சொன்னால் நம்பமாட்டீர்கள்/காவிநிறச் சட்டை
“நீங்கள் ஏன் எப்பொழுதும் காவிகலர் சட்டையை அணிகிறீர்கள்? என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அது சம்பந்தமாக ஒரு சம்பவம் உண்டு.
நான் 1935-36ல் கோபி செட்டிபாளையத்தில் டைமன் ஜூபிலி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் கோபியில் நடைபெற்ற ஓர் அரசியல் மாநாட்டிற்காகத் தலைவர் சத்யமூர்த்தி அவர்கள் வந்திருந்தார். அவரை நான் படித்துக் கொண்டிருந்த டைமண்ட் ஜூபிலி உயர்நிலைப் பள்ளிக்குப் பேச அழைத்தோம். நான் மாணவர் சங்கக்காரியதரிசி, எனக்கு வயது 15 இருக்கும். நல்ல சில்க் சட்டையும், ஜரிகை வேஷ்டியும் கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குப் போவேன். அன்றும் அப்படித்தான் போயிருந்தேன்.
திரு. சத்யமூர்த்தி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசி எங்களை வியப்பில் ஆழ்த்தினார். நான் தமிழில் நன்றி கூறும்போது “தமிழர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை. அதனால்தான் நான் தமிழில் நன்றி கூறுகிறேன்.” என்று சொன்னேன்.
உடனே சத்யமூர்த்தி என் மொழிப்பற்றைப் பாராட்டி, “அது சரி நீ தாய் மொழிப் பற்றுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தாய்நாட்டுப் பற்று வேண்டாமா?” என்றார். “அதுவும் வேண்டியதுதான்” என்றேன். அப்படியானால் இன்றிலிருந்து நீ கதர் கட்ட வேண்டும்” என்றார். “சரி கட்டுகிறேன்” என்றேன். இன்று மாலையில் நடக்கும் அரசியல் மாநாட்டுக்கு வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.
நான் அன்று மாலையில் நடந்த அரசியல் மாநாட்டுக்குச் சென்றேன். திரு. சத்யமூர்த்தி என்னைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
என்னையும் மாநாட்டில் பேசுவோர் பட்டியலில் சேர்த்திருந்தார் திரு. சத்யமூர்த்தி. மாநாட்டில் என் பேச்சு ரொம்ப நன்றாக அமைந்தது. தலைவர் சத்யமூர்த்தி எழுந்து என்னை மனதாரப் பாராட்டி என் நாவன்மையைப் புகழ்ந்தார்.
அவர் பேசிய தமிழ்-தோரணை-உச்சரிப்பு-விஷய அழுத்தம்- கணீர் என்ற குரல்-இவையனைத்தும் என்னை மெய்மறக்கச்செய்தன. தன் பேச்சு முடிவில் தலைவர் சத்யமூர்த்தி அவர்கள் என்னை நோக்கி, “இன்று முதல் நீ கதரே கட்ட வேண்டும். காங்கிரஸ் உறுப்பினராக வேண்டும். உன் சேவை நம்நாட்டுக்கு ரொம்பத் தேவை” என்று கூறி தான் அணிந்திருந்த காவி கலர் அங்கவஸ்திரம் ஒன்றைச்சபையின் கரகோஷத்துடன் எனக்குப் போர்த்தினார்.
என் உடம்பில் முதலில் பட்ட கதர் துணி காவிக்கலர் துணியே. அதுவும் சத்யமூர்த்தி அவர்களால் அணிவிக்கப் பட்டதாகும். அந்தப் பெரும் பாக்யத்தை நான் என்றும் மறக்கமாட்டேன். அந்தநினைவாகவே நான் என்றும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிகிறேன்.