உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னார்கள்/பக்கம் 41-50

விக்கிமூலம் இலிருந்து

தொழில்களிலே ஒன்று ஒஸ்தி. மற்றாென்று மட்டம் என்று நான் என்றும் நினைத்ததில்லை. மேல் நாட்டினர்போல் தொழில் என்றால் எல்லாமே கெளரவமான தொழில்தான் என்றுதான் நினைத்தேன். சிகை அலங்காரத் தொழில், சலவைத் தொழில், ரோடு பெருக்குகல், கூலி வேலைசெய்தல், ரிக்‌ஷா இழுத்தல், இப்படி எத்தனையோ தொழில்களிருக்கின்றன. திருட்டுத் தொழில்கூட இருக்கிறது. ஆனால் நம் நாட்டிலே படித்தவன் இவற்றையெல்லாம் துணிந்து செய்ய முடியுமா? முடியாதே! ஆனால், சினிமாவில் நடிகனாக ஆனால், இத்தனை தொழில்களையும் செய்பவனாக நடிப்பிலாவது ஆகலாம் அல்லவா?

—ஜெமினி கணேசன் (1971)

எனது முழுப்பெயர் முகமது மன்சூர் அலிகான் பட்டோடி. எனது பெற்றேர்களும், நண்பர்களும் எப்போதும் என்னை “டைகர்“ என்றே அழைப்பார்கள். ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது இரண்டு கால்களையும் மடக்கி, இரண்டு கைகளேயும் ஊன்றிப் புலி போலப் பாய்ந்து பாய்ந்து வேகமாகத் தவழ்ந்து விளையாடிய துண்டு. அதைத் தவிர புலிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

—பட்டோடி

(உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்)

வீடு வீடாகச் சென்று 'ஓட்' சேகரிப்பது பெருந்தவறான காரியம். பொது மக்கள் தங்கள் பொறுப்பைக் கடமையை உணர்ந்து நடந்துகொண்டால் ‘ஓட்’ சேகரிக்கும் வீண் வேலை ஏன்?பயனற்ற-உயரிய குண நலன் அற்ற-திறனற்ற ஒருவரை மக்கட் பிரதிநிதி என்று கூறி, அந்த மனிதருக்கு ’ஓட்’ போடுமாறு போய்க் கேட்பது வாக்காளரை அவமானப் படுத்துவதாகும்.

—லார்டு மெக்காலே (1832)

‘என் வாழ்க்கை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இருக்கிறது. நான் இன்னும் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன. பிரேசியரிடமிருந்து உலகச் சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெறவேண்டும். வீட்டில் ஓய்வாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் . சாதாரண மனிதனைப்போல் ஓய்வு பெற வேண்டும். கடைகளுக்குப் போய் வரவேண்டும். புல் வெட்டியபடி உலவ வேண்டும். ஒப்பந்தம், வழக்கு, விவகாரம் என்பதெல்லாம் இல்லாமல், வீண்பேச்சு விரயம் இல்லாமல், மேடைப் பேச்சு கூட்டம் என்பதெல்லாம் இல்லாமல், நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் என் ஆசை.

—முகம்மது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)

நான் எந்த ஏணியையும் உதவியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறவில்லே. வெறும் உழைப்பின் சக்தி ஒன்றினாலேயே முன்னுக்கு வந்தேன். எல்லா இளைஞர்களும் என்னேயே பின்பற்ற முயன்று, வீண்மோசம் போக வேண்டாம்.

—ஜார்ஜ் பெர்னார்ட்ஷா

பெண்கள் வைர நகைகள் அணிவதன் காரணம்,தாங்கள் அணிந்திருக்கும் வைர நகைகளைப் பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல! பிறர் கண் பார்வையை வைர ஒளியின் உதவியால் இழுத்துத் தங்களைப் பார்க்கச்செய்ய வேண்டும் என்பதுதான்.

—சர். சி. வி. ராமன்

உலகத்திற்கே நாம் வழிகாட்டிப் போவோம்; நாம் புது உலகம் காண்போம். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய சக்தி உடையவராக இருப்போம். அனேக கோளாறுகள் இருந்தாலும் அவை எல்லாம் உடனே மாறிவிடும். அது செய்கிறவனுடைய லட்சியத்தைப் பொறுத்திருக்கிறது.

