சொன்னால் நம்பமாட்டீர்கள்/திராவிட இயக்க எதிர்ப்பு

விக்கிமூலம் இலிருந்து
திராவிட இயக்க எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களையும் காங்கரஸ் கட்சியையும் கேவலப்படுத்தும் திராவிடக்கழகத்தாரை எதிர்த்து போர் தொடுக்கும் வேலையை ஆரம்பித்தேன்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களும் நானும் இன்னும் சில நண்பர்களும் ஆலோசனை செய்து ஒரு மாபெரும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்துவது என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசீய தொண்டர்கள் அனைவரையும் திரட்டுவது என்றும் முடிவு செய்தோம்.

சென்னையில் இப்போது சத்தியமூர்த்திபவன் இருக்கும் இடம் அப்போது கட்டிடம் இல்லாமல் வெறும் காலி இடமாக இருந்தது. அந்த இடத்தில் மாபெரும் பந்தல் போடப்பட்டது. பந்தலுக்கு ‘கண்ணகி பந்தல்’ என்று பெயரிடப்பட்டது. முதல் நாள் ‘சிலப்பதிகார மாநாடு’ என்றும் மறுநாள் ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு’ என்றும் நடத்தப்பட்டது. -

சிலப்பதிகார மாநாட்டிற்குப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமை வகித்தார். மு. வரதராசனார் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டிற்கு திரு.ம.பொ.சி. தலைமை வகித்தார்.

இரண்டு நாள் மாநாட்டிலும், பூரா நாளும் இருந்து தலைவர் காமராஜ் ஆதரவு கொடுத்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமும் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்த தேசீயத் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு மாநாடு தைரியத்தையும் ஆவேசத்தையும் கொடுத்தது. அதன்பிறகு காங்கிரஸ் கூட்டங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தது. காங்கிரசிற்குப் புதிய பலம் ஏற்பட்டது. பல இடங்களில் தலைவர் ம.பொ.சியும் நானும் தாக்கப்பட்டோம். எங்கள் கூட்டங்களில் புகுந்து திராவிடக் கழகத்தினர் கலாட்டா செய்து பார்த்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் சளைக்க வில்லை.

அவர்களும் பதிலடி கொடுத்தார்கள். பட்டுக்கோட்டையில் நானும் திரு.ம.பொ.சி. அவர்களும் பேசிவிட்டுத் திரும்பும்போது இரவு 12 மணி அளவில் ஒரு வெறி பிடித்த கூட்டம் ஊருக்கு வெளியே மறைந்து நின்று எங்களைக் கொல்லக்காத் திருந்தார்கள்.

நாங்கள் வந்த காரை அடித்து நொறுக்கினார்கள். டிரைவர் ரொம்ப தைரியசாலி, காமராஜ் தேர்ந்தெடுத்துக் கொடுத்த டிரைவர் ஏழுமலையல்லவா? அதனால் அடி உதை, வெட்டு, குத்து, இவைகளுக்கு மத்தியில் எங்களைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி தலைவர் ம.பொ.சி.அவர்களும் நானும் எவ்வளவோ தமிழகத்திற்குச் செய்து வந்திருக்கிறோம்-இன்னும் செய்து கொண்ருக்கிறோம்.

தலைவர் ம.பொ.சி.அவர்களைப் பற்றி நான் தனியாக ஒரு நூல் எழுதினால்தான் என்மனதில் இருக்கும் அனைத்தையும் நான் கூற முடியும். ஆனால் சுருக்கமாக ஒரு விஷயத்தை நான் சொல்லவேண்டும். நான் பழகிய வரையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் சிறந்த காந்தீயவாதி-மற்ற எல்லாவற்றையும் விட ஒழுக்க சீலர். -

நான் ராஜாஜி அவர்களுடனும் ம.பொ.சி. அவர்களுடனும் மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன். பலநாட்கள்தொடர்ந்து கூடவே இருந்திருக்கிறேன். நான் அறிந்த வரை தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களில் ராஜாஜியும், ம.பொ.சியும் தெய்வீகப் பிறவிகள் !