சேரமன்னர் வரலாறு/9. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிப் பதுமன் தேவி ஈன்ற மக்கள் இருவருள், முன்னவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் பின்னவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர். இவர் நார்முடிச் சேரலுக்கும் செங்குட்டுவனுக்கும் இளையவனாதலின் செங்குட்டுவற்குப் பின் சேரநாட்டு அரசு கட்டில் ஏறினான்.

ஒருகால், தொண்டை நாட்டுக்கும் கொண்கான நாட்டுக்கும் இடையிலிருந்த தண்டாரணியத்தில் வாழ்ந்த வேந்தருக்கும் சேரருக்கும் பகைமையுண்டாக, இச் சேரலாதன் சேரர் படை யொன்றைக் கொண்டு சென்று வெட்டிசிப் போர் செய்து நிரைகளைக் கவர்ந்து வந்தான், அவற்றைத் தன் நாட்டுத் தொண்டி நகர்க்கண் நிறுத்தி அச் செயலில் துணை புரிந்த வீரர்களுக்கும் ஒற்றர்களுக்கும் கணிமொழிந்த பிறர்க்கும் பகுத்தளித் தான். தண்டாரணியத்திற் கோட்பட்டவற்றுள் வரை யாடுகளே மிக்கிருந்தமையின் அவனுக்கு ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. “தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து” என்று பதிகம்[1] கூறுவதால், இவன் தொடக்கத்தில் தொண்டி நகரைத் தலைநகரமாகக் கொண்ட பொறைநாட்டல் இருந்து வந்தான் என்பது தெரிகிறது. செங்குட்டுவனுக்குப்பின் வஞ்சி நகரை அடைந்து சேரநாடு முழுதிற்கும் இச் சேரலாதன் முடி வேந்தனானான்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அரசு கட்டி லேறியதும், சேரநாட்டின் வட பகுதியில் வாழ்ந்த சதகன்னர், வானவாற்றையும் வானமலையையும் வரம்பறுத்துத் தம்மை வானவரம்பர் எனச் சேரர் கூறிக்கொள்வது பற்றி அழுக்காறு கொண்டு அதற்குத் தெற்கிலும் தமது எல்லைப் பரப்ப முயன்றனர். அவரது வானவாசி நாட்டுக்குத் தெற்கில், சேர நாட்டின் வடபகுதியாக இருந்த கொண்கான நாட்டை ஆண்டுவந்த “நன்னன் உதியன்[2]” என்பான், சேரர் கீழ்க் குறுநிலத் தலைவனாய் இருந்துவந்தமையின், அது குட நாட்டைச் சேர்ந்த பகுதியாயினும் தனியாக வைத்துப் பேசப்பட்டு வந்தது. அதன் தென் பகுதியே குடநாடு எனப் பெயர் வழங்கிற்று. நார்முடிச் சேரலால் கொங்கு நாட்டில் நன்னன் வலியழிந்து போகவே, அவன் வழிவந்தோர் சதகன்னர்களுக்கு அஞ்சி அவர்வழி நிற்கலாயினர். இரு திறத்தாரும் தம்மிற் கூடிக் குடநாட்டுட் புகுந்து குறும்பு செய்தனர். அச் செய்தி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு தெரிந்தது. அவன் Fதகன்னர் முதலிய வடவரது குறும்பு பொதுவாகத் தமிழகத்தின் தனி மாண்புக்கு ஊறு செய்யும் என உணர்ந்து பாண்டி வேந்தர்க்கும் சோழ வேந்தர்க்கும் வேளிர்களுக்கும் அறிவிப்பத் தமிழ் வேந்தர் பலரும் கருத்தொருமித்துப் படைத்துணை புரிந்தனர். தமிழ்ப் பெரும்படை திரண்டு குடபுலம் நோக்கிச் சென்றது.

