓமலூர்ப் பகுதியில் காணப்படுவது இதற்குச் சான்றாகிறது. இந்நாடு பூவானி நாடு என்றும் கல்வெட்டுகளிற் காணப்படும். பூவானி நாட்டின் வடகிழக்கிலும் கிழக்கிலும் தகடூர் நாடு கிடந்தது. பூவானி நாட்டிற்குத் தெற்கில் இன்றைய பவானி, ஈரோடு, பெருந்துறை முதலிய பேரூர்களைத் தன் கண் கொண்டிருக்கும் நாடு புன்றுறை என்ற குறுநிலத் தலைவன் ஆட்சியில் இருந்தது. அதனால் அப்பகுதி புன்றுறை நாடு என வழங்கிற்று; அதுப்பற்றி அப்பகுதியிற் காணப்படும் கல்வெட்டுகள் அப்பகுதியதைப் புன்றுறை நாடு என்று குறிக்கின்றன. இதனைச் சில கல்வெட்டுக்கள் பூந்துறை நாடு என்று கூறினும், அதன் பண்டைய உம்மைப் பெயர் புன்றுறை என்பது நினைவுகூரத் தகுவது; அப்பகுதியிலிருக்கும் பூந்துறை என்னும் ஊர் புன்றுறை எனப்பட்ட பொற் புடையதாதல் வரலாற்று நெறிக்கு ஒத்தது. புன்றுறை நாட்டுக்குத் தென்மேற்கிலும் தெற்கிலும் உள்ள மேலைக் கொங்காகிய மீகொங்கு நாட்டை நன்னன் என்றொரு தலைவன் பொள்ளாச்சிக்கு அண்மையில் உள்ள ஆனைமலை என்னும் பகுதியிலிருந்து ஆட்சி செய்தான். ஆனைமலைக்குப் பழம்பெயர் நன்னனூர் என்பது அவ்வூர்க் கல்வெட்டுகளால்[1] தெரிகிறது. தகடூர் நாட்டை அதியர் என்னும் குறுநிலத் தலைவர் ஆட்சிபுரிந்து வந்தனர். அவரது தகடூர் இப்போது சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயருடன் நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள அதியமான் கோட்டை என்ற ஊர் அதமன் கோட்டையென மருவி நின்று வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.

வேள்புலத் தலைவனான நன்னன், பெருஞ்சோற்றுதியன் முதலிய சேர மன்னர்களால் நன்னன் உதியன் என்ற சிறப்புப் பெயர் நல்கப் பெற்றுச் சிறந்து விளங்கினான். அவன் அரசியல் நுட்பமும் புலவர் பாடும் புகழும் படைத்தவன். அதனால் அவன்பால் வேளிரும் கங்கரும் கட்டியரும் பிற குறுநிலத் தலைவரும் நட்புற்றிருந்தனர். நன்னனுடைய மெய்ம்மைப் பண்பும் காவல் மாண்பும் நோக்கி, வேள்புல வேந்தர் தம்முடைய பெருநிதியை அவனுடைய பாழிநகர்க்கண்[2] வைத்திருந்தனர். பாழிநகர் இப்போது வட கன்னடம் மாவட்டத்தில் ஹோனவாறென்னும் பகுதியில் பாட்கல் (பாழிக்கல்) என்ற பெயருடன் இருக்கிறது. நன்னனது துளுநாட்டுத் தோகைக்கா[3] என்னும் ஊர் இப்போது ஜோக் (Joag) என்ற பெயருடன் ஒரு சிற்றூராக இருக்கிறது. இவை முன்பும் காட்டப்பட்டுள்ளன.

நன்னன் வழியினர், நன்னன் வேண்மான்[4], நன்னன் ஆஅய்[5], நன்னன் சேய்[6]”, நன்னன் ஏற்றை[7], என்று சான்றோர்களால் குறிக்கப்பெறுகின்றனர். இவருள் நன்னன் வேண்மான் என்பான் வியலூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு நாடுகாவல் புரிந்தான். வியலூர் இப்போது துளு நாட்டில் பெயிலூர் (Bailur) என வழங்குகிறது; இவ்வியலூர் வயலூரெனவும் வழங்கும்[8]. நன்னன் ஆஅய் , பிரம்பு என்னும் ஊரைத் தலைமையாகக் கொண்டு நாடுகாவல் செய்தான். நன்னன் சேய் திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கைமா என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள நாட்டை ஆண்டுவந்தான். நன்னன் ஏற்றை பொள்ளாச்சிக்கு அண்மையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருந்து பாலைக்காட்டுப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப் பகுதியில் நன்னன்முக்கு[9] நன்னன்பாறை[10] நன்னனேற்றை[11] என்ற பெயர் தாங்கிய பலவூர்கள் இருப்பது போதிய சான்றாகும். இவ்வாறு நன்னன் என்ற பெயர் பூண்ட தலைவர்கள் பலர் மேலைக் கடற்கரையிலும் கொங்கு நாட்டிலும் பரவி வாழ்ந்து வந்தமை நன்கு தெளியப்படும்.

இந் நன்னருள் முதல்வனான நன்னன், கொண்கான நாட்டில் ஏழில்மலைப் பகுதியைத் தனக்கு உரித்தாகக் கொண்டு வாழ்ந்தான். அதன் வடபகுதியான துளுநாடும் அவற்கே உரியதாயிருந்தது. அந்நாட்டில் கோசர் என்னும் மக்கள் வாழ்ந்தனர். “மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர்........... தோகைக்காவின் துளுநாடு[12]” என்று சான்றோர் கூறுவது காண்க. துளு நாட்டுள்ளும் மேலைக் கடற்ரையைச் சார்ந்த நெய்தற் பகுதியிலே அவர்கள் வாழ்ந்தமை தோன்ற, “பல்வேற் கோசர் இளங்கள் கமழும் நெய்தல் செறுவின் வளங்கெழு நன்னாடு[13]” என்று கல்லாடனார் சிறப்பித்துரைக்கின்றார்.

இனி, நன்னன் வேள்புலத்து வேளிர் தலைவனாதலால், அவன் ஆட்சியின் கீழிருந்த கோசரை வேளிற் என்றற்கில்லை. அவர்களை வேளிரென யாண்டும் சான்றோர் குறித்திலர், மற்று, அந்நாளில் கொங்கு நாட்டில் வாழ்ந்த அதியர், மழவர் என்பாரைப் போல இக்கோசரும் ஓர் இனத்தவராக வாழ்ந்தவர் எனக் கோடல் சீரிதாம். ஆனால், அதியரும் மழவரும் ஒரு பகுதியில் நிலைபெறத் தங்கி, நாடு வகுத்து, அரசு நிலை கண்டு, வாழ்ந்தாற்போல இக்கோசர் எப்பகுதியிலும் நிலைபேறு கொண்டிலர். துளு நாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு என்ற இந்நாடுகளில்தான் இவர்கள் பெரும்பாலும் இருந்திருக்கின்றனர். சேர நாட்டிற்குத் தெற்கிலுள்ள தென்பாண்டிநாட்டு வாட்டாற்றுப் பகுதியில் எழினியாதன் காலத்தில் இக்கோசர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இவ்வாட்டாறு, தஞ்சை மாவட்டத்துப் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வாட்டாத்திக் கோட்டைப் பகுதியாயின், கோசர்கள் பாண்டி நாட்டின் வடபகுதியில் சோழ நாட்டை அடுத்து வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம். கொல்லிமலைக்குரிய வேளிரது ஆணைவழி நின்றொழுகிய மழவர் போல, கொண்கான நாட்டு நன்னர் வழிநின்று அவர் தங்கிய இடங்களில் இக்கோசர் வாழ்ந்திருக்கின்றனர். பாண்டி வேந்தரிடத்தும் இக்கோசர்கள் மறப்படை மைந்தர்களாகவே இருந்துள்ளனர். ஏனைச் சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் இக்கோசரது இருப்புச் சான்றோர்களால் குறிக்கப்படவில்லை.

