உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார், கருணானந்தம்/018-021

விக்கிமூலம் இலிருந்து


 16. சுழன்றார்
விடுதலையானார் - வடநாடு பயணம் - பெரியார் திடல் அமைப்பு - தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்பு - காமராசர் கரத்தைப் பலப்படுத்துதல் - காமராசர் விலகல் - உச்சவரம்பில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குக் கண்டனம் - இந்தி எதிர்ப்புக் கலவரங்கள் - இராமாயண எரிப்பு - 1958 முதல் 1966 முடிய

“கூண்டுக்குள் சிங்கம். இன்று 15 ஆம் நாள். இன்னும் எத்தனை நாள்?” என்ற பெட்டிச் செய்தி, பெரியார் படத்துடன், விடுதலை தலையங்கப் பகுதியின் மேல், தினந்தோறும் இடம் பெற்று வந்தது. அரசியல் சட்ட எரிப்புப் போரில் அரசின் கணக்குப்படி, 4000 பேர் சிறைக்கோட்டம் புகுந்தவர்கள். மாணவர்கள், பெரியார் சிறையிலிடப்பட்டதை கண்டித்து, வகுப்புகளுக்குச் செல்ல மறுத்தார்கள் சில ஊர்களில் விழாப் கொண்டாடுவதில்லை; சுவையான உணவு அருந்துவதில்லை; சுகபோகங்களை விரும்புவதில்லை; பெரியார் விடுதலையாகும் வரை பார்ப்பனர்களுக்கு முடிவெட்ட மாட்டோம்; சலவை செய்ய மாட்டோம் என்ற ரீதியில் பல்வேறு வகையான சபதங்களை மக்கள் மேற்கொண்டார்கள். 30.12.57 அன்றுதான் பார்ப்பனர் உணவு விடுதிமுன் கடைசி நாள் மறியல் இது 5.5.1957 அன்று துவக்கப்பட்டதல்லவா?

9.12.57 அன்றுதான் பிரதமர் நேரு திருச்சியில் பெரியாரை, மிகத் தரக்குறைவாகவும், தமது தகுதி பதவிகளுக்கு இழிவு நேரும் வகையிலும், இழித்தும் பழித்தும் பேசினார். அவர் மீண்டும் 1958 ஜனவர் 6 சென்னை வருவதாகத் திட்டமிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் 29.12.57 ல் தனது நாகர்கோயில் பொதுக் குழுவில் தீர்மானித்தபடிப், பெரியாரை இழிவாகப் பேசிய நேருவுக்கு, பிரமாண்ட அளவில் கருப்புக்கொடி காட்டி தமிழ்மக்களின் ஏகோபித்த எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டது. சிறையிலிருந்தவாறே பெரியார், அநாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கவேண்டி, “இந்த முறை திராவிடர் கழகம் நேருவுக்குக் கருப்பு கொடி காட்ட வேண்டாம்” என்று தெரிவித்து விட்டார். சட்ட மன்றம் நடந்து கொண்டிருந்தது. காமராசத் முதல்வராயிருந்ததால், எப்படியாவது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தைத் தவிர்த்திடப் பல வழிமுறைகளைக் கையாண்டார். “சண்டே அப்சர்வர்” பி. பாலசுப்ரமணியம் பகடைக் காயாகப் பயன்பட்டார். கருப்புக் கொடி வேண்டாம். அல்லது ஒரு இடத்தில் மட்டும் பிடிக்கலாமே என்று இவர் அண்ணாவிடம் பேசினார்; அண்ணா இணங்க மறுத்தார். பெரியாரிடம் தவறான தகவல் அதாவது அண்ணாவே பயந்து கொண்டு பின் வாங்குவதாகச் செய்தி திரித்துக் கூறப்பட்டது. கருப்புக்கொடி பிடிக்க அனுமதி தரப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் கூறினார். ஆனால் நடந்தது வேறு! 4.1.1958 மாலை அண்ணா, கலைஞர் ஆகிய முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தி. மு. கழகத்தின் எம்.எல்.ஏ 14 பேரும், எம்.பி. 2 பேரும் சிறைப்பட்டனர். நடிகர்களும் கைதாயினர். எனினும் மீனம்பாக்கத்திலிருந்து மவுண்ட்ரோடு வரை 6.1.58 அன்று நேரு கருங்கொடிக் காடு கண்டு, பாதை மாற்றிச் செல்ல நேரிட்டது.

பெரியாருக்குச் சிறையில் அஜீரணமும், பல தொல்லைகளும் ஏற்பட்டன. 5.1.58 அன்று சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் ரத்னவேல் சுப்ரமணியம் போன்றோர், பெரியாரின் வயதையும் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு, அவரை உதகையில் தங்கச் செய்வதே உசிதம் என்று பரிந்துரைத்தனர். ஆனால் பெரியாரோ, தாம் சிறையிலிருப்பதுதான் நியாயமென்று கூறி, வெளியில் வர மறுத்து விட்டார். பின்னர் அவரை மருத்துவமனையில் தங்கச் செய்வதே மிகுந்த சிரமமாகி விட்டது அவர்களுக்கு எப்படியோ இந்த முறை பெரியார் விடுதலையாகும். வரை சென்னைப் பொது மருத்துவ மனையில் நீடிக்கும் நிலை வாய்த்தது! உண்மை தெரியாத சிலர், பெரியார் சிறைக்குப் பயந்து மருத்துமனையிலிருப்பதாக எண்ணினர். “பெரியாரை விடுதலை செய்யக் கோரி நாங்கள் கிளர்ச்சி செய்யத் தயாராயிருக்கிறோம். ஆனால் பெரியாரே இதை விரும்பமாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்? என்று அறிஞர் அண்ணா சொன்னது 7.1.58 “விடுதலை” ஏட்டிலும் வெளியாயிற்று. உண்மை தான்! பெரியாரை விடுதலை செய்யக் கோரி யாரும் தீர்மானங்கூட நிறைவேற்றக் கூடாது எனத் திராவிடர் கழகம் ஆணையிட்டது. அத்துடன், பெரியார் மருத்துவமனையிலிருந்தாலும் அது சிறைதான்; எனவே யாரும் பார்வையாளர் வரக்கூடாது என்பதும் வற்புறுத்தப் பட்டது. 8.5.58 அன்று மணியம்மையார், சிறைப்பட்டிருந்த தோழர்களின் குடும்பத்தினரைக் கண்டு உரையாடினார்.

6ந்தேதி சென்னையில் நடத்த அமளிகளுக்கு மூலக்காரணம் பிரதமர் நேருதான் என்றும், மேலும் இந்தித் திணிப்புக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆங்கிலம் நீடிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் ராஜாஜி கருத்துரை வழங்கினார். அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், தென்னகத்துக் காங்கிரஸ் கல்வி அமைச்சர்கள் சார்பில், சி. சுப்ரமணியம் வாதாடி, 1965க்குப் பிறகு ஆங்கிலம் நீடிக்க வகை செய்யக் கேட்டுக் கொண்டார். அது ஏற்றுக் கொள்ளப் பெற்றது. டாக்டர் ராம் மனோகர் லோகியா, அரசு அனுமதியோடு பெரியாரை 23.1.68 ல் சந்தித்துப் பேசினார்; சாதி ஒழிப்புப் பணிகளைப் புகழ்ந்தார். பின்னர் தன் ஊருக்குச் சென்றதும் பெரியாரின் விடுதலை கோரிச் சொற்பொழிவாற்றினார். பினாங்கு நகரில் பெரியார் பிறந்த நாள் மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.

பெரியார் வெளியில் இல்லாவிடினும் தொய்வின்றி ஆக்கப் பணிகள் நடைபெற்றன. திருச்சியில் சாதி ஒழிப்பு மாநாடு நடை பெற்றது. சனவரி 26 குடி அரசு நாள் துக்க நாள் என்று வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பேச்சாளர்கள் கண்ணியமாகவும், யாரையும் குறை கூறாமலும் தாக்காமலும் பேச அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் யாரோ ஒருவர் நேரு படத்தைக் கொளுத்தி 3 நாள் சிறைத்தண்டனை பெற்றார். சீரங்கத்தில் அரசு வழக்கறிஞர் ஈ. வி. சீனிவாசாச்சாரியார் முகத்தில் அக்கினித் திராவகம் வீசியதாக, சின்னசாமி தியாகு என்ற இருவர்மீது 28.1.58ல் வழக்குத் தொடரப்பட்டுப், பின்னர், 8.8.58ல் அவர்கள் நிரபராதிகளென விடுவிக்கப்பட்டனர். இந்த இரு செயல்களுக்கும், திராவிடர் கழகத்துக்கும் தொடர்பில்லையென்பது கழகத்தின் சார்பில் தெளிவாக்கப் பெற்றது. சி.பா ஆதித்தனார் 9.2.58 அன்று தமிழ்நாடு விடுதலை இயக்கம் தொடங்கினார்.

சிறையிலிருந்தவாறே பெரியார், நேருமீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் துறையூர் ரங்கசாமி எம், எச் ராவ் இருவரும்! 12.2.58 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழக்கு, ஆக்டிங் பிரதம நீதிபதி பி. ராஜகோபாலன், நீதிபதி எஸ் ராமசந்திர அய்யர் ஆகியோரால் 22.2.58 அன்று தள்ளுபடி செய்யப் பெற்றது. கோவைச் சிறைக்கு மணியம்மையார் சென்று அங்கிருந்த தோழர்களைக் கண்டு பேசினார். சிறையிலுள்ள தோழர்களின் குடும்பத்துக்கு உதவுமாறு தி.பொ. வேதாசலனார் அறிக்கையில் வேண்டினார். வடவேற்குடி திருஞானசம்பந்தம், நீடாமங்கலம் சரவணன் (இராவணன்) போன்றார் சுறுசுறுப்புடன் பணியாற்றினர், முந்திரா ஊழலில் டி.டி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகல், நெய்வேலியில் பார்ப்பனர் ஆதிக்கம், காமராசருக்கு ஏழை மாணவர் கல்வியில் அக்கறை, அபுல்கலாம் ஆசாத் மரணம், தண்டணை முடிந்து விடுதலையாகும் தோழர் தோழியர்க்கு அன்றாடம் ஆங்காங்கு வரவேற்பு ஆகிய செய்திகளை “விடுதலை” ஏடு நாடோறும் வெளியிட்டு வந்தது.

சிறைக்கொடுமை தாளாமல் தொண்டர்கள் அவதியுற்றனர். 9 மாத தண்டனையில் இருந்த குருசாமி பொது மருத்துவமனைக்குக் கொணரப்பட்டார். பல ஊர் சிறைகளிலும் தோழர்கள் உடல் நலிவு கொண்டனர். துன்பத்தின் எல்லையாக 9.3.58 அன்று திருச்சி சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10.3.58 அன்று மாயூரம் மணல்மேடு வெள்ளைச்சாமியும் பலி ஆயினர். பெரியார் கேள்விப்பட்டதும் சோகமே உருவாயினார். உடனே வீரமணி வாயிலாகச் சொல்லி அனுப்பினார். மணியம்மையார் திருச்சி விரைந்தார். முதலில் அரசு மறுத்தது. பின்னர், இருசடலங்களையும் சுடலைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது. திருச்சியில் 11.3.58 அன்று லட்சக்கணக்கான மக்களடங்கிய ஊர்வலம், மணியம்மையார் தலைமையில், இரு சவங்களையும் ஏந்திச் சென்றது. நாடெங்கும் கண்டனக்கணைகள் பாய்ந்தன! சிறையிலிருந்த பிற தோழர்கள் சாப்பிட மறுத்தனர் சென்னையிலும் மாபெரும் கண்டன ஊர்வலம் 16.3.58 அன்று நடந்தது, சட்டமன்ற மேலவையில் வி.வி. ராமசாமியின் கேள்வி ஒன்றுக்குப் பெரியாரை, விடுதலை செய்ய முடியாது, என பதிலளித்தார் உள்துறை அமைச்சர் பக்தவத்சலம்

எட்டுமாத காலமாக அன்றாடம் நடைபெற்ற, 1,010 பேரைச் சிறைக்கோட்டம் அனுப்பிய முரளி கஃபே பிராமணாள் எழுத்து அழிப்புப் போராட்டம் வெற்றியில் முடிவுற்றது. 1958 மார்ச் 22 ம் நாள் முரளீஸ் அய்டியல் காபி சாப்பாடு ஒட்டல் என்று பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடுகள் பல மாவட்டங்களிலும் நடைபெற்ற வண்ணமிருந்தன. குன்றக்குடி அடிகளார் டாக்டர் மா. ராசமாணிக்கனார், டி.வி சொக்கப்பா, பட்டுக்கோட்டை வழக்கறிஞர் எம் . எஸ். கிருஷ்ணசாமி பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன், எம்.எல்.ஏ வீர கே. சின்னப்பன். வீரமணி. மணியம்மையார், எஸ் ராமநாதன், ச.சோ பாரதியார் போன்றோர் பங்கேற்று நடத்தினர்.

நாம் தமிழர் இயக்கம், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியும் சேர்ந்த தனித் தமிழ்நாடு கோரியது. இது அபத்தம் என்று கண்டித்தார். பண்டிதநேரு. தாம் பதவி விலகப் போவதாக ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்தார். ‘இவர் விலகமாட்டார்; பிரதமராகத்தான் சாவார்’ என்று “விடுதலை” அறுதியிட்டுக் கூறியது. அவ்வாறே, பின்னர், சிலநாள் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று ஸ்டண்ட் செய்து விட்டார் நேரு. மொர்ரார்ஜி தேசாய் டி.டி.கே இடத்தில் நிதியமைச்சராகப்பட்டார்.

1958 மே 7ம் நாள் மணியம்மையார் மீதும், தஞ்சை நெடுமாறன் மீதும் 153A பிரிவுப்படி ஒரு வழக்குத் தொடர்ந்தது அரசு; இளந்தமிழா புறப்படு போருக்கு என்ற கட்டுரையை வெளியிட்டதற்கும், எழுதியதற்கும்! பெரியாருக்கு மருத்துவமனையிலும் நல்லசுரம் கண்டிருந்தது. அப்படியும் அவர் தினந்தோறும், ‘எப்போது ஜெயிலுக்குள் போவது?’ என்று கேட்ட வண்ணம் இருந்தார். தேவிகுளம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வென்றார்; காங்கிரஸ், கண்ணீர்த்துளி வேட்பாளர்கள் தோற்றனர். தூத்துக்குடி தேர்தலில் காங்கிரஸ் வென்று, கம்யூனிஸ்ட், கண்ணீர்த் துளி தோற்றன. பி. பாலசுப்ரமணியம் 22.5.58 அன்று மறைந்த போது, பெரியார் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

“கூண்டுக்குள் சிங்கம். இன்று 156வது நாள், இன்னும் எத்தனை நாள்? ” என்று 18.5.58 தேதி வரை “விடுதலை” வெளியிட்டது. ஆனால் 19.5.58 “விடுதலை” கூண்டுக்குள் சிங்கம். இன்னும் 25 நாட்களே” என்று முடிவாகச் செய்தி பிரசுரித்தது. 1958 ஜுன் 13 ஆம் நாள், பெரியார், காலை 10 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார். பொது மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து, நகர்ந்து, வெளியில் வந்ததும், பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமி, வரவேற்று, மகிழ்ச்சிப் பெருக்கால் மலைப்போல் குவித்தனர் மலர் மாலைகளை, பெரியார் நேரே மத்திய சிறை சென்று, பின்னரே இல்லம் திரும்பினார். அன்று மாலை, யானைமேல் அம்பாரி போல் அலங்கரிக்கப்பட்ட அழகுமிகு தேரில் பெரியார் அமர்த்தப்பட்டு, 4 மைல் நீள ஊர்வலம், எம். ஆர். ராதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தோழர்களான எம்.கே.டி சுப்ரமணியம், எம். எஸ். மணி ஆகியோர் முன்னின்று நடத்தினர், “நான் வெளியே வந்துவிட்டேன். நாலாயிரம் பேரில் இன்னும் 1500 பேர் சிறைச்சாலையில்தான் கொடுமை அனுபவிக்கிறார்கள்” என்றார் பெரியார். ஆறுமாத - ஒய்வுக்கு விடைகொடுத்து, அடுத்த நாளே சுற்றுப்பிராயணம் தொடங்கினார் பெரியார். மே 14 திருச்சி, 15 குடத்தை , 16 தஞ்சை , 17 திருவாரூர், 18 திருச்சி, 19 ஈரோடு, 20 சேலம், 22 மதுரை, 23 விருதுநகர், 24 பெரியகுளம், 25 தேனி, 26 காரைக்கால், 29 சிதம்பரம், ஜுன் 1 சின்ன சேலம், 2 கடலூர், 3 சிதம்பரம், 5-6 மன்னார் குடியில் சாதி ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு மாநாடுகள். இங்குதான் பெரியார் அறிவித்தார், “சாதி ஒழிப்புக்கு நாடு பிரிவினையே முன்னணித் திட்டம். தமிழக விடுதலையை வற்புறுத்தத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள இந்திய யூனியன் படத்தை எரிக்கப்படும்” என்பதை.

17.6.58 ல் சென்னைத் துறைமுகத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் உயரிழந்தனர். உடனே பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. பழைய நாள் தொழிற்சங்கத் தலைவரும் பெரியாரின் நண்பருமான சர்க்கரைச் செட்டியார் 14.6.58 அன்றும், சிறந்த மருத்துவமேதையும் வள்ளலுமான டாக்டர் குருசாமி முதலியார் 27.6.58 அன்றும், மறைந்தனர். சிறைக்கோட்டதிலிருந்து குத்தூசி குருசாமி, ஏ.பி. சனார்த்தனம், ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் விடுதலை பெற்றனர். புரட்சிக்கவிஞரின் “குயில்” உரிமைக் குரலெழுப்பிப் பாடிப் பறந்து கொண்டிருந்தது. 7.5.58 அன்று மணியம்மையார் மீது தொடரப்பட்ட வழக்கில், 18.8.16 அன்று, ‘100 ரூபாய் அபராதம்; கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறை’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் நடைமுறைக் கிணங்க அம்மையார் சிறைபுகுந்தார். நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நிகழ்ந்தன சென்னையில் நடந்த கண்டன ஊர்வலம், பொதுக் கூட்டத்தில், 25.8.58 அன்று பெரியாரே பங்கேற்றார். வேலூரில் நாம் தமிழர் மாநாட்டைத் துவக்கி வைத்தபோது, “தமிழர் திராவிடரே! தமிழ்நாடும் திராவிடமே!” என்ற கருத்தைப் பெரியார் விளக்கி, வலியுறுத்தினார். ஆறு மாதம் வெளியில் வலம்வர இயலாமற்போனதை ஈடு செய்வது போலப் பெரியார், 29.8.1958 ஒரு நாளில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 28 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.

மணியம்மையாரைச் சிறைக்கு அனுப்பியும் திருப்தி அடையாத அரசினர், அவர்களுக்குத் சொந்தமான 4000 ரூபாய் மதிப்புள்ள எம்.எஸ்.சி 5880 எண்ணுள்ள காரை 30.8.58 அன்று ஜப்தி செய்து, ஒரு ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றனர். இதற்கு மாறுபாடாகத் தண்டனைக் காலத்தில் 15 நாள் மீதமிருந்த போதே, மணியம்மையாரைக் காரணமின்றி 1.9.58 அன்று அரசு விடுதலை செய்தது! பெரியார் தமது சுற்றுப்பயணத்தின்போது, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆவுடையார் கோயிலுக்குச் சென்று மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைக் கண்ணுற்றார். 5 ஆம் நாள் குன்றக்குடி மடத்திற்குச் சென்று, இளஞ்சிறார்கள் சாதிக்கொடுமை பற்றி நடத்திய நாடகம் ஒன்றினைக் கண்டு, உணர்ச்சி வயப்பட்டார்!

