ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு/I. தேச சரித்திரம்
அத்தியாயம் 1
தேச சரித்திரம்
வட ஆற்காடு ஜில்லா திராவிட தேசமென்று வழ்ங்கிய தேசத்தின் ஒரு பாகம். முதல் முதல் எப்பொழுது எந்த ஜனங்கள் இதில் வந்து குடியேறினார்கள் என்ற விஷயம் தெரிய வில்லை. இதன் புராதனக்குடிகள் அடர்ந்த காடுகளில் நாகரீகமின்றி வாழ்ந்து வந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அவர்களுக்கு மலைசார்க ளென்றும், இன்னும் பலவிதமான பெயர்களும் ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் சிலவேளைகளில் நிர்வாணமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் யாதொரு மதத்திற்கும் சேராமலும், யாதொரு அரசனது ஆக்ஷியின்கீழ் ஏற்படாமலும், கலியாண சம்பிரதாயம் யாதுமே இல்லாமலும் வேடர்களா யிருந்திருக்கிறார்கள். இந்த ஜில்லாவின் புராதனக் குடிகளைச் சேர்ந்தவர்கள் தான் இப்பொழுதும் காட்டில் வசித்துக் கொண்டு காட்டு விளைபொருள்களைக் கொடுத்து நாட்டுப் பொருள்களை அவைகளுக்காக மாற்றிக் கொண்டு போக வழக்கப்பட்டுள்ள ஏனாதிகள், இருளர்கள் என்ற ஜாதியார்கள் எனக் கூறுகிறார்கள்.
இந்தத் திராவிடம் என்ற பெயருடன் கூடிய பிராந்தியம் மிகச் செழுமையான பூமி என்ற காரணம் பற்றிச் சீக்கிரத்தில் அனேகர் வந்து குடியேறத் தலைப்பட்டார்கள். அவர்கள் முதலில் சமுத்திரக்கரை ஓரங்களிலும், பெரிய நதிகளுக்கருகிலும் தங்கினார்கள். அப்படித் தங்கினவர்களுள் முதல் முக்கியமானவர்கள் குரும்பர்கள். இவர்கள் மூர்க்க ஸ்வபாவம் வாய்ந்த ஜாதியார்கள். அவர்களது கொடிய குணத்தினால் தான் அவர்களுக்குக் குறும்பர்களென்ற பெயர் கொடுக்கப்பட்டதாம். நாட்டின் விஸ்தாரமான சமுத்திரக்கரையைக் கண்டு மற்ற ஜாதியார்களோடு வியாபாரம் செய்ய அது அனுகூலமான தெனத் தீர்மானித்துக் கர்னாடகப் பிராந்தியத்திலிருந்து வந்து இந்த வேடர்களை ஒடுக்கினார்களாம். முதல் முதல் அவர்களுக்கு யாதொரு அரசனும் ஏற்பட்டிருக்க வில்லை ஆயினும் பின்னர் அவர்களுக்குள்ளாக சண்டை சச்சரவுகள் நேர்ந்த காரணம் பற்றிக் கொமாண்டு குறும்பப் பிரபு என்ற ஒரு தலைவனைத் தெரிந் தெடுத்துக் கொள்ளும்படி நேர்ந்தது. இவன் தான் பல்லவ வமிசமென்று கூறப்பட்டுள்ள பரம்பரையின் அரசனென்றும் தெரிவிக்கப்பட் டிருக்கிறது. இவன் நாட்டை இருபத்து நான்கு பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு கோட்டமென்ற பெயரிட்டழைத்தான் இக் கோட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கோட்டையையும் ஏற்படுத்தினதாகக் கூறப்பட்டுளது. அனைது ராச்சியம் வடக்கில் பழவேற்காட்டிலிருந்து தெற்கில் கூடலூர்வரைக்கும் பரவி யிருந்ததுடன் உள்பக்கத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைவரைகூடப் பரவி யிருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அவர்களது முக்கியமான கோட்டைகளுள் ஒன்று போளூர்த் தாலூகாவிலுள்ள படவேடு. மற்றவை பழைய கோட்டைகளா யிருந்திருக்க வேண்டும். மஹேந்திரவாடி, ஆம்பூர்ப்பேட்டை, நாராயணவரம், வள்ளிமலை முதலிய இடங்களில் கோட்டைகள் ஏற்பட்டிருக்கக் கூடுமென நினைக்கிறார்கள்.