சொன்னால் நம்பமாட்டீர்கள்/தொல்காப்பிய மாநாடு

விக்கிமூலம் இலிருந்து

தொல்காப்பிய மாநாடு

மேடையில் நன்றாகப் பேசத் தெரிந்தவர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சமயம் ஒரு வேடிக்கையான அனுபவம் ஏற்பட்டது. கோயமுத்தூர் நகரத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்களைப் பாராட்டி நிதி அளிப்பதற்காக ஒரு விழா நடத்த வேண்டுமென்று திரு.ஜி.ஆர். கோவிந்தராஜுலு நாயுடு அவர்களும் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களும் என்னை கோவையில் சில காலம் தங்கும்படி செய்தார்கள்.

விழா சம்பந்தமான வேலைகளில் நான் ஈடுபட்டிருந்தேன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் கோவையிலும், சுற்றுப் புறங்களிலும் அரசியல்-இலக்கியச்சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

இச்சமயத்தில் கோவை கல்லூரி ஒன்றில் ‘தொல்காப்பிய மாநாடு’ ஒன்று நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாட்டை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் துவக்கி வைக்க ஒப்புக்கொண்டார்கள்.

மேற்படி மாநாட்டன்று நாமக்கல் கவிஞர் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபடியால் நாமக்கல்லிலிருந்து கோவைக்கு அவரால் வர இயலவில்லை.

அதனால் ஒரு ‘வாழ்த்துக் கவிதை எழுதி, என்னை மாநாட்டுச் செயலாளரிடம் கொடுக்கும்படி எழுதியிருந்தார். அதன்படி கொடுக்க நான் மாநாட்டுக்குச் சென்றேன். செயலாளர் என்னை மிக்க அன்புடன் வரவேற்று முதல் வரிசையில் உட்கார வைத்தார்.

சிறிது நேரத்தில் மாநாட்டுச் செயலாளரும் வேறு சிலரும் என்னிடம் வந்து, “நாமக்கல் கவிஞர் வர இயலாததினால் மாநாட்டை தாங்கள் துவக்கி வைக்க வேண்டும்” என்று கேட்டார்கள்.

நான் சொன்னேன், “உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் தொல்காப்பியத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் வேறு யாராவது விஷயம் தெரிந்தவர்களைத் துவக்கி வைக்கச் சொல்லுங்கள்“

எனது பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

உங்களுக்குத் தெரியாத விஷயம் உலகில் உண்டா? அடக்கம் காரணமாக தாங்கள் மறுக்க வேண்டாம். தாங்கள்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள்.

உண்மையிலேயே தொல்காப்பியம் என்ற பெயர் தெரியுமே ஒழிய அதன் உள்விவரங்கள் எனக்கொன்றும் தெரியாது. ஆயினும் நான் எல்லாம் தெரிந்தவன் என்று நினைப்பவர்கள் மத்தியில் வேறு என்ன செய்ய முடியும்?

தொல்காப்பிய மாநாட்டை துவக்கி வைக்க எழுந்தேன். மாலை, மரியாதை வரவேற்பு பாராட்டு புகழுரை இவைகள் முடிந்ததும் பேசலானேன்.

“தொல்காப்பியம் மிகச்சிறந்த நூல்“

“தமிழுக்கு இதுவே முதல் நூல் ஆகும் இதைப் போன்ற நூல் வேறு எந்த மொழியிலும் கிடையாது.”

இந்த மாதிரி பொதுப்படையாகவே பேசிக் கொண்டு போனேன். நான் மேலே கூறியவைகளை யார் மறுக்க முடியும், இதற்கு மேல் தொல்காப்பியத்தைப் பற்றி ஓங்கி ஒரு அடி அடித்தேன். அதாவது ‘தொல்காப்பியத்தில் 11 சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன.’

இதை நான் சொன்னதும் சபை அசந்து விட்டது. “ஆகா, என்ன ஆராய்ச்சி” என்ன ஆராய்ச்சி, என்று பலர் வியந்தனர்.

இப்படியாக என் துவக்க உரை முடிந்தது.

அதன் பிறகு பேசிய ஒவ்வொருவரும் என்னைப் பார்த்து ‘தமிழ்க்கடலே’ என்றும் ‘ஆராய்ச்சி அருவி’ என்றும் ‘புலவர் சிகாமணி’ என்றும் புகழ்ந்துரைத்தனர். ஒரு புலவர் பேசும்போது, துவக்க உரை நிகழ்த்திய தமிழ்ப் பெருந்தகையாளர் தொல்காப்பியத்தில் 11 சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதாகக் கூறினார்கள்.

நான் ஆராய்ந்த வரையில் 7 வார்த்தைகள்தான் இருக்கின்றன.பாக்கி நான்கு வார்த்தைகள் என்ன என்பதை அறிய மிக ஆவலாக உள்ளேன் என்று போட்டார் ஒரு போடு.

எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. ஆகா வசமாக மாட்டிக் கொண்டோம். இதிலிருந்து எப்படித் தப்புவது? என்று நான் விழித்துக் கொண்டிருக்கையில் வேறு ஒரு புலவர் மேடைமீது பேச வந்தவர், “நான் ஆராய்ச்சி செய்தவரையில் தொல்காப்பியத்தில் 14 சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன” என்று என் காதில் தேன் வந்து பாய்வதுபோல் சொன்னார்.

“அப்பா தப்பித்தோம் ஒரு புலவர் ஆராயச்சியில் 7 சமஸ்கிருத வார்த்தைகளும், மற்றொரு புலவர் ஆராய்ச்சியில் 14 வார்த்தைகளும் தொல்காப்பியத்தில் இருக்கின்றன.

என்னுடைய ஆராய்ச்சியில் சொன்ன 11 வார்த்தைகளும் அதனுள் அடக்கம்தானே “என்று நிம்மதியடைந்தேன். 7 வார்த்தை புலவர், பாக்கி 4 வார்த்தைகள் என்ன வென்று என்னிடம் கேட்டால் 14 வார்த்தை புலவரிடம் அனுப்ப வேண்டியதுதானே?

மாநாடு முடிந்ததும் பலர் என் தொல்காப்பியச் சொற்பொழிவு பிரமாதம் என்றும் அபாரம் என்றும் புகழ்ந்தார்கள்.

நடந்த நிகழ்ச்சிகளை சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களிடம் கூறினேன். அவர்கள் ‘ஓகோ’ வென்று சிரித்துவிட்டு, சொற்பொழிவில் நீ கடைப்பிடிக்கும் முறைதான் நம் மக்களுக்குச் சுலபமானது.

உபதேசம் செய்வது எளிது. சிறிது நேரம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதுதான் பெரிய சாதனை. இதை நீ சுலபமாகச் செய்கிறாய், என்றைக்கும் இதே வழியைக் கடைப்பிடி என்று உபதேசம் செய்தார். அவருடைய அறிவுரைப்படி இன்றும் நான் மக்களைச் சிரிக்க வைப்பதே என் சொற்பொழிவின் லட்சியமாக வைத்திருக்கிறேன்.