சிறைக் கொடுமைக்குள்ளாகியவர்களில் 10 ஆவது பலியாகத் திருச்சி சின்னசாமி 8.9.58 அன்று மறைந்த போது, சவ அடக்கத்தில் பெரியார் கலந்து கொண்டார் இந்திய யூனியன் படம் கொளுத்தத் தமக்கு 50,000 பேர் தேவையென்று அழைப்பு விடுத்தார். எல்லாரும் பெயர் கொடுக்கத் தொடங்கலாம் என்றும் கூறினார். 7.9.58 அன்று பரமக்குடியில் பேசும் போது பெரியார், “நம்மைப் பார்ப்பானுக்கு நிரந்தர அம்மையாக்கி விட்டுப் போன காந்தியின் படத்தை எரிப்போம்; சிலையை உடைப்போம்” என்று முழக்கமிட்டார். 17.9.58 பெரியாரின் 80 ஆம் பிறந்தநாள். 21 ந் தேதி சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையிலுள்ள புகாரி சிற்றுணவு விடுதியில் பெரிய அளவில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மாலைப் பொதுக்கூட்டத்தில் பெரியாருக்கு வெள்ளி வாள், ஆதித்தனாரால் வழங்கப்பெற்றது. அதே போன்று மேலக்கற்கண்டார் கோட்டையில் வெள்ளித்தட்டு, இடைப்பாடியில் வெள்ளித்தடி, தாதகாப்பட்டியில் வெள்ளிச் சம்மட்டி ஆகியவை பெரியாருக்கு அன்பளியுங்கள்| 24.9.58 “கரண்ட்” இதழில் பெரியாரின் கட்டூரையை வெளியிட்டுச் சிறப்பித்தனர். பம்பாயில் மான்கூர்டு பகுதியில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் 3.10.18 அன்று எஸ்.எஸ் மிராஜ்கரும் பிறரும் கலந்து கொண்டு, பெரியாரைப் புகழ்ந்து பாராட்டினார்.

4.10.58 அன்று புஞ்சை சங்கேந்தியில் பெரியார் பேசும் போது கண்ணீர்த்துளிக் கட்சி பற்றிக் குறிப்பிட்டார். “இவர்களால் என்னதான் முயன்றாலும் மந்திரி சபை அமைக்க முடியுமா? அதற்கு வேண்டிய பணம் இவர்களிடம் ஏது? வெறும் அடுக்கு மொழியும் குறும்புப் பேச்சும் இருந்தால் போதுமா?” என வினவினார் பெரியார். 21.10.58ல் திருச்செங்கோட்டில் “சுதந்திரத் தமிழ்நாட்டுக்குள்ளே நேரு வருவதானாலும் பாஸ்போர்ட் பெற்றுத்தான் வர வேண்டும்.” என்று பெரியார் உறுதியுடன் தெரிவித்துத் “தமிழ்நாடு தனியாகப் போனால் என்ன; காக்காயா தூக்கிப் போய்விடும்?” எனவும் கேட்டார். 26ந்தேதி மாயூரம் அடுத்த பெரம்பூர் ஊராட்சி மன்றத்தில் பெரியார், முதலமைச்சர் காமராசரின் படத்தினைத் திறந்து வைத்தார். யூனியன் பட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட எல்லாரும் குடும்பத்துடன் தயாராயிருங்கள் என்று பெரியார் அங்குக் கேட்டுக் கொண்டார். நவம்பர் 26ம் நாள் அண்ணாமலை நகரில் மாணவத் தோழர்கள் பெரியாருக்கு 21 அடி நீளமுள்ள வெள்ளிவாள் பரிசளித்தனர். அக்டோபர் இறுதியில் சில நாட்கள் உடல் சுரமாக இருந்தும், அதிகம் பேசாமல் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் தொடர்ந்து நவம்பரிலும் சென்றார். 29,30 இரு நாட்களிலும் பெங்களூரில், அநேக நிகழ்ச்சிகளில், சிறிது நேரம் கன்னட மொழியிலும் பேசினார். எங்கள் மூதாதையர் கன்னட மொழிக்காரர் ஆனாலும், வீட்டு மொழி தமிழ்தான் நான் வாணிப சம்பந்தமாகப் பழகியதில் தெலுங்கும், மலையாளமும் தெரியும்! கன்னடம் அரைகுறை தான் என்றார் பெரியார்.

கடலூர் சி.எஸ். கிருஷ்ணசாமி அவர்கள் மகன் கி. வீரமணி, கோட்டையூர் சிதம்பரம் - ரங்கம்மாள் சிதம்பரம் அவர்கள் மகள் மோகனா ஆகியோர் வாழ்க்கைத் துணை நல விழா 7.12.58 அன்று திருச்சியில் நடைபெறும் எனப் பெரியாரும் மணியம்மையாரும் கையெழுத்திட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்தனர். சிறப்போடு நடைபெற்றது அந்தக் குடும்பவிழா. டாக்டர் அ. சிதம்பரநாதன், துணைவியார், மற்றும் இயக்கத் தோழர்கள் எல்லாருமே மகிழ்வோடு கலந்து வாழ்த்தினர். 9 ந் தேதி திருமணம் திருச்சியில் பதிவு செய்யப்பட்டது. 10 ந்தேதி பெரியாரும், மணியம்மையாரும். மணமக்களும் கடலூர் மணமகன் இல்லத்துக்கும், 11 ஆம் நாள் திருவண்ணாமலை மணமகள் இல்லத்துக்கும் சென்று, புது விருந்து அருந்திப் பாராட்டுவிழாவில் பங்கு பெற்றனர்.

திராவிட நாடு கேட்டதை மாற்றிக்கொண்டு பெரியார் இப்போது தமிழ்நாடு கேட்பது எப்படி நியாயம் என்ற அய்ய வினா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தரப்பில் சிலரால் எழுப்பப்பட்டபோது பெரியார் திண்டுக்கல்லில் 23.11.58 அன்று பதில் கூறினார். அதாவது “அன்று நாம் கேட்டது சென்னை ராஜதானியை. இன்று நாம் கேட்பது சென்னை ராஜ்யத்தை, வேறுபாடு இல்லை” என்றார் பெரியார். “முன்பு சென்னை ராஜதானி என்பது தமிழ் நாட்டுடன் ஆந்திர, கேரள கர்நாடகப் பகுதிகளும் இணைந்திருந்த பகுதி. இன்று மொழிவார் மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்பு, சென்னை ராஜ்யம் என்பது தமிழ்நாடு மட்டுமே. அதனால் நமது கோரிக்கை மாறவில்லை எல்லைதான் சுருக்கப்பட்டுவிட்டது.” என்பது பெரியார் விளக்கம். அதே போன்று பொள்ளாச்சியில் “கண்ணீர்த்துளிகள் 15 பேராயிருப்பவர்கள் 35 பேராக உயர்ந்தால் மட்டும் என்ன சாதிக்க முடியும்? என்றார் 17.12.58 அன்று ஆட்சியைப் பிடிக்க இவர்களால் முடியாது, எதிர்க்கட்சியாயிருக்கும் போது, எண்ணிக்கை உயர்வதால் என்ன லாபம் என்பது கருத்தாகும். காமராசர் இத்தருணத்தில், எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக்கல்வி தருவது என்ற தமது திட்டத்தை அறிவித்தது பெரியாருக்கு இனிப்பான செய்தி, அத்துடன் 300 மக்கள் வாழும் கிராமத்திலும் ஆரம்பப்பள்ளி நிறுவப்படும் என்றும், இலவச மதிய உணவு 2,28,000 பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதாகவும் வெளியான செய்திகள் பெரியார் உள்ளத்தைக் குளிர்வித்தன. தோழர்களின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல் “இனிமேல் தான் முன்கூட்டியே ஒத்துக்கொள்ளாத நிகழ்ச்சிகளுக்குத் திடீர் என்று அழைக்காதீர்கள், உயரக் குறைவாக மேடை அமைத்து, உட்கார்ந்து பேசக் கட்டில் போலச் சமன நிலையில் ஆசனமும், மேல் விரிப்போ மெத்தையோ மிருதுவாகப் பரப்பவும் வேண்டும். தங்குவதற்கு, அருகிலுள்ள முசாபரி பங்களா என்னும் பயணியர் விடுதி தேவை" என்ற அறிக்கையினைப் பெரியார் வெளியிடச் செய்தார். டிசம்பர் இறுதியில் பெரியார் நாஞ்சில் நாடு சுற்றுப்பயணத்திலிருந்த போது, சென்னையில் அகில இந்தியப் பகுத்தறிவாளர் மாநாட்டுக்குச் செய்தி அனுப்பியிருந்தார். அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தின் 12 ஆவது பலியாக, வாளாடி பெரியசாமி என்ற 15 வயதுச் சிறுவன் மாண்டபோது, 29.12.58 அன்று பெரியார் மிக்க வேதனையோடு எழுதியிருந்தார்,

1959 ஜனவரி 10,11 நாட்களில் பெரியார் பெங்களூர் சென்றிருந்தார். அங்கே அகில இந்திய ஆட்சிமொழி மாநாடு 11.1.59ல் நடந்தது. ஜெனரல் கரியப்பா, நீதிபதி மேடப்பா போன்றோர் கலந்து கொண்டனர். பெரியார் சிறப்புரையாற்றுகையில் “இந்த மாநாட்டில், வேண்டுகோள் தீர்மானங்களே நிறைவேற்ற வேண்டாம். இனி நேரடி நடவடிக்கைதான் தேவை. இந்தி எப்போதுமே வேண்டாம்! இங்கிலீஷே நீடிக்க திட்டம் வேண்டும்” என்றார்.

தி.பொ. வேதாசலத்தின் 62 ஆவது பிறந்த நாள் 1959 சனவரி 20ம் நாளாகும். அன்று பெரியார், கழகத் தோழர்கள் சிலருடைய நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்து, மன வருத்தமுற்று, ஓர் அறிக்கை முன்னெச்சரிக்கையாக வெளியிட்டார். அடுத்து, 30.1.59 அன்று வெளியான பெரியாரின் ஒழுங்கு நடவடிக்கை, மிகக்கடுமையாயிருந்தது. சார்பு மன்றங்கள் சுயமரியாதைச் சங்கங்கள் அனைத்தையுமே கலைத்தார். எஸ். குருசாமி, டி.எம் சண்முகம், லோகநாதன், எம்.கே.டி சுப்பிரமணியம், எம் .ஆர். ராதா ஆகியோர் கழகக் கூட்டங்களில் தற்காலிகமாகக் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடைபோட்டார்.

1.2.1959 அன்று பெரியார் கார் மூலமாகச் சுமார் 4000 மைல் நீளச் சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொண்டார். மணியம்மையார், ஆனைமலை ராமகிருஷ்ணம்மாள், ஏ.என் நரசிம்மன், கி.வீரமணி, புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோரும் பெரியாருடன் புறப்பட்டனர். சிகந்தரபாத் ஜான்சி, நாகபுரி, ஜப்பல்பூர் வழியே கான்பூர் சென்றார்கள். கான்பூரில் பெரியார் 2 மணி நேரம் பிற்படுத்தப்பட்டோர். பிரச்சினை குறித்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். பின்னர் லட்சுமணபரி பல்கலைகழக யூனியனில் சொற்பொழிவு. 12 ந்தேதி டெல்லி பயணமானார். அங்கு ரிபப்ளிகன் கட்சியாரின் கூட்டத்திலும், தமிழர்கள் கூட்டத்திலும் பெரியார் பேசினார். 17 ந் தேதி அங்கிருந்து கிளம்பி பம்பாய்க்கு 20 ந் தேதி சென்றடைந்தார். அங்கும் மாபெரும் வரவேற்பு; கொள்கை முழக்கம் 25.2.59 அன்று பம்பாய் விட்டுக்கிளம்பி, 28.2.59 சென்னை வந்து சேர்ந்தார்கள் பெரியார் குழவினர். வெற்றிகரமான இந்த வடநாட்டுச் சுற்றுப் பயணத்தைக் கொண்டாடச் சென்னை வாழ் பெருமக்கள் 1.3.59 அன்று ஊர்வலத்தில் ஒரு லட்சம் பேரும், மெரினாப் பொது கூட்டத்தில் 2 லட்சம் பேருமாகத் திரண்டு, பெரியாரை வாழ்த்தினர். பம்பாயிலிருந்தபோது “கரண்ட்” நிருபர் பி.ஜே. பெர்னாண்டஸ் பெரியாரைப் பேட்டி கண்ட விவரம் 4.3.59 “கரண்ட்” இதழில் சிறப்பாகவும், எடுப்பாகவும் வெளியிடப்பட்டிருந்து. 8.3.59 “கல்கண்டு” இதழும், பெரியார் எல்லா மொழியிலுமே பேசுகிறார் என்று பெருமிதத்தோடு கூறியது. வடபுலத்து ஆங்கில ஏடுகளான ஸ்டேட்ஸ்மன், அட்வான்ஸ், பயனீர், நேஷனல் ஹெரால்டு, மற்றும் உருது மொழி ஏடுகளான சியாசத், அல்ஜமயத் ஆகியவை பெரியாரின் பேச்சு, கொள்கை, போராட்டம் பற்றி விளக்கமான செய்திச் சித்திரங்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன.

தஞ்சை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வசதியான குடும்பத்தைச் சார்ந்த கோ.இமயவரம்பன், புலவர் பட்டம் பெற்றதும், நேரே பெரியாரிடம் சென்று, தன்னை அவர் தொண்டராகப் பிணைத்துக் கொண்டவர், திருமணமே
செய்துகொள்ளாமல், முழுநேரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர், நிழல் போல் பெரியாரைத் தொடர்ந்தவர், அவருக்குப் பின்னரும் இயக்க இணைப்பைக் கைவிடாதுள்ளவர். இன்று திருச்சியிலுள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் கல்விச்சாலைகள் அனைத்துக்கும் தாளாளர்.

அரசியல் சட்ட எரிப்புப் போரின் 13 வது பலியாக கண்டராதித்தம் சிங்காரவேலு மார்ச் 23ல் 14 வது பலியாக சென்னை கந்தசாமி மார்ச் 21 ல், 15 வது பலியாக திருச்சி டி.ஆர்.எஸ் வாசன் ஏப்ரல் 25 ல் மரணமடைந்தனர். சேலத்தில் நீண்ட நாளையக் கழக அன்பர் கே. ஜெகதீசன் 20.3.59 அன்று இயற்கை எய்தினார். எல்லாத் துயரங்களையும் பெரியார் தாங்கிக் கொண்டார். திருச்சி சிறைச்சாலையில் இன்னும் தண்டனை அனுபவித்து வந்த தொண்டர்களை 17.3.59 அன்று பேட்டி கண்டார். 20 ம் நாள் சிறை சென்று திரும்பிய தோழர்களைப் பாராட்டிப் பெரம்பலூரில் சான்றிதழ் வழங்கினார். 28ம் நாள் சீர்காழியில் 9 மாதச் சிறைத் தண்டனை பெற்று. விடுதலையான சில நாளில் மறைந்து போன, தொண்டர் ஸ்டாலின் இல்லம் சென்று, அவர் தந்தையார்பால் துக்கம் விசாரித்தார். சீர்காழியில் பேசும்போது ஆத்மா, மோட்சம், நரகம் இவை பற்றிய தெளிவான, விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்களைத் தெரிவித்து, இவற்றில் பார்ப்பனர் புகுந்து, எப்படித் தங்களுக்கு வருமானத்தையும், நமக்கு அறிவீனத்தையும் தேடுகிறார்கள் எனவும் விரிந்துரைத்தார் பெரியார்.

21ம் நாள் தஞ்சையிலும், 27 ம் நாள் திருச்சியிலும் நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டங்களில் “தமிழனின் நல்லாட்சியைக் கவிழ்க்க முயல்கிறார்கள்; விடக்கூடாது! காமராசர் ஆட்சியைப் பலப்படுத்த, நகரசபைத் தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கே ஆதரவு காட்ட வேண்டும்” என்று பெரியார் பேசிவந்தார். ஆனால் சென்னை மாநகராட்சியை முதன்முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது, 1959-ல்! நேருவுக்குக் கருப்புக்கொடி பிடித்தபோது, போலீசாரின் தடியடிக்கு ஆளாகிச் சாலையில் உருண்டு கிடந்த அ.பொ. அரசு, சென்னையில் முதல் தி.மு.க. மேயராகவும், தாழ்த்தப்பட்ட தோழரான அ. சிவசங்கரன் முதல் தி.மு.க. துணை மேயராகவும் வெற்றி கொண்டனர். மொத்தம் 53 நகராட்சி மன்றங்களின் தேர்தல்களில் 34 ஊர்களில் காங்கிரஸ் தோற்றது. 22-4-59-ல் பெரியார், அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் சிந்தனையைத் தூண்டும் கருத்துச் சுரங்கமான பகுத்தறிவுப் புதையலைச் சொற்பொழிவாக்கினார். உலகிலுள்ள 250 கோடி மக்களில் 150 கோடி மக்களுக்குக் கடவுள் இல்லையே, அவர்கள் என்ன கெட்டுவிட்டார்கள்? என்று கேட்டார் பெரியார்.

ஏப்ரல் 28, 29, 30 ஆகிய நாட்களில் பெரியார் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். காந்தியார் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெருத்த துரோகமும், தீங்கும் இழைத்துச் சென்றுவிட்டார் என்ற உண்மைகளை விதந்துரைத்தார். கம்யூனிஸ்டுகளோ, கண்ணீர்த்துளிகளோ சாதியை ஒழிக்க முன்வர மாட்டார்கள் என்றார். அதற்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரிடம் சரியான இரண்டு சான்றுகள் சிக்கிக்கொண்டன. 1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டிருந்த இரு தவறுகள், பெரியாரின் வாதத்துக்கு அணி செய்தன. அவையாவன:- கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமியின் பெயர் வாக்காளர் பட்டியலில் சி. கந்தசாமித் தேவர் என்றும், அண்ணாவின் பெயர் சி.என். அண்ணாத்துரை முதலியார் என்றும் அச்சாகிவிட்டதால், மாற்றுவதற்கு நேரமின்றி, அவர்கள் இந்தப் பெயருடனேயே தேர்தலில் போட்டியிட நேரிட்டது. “இவர்களா சாதியை ஒழிப்பார்கள்?” என்று கேட்டார் பெரியார்!

மே மாதச் சுற்றுப்பயணத்தில், குறிப்பிடத்தக்க இதர நிகழ்ச்சிகள், பெரியார் 17-ந் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில், அம்பேத்கர் சமரத் சமிதி எனும் நினைவு மன்றத்தில் கன்னட மொழியில் பேசியது; 21-ந் தேதி சென்னையில் புத்தரின் 2503-ஆவது ஆண்டு விழா ஊர்வலத்தில் தலைமை ஏற்றது! 25-5-59 “விடுதலை” ஏட்டில் பெரியார் மூன்று முட்டுக்கட்டைகள் என்ற தலையங்கத்தில், நாம் முன்னேற முடியாமல் போனதற்கு - முன்னோர்கள் சொன்னபடி கேட்பதும், எழுதியபடி நடப்பதும், நடந்தபடிப் பின்பற்றுவதும்தான் காரணம் - என்று முடித்திருந்த பாங்கு பாராட்டத்தக்கதாகும்.

24-5-59-ல் சேத்தியா தோப்பில் பேசும்போது, ஜெயில் வாசம் என்ற பெயரில் ஆஸ்பத்திரியில், அரசு செலவில் தங்கி, உடல் நலம் பெற்று, ஓராண்டாய்த் தொந்தரவில்லாமல் பணியாற்ற முடிவதாகப் பெரியார் பெருமைப்பட்டுக் கொண்டார். தாம் செத்திருந்தால் அதைச்சொல்லியே கண்ணீர்த்துளிகள் அசெம்பிளியில் 100 இடம் பிடித்திருப்பார்கள்; உயிரோடிருப்பதால் இந்த மந்திரிசபையையே காப்பாற்ற முடிகிறதே என்று பெரியார் குறிப்பிட்டார்.

