உள்ளடக்கத்துக்குச் செல்

சொன்னார்கள்/பக்கம் 61-70

விக்கிமூலம் இலிருந்து

நான் இங்கிலாந்தின் விருந்தாளியேயன்றி சிறையாளன் அன்று. இங்கிலாந்து தேசத்துக்கு நான் அடைக்கலமாக வந்தேன். என் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அறநெறியையும் சட்டமுறையையும், சமூகத் தர்மத்தையும் இழந்து அதர்மத்தில் இறங்கினர். அவர்களது நடவடிக்கை பிரிட்டிஷ் பெருமைக்கேற்றதா என்று நான் கேட்கிறேன். சென்ட் ஹெலினவில் என்னை ஆயுள்வரையிலும் கிறை செய்தல் கொடுமையினும் கொடுமையாகும். அ ஃ து கேவலம் அநாகரிகக் காரியமாகும். ஆங்கிலேயர்கள் இவ்வளவு கொடுமையாக என்னை நடத்துவார்கள் என்று நான் கனவிலும் கருதினேனில்லை. அத்தீவில் சிறை செய்தலைக் காட்டிலும் என்னைச் சுட்டுக் கொன்று விடுவதே சாலச்சிறந்ததாகும். ஆங்கிலேயர் எனக்கிழைத்த கொடுமையைத் தெய்வமும் சகியாது.

—நெப்போலியன்

நாம் கற்றுக்கொள்ளும் கல்வியை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று நாம் நமது அனுபவத்தினால் கற்றுக்கொள்வது. மற்றாென்று, நம்மையறிந்தே கற்றுக்கொள்வது. ஆகையால் நம்மையறியாமலும், அறிந்தும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் பலவிருக்கின்றன. பல்கலைக் கழகங்களில், பெரிய பெரிய பட்டங்கள் பெற்று விடுவதினால் பிரயோஜனமில்லை. அத்தகைய பட்டங்களுக்குப் பின்னும் பல விஷயங்கள் கற்க வேண்டியிருக்கின்றன. உலக விவகாரங்களில் போதிய அறிவு ஏற்படவும், பல விஷயங்களைக் குறித்துப் பேசத் தகுதியுடையவர்களாகவும் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

— சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)

(பிராட்வே ஒய். எம். சி. ஏ. கூட்டத்தில்)

நான், இப்போதும் தினசரி பத்திரிக்கை வாசிப்பு, இதர படிப்பு, எழுதுதல் உட்பட 10 மணி நேரம் வேலை செய்பவன்.

— தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன்

நான் பெரிய பிரசங்கி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மேடைகளில் பேசுவதும் பிரசங்களுமே சுதந்திரப் போரில் முக்கியம்சங்களாயிருக்கின்றன. ஆனால் அது மட்டும் போதுமெனச் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றிய மட்டில் அத்தகைய பேச்சுககள் நமது சுதந்தரப் போரின் ஆரம்ப நிலையைச் சேர்ந்ததே என்றுதான் சொல்லுவேன்.

— லாலா லஜபதிராய் (13-4-1928)

(திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில்)


நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத் தாம் போவது வழக்கமாக இருந்திருக்கின்றது. கடவுளைப் பற்றிப் பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும் புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் இவர்கள் எல்லாம் தமிழ் படித்த புலமையினல் சாமியார் ஆனவர்களே. அதிகம் போவானேன்! நம் கண்ணெதிரே வாழ்ந்த பிரபலமான தமிழ்ப்புலவர் வேதாசலம் ‘சாமி வேதாசலம்’ ஆகி, மறைமலையடிகள் ஆகவில்லையா? நாடகங்களுக்குப் பாட்டு, கதை முதலியன எழுதி வந்த சங்கரன் என்பவர் சங்கரதாஸ் சாமிகள் ஆகவில்லையா? முத்துசாமிக் கவிராயர் அவர்கள் முத்துச்சாமி சாமிகள் ஆகவில்லையா? இவர்களை எல்லாம் எனக்கும் நன்றாகத் தெரியும். நன்கு பழக்கமானவர்கள். நமது திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் சாமியாராகத்தாம் போக முற்பட்டார். நான் போட்ட போட்டிலே அவர் தப்பித்தார்.