இக்கோசர்களைப் பற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய அறிஞர்கள், பிரமதேவன் வழிவந்த குச முனிவன் மக்களான குசாம்பன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்ற நால்வரும் கௌசாம்பி முதலிய நான்கு பெரு நகரங்களை நிறுவி வாழ்ந்தனர் என்றும், அவர்களின் வழிவந்தவர் இக்கோசர் என்றும், நான்கு ஊர்களை நிலைகொண்டு வாழ்ந்தமை பற்றி இவர்கள் நாலூர்க் கோசர்[14] என்று கூறப்பெற்றனர் என்றும், கோசாம்பி நாட்டைப் பின்னர் “வத்ஸன்'’ என்ற வேந்தன் ஆண்டனன் என்றும், “வத்ஸ் கோசர்” என்பது இளங்கோசர் எனத் தமிழர்களால் மொழிபெயர்க்கப் பெற்றது என்றும்[15] கூறுகின்றனர். ஆனால் உண்மை வேறாகத் தோன்றுகிறது. பிறநாட்டு ஊர்ப்பெயர்களையும் மக்கட் பெயர்களையும் பிறவற்றையும் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு வழங்கும் வழக்கம் வடமொழியாளரிடத்தன்றிப் பிற எந்நாட்டு எம் மக்களிடத்தும் காணப்படுவதில்லை. பிறரெல்லாம் பிறநாட்டு ஊர் மக்கட் பெயர்களைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திரித்து வழங்குவர். அவர்களைப் போலவே தமிழர், மேனாட்டு அயோனியரை யவனரென்றும், பர்ஷியரைப் பாரசிகரென்றும், இங்கிலாந்து மக்களை ஆங்கிலரென்றும், பிற மக்கட் பெயர் இடப் பெயர்களை, பேதுரு, யாக்கோபு, ஏசு, சீதக்காதி, பெத்தலை, மதினா என்றும் திரித்து வழங்குவர். இவ்வாறு திரித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் இலக்கணமே விதித்திருக்கிறது[16]. இதனால் மொழிபெயர்த்து வழங்கும் வழக்காறு தமிழ் மரபு அன்று என்பது இனிது விளங்குதலால், இளங்கோசர் என்பது “வத்ஸகோசர்” என்ற வடமொழியின் மொழிபெயர்ப்பு என்றால் பொருந்தாது. கோசர்கள், துளுநாட்டிலும், பாண்டி நாட்டிலும், கொங்கு நாட்டிலும் இருந்தவர்ரென்பது தோன்றப் பல குறிப்புகளை வழங்கும் சங்க நூல்கள், இவர்களை வட புலத்துக் கோசாம்பி நாட்டினரென்றோ, கோசல நாட்டினரென்றோ தோன்ற ஒரு சிறு குறிப்பும் குறிக்கவில்லை. இனி, வத்ஸன் ஆண்ட நாடு வத்த நாடு என்றும், வத்ஸர் தலைவனை வத்தவர் பெருமகன் என்றும் வழங்குவது தமிழ் மரபு. வத்ஸனை இளையன் என்றோ, வத்ஸ நாட்டினை இளநாடு என்றோ மொழி பெயர்த்தது கிடையாது. ஆகவே இளங்கோசரென்பது வத்ஸகோசர் என்பதன் மொழிபெயர்ப்பு எனக் கூறுவது உண்மை அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. மேலும், தமிழகத்து மக்கள் வகையினருள் கோசரென்பார் ஒருவகை இனத்தவர் என்றற்கும் இடமில்லை.

இனி, இக்கோசர், வடவருமல்லர், தமிழருமல்லர் எனின், வேறு நாடுகளிலிருந்து கடல் கடந்து போந்து குடியேறியவர் என்பது பெறப்படும். வடநாட்டினின்றும் புதியராய்ப் போந்த பிறரை “வம்ப வடுகர்” என்றும், “வம்ப மோரியர்” என்றும் சான்றோர் கூறியது போல், இவர்களை “வம்பக் கோசர்” என்று கூறாமையால் இவர்கள் பன்னெடு நாட்களுக்கு முன்பே தமிழகத்திற் குடிபுகுந்தவர் என்பது தெளிவாம். சங்க காலத்தேயே மேலைக் கடற்கரைப் பகுதியில், யவனர் பலர் குடியேறி இருந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும். அவர்கட்குப்பின் இடைக்காலத்தே சோனகரும். பின்னர் ஐரோப்பியரும் வந்து சேர்ந்தனர். இவ்வாறு வந்தோருள், பாபிலோனிய நாட்டினின்றும் போந்து தென்னாட்டிற் குடியேறியவர் இக்கோசர்கள் என்று அறிகின்றோம்.

தைகிரீஸ் (Tigris) ஆற்றுக்குக் கிழக்கில் சகராசு மலைப் பகுதியில் (Zagros Mountains) வாழ்ந்த பழங்குடி மக்கட்குக் கோசர் (Kossears) என்பது பெயர். வில்வேட்டம் புரிவதே அவரது தொழில். பின்னர் அவர்கள், மலையடியில் வாழ்ந்த ஈரானியர் இனத்தைச் சேர்ந்த ஆலநாட்டுக் கிருதர் (Kurds or kruds) அனுசர் (Anshar) முதலியோருடன் கலந்து கொண்டனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் கிரேக்க யவனர்கள், கிசியர் (Kissians) என்றும், அவர்கள் நாட்டைக் கிசியா என்றும், அவர்களது தலைநகரைச் சூசா (Susa) என்றும் வழங்கினர்[17]. சூசா என்பது அவர்கள் மொழியில் நான்கு ஊர்கள் என்றும் நான்கு மொழிகள், என்றும் பொருள்படுமாம்.

இறுதியில், இக்கோசர்கள் (கிசியர்), மேலைக் கடற்கரையில் வந்து தங்கிய யவனரோடு உடன் போந்து துளுநாட்டுக் கடற்கரைப் பகுதியில் நிற்கும் மலை நாட்டில் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த நாட்டிற் போல துளு நாட்டிலும் கால் நிலையும் மலைவளமும் பொருந்த இருந்தமையால், உடனே போந்த யவனர்கள் அவரின் நீங்கித் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போதும், இக்கோசர்கள் திரும்பச் செல்லாமல் துளு நாட்டையே தமக்கு வாழிடமாகக் கொண்டனர். ஆயினும், இயல்பாகவே, அவர்கள், தங்கள் நாட்டில் நாடோடிகளாய் வாழ்ந்ததனால், அதே முறையில் துளுநாட்டில் தங்கிய போதும், தங்கட்கெனத் தனி நாடு ஒன்றை வரைந்து கொள்ளாது, நாட்டு வேந்தர்கட்கு விற்படை மறவராய் வாழ்ந்து வருவாராயினர், கொண்கான நாட்டு வேளிர் தலைவர்களும் பாயல் மலையில் வாழ்ந்த பிட்டன் முதலிய தலைவர்களும் இக் கோசர்களைத் தமக்குப் படை மறவராகக் கொண்டிருந்தனர். நன்னன் கிளையினர், கொங்கு நாட்டிற் படர்ந்தபோது அவர்களோடே இக்கோசர்களும் சென்று தங்கினர். எங்குச் சென்றாலும், அங்கிருந்த வேந்தர்கட்குப் படை மறவராய் நின்று பணி செய்வதே, இவர்கள் தமக்கு உரிமைத் தொழிலாக மேற்கொண்டனர். முதுமையினும் இளமைப் பண்பு வாடாத உள்ளமும் சொன்ன சொல் பெயராத வாய்மையும் சிறப்பாகவுடையராதலால், இக் கோசரைச் சான்றோர், “ஒன்று மொழிக் கோசர்[18]“ என்று விதந்து கூறுவர். இக்கோசருட் சிலர், “இளங்கோசர்” “இளம்பல் கோசர்[19]” என்று கூறப்படுவர். இதற்குக் காரணம் உண்டு. முன்வந்தோரை மூத்தோர் என்றும், பின் வந்தோரை இளையர் என்றும் குறிப்பது தமிழ் வழக்கு. அதனால், பின் வந்த கோசர் “இளங்கோசர்” எனப்பட்டனர். அவரும் பலர் என்பது விளங்க “இளம்பல் கோசர்” “பல்லிளங் கோசர்” எனச் சான்றோர் குறித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலைக்காடு பகுதிகளில் வாழ்ந்த நன்னர் வழியில், நன்னனூரை (ஆனைமலையை)த் தலைநகராகக் கொண்டு ஒரு நன்னன் வாழ்ந்து வந்தான். அவன் கோசரது படைத்துணையால் வலிமிகுந்து தனி அரசாக முயன்றான். அக்காலத்தே குட்ட நாட்டை ஆண்டுவந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன், துறவுள்ளம் பூண்டு தவவேள்வி செய்வதில் ஈடுபட்டிருந்தது அவற்குப் பெரிய வாய்ப்பினை அளித்தது. குட்ட நாட்டின் வட பகுதியிலும், கிழக்கிலுள்ள பூழி நாட்டிலும் வாழ்ந்த தலைவர்கள், சேரமான், கருத்துக்கு மாறாகத் தாத்தாமும் தனியரசாக முயன்றனர். வலிமிக்கோர் எளிய தலைவர்களை வென்று தமக்கு அடிப்பட்டொழுகச் செய்தனர். சிலர் நன்னனது துணையை நாடினர். அது கண்ட நன்னன், தன் கருத்து முற்றுதற்கேற்ற செவ்வி தோன்றியது கண்டு பெரிய தானையோடு பாலைக்காட்டு வழியாகச் சேர நாட்டிற் புகுந்து பூழிநாட்டையும் அதனை அடுத்துள்ள பாலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியையும் தனக்குரிய தாக்கிக் கொண்டான். அவன் படையினது மாணாச் செயல்களால், அப்பகுதிகளில் வாழ்ந்த உயர்குடி மக்கள் பலர் நிலைகலங்கி வேறு நாடுகட்குச் சென்று வருந்தினர். வாழ்ந்த மக்கள் சிலர் தாழ்ந்து மெலிந்தனர்; நாடெங்கும் துன்பமே நிலவுவதாயிற்று.