மே திங்கள் 4-ம் நாள் சிங்கப்பூர் சுதந்திர நாடாயிற்று. 11-ம் நாள் ராஜாஜியின் சுதந்திரக் கட்சி பற்றிப் பெரியார் கண்டித்திருந்தார். 23-5-1959-ல் திருச்சி வானொலி நிலையத்தில் ஆகாஷ்வாணி போராட்டத்தில் கி.ஆ.பெ. விசுவநாதம் கைதாயினார். இந்தப் போராட்டத்தைத் தாம் ஆதரிப்பதாகப் பெரியார் கூறியிருந்தார். 21-ம் நாள் திருச்சி சோதிபுரத்தில் பெரியாருக்கு வெள்ளிச் செங்கோல் வழங்கினார்கள். இந்தக் கூட்டத்துக்கு வருவதற்காகத் தஞ்சை மாவட்டத்திலிருந்து நள்ளிரவில் காரில் பிரயாணம் செய்த போது, பெரியாரின் கார், தஞ்சையருகில் விபத்துக்குள்ளாயிற்று. வண்டிக்குச் சேதம்; சீட்டாவுக்குக் காயம் 21-5-59-ல், சிறந்த சமூகசீர்திருத்தத் தலைவராகவும் முதல் இந்தி எதிர்ப்புப் போரின் வீராங்கனையாகவும் திகழ்ந்த டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் மறைந்தார். மதுரை மாவட்ட திராவிடர் கழகச் சார்பில் திண்டுக்கல்லில் 7-6-59 அன்று நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் தலைவர் வீரமணி திறப்பாளர், தங்கராசு கொடி ஏற்றுவோர், சொற்பொழிவு , மணியம்மையார், புரட்சிக் கவிஞர், தி.பொ. வேதாசலனார், சென்னை இளம்பரிதி ஆகியோர். சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டில் தலைவர் ஆதித்தனார், திறப்பாளர் திருக்குறளார் முனிசாமி, சொற்பொழிவு - தமிழ்வாணன், பாவலர் பாலசுந்தரம் ஆகியோர். இரு மாநாடுகளிலும் பெரியார் பேருரை உண்டு!

கதர், கைத்தறி, தீக்குச்சி செய்தல் போன்ற சிறு கைத்தொழில்களைக் குடிசைத் தொழில்களாகச் செய்வதால், எவ்வளவு சக்தியும் பொருளும் விரயமாகி, நட்டமும் ஏற்படுகிறது, என்பதைப் புள்ளி விவரங்களுடன் பெரியார் விளக்கி வந்தார். விஞ்ஞானயுகத்தில், இயந்திரங்களுடன் போட்டிபோட இவற்றால் நிச்சயம் முடியாது. தரமும் கிடைக்காது. மலிவு விலையிலும் போட்டி போட முடியாது - என்பதெல்லாம் பெரியார் தெளிவுறுத்தினார்.

சென்னை பெரியார் திடலில் கட்டடம் கட்டுவதற்கு 50,000 ரூபாய் தேவை என்று, பெரியார் திருச்சி மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார். அவ்வளவுதான்! அடுத்து 2-10-59 “விடுதலை”யில் ‘கட்டட நிதி அவசரம்’ என்று ஒரு தலையங்கம் தீட்டப்பட்டது. சுற்றுப்பயணக் கூட்டங்களெல்லாம் நிதியளிப்புக் கூட்டங்களாகப் போட்டி போட்டு நடத்தப்பட்டன. வெள்ளப்பெருக்கென வெள்ளிப் பணம் விரைந்து நிறைந்தது. 13-10-59 அன்று, 30,000 ரூபாய்; 13-11-59 வரை அடுத்த ஒரு மாதத்தில் ரூ.75,000. 22-12-59 அன்ற மொத்த நிதி வசூல் 1 லட்சம் ரூபாய். 1959-ஆம் ஆண்டின் இறுதி நாளில் உறுதியாகக் கிடைத்த மொத்த நிதி ரூ.1,13,897. கேட்டது ரூ.50,000 தானே !

19-10-59 அன்று பெரியார் சிதம்பரத்தில் சொற்பொழிவாற்றும் நேரத்தில், இதுவரை தாம் சேமித்த 7 லட்ச ரூபாய் சொத்து விவரங்களைக் கூறி, அனைத்துமே தமிழருக்காகக் கட்டிக் காத்துப் பெருக்கி வருகிறேன் என்றார். 31-ம் நாள் கும்பகோணத்தில் உரையாற்றுகையில், தஞ்சை மாவட்டம் திராவிடர் கழக நிதியாகவே திகழ்கிறது எனப் புகழ்ந்தார்; பூரித்தார்.

சிங்கப்பூரில் 7-11-59 அன்று பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பெற்றது. பெங்களூரில் 13-12-59 அன்று பெரியாரிடம் கட்டட நிதி வழங்கப்பட்டது. 2-11-59 ஈரோடு எஸ். அப்பாவு, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, வெள்ளக் கோயிலில், பெரியார் முன்னிலையில், மீண்டும் திராவிடர் கழகத்துடன் அய்க்கியமானார். திருவாரூரில் தண்டவாளம் ரங்கராசு எனப்படும் வீரமிக்க திராவிடர் கழக உழைப்பாளர் 23-11-59 அன்று இயற்கை எய்தினார். திரையுலகில் ஒரு காலத்தில் புகழ்க்கொடி பறக்கவிட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர் 1-11-59 அன்று மறைந்தார். நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் 16-12-59-ல் காலமானார். 20-12-59 அன்று வேதாரணியம் சென்றிருந்த பெரியாரை, சர்தார் வேதரத்தினம்பிள்ளை எம்.எல்.ஏ. வரவேற்றுப் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்து, தம் கன்னியா குருகுலத்தைச் சுற்றிக் காட்டினார். பெரியார் வாழ்க்கையில் முதல் தவறு என்று அவரே குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்று 29-11-59 அன்று நடந்துவிட்டது! 28-ஆம் நாள் பெரியார் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டுத், தமது காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார். காஞ்சியில் மாபெரும் நிதியளிப்புப் பொதுக்கூட்டம். வழியில் பலத்த மழை. கார் பழுதாகி நகர மறுக்கிறது. எவ்வளவு முயன்றாலும் காஞ்சிக் கூட்டத்துக்குப் போய்ச்சேர வழியில்லை. வேறு நிலைமை சரியாகத் தோன்றாததால் பெரியார், கிடைத்த பேருந்து ஒன்றைப் பிடித்து, எப்படியோ திருச்சி போய்ச் சேர்ந்தார். இப்படி, ஒத்துக்கொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர முடியாமல் போனதையே, பெரியார், முதல் தவறு என்று “விடுதலை”யில் குறிப்பிட்டு, வருத்தமும் தெரிவித்து, மறு திங்களில் வேறு நாளில் காஞ்சி சென்று, அக்குறையை நிறைவு செய்துவிட்டார்.

1960 சனவரித் திங்களிலும் நாடெங்கும் நிதியளிப்புக் கூட்டங்களில் பெரியார் பெரிதும் கலந்து கொண்டார். சனவரி 16-ஆம் நாள் தஞ்சை மாவட்டத்தில் பேசும் போது, “தஞ்சை மாவட்டம் புத்தரின் அறிவொளி பரவிய மய்யம் ஆயிற்றே; புத்தக் கொள்கைகளை ஒழித்து இவ்வளவு கோயில்களை இங்கு எழுப்பிவிட்டார்களே; இங்குள்ள பணக்கார மடையரும் பார்ப்பான் காலைக் கழுவித் தீர்த்தமென்று குடிக்கின்றார்களே” என்று பெரியார் வேதனைப் பட்டார். கும்பகோணத்தில் 30-ம் நாள், பொதுக் கூட்டத்தில் பேசும்போது. பார்ப்பனர் நிலை மேலும் சரியாமல் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றத் தான் ஆச்சாரியார் இப்போது சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்திருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். தூத்துக்குடி இடைத் தேர்தலில் காமராசரின் கட்சியையே ஆதரிக்கவேண்டும் என்று நாட்டு மக்களைப் பெரியார் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி முதல் நாள் திருச்சியில் எம்.ஆர். ராதாவின் மகன் வாசுதேவனுக்கும் லலிதகுமாரிக்கும் திருமணம். அழைப்பாளராகப் பெரியார் பெயர் போடப்பட்டிருந்தது. இந்த மாதம் முழுவதும் பெரியாருக்குச் சுற்றுப் பயணம் இருந்தது. நிகழ்ச்சிகளுக்கு நிறைய அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் பெரியார் சில கட்டுப்பாடுகள் வரையறைகள் விதித்து 10-2-60 அன்று ஓர் அறிக்கை “விடுதலை”யில் வெளியிட்டிருந்தார். தோழர்களுக்கு வணக்கமான விண்ணப்பம் என்பது தலைப்பு: தன்னுடைய கார் ஒரு காலன் பெட்ரோலுக்கு சராசரியாக 11 மைல்தான் செல்கிறது என்பதைப் பொருளாதார அடிப்படையில் காண்பித்திருந்தார். உடல் நிலையை நினைவுபடுத்திக் கூட்டம் நடக்கும் ஊர்களிலோ, அருகிலோ உள்ள டி.பி. எனப்படும் பயணிகள் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடும், தன்னிடமுள்ள சமையல் பொருள்களின் உதவி கொண்டு தனக்காகப் பத்தியமான சமையல் சாப்பாடு முதலியவை தயாரித்துக் கொள்வதற்கு அனுமதிக்குமாறும் கேட்டிருந்தார். வெளியில் தோழர்கள் வீடுகளில் சாப்பிடக் கூப்பிட வேண்டாம். அப்படி வந்துதான் தீர வேண்டுமென்றால் அதற்குக் கட்டணம் ரூ.10; புகைப்படம் பெரியாருடன் சேர்த்து எடுத்துக்கொள்ள விரும்பினால் ஒரு (அமைப்பு) Sitting -க்கு ரூ.5. கழகப் பொதுக்கூட்டங்களுக்கானால் ரூ.75. திருமணம் ஆண்டுவிழா நீத்தார் நினைவு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.150. அழைக்க வரும்போதே முதலில் தந்துவிடவேண்டும். சென்ற பிறகு சில இடங்களில் செலவுக்கான வழிச் செலவுத் தொகையைச் சரியாகத் தருவதில்லை என வருத்தப்பட்டிருந்தார்.

சென்னை சட்டக்கல்லூரித் தமிழ்ப் பேரவையில் பெரியார் 10-2-60 அன்று உரையாற்றினார், சட்டக்கல்வி இயக்குநர் நீதிபதி ஏ. எஸ்.பி. அய்யர் தலைமை ஏற்றிருந்தார். தமிழ் இலக்கியங்கள் தமிழனைக் காட்டுமிராண்டி நிலையிலேயே வீழ்த்தியுள்ளன. காரணம் அந்த இலக்கியங்களில் உள்ள கடவுள் மதப் பிணைப்புகளே ஆகும் என்னும் கருத்துப்படப் பெரியார் விரிவுரையாற்றினார். தமிழ்ச் சான்றோரும் பெரியாரின் நண்பருமான அ. சக்கரவர்த்தி நயினார் 13-2-60 அன்று மறைந்த போது சவ ஊர்வலத்தில் பெரியாரும் சிறிது தொலைவு நடந்து சென்றார். விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியிலும் பெரியார் உரை நிகழ்த்தினார். பெங்களூரில் மீண்டும் ரூ.3010 கட்டட நிதியாகப் பெரியாரிடம் 2-12-60 அன்று வழங்கினார்கள். திருச்சி, பெரியார் ஆசிரியப் - பயிற்சிப் பள்ளியில் கண்காட்சி பற்றிப் பெரியார் விளக்கினார்:- “இது அறிவுக்கு விருந்தே தவிரக் கண்ணுக்கு அழகு என்பது தவறு. மேல்நாடுகளில் அறிவு வளர்ச்சிக்காக ஆண்டு முழுவதும் காட்சிகளை நடத்துகிறார்கள். ஓர் இரயில் பெட்டி செய்யும் கண்காட்சி என்றால் முதலில் இரும்பு, மரம் இவை குவியலாய்க் கிடப்பதில் தொடங்கிப், பின், வரிசைக் கிரமமாய் அவை உருக்கப்பட்டு ஆணியாகித் தகடாகி, மரம் அறுக்கப்பட்டுக் கட்டையாகிப் பலகையாகி, இறுதியில் பெட்டியாக முழுமையடையும் வரையில் காண்பிக்கிறார்கள். பார்ப்பவர்களும் நேரடியாகக் கண்டு அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இங்கு இன்னமும் பெண்களுக்கான ரிப்பனும் வளையலுந்தானே வைக்கிறோம்” என்றார் பெரியார்.

“சமஸ்கிருதம் எனும் செத்தமொழியை உலகமெலாம் பரப்பவும், இந்தியாவில் அரசாங்க ஆதரவுடன் மரியாதை உண்டாக்கவும் அடிக்கடி பார்ப்பனர்கள் முயன்று வருகிறார்கள். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரான கா. நமச்சிவாய முதலியாருக்குச் சம்பளம் 81 ரூபாயாயிருக்க, சமஸ்கிருத ஆசிரியரான சாஸ்திரிக்குச் சம்பளம் 350 ரூபாய். சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு குறைவதைக் கண்டுதானே 1947-ல் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்தி அதன் சரிவைத் தடுக்க முயன்றார். இன்று சமஸ்கிருதம் எதற்குத் தேவை?” என்று கேட்டார் பெரியார்,

அத்துடனல்லாமல் தமிழ் விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடையாமலிருப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் தாய்ப்பால் என்றும் இங்கிலீஷ் புட்டிப்பால் என்றும் கூறுகிறார்கள். தாய்ப்பால் நல்லதுதான். ஆனால் தாயே நோயாளியாகவும், சத்தற்றவளாகவும் இருக்கும்போது தாய்ப்பால் குடிக்கும் பிள்ளை உருப்படமுடியுமா? தாய்க்கு நல்ல சத்துணவு இருந்தால்தானே அவளுக்குப் பாலும் ஊறும்; அந்தப் பாலுக்குச் சக்தி இருக்கும்? தமிழில் நல்ல உணவு எங்கேயிருக்கிறது? அய்ம்பெருங்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இராமாயணம், பாரதம், கந்தபுராணம், பெரியபுராணம் இவைதாமே தமிழ்த்தாய் உண்ட உணவுகள்? இவைகளில் சுவை இருக்கலாம். அழகு இருக்கலாம். முன்னேற்றத்துக்கான அறிவு இருக்கிறதா? மொழி என்பது ஒருவர் கருத்தை இன்னொருவர் அறியப் பயன்படுத்துவது தானே? இதிலே கொண்டு போய்த் தாய்மொழி தகப்பன் மொழி நாட்டுமொழி முன்னோர் மொழி என்று எதற்காகப் பொருத்துவது? நாம் தாய்மொழி தாய்மொழி என்கிறோம். பார்ப்பானுக்கு எது தாய் மொழி? ஏது தாய் மொழி? அவன் இங்கிலீஷைப் படித்து மேலே போகிறான். நாம் சாம்பிராணிகளாகிறோம் - என்றார் பெரியார். தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திலேயே பார்ப்பனக் கருத்துகள் புகுந்துவிட்டன என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன் பெரியார் எடுத்துக்காட்டினார்.

கட்டட நிதி அதிகரித்துக்கொண்டே வந்து 1-3-60 வரையில் 1,34,213 ரூபாயாக உயர்ந்திருந்தது. மார்ச் மாதம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெரியார், தம்மை நாடகம் முதலியவைகளுக்கு அழைக்க வேண்டாமென்றும் தம்மால் கண்விழிக்க இயலவில்லை என்றும் அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் தீவிரப் பிரயாணம் செய்து வந்தார். நாகரசம்பட்டியில் ராஜா சுப்ரமணியம் 35 ஆண்டுகளாகப் பஞ்சாயத்துத் தலைவராக வீற்றிருப்பதைப் பாராட்டி, 26. 4. 60 அன்று நடந்த சிறப்பான விழாவில், பி.கஸ்தூரிபிள்ளை தஞ்சையா, குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் பெரியாரும் கலந்துகொண்டார், மே 15-ம் நாள் திருச்சியில் நடைபெற்ற மத்திய விரிவாக சபைக்கூட்டத்தில் எஸ். குருசாமி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

I960 ஜூன் திங்கள் 5.ஆம் நாள் மாலை, தமிழ்நாடு நீங்கலாக இந்திய யூனியன் எரிப்புப் போராட்டம் என்று பெரியார் அறிவித்து விட்டார் “நாடெங்கும் தீவத்தி ஊர்வலமும் நடைபெறும். இது அரசியல் போராட்டமல்ல இனப் போராட்டம் போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த நான் மே 31, ஜூன் 1, 2 3, 4 தேதிகளில் ரயில் மார்க்கமாகப் பயணம் செய்வேன்” என்றும் பெரியார் கூறிவிட்டார். 25-5-60 “கரண்ட்” இதழில் பெரியார் படத்தையும் போட்டு; சுதந்திரத் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்ற கோரிக்கைக்காகப் பெரியார் போராட்டம்! இது 23 ஆண்டுகாலமாய் இருந்துவரும் கோரிக்கை வெற்றிக்காகப் பெரியாரின் 1960-ம் ஆண்டு வேலைத்திட்டம் இந்திய யூனியன் பட எரிப்பு (தமிழ்நாடு தவிர்த்து) என்ற செய்தி பிரதான இடத்தில் வெளியிடப்பட்டது.

நாம் தமிழர் இயக்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்திருந்தது. பெரியார் அபாயச் சங்கு ஊதினார். ஆயிரம் வீரர்களாவது சிறை செல்வதாக மட்டுமில்லாமல் உயிரையும் பலி கொடுக்கத் தயாரான தன்னல மறுப்பு உணர்வுடன் வந்தால்தான், இந்தியக் கூட்டாட்சி என்னும் பார்ப்பனப் பிரசிடெண்ட், பார்ப்பனப் பிரதமர் எனும் ஏகபோக ஆட்சியிலிருந்து விலகித் தமிழ்நாட்டைத் தனிச் சுதந்திர நாடாக ஆக்கித் தமிழ்நாடு தமிழனும் தப்பிப் பிழைக்கலாம் என்றார் பெரியார். “தமிழ்நாடு என்ற பெயரை இந்த ராஜ்யத்துக்குச் சூட்டுகின்ற அதிகாரம், சக்தி எல்லாம் டெல்லி ஆட்சிக்கே உண்டு. ஆகையால் தமிழ்நாட்டு அரசோடு முட்டிக் கொள்ளாமல் அநீதிகளுக்குக் காரணமான ஆதிபத்ய டெல்லி ஆட்சியின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லையே என்று கொதிக்கும் உள்ளங் கொண்ட இளைஞர்களே தோழர்களே புலவர்களே பெருமக்களே எழுத்தாளர்களே பேச்சாளர்களே நாடு பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை . ஜூன் 5-ல் யூனியன் படத்தை ஒரு கையிலும் தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்! ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கமோ, பயமோ இருக்குமானால் அவரவர் வீட்டு வாயிலில் கொளுத்தி விட்டுப் பெயர் கொடுங்கள்” என்றார்.