பல்லவ மன்னர்களைப் பற்றித் தெரிந்திருப்பு தெல்லாம் மிகச் சொல்பமே. அவர்களது முக்கியமான துர்க்கம் செங்குன்று (Red Hills) எனப்படுமிடத்தின் அருகிலுள்ள புழலூர் காஞ்சீபுரம் என்ற விடத்தில் ஏற்பட்டு அவ்வூரே அவர்களது ராஜதானி நகரமாகவும் ஏற்படடிருந்ததாம். சமுத்திர மார்க்கமாக அயல் நாடுகளுடன் அவர்கள் ஏராளமான வியாபாரம் செய்து வந்திருந்ததாகத் தெரிகிறது. இவ்விஷயமும் சமுத்திரக்கரை யோரங்களில் எங்குமே பல்லவ நாணயங்கள் அகப்படுகின்றன என்றதுடன் ரோமாபுரி (Rome) சீனா (China) தேச தாணயங்களும் அகப்படுவதால் நன்கு ஊர்ஜிதப்படுகிறது. ஒரு ஜெயினமதப் பிரசங்கி இப்பிராந்தியங்களுக்கு வந்து ஜனங்களை அந்த மதத்தைத் தழுவும்படி செய்தனராம். பின்னர் காஞ்சீபுரம் அம்மதத்திற்குப் பேர்போனதாக ஏற்பட்டு அனேக ஜெயின சந்நியாசிகளது இருப்பிடமாக அவ்வூர் இருந்து வந்தது. இப்பொழுதும் அனேக ஜெயினர்கள் தென் ஆற்காடு ஜில்லாவிலும், இந்த ஜில்லாவின் ஆற்காடு, வந்தவாசி, போளூர் தாலூகாக்களிலும் இருந்து வந்தார்களாம். ஏழாவது நூற்றாண்டில் பல்ல்வ அரசர்களது அதிகாரம் மகா உன்னதமான நிலைமையி லிருந்தது. ஆனால் கொஞ்சகாலத்திற் கெல்லாம் கொங்கு, சோழமன்னர்கள் அவர்கள்மீது அனேகம் தடவைகளில் வெற்றி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டுளது. கடைசியாகக் குறும்பர்களை ஒடுக்கியது எட்டு அல்லது ஒன்பதாவது நூற்றாண்டில் சோழர்களே. தஞ்சாவூர் குலோத்துங்க மன்னனது மகன் தொண்டமான் சக்ரவர்த்தி யென்ற ஆதொண்டை பல்லவ மன்னனை எதிர்த்து அவனுடன் கொடும் போர்புரிந்த விடம் காஞ்சிபுரத்திற்கு 10-மைல் தூரத்திலுள்ள புல்லலூர் என்று கூறப்பட்டுளது. இதில் குரும்பர்கள் வெற்றிபெற ஆதொண்டை சோளங்கி புரத்திற்கு (Sholingur) ஓடிவிட நேர்ந்தது. அங்கு அவன் கண்ட ஒரு கனவினால் தைரியம் கொண்டு மறுபடியும் தனதெதிரியை எதிர்த்து அவனது வீரர்கள் அனைவரையும் கொன்று வெற்றி பெற்றான். பல்லவ மன்னன் சிறை செய்யப்பட்டுப் புழலூர்க் கோட்டையின் பித்தளைக் கதவு தஞ்சாவூர் கோவிலுக்குக் கொண்டு போய்விடப்பட்டது. இவ்வெற்றிக்குப் பிறகு மற்ற குரும்பத்தலைவர்கள் சுளுவில் ஒடுக்கிவிடப்பட்டார்கள். பின் அவ்வமிசமே அழிந்து போயிற்றாம். இப்பொழுது மைசூர் பீடப்பூமிப் பிராந்தியங்களில் காணப்படும் அம்மரபினர்கள் குரும்பர்களென்ற பெயர்வாய்ந்து கால் நடைகள் மேய்த்தும் மட்டமான மோட்டாக் கம்பளங்கள் நெய்தும் ஜீவித்து வருகிறார்கள். மேற்குத்திக்கில் ஓடிப்போன சிலர் சொல்ப நாகரீகம் வாய்ந்துள்ளவர்களாய் நீலகிரி மலைச்சரிவுகளில் வசித்து வருகிறார்கள். ஏனாதிகளும், இருளர்களும் இம்மரபினர்களே யென்பது சிலர் அபிப்பிராயம்.
இப்பொழுது காஞ்சீபுரம் சோழ மன்னர்களது ராஜதானி நகரமாக ஏற்பட்டது. அந்த ராஜதானியும் கோதாவரி வரை பரவியிருந்தது. ஆயினும் சோழர்களது அதிகாரம் மறுபடியும் குன்றி அவர்களது ராச்சியமும் தமிழ் நாடுகளுக்குள்ளேயே ஒடுக்கி விடப்பட்டதாம். அங்கு அவர்கள் தெலிங்கனா, விஜயநகர மன்னர்களுடன் விட்டுவிட்டுப் போராடிக்கொண்டு வந்ததும் ஏற்படுகிறது. சோழ மன்னர்கள் அடிக்கடி கப்பம்கட்டும் மன்னர்களது நிலைமைக்கு வந்து விட்டார்களாம். ஏழாவது நூற்றாண்டின் இறுதியில் இவ்வமிசம் முடிவுபெற்று அதன் ஸ்தானத்தில் தற்காலத்திய தஞ்சாவூர் பரம்பரையை ஸ்தாபித்த பிரக்கியாதிபெற்ற மஹா ராஷ்டிர மன்னன் சிவாஜியின் சகோதரன் ஏற்பட்டான்.
சோழ மன்னர்கள் தெற்கு நோக்கித் துரத்தி விடப்பட்டதும் தெலிங்கனாவின் கீழண்டைப்பரசும் யாதவ வமிசத்தினர்களின் (Yadava Dynasty) கீழிருந்து வந்தது. கார்வேட் நகர ஜெமீன்தாரியில் நாராயணவரம் என்றவிடம் அவர்கர்களது ராஜதானி நகரங்களில் ஒன்றாக ஏற்பட்டிருந்ததென்பதையும், அவர்களது நாட்டில் திருப்பதியும், சந்திரகிரியும் முக்கியமான நகரங்களாக இருந்து வந்தன என்பதையும் தவிர்த்து இம்மரபினர்களைப்பற்றி நிச்சயமாகத் தெரியக்கூடியது ஒன்றும் இல்லை. அவர்கள் குரும்பர்களது பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருக்கினுமிருக்கலாம். ஏனெனில் அச்சாதியார்களது பெயரிலிருந்து அவர்களது தொழில் கால்நடைகள் மேய்ப்பதென்று தெரிகிறது. பீடபூமி வாசிகளாகிய குறும்பர்களது தொழிலும் கால் நடைகள் மேய்ப்பதே.
