உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார், கருணானந்தம்/002-021

விக்கிமூலம் இலிருந்து

நன்றிக்கடன்

ஈரோட்டில், பெரியார் குருகுலத்தில், என்னோடு சமகாலத்தில் ஒரு சாலை மாணாக்கராக (Colleagues) இருந்த சிலருள் இருவர், தமிழகத்தில் மிக உன்னதமான தகுதியும், மிக்க உயரிய பதவியும் பெற்றனர். ஒருவர் க. அரசியல்மணி. இவர் ஈ.வெ.ரா. மணியம்மையார் என்ற தகுதியும், திராவிடர் கழகத் தலைவர் என்ற பதவியும் பெற்றார். இன்னொருவர் மு. கருணாநிதி. இவர் கலைஞர் மு. கருணாநிதியாய் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ற தகுதியும், தமிழகத்தின் முதல்வர் என்ற பதவியும் பெற்றார். நானும் “அண்ணா காவியம்” இயற்றியதால் காவியக் கவிஞர் என்ற தகுதியும், தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதியதால் பெரியார் வரலாற்றாளர் (Periyar's Biographer) என்ற பதவியும் பெற்றேன்.

1942-ஆம் ஆண்டு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் இண்ட்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தபோது, அங்கே பி.ஏ. வகுப்பில் தவமணி இராசன் என்பாரும் வந்து சேர்ந்தார். இவர் தனது இண்ட்டர் வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். என்னைத் தன் தோழனாக இணைத்துக் கொண்ட இவரே எனக்கு அரசியல் ஆசான் (Mentor). இருவரும் சேர்ந்து, இன்னும் சிலர் உதவியுடன் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழகத்தைத் துவக்கி, முதல் மாநாட்டையும் நடத்தினோம். தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எங்கள் செயலை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்கள். திராவிட மாணவத் தோழர்கள் பலரை நாட்டுக்கு அறிமுகம் செய்தோம்.

படிப்பைத் துறந்து இருவரும் ஈரோடு சென்றோம். அய்யா குருகுலத்தில் மணியம்மையார், எஸ். கஜேந்திரன், ஏ.பி. சனார்த்தனம் ஆகிய மூவரோடு நாங்கள் இருவரும் இணைந்து, குடும்பத்தைப் பெருக்கியதோடன்றியும் திருவாரூரில் முரசொலித்து வந்த மு. கருணாநிதி அவர்களையும் ஈரோட்டுக்கு வரவழைத்துக்கொண்டோம். இவருக்குத் திருமணமாகியிருந்ததால் மாதச் சம்பளம் தருமாறு அய்யாவைக் கேட்டுக்கொண்டோம்.

அய்யாவின் “குடி அரசு” இதழில் நான் ஆஸ்தான கவிஞர். 1945-ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஒரு கவிதை எழுதி, அவருக்கு நிதி வழங்கி உதவவேண்டும் என்று “குடி அரசு” இதழில் வெளியிட்டுள்ளேன். பல்வேறு பெயர்களில் நிறையக் கவிதைகள் எழுதி வந்தேன். ஈ.வெ.கி. சம்பத்தும் நானும் கருப்புச் சட்டைப் படையின் முதலாவது அமைப்பாளர்களாக அய்யாவால் நியமிக்கப் பட்டோம்.

1944-ல் திராவிட மாணவர் முதல் சுற்றுப்பயணத்தின்போது, பத்து வயதுச் சிறுவனாக இயக்கத்தில் நுழைந்த வீரமணி, இன்று திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்! என்னைவிடப் பத்து வயது இளையவராயினும், வீரமணிக்கு இதனால் இயக்கத்தில் என் அளவு சீனியாரிட்டி உண்டு! இந்தச் சிறுவனை மேசைமீது தூக்கி நிறுத்தி முதன் முதலில் பேசக் கேட்டவர்களில் நானும் ஒருவன். முதல் கிராவிட மாணவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். பின்னர் பயிற்சிப் பாசறை அமைப்பாளரானேன்.

அய்யாவின் அனுமதியோடு ஊருக்கு வந்து, திருத்துறைப் பூண்டியில், எம்.கே. ஹாஜாபீர், வி.எஸ்.பி. யாகூப், இராம, அரங்கண்ணல் (அப்போது என் தம்பியுடன் படித்து வந்தார்) ஆகியோர் ஒத்துழைப்பால் முதலாவது கருப்புச் சட்டை மாநாடும், மாணவர் மாநாடும் நடத்தினேன். எங்கு மாநாடு நடந்தாலும், என் பணியின் பங்கு, ஓரளவாவது அங்கு இருந்து வந்தது.

1946-ல் மத்திய அரசின் தபால் இலாக்காவில் அஞ்சற்பிரிப்பாளர் அலுவல் எனக்குக் கிடைத்தது. அய்யாவிடமும், அண்ணாவிடமும், கலைஞரிடமும் விடைபெற்று அரசு ஊழியரானேன். கலைஞரும் அய்யாவிடம் சொல்லிக்கொண்டு, கோவையில் திரைப்படத்துறையில் எழுத்துப் பணிபுரியச் சென்றார். தஞ்சையில் நான் சிலகாலம் பணியாற்றியபோது, அங்கே அண்ணாவின் உதவியால் புதிதாகத் துவக்கப்பட்ட “கே. ஆர். ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா”வில், இயக்கத் தோழர்களான டி. வி. நாராயணசாமி, ஆர். எம். வீரப்பன், எம். என். கிருஷ்ணன், ஜி. எஸ். மகாலிங்கம், எஸ். சி. கிருஷ்ணன், (சிவாஜிகணேசன் சக்தி நாடக சபாவில் சேர்ந்த பின்னர் வந்த) எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் நடிகர்களாக விளங்கினர். அண்ணா மூலமாக அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு உறுதுணைவர்களாகக் கரந்தை என்.எஸ். சண்முகவடிவேல், டி.கே. சீனிவாசன், ஏ.கே. வேலன் ஆகிய நாங்கள் எல்லாரும் அங்கே ஒருங்கே முகாமிட்டு வாழ்ந்தோம்; அண்ணா அடிக்கடி வந்து தங்கிச் செல்வார்.

அஞ்சல்துறை ஊழியனாக ஆனபின்னரும், என்னை ஈரோட்டுக்கே மாற்றினார்கள். அய்யா அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள். “அட சனியனே! ஈரோட்டுக்கே போட்டானா?” என்றார்கள். அலுவல் ரயில்வே ஸ்டேஷனிலும், உண்ணலும் தங்கலும் அய்யா வீட்டிலுமாக, மூன்றாண்டுகள் இருந்தேன். நான் இருந்த காலத்தில் ஈரோட்டில் அய்யா சுமார் பத்து இடங்களிலாவது குடியிருந்திருப்பார். எல்லாம் சொந்த வீடுகள்தாமே! ஈ.வெ.கி. சம்பத், ஈ.வெ.கி. செல்வராஜ், எஸ்.ஆர். சந்தானம், எஸ்.ஆர். சாமி ஆகியோர் அய்யா குடும்பத்தினர்; எனக்கு அரிய நண்பர்கள். செல்வனும் நானும் வா போ என்று பேசிக்கொள்ளுமளவு நெருக்கம். பி. சண்முக வேலாயுதம் எனக்கு நண்பர், தோழர், புரவலர், ஆலோசகர். பின்னாளில் எனக்குத் திருமணமாகி, நான் ஈரோட்டில் குடும்பம் அமைத்தபோது, தனது வீட்டில் ஒரு பாதியை இலவசமாக ஒதுக்கித் தந்து, அதற்குக் ‘கவிஞர் இல்லம்’ என்றே பெயரும் சூட்டினார். பெரியாரை முற்றிலும் புரிந்தவர்; அபாரமான விஷயஞானம் உள்ளவர்; அய்யாவுக்கும் சண்முகவேலாயுதம் நம்பிக்கைக்கு உரியவர்! நாகரசம்பட்டி சம்பந்தமும், சண்முகவேலாயுதமும் இவ்வகையில் ஒத்த பண்பினர். இவருடைய நட்பும் எனக்கு ஒரு தனிச் சொத்தாகும். ஈரோட்டில் லூர்துசாமி, ஆர்.டி. முத்து, அங்கமுத்து, கருப்பையா, அப்பாவு ஆகியோரும் நல்ல நண்பர்கள் எனக்கு!

ஈரோட்டில் சம்பத்துக்கு என்னைத் தவிர வேறு நெருக்கமான நண்பர் கிடையாது. இதை அவரே சொல்வார். அவரும் நானும் சிந்தனையாளர் கழகம் ஒன்று (Free Thinker's Association) அங்கே தொடங்கினோம்.

அய்யா ஊரிலில்லாத நேரங்களில் எனக்குச் சாப்பாடு பெரிய அய்யா வீட்டில். சம்பத்தோ செல்வனோ, என்னை வெளியில் உணவருந்த விட்டதில்லை. “நாயக்கரின் தத்துப் பிள்ளை” என்று நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள். “குடி அரசு” இதழில் என்றுமே சம்பளமில்லாத, நிரந்தர, கவுரவ ஊழியன் நான். மணியம்மையார் தனது கனிவான உபச்சாரங்களாலும், சிறப்பான சமையல் முறைகளாலும் என்னை நன்கு கவனித்து வந்தார்கள். எங்கள் குருகுல வாசத்தின் போதிருந்தே மற்றவர்களைவிட அம்மா அவர்களுக்கு என்னிடத்தில் அன்பும் மதிப்பும் அதிகம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத குருகுலவாசமே பொற்காலமாகும்.

1948-ல் எனக்குத் திருமணம். அய்யாவே நடத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால் செப்டம்பர் 9-ல் முல்லை வடிவேலு திருமணத்துக்கு, அய்யா முன்கூட்டியே ஒத்துக்கொண்டதால், ‘அண்ணாவை அழைத்துப்போ’ என்று கூறினார். அப்போது இருவர்க்கும் இடையில் ஊடல் குறைந்திருந்த நேரம். ‘அய்யாவிடம் கடிதம் வாங்கிவா’ என்றார் அண்ணா. சரியென்று எழுதி வாங்கி வந்தேன். அண்ணா, சம்பத், கே.கே. நீலமேகம், சேலம் ஏ. சித்தையன், டி.கே. சீனிவாசன், சண்முகவேலாயுதம் ஆகியோர் வந்தனர். மன்னை நாராயணசாமி (மாமா) வரவேற்பாளர்.

ஊருக்குப் போக அய்ம்பது ரூபாய் அய்யாவிடம் கை மாற்று வாங்கினேன். என் திருமணம், முடிந்து திரும்ப ஈரோடு வந்ததும் அதைத் திருப்பித் தந்தேன். Write off செய்துவிட்டேன் போ என்றார். திருமண அன்பளிப்போ?

1949-ல், குடும்பத்துடன் நான் மாயூரத்திலிருந்து அலுவல் பார்த்தபோதுதான், இயக்கத்தில் பிளவு நேரிட்டது. ‘நமக்கென்ன; அரசு ஊழியர்தானே?’ என்று நடுநிலை வகித்தேன். அய்யா என்னிடம் மிகுந்த நம்பிக்கையோடும் அன்போடும்; மணியம்மையாரைத் திருமணம் செய்த பின்னர்; அவரோடு வந்து, முதல் தடவை மூன்று நாட்களும், அடுத்த தடவை இரண்டு நாட்களும், என் வீட்டில் தங்கிச் சென்றார்கள், ஓய்வாக!

அப்போது என் தகப்பனார் சுந்தரமூர்த்தி, அய்யாவிடம் “You should not have missed Mr. Annathurai” என்றார். அய்யா சிரித்துக் கொண்டார்.

1951-ல் திருச்சியில் பெரியார் மாளிகையில் அய்யாவைப் பார்க்க மாயூரம் நண்பர் காந்தியும் நானும் சென்றிருந்தோம். அய்யா என்னிடம் கொஞ்சம் மாறுபாடாக நடந்துகொண்டதுபோல் தோன்றிற்று! இரவு நேரம்; ‘சாப்பிட்டு வா’ என்றார். அம்மா பரிமாறினார்கள். உண்டு வந்து எதிரில் உட்கார்ந்தேன். “ஏம்ப்பா! இந்த அண்ணாத்துரை, சம்பத்து, கருணாநிதி இவுங்கள்ளாம் மாயவரம் வந்தா, உன் வீட்லதான் தங்குறாங்களாமே?” என்று கோபத்துடன் அய்யா கேட்டார். “ஆமாங்க!” என்றேன் தயங்காமல், தவறென்று கருதாமல்! “அப்ப சரி!” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த பத்திரிகையைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினார் அய்யா! எட்டாண்டு அனுபவம்; எனக்கா புரியாது?

தன் வீட்டுப் பிள்ளை; இவன் தனக்குத் துரோகம் செய்தவர்களோடு கூடிக் குலவிவிட்டு, அதைப் பற்றிச் சிறிதும் வருத்தப்படாமல், ஆமாம் என்றும் ஒத்துக்கொள்கிறானே, என்ற ஆதங்கமும் ஆத்திரமும் அய்யாவிடம் மிளிரக் கண்டேன். இனி சமாதான முயற்சி நடக்காது. “போயிட்டு வாரேனய்யா!” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று மணியம்மையாரிடம் விவரம் கூறி, விடைபெற்று வந்தவன் தான்! பதினாறு ஆண்டு கழித்துதான் மீண்டும் அய்யாவைச் சந்தித்தேன்.

இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது, அண்ணாவும் சம்பத்தும் வருந்தினர். ஆனால் கலைஞர் மகிழ்ந்தார். “நீங்கள் மட்டும் அய்யாவுக்கு நல்ல பிள்ளையா?” என்று சிலகாலமாக இவர் என்னைக் கலைத்து வந்தவர். இனி என் சார்பு இவர் பக்கம் முழுமையாக இருக்குமல்லவா? அதனால் இவருக்கு மகிழ்ச்சி!

இடைக்காலத்தில் நான் அய்யாவைச் சந்திக்காவிடினும், என் பிள்ளைகளை அனுப்பி வந்தேன். அய்யாவும் அம்மாவும் மகிழ்ச்சியோடு விசாரிப்பார்கள். “அப்பாவைப் போலவே இருக்கிறீர்களே? (அப்பாவியாக)” என்பாராம் அய்யா!

1967-க்குப் பிறகு அடிக்கடி சந்தித்தேன். “அண்ணா காவியம்” எழுதி முடித்த பிறகு, அய்யாவிடம் மதிப்புரை வாங்க விரும்பினேன். கையெழுத்துப் பிரதியைக் கொண்டு போய்க் கொடுத்து, என்.எஸ். சம்பந்தம் அவர்களை நினைவூட்ட வேண்டினேன். 15-12-72 அன்றையத் தேதியிட்டு, அய்யா அவர்கள், பாராட்டுரை என்ற தலைப்பில், தம் கைப்பட மதிப்புரை எழுதித் தந்தார்கள். “அண்ணா காவியம்” நூலில் அதை அப்படியே பிளாக் செய்து அச்சிட்டுள்ளேன். அதில் ஒரு பகுதியில் அய்யா அவர்கள்...

என்று குறிப்பிடுகிறார்.

அய்யா அவர்களே இப்படிச் சொல்லிவிட்டதனால்தானோ என்னவோ, நான் முதன்முதலாக இந்த உரைநடை நூலை எழுதத் துணிந்தேன்! ஏனெனில், என்னுடைய பூக்காடு, கனியமுது, சுமைதாங்கி, அண்ணா காவியம் ஆகியவை கவிதை நூல்களாகும். இந்த முதலாவது உரைநடை நூலிலும், என்னுடைய நடை என்பதாக எதையும் கையாள இயலவில்லை! அய்யாவைப் பற்றிய நூலாகையாலும் அய்யாவின் உரைகளை அப்படியே எடுத்தாள வேண்டியிருப்பதாலும் நான் எனக்கென ஒரு தனி நடையையோ, கருத்தையோ இங்கு வெளிப்படுத்திவிட வாய்ப்பில்லை.

அண்ணாவோடு நான் பழகியதற்குக் காணிக்கையாகச் சிறுநூலாயினும் முழுநூலாகவும், அண்ணாவுக்கு என் கவிதைகளில் இருந்த ஈடுபாடு, காரணமாகக் கவிதை நூலாகவும் அண்ணா காவியம் இயற்றினேன். கலைஞர் வெளியிட்டார். தமிழகத்துப் பல்துறைச் சான்றோரும் ஆன்றோரும் ஏராளமாக அதைப் பாராட்டி முடித்து விட்டனர்.

என் இயல்பின்படி அய்யாவுக்கும் “பெரியார் காவியம்” என்ற கவிதை நூலினைத்தான் இயற்ற எண்ணி, ஓரளவு தொடக்கமும் செய்திருந்தேன். இந்நிலையில் ஓர் நாள், என் நண்பர் மூவேந்தர் அச்சக உரிமையாளர் முத்து, என்னைத் தொலைபேசியில் அழைத்துப் “பெரியார் வரலாற்றை நீங்கள் உரைநடையில் எழுதினால் பொருத்தமாயிருக்குமே! நண்பர் பி.எல். ராஜேந்திரனும் அப்படியே செய்யச் சொல்லி உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். அதையும், இந்தப் பெரியார் நூற்றாண்டு விழா நிறைவிலேயே முடித்தால் நலமாயிருக்கும்” என்றார். இவர்கள் என் நலம் நாடுவோராதலின், தயக்கத்துடனேயே ஒத்துக் கொண்டேன்.

புத்தகத் துறை வித்தகரான என் உழுவலன்பர் ஒருவர் இக்கருத்தை ஆதரித்தார். துணிந்துவிட்டேன். அவர் பல அரிய ஆலோசனைகள் வழங்கினார். அவ்வாறே, வாழ்க்கை வரலாறு பற்றிய பொதுவான சில ஆங்கில நூல்களை உடனே நான் படிக்கத் தொடங்கினேன். ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனோ, விமர்சனக் கண்ணோட்டத்துடனோ நான் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் புகவில்லையாதலால், நான் என்னென்ன படித்தேன் என்பதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் பெரியாரை நான் நன்கு படித்தவன்; என் சகாக்களில் மற்றவர்களைவிட அதிக ஆண்டுகள் அவரோடு வாழ்ந்தவன்; அவர் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக விளங்கியவன் என்ற தகுதியோடு இதை எழுதத் துணிவு பெற்றேன்.

பெரியாரே தன்னுடைய (Autobiography) சுயசரித்திரத்தை எழுதியிருக்க வேண்டும். சிந்திக்கவும், உரையாடவும், சொற்பொழிவாற்றவும், தலையங்கம் தீட்டவும், பயணம் செல்லவுமே அவருக்கு நேரமில்லை. ஓய்வாக அமர்ந்து தன் வாழ்க்கை வரலாறு எழுதிட அவரால் எப்படி இயலும்? 1939-40 ஆண்டுக்குப் பிறகு, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து எழுதிட, இன்னொரு சாமி சிதம்பரனாரும் உண்டாகவில்லை! சரி, இதுவரையில் வேறு யாரும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு (Biography) எழுதத் தொடங்கவும் இல்லையாதலால் நாமே எழுதுவோம் என்று முடிவெடுத்து விட்டேன். ஆனாலும், திராவிடர் கழகத்தார், அய்யா அவர்களின் நூற்றாண்டு நிறைவில் ஏதாவது, வெளியிடக்கூடுமே என்ற அய்யம் எழுந்தது. அதனால், என் முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்து விடுவோம் என்று கருதி, என் பழைய நண்பர் கி. வீரமணியைச் சந்தித்து, - “தந்தை பெரியார் என்ற தலைப்பில் அய்யாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு - A complete biography of Thanthai Periyar - in prose - எழுதப் போகிறேன். நீங்கள் எழுதுவதானாலும் நான் தடுக்க முடியாது. இந்தத் தலைப்பை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள்-” என்றேன்.

“சரியான முடிவும் நீங்களே இதைச் செய்வதுதான் மிகப் பொருத்தம்" என்று மகிழ்ச்சி தெரிவித்து, அன்பின் அடையாளமாய் ஒரு பார்க்கர் பேனா கொடுத்தார். இதற்குப் பிறகுதான் அரசுத் தரப்பிலிருந்து பெரியார் வாழ்க்கை வரலாறு வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்தது. அது மிகப்பெரிய அளவில் இருக்கும்; நம் புத்தகம் சிறியது தானே; ஒன்றையொன்று பாதிக்காது என்ற துணிவு பெற்றேன் (அரசுப் புத்தக அலுவல் இன்னமும் வளர்ச்சி பெறவில்லை).

அய்யாவைப் பற்றி நமக்கு மற்றவர்களைவிட நிறையத் தெரியும்; சரியாகவும் தெரியும்; என்றாலும், எழுதும்போது மெய்ப்படுத்தும் ஆதாரங்கள் வேண்டுமே, எங்கே போவது? - அய்யாவைப் பற்றிய அனைத்துச் சான்றுகளும் ஒருங்கே கிடைக்குமிடம் பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகம் ஒன்றுதான் என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். ஆனால், அது lending library அல்ல; அங்கேயே சென்றுதான் படிக்க வேண்டும் என்பது, நான் முன்னர் அறிந்திராத செய்தி. நானே அந்த நூலகத்துக்கு நூற்றுக்கணக்கில் நூல்கள் வழங்கிய வள்ளல்தான்! எனினும் விதி தளர்த்தப்பட முடியாதே! ஆகவே, எடுப்புச் சாப்பாடு, தண்ணீர், காப்பி சகிதம் ஆய்வகத்திற்குப் படையெடுத்தேன். காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை ஓயாத உழைப்பு ; ஒருவனாகவே! பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வகத்துக்கு நான் எப்படி நன்றி பாராட்டுவதோ, தெரியவில்லை.

இடையிடையே சிற்சில வால்யூம் தவிரக் “குடி அரசு” “திராவிடநாடு”, “விடுதலை” ஃபைல்கள் நன்கு பராமரித்து வைக்கப்பட்டு, உதவியாயிருந்தன. சில ஃபைல்களை “விடுதலை” அலுவலகத்திலும் பெற்றேன். குறிப்பெடுத்து, வீடு திரும்பி, எழுதத் தொடங்கினேன். ஏறத்தாழப் பத்து மாதக் கடின உழைப்பு. இந்த அலுவல் தொடங்கிய நாள்முதல், அன்றாட முன்னேற்றம் குறித்து, டயரி எழுதத் தொடங்கினேன்; திரும்பிப்பார்க்க உதவுமே என்று! மலைப்பாகத்தான் தோன்றியது.

இந்த நூலை எழுதும்போதும் பதிப்பிக்கும்போதும் நான் யாரையும், எதையும் சார்ந்து இருக்கவில்லை; யாருக்கும், எதற்கும் கட்டுப்பட்டு இருக்கவில்லை; யாருடைய, எதனுடைய தாட்சண்யத்திற்கும் ஆட்பட்டு இருக்கவில்லை! எனக்குச் சரியென்று தோன்றிய முறையில், என் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப எழுதத் தொடங்கினேன். அதையே ஒரு முழுமையான, நிறைவான வெற்றியாகவும் கருதுகிறேன். முடிந்தவரை, தவறில்லாத உண்மைகளை எழுதப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். நிகழ்ச்சிகளை நிரல்படத் தொகுத்துள்ளேனே தவிர, என் கருத்துக்களை எங்கும் திணித்திட முடியவில்லை. ஒரு சுயமரியாதைக்காரன் என்பதை மட்டும் மறக்காமல், எழுதினேன். தஞ்சையில், சுயமரியாதை இயக்கப் பொன்விழாவில் 22-1-76 அன்று மணியம்மையார், எனக்குக் கேடயம் வழங்கினார்கள். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் 15-9-79 அன்று கி. வீரமணி, எனக்குப் ‘பெரியார் பெருந்தொண்டர்’ பட்டயம் வழங்கினார்.

தமிழில் சுய சரித்திரமும், வாழ்க்கை வரலாறும் பெருமளவில் எழுதப்படலில்லை. வெளிவந்துள்ள சில நூல்களில் சாமி சிதம்பரனார் வரலாற்று எழுதிய “தமிழர் தலைவர்” மிகச் சிறந்த வாழ்க்கை நூலாகும். பெரியதொரு தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் என்பதோடு; ஒரு biography எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கும் அது மிகச் சரியான எடுத்துக்காட்டாகும். 40 ஆண்டுகட்கு முன்னர் அது எழுதப்பட்டதாயினும், அந்நூல் என்றுங் குன்றாத பொலிவுடன், கூடியதாகும். அதைப்போல இன்னொரு நூல், அதே தலைவரைப் பற்றி எழுத முடியுமா? என்ற அய்யமும் அச்சமும் என்னை ஆட்கொண்டன. அவர் எழுதி முடித்துள்ள காலமவரை என் எழுத்தைச் சுருக்கிக் கொண்டேன். பிறகுதான் விரிவாக நடந்தேன். சாமி சிதம்பரனார் எங்கள் மாவட்டத்துக்காரர், எனக்கும் அறிமுகமானவர். அவர் எழுத்து வழிகாட்டிற்று. அடுத்து, ‘இது பெரிய முயற்சி ஆயிற்றே; நம்மால் இயலுமா?’ என்ற தயக்கம் பிறந்த போது, திருச்சி நண்பர் வே. ஆனைமுத்து, மனக்கண்முன் தோன்றினார். திருச்சி சிந்தனையாளர் கழகச் சார்பில், அவர் தொகுத்துள்ள பெரியார் சிந்தனைகள் மூன்று பகுதியும், மாபெரும் சாதனையாகும். அவரை எண்ணியபோது மலைப்பு ஓரளவு நீங்கியது.

தன்னையீன்ற சின்னத்தாயம்மையார் மறைந்தபோது பெரியார் எழுதியுள்ள கட்டுரை, மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியம். பன்னீர் செல்வம், நாகம்மையார் மறைவின்போது தீட்டியவை, ஒப்பற்ற கையறு நிலை இலக்கியங்கள். அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தின்போது அவர் எழுதி அனுப்பிய மடல்கள், தலை சிறந்த பயணக் கட்டுரைகள். இராமாயண ஆராய்ச்சி ஒன்றே அவருக்கு பி.எச்.டி வாங்கித்தர வல்லது. தாமே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர். ‘இனிவரும் உலகம், தத்துவ விளக்கம்’ இரண்டும் ஆங்கிலத்தில் இருந்தால் நொபெல் பரிசு அவரைத் தேடிவந்திருக்கும். அவர் தீட்டிய தலையங்கம் அத்தனையும் ஈட்டியின் முனைகள். அவ்வளவு பெரும் எழுத்தாளர், தமது சுயசரித்திரம் எழுதாமல் விட்டதால், எனக்குக்கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடிய தைரியம் பிறந்து விட்டதல்லவா?

உலகத்திலேயே தன்னிகரற்ற சுயசிந்தனையாளர், பகுத்தறிவு ஊற்று, தீர்க்கதரிசி, பெரியார். நல்வாய்ப்பாக இவருக்கு ஆங்கிலம் தெரியாது. தெரிந்தால், இவர் கருத்துக்கள் இரவல் என்றும் சொல்ல, இங்கு ஆள் இருப்பர்! உலகத்தில் எத்தனையோ சிந்தனைச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சொல்லாகவும் எழுத்தாகவும் தங்கள் அறிவுக் கருவூலத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள். ஆனால், பெரியாரைப்போலப் பகுத்தறிவின் அடிப்படையில் ஓர் இயக்கத்தையே உருவாக்கிய பெருமை பெற்றவர் உலகில் வேறு எவருமே இலர்! நிகழ்காலமும், எதிர்காலமும் இவரது இணையற்ற அறிவுச் சுரப்பைத் தொழுது வரவேற்கத் துடித்து நிற்கின்றன!

இத்தகைய ஒரு மாமேதையின் வாழ்க்கைச் சரிதம் வரைவது எளிதா? ஒரு சரித்திராசிரியரோ, நாவலாசிரியரோ தத்தம் நோக்கங்களை, விருப்பங்களைத் தம் நூலில் வலியுறுத்த முடியும்; ஆனால், ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியரால் இது இயலாது! தனக்குக் கிடைக்கும் எல்லாவிதமான செய்திகளையும் திரட்டித், தன் நூலின் நாயகரின் உண்மையான குண நலன்கள் வெளியிடப்பட, எதையும் குறைத்தோ மறைத்தோ திரித்தோ கூட்டியோ கழித்தோ கூறாமல், அன்னாரின் பண்புகளைப் பிறர் அறிந்திடும் ஆர்வம் மிகுந்திட, மெய்யை உணரும் ஆவல் நிறைந்திடச், சுவை குன்றாது, அழகுடன் அமைத்துத் தரவேண்டும்.

அய்யாவோ நம் கண்முன் வாழ்ந்தவர். மூன்று தலைமுறையினர் அவரை முழுமையாய் அறிவர். வாழ்க்கையில் இரகசியமே கிடையாது. அவர் பேச்சில் - எழுத்தில் தெளிவின்மையோ, குழப்பமோ, இருபொருள் தரும் தன்மையோ (ambiguity) இருப்பதில்லை. மூடிமறைத்துப் பேச அவர் அறியார். எல்லாமே வெளிப்படை. அச்சம் தயைதாட்சண்யத்துக்கு அப்பாற்பட்டவர். காலமெல்லாம் தாம் செய்வது நன்றிகிட்டாத பணி மட்டுமல்ல; யாருக்காகப் பாடுபடுகிறோமோ அவர்களே உண்மை புரியாமல் எதிர்க்கக்கூடிய பணி என்பது நன்கு தெரிந்திருந்தும், அதனையே தொடர்ந்து ஆற்றி வந்தவர்.

அதனால், அவரைப்பற்றி எழுதவரும் போதே, சிலரது வெறுப்போ மறுப்போ எதிர்ப்போ ஏளனமோ வரவேற்கும் என்பது தெரிந்தே தொடங்கினேன். நானும் நன்றி கிட்டாப் பணிசெய்ய அவரிடம் நன்கு பயின்றவனல்லவா? பெரியார் வரலாறு எழுதுகிறேன் என்று கேள்விப்பட்டதிலிருந்து பல நல்லெண்ண நண்பர்கள் எனக்குப் பாராட்டும் ஊக்கமும் நல்கினர். என் வறிய நிலை புரிந்தோர், தனிப்பட்ட, சொந்த முறையில் பதிப்பித்து, வெளியீடும் செய்கிறேன் என்றதும், வியந்தனர்.

பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதியதால், என்னை நான் தமிழ்நாட்டு ஜேம்ஸ் பாஸ்வெல் என்று கருதிக்கொள்ள இடமுண்டு; எனினும், நான் அதற்கு ஒப்பவில்லை. காரணம் நான் பாஸ்வெல் ஆனால், தந்தை பெரியார், டாக்டர் சாமுவெல் ஜான்சன் ஆகவேண்டுமே! ஜான்சன் ஆங்கில இலக்கியத்துறை ஒன்றில் மட்டும் நிகரற்ற மேதை. தந்தை பெரியாரோ அனைத்துத் துறைகளிலும் ஒப்பாரும்மிக்காரும் அற்ற சுயசிந்தனைப் பகுத்தறிவுச் சுரங்கம். அவரோடு ஒப்பிட்டுச் சொல்லத்தக்கவர் உலகில் யாருமிலர். எனவே, பெரியாரின் தொண்டனாக இருந்தே இந்த எழுத்துப் பணியினை நிறைவேற்றியுள்ளேன்.

சென்னை வானொலி நிலையத்தில் 17-9-1978-ல் “பெரியார் ஈ.வெ.ரா. வின் சமுதாய சீர்திருத்தப் பணிகள்” என்ற தலைப்பில் 4 நிமிடங்கள்; 9-5-1979-ல் “பெரியாரின் இதயப் பாங்கு” எனுந்தலைப்பில் 12 நிமிடங்கள் பேசவும்; 24-12-1979-ல் “பெரியார் கண்ட சமுதாயம்” என்கிற தலைப்பின் கீழ் 20 நிமிடங்கள் கலந்துரையாடவும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. (வானொலிக்கு நன்றி) தஞ்சையில், திராவிடர் கழகம் நடத்திய பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின் முதல் நாள், 15-9-1979 அன்று, என் முன்னிலையில் கவியரங்கம் நடைபெற்றது.

அச்சுக்குப்போகும் வரையில் “தந்தை பெரியார்” நூலின் கையெழுத்துப் பிரதிகளை நான் யாருக்கும் காட்ட விரும்பவில்லை. எனக்கு அய்யமேற்படுங்கால், நினைவாற்றல் மிக்க நண்பர் என்.எஸ். சம்பந்தம் அவர்கள் துணையை நாடினேன். அவரும் மனம் உவந்து உதவினார். அச்சாகத் தொடங்கியதும், காகிதம் ஒரேமாதிரி கிடைக்காத பிரச்சனை. காத்திருப்பதால் பயனில்லை என்று கிடைத்த காகிதத்தில் அச்சியற்றினேன்.

அய்யாவின் அழகான transparency படம் ஒன்றை என் அருமை நண்பர் வழங்கினார். அதை முகப்பாக வைத்துத், தமது திறமையான ஓவியக் கோலங்களால், அட்டையினை அலங்கரித்திட, ஓவிய நிபுணரும் என் இனிய நண்பருமான கோபுலு கனிவு காட்டினார். அனுபவசாலிகளான சில நல்ல தோழர்கள் - அவர்கள் பெயரைக் குறிப்பிடுவது அவர்களுக்கே தீங்காக முடியலாம்! - அவ்வப்போது ஏற்ற யோசனைகள் அளித்தனர்.

எழுத்தாளரும் அச்சக உரிமையாளருமான அன்பர் ஜி.டி. முத்து, இதை அவர் சொந்தப் பணியாகவே ஏற்றுத் துவக்கமுதல் தொண்டாற்றினார். கனரா பிரிண்டர்சார் மேலட்டையினை அழகுற அச்சிட்டனர். இவர்களுக்கெல்லாம் “நன்றி” என்ற மூன்றெழுத்தால் என் உள்ள உணர்வுகளை வெளியிட ஒல்லுமா?

இன்றைக்கு நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியாரை ஆய்வு செய்வதால், வரலாற்றில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் (Factual errors) வந்துவிடாமலிருக்க அதிகக் கவனம் செலுத்தினேன். என்னைமீறி ஏதாவது குற்றங்குறைகள் தவறுகள் பிழைகள் இருப்பின், அன்பர்கள் சுட்டிக்காட்டினால், வணங்கி ஏற்றுக்கொள்வேன்.

வணக்கம்.

எஸ். கருணானந்தம்.
24-12-1979