“பி.ஜி.கேர் தலைமையில் அமைந்த இந்திக் கமிஷன், அதில் ஓர் உறுப்பினரான டாக்டர் சுப்பராயனுடைய ஆட்சேபக் குறிப்பையும் புறக்கணித்து. இந்திதான் ஆட்சி மொழி என்று கூறிவிட்டது. நேருவின் உறுதி மொழிகள் அச்சாகி, மைஉலரும் முன்பே வேகவேகமாக வேறொரு புறத்திலிருந்து ஆணைகள் பிறப்பிக்கப்படுவதும் இந்தி பல இடங்களில் திணிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. இந்தியை எதிர்த்து நான் இந்திய யூனியன் கொடியைக் கொளுத்துவதைக்கூட, ஒத்தித்தான் வைத்தேன். இவர்கள் நாணயம் எனக்குத் தெரியும். வாக்குறுதியைப் பறக்க விடுவார்கள் என்றுதான் கொடி கொளுத்தும் கிளர்ச்சியை இன்னும் கைவிட்டு விடவில்லை. ஆனால் அதற்குள் சாமர்த்தியமாய் இங்குள்ள சட்டசபையைக் கொண்டு, கொடி கொளுத்தினால் மூன்றாண்டு தண்டனை எனச் சட்டம் போடச் செய்தார்கள். நண்பர் ஆச்சாரியார் கூட இரண்டாண்டுகாலமாய் இந்தித் திணிப்பு இந்திய அய்க்கியத்தைக் குலைக்கும் என்கிறார். அதன் அர்த்தம் - இந்தியை ஒழிக்க முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து கொள்ளலாம் என்பதுதானே? ஆகவே இந்தியெனும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கில்லி எறிய ஒரே வழிதான் உண்டு. அது நாட்டுப் பிரிவினை. இதற்காகவாவது இந்தியத் தேசப்படத்திற்குத் தீ வையுங்கள்!

தமிழ்நாடு எதற்காக இந்திய யூனியன் ஆட்சியின்கீழ் இருக்க வேண்டும்? டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும் நிர்வாகத் திறமைக்கும் நேர்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பிற்கும் பலத்திற்கும் சிறப்பான பேர்போன ஆட்சி வரலாற்றுப்படியோ, பூகோளப்படியோ, புராணப்படியோ, கலாச்சாரப்படியோ நமக்கும் டெல்லிக்கும் சம்பந்தமேயில்லை. ஏக இந்தியத் தோழர்களே! சிந்தியுங்கள் தெளிவடையுங்கள். வேறுவழி உண்டானால் சொல்லுங்கள்; வேறு மார்க்கம் இருந்தால் காட்டுங்கள். இல்லையென்றால் என் வழிக்கு வாருங்கள். பந்தத்தை ஏந்துங்கள். படத்தைப் பொசுக்குங்கள்."

மே மாதம் முழுவதும் தமிழகம் பெரியாரின் இந்த வீரமுழக்கத்தால் எதிரொலித்துக் கிடந்தது. சிகரம் வைத்தது போல் 4-6-60 நாள் சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் டி.எம். சண்முகம் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. பெரியாரும் வீரமணியும் தவிர, நாம் தமிழர் இயக்கத்துச் சார்பில் ஆதித்தனார், ஈரோடு சின்னசாமி, வரதராஜன், ஜெயச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். 2 லட்சம் படங்கள் கொளுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்தன. இது பட எரிப்பு அல்ல; படையெடுப்பு என 3-6-60 “விடுதலை” வர்ணித்தது. ஜூன் முதல் நாள் அமைச்சரவை கூடிற்று. சென்னையில் 41-ஆவது பிரிவின்கீழ் ஜூன் 4 முதல் 11 வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஜூன் 5 காலை 10.30 மணியளவில் 151-ஆவது தடுப்புக்காவல் சட்டத்தின்படிப் பெரியாரும், வீரமணி, குருசாமி, புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோரும், ஆதித்தனாரும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் அன்று பல இடங்களில் தேசப்படங்கள் தீக்கிரையாயின. நள்ளிரவு வரையில் போலீசார் வேட்டையாடி 4000 பேரைக் கைது செய்திருந்தனர். சென்னையில் டி.எம். சண்முகம், லோகநாதன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப்போட்டு 24 - 5- 60-ல் ஒருமாத சிறை தண்டனை வழங்கினார்கள். ஈரோடு திராவிடர் கழகத் தலைவர் அங்கமுத்து, 124A, 153 பிரிவுகளில் வழக்குத் தொடுத்து ஒருமாத சிலை அளிக்கப்பட்டது, 7-7-1960 அன்று.

இவ்வளவுக்குப் பிறகும், “காமராசர் ஆட்சியின் சாதனைகள் என்ற புத்தகம் திருச்சி பெரியார் மாளிகையில் கிடைக்கும் எஸ். விளம்பரம் “விடுதலை”யில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த ஜூலை மாதத்தில் இந்திய அரசைச் சார்ந்த ரயில்வே மற்றும் தபால் தந்தி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர். 14-7-60 முதல் 3 நாள் நீடித்த வேலை நிறுத்தத்தின் விளைவாக அரசுக்கு 25 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் அல்லர் எனவே அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உரிமை கிடையாது என்பது பெரியாரின் வாதம். அதனால் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான செய்திகளே “விடுதலை” நாளேட்டில் வெளிவந்தன. ரயில்வே ஊழியர்கள் முழுமையாக இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை , எனினும், ஆர்.எம். எஸ். ஊழியர்கள் உறுதியாய் நின்றதால், இறுதியில் பழிவாங்கப்பட்டவர் அவர்களே பெரியார் வேலைநிறுத்தம் தவறுதான் என்றாலும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கலாம் என்ற ஆலோசனை வழங்கினார்.

1960 ஜூலை 22-ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைப் பெருமணல் வெளியில் எஸ். குருசாமி தலைமையில், பட எரிப்புக் கிளர்ச்சியில் சிறை சென்று மீண்ட தோழர்களுக்கும் பாராட்டுப் பொதுக்கூட்டம். பெரியாருடன் கி. வீரமணி எம்.ஏ. பி.எல். கலந்து கொண்டார். வீரமணி பி.எல். பட்டத்தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். திராவிடர் கழக மத்திய நிர்வாகத்தின் செயலாளர்களாக அவரும், ஆனைமலை ஏ.என். நரசிம்மன் பி.ஏ. அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் 1-8-60 அன்று கோடம்பாக்கத்தில் ஒரு இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டியது. ஜனாதிபதிக்குக் கருப்புக் கொடி காட்டுவதாக அங்கு முடிவாயிற்று மேயரிடம் முதல் கருப்புக் கொடியைத் தந்தார் அண்ணா . ஆனால் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான ஈ.வெ.கி. சம்பத் எம்.பி பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்துக்கு, நேரு உடனே பதிலளித்து தமது பழைய வாக்குறுதி நிலையானதென்றும், இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார். மேலும், குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத்தும், 5-8-60 அன்று, இந்தி எவர் மீதும் கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று அழுத்தமாகத் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் கருப்புக்கொடி காட்டவில்லை ; எனினும், நாம் தமிழர் இயக்கத் தலைவர் உட்பட 100 பேர் ஜனாதிபதிக்குக் கருப்புக் கொடி காட்டிக் கைதாயினர்.

16 வயதும், 17 வயதும் ஆகியிருந்த இரு இளம்பட எரிப்பு வீரர்களுக்குத் திருச்சியில் 11-8-60 அன்று இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. “தமிழகத்தில் தமிழும், மத்தியில் இங்கிலீஷும் ஆட்சி மொழிகளாக இருக்கும். இதை நாம் உறுதியாகக் கூறிவிட்டோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.” என்று முதலமைச்சர் காமராசர் 1960 ஆகஸ்டு 14-ஆம் நாள் தெளிவாய்ச் சொன்னார்.

‘அசல் ஒண்ணாம் நெம்பர் காலித்தனம்’ என்று 25-8-60 “விடுதலை” தலையங்கம் தொடங்குகிறது. இதன் தலைப்பு “ஸ்ட்ரைக் - வேலை நிறுத்தம்” இதை எழுதியவர் பெரியார்தாம்! அழகிரிசாமி அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டது செல்லாது என்று சில பார்ப்பனர்கள் தடையுத்தரவு கோரித் தொடுத்த வழக்கு, அவர்களுக்குத் தோல்வியானது. இந்தப் பார்ப்பனர் போரைக் கண்டித்துப் பெரியார் 30-8-60 அன்று தலையங்கம் தீட்டியிருந்தார். பின்னாளில் அழகிரிசாமி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதி! 9-9-60 அன்று “இராவணன் பிறந்த நாள்” என்று “விடுதலை”யில் தலையங்கம் - வெளியாயிற்று. யார் அந்த இராவணன்? வேறு யாருமல்ல; பெரியாரைத்தான் வடநாட்டில் “தட்சிணப் பிரதேஷ் ராவண்" என்கிறார்களாம். அன்பினாலோ வம்பினாலோ உண்மையைக் கூறிவிட்டார்களே

செப்டம்பர் 17-ஆம் நாள் பெரியார் 82-வது பிறந்த நாள் விழா: சிதம்பரத்தில் அதே நாளில் டாக்டர் ஆர்.ஜி. கிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர் ரங்கசாமி முதலியோர் பங்கேற்றனர். திருச்சியில் அடுத்த நாள் டாக்டர் மணவாளராமானுஜம் தலைமையில் டி.ஏ.வி. நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு ஊர்களிலும் பெரியாரும் பங்கேற்றார். 17-9-60 தஞ்சையில் பெரியார் படத்திறப்பு விழாவில் எம்.ஆர். ராதாவுடன் ஆர்.எஸ். மலையப்பன் (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.) பங்கு பெற்றார். 29-9-60 மணப்பாறையில் பெரியார், கலைவாணர் படிப்பகத்தைத் திறந்து வைத்தார். 25-9-60 ஈரோட்டில் எம்.ஜி. அங்கப்ப செட்டியார் தலைமையில் பெரியாரின் எடைக்குச் சரியாகப் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டது. 30-9-60 சேலத்தில் பி. ரத்தினசாமிப்பிள்ளை தலைமையில் பெரியாரைத் தராசிலிட்டுச் சமஎடைக்குக் கைத்தறி ஆடைகளை வழங்கினார்கள். 28-10-60 மாயூரத்தில் 2 பொற்காசுகளாலான தங்க மாலை பரிசளித்தார்கள்.

சிறப்பான ஒரு கூட்டத்தைச் சென்னை நகர மக்கள் சார்பில் திருச்செங்கோடு கே. பரமசிவம் நடத்திக் காட்டினார். 20-10-1966 அன்று சென்னை கோகலே ஹாலில் பெரியாரின் 82-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். நிகழ்ச்சியின் தலைவர் செட்டி நாட்டரசர். சிறப்புரையாற்றியவர்கள் டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம், வி.ஆர். ராஜரத்னம் (ஓய்வு பெற்ற அய்.ஜி.) சி.பா. ஆதித்தனார், பி. பரமேசுவரன் எம்.பி., டி.ஏ.வி. நாதன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி எம்.எல்.ஏ., எம்.எஸ். அப்துல் மஜீத், புத்த பிக்கு நந்தீசுவரதேரோ, தமிழ்வாணன், அகல்யா சந்தானம். பேருரை நிகழ்த்தியவர் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார். பெரியாரும் இந்த விழாவில் கலந்து கொள்வாரென நம்பி அவரும் வந்தாராம். வராததால் ஏமாற்றமடைந்தாராம். நீண்ட நேரம் ராஜாஜி மனம்விட்டுப் பேசினார்:

“பெரியாரை 1939-ல் பெல்லாரி சிறையில் போட்டு வாட்டினேன் என்றார்கள். சென்னையிலிருந்து பெல்லாரிக்கு ஒரு டாக்டரையும் அனுப்பிக் கவனிக்கச் செய்தேன் என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. திருவண்ணாமலையில் 1919-ல் என்னைச் சந்திக்க வந்த பின்னர்தான் அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். உண்மையில் எனக்கு அதைப்பற்றித் தெரியாது; 1953-ல்தான் நான் அந்த அம்மாளைப் பார்த்தேன். பெரியார் வீட்டில் நான் முன்பு பல நாள் சாப்பிட்டிருக்கிறேன். தோசையை எப்படி இவ்வளவு வெண்மையாகச் சுடுகிறீர்கள்? என்று நாயக்கரின் தாயாரை விசாரித்தேன். வெந்தயம் போட்டு அரைக்க வேண்டும் என்றார்கள். அப்போதுதான் அதைத் தெரிந்து கொண்டேன்” என்று ராஜாஜி தமக்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நீண்டகால நட்பை நினைவு கூர்ந்தார். “அடுத்த முறை பிறந்த நாளில் அவரை அவசியம் வரச்செய்து என்னையும் பேச அழைப்பதாகச் சொல்கிறார்கள். இது அவ்வளவு சரியல்ல. இன்றே அவரை அழைத்திருக்க வேண்டும்” என்றார்.

17-10-60 அன்று “விடுதலை”க்குத் தொலைபேசி மூலம் பெரியாரின் அறிக்கை ஒன்று தரப்படுகிறது. என்ன அது? 23-10-60 அன்று திருச்சியில் “ஹைக்கோர்ட் நீதிப்போக்கிற்குக் கண்டன நாள்” என்பதாக, அதேபோலக் கொட்டும் மழையிலும் 10,000 பேர் நிறைந்திருக்க, அந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது:- “சென்னை அய்க்கோர்ட்டின் நீதிப் போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, பார்ப்பன வக்கீல்களின் ஆத்திர மூட்டத் தகுந்த, நேர்மைக்கும் மனிதத் தன்மைக்கும் கேடான போக்கை, இக்கூட்டம் வெறுப்பதோடு, இந்நிலை மாறாதிருக்குமானால், பார்ப்பன வக்கீல்கள் பெருங்கேடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்குமென எச்சரிக்கை செய்கிறது” - இதே காரியத்துக்காகப் பெரியார் அக்டோபர் 30-ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையிலும், நவம்பர் 5-ஆம் நாள் கும்பகோணத்திலும் கண்டனக் கூட்டங்களில் பேசினார்.

கட்டட நிதி வசூலுக்காக ரசீது புத்தகம் பெற்றுச் சென்ற தோழர்கள் சிலர், ஒழுங்காகப் பணத்தையும் கணக்கையும் தரவில்லை என்பதைக் கண்டித்துப் பெரியார் 12-11-60 அன்று ஓர் குறிப்புப் பிரசுரித்தார். திருவையாறு சப்ஜெயிலில் இருந்த குருசாமியை, அனுமதி பெற்றுப், பெரியார் சந்தித்தார். அவர் உடல் நலிவுற்றதால், அவர் சொந்த ஜாமீனில் வெளி வரவும் பெரியார் இசைந்தார். அதன்படி குருசாமி 8-12-60 அன்று வெளியில் வந்தார். வழக்கு நடைபெற்று வந்தது. வீர.கே. சின்னப்பன் திருமணத்தில் பெரியார் 27-11-60 அன்று வாழ்த்துரை வழங்கினார். திருச்சி நகர சபையில் பெரியாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது, 13-11-60 அன்று. அங்கு காமராசர் படத்தைப் பெரியார் திறந்து வைத்தார். செயற்கரிய செய்யும் கர்மவீரர் என்றும் மனிதருள் மாணிக்கம் என்றும் 26,000 பள்ளிகள், 304 உயர்நிலைப் பள்ளிகள், 57 கல்லூரிகளை நிறுவியவர் என்றும் காமராசரைப் புகழ்ந்தார் பெரியார். பின்னர் இது ஒரு தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது. கரூர், புதுக்கோட்டை நகராட்சிகளிலும் காமராசர் படத்தைப் பெரியாரே திறந்து வைக்க அழைக்கப்பெற்றார்.

பெரியாருடைய கருத்துகளைத் தாம் மெத்தவும் ஆதரிப்பதாகச் சென்னைப் பத்திரிகையாளர்களிடையே 30-12-60 அன்று ஜெயப்பிரகாச நாராயணன் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். சென்னையில் இந்தியத் தலைமை நீதிபதி பி.பி. சின்ஹா, வழக்கறிஞர்கள் சாதி உணர்ச்சியுடன் நடந்ததைக் கண்டித்து உரையாற்றினார்.

“நான் ஒரு அதிசயமான மனிதன் அல்லன். ஆனால் துணிவு உடையவன். கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுவதால் வெறுப்புதான் கிடைக்கிறது. இந்த நாட்டில் இன்று பார்ப்பன சாதி சூத்திர சாதி என்ற இரண்டே சாதிகளில் எல்லாம் அடங்கிவிடுகின்றனர். இந்த சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும், சரிநிலை, சரிபங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே சாதிக் கேட்டை ஒரு பெரும் அளவு ஒழிக்க முடியும். இதற்கு அரசு மூலமாக நடைபெற வேண்டிய காரியங்கள் இரண்டே இரண்டுதான் உண்டு. ஒன்று, இரண்டு சாதி மக்களுக்கும் சரி சமத்துவ விகிதத்தில் எல்லாப் படிப்பும் கிடைக்கும்படிச் செய்தல்; இரண்டு, இரண்டு சாதி மக்களுக்கும் உத்தியோகம் பதவி ஆட்சித் தலைமை ஆகியவற்றில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கேற்ற விகிதப்படி, சாதிவாரி உரிமையளித்து அந்தப்படி அந்தந்தச் சாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காரியமும் செய்வதற்குச் சட்டசபைக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்வதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது. ஏன்? ஆட்சி இந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது என்று அரசியல் சட்டம் தடுப்பதில்லை ; செய் என்று நிர்பந்தப்படுத்த இயலாதபடி மட்டுமே அந்தச் சட்டம் அமைக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு பார்ப்பான்தானே தனது உச்சிக் குடுமி, பூணூலை எடுப்பதில் அவனுக்கு எவ்விதத் தடையுமில்லை, ஆனால் சாதித் திமிரைக் காட்டும் அவனது உச்சிக் குடுமியைக் கத்தரித்து விடு என்றோ பூனூலை அறுத்து எறிந்து விடு என்றோ சொல்ல நமக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே இக்காரியங்கள் செய்யப்படுவதற்குக் கிளர்ச்சிகள்தான் தேவை; “சட்டசபை, பார்லிமெண்டு செல்வது தேவையில்லை. சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாது என்பது இன்றைய நிலைமை” - என்று பெரியார் பேசினார், எழுதினார்.

1961-ஆம் ஆண்டு துவக்க நாளிலேயே பெரியார் தமது புத்தாண்டுக் கோரிக்கை போலத் திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் ஒன்று ஆசைப்பட்டார். அதாவது தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராசர் ஆட்சி மேலும் பத்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் மறைமுகமாகக் காமராசர் ஆட்சிக்குத் தொல்லை தருவதைப் பொறுக்க முடியாமல் திருச்சியில் இதற்காகவே 9-1-61 அன்று ஒரு கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார். 29-1-61-ல் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை வரை 5 மைல் நீள ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடத்தினார். “மெயில்” என்னும் பார்ப்பன ஏட்டின் குறும்புகள் எடுத்துக் காட்டப் பெற்றன. 15, 16 நாட்களில் பெரியார், பெங்களுரில் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது, அவருக்கு வெள்ளியாலான கத்தி, குத்தூசி ஆகியவை பரிசளிக்கப்பட்டன. 3.1.61 அன்று திருமதி குஞ்சிதம் குருசாமி சென்னை மாநகராட்சியின் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். கல்வித்துறை இயக்குநர் நெ. து. சுந்தர வடிவேலுவுக்குக் குடியரசுத் தலைவரால் பத்மஸ்ஶ்ரீ என்ற விருது வழங்கப்பட்டது. திருச்சியில் 22.1.61 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டுக்குத் தலைவர் கிள்ளிவளவன், திறப்பாளர் சின்னப்பன், பேச்சாளர்கள் ஆனைமுத்து, செல்வேந்திரன், முத்து செழியன், புலவர் ராமநாதன் ஆகியோர். 1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் கணக்கில் “எல்லோரும் நாத்திகர் என்றே சொல்லுங்கள். 50 லட்சம் பேராவது நாத்திகர் இருக்க வேண்டாமா?” என்ற உணர்வூட்டும் செய்தி “விடுதலையில்” வெளிவந்தது. வடநாட்டில் பஞ்சாபி சுபா கோரிக்கைக்காக மாஸ்டர் தாராசிங் சிறையிலிருந்தார். சாந்த் படேசிங் பட்டினிப் போராட்டம் நடத்தினார். நேரு பெருமகனார் மனமிரங்கி 4-1-61 அன்று தாராசிங்கை விடுவித்து, அவரைச் சந்தித்துப் பேசப் போவதாக அறிவித்தார். நாகர்களுக்குத் தனிநாடு வழங்கப்பட்டது. இந்தியக் குடி அரசுத் தலைவர் 15-2-61 முதல் அது அமுலுக்கு வருமென்று அறிவித்தார்.