இந்நிலையில் அறத்துறையில் நின்று குட்டுவன் துறக்கமடைந்தான். அரசு கட்டிலுக்குரிய பதுமன்தேவி மகனான நார்முடிச் சேரல் குன்ற நாட்டினின்று பூழிநாடு கடந்து குட்டநாடு புகுந்து முடிசூடிக் கொள்ள வேண்டியவனானான். பூழிநாட்டுத் தலைவர் சிலர் நன்னன் பக்கல் இருந்தமையின், அவன் குன்ற நாட்டு வண்டரும் முதியரும் சேரரும் படைத்துணை செய்யப் பெரியதொரு தானையுடன் பூழி நாட்டுட் புகுந்து எதிர்த்தவரை வென்று நன்னனையும் வெருட்டி யோட்டி வென்றி மேம்பட்டான். பூழிநாடும் பண்டு போல் சேரர்க்குரியதாயிற்று.

பூழிநாட்டின்கண் இருந்து நன்னர்க்குத் துணையாய்க் குறும்பு செய்தவர்களை அடக்கி, நன் மக்கள்

துணை செய்ய நாட்டில் நல்வாழ்வு நிகழச் செய்தான். பகைவர்க்கு அஞ்சி ஒடுங்கியிருந்த சான்றோர் ஒன்று. கூடிக் களங்காய்க் கண்ணியும் பனை நாரால் முடியும் செய்து, பதுமன்தேவியின் மகனைச் சேரமான் என முடிசூட்டிச் சிறப்பித்தனர்; அன்று முதல் அவன் சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என வழங்கப்படுவானாயினான். அவனது வென்றி விளக்கத்தால் ஆங்காங்கு இருந்து குறும்பு செய்த பகையிருள் புலர்ந்து கெட்டது. குட்ட நாட்டுத் தலைவரும் பிறரும் நார்முடிச் சேரலின் அடி வணங்கி ஆணைவழி நிற்கும் அமைதியுடையராயினர். சேரமான் நார்முடிச் சேரல் குட்டநாடு அடைந்து வஞ்சிநகர்க்கண் இருந்து அரசு புரிந்து வந்தான்.

நார்முடிச் சேரல், மலைபோல் உயர்ந்து அகன்ற மார்பும், கணையமரம் போலப் பருத்த தோளும், வண்டன்[20] என்பானைப் போன்ற புகழ்க் குணமும் உடையவன். தழைத்த கூந்தலும், ஒள்ளிய நுதலும், அழகுறச் சுழிந்த உந்தியும், அறஞ்சான்ற கற்பும், இழைக்கு விளக்கம் தரும் இயற்கை யழகும் உடையளாகிய அவன் மனைவி, அருந்ததியாகிய செம்மீனை ஒத்த கற்புநலம்

சிறந்து விளங்கினாள். சேரமானுடைய சால்பும் செம்மையும் நாற்றிசையினும் புகழ் பரப்பி விளங்கின. அரசியற் கிளைஞர்க்கு வேண்டுவனவற்றைப் பெருக நல்கியும், குன்றாத வளம் அவற்கு உண்டாயிற்று. தன்னாட்டு அரசியல் நெருக்கடியால் வளமும் பாதுகாப்புமின்றித் துளங்கிய மக்களைப் பண்டுபோல் வளமுற வாழச் செய்தான். அதனால் அவனது வென்றியைச் சான்றோர், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி[21]” எனப் பாராட்டிப் பாடினர்.

பகைவரை அடக்கி ஒடுக்குவதிலும், சான்றோரை நிலை நிறுத்தி நாட்டில் நல்லொழுக்கம் நிலவச் செய்வதே வேந்தர்க்குப் பெருவென்றி என்பது அவன் கருத்தாயிற்று. தான் வென்ற பகுதியில், காவலர் நாட்டைக் கைவிட்டுத் தம்மைக் காப்பதே கருதி ஓடிவிட்டதனால், கொழு கொம்பில்லாக் கொடி போல் அலமந்த நாட்டுமக்கட்குத் தன் பொறைக்குணத்தால் ஆதரவு செய்தான். பகைவர் கைப்பட்டு வருந்திய மறவர்களைக் கூட்டிவந்து, வேண்டும் சலுகை தந்து, அவர் நெஞ்சில் தன்பால் மெய்யன்பு நிலவுமாறு செய்தான். அச் செயலின்கண் அவன் ஒருபாலும் கோடாது செய்த செம்மை, அவர்களை அவனது தாள் நிழற்கண் இருத்தற்கே விழையச் செய்தது.

பகைத்தோர் புலத்தை வென்று அவ்விடத்தே தங்கி, அவர்கள் வைதும் வருந்தியும் வழங்கிய சுடுசொற்களையும் செவியேற்றுச் சினங்கொள்ளாது பொறுத்து, அவரது நெஞ்சினைத் தன்பால் அன்பு கொள்விப்பதில் நார்முடிச் சேரல் நலஞ் சிறந்து விளங்கினான்[22]. தன் செயலால் பகைவர்க்குத் துன்பமும் நகைவராகிய பாணர் கூத்தர் முதலிய பரிசிலர்க்கும் நண்பர்களுக்கும் இன்பமும் உண்டாவது காணுங்கால், உள்ளத்தே மகிழ்ச்சி யெழுமாயின், அதனையும் நார்முடிச் சேரல் தன் அறிவாலும் குணத்தாலும் அடக்கித் தனக்குரிய செம்மை பிறழாமல் நிற்கும் திண்மையால் சான்றோர் பரவும் சால்பு மிகுந்தான். இனியவை பெற்றவிடத்து அவற்றைத் தனித்திருந்து நுகர்வதில் மக்களுயிர்க்கு விருப்புண்டாவது இயல்பு. அவ் விருப்பத்தை அடக்கும் உரனும், பிறர்க்கு வழங்குதற்கென்றே பொருளீட்டம் அமைவது என்ற எண்ணமும், என்றும் பிறர்க்கென வாழ்வதே வாழ்வாம் என்னும் பெருந்தகைமையும் நார் முடிச் சேரலின் நன்மாண்பாக விளங்கின.

