சொன்னால் நம்பமாட்டீர்கள்/நானும் எழுத்தாளனானேன்

விக்கிமூலம் இலிருந்து

நானும் எழுத்தாளனானேன்!

நான் எழுத்தாளனானதற்கு ஒரு பால்காரப் பையன்தான் காரணமாவான். அவன் பெயர் கருப்பையா.

1942ஆகஸ்ட் போராட்டத்தின்போது நான் தேவகோட்டை போலீஸ் சிறையில் சில நாட்கள் தனிமைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தேன்.

போலீஸ் சிறையில் (லாக்-அப்) 24 மணி நேரத்திற்குமேல் சட்டப்படி வைக்கக்கூடாது. ஆனால் சட்ட விரோதமாகப் போலீசார் ஏதோ காரணமாக என்னை வைத்திருந்தார்கள். அதனால் என் சாப்பாடு துணிமணி முதலியவற்றிற்கு சட்டப்படி போலீசார் செலவு செய்ய முடியாதாகையால் எனக்கு வீட்டிலிருந்து சாப்பாடு துணிமணி கொண்டுவர அனுமதியளித்திருந்தனர்.

அப்படித் தினமும் எனக்குச் சாப்பாடு கொண்டு வந்தவன்தான் பால்கார கருப்பையா!

இளைஞன், 15 வயதிருக்கும். நல்ல கருப்பு. சுருள் சுருளான தலைமுடி எப்போதும் சிரித்த முகமாக இருப்பான்.

எனக்கும் அப்போது வயது 22. நல்ல வாலிப முறுக்கு.

ஒருநாள் சாப்பாடு கொண்டு வந்தபோது கருப்பையா ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினான்.

என்னவென்று கேட்டேன். “ஒரு பொண்ணு ஆசையா லெட்டர் கொடுத்திருக்கு” என்றான்.

“எனக்கா? யாரது?” என்று கேட்டேன்.

“மெய்யம்மை என்று பெயர். ஒங்கமேலே ரொம்ப ஆசையா இருக்குது. வயது 17 இருக்கும் பொண்ணு ரொம்ப சிவப்பு” என்று சொன்னான்.

“அப்படியா” என்று சொல்லி கடிதத்தை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன்.

மெய்யம்மையின் கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்தது. அவள் கடிதம் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தாள்.

என் உள்ளம் கவர்ந்த அன்பருக்கு எழுதியது. என்னை நீங்கள் பார்த்திருக்க முடியாது. நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். கண் குளிரப் பார்த்திருக்கிறேன்.

தங்கள் பேச்சைக் கேட்டு மயங்கியிருக்கிறேன். தாங்கள் சிறையில் தவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நானும் சிறைக்கு வரவேண்டுமென்று துடிக்கிறேன்.

நான் பெண் ஜென்மம். என் இஷ்டப்படி செல்ல பெற்றோர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்.

எப்போதும் உங்கள் ஏக்கமாகவே இருக்கிறேன். தாங்கள் விடுதலையாகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்போது தானே உங்களைக் கட்டி அணைக்க முடியும். கடவுளை வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். மறக்காமல் பதில் எழுதி கருப்பையாவிடம் கொடுத்தனுப்பவும். கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள்,

மெய்யம்மை

இக்கடிதத்தைப் படித்ததும் புளகாங்கிதமடைந்தேன். பின்னர் மெய்யம்மையைப் பற்றி கருப்பையாவிடம் பல குறுக்கு விசாரணைகள் செய்தேன். அவளைப் பற்றி அவன் சொல்ல சொல்ல, அவளை உடனே பார்க்க வேண்டும்போல் தோன்றியது.

சிறை தடையாக இருந்தது. போலீஸ் காவல்வேறு குறுக்கே நின்றது.

அவள் கடிதத்திற்குப் பதில் எழுத பேப்பர், பேனா எல்லாம் கருப்பையா கொண்டு வந்திருந்தான். அவைகளை வாங்கிக் கொண்டு, அவனை மாலையில் வந்து கடிதத்தை வாங்கிக்கொண்டு போகும்படி சொன்னேன். கருப்பையா போய்விட்டான்.

பலவாறு யோசனை செய்து காதல் கடிதம் எழுதலானேன். கருத்துக்கள் கும்மாளி போட்டுக் கொண்டு வந்தன. பத்து பக்கத்திற்கு மேல் எழுதி விட்டேன். படித்துப் பார்த்தால் எனக்கே அதிசயமாக இருந்தது. இப்படியும் நம்மால் எழுத முடியுமா? என்று ஆச்சரியப்பட்டேன்!