திருச்சி என். செல்வேந்திரன் வணிகக் குடும்பத்தைச் சார்ந்தவர், எடுப்புடன் கூடிய சொல்வளமும் எழுச்சியுடன் கூடிய குரல்வளமும் கருத்துடன் கூடிய நடைவளமும் மிக்க சொற்பொழிவாளராய்த் தோன்றித் தொய்வின்றித் தொடர்ந்து தொண்டாற்றி இன்று திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளராக விளங்குகின்றவர்,

தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, பகுத்தறிவுப்புலவர் ந. இராமநாதன் கரந்தை காரைக்குடி தமிழ்க் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர், “பெரியார் பேருரையாளர்” எனும் சிறப்புமிகு பட்டத்துடன் திராவிடர் கழகத்தின் ஆற்றல்மிகு ஆராய்ச்சிப் பேச்சாளராக முன்னணியில் விளங்குகின்றவர்.

“தமிழர் தலைவர்” என்ற ஈடற்ற நூலின் வரலாற்றாசான் தமிழ்ப் பெரும் புலவர் சாமி சிதம்பரனார் 17.11.1961 இரவு 10.30 மணியளவில் தமது 61 ஆவது வயதில் சென்னையில் மறைந்தார். நாரண துரைக்கண்ணன், முகவை ராச மாணிக்கம் போன்றோரும் இடுகாட்டில் இரங்கலுரை பகர்ந்தனர். சனவரி, பிப்ரவரி மாதச் சுற்றுப்பயணங்களில் பெரியாருடன், பொதுச் செயலாளர் ஏ. என் நரசிம்மன். பி.ஏ கலந்து கொண்டார். பெரியார் திருவொற்றியூரில் சொற்பெருக்காற்றுகையில் கண்ணீர்த்துளிகளைக் கண்டித்தார். “பெயரில் மாத்திரம் முன்னேற்றம் என்று இருந்தால் போதுமா? நான் பார்ப்பான் என்றால், நீ பிராமணன் என்கிறாய்? நான் பார்ப்பானே வெளியேறு எனும் போது, நீ அவன் கழுத்தை பிடித்துத் தள்ளினால் முன்னேற்றம்; நான் பூணூல் போடாதே என்று சொல்லும் போது, நீ அவன் பூணூலையே அறுத்தெறிந்தால் முன்னேற்றம்; நான் கிராப் வைத்துக்கொள் எனும் போது, நீ என்னைவிட முன்னே போய் அவன் உச்சக்குடுமியை அறுத்தால் முன்னேற்றம்! இதெல்லாம் செய்யாமல் பெயரில் மட்டும் முன்னேற்றம் சேர்த்துக் கொண்டால் அது வந்து விடுமா?” என்று கேள்விக் கண்களை மாரிபோல் தொடுத்தார் பெரியார்.

குருசாமி மீது திருவையாற்றில் தொடரப்பட்ட வழக்கில் 1.2.61 அன்று தீர்ப்பு 150 ரூபாய் அபராதம் கட்ட மறுத்து, 12 வது முறையாகச் சிறைவாசம், 9 மாத தண்டனை! பெரியாரின் சுற்றுப் பயண நிர்வாகி கோ. இமயவரம்பன், பெரியாரைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பவர் ரூ.75 தராமல் விட்டுவிடுவதைச் சுட்டிக் காட்டி அறிக்கை ஒன்று தந்தார். திருவாரூரில் 12.2.61 அன்று நடைபெற்ற எஸ்.ஆர்.எம்.யூ. மாநாட்டில் பெரியார், எஸ்.எஸ்.பாட்சா ஆகியோருடன், காங்கிரஸ் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாளையங்கோட்டை நகரசபையிலும் பெரியார், காமராசர் படத்தை 13.3.61 ல் திறந்து வைத்தார். மத்தியில் உள்துறை அமைச்சராயிருந்த பண்டித கோவிந்த வல்லப பந்த் 6.3.61ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுநீதி, கீதை, இராமாயணம் போன்றவை பட்டாசுபோல் கொளுத்தப்பட வேண்டியவை என்று பேசினார் பெரியார். பேராவூரணி வி.எஸ். குழந்தையின் மகன் லெனின் திருமணம் 5.2.61 அன்று புதுக்கோட்டையில் பெரியார் தலைமையில் நடந்தது. 19.2.61 வேலூர் ஈ. திருநாவுக்கரசு மணி விழாவிலும் பெரியார் வாழ்த்தினார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தும், அவர்தம் கணவர் எடின்பரோ கோமகனும் 19.2.1961 சென்னை வருகை தந்தனர். தமிழ்நாட்டை மிகவும் விரும்புவதாக அவர்கள், முதலமைச்சர் காமராசரிடம் செய்தி விடுத்தனர். சட்டசபை மண்டபத்தில் காமராசருக்குச் சிலை எடுக்க வேண்டும் என்று பெரியார் கருத்தறிவித்தார்.

மதுரை தியாகராயர் கல்லூரியில் 13.3.61 அன்று சிந்திக்கின்ற தன்மையில்லாததால் தமிழர் சமுதாயத்துக்கு வந்த கேடுகளை விளக்கினார் பெரியார்: “மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கிறோமே தவிரப் புத்தி என்ன சொன்னது, என்று பார்ப்பதில்லை. ஒரே மனிதனுக்கே வயதுக்கு வயது, ஆண்டுக்கு ஆண்டு அறிவு வளர்ந்து, புத்தி மாறும் போது, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே யாரோ சொன்னது இன்று பொருந்துமா? மனிதன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், ஒழுக்கங்கள் என்ன என்று, யாரோ முனிவரும் ரிஷியுமா சொல்வது? யார் இவர்கள்? இந்த ரிஷிகளின் பிறப்பு, அவர்களே எழுதியுள்ள படி எவ்வளவு அசிங்கம்? கலைக் கோட்டு முனிவர் மானுக்கும், ஜபுகர் நரிக்கும், கவுதமா மாட்டுக்கும், மாண்டவ்யர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கணநாதர் கோட்டானுக்கும், சவுகனர் நாய்க்கும், சுகர் கிளிக்கும், ஜாம்பவான் கரடிக்கும், அசுவத்தாமா குதிரைக்கும் பிறந்தார்கள் என்று புராணங்களில் எழுதி வைத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் நமக்கு வழிகாட்டிகளா?

ஆத்திகன் என்பவன் அறிவில் நம்பிக்கை வைக்காமல், சாஸ்திரம் புராணங்களை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவன். நாத்திகன் என்பவன் ஞானி, அறிவாளி, நீதியில் நம்பிக்கள் வைப்பவன், அறிவை உபயோகப்படுத்துகிறவன்” என்று விளக்க முரைத்தார் பெரியார், தொடர்ந்து மேலும் பேசுகையில் “நான் எதையும் முதலில் நன்கு தெரிந்து கொண்டு, எதையும் நிர்வாணமாகப் பார்த்தும், பிறகு வெளியில் எடுத்துச் சொல்லுகிறவன். ஒரு மனிதன் வர்ணிப்பது என்றால், அவன் ஆடை, நாமம் இவைகளை மட்டுமல்லாமல்; இவற்றுக்கு உள்ளே இருக்கின்ற அவனது கை கால் முதலிய அங்க அவயங்களை வர்ணிப்பதுதான் என்பது போல, நான் உண்மைகளை விளக்குகிறவன்” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சராகப் புதிதாய் வந்த லால் பகதூர் சாஸ்திரி ‘வகுப்புத் தகராறு தூண்டுவோர், தேசிய அய்க்கியத்தையும் ஒற்றுமையையும் கெடுப்போர் ஆகியோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தைப் பிரயோகிக்கலாம்.’ என ஆலோசனை கூறியது மிரட்டலாகவே தோன்றியது. பெரியார் எழுதிய “காமராஜரை ஆதரிப்பது ஏன்?“ என்ற புத்தகம் ஒன்று வெளியாகியிருந்தது. 3.4.61ல் சேலம் நகரசபைகளிலும் காமராசர் படத்தைப் பெரியார் திறந்தார். “எனக்கு வயது முதிர்ச்சியால் இந்திரியங்கள் சக்தி குறைந்து விட்டது. நடக்க முடியவில்லை . 11 மணி நேரத்திற்கு மேல் பேசுவது கஷ்டமாக இருக்கிறது ! என்னுடைய வேன் மிகவும் அசிங்கமாக இருக்கிறது. புதிதாக ஒரு வேன் அல்லது கார் வேண்டும்.” என்ற பெரியாரின் வேண்டுகோள் 24.3.61 “விடுதலை” யில் பெட்டிச் செய்தியாக வந்திருந்தது. உடனே தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகம் பெரியாருக்குப் புதிய கார் வாங்கித் தர முடிவு செய்தது. கழகத்திற்கு நிறைய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுகோள் விடுத்தார் பொது செயலாளர். குமாரபாளையத்தில் பெரியாருக்கு மணிமகுடம் எனும் அழகிய கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். 2.4.61 அன்று 9 வாரம் சிறைத்தண்டணை அனுபவித்த குருசாமி, 4.4.61 அன்று திருச்சியில் விடுதலையாகி, நேரே பெரியாரைச் சந்தித்து வணங்கினார். கோவையில் 50 ஏக்கர் நிலமும், லட்சரூபாய் பணமும், நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜி.டி நாயுடு வழங்கினார். 13.4.1961 முதல் அரசு இலாக்கா அனைத்திலுமே தமிழ் வழங்குமென ஆணை இடப்பட்டது.

1961 ஏப்ரல் 19 ஆம் நாள் ஈ.வெ.கி சம்பத் தன் தோழர்கள் சிலருடன் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கினார். குளித்தலைப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் காமராசர் கிராமப் புறங்களில் சென்றபோது, சில தாய்மார்கள் தமது கால்களில் விழுந்து வணங்கியதை வன்மையாகக் கண்டித்து, “இப்படிச் செய்தால் தான் ஏதோ உயர்ந்தவன். நீங்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமாகிவிடும். வேண்டாம் இந்தப் பழக்கம்!” என்றார். தாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு உழைக்க வேண்டுமென்று ஆசைப்படுவதால் சில கட்டுத் திட்டங்களை அறிவித்துத் தோழர்கள் கட்டுப்பாட்டுடன் அவற்றைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார் பெரியார். இந்தப் பெரிய அறிக்கை 25.4.61 அன்று, பெரியார் அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியானது. உடல் நலம் குன்றி அஜீரணமும் மலக்கட்டும் ஏற்பட்டுள்ளது. அதனால் அவசியம் பயணிகள் விடுதியில் ஓர் அறை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் உணவு தாமே சமையல் செய்து கொள்வார்கள், ஊர்வலங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்களின் வரவேற்புகளை முடிந்தால் பொதுக்கூட்டத்திலேயே தந்து விடலாம். நகரசபையானால் பரவாயில்லை , நேரில் போகலாம். கூட்டங்களில் பெரியாரோடு வருகின்றவர்கள் தவிர, வேறு யாரும் பேசித் தொல்லைகளையுண்டாக்க வேண்டாம். மாலைகளைச் சூட்டி வீணாக்குவதை விடப் பதிலுக்கு எட்டணா கொடுத்து விடலாம். பெட்ரோல் செலவும் ரிப்பேர் செலவும் வேன் சம்பந்தமாக நிறைய ஓடுகிறது . என்றெல்லாம் விவரமாக அனைத்தையும் குறித்திருந்தார் பெரியார்.

ஏப்ரல் 29, 30 மே 1, 2 நாட்களில் பெரியார் பெங்களூர் சென்று வந்தார். 27.4.61 அன்று “விடுதலை” துணைத் தலையங்கப் பகுதியில் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை மறைவு, அண்ணாமலைப் பல்கலைகழகத் துணை வேந்தராக வி. சுப்ரமணியம் நியமனம் ஆகியவை இடம் பெற்றன. காமராசர் தமிழர்களின் ரட்சகர், தியாகி என்று பெரியார் வர்ணித்து வந்தார். சிரிமாவோ பண்டாரநாயகர் ஆட்சியில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு இலக்காயிற்று, திருச்சியில் நாகம்மையார் அனாதைப் பெண்கள் இல்லம் ஒன்றினை மணியம்மையார் துவக்கினார். 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு உணவு கல்வி தங்குமிடம் யாவும் அங்கு இலவசமாய் வழங்கப்பட்டன.

27.4.1961 அன்று குழுமிய தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் பெரியாருக்குப் பிரச்சார மோட்டார் அளிக்க முடிவு செய்தது. ஈ.வெ.கி சம்பத் தான் பெரியாரைச் சந்தித்துத் தனது தமிழ் தேசியக் கட்சியில் கொள்கை முதலியவற்றைப் பெரியாரிடம் விளக்கியதாகவும், பெரியார் தன்னைப் பாராட்டியதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார். ஜூன் மாதம் பிற்பகுதியில் பெரியார் சுற்றுப் பயணத்தில் பொதுச் செயலாளர்களான வீரமணியும் நரசிம்மனும் உடன் சென்றனர், தென்னார்க்காடு மாவட்டத்தில் பெரியார் சுதந்திரக் கட்சியைச் சரியாக எடைப்போட்டு 9.6.61 “விடுதலை” யில் ஒருதலையங்கக் கட்டுரை கட்டினார்:- “சுதந்திராக் கட்சி அரசியல் கட்சியல்ல; இனநலக் கட்சி, காமராசர் ஆட்சியையும், காங்கிரஸ் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டுமென்றுதான் தமிழ் நாட்டிலுள்ள மற்ற கட்சிகள் சொல்கின்றன. ஆனால் சுதந்திராக்கட்சியோ காமராசர் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ்க்க வேண்டுமென்றே சொல்லுகிறது. இதற்கு அரசியல் காரணம் ஒன்றுமில்லை. நாட்டிற்கு நல்ல ஆட்சி வேண்டும் என்கிற கவலை சுதந்தராக் கட்சிக்கு கிடையாது. சுதந்திராக்கட்சி இனத்துக்கு (பார்ப்பனர்களுக்கு) நாட்டில் எந்தக் குறையும் இல்லை. ராஜாஜியை விட உயர்ந்த பதவியை வகித்தவர் வேறு யாரும் இவர் அதற்கு உள்ள ஒரே குறை, படுபாதாளத்தில் கிடந்த மற்ற இனத்தாரும் இன்று மேலே வரும் படியான முயற்சிகளைச் செய்கிறார்களே என்கிற ஆத்திரந்தான். அதனால்தான் ஆச்சாரியார், இது தர்மத்தை நிலை நிறுத்தும் கட்சி என்கிறார். உலகில் தர்மம் வேறு, நியாயம் வேறு அல்லவா?

இன்றையக் காமராசர் ஆட்சிக் காங்கிரசானது சமுதாயத் துறையில் பச்சை நீதியை (bare justice) இலட்சியமாக வைத்து ஆட்சி செலுத்தி வருகிறது. வர்ணாசிரமக் கோட்டையைக் கல்வித்துறையில் தகர்த்து வருகிறது. இந்த முயற்சிக்கு அணுகுண்டு வைத்துத் தகர்த்து நாசமாக்கும் முயற்சிதான் ராஜாஜியின் சுதந்திரக் கட்சியாகும். கள்ள நோட்டு என்பதன் இலட்சியம் மக்களை ஏய்த்துப் பயன் அடைவதாகும். அதற்கும் மேலான தந்திரத்தினால் மக்களை ராஜாஜி ஏய்க்கப் பார்ப்பதால், சுதந்திராக் கட்சிக்கு கள்ள நோட்டுக் கட்சி என்றே வேறு பெயர் வைக்கலாம். இதற்கு முன், பதவிக்கு வந்ததும் ஆச்சாரியார் என்ன செய்தார்? இப்போதும் என்ன செய்வார்?” என்று பெரியார் வெளிச்சம் உண்டாக்கியிருந்தார்.

காரினால் தமக்கு அடிக்கடி சுற்றுப் பயணத்தில் இடையூறு நேரிடுவதாகப் பெரியார் குறிப்பிட்டிருந்தார் அல்லவா? அது நல்ல பயனை அளித்தது. சென்னை நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ. பெருமாள் உடனடியாகத் தம்முடைய டாட்ஜ் காரைத் தந்து விட்டார். பலரும் நிதியளித்து வந்தனர். பெரியாரின் வேன் ரிப்பேரான சமயங்களில் ஜி.டி. நாயுடு, பொறையாறு சத்தி விலாஸ் பஸ் அதிபர் பார்த்தசாரதி ஆகியோர் பழுது பார்த்து உதவினர். திருச்சி டி.ஆர். சௌந்தரராசன் தமது நில்லாதே ஓடு என்ற நாடக வாயிலாக வசூலான தொகை ரூ.1322 நன்கொடையாய் வழங்கினார். இப்படி உதவிய எல்லாரையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டுப், பெரியார் நன்றி பொங்கப் பொங்க ஒரு கட்டுரையே தீட்டியிருந்தார்.

ஜூலையில் சென்னையில் காமராசரின் 59-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.மராட்டிய முதல்வர் சவான் கலந்து கொண்டார். முதலமைச்சரோ, தஞ்சைப் பகுதியில் பெருத்த வெள்ளச் சேதத்தைப் பார்வையிடப், படகுப் பயணம் செய்து கொண்டிருந்தார். அதேபோன்று, மதுரையில் மூன்றாவது தி.மு.க. மாநில மாநாடு 13, 14, 15, 16 நாட்களில் நடைபெற்றது. தலைமை தாங்கிய அண்ணாவும் இடையில் ஓர் நாள் தஞ்சைப் பகுதி சென்று, படகுகளில் ஏறிப்போய்ப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கி வந்தார். பெரியார் அரகண்டநல்லூரில் பேசும் போது, அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய போராட்டம் துவக்குவதாக அறிவித்தார். கழகத் தோழர்கள் சில நேரங்களில் நாணயக் குறைவாக நடந்து, தமக்கு மாற்றாரை விட இவர்களே அதிகத் தொல்லை தருவதாகக் கூறி வருந்திய பெரியார், திருச்சியை அடுத்து சமயபுரத்தில் 500 ரூபாய் நிதி தருவதாகக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று, கடைசியில் தராமல் தவறிய செய்தியையும் உதாரணமாக காண்பித்தார். இந்த அறிக்கை வந்த அடுத்து, அதாவது 14.7.61 அன்று, தொலைபேசி வாயிலாகவே, திருச்சி வட்ட திருச்சி நகர திராவிடர் கழகங்கள் கலைக்கப் பட்டதாகச் செய்தி தந்தார் பெரியார்.

29.7.1961 அன்று குஞ்சிதம் குருசாமி அம்மையார் தமது 52-ஆவது வயதில் மறைந்தார். ஆத்தூரிலிருந்த பெரியார் தகனத்துக்குள் சென்னை வந்து விட்டார். இடுகாட்டில் ஈ.வெ.கி. சம்பத், எஸ், ராமநாதன், என்.வி. நடராசன், டி.கே. சண்முகம் ஆகியோரும் இரங்கலுரையாற்றினர். பின்னர் 16.8,61 அன்று நீத்தார் நினைவாகப் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் காமராசர், டாக்டர் மு.வரதராசனார், ப.ஜீவானந்தம், இந்திராணி பாலசுப்ரமணியம், டி.ஏ.வி. நாதன் ஆகியோர் பங்கு பெற்றனர். கண்ணீர்துளிக் கட்சியைச் சார்ந்த மதுரை முத்து 11.8.61 அன்று கைதானதாக “விடுதலை” செய்தி வெளியிட்டது.