அக் காலத்தே, பொறை நாட்டின் கீழ்ப் பகுதியில் நச்செள்ளையார் என்ற புலவர் பெருமாட்டியார் வாழ்ந்தார். இப்போது அப்பகுதி பாலைக்காடு நாட்டில் நடுவட்டம் என வழங்குகிறது. தலைமகன் வினை மேற்கொண்டு தலைமகளைப் பிரிந்து சென்று வினை முடித்து மீண்டுவந்து தன் மனையை அடைந்து இனிதிருக்கையில், மனைவியின் தோழியை நோக்கி, என் பிரிவுக் காலத்தில் நீ நன்கு ஆற்றியிருக்குமாறு இவட்குத் துணை செய்தாய்; உனக்கு என் நன்றி” என்று கூற, அவனுக்கு அவள், “தலைவ, நின் வருகையை முன்னர் அறிவித்த காக்கைக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்; இந் நாட்டுத் தொண்டி தகர்க்கண் இடப்பெறும் நெற்சோற்றில் நள்ளியின் கானத்தில் வாழும் இடையர் தரும் நெய்யைப் பெய்து ஏழு கலங்களில் ஏந்தித் தரினும், நின் வரவை கரைந்து உணர்த்திய காக்கைக்கு நன்றியாகச் செலுத்தக் கடவ பலி பெரிதாகாது, மிகவும் சிறிதாம்” என்றாள். இக் கருத்தை நற்செள்ளையார்,

“திண்டோர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே[3]

என்று பாடினர். இப் பாட்டின் இனிமையையும், நள்ளியினுடைய கானகத்தின் இயல்பையும், தொண்டி நகரின் நெல் வளத்தையும் உள்ளவாறு தீட்டப் பெற்றிருக்கும் ஒட்பத்தையும் கண்ட சான்றோர், அவர்க்குக் காக்கை பாடினி என்ற சிறப்பை நல்கினர். அதுமுதல் அவர் காக்கை பாடினியார் நச் செள்ளையார் என்று விளங்குவாராயினர். அதனை யறிந்த வேந்தன், அவர் இருந்த ஊரைக் காக்கையூர் என்று பெயரிட்டு அவர்க்கு இறையிலி முற்றூட்டாக வழங்கினான். அவர் தனது காக்கையூலிருந்து வந்தார். அது பாலைக்காட்டுப் பகுதியில் உள்ளது.

சேர நாடின் வடக்கில் வடவர் செய்யும் குறும்பும், அவர்களை ஒடுக்குதற்குச் சேரலாதன் படை கொண்டு செல்லும் மேற்செலவும் அவருக்குத் தெரிந்தன. சேர வேந்தர், மகளிர் பாடும் இசையிலும், ஆடும் கூத்திலும் பேரீடுபாடு உடையவர், செங்குட்டுவன் வடநாடு சென்ற போது பாடல் மகளிரும் ஆடல் மகளிரும் உடன் சென்ற திறம் இதற்குப் போதிய சான்றாகும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆண்டில் இளையனாதலால் இன்பத்துறையில் மிக்க எளியனா யிருந்தது யாவர்க்கும் தெரிந்திருந்தது. சேரலாதன் போர்ச் செலவை மேற்கொண்டபோது மகளிர் கூட்டம் ஒன்றும் உடன் சென்றது. இந்த எளிமை வேந்தரது கொற்றத்தைச் சிதைக்கும் என்று காக்கை பாடினார் கண்டு தமது நெஞ்சில் அஞ்சிக்கொண்டே இருந்தார்.

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் குடபுலம் செல்பவன், ஒருநாள் மாலையில், நுண்மணல் பரந்த பனம்பொழில் ஒன்றில் பந்தல் அமைத்து, ஏனை வேந்தரும் தலைவரும் கூடியிருப்ப விறலியரது பாட்டிசையில் இன்புறலானான். இதனை காக்கை பாடினார் அறிந்து, விரைந்து போந்து வேந்தனைக் கண்டு, “வேந்தே நீ இவ் வண்ணம் விறலியர் பாட்டிசையில் வீழ்ந்து கிடந்தால், நின் மனத் திண்மை உணராத பிறர் ‘இவ் வேந்தன் மெல்லியன் போலும்’ என எண்ணி இகழ்வரே!” என்ற கருத்துப்பட,

"சுடர் நுதல் மடநோக்கின்
வாள் நகை இலங்கெயிற்று
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே[4]