சுமார் பதினோராம் நூற்றாண்டில் முன்னுக்கு வந்தது பல்லால வமிசம் (Ballala). இவ்வமிசம் தமிழ் நாடு, கர்நாடகம், மலையாளம், தெலிங்கனாவின் ஒரு பாகம் இவைகளை ஆண்டு வந்திருக்கலாமெனத் தெரிகிறது. அதே காலத்தில் ஆந்திர அரசர்கள் கொஞ்சம் பிரசித்தி பெற்றிருந்தனராம். ஆனால் அவர்களது ராச்சியம் தற்காலத்திய கர்நாடகம் வரை பரவியிருந்ததென்று கூறமுடியாது. அவர்கள் ராஜதானியின் பிரதான நகரம் ஹைதராபாத்துக்கு வட கிழக்கில் எண்பது மைல் தூரத்திலுள்ள வாரங்கல் (Warangal). அவர்களும், பெல்லால மன்னர்களும் பதினான்காம் நூற்றாண்டில் முகம்மதியர்களால் ஒடுக்கப்பட்டார்கள்.
இது முதல் தென் இந்திய சரித்திரம் ஒரு வாறு தெளிவு பொருந்தியுளதே. முகம்மதியர்களது படை யெழுச்சியில் முந்தியது 1293-வது வருஷத்தில் ஏற்பட்டது. அப்பொழுது மஹாராஷ்டிர மன்னன் ராமதேவ் (Ramdeva) என்றவனைக் கில்ஜி (Kbilji) வமிசத்தைச் சேர்ந்த அலாஉதீன் (Ala-ud-din) என்றவன் எதிர்த்து ஒடுக்கித் தனக்குக் கப்பம் கட்டும்படி செய்தான். தங்களது வெற்றிகளால் தைரியம் கொண்ட முகம்மதியர்கள் 1303-வது வருஷத்தில் தெலிங்கனாவைப் படையெடுத்துச் சென்றது பயன் படவில்லை. மூன்று வருஷகாலம் தெற்கு நோக்கி யாதொரு முயற்சியுமே செய்யாமல் இருந்ததைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்திருந்தார்களாம்.ஆனால் அதற்குப் பிறகு ராமதேவ் கப்பங் கட்டத் தவறிப்போன காரணம்பற்றி ஒரு முகம்மதிய சைனியம் மாலிக்காபர் (Malik Kafur) என்ற தளகர்த்தனின் கீழ் அவனை எதிர்த்துத் திரும்பவும் கீழ்ப்படியும்படி செய்தது. இந்த மாலிக்காபரும் ராமதேவனது ராஜதானியின் பிரதான நகரமாகிய தேவகிரி (Deogiri) யிலிருந்து தெலிங்கனாவின் பிரதான நகரமாகிய வாரங்கலுக்கும் சென்று அதையும் பிடித்துக்கொண்டு அதன் அரசனையும் கப்பம் கட்டும்படி செய்தான். வெற்றியுடன் கூடிய அவன் இன்னும் தெற்கு நோக்கிச் சென்று மைசூரின் பிரதான நகரமாக விருந்த துவாரசமுத்திரம் (Dvarasamudra) என்ற விடத்தில் பெல்லாலர்களது சைனியத்தைத் தோற்கடித்துக் கீழ் சமுத்திரச் கரை நெடுகஉள்ள பிராந்தியங்களை ராமேசுவரம்வரைக்கும் ஒடுக்கிவிட்டானாம். இவ்வெற்றிகளை அடைந்தபிறகு மாலிக்காபர் வடக்கு நோக்கித் திரும்பிச் சென்று விட்டனன்.
பத்து வருஷங்களுக்குள்ளாக மேற்கூறிய படை யெழுச்சியினால் ஏற்பட்டிருந்த மனோபாவம் குறைய ஆரம்பித்துத் தெற்கிலுள்ள ராச்சியங்கள் தங்களுக்கு வெகு தூரத்திற்கப்பாலுள்ள டெல்லி சக்கிரவர்த்திகளுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்திவிடத் துணிவுற்றார்கள். இக் காரணம்பற்றியே கயாஸ டின் தக்லாக் (Ghyas-ud-din) 1322-வது வருஷத்தில் தக்காணத்தில் தனக்குக் கீழ்ப்பட்டிருந்த மன்னர்களை பலாத்காரப்படுத்திக் கப்பம் கட்டும்படி செய்ய ஒரு சேனையை அனுப்பவேண்டி நேர்ந்தது. கலகம் செய்தவர்களுள் தலைவனாகலிருந்த வாரங்கல் அரசன் சிறை செய்துகொண்டு போகப்பட்டான்.
தென் இந்தியாவில் அரசாக்ஷி செய்து வந்த பரம்பரைகளுள் விஜயநகர மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களது ஐசுவரியமும், அதிகாரமும், பெருமையும் இப்பொழுது கூட நினைவில் இருந்து வருகின்றன. பெல்லால மன்னர்கள் ஒடுக்கப்பட்டதும் இந்த ராச்சியம் முதவில் தலைக்கிளம்பிற்று. புக்கராயன், ஹரிஹரன் (Bukka- raya and Harihara) என்ற இரண்டு தெலிங்கனா அரசகுமாரர்களால் ஈஸ்வரப்பிரஸாதம் பெற்றுக் கற்றறிந்த மாதவ வித்தியாரணியரால் (Vidyaraniya) உதவி செய்யப்பட்டு அது ஸ்தாபிக்கப்பட்டதெனக் கூறுகிறார்கள். இந்த மாதவ வித்தியாரணியரே அவர்களது பிரதான மந்திரியாகவும் ஏற்பட்டார்.