நாகம்மையார் பெண் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி திருச்சியில் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது அரசினரால். காமராசர், முதியோர் பென்ஷன் திட்டத்தை விரிவாக்கி இனி 60 வயது ஆனவர்களுக்கும் கிடைக்க (அதுவரை 70 வயது) ஆவன செய்தார். “நான் காங்கிரசில் சேர்ந்து விட்டேனா? என்று சிலர் கேட்கிறார்கள். நான் சேராதிருப்பதே நல்லது!” என்றார் பெரியார். “அரசியல் சுய நலமாகிவிட்டது. வேறு யாரும் இதைச் செய்ய முன் வரமாட்டார்கள். எல்லா ‘இந்தியக் காங்கிரசு’ உள்ள வரையில் நான் காங்கிரசுக்கு எதிர்ப்பாளனாகவே இருக்கிறேன். மற்றும், காங்கிரசின் கள் ஒழிப்பை , கதர் பரப்புதலை, காந்தியத்தை, சாதிமத கோயில் சம்பிரதாயப் பாதுகாப்பை நான் ஒப்புக் கொள்ள முடியுமா? நானே மானங்கெட்டுக் காங்கிரசில் நுழையலாம் என்று துணிந்தாலும், அவர்களும் சேர்க்க மாட்டார்கள்” என்றும் பெரியார் 20.7.61 தலையங்கப் பகுதியிலேயே, “விடுதலை” நாளேட்டில் கட்டுரையாய் எழுதினார்.

வேதாரணியம் காங்கிரஸ் தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளை எம்.எல்.ஏ. தமது 65 ஆவது வயதில் திடீரென்று, 1961 ஆகஸ்டு 25-ஆம் நாள் மறைந்தார். ஈரோடு என். கரிவரதசாமி, நீண்டநாள் குடிஅரசு அலுவலகக் காசாளராயிருந்தவர், 22-ஆம் நாள் மறைந்தார். திருவாரூர் சிங்கராயர் செப்டம்பர் 23-ஆம் நாளும், திருச்சி ஃபிரான்சிஸ் அக்டோபர் 12-ஆம் நாளும் மறைந்தனர். 35 ஆண்டுகள் “குடிஅரசு”, “விடுதலை” அலுவலகங்களில் வாச்மேனாக இருந்த பழனி (கவுண்டர்) ஆகஸ்டு 29-ஆம் நாள் மறைந்த செய்தி “விடுதலை”யில் முக்கிய இடம் பெற்றிருந்தது. சம்பத்தும் கண்ணதாசனும், சாதி ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறோம், கலந்து கொள்வீர்களா? என்று கேட்டார்களாம்; நாம் தமிழர் கட்சி நடத்திய மாநாட்டுக்கே போனவன், உங்கள் கட்சிக்கு வர மாட்டேனா? வருகிறேன் என்றாராம் பெரியார். நாம் தமிழர் கட்சி. தேர்தலில் நிற்பதாக அப்போது முடிவெடுத்து விட்டது. தொலைபேசி மூலமாகப் பெறப்பட்ட இச்செய்தி 29.8.61 “விடுதலை”யில் காணக் கிடக்கின்றது.

பட்டுக்கோட்டை அழகிரி குடும்பத் திருமணங்களில் பெரியார் 6.9.61 அன்று தலைமை தாங்கி நடத்தித் தந்தார். அழகிரி மகன் துலீப், அழகிரி மகள் ராணி ஆகியோர் மணவினை நிகழ்ந்தது. திருச்செங்கோடு கே.பரமசிவம் நடத்தும் பெரியார் 83-வது பிறந்ததாள் விழா இந்த ஆண்டு 17.9.61 சென்னை ஆபட்ஸ்பரி மன்றத்தில் நடந்தது. செட்டிநாட்டரசர், சர் ஏ.ராமசாமி, ஆசைத் தம்பி, தமிழ்வாணன், சவுந்தரா கைலாசம், அகல்யா சந்தானம், குழந்தைவேலு (ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி) ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகவேள் ராதா 8300 ரூபாய் நன்கொடை வழங்கினார் பெரியாரிடம். தமிழ் தேசியக் கட்சியினர் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் 15, 16 நாட்களில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தினர். பெரியாருடன் குன்றக்குடி அடிகளார், தேவநேயப் பாவாணர் ஆகியோர் கலந்து கொண்டனர். 21-ம் நாள் பெரம்பலூர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மாநாட்டுக்குப் பெரியார் தலைமை தாங்கினார். தஞ்சையில் திராவிடர் கழகத்துக்குக் கட்டடம் சொந்தமாகக் கட்டப்பட்டு, அதைப் பெரியார் 20.9.61 அன்று திறந்து வைத்தார். திருச்சியில் டாக்டர் மதுரம் தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழாவில் ரூ.6569 நிதியும் மணிமகுடமும் வழங்கப் பெற்றன. 11.10.61 “விடுதலை”யில் மிகச் சிறிய அளவில் ஒரு செய்தி காணப்படுகிறது: “எஸ், குருசாமி ராஜினாமா வந்து சேர்ந்தது; ஈ.வெ. ரா.” - என்று மட்டும் உள்ளது.

சிதம்பரத்தில் 8.10.61 அன்று கோலாகலமான கொண்டாட்ட விழாவில் நடமாடும் இல்லம் என வர்ணிக்கத்தக்க MSW 7007 வேன் பெரியாருக்கு வழங்கப்பட்டது. பி.ஏ. பெருமாள் தலைமையில் எஸ்.ஆர்.வி.எஸ். மானேஜிங் டைரக்டர் குடந்தை ஆரோக்கியசாமி, கார் சாவி வழங்கினார். சம்பத், கண்ணதாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிம்சன் கம்பெனி அனந்தராமகிருஷ்ணன் மேற்பார்வையில் வேன் தயாரானது. “காமராசர் ஆட்சி சாதி ஒழிப்புக்குச் சாதகமாயிருக்கிறது. அதனால் இன்னும் ஓர் ஐந்தாண்டு காலத்துக்குக் காமராசருக்கே வாக்களியுங்கள்!”என்று கேட்டார் பெரியார்.

பெரியார் தேர்தல் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டார்! சென்னை மாநகரில் ஏராளமான பொதுக்கூட்டங்கள்! “கண்ணீர்க் துளிகள் சட்டசபையில் சாதித்தது என்ன?” என்று வீரமணி தொடர் கட்டுரை தீட்டி வந்தார். “தமிழ் நாடா? திராவிட நாடா?” என்ற விளக்கநூலும், வீரமணி எழுத, குடிஅரசுப் பதிப்பகச் சார்பில் வெளியிடப்பட்டது. 17.11.61 அன்று, தேர்தலில் திராவிடர் கழகத்தின் நிலையை விளக்கிப் பெரியார் கட்டுரை வரைந்தார்.

“கொஞ்ச நாட்களுக்கு முன்பு, திராவிடர் கழக ஆதரவாளர்களும், திராவிடர் கழகச் சார்புள்ளவர்களும், தங்களுக்கு அவசியம் என்றோ, சரி என்றோ பட்டால், அவர்கள் காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதில் நமக்கு ஆட்சேபனையில்லை, என்று எழுதியிருந்தேன். கழகத்தார்கள் சேர்ந்து கொள்ளலாம் என்று நான் கருதியிருந்தால் தெளிவாக, விளக்கமாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் கழகத்தார் இஷ்டப்பட்டவர் சேர்ந்து கொள்ளலாம் என்று எழுதியிருப்பேன்.

வரப்போகும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மக்களுக்கு விளக்கம் சொல்லப் போதிய ஆட்கள் இல்லை. கழகத் தோழர்கள், கழகச்சார்பிலேயே நல்லபடி விளக்கம் கூறலாம். நிற்க, தேர்தலில் கழகத்தின் நிலைமை என்னவென்றால் கண்ணைமூடிக் கொண்டு காங்கிரசை ஆதரிப்பது தான்!

யார் யாரை நிறுத்துவது என்ற பொறுப்பு 100க்கு 100 காங்கிரசையே சேர்ந்ததாகும். ஆகவே காங்கிரஸ்காரர்கள் ‘களிமண்ணையோ’, ‘மரக்கட்டையையோ’ நிறுத்தினாலும் நாம் நமக்காகவே வேலை செய்வதுபோல் பாடுபட வேண்டும்.

ஆகவேதான், காமராசரையே நம்பி எல்லாப் பொறுப்புகளையும் அவர் மீதே போட்டு அவரால் நிறுத்தப்படுகிற ஆட்களில் 100க்குத் 90 பேருக்குக் குறையாமலாவது வெற்றி பெறும்படிச் செய்ய வேண்டியது நம்முடைய கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." என்பதுதான் கட்டுரையின் முக்கிய கருத்தாகும்.

1962-ஆம் ஆண்டு, பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவோடு துவங்கிற்று. இனநலம் என்ற கண்ணோட்டத்துடன்தான் பெரியார் காமராசரை ஆதரித்து வந்தார். அவரை நேரில் சந்திப்பதே கிடையாது. 23.7.57 அன்று டாக்டர் வரதராசலு நாயுடு மறைவின்போது பார்த்தது. அவரையே ஆதரிப்பதற்குக் காரணம் அவரது ஆட்சியைக் குறை சொல்கிற கண்ணீர்த் துளிகளுக்குக் கொள்கையும் கிடையாது; திறமையும் இல்லை என்றார் பெரியார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க் கட்சியார் வருவதற்குக் கூட இலாயக்கில்லை என்று தமது கூட்டத்தில் பேசி வந்தார்.1.1.1962 “விடுதலை”யில் பெரியார் “பார்ப்பனத் தோழர்களுக்கு” என்று எழுதிய மிக உருக்கமான கட்டுரை, விருப்பு வெறுப்பின்றிப் படித்து, ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக அமைந்தது. "பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வும், அவர்கள் அனுபவிக்கிற, அளவுக்கு மேற்பட்ட விகிதமும்-ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. நான் நமது நாட்டையும் சமுதாயக்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும் நாகரிகத்துக்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். பார்ப்பன சமுதாயம் இதற்கு முட்டுக கட்டையாக இருக்கிறது என்று, சரியாகவோ தப்பாகவோ நான் கருதுகிறேன். தாங்கள் அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால், நமது நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும்.

பார்ப்பன சமுதாயம் இன்றைக்குத் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இராஜாஜியின் கட்சிக்கு, அல்லது, அவர் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிற கட்சிக்கு வோட்டுப் போட்டாலும், காங்கிரசுக்கே போட்டாலும், இரண்டு மல்லாத வேறு கட்சிக்குப் போட்டாலும் இந்தத் தேர்தலில் பார்ப்பனர்கள் பொது மக்கள் நம்பிக்கையைப் பெறமுடியாது. பொது மக்கள் சந்தேகமும் மாறாது. அதனால் பார்ப்பனர்கள் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும், யாருக்கும் வோட்டுப் போடாமல், விலகி இருப்பதே புத்திசாலித்தனமான வழியாகும்.

தேர்தலுக்குப் பிறகு அரசியல் திட்டம் எதுவாக இருந்தாலும், சமுதாயத் திட்டம் என்பது பார்ப்பனர் வெறுப்புத் திட்டமாகத்தான் இருக்கும். இனி, கண்ணீர்த் துளிக் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்கு சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிரிகளல்லர்.

பார்ப்பனர்கள் நான் ஏதோ மிரட்டுகிறேன் என்பதாக கருதிவிடக் கூடாது. இதற்கேற்ற மாதிரிப் பார்ப்பனத் தலைவர்கள் அறிக்கை விடுவது நலம் என்று கருதுகிறேன்."அறிக்கையில் பெரியார் நுணுக்கமான பல நிலைமைகளை நன்கு ஆராய்ந்து கூறியிருந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே ராஜாஜி, ஈ.வெ.ரா. மிரட்டுகிறார் என்ற பொருள்பட அந்த வாரக் ‘கல்கி’ இதழில் எழுதியிருந்தார். ஓட்டுச் சாவடியில் வன்முறை கையாள்வார்கள் போலும் என்றெல்லாம் திசை திருப்பிவிட்டார் ஆச்சாரியார்.

பெரியாருக்குக் காலில் சுளுக்கு ஏற்பட்டதால் நாற்காலியில் அமர்ந்தபடியே, 1962 சனவரி 6, 7 நாட்களில் பெரியார் திடலில் நடைபெறவிருந்த இரு மாநாட்டு முன்னேற்பாடுகளையும் நேரில் கவனித்து வந்தார். 6-ந் தேதி காலை சென்னை தியாகராய நகரிலுள்ள பார்க்கிட் சாலையில் வியூகம் வகுத்து மாபெரும் கருஞ்சட்டையினர் ஊர்வலம் புறப்பட்டது. லட்சம் பேருக்கு மேல் மக்கள் குழுமினர். தலைவர் பெரியார் அலங்கார ஊர்தியில் அமர்ந்து வந்தார். 250க்கும் மேற்பட்ட பஸ்களும் டிரக்குகளும் அணிவகுத்து வர, 13 மைல் நீளத்தையும் கடந்து வந்தது அந்தப் பேரணி. ஊர்வலமே அன்றைய பொழுதில் பெருமளவை எடுத்துக் கொள்ளுமோ என அஞ்சிச் சிறிது குறுக்கு வழியில் வர நேரிட்டது. அதனால் தி. க. மாநாட்டில் முழுமையாகப் பெரியார் மட்டுமே பேச நேர்ந்தது. குருசாமி வேதாசலனார், நரசிம்மன் சிறிது பேசினர். இரவு எம்.ஆர். ராதாவில் லட்சுமிகாந்தன் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. மறுநாள் வோட்டர்கள் மாநாடு புதுமையாக, முதன்முறையாக நடந்தது. ஈ.வெ.கி. சம்பத் வரவேற்க, ஆதித்தனார் திறந்து வைக்க, குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்றார். அப்துல் மஜீத், கண்ணதாசன், டாக்டர் விஜயலட்சுமி, பெரியார் உரையாற்றினர். இரவு சிவாஜி கணேசன் குழுவினரின் நாகநந்தி நாடகம் நடைபெற்றது. பெரியார் தலைமை ஏற்று, சிவாஜி தலைசிறந்த நடிகராகவும் வள்ளலாகவும் விளங்குகிறார் எனப் பாராட்டினார். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கைகளைத் தாமும் இனிப் பின்பற்றுவதாக, சிவாஜி கணேசன் நன்றி தெரிவிக்கையில் கூறினார். “நம்மை எதிரிகளாக மதித்து வந்த நேரு, நமது பட எரிப்புப் போராட்டத்துக்குப் பின்னர், சாதி அமைப்புகள் ஒழிய வேண்டுமென்று கூறத் தொடங்கியுள்ளார். காமராசர் ஆட்சியும் நமது சாதி ஒழிப்பிற்கு அனுகூலமாயிருக்கிறது, அதனால் அடுத்த தேர்தலில், சமத்துவ சமுதாய அமைப்புக்கு ஆக்கமளித்திடக், காமராசர் கட்சிக்கே வோட் செய்ய வேண்டும்” என்று பெரியார், மாநாட்டில் வேண்டிக் கொண்டார். பொங்கலன்று திருச்சியில், தேர்தலும் மக்கள் கடமையும் என்ற தலைப்பில் பெரியார் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து வீரமணியும் உடன்வர, நேரடியான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 22-ந் தேதி லால்குடி தொகுதியிலும், 23-ந் தேதி சீரங்கம் தொகுதியிலும் ஒரு நாளைக்கு 13, 14 கூட்டங்களில் பேசிட, மின்னல் வேகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பெரியார்.

திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, தம்மை எதிர்த்து நின்ற ஒரே சுதந்திர வேட்பாளர் வாபஸ் வாங்கியதால் போட்டியின்றி வெற்றி பெற்றார். தமிழ் தேசியக் கட்சி 15 இடங்களைத் தேர்ந்தெடுத்துச் சிறிய அளவில் தேர்தல் பணிகளை நடத்தியது. தலைவரான சம்பத் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற வீரராய், ஆங்கிலம் தமிழ் இருமொழி வல்லவராய், ஒரே நேரத்தில் திராவிடன், ஜஸ்டிஸ் இரண்டிலும் தலையங்கம் எழுதிய திறமைமிக்கவராய், இறுதி நாட்களில் அகராதித் தொகுப்பில் ஈடுபட்டவராய் விளங்கிய டி.ஏ.வி. நாதன் 20.1.1962 அதிகாலை தமது 58வது வயதில் இயற்கை எய்தினார். பெரியார் பெரிதும் துயரமுற்றார்.

தஞ்சையில் தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்க மாநாடு 28.1.62 அன்று, மத்திய அரசு ஊழியர்கட்குக் கல்விச் சலுகை வழங்கப்பட்டதைப் பாராட்ட நடைபெற்ற போது, பெரியாரும் கலந்து கொண்டார். கழகத் தோழர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசும்போது கண்ணியத்தைக் காக்க வேண்டும். தனிப்பட்ட யாரையும் தாக்கிப் பேசக் கூடாது என 30.1.62 அன்றைய “விடுதலை”யில் பெரியாரின் அறிக்கை வெளியாயிற்று. காமராசர், சுதந்திரக் கட்சியினரின் சாதி வெறிப் போக்கை கண்டித்து, மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்க்க வேண்டியதுதான் என்கிறார்கள்; நாங்கள் அவன் படிக்க வேண்டும் என்று சொல்லி வசதி செய்து தருகிறோம், என்று சிதம்பரத்தில், 30.1.62-ல் பேசினார். பிப்ரவரி மாதம் நன்றாகத் தேர்தல் சூடு பிடித்துவிட்டது. மத்திய அரசு தென்னகத்திற்குப் பல சலுகைகளை வழங்கி வந்தது. தாம்பரம் வண்டலூர் மின் ரயில் தொடங்கப்பட்டது. விருதுநகர்-அருப்புக்கோட்டை மானாமதுரை ரயில் பாதை அமைப்பு தொடங்கியது. இது போன்ற பெரிய பெரிய விழாக்கள் காமராசர் தலைமையில் நடந்தன. நேரு சென்னைக்கு வந்து, காமராசர் மாபெரும் சக்தியாக இன்று நாட்டோர்க்குக் கிடைத்துள்ளார் என்றார். 6.2.1962 அன்று .

“விடுதலை” நாளிதழில் காமராசர் ஆட்சியின் சாதனைகள் - இந்தப் பத்தாண்டுகளில் என்று தினந்தோறும் பட்டியலிட்டுக் காண்பிக்கும் பெட்டிச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கண்ணீர்த் துளிக் கட்சியினரின் பித்தலாட்டம்; பொறுக்கித் தின்னுவது, தவிர எதிர்க் கட்சிகள் போய் வேறென்ன சாதிக்க முடியும்? மூலவருக்குக் காஞ்சியில் தோல்வி முகம் - நிருபர் சேகரித்த சிறப்புத் தகவல் - என்றெல்லாம் அப்பட்டமான பிரச்சார வன்மை படைத்த செய்திகள் முதலிடம் பெற்றன. நேரு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கிறார். பெரியார் பிரச்சாரம் இமயத்திலும் எதிரொலிக்கிறது. நல்லோர்களையே தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் - பெரியார் எச்சரிக்கை - நூற்றுக்கு நூறு வாக்குப் பதிவு அவசியம் - வாக்களிக்கத் தவறாதீர்கள், (1962 தேர்தலில் 70.7% வாக்குப் பதிவு செய்து இந்தியாவில் தமிழகமே முன்னணியில் நின்றது) முஸ்லீம் பெருமக்களுக்குச் சமநீதியும் நல்ல உயர் பதவிகளும் வழங்கி வருபவர் காமராசரே ஆவார். If the electors are fools the legislators will be rescals என்று பெர்னாட்ஷா கூறியதை மறவாதீர்கள் - பெரியார் பேசுகிறார்-சட்ட மன்றத் தொகுதியில் இன்னாரையும் நாடாளுமன்றத் தொகுதியில் இன்னாரையும் ஆதரியுங்கள் (காமராசரின் வேட்பாளர்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?) என்றெல்லாம் பெரியாரின் தலையங்கப் பகுதிக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும், செய்திச் சித்திரங்களும் வாக்காளரை ஊக்கப்படுத்தி வந்தன.