அக் காலத்தில், குட்ட நாட்டின் ஒரு பகுதியாகிய இருவலி நாட்டில் உள்ள காப்பியாறு என்ற வூரில், காப்பியன் என்றொரு தமிழ்ச் சான்றோர் வாழ்ந்தார். இப்போது அக் காப்பியாறு மலையாள நாட்டைச் சேர்ந்த கோட்டயம் வட்டத்தில் உள்ளது. கரப்பியன் என்ற பெயருடையார் பலர் நம் நாட்டில் பண்டும் இடைக் காலத்தும் இருந்திருக்கின்றனர். பண்டை நாளில் காப்பியர் பலர் இருந்த திறத்தைத் தொல்காப்பியனார், பல்காப்பியனார் முதலிய சான்றோரது பெயர் எடுத்துக் காட்டுகிறது. இடைக்காலத்தில் இக் காப்பியர் வழி வந்தோர், தம்மைக் காப்பியக் குடியினர் என்பது வழக்கம். காப்பியக் குடியென்று ஓர் ஊரும் சோழநாட்டுத் தஞ்சை மாவட்டத்தில் குடியென்று ஓர் ஊரும் சோழநாட்டுத் தஞ்சை மாவட்டத்தில் உண்டு. காப்பியந் சேந்தன்[23] என்றும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள்[24] என்றும் சிலர் இடைக்காலத்தே இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது.

காப்பியாற்றுக் காப்பியனார், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் நலங்களை அறிந்து அவன் புகழைப் பாடுவதில் பெருவிருப்பம் கொண்டார். பாடுதற் கேற்ற பண்பும் செயலும் உடைய ஆண்மக்களைப் பாடிப் புகழ் நிறுவுவது தவிரப் பாவன்மைக்குப் பயன் வேறு இல்லாமையால், காப்பியனார் சேரரது வஞ்சி நகர்க்குச் சென்று நார்முடிச் சேரலைக் கண்டார். அவனும் அவரது புலமை நலம் கண்டு, அவரைத் தன் திருவோலக்கத்தில் அரசியற் சுற்றுத்துச் சான்றோராக இருக்குமாறு கொண்டான். அவர், அவ்வப்போது அவன் செயல் நலங்களை இனிமையுறப் பாடினார். அவர் பாடியவற்றுள் அந்தாதித் தொடையாக ஒரு பத்துப் பாட்டுக்களைச் சான்றோர் பதிற்றுப்பத்தில் தொகுத்துக் கோத்துள்ளனர். முதற்பாட்டும் இறுதிப் பாட்டும் அந்தாதித் தொடை பெறாமையால், இப் பாட்டுப் பத்தும், முன்பே அந்தாதியாகப் பாடப்பட்டுக் கிடந்த பல பாட்டுகளிலிருந்து எடுத்துக் கோக்கப் பட்டனவாதல் வேண்டும் என்று கருதலாம்.

நார்முடிச் சேரல் இவ்வாறு நல்லரசு புரிந்து வருகையில், பாலைக்காட்டுப் பகுதியில், நாடு காவல் செய்து வந்த நன்னனூரில் ஒரு நிகழ்ச்சியுண்டாயிற்று. நன்னனுக்குப் படைத் துணையாகப் கோசர்கள் பலர் நன்னூரில் வாழ்ந்துவந்தனர். அவ்வூரில், நன்னன், மாமரமொன்றைத் தனக்குக் காவல் மரமாகக் கொண்டு அதனை உயிரினும் சிறப்பாகப் பேணி வந்தான். அம் மரம் அவ் ஊரருகே ஓடும் ஆற்றின் கரையில் இருந்தது. ஒரு நாள் அம் மரத்தின் பசுங்காய் ஒன்று ஆற்று நீரில் வீழ்ந்து தண்ணீரில் மிதந்து கொண்டு சென்றது. ஆங்கொருபால் ஆற்று நீரில் இளம்பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளருகே அக் காய் மிதந்து வரவும், அவள் எடுத்து அதனை உண்டுவிட்டாள். அச் செய்தி நன்னுக்குத் தெரிந்தது. உடனே அவன் கழிசினம் கொண்டு அவளைக் கண்ணோட்டம் இன்றிக் கொல்லு மாறு கொலை மறவரைப் பணித்தான்,

அவள் கோசரினத்துத் தலைவருள் ஒருவன் மகளாகும். நன்னனது ஆணை கேட்ட தந்தை அவள் நிறை பொன்னும் என்பத்தொரு களிறும் தருவதாகச் சொல்லி அப் பெண்ணினது கொலைத் தண்டத்தை நீக்கி மன்னிக்குமாறு வேண்டினான். வன்னெஞ்சின னான நன்னன் அவன் வேண்டுகோளை மறுத்துத் தன் கருத்தையே முற்றுவித்தான்[25]. அது கண்டதும் கோசர் களுக்கு நன்னன்பால் வெறுப்பும் பகைமையும் உண்டாயின. அவர்கள் திரண்டெழுந்து நன்னனைத் தாக்கலுற்றனர். அவனது மா மரத்தையும் வெட்டி வீழ்த்தினர். நன்னன் தான் ஆராயாது செய்து தவற்றுக்கு வருந்தினான்; தன் படைத் துணைவர்களான கோசர், தன்பால் பகைத்தொழுது தெரியின், சேர மன்னரும் பிறரும் தன்னை வேரொடு தொலைத்தற்கு நாடுவர் என்று அஞ்சிப் புன்றுறை நாட்டிற்கு ஓடிவிட்டான்[26]. ஈரோட்டுக்கு அண்மையிலுள்ள பெருந்துறையென இன்றும் வழங்கும் மூதூரில் தங்கினான். அவன் பக்கல் நின்று பொருத்த வீரர் பலர் மாண்டனர். சிலர் அவனோடே சென்றனர், பெருந்துறையில் தங்கிய நன்னன், மா மரத்தைக் காவல் மரமாகக் கொள்வதை விடுத்து வாகை மரமொன்றைக் காவல் மரமாகக் கொண்டு அதனைப் பாதுகாத்து வந்தான். அதனருகே தோன்றிய ஊர் வாகைப்புத்தூர் என வழங்குவதாயிற்று. விசய மங்கலத்துக்கும் பெருந்துறைக்கும் இடையே வாகைப் புத்தூர் என்று ஓர் ஊர் இருந்ததாக அப் பகுதியிலுள்ள இடைக்காலக் கல்வெட்டொன்று[27] கூறுகிறது.

நன்னன் கோசரது நட்பிழந்து வலி குன்றிய செய்தியை நார்முடிச் சேரலுக்கு ஒற்றர் போந்து தெரிவித்தனர். உடனே அவன் பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு சென்று, பூழிநாட்டின் வடக்கிலும் பொறை நாட்டிலும் நன்னன் கவர்ந்து கொண்டிருந்த சேரநாட்டுப் பகுதிகளை வென்று தனக்கு உரியவாக்கிக் கொண்டான். அவன் படைப்பெருமை கண்டு எதிர் நிற்க மாட்டாத கோசரும் பிறரும் குறும்பு நாட்டுப் புன்றுறை நாட்டில் தங்கியிருந்த நன்னன்பாற் சென்று சேர்ந்தனர்.

நார்முடிச்சேரல் நன்னன் தங்கியிருந்த பகுதியைப் பண்டுபோல் சேரர்க்கு உரியதாக்கிக் கொங்கு வஞ்சியாகிய தாராபுரத்தை அரண்களால் வலியுறுவித்து, வடக்கில் வாகைப் பெருந்துறைப் பகுதியில் இருந்த நன்னனை எதிர்த்தான். நன்னன் படையும் சேரமான் படையும் வாகைப் பெருந்துறையில் கடும் போர் புரிந்தன. அப் போரில் நன்னன் படுதோல்வியுற்று ஓடினான். அவனது காவல் மரமான வாகையும் தடித்து வீழ்த்தப்பட்டது. சென்ற இடம் தெரியாவாறு நன்னன் மறையவே இப் போரால் நன்னன் பொருதழிந்த இடத்தைக் கடம்பின் பெருவாயில் என்று பதிற்றுப் பத்தின் நான்காம் பதிகம் கூறுகிறது. ஆனால், கல்லாடனார் என்னும் சான்றோர், “குடா அது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னந் பொருதுகள் தொழிய, வலம்படு கொற்றம் தந்த வாய் வாள், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இழந்த நாடு தந்தன்ன பெருவளம் பெரிதும் பெறினும்[28]” என்று குறிக்கின்றார்.