என இதனைக் கேட்கும் வேந்தன் உள்ளம் சினம் கொள்ளா வகையில், மிக்க நயமாக விளம்பினார். அதுகேட்டு வேந்தன் மறுவலித்துத் தன் செய்கையின் விளைவைச் சிந்திக்கலானான். உடனே காக்கை பாடினியார், நின்னை நன்கு உணர்ந்தோர், “நீ பெருஞ் சினப்புயலேறு அனையை” என்றும், நின் படைவழி வாழ்நர் “தடக்கையானைத் தோடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்” என்றும், போர்க்களத்தின்கண்,

“மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலை விரித்தன்ன நோக்கலை
கடியையால், நெடுந்தகை![5]

என்றும் உணர்ந்து அமைவர் என்று இனிது மொழிந்து அவனைக் குடபுலப் போர்க்குச் செல்லுமாறு ஊக்கினார்.

குடபுலம் சென்ற சேரலானது பெரும்படையின் வரவு கண்டதும், கொண்கான நாட்டு வேந்தரான நன்னன் வழியினருட் சிலர், மலைபடு பொருளும் காடுபடு பொருளும் கடல்படு பொருளுமாகியவற்றுள் மிகச் சிறந்தவற்றைத் திறையாகத் தந்து பணிந்தனர். சேரலாதன் அவரது திறை பெற்றும் சினந் தணியானாக, அவர் பொருட்குக் காக்கை பாடினியார் வேந்தன் முன் நின்று,

“செல்வர் செல்வம் சேர்ந்தோர்க்கு அரணம்,
அறியாது எதிர்ந்து துப்பிற் குறையுற்றுப்
பணிந்து திறை தருப நின் பகைவ ராயின்,
சினம்செலத் தணிமோ, வாழ்கநின் கண்ணி[6]

என்றும், “சினந் தணியாது போர் செய்து நாட்டை அழிப்பது கூடாது; இதுவும் நினது நாடே; பாடுசால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே” என்றும் எடுத்தோதினர். பின்பு, சேரலாதன் அவர்கட்கு நட்பருளி, அவரது துணைமை பெற்று, வடவாரியரைத் துணைக்கொண்டு தன்னொடு பொரற்குவந்த சதகன்னருடன் பெரும்போர் உடற்றினான். களிறும் குதிரையும் தேரும் வீரரும் கூடிய தமிழ்ப் படை, வடவர் தானையை வென்று வெருட்டிற்று. தமிழ் மறவர் தங்கள் மெய்புதை அரணம் கிழிந்தொழிந்ததை நினையாமல் தும்பை சூடிப் பொருதழித்தனர். எண்ணிறந்த வீரர் துறக்கம் புகுந்தனர். முடிவில் சேரலாதன் தானை, வான்வாசி நாட்டுட் புகுந்து அங்கேயே பாடிவீடு அமைத்து நின்றது. பகைவர் பலரும் புறந்தந்து ஓடினர். ஆற்றாத சதகன்னருட் சிலர் அடிபணிந்து அருங்கலம் பல தந்து, எம்மை அருளுக என வேண்டினர். சேரலாதன் அவர்கட்கு அருள் செய்து, பண்டு போல் வானவரம்பை நிலைநாட்டி, அவர்களையும் எல்லை கடவாது காக்குமாறு பணித்துவிட்டுத் திரும்பலானான். அதனால் சேரலாதனைச் சான்றோர் வானவரம்பன் என்று பாராட்டினர். இது நிலைபெறுமாறு, அந்நாட்டுப் பார்ப்பனரைக்கொண்டு பெருவேள்வி செய்து, அவர்கட்குக் குடநாட்டில் ஓர் ஊரையும் கொடுத்தான். இது பற்றியே பதிகமும் “பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, வானவரம்பன் எனப் பேரினிது விளக்கி” என்று கூறுவதாயிற்று.