இவ்வளவு கடுமையான தேர்தல் பிரச்சார உழைப்பினால் பெரியாரின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. 22.2.62 அன்று திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்னைப் பொது மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு இடநெருக்கடி காரணமாகப் பழமைபோல் சுந்தரவதனம் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். அடுத்து 4, 5 நாட்களுக்குக் கூட்டங்களுக்குச் செல்லாமல் ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வற்புறுத்தினர். பின்னரும் முழு ஓய்வு தேவையெனப் பொது மருத்துவமனையிலேயே 2.3.62 முதல் தங்கினார் பெரியார். இடையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அதிர்ச்சி தரத்தக்க, ஆனால் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில், அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். ஆயினும், நிறுத்தப்பட்ட 142 பேரில் 56 பேர் வெற்றி பெற்று, தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சியாயிற்று. நாடாளுமன்றத்துக்கு நிறுத்தப்பட்ட 18 பேரில் 7 பேர் தி.மு.க. வேட்பாளர் வென்றனர். காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்றதாயினும், 154 என்ற எண்ணிக்கை சட்ட மன்றத்தில் 138 எனக் குறைந்து விட்டது. இருப்பினும் வடநாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற செய்தி, “விடுதலை”யில் முதல் பக்கப் பெருஞ் செய்தியாக, வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் பட்டது. மண்ணைக் கவ்விய கண்ணீர்த்துளிகள் பட்டியலும் வழக்கம் போலவே பிரசுரிக்கப்பெற்றது. ம.பொ.சி. - திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியல்ல; எதிரிக் கட்சிதான் - என்றே வியாக்கியானம் செய்தார்.

பெரியார் மருத்துவமனையில் இருந்த வண்ணம், காங்கிரசின் வீழ்ச்சி பற்றிய சர்வே, நடத்தி, காங்கிரசுக்காரர்களில் ஒரு சிலரின் சிரத்தையின்மை, பகிரங்கமான துரோகம் இவை பற்றி வெளிப்படுத்தி வந்தார். “நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் வாழ்வுக் கட்சிகள் எல்லாமே தோல்வியடைந்துள்ளன. காரணம் காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஆணவமும் அகம் பாவமும் மிகுந்து விட்டது. என் நிலையும் அப்படித்தான். இந்தத் தோல்விகளால் ஆச்சாரியாருக்கு மட்டுந்தான் ஒன்றும் நாட்டமில்லை. காரணம் அவருக்குக் கேபிடல் எதுவுமே கிடையாது -" என்று விவரித்தார் பெரியார். கண்ணீர்த்துளிகள் வெற்றி பெற்ற இடங்களில் தவறான முறைகளைக் கையாண்டதாகவும், சினிமா மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. தஞ்சைத் தொகுதியில் காலண்டர், சோப்பு, சுனோ, பவுடர் போன்ற பொருட்களைக் கொடுத்து ஓட்டுப்பெற்றதாக கம்யூனிஸ்ட் மணலி கந்தசாமி அவதூறு கூறினார். தேர்தல் நின்று போயிருந்த அந்தநல்லூர் தொகுதியிலும் காங்கிரசை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும், அதற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் வே. ஆனைமுத்து பொறுப்பில் பாடுபடவேண்டுமென்றும், 4.3.1962 அன்று பெரியார் சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்தே அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் விருப்பத்திற்கிசைய அந்தநல்லூரில் காங்கிரஸ் வென்று, திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றது.

பெரியார் 6.3.1962 “விடுதலை”யில் மைனாரிட்டி சமுதாயம் என்ற தலைப்பின்கீழ் தீட்டியுள்ள தலையங்கம் அருமையான நல்லதொரு கருத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவது ;– ஒரு நாட்டில், மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாசாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ இருக்குமானால், அந்த நாட்டின் நலத்துக்கும் பொது வளர்ச்சிக்கும் அவை கேடாகவே முடியும். பார்ப்பானுக்கு பயந்து நடந்ததாலும், முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்ததாலும், அவர்கள் பச்சைத் துரோகம் செய்ய முற்பட்டு, அதன் பலனை இன்று தமிழ்நாடு நன்றாக அனுபவிக்கிறது. வெள்ளைக்காரனுக்குப் பயந்து, சுதந்திரம் கேட்டதானது, சாணிக்குப் பயந்து மலத்தின் மீது கால் வைத்தது போல் ஆகிவிட்டது. இன்றையச் சுதந்திரம் சுதந்திரமே அல்ல என்பது சுதந்திர உதயநாள் முதல் எனது கருத்தாகும். இன்மேலாகிலும் தமிழ்நாடு சுதந்திரத்துடன், சுயமரியாதையுடன் வாழச் சிந்திக்க வேண்டும். நான் ஒரு மனித தர்மவாதி என்பதையும், எதையும் திரை மறைவு இல்லாமல் திகம்பரமாய்க் கண்டே கருத்துக்கொள்கிறவள் என்பதையும் யாவரும் அறிவார்கள் - என்பதாக முடிகிறது.

பெரியார், உடல் முற்றிலும் குணமாகாத நிலையில், உடனடியாக வெளியில் கூட்டங்களுக்கு வரப்போவதில்லை என்றும், சென்னை பெரியார் திடலில் 1 லட்சம் பெறுமான கட்டிட வேலை நடைபெற ஓர் ஆறுமாத காலம் ஆகலாம் என்றும், அதுவரை மிக முக்கிய கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கே வெளியில் வர இருப்பதாகவும் மார்ச் 6-ஆம் நாள் அறிவித்தார். தொடர்ந்து விடுதலை தலையங்கப் பகுதியில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்தத் தேர்தலில் வெற்றி பெரியாருக்கே என்றாலும் லாபம் இராஜாஜிக்குதான். எப்படியென்றால், அவர் கண்ணீர்த்துளிகளின் கொள்கைகளையும் தனித்தன்மையையும், மாற்றியும் குறைத்தும் விட்டார். திராவிடநாடு பிரச்சினையை இராஜாஜி கேலி செய்கிறார். தி.மு.க. வினர் குரங்குகள்; நான் ராமன் என்கிறார். அவர்களும் கண்டுங் காணாமல் இருக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பும் போய்விட்டதே - என்று, பெரியார் ஆதாரங் காட்டினார். எலெக்ஷன் முடிந்ததால், இனி தாம் வர்ணாசிரம தர்ம எதிர்ப்புப் பிரச்சார நிறுவனம் ஒன்று துவக்கி, வங்கப் பணிகளைத் தீவிரப்படுத்தப் போவுதாகவும், இதில் கண்ணீர்த் துளிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர் ஆகிய கட்சியினரும் மற்றும் வடநாட்டார், சினிமாக்காரர்கள், அதிகாரிகள் ஆகிய மக்களும்-யாரும் சேரலாம் என்றும் பெரியார் பரந்த மனப்போக்கில் அழைத்திருந்தார்.

ஒன்பதே மந்திரிகள் கொண்ட - இந்தியாவிலேயே மிகச் சிறிய மந்திரி சபையைக் காமராசர் 15.3.62 அன்று அமைத்திருந்தார். இதற்காகவும் பெரியார், தாம் காமராஜர் ஆட்சியை ஆதரிப்பதாக எழுதினார். விலைவாசியை அரசு குறைக்க ஆரம்பித்தால் அது உற்பத்தியைத்தான் பாதிக்கும்; விளைபொருள்கள் பெருகுவதைத் தடுக்கும் என்று பெரியார் புள்ளி விவரங்களுடன் அரசினர்க்கு ஆலோசனை வழங்கினார். சில இடங்களில் கழகத் தோழர்களைப் பழி வாங்குவது போலப் போலீசார் நடந்து வருவதை எடுத்துக்காட்டி, இடித்துக் கூறும்போது - “போலீசு இலாக்கா பழி வாங்குகிறதா? - இதற்குமேல் எழுதக் கை ஓடினாலும் மனம் ஓடவில்லை” என்று முடிகின்ற துணைத் தலையங்கக் கட்டுரையைப் பெரியாரே 19.3.62 “விடுதலை” ஏட்டில் எழுதினார்.

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டுப் பெரியார் 8.4.62 முதல், சுற்றுப் பிரயாணத்தை மீண்டும் தொடங்கினார். ஏறத்தாழ மார்ச் மாதம் முழுவதுமே படுக்கையிலிருந்தவர் 31-ஆம் நாள் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுப் பேசினார். ஈ. வி. சரோஜாவின் நாட்டியம்; டாக்டர் ரத்தினவேல் சுப்ரமணியம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி நன்கொடைக்காக! பெரியாரே இதற்கு 500 ரூபாய் அன்புடன் வழங்கினார். ஏப்ரல் மாதம் முழுவதும் பெரியார் தனியாகவே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வீரமணி ஆங்காங்கு கலந்து கொண்டார். 15ந் தேதி தென்பகுதி ரயில்வே தொழிலாளர் விருந்து, மாநாடு இவற்றில் பெரியார் மகிழ்வோடு பங்கு பெற்றார். 14.4.62 சிதம்பரத்தில் ஜனார்த்தனன் - கிருஷ்ணா ஆகியோரின் கலப்புத் திருமணத்தைப் பெரியார் நடத்தி வைத்தார். பெரியோர்கள் சம்மதமில்லாமல் நடைபெற்றதாகப் பின்னர் அறிந்தும் - ஒன்றும் தவறில்லை, வயது வந்து, விவரம் புரிந்தவர்கள்தான். மணமகனின் தந்தை திருச்சி வீரப்பா நமது இயக்க முன்னோடியல்லவா? என்று பெரியார் சமாதானப் படுத்திக் கொண்டார்.

காமராசருக்கே துரோகம் செய்வோரும், காங்கிரசில் பிடிப்பில்லாமல் அக்கறையற்று இருப்போரும் மிகுந்து விட்டனர். கண்ணீர் துளிகள் ஆச்சாரியாருடன் கூடிக் குலவுகின்றனர். பிரிவினை கேட்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கம்யூனிஸ்டுகளும் சேர்கிறார்களே எனக் காமராசரே கண்டிக்கிறார். அண்ணா, தமது தம்பிமார்களின் விருப்பத்தையும் வேண்டுகோளையும் மதித்து, 20.4.62 அன்று மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார், இனி அண்ணாவின் குரல் டெல்லியிலும் எதிரொலிக்கும்!' - பெரியாருக்கு மிகுந்த எரிச்சலூட்டும் செய்திகளல்லவா இவை? நன்றி மறவாமைக்கும், புத்தி கூர்மைக்கும் இலக்கணமாயிருந்த (இன்னொரு) சீட்டா 1.5.62 அன்று இரவு 10 மணியளவில் செத்துப் போய்விட்டது. 7 வயது வரை பெரியாரிடம் பிரியத்துடன் வாழ்ந்து வந்த அந்தச் செல்ல வளர்ப்பின் மறைவு பெரியாரை வருத்தியது.

சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி தனது தோல்வியைப் பொருட்படுத்தவில்லை. ராஜாஜி - தி.மு.க. உறவைக் கண்டித்து, சம்பத், கூட்டங்களில் பேசிவந்தார். “நாத்திகம்“ பத்திரிகையின் போக்கு சரியில்லையென “விடுதலை” 20.4.62 அன்று செய்தி வெளியிட்டது. காமராசரின் அரசு 65 வயதான முதியோர்க்கு மாதம் 20 ரூபாய் உதவித் தொகை வழங்க ஆணையிட்டது; அங்கவீனராகவோ தொழு நோயாளராகவோ இருப்பின் 60வயதிலிருந்தே இந்தத் தொகையினைப் பெறலாம். இப்போதெல்லாம் கண்ணீர்த் துளிகளைத் தாக்கி வெளிவரும் செய்திகள் “விடுதலை” யில் நாடோறும் இடம்பெற்றன.

குன்றக்குடி அடிகளார் தலைமையில், மணப்பாறை தமிழ் மன்றத்தில் 6.5.62-ல் பெரியார் பேசும்போது, ‘இந்தி எதற்காக பொது மொழியாக இருக்க வேண்டும்? இந்தியா என்பது என்ன, ஒரே நாடா? தமிழ்நாடு ஏன் இந்தியாவோடு இந்தியாவுக்குள் இருக்க வேண்டும்? தனிநாடாக விளங்குவதில் என்ன தடை? என்ன நாட்டம்?’ என்ற வினாக்களை வீரமுழக்கமாக வெளியிட்டார். மாநிலங்களவையின் உரையில் அண்ணா, திராவிட நாடு பிரச்சினையை விளக்கி, வலியுறுத்தினார். நேரு இந்த உரையை உதாசீனப் படுத்தியதாக “விடுதலை" செய்தி தந்தது.

பெரியார், “பிரதேசமொழி” என்று 12.5.62 “விடுதலை” ஏட்டின் தலையங்கப் பகுதியில் கட்டுரை எழுதும் போது, தமிழ் தமிழ் என்று கூறி இங்கிலீஷை ஒதுக்கி விடக் கூடாது என்னும் தமது கருத்தை வலியுறுத்தியிருந்தார். சென்னையில் புத்த ஜயந்திக் கூட்டத்தில் 20.3.62 அன்று திருமதி ஜோதி வெங்கடாசலம் (நல்வாழ்வு அமைச்சர்) தலைமையில் பெரியார் கலந்து கொண்டார். 19ந் தேதி வாழப்பாடியில் உரையாற்றுகையில், ஒழிக்கப்பட வேண்டிய மூன்று பேய்களைப் பற்றியும் ஆராய்ந்து நோய்களைப் பற்றியும் பெரியார் குறிப்பிட்டது புதுமையாகத் தோன்றிற்று! கடவுள்–சாதி மதம் – ஜனநாயகம் ஆகியவை மூன்று பேய்; பார்ப்பான், பத்திரிகை, அரசியல்கட்சி, தேர்தல், சினிமா ஆகியவை 5 நோய். இவற்றை விரட்டி ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பெரியார் பேசினார். திருச்சி மாவட்டத்திலுள்ள இடையாற்று மங்கலம் திராவிட விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் கழகத்தின் ஆக்கப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்கள். 24.5.62 அன்று மாவட்டச் செயலாளர் ஆனைமுத்து தலைமையில் பெரியாரிடம், ரூ. 3580 பெறுமானமுள்ள தென்னந்தோப்பு ஒன்றின் பட்டயத்தை வழங்கிப் பெருமை தேடினர். இவை யாவும் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பெயராலேயே இயங்கி வந்தன.

'இராமாயணம் மடமை நிறைந்த பொய்க் களஞ்சியம், காலம் பற்றிய மதியீனமான புரட்டு என்னும் விதத்தில் பெரியாரால் எழுதப் பெற்ற பெட்டிச் செய்தி ஒன்று “விடுதலை” ஏட்டுக்கு அணி செய்தது. “விடுதலை” ஏட்டில் இப்போதெல்லாம் புதுமையாக போட்டோ பிளாக்குகள் அடிக்கடி அச்சிடப்பட்டு வந்தன. சென்னைக் கார்ப்பரேஷனுடைய நிர்வாகம் ஊழல் மலிந்ததாயிருப்பதாகவும் பல்வேறு செய்திகள் பிரசுரமாயின். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியானதும் தமது சம்பளத்தைக் குறைத்து ஆடம்பரங்களை ஓரளவு கட்டுப்படுத்தினார். மாயூரத்திலுள்ள தருமபுரம் பண்டார சந்நிதி ஆண்டுக்கு ஒரு முறை ஆள் சுமக்கும் பல்லக்கில் ஏறிப், பட்டணப் பிரவேசம் வருவது வழக்கம். இதை நிறுத்துமாறு மறியல் செய்வதெனத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் பண்டார சந்நிதிக்கு பகிரங்கக் கடிதம் வரைந்தனர், 22.5.62 அன்று. பின்னர், தலைமைக்கழகம், விரைவில் வருணாசிரம எதிர்ப்புக் கிளர்ச்சி துவங்க இருப்பதால், இப்போது இது வேண்டாமெனக் கருத்துரைக்கப்பட்டது. ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஆண்டு மே 29-ஆம் நாள் தருமபுரம் ஆதீனகர்த்தர் பல்லக்குப் பவனி வந்தார். ஆனைமலை நரசிம்மன் இப்போது பெரியாருடன் சுற்றுப் பணயங்களில் தொடராமல், திருச்சியிலுள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி முதலிய அமைப்புகளின் தாளாளராக இருந்து, கவனித்து வந்தார்.

இந்தி எதிர்ப்பு வீராங்கனை மூவலூர் மூதாட்டியார் இராமாமிர்தம் அம்மையார் 27.7.62 அன்று மாயூரத்தில் இயற்கை எய்தினார். திராவிடர் கழகச் சார்பில் சித்தர்காடு இராமையாவும், திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில் நாவலர் நெடுஞ்செழியனும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1962-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் பெருமளவில் விலைவாசி எதிர்ப்பு மறியல் வளர்ச்சியை நாடு தழுவிய அளவில் நடத்தியது. கழகத்தின் அனைத்துத் தலைவர்களும் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கில் சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும், பெரிய ஊர்களிலும் வருவாய்த்துறை அலுவலகங்களின் முன்னர் மறியல் செய்து கைதாயினர். அரசு, மிக்க உறுதியுடன் நின்று, அடக்குமுறை மிரட்டல் ஆகிய எல்லா முறைகளையும் கையாண்டு வந்தது. சிறையிருந்தோரிடம் வற்புறுத்தி மன்னிப்புக் கடிதங்கள் பெறப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர். அரசின் சார்பான ஏடுகள் ( “விடுதலை " உட்பட) இந்த மன்னிப்புக் கோரி விடுதலை பெறும், சேதிகளைப் பெரிதுபடுத்தின. 2.8.62 அன்று எஸ்.எஸ் இராஜேந்திரன் 1000 ரூபாய் ஜாமீனில் விடுதலை என்ற கணக்கு. சென்னையில் மன்னிப்புக் கேட்டவர் 1000 பேர் என்ற செய்தி. அறப்போரின் பெயரால் காலித்தனங்கள் நடக்கின்றன என்று, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்துரைக்கும் பிரமுகர்கள் பேச்சு. பத்திரிகைகளின் எண்ணம் ஆகியவை “விடுதலை"யில் தொகுத்து வெளியிடப்பட்டு வந்தன.

கலைஞர் மு. கருணாநிதி தஞ்சையில் மறியல் செய்து 3 மாத தண்டனை பெற்றார். சென்னைச் சிறையில் கொடுமைக்குள்ளான கோ.சு. மணி பிணமாக வெளியில் வந்தார். மதுரையில் அதே போலப் பொற்செழியன் மாண்டார். திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்பராயன், பம்பாயில் கவர்னராக நியமிக்கப் பெற்றதால் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் தோற்றது; திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கந்தப்பன் வென்றார்.