சேரமானது வெற்றி யெல்லை பாயல் மலையில் தோன்றிக் காவிரியொடு வந்து கூடும் பூவானி (பவானி) யாற்றை எல்லையாகக் கொண்டு விளங்குவதாயிற்று. குட்ட நாட்டிற்குக் கிழக்கில் நிற்கும் மலைகளில் பேரி யாற்றங்கரையில் நேரிமலை நிற்கிறது. அந்த மலையடிப் பகுதியில் சேரமன்னர் போதந்து வேனிற் காலத்தில் தங்கி மலைவளம் கண்டு இன்புறுவது வழக்கம். இப்போது அங்குள்ள நேரியமங்கலம் என்னும் மூதூரே பண்டு சேரமன்னர் வந்து தங்கிய இடமாகலாம் என அறிஞர் கருதுகின்றனர்; கற்குகைகளும் பாழ்பட்ட பழங்கட்டிடங்கள் சிலவும் அவ்விடத்தில் இருந்து பழம்பெருமையைப் புலப்படுத்தி நிற்கின்றன. வேந்தர்கள் அங்கு வந்து தங்கும் போது பாணரும் கூத்தருமாகிய இரவலர் பலரும் வேந்தன் திருமுன் போந்து, பாட்டும் கூத்தும் நல்கி இன்புறுத்துவர். நார்முடிச் சேரல், தன் மனைவியும் அரசியற் சுற்றமும் உடன்வர, நேரிமலைக்குப் போந்து தங்கினான். அக் காலையில் காப்பியாற்றுக் காப்பியனாரும் வந்திருந்தார். வேந்தன் இன்பமாக இருக்கும் செவ்வி நோக்கி இனியதொரு பாட்டைப் பாடினார். விறலி யொருத்தியை நார்முடிச் சேரல்பால் ஆற்றுப்படுக்கும் குறிப்பில் அப் பாட்டு இருந்தது. அதன்கண், சேரமான் நன்னனொடு பொருந்தற்குச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று குறிக்கப்படுகிறது. போர் முரசு படையணி யானை மீதிருந்து இமய, மறவர் முன்னணியில் நிற்க, தூசிப் படையானது சென்று கரந்தை வயலில் தங்கிற்று. பகைப்புலத்துத் தலைவர்கள், சேரமானுடைய மறவர் சுற்றத்தாருடன் தங்கிக் கண்டு அஞ்சி, அங்கே இருந்த நாட்டு மக்களைக் கைவிட்டு விட்டு ஓடிவிட்டனர். காவல் மறவர் பணிந்து நின்று, "வேந்தே, இத் தூசிப்படையை இங்கே தங்காவாறு செய்தருள்க; எமக்கு புகல் வந்து காப்பவர் பிறர் இல்லை'’ என ஊக்கமிழந்து வலியடங்கிய நிலை யினராய் வேண்டினர்; அவரது மெலிவைக் கண்டு வேந்தன் பேரருள் புரிந்தான்.

தாமும் சேரர் குடிக்குரியோர் எனச் சொல்லிக் கொண்டு, வேறு வேந்தர் சிலர் நார்முடிச் சேரலுடன் தும்பை சூடிப் பொருதனர். சேரமான் அவர்களையும் வென்று புறம் பெற்றதோடு, அவரால் அழிவுற்ற நாட்டு உயர்குடி மக்களைப் பண்டு போல் வளமுற வாழுமாறு நிறுத்தினான். இதனால் சேரநாட்டுத் தலைவர் பலரும் அவனைத் தலைவனாகக் கொண்டு பேணினர்; அதன் விளக்கமாக நார்முடிச் சேரலின் நன் மார்பில் “எழுமுடி கெழீஇய“ மார்பணி பொலிவுற்றது.

காப்பியனார், இவ்வாறு அவனுடைய நலம் பலவும் எடுத்தோதி, முடிவில் அவன் நன்னனை வென்று அவனது காவல் மரமான வாகையைத் தடிந்து பெற்ற வெற்றியைப் “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார் மிகுமைந்தின் நார்முடிச் சேரல்” என்று பாராட்டினார்.

அங்கே சேரமான் தரும் கள்ளையுண்ட சுவையால் வேறுபுலம் நாடாது இரவலர் அவனையே சூழ்ந் திருந்தனர். “குழைந்து காட்டற்குரிய உன்னமரம் கரிந்து காட்டினும், இரவலரை மகிழ்விக்கும் அருண் மிகுதியால், சேரல் நேரிமலையிடத்தே உள்ளான்; விறலி, நீ அவன்பாற் சென்றால், மகளிர் இழையணிந்து சிறக்கப் பாணர் பொற்பூப் பெறுவர். இளையர் உவகை மிகுந்து களம் வாழ்ந்த தோட்டின் வழிநின்று பாகர் குறிப்பறிந் தொழுகும் யானைகள் பல நல்குவன். அவன்பாற் செல்க[29]” என்று இறுதியில் வற்புறுத்தினார். வேந்தன் அப் பாட்டைக் கேட்டு இன்புற்று இரவலர் பலர்க்கும் பெரும்பொருளை நல்கிச் சிறப்பித்தான்.

பரிசில் பெற்று இரவலர் வேந்தன்பால் விடை பெற்றுச் சென்றனர். செல்பவர், அவனுடைய சுற்றத்தரான மறச் சான்றோர் சிலரைக் கண்டு தம்முடைய புலமை நலம் காட்டி இன்புறுத்தினர். அவர்களும் நார்முடிச் சேரலை யொப்ப மிக்க பரிசில்களை நல்கினர். அச் செயலைக் கண்டிருந்த காப்பியனார்க்கு வியப்புப் பெரிதாயிற்று. வேந்தனோடு சொல்லாடிக்கொண்டிருக்கையில், அவனுடைய தானைச் சுற்றத்தின் சால்பைப் பாடலுற்று, “வேந்தே, தும்பை சூடிச் செய்யும் போரில், தெவ்வர்முனை அஞ்சி அலறுமாறு நின் ஏவல் வியன்பணை முழங்கும்; பகைவருடைய அரண்கள் வலி குன்றிவாட்டமெய்தும்; அக்காலத்தே நீ காலன் போலச் செல்லும் துப்புத் துறைபோகியவன்; கடுஞ்சின முன்பனே, உலர்ந்து நிற்கும் வேல மரத்தின் கிளையில் சிலந்தி தொடுத்த நூல்வலை போலப் பொன்னாலமைத்த கூட்டின் புறத்தே நாரிடைத் தொடுத்த முத்தும் மணியும் கோத்துச் செய்த திருமுடியை அணிந்திருக்கும் வேந்தே, நின் மறங்கூறும் சான்றோர், நீ பிறர்க்கென வாழும் பெருந் தகையாதல் கண்டு, தாமும் தமக்கு இல்லையென்பது இன்றி இரவலர்க்குப் பெருங்கொடை புரிகின்றனர்;[30] காண்” என்று இசைநலம் சிறக்கப் பாடினர்.

இஃது இவ்வாறிருக்க, பாண்டி நாட்டின் வடக்கிலுள்ள வெள்ளாறு பாயும் பகுதிக்குப் பண்டைநாளில் கோனாடு என்று பெயர் வழங்கிற்று. இவ் வெள்ளாற்றின் வடகரையில் புதுகோட்டையிருக்கிறது. இந்த நாட்டு உறத்தூர் கூற்றத்து உறத்தூர்ப் பகுதியில் பொருந்திலர் என்பார் வாழ்ந்து வந்தனர். அவர்கட்கு எவ்வி யென்னும் வேளிர் தலைவன் காவலனாக விளங்கி னான். அக் கோனாட்டின் தென்னெல்லையாகப் பறம்பு நாடு இருக்கிறது. தன் கண் இருந்து தனி அரசு நடத்திய வேள்பாரிக்கும் எவ்விக்கும் தொடர்புண்டு. பொருந்திலர்க்கும் அவர்தம் தலைவனான வேள் எவ்விக்கும் எக் காரணத்தாலோ மன்வொருமை சிதைந்திருந்தது. அதனால், எவ்வி, அந் நாளில் சிறந்து விளங்கிய நெடுமிடல் அஞ்சி என்பவனைத் துணை வேண்டினான். அந்த நெடுமிடல் இப்போதைய திண்டுக்கல்லுக்குத் தெற்கிலிருக்கும் பெரியகுளம் பகுதியில் தலைவனாக இருந்தான், அவனது நாடு நெடுங்கள் நாடு என்று இடைக் காலத்தே பெயர் பெற்றிருந்தது. தன்னாட்டிற்குக் கிழக்கிலுள்ள கோனாட்டு வேளிர் தலைவன் செய்து கொண்ட வேள்கோட்கு இசைந்த நெடுமிடல், பொருந்திலர் தலைவனைக் கண்டு வேண்டுவன கூறினான், பொருந்திலர் அவனது உரையைக் கொள்ளாது இகழ்ந்து அவனைச் சினமூட்டினர் அதனால் அவனுக்கும் பொருந்திலர்க்கும் அருமண வாயில், உறத்தூர் என்ற இடங்களில் கடும் போர் நடந்தது. பொருந்திலர் வலியிழந்து அடங்கினர். அருமணம் இப்போது அரிமளம் என வழங்குகிறது.