வானவரம்பன் என்ற பேர் இனிது விளக்கிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வஞ்சிநகர் போந்து இனி திருக்கோயில், கிழக்கில் கொல்லிமலைக்கும் காவிரிக்கும் இடையிலுள்ள நாட்டில் வாழ்ந்த மழவர் என்பார், தெற்கில் வேளிர்கள் வாழும் நாடுகளைச் சூறையாடிக் குறும்பு செய்யத் தலைபட்டனர். நெடும்பொறை நாட்டை[7] அடுத்திருக்கும் மீகொங்கு நாடும்[8] குறும்பு நாடும் சேரர் ஆட்சியில் இருந்தன. அம் மழவருள் சிலர் சேரர் ஆட்சியில் தலைவராகவும் தானை மறவராகவும் இருந்தனர். ஆயினும், மழவரது குறும்பு நாளடையில் மீகொங்கு நாட்டிலும் பொறை நாட்டிலும் பரவத் தலைப்பட்டது.

சேரலாதன் இம் மழவரது குறும்பை அடக்க வேண்டியவனானான். அதனால் தன் தானை மறவர்களைப் பொறை நாட்டின் வழியாகக் கொங்கு நாட்டிற் செலுத்தி மழவர்களை ஒருங்கலுற்றான். அவர்கள் சிறந்த குதிரை வீரர்கள். அதனால், அவர்களை அறவே பகைத்து ஒதுக்குவது வேண்டத் தக்கதன்று என்பதைத் தேர்ந்து, அவர்களை வளைத்துப் பற்றித் தனக்கு அடங்கித் தன் ஏவல் வழி நிற்குமாறு பண்ண விரும்பினான். அவர்கட்குத்துவரைத் துவையலும் ஊன் கலந்து அட்ட சோறும் மிக்க விருப்பமானவை; அவற்றை நிரம்ப நல்கித் தன் தானை மறவராகக் கொண்டு, பின்னர் நிகழ்ந்த போர்கள் பலவற்றில் அவர்கட்கும் மெய்ம்மறையாய் நின்று அன்பு செய்தான்[9] அதனால் மழவர்கள் குறும்பு செய்வது தவிர்ந்து நண்பர்களாய் ஒழுகினர் அதனால் பதிகமும்[10] “மழைவரைச் செருவிற் சுருக்கி” என்று கூறுகிறது.

சேரலாதன் மழவரது குறும்பை அடக்கித் தனக்கு உரியராக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்” என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இப்போது இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருப்பது யாவரும் அறிந்தது.

சான்றோர் செவிகைப்பச் சொல்லினும் அவற்றை ஏற்கும் பண்புடைய வேந்தன் பொன்றாப் புகழ் கொண்டு விளங்குவன் என்பதற்கு ஒப்பச் சேரலாதன், சான்றோர் அவ்வப்போது கூறுவனவற்றை யேற்று இனிதின் ஒழுகிப் புகழ்பெற்றான். ஒருகால், சேரலாதன் தன் ஆட்சியின் கீழிருந்து கொண்டே செருக்கிக் குறும்பு செய்த வேந்தன் ஒருவனைப் போரில் வென்று ஒடுக்கித் தன் நகர்க்குத் திரும்பி வரலானான் வரும் வழியல் அவ் வேந்தனுடைய அரண்மனை நின்றது. அதனை அறிந்த தானைத் தலைவர்கள், “அதற்குள் நுழைந்து செல்வதே தக்கது; அன்றேல், அதனைச் சுற்றி பெருந்தூரம் வளைந்து வளைந்து சேறல் வேண்டும்” என்றனர்; வேந்தனும் அவர் உரைக்கு இசையும் குறிப்புடையனானான் அப்போது காக்கை பாடினியார் குறுக்கிட்டு, “வேந்தே, செல்லும் வழியில் இருப்பது தொல்புகழ் மூதூர்; அதன்கண் எந்திரம் புணர்த்த கோட்டை வாயிலும், முதலைகள் வாழும் ஆழ்ந்த அகழியும், வானுற ஓங்கிய மதிலும் உள்ளன; அது நின்னாற் காக்கப்படுவதொன்று; அன்றியும், அதற்கு, நின் முன்னோர், தமக்கு முன்னும் பின்னும் வந்தோர் ஓம்புமாறு வேண்டுவன செய்துள்ளனர்; அதனால் அதன்கண் புகுந்து செல்லாது வேறு வழியே செல்வாயாக; நேரே செல்வாயேல், நின் படையிலுள்ள போர் யானைகள், ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல் கொடி நுடங்கத் தாங்கலாகா[11]” என்று தெருட்டினர். வேந்தனும் அவ்வாறே செய்து சிறப்புற்றான்.

