சொன்னால் நம்பமாட்டீர்கள்/பதவிக்குரிய தகுதி

விக்கிமூலம் இலிருந்து
பதவிக்குரிய தகுதி

சென்னை சட்டசபைக்குச் சபாநாயகர் தேர்தல் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால் ராஜாஜியிடம் திரு. சிவ சண்முகம் பிள்ளை வந்திருந்தார். வந்தவர் ராஜாஜியைப்பார்த்து, தாம் சபாநாயகர் தேர்தலுக்கு நிற்கப் போவதாகவும் தம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு ராஜாஜி, “அந்தப் பதவிக்கு இன்னும் யார் போட்டி போடுகிறார்கள்?” என்று கேட்டார். தென்னேட்டி விஸ்வநாதன் போட்டி போடுவதாக சிவசண்முகம் பதிலளித்தார்.

உடனே ராஜாஜி “விஸ்வநாதனைக் காட்டிலும் தாங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்குத் தகுதி?” என்று சிவசண்முகம் பிள்ளையைப் பார்த்து வெகு அமைதியுடன் கேட்டார்.

மேற்படி கேள்வியானது அருகிலிருந்த என்னை ஒரு உலுக்கு உலுக்கியது. நான் நிதானம் அடைவதற்கு முன் திரு.சிவசண்முகம், ராஜாஜியின் கேள்விக்குப் பளிச்சென்று பதில் கூறினார்.

நான் சென்னை நகரசபையின் மேயராக இருந்து சபை நடத்தி அனுபவம் பெற்றிருக்கிறேன். திரு. விஸ்வநாதனுக்கு அத்தகைய அனுபவம் கிடையாது. ஆகையால் நான் அவரைவிட தகுதியுடையவன்’ என்று கூறினார்.

‘பேஷ்! அப்படியானால் சரி, தாங்கள் நிற்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்று ஆசீர்வதித்து அனுப்பினார் ராஜாஜி.

திரு. சிவசண்முகம்பிள்ளை ராஜாஜியிடம் விடைபெற்றுக் கொண்டு போன பிறகு, ராஜாஜி என்னைப் பார்த்து “பார்த்தீர்களா? சிவசண்முகம்பிள்ளை “நான் ஒரு ஹரிஜன், ஆகையால் சபாநாயகர் பதவியை எனக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பலவீனமான பதிலைச் சொல்லாமல், ‘எனக்குச் சபை நடத்திய அனுபவமிருக்கிறது.

ஆகையால் நான் அதிகத் தகுதியுடையவன்’ என்று கூறினார். சரியான பதிலைச் சொல்லுகிறாரா என்று பார்ப்பதற்காகவே மேற்படிக் கேள்வியைக் கேட்டேன்.

ஹரிஜன் வகுப்பைச் சேர்ந்தவர்களானாலும் சரி, வேறு யாராகயிருந்தாலும் சரி. இப்படித்தான் தங்கள் தகுதியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்;

திரு. சிவ சண்முகம்பிள்ளை உண்மையான ஹரிஜனத் தலைவர்; சட்டசபையையும் நன்றாய் நடத்துவார்,” என்று சொன்னார். அவர் சொல்லியபடியே திரு. சிவசண்முகம் சிறந்த சபாநாயகராக விளங்கிப் புகழ் பெற்றார்.