—பெரியார்


பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும்.

—குருச்சேவ் (26 - 6 - 1960)

எனக்கு லேசாகச் சத்தம் கேட்டாலும் தூக்கம் வராது. காற்றடித்து மரம் சலசலக்கும் ஓசையோ அல்லது டெலிபோன் மணி அடிக்கும் ஓசையோ கேட்டால் துரங்கவே மாட்டேன்.

—நடிகை சரோஜா தேவி (26 - 3 - 1962


திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய். திருவள்ளுவர் பிறந்தது பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

—கி. ஆ. பெ. விசுவநாதம்


கதை எழுத நிகழ்ச்சிகள் உதவுகின்றன. அதனால் பலர் கதை எழுதலாம். கட்டுரை எழுதச் சிந்தனை வேண்டும். ஒரு பொருளைப் பற்றிச் சிந்தித்துப் பல பக்கங்கள் அட்ங்கிய நூலாக எழுதவேண்டுமானல் பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்.

— கி. வா. ஜகந்நாதன்


அறிவு முதிர்ச்சி காரணமாக, இந்தியா சமாதானக் கொள்கையைப் பின்பற்றுகிறது. பலவீனத்தினாலோ, போர் புரிய சக்தியற்றதனாலோ அல்ல. இந்தியாவில் பெரிய ஞானிகள் தோன்றியுள்ளனர். அதேபோல மகத்தான போர் வீரர்களும் தோன்றியுள்ளனர்.

—சவாண் (16 - 11 - 1962)


துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும்.

—மா. சே. துங் (1936)

நான் சிறு குழந்தையாக இருந்தபோதுகூட எனக்கு அதைக்கொடு, எனக்காக இதைச் செய் என்று யாரிடமும் கேட்டது கிடையாது.

—பிரதமர் இந்திரா காந்தி


கை தட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. கை தட்டுகிறவர்கள் தங்கள் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

—நேரு (12 - 5 - 1963)


இந்தியாவில் இமயம்முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே நாகரிகம்தான் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். ஆனால் இந்தியாவின் நாகரிகம் பலவகைப்படும் எனச் சரித்திரங்கள் கூறுகின்றன. சரித்திரங்களில் நாம் படிக்கத்தகாத விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் ஒதுக்கிவிட வேண்டும். அத்தகைய சரித்திரங்கள் எல்லாம் அந்நியர்களால் எழுதப்பட்டவை.

—சுபாஷ் சந்திர போஸ் (20 - 5 - 1928)

(பம்பாயில்)

நாம் ஏன் சந்திரனுக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். சந்திரன் அல்ல நமது குறி, விண்வெளியை நான் ஒரு முக்கியமான கடலாகக் கருதுகிறேன்.

—கென்னடி (13 - 3 - 1962)


நான் தினமும் காடுகளுக்குள் சென்று, அங்கிருந்து புதுப் புதுத் தாவரங்களை ஆராய்கிறேன். அதன் மூலம், இயற்கை அன்னை நமக்கு ஆவலுடன் கற்பிக்க விரும்பும் அரிய பாடங்களைக் கற்கிறேன். தினசரி காலையில், நான் காட்டில் தனியாக இருக்கும்போது, நான் .அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுனிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்.

—ஜியார்ஜ் வாஷிங்டன் கார்வர்

(நீக்ரோ விஞ்ஞானி)

என் பெரிய தாயார் எனக்காகப் பட்டசிரமம் கொஞ்ச நஞ்சமன்று. அந்தச் சிரமத்தை அவர் வகையறிந்து, முறை தெரிந்து பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் அன்று அப்படியெல்லாம் பொறுப்புடன் பாடுபடவில்லை என்றால் இன்று என்னை ‘இராஜமாணிக்கமும் ஒரு புள்ளிதான்’ என்று நாலு பேர் சொல்லும் நிலை ஏற்பட்டே இராது. என் பெரிய தாயார் என் முன்னேற்றத்திற்காக எடுத்துக்கொண்ட பெரு முயற்சி போல வேறு எந்தத் தாய்மாராவது தங்கள் மக்களுக்காக எடுத்துக் கொண்டிருப்பார்களா என்பது என் வரையில் சந்தேகந்தான்.

—கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை


நான் ஓட்டும் கப்பலில், வெள்ளையர், மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தாய் நாட்டுக்குப் புறப்பட வேண்டும். அந்நியன் கப்பலேறும் நாளே புனிதநாள்.

—வ. உ. சிதம்பரம் பிள்ளை

எனக்கு அலுப்பே கிடையாது; எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம்.

—காமராஜர்

மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். புத்தகம் இல்லை என்பதற்காக நல்ல வெய்யிலில் வாத்தியார் என்னைப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தினர். வந்து அப்பாவிடம் சொன்னேன். “என்பிள்ளையை எவண்டா துரத்தினான்?” என்று அவரோடு சண்டைக்குப் போனார். என்னிடம், இனி பள்ளிக்கூடமே போக வேண்டாம் என்றார். அன்றைக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டது தெரியுமா? அதோடு போச்சு என் படிப்பு.

5

-ம. பொ. சி. (24 - 10 - 1971)

வறுமை மிக்க நம் நாட்டில் ஜனத்தொகை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்றதே என்றும், அதற்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லையே என்றும் நாட்டுத் தலைவர்கள் கவலுகின்றனர். சில ஆண்டுகள் வாழ்ந்தாலும் அறிவுள்ள மகன்தான் வேண்டுமென்று மார்க்கண்டனை மைந்தனாகப் பெற்றனர் அவர் தந்தையார். சைவம் தழைக்க மகவு வேண்டுமென்று சிவபாத விருதயரும் பகவதியம்மையாரும் தவமிருந்து ஈன்றனர் ஞானசம்பந்தப் பெருமானே. அதுபோல் நல்ல மக்கள் ஒருசிலர் ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்தால் போதும். அறிவற்ற மக்கள் பலர் வேண்டாம். பல குழந்தைகளிருந்தால் அவர்களை நாம் சரிவரப் பாதுகாக்க முடியாது.

—திருமதி மரகதவல்லி சிவபூஷணம் பி.ஏ. பி.டி., (25 - 12 - 1953)

(சைவ மங்கையர் மாநாட்டுத் தலைமையுரை)


செயல் வீரர்களில் ஒருவரான திருவாரூர் டி. என். இராமன் அவர்கள் நான் புரட்சிக் கவிஞரைச் சந்திக்கும் முன்பே, என்னைப் ’புரட்சிக் கவிஞரின் சீடர்’ என்று பலரிடமும் அறிமுகப் படுத்தினர். எழுத்தாளன் என்ற முறையில் அந்தத் தகுதியினைப் பெறவே நானும் விரும்பினேன். 1928-ல் சமதர்ம சங்கம் தொடங்கி நடத்தியதோடு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், சிறு கதைகள் எழுதி வந்தேன். எனது எழுத்தாற்றலைப் பெருக்கவும், அன்பினைப் படைக்கவும் கவிஞரைச் சந்திக்க விரும்பினேன்.

—ஜலகண்டபுரம் ப. கண்ணன் (15 - 9 - 1965)

தற்போதைய பரீட்சை முறையானது, பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் வழக்கத்தை உருவாக்கியுள்ளது. இது, நாட்டையே ஏமாற்றுவது போன்றதாகும்.

—தேஷ்முக் (15-6-1960)

எனக்குக் கத்திச் சண்டை கற்றுக் கொடுக்க யாரும் முன் வரவில்லை. நானாக அதைப் பழகிக் கொண்டேன்.

—எம். ஜி. ஆர்.