—பெரியார்) 19-1-1973)

நான் கதைகளுக்காக ஹாலிவுட்டைத் தேடிப்போவதில்லை. என் கதைகள் ஹாலிவுட் போன்ற இடங்களுக்குப் போக வேண்டும் என ஆசைப்படுபவன் நான். என் கதை மீது யாராவது உறவு கொண்டாட நினைத்தால், அவர்கள் என் அடுத்த வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் இப்படி யாராக ஒருவராகத்தான் இருக்க முடியும். காரணம் நான் நடுத் தெருவிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்

—ஏ. எஸ். பிரகாசம்

(கதாசிரியர்–டைரக்டர்)

நாம் உலகத்தின் வெவ்வேறு இனங்கள். நமது சுயநலங்கள் வெவ்வேறானவை. ஆகையால் அந்த நிலையில் நாம் ஒன்றுபட முடியாது. ஆனால் அந்நிலைக்கு அப்பாலும் ஓர் உலகம் இருக்கிறது. அங்கே நம்முடைய நம்பிக்கைகளும், ஆசைகளும், திறமையும், பலனும் சமமானவை. அந்த நிலையில் உலகம் முழுதுமே மனித குலம் ஒன்று சேருமிடம் இங்குதான் கிழக்கும் மேற்கும் உண்மையிலேயே ஒன்று சேருகின்றன. எதிர் காலத்தில் சத்தியத்துக்காகவும் அன்புக்காகவும் பயணம் செய்பவர்கள் இளமையான ரோம் நகரத்தின் மனதில் ஆதரவு பெறும்படி என்னால் செய்ய முடிந்தால், நான் என்னை அதிருஷ்டசாலியாக எண்ணிக் கொள்வேன்.

—கவி ரவீந்திர நாத் தாகூர் (10-6-1926)

(ரோம் பல்கலைக் கழகத்தில்)


எனக்குப் பின்னர் உலகம் என்னைப்பற்றி நல்லதோ, கெட்டதோ எது வேண்டுமானலும் சொல்லி விட்டுப் போகட்டும். தனிப்பட்ட முறையில் விஞ்ஞான உலகம் எனக்குக் கவிபாட வேண்டும் என நான் விரும்பவில்லை. நான் கண்டறிந்த உண்மைகள் வளர்ந்து வரும் விஞ்ஞான சம்பிரதாயத்தில் ஒன்றி இணையுமானால் அதைக் காட்டிலும் எனக்குத் திருப்தியளிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை

—ஜே. பி. எஸ். ஹால்டேன்

(விஞ்ஞான மேதை

நான் பல காலத்தைப்பற்றி எழுதுகிறேன். ஆனால் நிகழ்காலம் தவிர வேறு எந்தக் காலத்தைப் பற்றியும் நான் கற்பதில்லை. அந்த நிகழ்காலத்தையே இன்னும் நன்றாகக் கற்றுத் தேரவில்லை. அதுவே என் வாழ்நாளில் கற்றுத் தேற முடியாததாக உள்ளது.

—பெர்னார்ட் ஷா


என் நண்பரிற் பலர் - செல்வமும் அறிவுடைமையும், பேச்சு வன்மையும் பெற்றாேர். ‘ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளுகின்றார்கள்; ஆதலின் கோயிலுக்குச் செல்வதில் கருத்து வரவில்லை என்று கூறுகின்றார்கள். அவர்களே சில இந்திரிய அனுபவத்திற்காகப் பல இடிபட்டுத் தம் மனைவி மக்களுடன் துன்புற்றுக் கொட்டகையினுள் நுழைகிறார்கள். ஆண்டவன் சந்நிதியில் ஆகாத ஒன்று அங்கு ஆகும் போலும்! ஆண்டவன் சந்நிதியில் இடிபடுதலால் குறைவு ஒன்று மில்லை ஆண்டவன் சந்நிதியில் நடுவில் மூன்றடி விடுதல் வேண்டும். புறத்தில் நின்றே வணங்கல் வேண்டும். எதிரே நிற்றலாகாது. எதிரிலிருப்பவனே எதிரி என்று கூறுதல் வழக்கமல்லவா? பக்கங்களில் நின்று வணங்கல் வேண்டும்.

—ஞானியாரடிகள்

(கந்தர்சட்டிச் சொற்பொழிவில்)


என்னைப் போலவே என்மகனும் குத்துச்சண்டை வீரனாவதை நான் விரும்பவில்லை. ஆனல் அவன் விருப்பம் இதில் இருக்குமானல் நான் ஒன்றும் செய்ய முடியாது. கல்வியாளனாக அவன் விளங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் முறையான கல்வியைப் பெறவில்லை. அதற்காக இப்பொழுது நான் கவலைப்படவில்லை. உலகிற்கு நான் படித்த மனிதனுகவே தோன்றுகிறேன். இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானல் பள்ளிக்கூடத்திற்குப் போவதை விரும்பி ஏற்றுக் கொள்வேன்.