நாட்டின் வருவாயைப் பெருக்கி, வந்ததனை அறம் பொருள் இன்பங்கட்குப் பகுத்துச் செவ்விய முறையில் ஆட்சி புரியும் சேரலாதன், இன்மையுற்று வருந்தும் இரவலர்க்கு வேண்டுவனவற்றை நிரம்ப நல்கி இனிது வாழச் செய்யும் இயல்புடையவன். பனியும் குளிரும் நின்று வருந்தும் மாசித் திங்களில் விடியற்காலத்தே செல்லும் பாணனுக்குக் காலையில் ஞாயிற்றின் எழுச்சியும் விளக்கமும் இன்பம் தருவது போல, இரவலருடைய சிறுகுடி பெருகப் பேருதவி செய்தான்[12]. காதலால் தமது உள்ளத்தைக் கவர்ந்து நிற்கும் மகளிர் துனித்து நோக்கும் பார்வை காதலர்க்கு மிக்க வருத் தத்தைச் செய்யும்; அதனை நீக்குதற்கு எச்செயலையும் அவர்கள் தட்டின்றிச் செய்வர் என்பது உலகியல் உண்மை. சேரலாதனோ எனின், காதலி காட்டும் துனித்த பார்வையினும் இரவலருடைய இன்மை நோக்கத்தைக் கண்டால் அஞ்சி நடுங்கி அதனை முற்பட்டு நீக்குவன்[13]. இதனால் சேரலாதன் நாட்டில், இரப்பவரே இலராயினர்; வேறு நாடுகளில் அவர்கள் இருப்பது ஒரு நாள் இவ்வேந்தனுக்குத் தெரிந்தது. உடனே அவன் அரசியற் சுற்றத்தாரை விடுத்து அந்த நாடுகட்குச் சென்று அவர்களைக் கொணருமாறு பணித்தான். அவர்கள் வந்தபோது அவர்கட்கு வேண்டுவன நல்கி இன்சொல்லும் நல்லுணவும் தந்து போக்கினான். இதனை, “வாராயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் நல்கும் இசைசால் தோன்றல்[14]” என்று நச்செள்ளையார் நாம் அறியப் பாடிக் காட்டுகின்றார்.

பொறை நாட்டின் வடபகுதியில் நறவு என்னும் ஒரு பேரூர் இருந்தது. அதனைத் தாலமி (Ptolemy) நறவூர் (Nouroura) என்று குறித்திருக்கின்றார்.[15] ஆங்குள்ள அரண்மனையில் ஒருகால் சேரலாதன் சென்று தங்கியிருந்தான். அதனோடு மகளிர் பலர் இருந்தனர். அக்காலத்தே, அவனைக் கண்ட நச்செள்ளையார், விறலி யொருத்தியை அவன்பால் ஆற்றுப்படுக்கும் வகையால் ஒரு பாட்டைப் பாடினர். அதன்கண் நறவூர் கடற்கரையில் உளதென்றும், அங்கிருக்கும் மறவர், கடலலை மோதுவதால் எழும் துளிகளையும் குளிர் முகிலின் துளிகளையும் கலந்து வீசும் ஊதைக்காற்றால் உடல் நடுங்கியிருப்பர் என்றும், அவன் அம் மகளிரிடையே இன்புற்றிருப்பினும் அவன் உள்ளம் போர்வினையையே கருதியிருக்கும் என்றும், அவனை அங்கே பாடிச் சென்று கண்டால் அவன் தான் பகைப்புலத்து வென்ற அரும் பொருள்களை நல்குவன் என்றும்[16] குறித்துள்ளார்.

பிறிதொருகால், சேரலாதன் வஞ்சிநகர்க்கண் இருந்தபோது, இனிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இரவுக் காலத்தில் ஆடல் மகளிர் சிலர் துணங்கை ஆடலுற்றனர். உயரிய கால் விளக்கை நிறுத்திப் பெருவிளக்கம் செய்யப்பட்டது. துணங்கைக் களத்தில் முழவு முதலிய இசைக்கருவிகள் முழங்கின; அரங்கேறும் மக்கட்கு வேந்தர் தலைக்கை தந்து, அவர்களுடைய ஆடல் பாடல்களைத் தொடங்கி வைப்பது வழக்கம். அவ்வாறே சேரலாதன் ஆடல் மகள் ஒருத்திக்குத் தலைக்கை தந்து துணங்கையாடி வந்தான். மனைக்கண் புகுதலும் அவன் மனைவி ஊடிப் பிணங்கலுற்றான். வேந்தன், அவளது ஊடலைத் தீர்க்கும் இன்சொற்கள் பல எடுத்துரைத்தான். உரைக்குந்தோறும் அவட்கு ஊடல் மிகுந்ததேயன்றிக் குறையவில்லை. அவ் வூடல் முதிர்ந்து துனியைப் பயக்கும் எல்லையை நெருங்குதலும், கண் கலுழக், காலில் அணிந்த கிண்கிணி ஒலிப்ப, உடல் நடுங்க , நேர் நின்று, வாயிதழ் துடிப்பது, கையில் இருந்த செங்குவளைப் பூவைச் சேரலாதன் மேல் எறிதற்கு ஓங்கினாள். அப் பூ, தன்மேற் பட்டு வாடுதல் ஆகாது என்ற அருளுள்ளத்தாலும், அவள் கையகத்தில் இருந்து தன் கையை அடைதல் தகுமே யன்றி நிலத்து வீழ்வது கூடாது என்ற காதலுணர்வாலும், இருகையையும் ஏந்தி என் கையகத்து ஈக’ என இரந்து நின்றான். அவள், அதற்கு உடன்படாது, “நீ எமக்கு யாரையோ'’ என்று அவ்விடம் விட்டுப் பெயர்ந்தாள். பின்னர், காக்கை பாடினியார் சென்று அரசமாதேவி ஊடல் உணரத் தகுவன கூறி வேந்தன் அடியில் வீழ்ந்து பணியச் செய்தார்.

பின் பொருகால், காக்கைபாடினியார் இந் நிகழ்ச்சியை ஒரு பாட்டிடை வைத்துப் பாடி,[17] நின் காதலி எறிதற்கு ஓச்சிய சிறு செங்குவளையை அவளைப் பற்றிக் கைக் கொள்ளமாட்டாயாகிய நீ, பகைவருடைய வான்தோயும் எயில்களை எங்ஙனம் கைக்கொள்ள வல்லவனையினை? என்று இனிமையுற இசைத்தார்.

ஒருகால், சேரலாதன் பொருது வென்ற போர்க் களம் ஒன்றில், அவன் வலியறியாது பகைவர் போந்து பொருது மடிந்தனர். அவர்கள் துறக்க வாழ்வு பெறுவது குறித்து முன்றேர்க் குரவை ஆடினன். அக் காலை, முரசு முழங்க, கையில் வாளேந்தி, மார்பிற் பூணணிந்து, சென்னியில் உழிஞை சூடி, அவன் ஆடியதைக் கண்ட காக்கை பாடினியார், விழாக் காலத்தில் கூத்தரது ஆடுகளத்தில் அவர்கள் ஆடுவதை நம் சேரலாதன் அறியான், ‘வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே[18]’ என்று பாடி இன்புற்றார்.

இவ்வாறு அந்தப்புரத்தும், திருவோலக்கத்தும், எடுத்துச் செலவின்போதும், உடனிருந்து தமிழ் பாடி அறிவின்பம் நல்கிய காக்கைபாடினியார்க்குக் ‘கலன் அணிக’ என ஒன்பது காப்[19] பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்திருக்கும் அரசியற் சுற்றத்தாரோடு உடன் இருந்து அறிவின்பம் நல்குமாறு பணித்தருளினான். இவ்வாறு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது.

