சொன்னால் நம்பமாட்டீர்கள்/கம்பராமாயணப் பதிப்பு
சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் என்னிடம் ரொம்பப் பிரியம் உள்ளவர்கள். என்னை ஊட்டிக்குக் கூட்டிக் கொண்டு போய் சுமார் ஒரு மாதகாலம் தன் விருந்தாளியாக வைத்துக் கொண்டார். தினமும் அங்கு பல அறிஞர்கள் வருவார்கள்.
உரையாடல்கள் நடைபெறும். ஒருநாள் திரு.ஆர்.கே.எஸ், கூடியிருந்தவர்களை “தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றிருக்கிறேன். நல்ல யோசனைகள் இருந்தால் கூறலாம்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யோசனைகளைச் சொன்னார்கள். அவைகள் திரு.ஆர்.கே.எஸ். அவர்களைக் கவரவில்லை. என் முறை வந்ததும், “உன் யோசனை என்ன?” என்றார்கள்.
“இரண்டு காரியங்கள் செய்யலாம். ஒன்று கம்ப ராமாயணம். இதுவரை நல்ல முறையில் அச்சிடப்படவில்லை. அதை அண்ணாமலை சர்வ கலாசாலை மூலம் சிறந்த தமிழ் அறிஞர்கள் குழுவொன்று ஏற்படுத்தி, அச்சுப் பிழை இல்லாமல் வெளியிடலாம்.”
மற்றொன்று, நாகர்கோவிலில் இருக்கும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் உடல் நலமில்லாமலிருக்கிறார். அவர் எங்கும் பிரயாணம் செய்ய முடியாது. தமிழகம் இன்னும் அவருக்குத் தகுந்த முறையில் மரியாதை செய்யவில்லை. ஆகவே தங்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெரியோர்கள் நாகர்கோவிலுக்கே சென்று கவிமணிக்கு, மரியாதை செலுத்தலாம்” என்றேன்.
மலையிலிருந்து கீழே இறங்கியதும் முதல் வேலையாக, திரு.ஆர்.கே.எஸ். செய்தது. அண்ணாமலை சர்வகலாசாலை மூலம் திரு. வையாபுரி பிள்ளை-பி.ஸ்ரீ. முதலியோர்களைப் பதிப்பாசிரியர்களாக நியமித்து கம்பராமாயணத்தைப் பிழை இல்லாமல் எல்லோரும் படிக்கும் வண்ணம் நல்ல முறையில் அச்சிட்டதாகும். இரண்டாவது கவிமணிக்கு மரியாதை செய்ய நாகர்கோவிலுக்குப் புறப்பட்டதாகும்.
திரு. ஆர்.கே.எஸ். தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெரியோர்கள் கார்மூலம் நாகர்கோவில் நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் இவர்களை எல்லாம் நாகர் கோவிலில் வரவேற்றோம்.
கவிமணிக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். “போற்றி போற்றி” என்று தமிழறிஞர்கள் வாழ்த்தினார்கள்.
அந்தக் கூட்டத்தில் திரு. ஆர்.கே.எஸ். கம்பராமாயணம் புதிய பதிப்பின் முதல் பிரதியை கையில் வைத்துக்கொண்டு, “இந்த அரிய பொக்கிஷத்தைப் பதிப்பிக்கும்படி என்னைத் தூண்டி, கவிமணிக்குச் சிறப்புச் செய்யும் யோசனையையும் சொல்லி இந்த விழாவிற்கு மூலகாரணமான திரு. சின்ன அண்ணாமலைக்கு இந்த நூலை அளிக்கிறேன்” என்று கூறி மேற்படி கம்பராமாயணம் பிரதியை என்னிடம் அளித்தார்.
அதில் திரு. ஆர்.கே.எஸ். திரு. வையாபுரி பிள்ளை, திரு.பி.ஸ்ரீ. முதலியவர்களின் கையெழுத்துகள் முத்து முத்தாக இருக்கின்றன. அதை அரிய பொக்கிஷமாகக் காப்பாற்றி வருகிறேன்.