—முகம்மது அலி (உலக குத்துச்சண்டை வீரர்)

என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய்க் கலவரங்கள் தடக்கும் இடத்தில் வையுங்கள். துப்பாக்கிக் குண்டு முதலில் என் நெஞ்சில் தைத்து நான் சாகிறேன். அப்படியாவது ஒற்றுமை உண்டாகட்டும்.

—மகாகவி இக்பால்

(பஞ்சாபில் ஷாஹித் கஞ்ச் மஸ்ஜித் விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளும் அதை அடக்க ராணுவமும் வந்தபோது கூறியது.)

என்னுடைய ஏழாவது வயதில் என் தந்தையார் புகையிலை விற்றுக் கொண்டிருந்த கடைத்திண்ணையில் மருதமுத்துக் கோனார் என்ற பெரியவர் ஒருவர் ஆற்று மணலைக் கொட்டி அதில் அ-ஆ என எழுதச் செய்து கற்றுக் கொடுத்தார். சில திங்கள்களில் எழுத்துக் கூட்டிப் படிக்கவும் கற்றுக் கொண்டேன். ஒன்பதாம் வயதில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி முதலிய நூல்களைப் படித்தேன். 10 வது வயதில் ஒரு வெற்றிலே பாக்குக் கடையில் வேலே பார்த்தேன். நாள் ஒன்றுக்கு சம்பளம் அரையணா. இது எங்களின் பெரிய குடும்பத்தின் மோர்ச் செலவை ஈடு செய்தது. ஓய்வு நேரங்களில் என் தந்தையார் எனக்குக் கடைக் கணக்கு எழுதும் வரவு செலவு முறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார்.

—கி. ஆ. பெ. விசுவநாதம்

முப்பது நாற்பது ஆண்டுகளாகத் தமிழன் ஓயாமல் மேடைகளில் வறட்டுத் தவளைகளைப் போல் கத்தி ஒரு பயனும் காணவில்லை. கேட்டவர்கள் மண்டபம் எதிரொலிக்கக் கை தட்டியும் ஒரு பயனும் காணவில்லை. வேறே பயன் காணாவிட்டாலும் கவலை இல்லை, ஒற்றுமையாவது ஏற்பட்டாலும் மகிழலாம். அதுவும் வர வரக் குறைந்து போகிறது. ஒரு மாநாடு என்றால் இருந்த ஒற்றுமையில் ஒரு பிளவு என்று பொருள்; ஓர் ஆண்டுவிழாஎன்றால் ஒற்றுமையாக இருந்த அறிஞர்களுக்குள் பிரிவு என்று பொருள்.

—டாக்டர் மு. வரதராசனார் (1960)

பிரபல திரைப்பட நடிகரும் பாடகருமான தியாராஜ பாகவதர் வெள்ளிச் சங்கிலி பூட்டிய சந்தனப் பலகை ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது வழக்கம். மோகன ராகத்தை அப்போதவர் முணுமுணுப்பது பழக்கம். பாகவதர் ஆடிய அந்த ஊஞ்சலில் நானும் அமர்ந்து ஆடியிருக்கிறேன். பழங்காலத்து மன்னர்களைப் போலவே ஒவ்வொரு நாளும் அவர் தங்கத்தட்டிலே தான் சாப்பிட்டு வந்தார். நூறு பவுன்களைக் கொண்டு நூதனமாகச் செய்யப்பட்ட அவர் வீட்டுத் தங்கத் தட்டிலே நானும் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்.

—கவிஞர் சுரதா (1973)

புன்செய் நன்செய்களில் வேலை செய்வதற்குக் கூடக் கல்வி அவசியமாவெனக் கேட்கலாம். இருபது வயதுவரையில் வெயிலில் நின்று வேலை செய்யாத பழக்கத்தால், இருபது வயதுக்குமேல் நன்செய் புன்செய் ஆகியவற்றில் வேலை செய்தால் கஷ்டமாக இருக்கின்றது. எனவே சிறு வயதிலேயே அப்பயிற்சியை அளித்தல் வேண்டும். நான் ஜெயிலில் இருக்கும் பொழுது மீண்டும் வக்கீல் தொழில் செய்வதில்லையென்று சத்தியமும் செய்து கொள்வதுண்டு. ஆனல் வெளியில் வந்து பத்திரிகை ஆபீசில் உதவி ஆசிரியனாக இருந்தேன். நெய் வியாபாரம் செய்தேன். ஆனல், ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை

—வ. உ. சி. (3-3-1928)