பொருந்திலரை வென்று எவ்வியின் துணை பெற்றுச் சிறந்த நெடுமிடலஞ்சிக்கு இந் நிகழ்ச்சியால் நாட்டில் பெருமிதப்புண்டாயிற்று. அவனுக்கும் தற்பெருமை யுணர்வு மிகுந்தது; செருக்கும் சிறிது மீதூர்ந்தது. இதனால், நார்முடிச் சேரல் நன்னன்பால் பெற்ற வெற்றி கேட்கவும், நெடுமிடலஞ்சிக்கு அவன்பால் அழுக்காறு தோன்றிற்று. நெடுங்கள் நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் வையை யாறு பாயும் வளவிய நாடுளது. அதனை இடைக்காலக் கல்வெட்டுகள் அளநாடு எனக் குறிக்கின்றன. அந் நாட்டின் எல்லையில் சேர நாட்டுத் தலைவர் காவல் புரிந்தனர். இப் பகுதியில், தேனி, சின்னமனூர், கம்பம் முதலிய ஊர்கள் இருந்து இன்றும் செல்வம் சிறந்து திகழ்கின்றன. பண்டை நாளில் பாண்டி நாட்டினின்றும் சேர நாடு செல்வோர்க்கு இந் நாடு பெரு வழியாக விளங்கிற்று. நார்முடிச்சேரலைப் போர்க்கிழுத்தல் வேண்டி நெடுமிடல் அளநாட்டின் மேற்படை யெடுத்தான். அவனது படைப் பெருமை கண்டு அஞ்சி ஆற்றாது சேரர் தலைவர் தோல்வியுற்றனர்.

இச் செய்தி நார்முடிச் சேரலுக்குத் தெரிந்தது. அதன் தன் பெரும்படை யொன்றை வையை யாற்றின் கரை வழியாகச் செலுத்தினன். சேரமான் படையில் வினை பயின்ற யானைகள் மிகப்பல இருந்தன. அவை நெடுமிடலஞ்சியின் நாடு நோக்கிச் சென்றன. அஞ்சியின் படையும் சேரமான் படையும் கைகலந்து செய்த போரில் அஞ்சியின் படை பஞ்சிபோற் கெட் டொழிந்தது. நெடுமிடலும் தன் கொடுமிடல் துமிந்து கெட்டான். அவனுடைய வளமிக்க நெல் வயல் பொருந்திய நாடு யானைப் படையால் அழிந்தது. நார்முடிச் சேரல் அவனது நாட்டின் நலம் அறிந்து, அவனது “பிழையா விளையுள் நாட்டை” வென்று கொண்டான். ஒருபால் நன்னனையும் ஒருபால் நெடுமிடல் அஞ்சியையும் வென்று புகழ் மிகுந்த நார்முடிச் சேரலது பெருநலம் தமிழகம் எங்கும் பரந்து விளங்கிற்று.

நார்முடிச் சேரலின் வென்றி நலத்தைக் காப்பியனார் பாடலூற்றார்; “திசை முழுதும் விளங்கும் சால்பும் செம்மையும் நிறைந்த வேந்தே, நினது தூசிப் படை, பகைப் புலத்தின் எல்லை முற்றும் சென்று பரவி வென்றி மிகுந்து ஆங்குப் பெற்ற செல்வத்தைப் பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்து எஞ்சியவற்றை நின்பால் தொகுத்துள்ளனர். அச் செல்வத்தையும் துளங்குடி திருத்திய நின் வளம்படு செயல் நலத்தையும் பிறவற்றையும் எண்ணலுறின், எண்ணுதற்குக் கொண்ட கழங்கும் குறைபடுகிறது. அடுபோர்க் கொற்றம் அடுத்தார்க் கருளல் முதலிய பலவற்றாலும் நீ மாட்சி மிகுந்திருக்கின்றாய்; ஆயினும் நின் செயல்களுள் ஒன்று எனக்குப் பெரு மருட்சியை உண்டுபண்ணிற்று. நெடுமிடல் அஞ்சியோடு பொருதற்கு எழுந்து சென்று அவனுடைய நாட்டில் தங்கி அவனது கொடுமிடலை அழிந்தாய்; அவனும் இறந்தொழிந்தான்; அவனது பிழையா விளையுள் நாடு நினக்கு உரியதாயிற்று. அக் காலை, ஒரு பொருளாக மதித்தற்கில்லாத சிலர் நின்னை வைத்தனர். வைத வழியும் நீ சிறிதும் சினம் கொள்ளவில்லை. இஃதன்றோ எனக்கு மிக்க மருட்சியை உண்டு பண்ணிற்று[31]” என்று பாடினார்.

அதுகேட்ட நார்முடிச் சேரல் முறுவலித்து, “சான்றோரே, படைவலியும் துணைவலியும் மெய் வலியும் இழந்த் காலத்து, மனம் அறிவுவழி நில்லாது அலமருதலால், வான்புகழ் பெற்ற மறவரும் நிறையழிந்து பல பேசுவர்; வையா மாலையராகிய பகைவர் வைவதல்லது வேறு செயல்வகை இலராதலின் அதனைப் பொறுத்தல் தானே வலியுடையோர் செயற்லது?” என்றான். வேந்தனது முதுக்குறை நன்மொழியால் காப்பியனார் பெரு மகிழ்ச்சி கொண்டு மேலும் அவனோடு சொல்லாடலுற்றார்.

“வேந்தே, நீ போர்க்குச் செல்லுங்கால் நின் படையது வரவுகண்ட அளவிலேயே பகைவர் பலரும் அஞ்சி ஓடிவிடுகின்றனர்; அத்துணை மென்மை யுடையோர், போர் தொடுப்பதைக் கைவிட்டு நின் அடிபணிந்து அன்பாய் ஒழுகலாமே என்று கருதி அவர் படை நிலைக்குச் சென்று கண்டேன். அவரது படையணி அவர் பெருவலியுடையவர் என்பதை நன்கு காட்டிற்று; வாட்படை மதிலாக, வேற்படை கடிமிளையாக, வில்லும் அம்புமாகிய படை முள்வேலியாக, பிறபடைகள் அகழியாக, முரசுகள் இடியேறாகக் கொண்டு பகைவர் படையணி அமைந்திருந்தது. நின் கடற்பெருந்தானை அதனை நோக்கி வந்தது. படை மறவர் களிறுகளைப் பகைவரது காவல் மரத்திற் பிணித்து நிறுத்தினர்; நீர்த்துறைகள் கலங்கின; வேல் மறவரும் பிறரும் ஒருபால் தங்கினர். இவ்வளவே நின் தானை மறவர் செய்தது; சிறிது போதிற்கெல்லாம் அஞ்சியோடத் தலைப்பட்டது. எனக்கு இஃது ஒரு பெருவியப்பைத் தருகிறது [32]” என்றார்.

நார்முடிச் சேரல், காப்பியனார் கருத்தை யறிந்து, “புலவர் பெருந்தகையே, இதில் வியப்பில்லை ; நிலைமக்களைச் சால உடைய தெனினும் தானைக்குத் தலைமக்களே சிறந்தவர்; தலைமக்கள் இல்லெனின் தானையும் இல்லையாம்” என்றான். “அறிந்தேன், அறிந்தேன்” எனத் தலையசைத்துத் தெளிவுற்ற காப்பியனார், “மாறா மனவலி படைத்த மைந்தரது மாறுநிலை தேயச் செய்யும் போர்வன்மையும், மன்னர் படக் கடக்கும் மாண்பும் உடையவன் நீ; மாவூர்ந்தும், தேர்மீதிருந்தும், களிற்று மிசை இவர்ந்தும், நிலத்தில் நின்றும் நின் தானை மறவர் போர் நிகழ்த்த, நீ நின் தானையைச் சூழ்ந்து காவல் புரிகின்றாய்; அதனால் பகைவர் கண்டு அஞ்சி யோடுகின்றனர் என்பதை அறிந்தேன் [33]” என்று பாடினர்.