காதல் வாசகங்கள் கொப்பளித்து நின்றன. வருணனைகள் அணிவகுத்து வரிசையாக நின்றன. கடிதம் பூராவும் ஒரே முத்தமாரி பொழிந்திருந்தது. கடிதத்தைப் படித்தால் கண்டிப்பாக உள்ளக் கிளர்ச்சி ஏற்பட்டே தீரும். அவ்வளவு போதை ஊட்டும் வார்த்தைகள் பொங்கிவழிந்தன. ஒருவாறு கடிதத்தை முடித்தேன். கருப்பையா வந்தான். கடிதம் பெற்றுக்கொண்டான். பதில் கடிதம் வந்தது. பரவசமாக இருந்தது. அதற்குப் பதில் எழுத முனைந்து எழுதித் தள்ளினேன்.

வரிசையாக அவள் கடிதம் வந்தது. பதில் கடிதமும் பறந்தது. கருப்பையா மூலம்தான் கடிதப் பரிமாறல்!

கடிதத்தின் மூலம் ரொம்ப அன்யோன்யமாகி விட்டோம். “ஓயிர் ஈருடல் என்றெல்லாம் பிணைந்துவிட்டோம். தீபாவளி வந்ததும். கருப்பையா மூலம் ஒரு பட்டுப் புடவை பரிசளித்தேன். பின்னர் அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கைக் கடிகாரம் வாங்க ரூபாய் முன்னூறு அனுப்பி வைத்தேன். அதற்காக அவள் முன்னூறு முத்தங்களை கடிதம் மூலம் அனுப்பி வைத்தாள்.

பின்னர் தங்க வளையல் வேண்டுமென்றாள் அதற்கு இருநூறு ரூபாய் அனுப்பி வைத்தேன்.

இப்படியாகக் கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது.

பின்னர் நான் மதுரையில் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையாகி வெளியே வந்து கருப்பையாவை விசாரித்தேன்.

பால்கார கருப்பையா ஏதோ திருட்டுக் கேசில் பிடிபட்டு ஜெயிலுக்குப் போய்விட்டான் என்று தெரிந்தது.

ஒருநாள் தேவகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்க்கப் போனேன்.

சப்-இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்ததும், வாங்க வாங்க, “உங்கள் காதல் கடிதங்கள் வெகு ஜோர்” என்றார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“எந்த காதல் கடிதம்?” என்றேன்.

“நீங்கள் மெய்யம்மைக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான்” என்றார்.

“அதெப்படி உங்களிடம் கிடைத்தது?” என்றேன்,

“பால்கார கருப்பையா திருட்டுக் கேசில் அகப்பட்டுக் கொண்டான். அவன் வீட்டில் சோதனை போட்டபோது நீங்கள் எழுதிய காதல் கடிதங்கள் கிடைத்தன. இதைப்பற்றி கருப்பையாவிடம் விசாரித்தபோது உங்களிடம் பொய் நாடகம் ஆடி, மெய்யம்மை என்ற பெண் எழுதுவதுபோல உங்களுக்கு கடிதம் எழுதி ஏமாற்றியிருக்கிறான்” மட்டைக்கு இரண்டு கீற்று என்று சப்-இன்ஸ்பெக்டர் புட்டுப்புட்டு வைத்தார்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன செய்வது? ஏமாந்தது ஏமாந்ததுதானே?

ஆனால் சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்.” சார், நீங்கள் பெரிய எழுத்தாளர். காதல் கடிதங்கள் எழுதுவதில் மன்னன்.”

ஏமாந்த வேதனையுடன் எழுந்தேன். நாமும் ஒரு எழுத்தாளரானோம் என்ற திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன். பேராசிரியர் கல்கியுடன்
சின்ன அண்ணாமலை

ஸ்ரீ சின்ன அண்ணாமலை

மணிக்கணக்கல பிரசங்க மாரி

பொழியக் கூடியவர்.

ஆவேசமாகப் பேசுவார்.

அழவைக்கும்படி பேசுவார்.

சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார்.

பேசும் ஆற்றலைப் போல்

எழுதும் ஆற்றல் படைத்தவர்.

பேராசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி