சொக்கநாத கலித்துறை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சொக்கநாத கலித்துறை என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது.

கண்ணுக்கினிய பொருளாகி
  யேயென் கரத்தில்வந்தாய்
விண்னும் பரவிடும் அற்புத
  மெயென்ன விஞ்சையிதான்
மண்ணும் புகழ்ந்திட என்னையும்
  பூரண வாரியுள்ளே
நண்ணும் படிசெய் மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 1
 
ஆதரா மிந்நிலத் துன்னையல்
  லால் எனக் காருளரோ
மீதான் மான வெளியினைக்
  காட்ட விரைந்துடன் வந்(து)
ஓதாம லோதி யெனைவச
  மாக்கினை உள்ளொளியா
நாதா வருள்செய் மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 2
 
கல்லது நெஞ்சம் இரும்பே
  இருசெவி கண்கள்மரம்
சொல்லுவ தும்பொய் அவமே
  தொழில்துக்க சாகரமாம்
அல்லலென் பங்குநின் அன்பர்பங்(கு)
  ஆனந்த மாகவைத்தாய்
நல்லது நல்ல மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 3
 
பாடும் படிசெய் நினைநினைந்
  தேத்திப் பணிந்தெழுந்தே
ஆடும் படிசெய் மலமைந்து
  மேயடி யேன் உளத்தே
வீடும் படிசெய் நின்ஆனந்த
  சாகரம் மேல்எனவே
நாடும் படிசெய் மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 4
 
 றாத விண்ணப்பம் கூறாநின்
  றேன் அ· தேதெனிற்கேள்
மாறாம லிந்த மகாலிங்கந்
  தன்னின் மகிழ்ந்திருந்தே
ஆறாப் பவத்துய ராற்றிச்
  சிவானந்தம் அன்பர்க்கென்றும்
பேறாக நல்குதி மாமது
  ராபுரிச்சொக்க நாயகனே. 5
 
ஆகங் கரணம் புவனங்கள்
  போகங்க ளானஎல்லாம்
மோகம் பொருந்தவைத் தாட்டுதி
  யேமும் மலாதியெல்லாம்
போக விடுத்தெனக்கா னந்தம்
  காட்டப் பொறியுனக்கே
நாகம் அசைக்கு மதுரா
  ராபுரிச்சொக்க நாயகனே. 6
 
ஆடாம லாடிப் புலன்வழி
  யிற்போய் அனுதினமும்
வாடாமல் வாடி மயங்கல்நன்
  றோமன வாக்கிறந்து
கூடாமற் கூடிச் சிவானந்த
  வெள்ளக் குணக்கடலை
நாடாமல் நாட அருள்கூடல்
  வாழ்சொக்க நாயகனே. 7
 
பொய்யா மலமறுத் தென்உளத்(து)
  ஆனந்த பூரணத்தை
மெய்யா அளித்து விடாதுகண்
  டாய்விடி லோகெடுவேன்
ஐயா எனதுயி ரேவினை
  மார்க்கத் தழுந்தியென்றும்
நையா தரும்செய் மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 8
 
பிறவாத சென்மம் அழுத்தாத
  துன்பம் பிறந்தடியேன்
இறவாத தானமு முண்டுகொ
  லோஎளி யேன் திரும்ப
அறவாவிங் கென்னை யினியாட்டல்
  போதும்நின் ஆனந்தத்தே
நறவார் பொழில்மன் மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 9
 
செய்யாத பாதக மொன்றில்லை
  ஒன்றொன்று செய்ததெல்லாம்
ஐயா வளவில்லை நீயே
  யறிவைஅ· தியார் செயலோ
மெய்யா வுயிர்க்கு ரேயடி
  யேன் இவ் வினையிலென்றும்
நையாமல் ஆள்வை மதுரா
  புரிச்சொக்க நாயகனே. 10
 
அறிவைத் திருப்பிநின் பாதார
  விந்தம் அடையவில்லை
நெறியைக் கொடுத்து நிறுத்தினை
  யேநின்ம லாஇனிஎன்
பொறியைத் தவிர்த்துநின் ஆனந்த
  சாகர பூரணத்தைப்
பிறிவற் றிருக்கவைப் பாய்எனை
  ஆண்டருள் பிஞ்ஞகனே. 11


சொக்கநாத கலித்துறை முற்றிற்று[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=சொக்கநாத_கலித்துறை&oldid=1397934" இருந்து மீள்விக்கப்பட்டது