சேரமான் வஞ்சிநகர்க்கண் இருக்கையில் அவனுடைய வென்றி பெருமை முதலிய நலங்களை வியந்து, சான்றோர் பலர் அவனைப் பாடிப் பாராட்டினர். நாடோறும் இப் பாராட்டுகள் பெருகி வருவது கண்ட நார்முடிச்சேரல், இப் பாராட்டுரைகளை நயவாதான் போலக் காப்பியனாரோடு சொல்லாடி னான். அக் காலை, அவர், வேந்தனை நோக்கி, “சேரலே, புகழ்தற்குரியாரைப் புகழாமை சான்றோறாருடைய சான்றாண்மைக்கு அழகன்று. மேலும், அவர் செய்யா கூறிக் கிளக்கும் சிறுமையுடையரல்லர்; ஆதலால், நின் போர் நலமே அவர் உரைக்குப் பொருளாகிறது. நீ போர்செய்யும் களம் யானைமரப்பும் தேர்க்கால்களும் சிதறிக் கிடக்கும் காட்சி நல்குகிறது; எருவைச் சேவல்கள் தம் பெடையொடு கூடி நிணந்தின்று மகிழ, ஒருபால் கவந்தங்கள் ஆடா நிற்கும்; வீழ்ந்தோரது குருதி பரந்து போர்க்களம் அந்திவானம் போல் ஒளி செய்கிறது; பேய்கள் எழந்து கூத்தாடுகின்றன; இவ்வாறு போர்க்களம் சிறப்புறுதற் கேதுவாக நீ நின் தானையைப் பாதுகப்பது, உரைப்பார் உரையாய் விளங்கிறது[34]” என்றார். வேந்தன் காப்பியனார் பாட்டைக் கேட்டு ஏனைச் சான்றோர்க்குச் செய்தது போலப் பெருங் கொடையை நல்கி மகிழ்வித்தான்.

பிறிதொருகால், குறுநிலத் தலைவர் சிலர் நார்முடிச் சேரல்பால் பகை கொண்டு போர் கொடுத் தனர் சின்னாட்களாய்ப் பகை பொறாமையால் அவனுடைய மறவர்கள் போர்வேட்கை மிக்கிருந்தனர் மறவர் உடன்வரச் சென்று சேரமான் பகைவர் திரளைச் சவட்டலுற்றான். போர்க் களிறுகளும் வயமாவும் உடல் துணிந்து வீழ்ந்தன; மறவர் பலர் மாண்டொழிந்தனர். போர்க்களம் பனைதடி புனம்போலக் காட்சி நல்கிற்று, பெருகியோடிய குருதிப் பெருக்குப் பிணந்தின்னும் கழுகின் சேவலும் பெடையும் பருந்துமாகியவற்றை அலைத்துக்கொண்டு சென்றது; கூளிக்கூட்டம் நிணம் தின்று கூத்தாடிற்று; வெற்றி மிகக்கொண்ட சேரலைக் காப்பியனார் கண்டு, “வேந்தே, இத்தகைய செருப் பல செய்து சிறக்கும் நின்வளம் வாழ்க[35]” என வாழ்த்தினர்.

இவ் வண்ணம் கடும் போர்களைச் செய்யும் முகத்தால் சேரமானது பகைவர் மிக்க துயரத்தை எய்தினர்; ஆனால், பரிசிலர்க்குப் பெரும் பொருள் நல்கப்பட்டது. வேந்தன்பால் இவ்வாற்றால் மறவேட்கை மிகாது அடங்கியிருந்தது. ஆன்றவிந் தடங்கிய அவனது செம்மைப் பண்பு கண்டு வாய்மொழிப் புலவர் மனமகிழ்ந்து அவனுடைய “வளனும் வாழ்க்கையும் சிறப்புறுக” என வாழ்த்தினர். நார்முடிச்சேரலது நல்வளமும் நல்வாழ்க்கையும் துளங்கிய குடிகட்கு வளம் தந்தன; பகைவர் எயிலை யிழந்து அவர் நாட்டு நன்மக்களோடு ஒப்பப் பேணிப் புறந்தந்தான். இதனைக் கண்ட காப்பியனார், வேந்தே, நின்னுடைய இச் சீரிய வாழ்வு உலகிற்கு மிக்க நலம் தருவதாகும். நல்லரசும் அறவாழ்வும் திருந்திய முறையில் நிலவச் செய்வதே நல்லரசன் நற்செயல்; அதனைச் செய்யும் நீ உலகிற்குப் பெருநலம் புரியும் தக்கோனாதலால் இவ்வுலகினர் பொருட்டு நீ நீடு வாழ்வாயாக[36]” என வாழ்த்தினர். இவ் வாழ்த்துரை நார்முடிச் சேரலுக்குப் பேருவகை நல்கிற்று.

இது நிற்க, வேனிற் காலத்தில் சேர வேந்தர், நேரிமலைக்குச் சென்று மலைவளம் கண்டு இன்புறுவது போல, ஆற்றிலும் கடலிலும் நீராடி இன்புறுவதும், பண்டை நாளைய தமிழ்ச் செல்வம் வேந்தர் வழக்க மாகும். “யாறுங் குளனும் காவும் ஆடிப் , பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப[37]” என்பதனால், இது தொல் காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வரும் வழக்காறு என்பது தெளிவாம். ஆறாடி மகிழும் திறத்தை இப்போதும் கேரள நாட்டார் ஆறாட்டு என வழங்குகின்றனர். மாசித் திங்களில் நிகழும் கடலாட்டு, “மாசிக் கடலாட்டும்[38]” என வழங்கிற்று. நார்முடிச் சேரல், சேர நாட்டில் அரசு புரிந்த காலத்தில் நிகழ்ந்த ஆறாட்டு ஒன்றைக் காப்பியனார் கண்டு வியந்து பாடியுள்ளார்.

ஆறாட்டு நிகழ்தற்குச் சின்னாள் முன்பே, விரதியர் சிலர் உண்ணா நோன்புகொண்டு சேர நாட்டுத் திருமால் கோயிலில் தங்கி நின்றனர்; ஊர்களில் வாழ்வோர் ஆறாடும் திருாளன்று தலைமேற் குவித்த கையராய்த் திருமாலின் திருப்பெயரை ஓதிக்கொண்டு வருகின்றனர்; திருமால் கோயிலிடத்து மணிகள் இடையாறு ஒலித்து ஆரவாரிக்கின்றன. பின்னர், விரதியரும் ஊரவரும் ஒருங்கு கூடி நீர்த்துறைக்குச் சென்று நீராடி, மனம் தூயராய்த் திருத்துழாய் மாலையும் ஆழிப்புடையு முடைய திருமாலை வழிபட்டுச் செல்கின்றனர். அக் காலையில், வேந்தனும் ஆற்றில் நீராடித் திருமாலை வழிபட்டுத் திருவோலக்கம் இருக்கின்றனன். அரசியற் சுற்றத்தார் உடனிருப்ப, பாணர் கூத்தர் முதலிய பரிசிலர் பாட்டும் கூத்தும் நல்கி இன்புறுத்த, சான்றோர் வேந்தனை வாழ்த்தி மகிழ்விக்கின்றனர்.