என்னைப் பொறுத்தவரையில் இன்னும் நிறையப் பெண்கள் இந்தத் துறைக்கு வரவேண்டும் என்று சொல்வேன். முன்பெல்லாம் தண்ணீர் இழுப்பது, வீட்டு வேலைகள் நிறையச் செய்வது என்கிற பழக்கம் பெண்களிடம் இருந்தது. வரவர அந்த எக்ஸர்ஸைஸ் நம் பெண்களிடையே குறைநதிருக்கிற காரணத்தினால், நடனத்துறைக்கு வருவதன் மூலம் கொஞ்சமாவது தேகப் பயிற்சி அவர்களுக்கு இருக்க வழியேற்படுகிறது என்றுதான் கருதுகிறேன்.

—டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் (20.1-19)

மக்களுக்குப் பாட்டைப் போல உற்சாக மூட்டுவது வேறொன்றுமில்லை. எனக்கு மட்டும் சுப்புலட்சுமியைப் போல பாட வந்தால், அதோடு எனக்கு இருப்பதாக நீங்கள் கூறும் குணங்களுமிருந்தால், நான் உலகத்தையே ஆளுவேன்.

—ராஜாஜி (1947)

(எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவில்)

இருபது ஆண்டுகளாக சினிமாவை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன். இதுவரை நான் 5-அல்லது 6-சினிமாதான் பார்த்திருப்பேன். அதுவும் நூறு ரூபாய் எனக்குக் கட்டணம் கொடுத்தால்தான் போவேன்.

—பெரியார் (1-2-1967)


நான் தெலுங்கு நாட்டு சங்கீதத்தையும், கன்னட தேசத்து சங்கீதத்தையும் ஆராய்ந்திருக்கிறேன். அவை எல்லாம் தமிழ் இசையுடன் கொஞ்சங்கட சம்பந்தப்பட வில்லை. அவை மராட்டி, ஹிந்துஸ்தானி இசையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். தாம்பிர பரணி நதி ஜலத்தைக் குடித்து, தமிழ்க் காற்றையே சுவாசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் தம் தாய் பாஷையில் சாகித்திய மேற்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தும், தமிழிலுள்ள சாகித்யங்களின் மேன்மையை உணர்ந்தும், தம் சாகித்தியங்களைத் தாய் மொழியிலேயே செய்தார்.

—ரசிகமணி-டி. கே. சிதம்பரநாத முதலியார் (25-10-1941)

(தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)

அரவிந்தர் ஒரு வங்காளி. எந்த ஒரு வங்காளியும் அவரை மறக்கவில்லை. பிரகாசம் ஒரு தெலுங்கர். எந்த ஒரு தெலுங்கனும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுந்தான் வ. உ.சியை மறந்து விட்ட்னர். அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றத் தவறிவிட்டனர்.

—கவிஞர் சுரதா (1971)

‘ஜனநாயகம்’ ஆசிரியர், தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ். வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப் படுத்த உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகாதந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள். நான் ‘பாலா மணி‘க்குப் பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கீகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஈரோடு சென்றேன். பாலாமணி’க் குரியவர் கதா சத்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன். -

—பாவேந்தர் பாரதிதாசன் (19-9-1937)

நான், என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை இல்லாதவன்.

—பெரியார் (1-1-1962)

நான், சில காரியங்களைச் செய்யாமல் விடுவேனே தவிர, செய்கிற பலகாரியங்களை நிறைவாகச் செய்பவன்.

—அறிஞர் அண்ணா (21-3-1967)

நான் முழுமையாக நேருஜியைப் பின்பற்றுவதாகவோ, காந்திஜியைப் பின்பற்றுவதாகவோ, சொல்லவில்லை இப்போது காலம் மாறிவிட்டது. மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிருக்கிறது. ஆனல் இந்த நாடு காந்திஜியின் லட்சியங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் இயங்கும். அவற்றை நாம் மறந்து விடவில்லை.

—பிரதமர் இந்திரா காந்தி (7-1-1975)

சினிமா ரசிகர்கள் சங்கத்தை ‘விசிறிகள் சங்கம்’ என்றோ, ‘ரசிகர் சங்கம்’, என்றோ, அழைப்பதைவிட, ‘ஆர்வகர் சங்கம்’ என்று அழைக்கலாம்.

—டாக்டர் ஏ.சி. செட்டியார் (19-6-1960)

அரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ஆம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இருந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதன் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.

