சொன்னால் நம்பமாட்டீர்கள்/பனகல்பார்க் காய்கறி அங்காடி

விக்கிமூலம் இலிருந்து

பனகல்பார்க் காய்கறி அங்காடி

சென்னை தியாகராய நகர், பனகல் பார்க் அருகில்தான் தமிழ்ப் பண்ணை, அதன் எதிர் பிளாட்பாரத்தில் சிலர் காய்கறி விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் திடீரென்று ஒருபோலீஸ் லாரி நிறைய போலீசார் வந்து காய்கறி விற்றவர்களை அடித்துக் காய்கறிகளைத் தெருவில் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். நான் ஓடிப் போய் போலீசாரின் செய்கையை எதிர்த்தேன், மக்கள் என் பக்கம் சேர்ந்ததும் சார்ஜண்ட் என்னைக் கைது செய்வதாகச் சொல்லி லாரியில் ஏற்றிக் கொண்டு போனார்.

ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்வதாகச் சொன்னார். “நான் விடுதலையாக முடியாது. வாருங்கள் கமிஷனரிடம் போவோம், இல்லையென்றால் முதலமைச்சர் காமராஜரிடம் போவோம்,” என்று சென்னேன். பின்னர் சார்ஜண்ட் என்னை முதல் அமைச்சர் வீட்டில் கொண்டு வந்துவிட்டார்.

காமராசர் அப்போதுதான் வெளியில் புறப்படும் தறுவாயிலிருந்தார். என்னைக் கண்டதும். “என்ன சங்கதி?” என்றார்.

காய்கறி விற்கும் ஏழைகளுக்கு ஏற்பட்ட கதியைச் சொன்னேன்.

“அப்படியா, பின்னே ஏறுங்க காரிலே, அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்,” என்று கூறிப் புறப்பட்டார். குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் விவரம் பூராவும் சொல்லி, இந்த ஏழைகள் மானமாகப் பிழைக்க ஏதாவது வழி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அங்கே நின்ற ஏழை எளியவர்களையும் தெருவில் கிடக்கும் காய்கறிகளையும் பார்த்துவிட்டு “இதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“என்மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டல்லவா?” என்றேன்.

“நிச்சயமாக” என்றார்.

“அப்படியானால் நான் சொல்லும் இடத்தில் மார்க்கெட் வைக்க உத்தரவிடுங்கள், இந்த ஏழைகளை வாழ வைக்கலாம்” என்றேன்.

அப்போது அங்கு வந்தசேர்ந்த போலீஸ் கமிஷனரை காமராஜர் கூப்பிட்டு, “இவருடன் கலந்து மார்க்கெட் வைக்க ஏற்பாடு செய்யுங்கள், ஏழைகள் பிழைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

காமராஜ் அவர்களின் உத்தரவுப்படி போலீஸ் கமிஷனர் அவர்களும் நகரசபை கமிஷனர் அவர்களும் நானும் கலந்து பேசி பனகல் பார்க்கை ஒட்டிய உஸ்மான் ரோடு பிளாட்பாரத்தில் வரிசைக் கிரமமாக எண் கொடுத்து ஒவ்வொரு வியாபாரிக்கும் இடம் ஒதுக்கி மார்க்கெட் நடத்தச் சட்டப்பூர்வமாகச் செய்தோம்.

பின்னர் அதே மார்க்கட் இடத்தை மாநகராட்சி ஏலத்திற்கு விட்டு அதில் நல்ல வருமானமும் தேடிக் கொண்டது.

அதன் பிறகு திரு.பக்தவத்சலம் முதல்வராக வந்ததும் பார்க்குக்குள் சிறிது தள்ளி நல்ல கட்டிடமாகக் கட்ட அரசாங்கம் அனுமதியளிக்கும்படி செய்தேன்.

பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டச்செய்து கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு அப்போதைய முதல்வராக இருந்த திரு. மு. கருணாநிதி அவர்களால் பனகல் பார்க் மார்க்கட் திறந்து வைக்கப்பட்டது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றும் நான் மார்க்கட்டுக்குள் போனால் அங்குள்ள நன்றியுள்ளம் படைத்த வியாபாரிகள்-பெண்கள்-குழந்தைகள் உட்பட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்துகிறார்கள்.