அக்காலத்தில் மத சந்நியாசிகளின் உறைவிடமாகிய மடங்களே கல்வி ஸ்தாபனங்களாக இருந்து வந்தன. அங்கு மதக் கல்வியுடன் மக்களுக்கு வேண்டிய இதர விஷயங்களும் கற்பிக்கப்பட்டன. நம் நாட்டில் அத்தகைய மடங்களை மீண்டும் ஏற்படுத்துவது முடியாத காரியம். ஆகையால் பாமர மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமானால் வாசக சாலைகள் இன்றியமையாததாகும். வாசக சாலைகளை ஏற்படுத்தச் செய்யவேண்டும் என்னும் இயக்கம் நம்நாட்டில் சமீபத்தில்தான் தோன்றியது. இங்கிலாந்தில் 14-வது நூற்றாண்டின் துவக்கத்தில் வாசகசாலைகள் தோன்றின. ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம், பெஜவாடா, காக்கினாடா முதலிய விடங்களில் வாசக சாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. நான் ஆந்திர தேசத்தில் சென்றவிடங்களில் எல்லாம் வாசகசாலைகளைக் கண்டேன். அங்கு அவ்வியக்கத்தைப் பரப்பியதற்கு விரேசலிங்கம் பந்துலுவே காரணம்.

—சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)

(Y. M. C. A. பட்டிமன்றத்தில்)

சித்த வைத்தியம் யாவரும் புகழும்படி முன்னேற்றமடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய உண்மையான எண்ணம். அதற்கு முதலாவது, சித்த வைத்தியக் கல்லூரி வைத்து, மானாக்கர்களுக்குப் பாடம் கற்பித்து, சோதனையில் தேறியவர்களை யாவரும் ஆதரிக்கும்படிசெய்யவேண்டும். வைத்தியக் கல்லூரி இல்லாமல் ஒரு சித்த வைத்திய முறையானது சிறப்படைய மாட்டாது. ஆதலால் கல்லூரியை வைப்பதற்கு இப்பொழுதே ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.

—எம். டி. சுப்பிரமணிய முதலியார் (19-4-1927)

(மதுரையில், 3-வது தமிழ்ச்சித்த வைத்திய மாநாட்டில்)

தமிழ்நாட்டில் 4.5 கோடி மக்கள் வசிக்கிறர்கள். இதில் 1.5 கோடி பேர்களாவது எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும் தமிழகத்தில் புதிய நூல் ஏதாவது வெளியிட்டால் 2000 பிரதிகள் என்ற அளவில் தான் அச்சிடும் நிலமை உள்ளது. இந்த 2000 பிரதிகள் விலைபோக 8 ஆண்டு அல்லது 10 ஆண்டு காலமாகிறது.

—நாவலர் நெடுஞ்செழியன்

(நூலக வாரவிழாப் பேச்சு)


இந்திய சமுதாயத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கச் சிறந்த முயற்சி செய்தவர் என்று, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திர நூல்கள் எழுத விரும்புவோர் என்னைப் பற்றிக் குறிப்பிட் வேண்டும் என்பதே என் ஆசை.

—பிரதமர் இந்திரா காந்தி (4-9-1 973)


நாடகத்திலே பகத்சிங், காந்தி, மோதிலால் நேரு இவர்களைப் பற்றிய பாட்டுக்களையெல்லாம் நான் பாடுவேன். காட்சிக்கு நடுவே வரும் இடைவெளியில் நான் பாடுவேன். மதுரைக்கு காந்திஜி வந்தபோது எல்லோரும் எதை எதையோ கொடுத்தார்கள். நான் என் கைகளில் இருந்த வளையல்களைக் கழற்றிக் காந்திஜியிடம் கொடுத்தேன்.

—நடிகை எஸ். டி. சுப்புலட்சுமி (13—8–1972)


வெட்டுக்கிளிக்குப் பயந்து, விவசாயத்தை நிறுத்திவிட முடியாது. பொழுது போக்கு ஏடுகளே, இன்று ஏராளமாக விற்பனையாகின்றன என்பதற்காக, எப்போதும் பயன்தரக்கூடிய இலக்கிய ஏடுகளையோ, காயம் படாத கவிதை இதழ்களயோ நடத்தாமல் நிறுத்திவிட, முடியாது-நிறுத்தி விடவும் கூடாது.

—கவிஞர் சுரதா (1-12-1 974)

நாம் படித்தது கொஞ்சமாக இருந்தாலும் நமது சந்ததியாராவது நிறையப் படிக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி அமைச்சராக இருக்கிறேன்.

—பக்தவத்சலம் (11-12-1962)


நான், சென்ற 20-ஆண்டுக் காலமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, செளத்சீ, அயர்லாந்து, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் குஸ்தி போடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மரக்கறி உணவுகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் சாப்பிடுவதில்லை. மதுபானமாவது சுருட்டாவது குடிப்பதில்லை; திறந்த வெளியிலுள்ள சுத்தமான காற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் பஞ்சாபிலுள்ள காமா பயில்வானத் தோற்கடிக்கலாம் என்ற முழு நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். அதன் பிறகு, இந்தியாவிலுள்ள மற்ற மல்யுத்தக்காரர்களையும் போட்டிக்கழைக்கப் போகிறேன்.

—ஸ்பிஸாக் (20-1-1938)

(குஸ்தி பயில்வான்)

(பம்பாயில்)

நான் சமீபத்தில் இந்தியாவில் பிரயாணம் செய்ததிலிருந்து இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி போதிக்கச் செய்யப்படுகின்ற முயற்சிகளை மிகவும் அனுதாபத்துடன் கவனித்து வருகிறேன். இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்வந்தாலொழிய இந்தியாவின் பெருமை விளங்காதென்பதை இந்திய ஆண்கள் உணர்தல் வேண்டும். இந்தியாவில் மிகவும் உயர்ந்த நிலையிலுள்ள வகுப்பாருள்ளும் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள வகுப்பாருள்ளும் கல்வி பரவ வேண்டு மென்று விரும்புகிறேன். ஆங்கிலம் உலக மொழியாக இருப்பதால், பெண்களுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

—கார்வி (8-7-1929)

(ஈஸ்டு இந்திய சங்கத்தில் பேசியது)

பதவிக்கு, மனிதனைக் கெடுக்கும் குணம் உண்டு என்பது எனக்குக் தெரியும். பதவியினால் நான் எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.

—நேரு (12-6-1963)


எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் ஒருமுறை படித்திருக்கிறேன். ஆராய்ச்சி செய்யும் வகையில் ஊன்றிப் படிக்கவில்லை. ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டால் , அதுபற்றி முற்றிலும் தெரிந்து கொள்ளும் காலம் வரை எத்தனை மாதமானாலும் அதையே படிப்பேன். அது மாதிரியே தான் வெளிநாட்டுக்குப் போனலும் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்துகொள்ளும் வரை அங்கேயே தங்கிவிடுவேன்.

—தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன் (19-3-1973)

யோகியாருடைய வாழ்நாளில் நான் அவரைக் காண வேண்டும் என்று பலமுறை விரும்பினேன். நான் அவரைக் காண முடியவில்லை; வருந்துகிறேன். ஆனால் பத்துப் பதினைந்து ஆண்டு காலத்திற்கு முன் 'தமிழ்க் குமரி' என்னும் நூல் வெளியிடப்பட்டபோது அதன் முதல் பிரதியை நான்தான் வாங்கினேன்.

—கவிஞர் கண்ணதாசன் (1964-ல்)

நடிகர்களிடம் பணம் இருக்கிறது. அதனால் அவர்கள் பெரிய மனிதர் ஆகிவிட முடியாது. என்னிடம் கூடத்தான் பணம் இருக்கிறது. பாங்கியில் கூடப் பணம் இருக்கிறது. அதற்காக அதைப் போய்க் கும்பிடுகிரறோமா? பணத்தை நாய்கூட மதிக்காது.

—எம். ஆர். ராதா (31-8-1951)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_61-70&oldid=1009820" இலிருந்து மீள்விக்கப்பட்டது