காக்கைபாடினியார் சேரலாதனை வாழ்த்திய வாழ்த்துரைகள் ஒரு தனிச் சிறப்புடையவை. சோழநாட்டு வேந்தன் ஒருவன், பண்ணன் என்பவனை வாழ்த்தலுற்று, “பண்ணனே, நீ யான் வாழ்தற்குரிய நாளையும் உன் வாழ்நாளோடு கூட்டி வாழ்க” என வாழ்த்தியதைப் புறநானூற்றில் காண்கின்றோம். இவ் வுலகில் நல்வினை செய்பவர் துறக்க வுலகு சென்று நெடிது நீடுவாழ்வர்” எனத் திருவள்ளுவர் கூறுவதனாலும் அறியலாம். காக்கை பாடினியார், சேரலாதனை

வாழ்த்துங்கால், “எனையதூஉம் உயர்நிலை யுலகத்துச் செல்லாதுஇவண் நின்று, இருநில மருங்கில் நெடிது மன்னியரோ[20]” என்று வாழ்த்துவர், வள்ளியோர்க்கு மழை முகிலை உவமம் கூறுவது மரபு. அம் மழைமுகில் மழையைப் பெய்தபின் வெளுத்துப் பஞ்சுத்துய்போலப் பரந்து கெடும்; அதனைக் கண்ட காக்கை பாடினியார், சேரலாதன் கொடையில் மழைமுகிலை யொப்பன்; ஆனால் அவனது வாணாள் அதுபோல் கெடலாகாது என வாழ்த்துவாராய், “பெய்து புறந்தந்து பொங்கலாம், விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்று அறாலியரோ பெரும் ... ஓங்கல் உள்ளத்துக் குரிசில், நின் நாளே[21]” என்று கூறுவர். இவர்க்கு வேண்டும் சிறப்புகளைச் செய்த சேரலாதன் தன் திருவோலகத்துச் சான்றோருள் ஒருவராய்த் தன் பக்கத்துக்கொண்டான் எனப் பதிகம் கூறிற்றாக, அதனை உணராத சிலர், இவரை. அவன் மணந்து கொண்டான் என்று சிறிதும் நாகூசாது கூறியிருக்கின்றனர். அரசன் பக்கத்திருப்ப தென்பது அமைச்சராதல் எனத் திருக்குறள் படித்த இளஞ் சிறுவரும் அறிவர். இச் சிறு பொருளால் விளையும் பெரும்பழியை நினைக்கும் திறமில்லாதார் பலர், தமிழ்நாட்டு வரலாறு எழுதுகின்றோமெனத் துணிந்து கழுவாயில்லாத வழுக்களைத் தமிழர் வாழ்வில் புகுத்தியிருப்பதைத் தமிழறிஞர் இனியும் நோக்காமல் இருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.


 1. பதிற். vi. பதிகம். வருடை-வரையாடு.
 2. அகம் 258.
 3. குறுந். 210.
 4. பதிற். 51.
 5. பதிற். 51.
 6. பதிற். 59.
 7. பாலைக்காட்டை யொட்டிய மேலைமலை நாடு
 8. ஈரோடும் அதனை யுள்ளிட்ட பகுதியும்.
 9. பதிற். 55.
 10. ஷை பதி. vi.
 11. பதிற். 50.
 12. பதிற். 59.
 13. ஷை. 3.
 14. ஷை. 55.
 15. பெரிப்புளுஸ் ஆசிரியர் நவுறா (Naoura) என்பதும் பிளினி நித்திரியா (Nitria) என்பதும் இந்நறவூரையே; கர்னல்யூல் முதலியோர் நேத்தராவதியாற்றங் கரையிலுள்ள மங்களூர் என்று கருதுகின்றனர். ஆனால், நறவூர் என்ற பெயரையேயுடைய ஊரொன்று அப்பகுதியில் உளது.
 16. பதிற். 60.
 17. பதிற். 52.
 18. பதிற். 56.
 19. கா - ஒன்பது கழஞ்சு.
 20. பதிற். 54.
 21. பதிற். 55.