சொன்னால் நம்பமாட்டீர்கள்/முதல் சொற்பொழிவு
தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது வகுப்பு மாணவர்கள் கூட்டம் ஒவ்வொரு வாரக் கடைசியில் நடக்கும். வாரத்திற்குச் சில மாணவர்கள் வீதம் பகிர்ந்துகொண்டு குறிப்பிடப்பட்ட விசயத்தைப்பற்றிச் சுருக்கமாகத் தமிழில் பேசவேண்டும். கட்டாயமாக எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு வாரத்தில் பேச வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கும் ஒரு வாரம் வந்தது.
எப்போதும் பேசவேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு வாரம் முன்பே ஆசிரியர் அறிவித்து விடுவார்.
நான் பேச வேண்டிய அந்த வாரத்தின் பொருள் ‘செல்வம்’ என்பதாகும். என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. இதற்கு முன் நான் எந்தக் கூட்டத்திலும் பேசியதுமில்லை. ஒரே குழப்பமாக இருந்த நேரத்தில் எங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரிலிருந்த ‘ஹரிஜன ரெங்கண்ணா’ அவர்களின் இல்லத்திற்கு எப்போதும் போல் சென்றேன்.
திரு ரெங்கண்ணா அவர்கள் அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஹரிஜன சேவை செய்து வந்ததனால் “ஹரிஜன ரெங்கண்ணா” என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.
அவர் என்னிடம் ரொம்ப அன்பு கொண்டவர். சிறு வயதிலே நான்'காந்தி’ ‘காங்கிரஸ்’ என்று பேசுவதைக் கேட்பதில் அவருக்கு மெத்தமகிழ்ச்சி. ஆகவே அடிக்கடி நான் அவர் இல்லத்திற்குச் செல்வேன்.
அன்று நான் சென்றபோது அவர் மேஜைமீது ஆனந்தவிகடன் பத்திரிகை இருந்தது. அதன் மேலட்டை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. படங்கள் நிறைய இருந்தன. உள்ளே பிரித்துப் படித்தேன். வேடிக்கை வேடிக்கையாக துணுக்குகளும் கதைகளும் இருந்தன.
அதில் கொட்டை எழுத்தில் முதலில் இரண்டு பக்கம், “பொருளாதாரம், பணம், செல்வம் என்றெல்லாம் விவரித்து எழுதி சின்னஞ் சிறுகதை மூலமும், துணுக்குகள் மூலமும் விளக்கப்பட்டிருந்தன. சிறுவனாகிய எனக்கே மிகத் தெளிவாக விளங்கியது நான் பேச வேண்டிய விஷயமும் அதுதான். அதனால் நான் பரபரப்படைந்திருந்தேன்.
வழக்கம் போல ஹரிஜன ரெங்கண்ணா வெளியே வந்தார். நான் வணக்கம் செலுத்திவிட்டு, சார் இது...” என்று இழுத்தேன். வேண்டுமா எடுத்துக் கொண்டு போ, ‘கல்கி’ ன்னு ஒருத்தன் இதிலே அருமையா எழுதுகிறான். அவன் எழுதுறதை விடாம படி சமத்தாயிடுவே” என்று சொன்னார்.
ஒரே ஓட்டம். ‘ஆனந்த விகடன்’ இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் படித்து நன்றாக மனப்பாடம் செய்து கொண்டேன்.
அந்த வாரம் மாணவர் கூட்டம் ஆரம்பமாயிற்று உள்ளுர் வக்கீல் திரு. ராமசாமி அய்யங்கார், அவர்கள் தலைமை வகித்தார். அவர் செல்வம் என்பது பற்றிச் சிறிது நேரம் பேசினார். வேறு சில மாணவர்களும் பேசினார்கள். கடைசியாக என் முறை வந்தது.
மேடையில் வந்துநின்றேன். கைகால் உதற, கண்கள் சுழல, நாக்கு குளறியது. ஆயினும் எப்படியோ சமாளித்து, நான் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆனந்தவிகடன் தலையங்கத்தைப் பேச ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் கை தட்டுதலும், சிரிப்பொலிகளும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.
பின்னர் வெகுநிதானமாகவும், குழப்பமில்லாமலும் பேசி முடித்தேன். எல்லோரும் அசந்து போனார்கள். செல்வத்தைப் பற்றி இவ்வளவு அழகாக ஒரு சிறுவனால் எப்படிப் பேச முடிந்தது என்று ஆசிரியர்களும் தலைமை வகித்தவரும் வியப்படைந்தார்கள். தலைமை வகித்த வக்கீல் திரு. ராமசாமி அய்யங்கார் அவர்கள், என்னைத் திருஞான சம்பந்தருக்கு ஒப்பிட்டுப் பேசிப் பாராட்டினார்.
விஷயம் மனப்பாடம் என்பது அவருக்குத் தெரியாதல்லாவா? அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடனை வாங்கி ஒன்று விடாமல் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். பல தலையங்கங்களை மனப்பாடம் செய்துகொண்டேன்.
பின்னர் கேட்பானேன்! சங்கங்கள், வாசகசாலைகள், பொதுக்கூட்டங்கள் என்று சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தேன். குரல் மட்டும் என்னுடையதுதான். விஷயம் அனைத்தும் கல்கி எழுதியதாகத்தான் இருக்கும்.