— நடிகர் டி. கே. சண்முகம் (13-8-1972)

இனி, சென்னையிலுள்ள சீர்த்திருத்தச் சங்கங்களைப் பற்றிப் பேசுவோம். இந்தச் சீர்திருத்தச் சங்கத்தாரில் சிலர், என்னைப் பயமுறுத்தித் தங்கள் சங்கத்தில் சேரச் செய்ய எண்ணங் கொண்டாற் போலிருக்கிறது. அது சாயாத காரியமென்பதை அவர்கள் அறிந்து கொள்வாராக. சென்ற பதினான்கு ஆண்டுகளாகப் பசிப்பிணியை நேரடியாய் அனுபவித்துக் கொண்டு வந்து, அடுத்த நாள் இன்ன உணவு கிடைக்கும், இந்த இடத்தில் உறங்குவோம், என்றறியாமல் திரிந்தவனை அவ்வளவு எளிதாகப் பயமுறுத்திவிட முடியாது. கெளபீன தாரியாய் அத்தியந்த சீதளப் பிரதேசங்களில் சஞ்சரித்தவனை, இந்தியாவில் அவ்வளவு எளிதாக ஏய்க்க முடியாது. ஆகவே அவர்களுக்கு முதலில் நான் இப்படிச் சொல்வேன். எனக்குச் சொந்தமான சங்கற்பம் சிறிதுண்டு. எனக்கும் சிறிது அனுபவமிருக்கிறது. உலகத்திற்கு நான் சொல்ல வேண்டிய தூது மொழி ஒன்றுண்டு. அதை நான் துணிவோடும் பிற்காலத்தைப் பற்றிக் கருதாமலும் சொல்வேன். சீர்திருத்தக்காரர் வந்தால்–உங்களே விட நான் பெரிய சீர்திருத்தக்காரன் என்று அவர்களிடம் சொல்வேன் அவர்கள் இங்குமங்கும் துண்டு துண்டாயன்றோ திருத்தம் செய்ய வேண்டுமென்கிறார்கள். நானோ வேரோடு திருத்த வேண்டுமென்பேன். அவர்கள் இருப்பதை அழிக்க வேண்டுமென்கிறார்கள். நானோ இருப்பதை வைத்துக் கொண்டு அதன்மேல் கட்டடம் கட்ட வேண்டுமென்கிறேன். மேல் பூச்சான சீர்திருத்தத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.

—சுவாமி விவேகானந்தர் (9-2-1897)

4

(சென்னை விக்டோரியா மண்டபத்தில்)

நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். 33 மாதங்கள் மராட்டியத்திலுள்ள அமராவதி சிறையில் காமராசருடன் நான் இருந்தேன். நமது நாடு சுதந்திரம் பெற்று மக்கள் சுக வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் தியாகம் செய்தோம். சிறையில் வாடினோம். நான் சிறையிலிருந்த போது, நான் மந்திரியாவேன், சட்டசபை உறுப்பினராக வருவேன் என்று நினைத்தது கூட இல்லை.

—ராஜாராம் நாயுடு (3-1-1977)

(குடிசை மாற்று வாரியத் தலைவர்)


ஏராளமான குழந்தைகளைப் பெறுவதைவிட சில குழந்தைகளோடு கட்டுப்படுத்தி, அவர்களுக்குப் போதுமான உணவு, துணிமணி, மற்ற வசதிகளைச் செய்து தருவதே நல்லது.

—நடிகை செளகார் ஜானகி (18-12-1960)


நான் திருச்சியில் கல்லூரியிலே படிக்குங்காலத்தில் நாடகங்களில் நடித்தேன். அந்தக் காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாட்டுகளை நான் அருமையாகப் பாடுவேன்

—நடிகர் அசோகன் (7-3-1961)


தமிழ் இசையைப் பற்றிய சிறப்புகளைப் பொதுவாக நம் தமிழ்ப் படங்களில் காணுவதற்கே இடமில்லை. தமிழ் இசைக் கலையை வளர்க்காது போவோமேயானால் தமிழ் இசைக்கே பெரும் தீது செய்தவர்களாவோம். தமிழ்ப் படங்களிலே இந்திப் பாட்டுக்களையோ, சமஸ்கிருத பாட்டுக்களையோ புகுத்த வேண்டிய அவசியமே இல்லை. வேண்டிய இடங்களில் எல்லாம் தமிழ்ப் பாட்டுக்களே அமைத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும்.

குமாரராஜா எம் ஏ. முத்தையா செட்டியார் (25.5-1941)

(சென்னை பிரபாத் தியேட்டரில் நடைபெற்ற சகுந்தலை என்ற படத்தின் 100-வது நாள் விழாவில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_41-50&oldid=1009818" இலிருந்து மீள்விக்கப்பட்டது