இந்த வமிசத்திற்குப் பெயர் இடப்பட்டதற்குக் காரண பூதமான ராஜதானியின் பிரதான நகரம் துங்க பத்திரா நதிக்கரையில் விஜய நகர மெனப்படும் ஹம்பி (Hampi)யிலிருந்தது. அங்கிருந்து தான் விஜய நகர அரசர்கள் பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலும், பதினாறாம் நூற்றாண்டில் சில காலத்திலும் பக்கத்திய மன்னர்களுடன் போராடி ஜெயம்பெற்றனர். 1344-வது வருஷத்தில் முகம்மத் பின் தக்லாக்கின் (Mahammad Tughlak) ஆட்சியில் அவர்கள் தெலிங்கனாவின் மன்னன், பாமினி அரசன் ஹஸன் காங்கூ (Hassan Gangu) இவர்களது உதவிகொண்டு தங்களது நாடுகளிலிருந்தும் முகம்மதியத் துருப்புக்களை அகற்றச் சக்தி வாய்ந்திருந்தார்கள். ஆனால் முகம்மதியர்கள் இழந்துபோன அதிகாரத்தைத் திரும்பவும் அடைய ஸதா முயற்சி செய்துகொண்டுவந்த காரணம் பற்றி அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் ஸதா சண்டைகள் ஏற்பட்டிருந்ததாம். விஜயநகர பரம்பரை யார்களது ராச்சியம் பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் அவர்களது ராஜதானிக் கருகிலுள்ள பிராந்தியங்கள் அடங்கியுள்ளதாகவே இருந்தது. பதினான்காவது அரசன் நரசிங்கராயன் காலத்தில் தான் அது கர்நாடகம் வரைக்கும் பரவி யிருந்ததாம். தனது முனனோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த நாடுகளை நரசிங்கராயன் விஸ்தரிக்கச் செய்து வேலூர், சந்திரகிரி இவ்விடங்களிலுள்ள கோட்டைகளைக் கட்டியோ பலப்படுத்தியோ செய்ததாகக்கூறியுளர். அவனால் வேலூர் கோட்டை பழுதுபார்த்து ஒழுங்கு செய்யப் பட்டது. சிற்கில சமயங்களில் அதைத் தனது வாஸஸ்தானமாகக் கொள்வதற்கென்றும் சந்திரகிரிக் கோட்டையை பலப்படுத்தி அது கஜானாவை பத்திரமாக வைப்பதற்கென்றும் கூறியுளர். அவனது மகன் கிருஷ்ண தேவராயன் தனது தகப்பன் சேர்த்த நாடுகளை இன்னும் விஸ்தீரண முள்ளதாகச்செய்ததுடன் தமிழ்நாடு முழுவதையுமே ஒடுக்கினானாம்.
முகம்மதியர்களுடன் ஏற்பட்ட போராட்டத்தில் விஜயநகர மன்னர்களுக்கு நேசர்களாக ஏற்பட்ட பாமினி வமிசம் முகம்மத் துக்லாக் சக்கிரவர்த்தியினது கொடுமையை சகிக்கமாட்டாமல் குஜராத்திலிருந்து ஓடி வந்து விட்ட சில முகலாயர்களால் ஸ்காபிக்கப்பட்டது. அவர்கள் தௌலதாபாத் என்ற ஊரைப்பிடித்துக்கொள்ள அவர்களைப்போலவே துக்லக் (Tughlak) சக்கிரவர்ததியினால் கொடுமை செய்து ஓடி வரும்படி செய்யப்பட்ட இன்னும் அனேகர் உதவி செய்தார்கள். அவர்களெல்லாம் ஒருங்கு கூடி இஸ்மேல் கான் என்ற ஒரு ஆப்கானியனைத் தங்களது கலைவனாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த இஸ்மேல் கான் என்றவனும் சுவல்பகாலத்திற்கெல்லாம் தனது அதிகாரத்தை விஜயநகர மன்னனது நேசனாகிய ஹஸன் கங்கூ என்றவனிடம் ஒப்புவித்து விட்டான்.
ஜாதி, மதம் இவைகளில் முற்றும் வேறுபட்டிருந்த இரண்டு ராச்சியங்கள் நெடுங்காலம் ஒற்றுமையுடன் கூடியிருப்பது முடியாத விஷயம். ஆதலால் இருவரும் சத்துருவாக ஏற்பட்டது நிவர்த்தியானதும் பாமினி அரசர்கள் தெலிங்கனா, விஜயநகரம் இவைகளின் ஹிந்து ராஜாக்களுடன் நெடுங்காலம் சண்டையிட்டுக்கொண்டு வந்தார்கள். இதில் தெளிங்கனா, முற்றிலும் ஒடுக்கி விடப்பட்டது. தென் இந்தியாவில் பாக்கி நின்ற முக்கியமான பரம்பரைகள் பாமினி வமிசமுமே, இவ்விரண்டில் விஜய நகர வமிசம் பதினாறாம் நூற்றாண்டுக்குள் துங்கபத்திரை நதிக்குத் தெற்கிலுள்ள தேசத்திற் கெல்லாம் முக்கிய அதிகாரம் வாய்ந்திருந்ததாக ஏற்பட்டு விட்டது. மார்ஷ்மன் (Marshman) என்ற கனவான் அவர்கள் தெற்கிலிருந்த ஹிந்து அதிபதிக்கெல்லாம் மேல் அதிபதிகளாக ஏற்பட்டிருந்ததாகக் கூறியுளர்.
இரண்டு கரை ஓரங்களிலு மிருந்த அறுபது துறைமுகப் பட்டணங்களில் நடந்த வியாபாரத்தினால் கிடைத்த லாபத்தினால் அதிகரிக்கப்பட்டவர் தங்கள் அரசிறையைக் கொண்டு சேகரிக்கப்பட்ட படை அவ்வரசனை ஒண்டியாக வேறொரு ராச்சியமுமே எதிர்த்து ஜெயமடைய முடியாதென நினைக்குமாறு செய்த பாமினி ராச்சியத்தில் நேர்ந்திருந்த குழப்பமும் மேலே கூறியுள்ளவாறு ஏற்பட்ட வாரங்கல் நாட்டின் ஐசுவரியத்திற்கு ஒரு காரணமாயிருந்ததாம். ஹஸன் கங்கூ இருந்த பிறகு அது நாளடைவில் ஐந்து சிறு ராச்சியங்களாகச் சிதறுண்டு போய் அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அதிபதி ஏற்பட நேர்ந்தது. அவ்வதிபதிகளும் ஒருவரோ டொருவர் துவேஷமும் விரோதமும் பாராட்டிச் சண்டையிட்டுக் கொண்டுவந்தார்கள். பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி வமிசத்தின் சுல்தான்கள் எனக் கூறப்பட்ட ஐந்து அதிபதிகளும் பக்கத்து ராச்சியமாகிய விஜயநகரத்தின் அதிகார அபிவிர்த்தியைக்கண்டு பயந்தவர்களாய் ஒன்று சேர்ந்து அதை ஒடுக்கிவிடத் தீர்மானித்தார்கள். அவர்களது சைனியமும் ஒன்று கூட்டப்பட்டது. 1565-வது வருஷம் ஜனவரி மாதம் 23-ந்தேதி தென் இந்தியாவிலேயே விசேஷமான சண்டை தலைக்கோட்டை (Talikota) என்ற விடத்தில் நடந்தது. விஜயநகர ராணுவம் சிதறடிக்கப்பட்டு அதன் அரசன் ராமராயன் என்றவனும் கொல்லப்பட்டான் பிந்தி அந்த ராச்சியமும் சிதைவுண்டு போயிற்று.
ஜெயமடைந்த பாமினி வமிசத்திய சுல்தான்களும் தங்களுக்குள்ளாகவே ஏற்பட்ட பொறாமையாலும் அசூயையாலும் ஜெயித்த நாட்டைப் பிடித்துக் கொள்ள முடியாமல் போயிற்று. ஆதலால் தலைக்கோட்டைச் சண்டையினால் நேர்ந்த தெல்லாம் அதனால் சிதறுண்ட நாடு தற்காலத்தில் ஜெமீன்தாரிகள், பாளையங்கள் என்று கூறப்பட்டு ஜமீன்தாரிகள், பாளையக்காரர்கள் இவர்களது ஆதீனத்தின் கீழிருக்கும். முந்தி ராஜவமிசத்தினர்கள் சர்க்கார் அதிகாரிகள் இவர்கள் ஸ்வாதீனப்பட்டு ஆண்டுவந்திருந்த பிரிவுகளாக ஏற்பட்டதே ஒழிய வேறில்லையாம். சிதறுண்ட மேற்கூறியுள்ள பாகங்கள் ஒன்றிற்குக் கொல்லுண்ட அரசன் சகோதரன் ஒருவன் அதிபதியாக ஏற்பட்டு அனந்தபுரம் ஜில்லாவிலுள்ள பேணுகொண்டா (Penukonda) வில் சில காலமிருந்த பிறகு அவன் தனது கச்சேரியைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டான். இங்கவன் 1615-வது வருஷத்தில் தங்களது பண்டகசாலையை மசூலிப் பட்ணத்திலிருந்து ஆர்மகாமுக்கு (Armagan) மாற்றிக் கொண்ட இங்கிலீஷ் காரர்களது வியாபாரம் அங்கு திருப்திகரகரமாகவில்லை என்ற விஷயத்தைக்கேள்வியுற்றான். இந்த ராஜாவின் கீழுள்ள காளஹஸ்திப் பாளையக்காரர் மூலமாக ஆங்கிலப்பண்டக சாலை மேற்பார்வை அதிகாரியாகிய டே துரை (Mr. Day)யை சமுத்திரக்கரை வரைக்ரக்கும் விஸ்தரித்திருந்த தனது நாட்டில் வந்து தங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அதற்குச் சம்மதித்த டேதுரையும் இந்த அரசனை அவனது சந்திரகிரியிலிருந்த அரண்மனையில் சந்தித்துப் பேசினார். முடிவில் 1640-வது வருஷத்தில் கரையோரமாக இங்கிலீஷ்காரர்களுக்கு ஒரு துண்டு பூமி அளிக்கப்பட்டது. முதல் முதல் இங்கிலீஷ் காரர்களுக்குச் சொந்தமாக ஏற்பட்டது அதே. பக்கத்திய அமைமதியற்ற முரட்டு ஸ்வபாவம் பொருந்திய சிற்றசர்கள் எதிர்த்தால் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் அங்கவர்கள் ஒரு கோட்டையை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு இங்கிலாந்தின் பரம்பரை யாகப் போற்றப் பட்டுவரும் கிறிஸ்தவ பக்தர் பெயரை ஒட்டி ஸெயின்ட் ஜார்ஜுக் கோட்டை (Fort Saint George) யென்ற பெயரை இட்டார்கள்.
தலைக்கோட்டைக் சண்டையால் தென் இந்தியாவின் நன்மைக்கும் சுகத்துக்கும் மிக்க இடையூறுகள் ஏற்பட்டன. விஜயநகர மேன்மையும் ஐசுவரியமும் அதன் அரசன் இறந்ததும் அவனுடனேயே போய்விட்டன. அந்த ராச்சியத்தின் சிறப்பும் மகிமையும் இருந்தவிடம் தெரியாமல் போய்விட்டன. பதினைந்தாவது நூற்றாண்டின் இறுதியிலும் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அந்நாட்டைப் போய்ப் பார்த்திருந்தவர்கள் அதன் மகிமையும் ஐசுவரியமும் வியக்கத்தக்கவையா யிருந்தன என்று சொல்கிறார்கள். அனேக பெரிய ஐசுவரியம் வாய்ந்த நகரங்களிலிருந்து உற்பத்தியான கைத்தொழில் பொருள்கள் உலகத்தில் அதிக தூரத்திலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரப்பட்டன. விவசாயமும் ஏராளமாக நடை பெற்று வந்தது. பற்பல துறைமுகப் பட்டணங்களிலும் பலத்த வியாபாரம் நடைபெற்று வந்தது. முரட்டு ஸ்வபாவம் வாய்ந்திருந்த நாட்டின் பற்பல சிற்றதிகாரிகளை அடக்கி வைத்துக் கொண்டு தலைவன் போனதும் நாடெங்கும் கொள்ளை முதலியன ஏற்பட்டுப் பாழடைந்து ஸதா ஏற்பட்டுக் கொண்டிருந்த சண்டையால் பயிர் செய்பவர்கள் அமைதியுடன் உழுது பயிர் செய்யவும் முடியவில்லை. பகீரதப்பிரயத்தினத்துடன் பயிர் செய்யப்பட்டு மாசூலை அடையவும் முடியவில்லை. அனேக வருஷங்களுக்குப் பிங்தித்தான் ஜெமீன்தாரர்களையும், பாளையக்காரர்களையும் கட்டுக்கடங்கி நிற்கும்படி செய்யக்கூடிய அதிகாரம் ஏற்பட்டு நாடும் படிப்படியாக க்ஷேமத்திலும் ஐசுவரியத்திலும் விர்த்தியாகிக் கொண்டு வந்தது.
தலைக்கோட்டைச் சண்டைக்குப் பிறகு எழுபது வருஷகாலம் விஜயநகர ராச்சியம் க்ஷீணித்ததால் ஏற்பட்ட அனேகச் சிற்றதிபதிக்குள் சண்டையும் சச்சரவும் ஸதா ஏற்பட்டுக் கொண்டேவந்து நாட்டின் அமைதியும் க்ஷேமமும் குன்றிப் போயிருந்தன. அதற்குப் பிறகு பலம் குன்றி ஒற்றுமையின்றிச் சண்டைச் சச்சரவுகள் செய்து கொண்டிருந்த இச்சிறு ராச்சியங்களை ஜெபிப்பது எவ்வளவு எளி தென்று பீஜப்பூர் அரசனுக்குத் தெரிந்ததும் அவன் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முயன்றான். பாமினி ராச்சியம் சிதறுண்டிருந்த ஐந்து பாகங்களில் ஒன்றை அவன் ஆண்டு கொண்டிருந்தான். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவன் சுயேச்சை பெற்று அது முதல் அடிக்கடி முகலாயர்களுடன் போராடிக் கொண்டுவர நேர்ந்திருந்தது. பாமினி ராச்சியம் சிதறுண்டதும் ஏற்பட்ட மற்ற ராச்சியங்களுள் ஆமத் நகரம் கோல்கொண்டா என்றவை இரண்டு. அவைகளும் பக்கத்திய பீஜப்பூர் ராச்சியத்தைப் போலவே ஒருவருக்கொருவர் அசூயை காட்டிக் கொண்டுவந்தார்க ளென்றதுடன் முகலாயர்களுடனும் போராடிவரும்படி நேர்ந்திருந்தது. இந்தப் பரஸ்பர அசூயையும் போராட்டமும் அவர்கள் தங்களது கவனத்தைத் தெற்கு நாடுகளில் செலுத்த இடம் கொடுக்கவில்லை. ஆதலால் மிக்கச் செழுமைவாய்ந்த பிராந்தியங்களாகிய அவைகள் பலம் பொருத்திய ஒருவனுக்கு எளிதில் வசப்படக்கூடிய நிலைமையிலிருந்தன. 1636-வது வருஷத்தில் ஷாஜகான் சக்கிரவர்த்தியின் படை யெழுச்சி முடிவு பெற்ற உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு பீஜப்பூர் சுல்தான் தனது ராச்சியத்தைத் தெற்கில் அதிகரிக்கச் செய்ய அதிகாரமும் அவகாசமும் ஏற்பட்டது. ஆமத்நகர அதிகாரம் குலைக்கப்பட்டு பீஜப்பூர், கோல்கொண்டா மன்னர்கள் கூடியமட்டும் சுயேச்சை பெற்று அடுத்த இருபது வருஷ காலம் கர்நாடகத்தில் போர்புரிந்து வரக்கூடிய நிலைமையில் இருந்து வந்தார்கள் அவர்கள் அப்படிப் போர்புரிந்துவந்த போதிலும் ஒத்துழையாது ஒவ்வொருவரும் தன் தன் நாட்டுக் கருகிலிருந்த பாளையக்காரர்களை ஒடுக்கத் தலைப்பட்டார்கள். இதனால் அங்கங்கிருந்த சிறு சிறு ராச்சியங்கள் இவர்களது அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. வேலூர், பீஜப்பூர் அரசன் வசப்படச்,சந்திரகிரி கோல்கொண்டா மன்னனால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களுக் கேற்பட்ட வெற்றி நாளடைவில் சக்கிரவர்த்தியின் அசூயையைக் கிளப்பிற்று. ஆதலால் அவர் காலதாமதமின்றிப்பெயருக்கு மாத்திரமே தனக்குக் கீழ்ப்பட்டவர்களாக ஏற்பட்டிருந்த இவர்களது பலத்தைக் குறைக்க முயன்றார்.