இந்நிலையில், காப்பியாற்றுக் காப்பியனார், வேந்தனை வாழ்த்தலுற்று, உண்ணா விரதியரும் மக்களும் ஆறாடித் திருமாலை வழிபட்டுச் செல்லாநிற்க, உலகிருள் நீங்க ஒளி செய்யும் திங்கள், கலைமுழுதும் நிரம்பித் தாரகை சூழ விளங்குவது போல, நீ பகையிருள் அறக்கடிந்து அவரது முரசு கொண்டு துளங்குடி திருத்தி வளம் பெருவிக்குமாற்றால், ஆண்கடன் இறுத்து விளங்குகின்றாய்; நின் மார்பு மலைபோல் விளங்குகிறது; வானத்திற் கடவுளர் இழைத்த தூங்கெயிற் கதவுக்கு இட்ட எழுமரம் போல நின்தோள் நிமிர்ந்து நிற்கிறது; வண்புகழ்க்குரிய வண்டன் போல நீ சிறக்கின்றாய். வண்டு மொய்க்கும் கூந்தலும், அறம் சான்ற கற்பும், ஒள்ளிய நுதலும், மாமை மேனியும் உடைய நின் தேவி, விசும்பு வழங்கும் மகளிருள்ளும் சிறந்தாளான அருந்ததி போன்ற அமைதியுண்டயள். நின் முரசும், வெற்றி குறித்து முழங்குமே யன்றி, மக்களை வெறிதே அச்சுறுத்தற்கு என முழங்குவதில்லை. நின் மறவர் ஒடுங்காத் தெவ்வர் ஊக்கம் கெடுத்தற்கு எறிவதல்லது, தோற்றோடுவார் மேல் தம் படையினை எறியார். நின் தானைத் தலைவர், நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் சூர் போல் துன்பம் செய்வார். இவ்வாறு, பலவகையாலும் மாண்புறுகின்றாய்; ஆதலால் நீ நெடிது வாழ்க[39] என வாழ்த்தினர்.

இப்பாட்டின்கண் குறித்த திருமாலை, பதிற்றுப்பத்தின் பழையவுரைகாரர், திருவனந்தபுரத்துத் திருமால் என்று கூறுகின்றனர். திருவனந்தபுரம் பாண்டி நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடைப்பட்ட வேணாட்டில் இடைக்காலத்தில் சிறப்புற்ற பேரூர்; நார்முடிச்சேரல் காலத்தில் இருந்து விளங்கியதன்று; இடைக்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களில் எவரும் அதனைப் பாடாமையே இதற்குப் போதிய சான்று. காப்பியனார் குறிக்கும் திருமால், வஞ்சிமாநகர்க்கு அண்மையில் இருந்த ஆடக மாடத்துத் திருமாலாதல் வேண்டும். இதன் உண்மையை ஆராய்ந்த அறிஞர் சிலர், சுகந்தேசம் என்ற வடமொழி நூலில், வஞ்சிநகர்க்கு அண்மையில் கனக பவனம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறதெனவும், அதுவே இளங்கோவடிகள் குறிக்கும் ஆடக மாடமாகலாம் எனவும், அப்பகுதி பின்னர் அழிந்து போயிற்றெனவும்[40] கூறுகின்றனர். இனி கேரளோற்பத்தி என்னும் நூல், திருக்காரியூர் என்னுமிடத்தே பொன்மடம் ஒன்று இருந்தது எனக் கூறுகிறது[41]. இக் கூறிய கனக பவனமும்[42] பொன் மாடமும் வஞ்சிநகர்க் கண்மையில் உள்ளவை யாதலால், இவ் விரண்டினுள் ஒன்றே காப்பியனார் குறிக்கும் திருமால் கோயிலாம் என்பது தெளிவாகிறது. சிலப்பதிகார அரும்பத்வுரைகாரர் கூற்றைப் பின்பற்றி யுரைத்தலால், பதிற்றுப் பத்தின் உரைகாரர் இவ்வாறு கூறினாரெனக் கொள்ளல் வேண்டும். சிலர், திருப்புனித்துறா என இப்போது வழங்கும் திருப்பொருநைத் துறையில் உள்ள திருமால் கோயிலே இந்த ஆடகமாடத்துத் திருத்துழாய் அலங்கற் செல்வன் கோயிலாம் எனக் கருதுவர்; அஃது ஆராய்தற்கு உரியது.

இவ்வாறு தன்னைப் பல பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்த காப்பியாற்றுக் காப்பியனார்க்குச் சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ‘'நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கே கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான்'’ என்றும், அவன் இருபத்தை யாண்டு அரசு வீற்றிருந்தான் என்றும் பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பதிகம் கூறுகிறது. இப் பரிசு பெற்ற காப்பியனாருக்கு நார்முடிச்சேரல்பால் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால் அவரது உள்ளத்தே அழகியதொரு பாட்டு உருக்கொண்டு வந்தது. “வளம் மயங்கிய நாட்டைத் திருத்தி வளம் பெருகுவித்த களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலே, பகைவர் நாட்டு எயில் முகம் சிதைதலால் அதற்குக் காவல் புரியுமாறு நாற்படையும் செலுத்தி நல்வாழ்வு நிகழ்விக்கின்றாய்; நீ பரிசிலர் வெறுக்கை; பாணர் நாளவை; வாணுதல் கணவன்; மள்ளர்க்கு ஏறு; வசையில் செல்வன்; வான வரம்பன். இனியவை பெறின் தனித்து நுகர்வோம் கொணர்க எனக் கருதுவதின்றிப் பகுத்துண்டல் குறித்தே செல்வம் தொகுத்த பேராண்மை நின்பால் உளது; அதனால் நீ பிறர் பயன்பெற்று இன்ப வாழ்வு பெற நன்கு வாழ்கின்றாய்; உலகில் செல்வர் பலர் உளரெனினும், நின் போல் பிறர்க்கென வாழும் பேராண்மை யுடையோர் அரியராதலால், அவர் எல்லாரினும் நின் புகழே மிக்குளது; அவரது வாழ்வினும் நினது பெருவாழ்வே உலகிற்குப் பெரிதும் வேண்டுவது; ஆகவே நீ பல்லாண்டு வாழ்க[43]” என வாழ்த்தியமைந்தார்.


 1. Ep. A.R. No. 214 of 1928.
 2. அகம். 258.
 3. அகம் 15.
 4. ஷை 97.
 5. ஷை 366.
 6. மலைபடுகடாம் 87.
 7. அகம் 44.
 8. பதிற் ii பதி.
 9. மலையாள மாவட்டத்துப் பொன்னானி தாலூகா.
 10. ஷை ஏர்நாடு வட்டம்.
 11. T.A.S. Vol. iii பக். 8, 10. 20.
 12. அகம் 15.
 13. ஷை 113.
 14. குறுந். 15.
 15. திரு. இராகவய்யங்கார். கோசர். பக். 47-8.
 16. தொல். சொல். எச்ச.5.
 17. Historian’s History of the World. P. 341.
 18. அகம். 196.
 19. புறம் 169.
 20. வண்டன் என்பவன் பீர்மேடு என்ற பகுதியில் பண்டை நாளில் சிறந்த புகழ்பெற்று வாழ்ந்தவன். வண்டன்மேடு, வண்டப் பேரியாறு என்ற பெயருடன் அங்கே உள்ள பகுதிகள் இன்றும் அவனை நினைப்பிக்கின்றன. இந்த வண்டன் பெயரால் அமைந்த வண்டனூர் ஏர் நாடு வட்டத்தில் மேலைக் கடற்கரைக்குக் கிழக்கே 30 மைல் அளவில் உளது; அங்கே ஏழு கற்குகைகள் இருக்கின்றன. அவற்றுட் காணப்படும் சிதைந்த எழுத்துகள் அவ்வூரை வண்டனூர் என்று கூறுகின்றன; அப் பகுதியில் வாழ்பவர் அதனை வண்டூர் எனச் சிதைத்து வழங்குகின்றனர்.
 21. பதிற். 32:7.
 22. பதிற். 32.
 23. S.I.I. Vol. viii.No. 196.
 24. S.I.I.Vol viii No. 660
 25. குறுந். 292. பெண் கொலைசெய்யப்பட்ட இடத்தைப் பெண்கொன்றான்பாறை என்பர். மலையாளர் அதனைப் பெங்கணாம்பறா எனக் கூறுகின்றனர்.
 26. குறுந். 73.
 27. Ep. A.R. No. 569 of 1905.
 28. அகம். 199.
 29. பதிற். 40.
 30. பதிற். 39.
 31. பதிற். 32.
 32. பதிற். 33.
 33. பதிற். 34.
 34. பதிற். 35.
 35. பதிற். 36.
 36. பதிற். 37.
 37. தொல். கற். 50.
 38. திருஞானசம்: மட்டிட்ட 6.
 39. பதிற். 31.
 40. Chera kings of Sangam Period p. 86-9
 41. Ibid. 46-7.
 42. “ஆடகமாடத்தின்” வடமொழி பெயர்ப்புக் கனக பவனம்,
 43. பதிற். 38.