1656- வது வருஷத்தில் பீஜப்பூர் சுல்தானாகிய அடில் ஷா (Adil Shah) இறந்து போனான். அவனது மகனும் அறிவீனத்தால் ஸம்பிரதாயப்படி செய்ய வேண்டிய மரியாதையைத் தான் சக்கிரவர்த்திக்குப் பட்டத்திற்கு வந்ததும் செய்யத் தவறிப் போனான். ஆதலால் ஷாஜஹான் அவன் இறந்து போனவனது நியாயமான மகன் அல்ல வென்று கூறச் சக்கிரவர்த்தியின் மகன் கீழ் ஒரு முகலாய சைனியம் புறப்பட்டுச் சென்று திடீரென்று பீஜப்பூர் ராச்சியத்தை அடைந்தது. அந்த ராச்சியத்தின் படையில் பெரும்பாகம் கர்நாடகத்திலிருந்த காரணம்பற்றி விஷயம் நன்மையைத்தர தக்கதாக விருக்கவில்லை. பீஜப்பூரின் மகிமையும் அதிகாரமும் குன்றியே போயிருக்கும். ஆயினும் சமய சஞ்சீவிபோல் சக்கிரவர்த்தி சாகுந் தருவாயிலிருப்பதாகச் சமாசாரம் வந்தது. ஔரங்கசீப்பும் கொஞ்ச மேனும் முற்றுரையை நீக்கிச் செல்ல மனமிராம லிருந்த போதிலும், தகப்பனது ராச்சியத்தைத் தான் அடையத் திரும்பிச் சென்றுவிட நேர்ந்தது. இவ்வாறு பீஜப்பூர் அரசனுக்குத் தனது ராச்சியத்தை ஒருங்கு கூட்டி விஸ்தரிக்கச் செய்ய முப்பது வருஷ அவகாசம் ஏற்பட்டதாம்.
இனி தென் இந்தியா சரித்திரத்தில் சம்பந்தப்பட்டது மஹாராஷ்யயர்களது விஷயம். இந்த மவஹாராஷ்டிர வமிசமும் சிவாஜியினது வமிசம், மல்லோஜீ பான்ஸலே என்ற குதிரைவீர அதிபதி கொள்ளையடித்து ஏராளமான பொருளைச் சேர்த்துக்கொண்டு பதினேழாம் நாற்றாண்டின் ஆரம்பத்தில் பூனாவில் சில ஜாகீர்களையும் இன்னம் சில நாடுகளையும் ஆமத்நகர சுல்தானிடமிருந்து வாங்கிக் கொண்டான். இவன் இறந்த பிறகு இந்நாடுகள் இவனது மகன் ஷாஜிக்குக் கிடைத்தன. இந்த ஷாஜி 1636-வது வருஷத்தில் அப்பொழுது உன்னதமான பதவியிலிருந்த பீஜப்பூர் சுல்தான் கீழிருப்பது நலமெனக்கருதி அனுமதி வேண்டியது அளிச்கப்பட்டது. கர்நாடக படை யெழுச்சி ஒன்றில் இந்த ஷாஜி அனுப்பப்பட்டு அதில் பிரக்கியாதிபெற்ற காரணம் பற்றி இவனுக்கு பெங்களூருக் கருகில் அனேகம் சிறந்த ஜாகீர்கள் அளிக்கப்பட்டன. இந்த ஜாகீர்கள் பூனா ஜாகீர் முதலானவைகளை விடச் சிறந்தவைகளாக விருந்தகால் இவைகளைத் தான் வைத்து அந்த ஜாகீர்களைத் தனது மகன் சிவாஜி பேருக்கு மாற்றிவிட்டான். பூனா ஜாகிருடன் தனக்கு வந்த அதிகாரத்தை சிவாஜி மிகத் துணிகரமான கொள்ளை முதலிய தீய விஷயங்களில் செலுத்தி வந்த காரணம்பற்றி ஷாஜியின் ரக்ஷகன் அவளைப்பிடித்து அவனது மகனது நன்னடத்தைக்கு ஜாமீனாக வைத்துக்கொள்ளப் பட்டான். நான்கு வருஷகாலம் ஷாஜி பீஜப்பூரில் சிறை செய்து வைக்கப்பட்டிருந்தான். அதனால் அவனது மேன் பார்வையில்லாமல் போயிருந்த கர்நாடக ராச்சியங்கள் சீர் குலைந்து போயிருந்தது தெரிந்ததும் அவனை விடுதலை செய்து அதிகமான அதிகாரமும் அளித்து அங்கனுப்பும்படி நேர்ந்தது. அவன் 11664- வது வருஷத்தில் இறந்து போகும் முன் பெங்களூரைச்சுற்றியிருந்த ஜாகீர்களைத் தவிர்த்து நாட்டின் தென் பாகத்தில் இன்னம் அநேகம் ஜாகீர்களையும் பெற்றிருந்தான். தகப்பனார் சிறையிலிருந்த காரணம் பற்றிக் கொஞ்சம் அடங்கியிருந்த சிவாஜியும் அவர் விடுதலை செய்யப்பட்டதும் முன்போல் கொள்ளையடித்து வட தக்ஷணத்தில் பெரும்பாகத்தில் தனது அதிகாரத்தை ஏற்படுத்திக்கொண்டான். மிக்க துரிதமாக இவனது அதிகாரம் விர்த்தியாகிக் கொண்டு வந்ததால் 1674- வது வருஷத்தில் இவன் சுயேச்சை யடைந்து ராஜபட்டம். இன்னம் முதலியன தரித்துக்கொள்ளக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டான்.
இதற்குப் பத்து வருஷத்திற்கு முன் இந்த சிவாஜியின் தகப்பன் ஷாஜி இறந்து போயிருந்தான். அவனது தென் நாடுகளிலிருந்த ஜாகீர்கள் சிவாஜியினது மாற்றாந்தாயின் குமாரனாகிய வெங்காஜி என்றவன் வசப்பட்டிருந்தன. அவனும் அவைகளை பீஜப்பூர் மன்னன் கீழ்ப்பட்ட மன்னனாகவிருந்து ஆண்டு வந்தான். சிவாஜி அநநாடுகளை வெங்காஜியி னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறதென்ற துணிகரமான எண்ணங் கொண்டான். இந்த நோக்கத்துடன் இவன் கோல்கொண்டா சுல்தானோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். அவ் வுடன்படிக்கையின்படி கோல்கொண்டா சுல்தானும் சிவாஜி பீஜப்பூருக்குக் கீழ்ப்பட்டிருந்த நாடுகளை கோல்கொண்டா அரசனுக்காக ஜெயிக்கக் கர்நாடகத்திற்குச் சென்றிருக்கும் சமயத்தில் வடக்கிலுள்ள அவனது நாடுகளைக் காத்து ஒப்புவிக்க ஒத்துக் கொண்டான். சிவாஜி கோல்கொண்டா அரணுக்காக நாடுகளை ஜெயிக்கப்போவதாகக் கூறியது அவனுடன் நட்புக் கொள்ளக் கபடமாகக் கூறிய விஷயமே ஒழிய உண்மையான கருத்துடன் சொன்ன பேச்சல்ல. வாஸ்தவத்தில் சிவாஜியின் கருத்து தென்நாடுகளைக் தனக்காகவே ஜெயித்துக் கொள்ள வேண்டும் என்பதே.
இவ்வாறு தனது நாடுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட்டு சிவாஜியும் 1676- வது வருஷத்தில் வெங்காஜியி னிடமிருந்து நாடுகளைப் பிடுங்கிக் கொள்ள இந்த ஜில்லாவிலுள்ள கல்லூர் கணவாயின் வழியாகக் கர்நாடகத்தில் பிரவேசித்தான். கஷ்டங்களை அனாயாசமாய்ச் சகிக்கக்கூடிய அடங்காப் பிடாரிக்ளெனக் கூறக்கூடியவர்க வடங்கியுள்ள சைனியத்துடன் சிவாஜி வேலூர், செஞ்சி முதலான விடங்களிலிருந்த வெங்காஜியின் கோட்டைகளை ஒவ்வொன்றாய்ப் பிடித்துக் கொண்டு வந்தான். இதற்குள் இவன் தனது நண்பன் கோல்கொண்டா அரசனது உதவிக்காகத் துரிதமாய்ச் செல்ல நேர்ந்ததால் தான் பிடித்துக்கொண்ட இடங்களை சந்தாஜி என்றவனிடம் ஒப்புவித்து விட்டுச்சென்றான். ஆனால் இவனிடமிருந்த சைனியம் சுவல்பமாக விருந்ததால் அவ்விடங்களை வெங்காஜி சுளுவில் திரும்பவும் தன் வசப்படுத்திக்கொண்டு விட்டான். கடைசியாக சிவாஜி அந்நாடுகளை வெங்காஜியே வைத்துக்கொண்டு அரசிறையில் பாதி தனக்குக்கொடுத்து விடுகிறதென்ற உடன்படிக்கையும் செய்துகொண்டான்.
நாளுக்குநாள் பலத்தில் அதிகரித்துக்கொண்டு வந்த இந்த சிவாஜியை ஒடுக்க முகலாயசக்கிரவர்த்தி முயன்றான். ஆனால் சிவாஜியும் மிகக் கபடத்துடன் வேலைசெய்து சமாளித்துக் கொண்டான். சிவாஜி இறந்தபிறகு ஏற்பட்டிருந்த மஹாராஷ்டிர ராச்சியத்தை இங்கிலீஷ்காரர்கள் நாளடைவில் தங்கள் வசப்படுத்திக்கொண்டார்கள். பிந்தி கர்னாடக யுத்தம் நேர்ந்தபொழுது அதில் இங்கிலீஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தலையிட்டுக்கொள்ள பிரெஞ்சுக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு இங்கிலீஷ்காரர்கள் படிப்படியாய் பலம்வாய்ந்து ராச்சியங்களைச் சேர்த்துக்கொண்டதுபோல் இந்த ஜில்லாவும் கர்னாடக சுபேதார் அசீம்உல் உமாராவால் (Azim-ul-Umara) 1801-ம் வருஷத்தில் ஜூலை 31-ல் கொடுபட்டு அவர்கள் வசப்பட்டு அதுமுதல் அவர்களால் இப்பொழுதும் ஆளப்பட்டு வருகிறது.