“தேர்தலில் பொதுவாக ஒழுக்கக் கேடுகள் அதிகமாகிவிட்டன. உட்பகை பெருகியுள்ளது. திராவிடர் கழகத்தார் தவிர மற்றவர் நேர்மையாக ஈடுபடுவதில்லை. கண்ணீர்த் துளிகள் கலவரம் செய்வது என்றே துணிந்து விட்டனர். இந்நிலையில், இம்மாதிரி வன்செயல்களில் இறங்கும் அரசியல் கட்சிகளைச் சட்ட விரோதமாக்கலாம்; கட்சிகளுக்குப் பண வசூல் செய்வதைத் தடுக்கலாம்; கட்சிகள் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டுமென ஏற்படுத்தலாம். சர்வாதிகாரம் போலத் தோன்றினாலும் இவை தேவை" என்று பெரியார் வற்புறுத்திப் பேசியும் எழுதியும் வந்தார். திருவல்லிக்கேணி கடற்கரையில், கொட்டும் மழையில், பெருங்கூட்டத்தினிடையே 3.8.62 அன்று பேசியபோது, “ஓட்டு முறையில்தான் நம்பிக்கை; வேட்டு முறையில் அல்ல, என்று கூறிய கண்ணீர்த்துளிக் கட்சியினர் இப்படி அராஜகச் செயல்களில் ஈடுபடலாமா? காவல் துறையினரும் பல நேரங்களில் தாட்சண்யமாக நடந்து விடுகின்றனரே; தலைமைக் காவல் அதிகாரிகளாக ஏன் வெள்ளைக்காரர்களையே நியமிக்கக் கூடாது?" என்று வினவினார் பெரியார். பட எரிப்புப் போரில் மன்னிப்புக் கேட்கச் சொன்னபோது மறுத்து, இரண்டாண்டு சிறைத் தண்டனை ஏற்று, மேஜர் ஆகாததால், நெல்லை தட்டாம்பாறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து, விடுதலை பெற்ற வீரன் நாகராசனுக்குத் திருச்சியில் மாபெரும் வரவேற்பு வைபவம் நடைபெற்றது. பெரியார், “இந்தச் சிறுவனுக்கு முன்பு, மன்னிப்புக் கேட்கும் கண்ணீர்த் துளிகள் எம்மாத்திரம்?” என்று பாராட்டினார்

“வரவேற்கிறேன்” என்று “விடுதலை”யில் 10.8.62 அன்று பெரியார் ஒரு தலையங்கம் தீட்டினார். ஆமாம்! யாரை வரவேற்கின்றார். படித்தால் புரியும்: "என் உடல் நிலை எனக்குத் திருப்தி அளிக்கத் தக்கதாய் இல்லை. இப்போதுபோல் சுற்றுப் பிரயாணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரச்சாரமும் பத்திரிகையும் மிக அவசியமாகும். நான் ஒருவன்தான் இவை இரண்டிற்கும் முழுநேரத் தொண்டனாகவும், கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் இல்லாதவனாகவும் இருந்து வந்தேன். இன்றும் அந்தப்படியே இருந்து வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத தோழர்கள் கழகத்தில் ஏராளமான பேர் இருந்து, நல்ல தொண்டு ஆற்றி வருகிறார்கள். ஆனால் பிரச்சாரத்திற்கும் பத்திரிகைக்கும் தங்களை முழுநேரம் ஒப்படைக்கக் கூடிய தோழர்கள் கிடைக்கவில்லை.

தோழர் வீரமணியைக் கேட்டுக் கொண்ட போது, சென்னையில் வக்கீல் தொழில் நடத்திக்கொண்டு, கழக வேலைகளையும் பத்திரிகையையும் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னார். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. கிடைத்த அனுகூலத்தை விடக்கூடாதென்று துணைப் பொதுக் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கச் செய்தேன். இன்னொரு துணைப் பொதுக் காரியதரிசியாகிய ஆனைமலைத் தோழர் நரசிம்மன், தவிர்க்க முடியாத சொந்த அலுவல்களால் ஊருக்குப் போய்விட்டார்,

பிறகு வீரமணி, நான் உள்படப் பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்கக் குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார். கழத்தின் முழு நேரத் தொண்டராயிருந்து பிரச்சாரத் தொண்டையும் பத்திரிகைத் தொண்டையும் ஏற்கத் துணிந்தார்.

இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத பெரும் நல்வாய்ப்பு என்றே கருதித் திரு வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்! வீரமணிக்குக் கடலூரிலேயே வக்கீல் தொழிலில் மாதம் 200, 300 வருமானம் வந்தது; அவர் வேறு உத்தியோகத்துக்குப் போனாலும் மாதம் 250ரூ. கிடைக்கும். அதையெல்லாம் விட்டுக் கொடுத்துதான் இங்கு வந்திருக்கிறார்.

உண்மையைச் சொல்கிறேன்; தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால், “விடுதலை” தினசரிப் பத்திரிகையை நிறுத்திவிட்டு, ஈரோடு அல்லது திருச்சியில் வாரப் பத்திரிகை நடத்த முடிவு செய்தேன். மணியம்மையாரின் தொண்டும் பாராட்டத்தக்க விதத்தில் கழகத்துக்குக் கிடைத்து வருகிறது. தோழர் இமய வரம்பன் புலவர் பட்டம் பெற்றவர். அவரும் உத்தியோகத்துக்குப் போகாமல் கழகத்தின் முழுநேரத் தொண்டு ஆற்றிவருவதும் பாராட்டத்தக்கதாகும்.

ஆகையால், இதுபோல இன்னும் முழுநேரத் தொண்டர்கள் கிடைத்தால் வரவேற்கத் தயாராய் இருக்கிறேன். ஆண்கள் வந்தாலும் சரி. பெண்கள் வந்தாலும் சரி; உடை, உணவு பெறலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு, அப்படி வருபவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

20.8.62 அன்று சென்னைத் தோழர் கே. கோவிந்தசாமி மணிவிழாவினைத் தமிழ் தேசியக் கட்சி நடத்தியபோது, பெரியாரும் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தித் “தவறுகாண முடியாத நாணயமான உழைப்பாளி" என்று பாராட்டினார். அண்ணாவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், சம்பத்துடன் தமிழ் தேசியக் கட்சிக்கும் சென்றாலும், நல்லவர் என்று பெயர் பெற்றவர் கோவிந்தசாமி.

கழகப் பணிக்குத். தமக்கு மேலும் சில முழு நேரத் தொண்டர்கள் தேவை எனப் பெரியார் கருத்துத் தெரிவித்தார். 23.8.62 அன்று திருச்சி பெரியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் இலக்கிய மன்றக் கூட்டத்தில், பெரியாருடன் சம்பத்தும் கலந்து கொண்டார். புதுவையில் சாதி ஒழிப்பு மாநாடு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் - மேயர் - குபேர் திறந்து வைத்தார். பெரியாருடன் சம்பத், கண்ணதாசன், தமிழ்வாணன், மீனாம்பாள் சிவராஜ். தி.பொ. வேதாசலம் பங்கேற்றனர். திராவிடர் கழகப் பணிகளில் இறுதிவரை பெருந்தொண்டு புரிந்து வந்த திருமதி இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மையார் 2.8.1962 அன்று மறைந்த போது பெரியார் வருகை தந்து, அள்ளாரின் சேவைகளை நினைவு கூர்ந்து பேசினார்.

“ஈ.வெ. ரா. வும் நானும் எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள். என் பிறந்த நாளில் அவரும் அவர் பிறந்த நாளில் நானும் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டுதான் வருவோம். நட்பும் இருந்து கொண்டேயிருக்கும். சண்டையும் இருந்து கொண்டேயிருக்கும். இதைப் பற்றி யாரும் கவலையோ குழப்பமோ கொள்ளலாகாது”, என்று 14.9.62 அன்று சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியார் பெரியார் பிறந்த நாள் செய்தி அனுப்பியிருந்தார். “விடுதலை”சிறப்பு மலரில் காமராசர், ம.பொ.சி. அடிகளார், சம்பத், கண்ணதாசன், எம்.ஆர்.ராதா லட்சுமிரதன் பாரதி ஆகியோர் கட்டுரை வழங்கியிருந்தனர். 17.9.62 முதல் “விடுதலை” தலையங்கத்திற்கு மேற்புறம் பெரியார் பொன்மொழிகள் தினம் ஒன்று வீதம் வெளியிடப்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள பள்ளிகளின் நிறுவனர் நாள் 17.9.62ல் கொண்டாடப்பட்ட போது, பெரியார் அங்கே கலந்து கொண்டார், பெரியாரின் 84வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும், தமிழர் வாழும் பிறநாடுகளிலும் குதூகலமாகக் கொண்டாடப் பெற்றது.

பொதுத் தொண்டு என்று மகுடமிட்டுப் பெரியார் தமது பிறந்தநாள் செய்தியினை அருளினார்: - மனிதனாகப் பிறந்தவன் உயிர் வாழ்வதற்காக உணவு தேடுகிறான். உண்டபின் ஓய்வுக்காக உறங்குகிறான். பிறகு காம உணர்ச்சிக்குப் பரிகாரம் தேடுகிறான் அதனால் பெண்டாட்டி பிள்ளை குட்டி உண்டாகி விடுகிறது. இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சட்டமாகி விடுகிறது. அதில் பொதுத் தொண்டும் ஒரு காரியமாகி விடுகிறது.

பொதுத் தொண்டை ஒரு தொழிலாகக் கொள்பவரிடத்தில் நேர்மை ஒழுக்கம் நாணயம் இருக்க முடிவதில்லை. நீதிமன்றம், சிறைக்கூடம், பத்திரிகைத் துறை, ஜனநாயகம், கடவுள் தன்மை ஆகியவை எப்படியாவது மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளாகிவிட்டன. யோக்கியமான பொதுத் தொண்டு நிறுவனங்கள் இல்லாமற் போனதால், நடத்திச் செல்ல நல்ல தலைவர்களும் உண்டாவதில்லை. தன்னலத்தை வெறுத்த பொதுத் தொண்டன் என யாரையும் அடையாளம் காட்ட முடிவதில்லை. அதனால்தான் சுயநலமற்ற பொதுத் தொண்டன் - நான்கூட ஆகமாட்டேன். எனக்கும்கூட ஒரு மாதிரியான சுயநலம் இருக்கின்றது, அது என்ன சுயநலம்? இளமை முதல் இருந்து வரும் என் இயல்பின்படி, நிறைய சொத்துச் சம்பாதித்திருக்கின்றேன். 15 லட்ச ரூபாய் மதிப்பிடலாம். அதில் பெருமளவு நல்ல பொதுத் தொண்டுக்கு உதவுகிறது. எனக்குச் சொந்தமான செல்வ வசதிகள் இருந்தும், என் வாழ்வு சராசரி மனிதனுடைய வாழ்வுதான். உணவுச் செலவு மாதம் 50ரூ.; உடைச் செலவு 50ரூ. ஆண்டுக்கு ஆகலாம். மாதம் 200ரூ. சம்பளத்தில் ஆட்கள் அமர்த்தாமல், அவர்கள் செய்கின்ற வேலையைச் செய்கிறவர், என் மனைவியாக இருக்கிறார். அந்த அம்மாளுக்கும் மாதம் உணவு ரூ.50க்குள்; உடை ஆண்டுக்கு ரூ.150க்குள்; எங்களுக்குப் பல செலவுகள். போகிற இடங்களில் ஓசி பிரயாணம், ஒரு லாரி சாமானுடன், மோட்டாரில், இரவில் மாதம் சராசரி 20 நாள் சுற்றுப் பயணம். சதா கழக வேலை, கட்டடவேலை, கழகச் செல்வத்தைப் பெருக்கிடும் வேலை, கணக்கு வைக்காமல் டயரிலேயே குறித்துச் கொள்ளும் வேலை/ சில பொறாமைக்காரர். வெந்து புழுங்குவோர் தவிர, மற்றவர்களால்... நான் வெட்கப்படும் அளவுக்குப் போற்றுதல், புகழுதல், அன்பு காட்டுதல் இவற்றை நான் அனுபவிக்கிறேன் அல்லவா! இவைதான் எனக்குச் சுயநலம்

ஒரு பத்து ஆண்டுகளுக்காவது காமராசர் ஆட்சி நீடித்தால் திராவிடர் கழக இலட்சிய வேலை பெரும் அளவுக்குப் பூர்த்தியாகும். ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிலும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய வேலைத் திட்டம் அறிவிப்பது என் வழக்கம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சில வேலைத் திட்டம் சரிவர நடை பெறவில்லை; காரணம் காமராசர் ஆட்சிக்கு ஏற்படும் எதிர்ப்புகளை முறியடிக்க முனைந்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது தான்! வரப்போகும் ஆண்டுக்கு வேலைத் திட்டமாகப் பார்ப்பனப் பத்திரிகைகளின் ஆணவமும் ஆதிக்கமும் ஒழிக்கப்பட வேண்டும், குறைக்கப்படவாவது வேண்டும். சினிமா மோகம், வளர்ச்சி ஒழிக்கப்பட வேண்டும். கோவில்களில் சாதி ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் கழகத்திற்கு உறுப்பினர், கிளைகள், கட்டுப்பாட்டுடன் அமைக்கப்பட்டு ஒழுங்கு முறையுடன் செயல்பட வேண்டும்! - என்பன.

அடுத்து, ‘ எனக்கு ஏன் திராவிட நாடு வேண்டாம்: தமிழ் நாடு போதும் என்கிறேன் என்றால்’ - என்று தொடங்கிச் சில புள்ளி விவரங்களை ஆதாரமாக்கித் தமது வாதத்தை வழக்கம் போலப் பிறர் ஏற்றுக் கொள்ளுமாறு பக்குவமாக எடுத்து வைக்கிறார் பெரியார். தென்னகத்திலுள்ள நான்கு மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வருமாறு:- ஆந்திரா 301,43; கர்நாடகம் 208, 26; கேரளம் 126, 18; தமிழ்நாடு 205,43. இவற்றில், தமிழ் நாடு நீங்கலாக மெஜாரிட்டி அவர்களாகவே இருப்பதால், இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு கேட்பதே புத்திசாலித்தனம் - என்று பெரியார் 20.9.62 “விடுதலை”யில் வாதிடுகிறார்.

திராவிடர் கழகத்திற்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்ட நிலவரத்தைப் பெரியார் வேலூரில் விளக்கித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பழைய நண்பர்கள் துரோகிகளான கதையை அங்கே விவரித்தார் பெரியார். எஸ். குருசாமி, எம்.கே.டி. சுப்ரமணியம், லோகநாதன், விவேகி, நாத்திகம் ராமசாமி ஆகியோரின் துரோகச் செயல்களை 29.9.62 அன்று வேதனையோடு வெளிப்படுத்தினார். இதனால் அக்டோபர் மாதத்தில் 7, 14, 15, 21, 22, 27, 28, 29 ஆகிய 8 நாட்களே கூட்டங்களில் பேசினார். “ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்” என்ற தலைப்பில் 8.10.62 அன்று, முதல் கட்டுரையும்; 10-ந்தேதி இரண்டாவது; 14-ந் தேதி மூன்றாவது கட்டுரைகளும் வரைந்தார். இவற்றிலிருந்து, பெரியார் நீண்ட நாட்களாகவே மனத்துக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டு பொருமியது வெளியாயிற்று. துரோகத்தை அடையாளந்தெரியச் செய்தமைக்கு, உண்மையுள்ள கழகத் தோழர்கள் பெரியாரைப் பாராட்டினர். காங்கிரசார் நடத்தும் தேசிய ஒருமைப்பாடு விழாவில் கழகத்தினர் கலந்து கொள்ளக் கூடாது எனக் கண்டிப்பாக அறிவித்த பெரியார், இந்தி மொழி மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாடு பிரச்சாரங்கூட நாட்டுப் பிரிவினைக்குத் தூண்டிவிடக்கூடிய செயலாகும் என எச்சரித்தார். “நான் சரியாக அரசியலில் பிரவேசிக்காததால் டில்லி நிர்வாணமாக ஆட்டம் போடுகிறது. அந்த வேலையும் என்னைத்தான் வந்து தொத்தும் என நினைக்கிறேன்“ என்றும் பெரியார் சூளுரை புகல நேர்ந்தது. இராம லீலாவும் டெல்லியும்: ஒழிக யூனியன் ஆட்சி என்றெல்லாம் தலையிட்டுப் பெரியார் கடுமையான தலையங்கக் கட்டுரைகளை விடுதலை”யில் எழுதினார். தொட்டதற்கெல்லாம் ஸ்ட்ரைக் ஏற்பட அரசாங்க பலவீனமே காரணம் என எடுத்துக் காட்டினார். 1.10.196 அன்று பெரியார் திடலில் 84-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட போது, நடிகவேள் ராதா 10,000 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார் பெரியாரிடம்.

பம்பாய் கவர்னராக இருந்த டாக்டர் சுப்பராயன் சென்னைப் பொது மருத்துவமனையில் 6.10.62 அன்று காலை 9.30 மணிக்கு மரணமடைந்தார். பெரியார் திருச்சியிலிருந்து தொலைபேசி வாயிலாக அனுதாபச் செய்தி அனுப்பினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வி.சுப்பிரமணியம் இறந்து போனார். பின்னர் பார்ப்பனத் துணைவேந்தர் அமர்த்தப்பட, இது வழி வகுத்துவிட்டது! |

நீண்ட நாட்களாக வடக்கெல்லைப் பகுதியில் வால் நீட்டி வந்த சீனா இந்தியா மீது போர் தொடுத்துவிட்டது. சமாளித்துத் தீரவேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா வலுவில் உந்தப்பட்டது. நாட்டிலுள்ள நல்லோரெல்லாம் சீனாவை எதிர்த்து முறியடிக்க வேண்டுமென ஆக்க பூர்வமான ஆதரவைத் தாமே முன் வந்து. மனமுவந்து வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ராஜாஜி தமது இயல்பின்படிக் குதர்க்கமான சில ஆலோசனைகளைத் தெரிவித்து வந்தார்: பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனனை விலக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு என்று, ஒரு கட்சி அரசாக இல்லாமல், எல்லாக் கட்சிகளையும் இணைத்துத் தேசிய அரசு அமைத்திட வேண்டும். ஐந்தாண்டுத் திட்ட நிறைவேற்றத்தைக் கைவிட வேண்டும் - என்பதாக! இந்த யோசனைகள் கதைக்குதவாதவை என 4.11.62ல் மத்திய அரசு நிராகரித்தது. சென்னை சட்ட மன்றம் 30.10.62 அன்று சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. பெரியார் சுற்றுப்பயணத்தில் இருந்தார். 29.10.62 அன்று மாதிரி மங்கலத்திலிருந்து ஊர்வலமாக வந்து, குத்தாலம் பொதுக் கூட்டத்தில் பேசினார். பிறந்த நாளை ஓட்டிப் பெரியாருக்கு 84 கலம் நெல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. எது எப்படியானாலும், யுத்த முயற்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியது தான் - என்றார் பெரியார்.

விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம் அனுபவித்து வந்த அண்ணா , வேலூர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளிவந்தவுடன் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில், சீனாவை முறியடிக்க இந்திய சர்க்காருடன் ஒத்துழைப்பதாகவும், அதற்கு நல்லெண்ண
சமிக்ஞையாகத் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாகவும், எனினும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே நிலையாக இருந்து வருவதாகவும், பிரகடனம் செய்தார். 9.12.62, 7.1.63 ஆகிய நாட்களில் சீனப் போர் பற்றி வானொலியில் உரையாற்றினார். 2.12.62 அன்று போர் நிதிக்காக ரூ.35,000 திரட்டி உதவினார் அண்ணா .

பெருமனம் படைத்த பெரியாரும் 15.11.62 அன்று அறிக்கையில், போர் முயற்சிக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்திட மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மேலும் திருச்சியிலுள்ள தமது கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.2000/- போர் நிதியாகத் திருச்சியில் காமராசரிடம் வழங்கச் செய்தார்.

“ஆங்கிலம் ஓர் இணை மொழியாக நீடித்து இருக்கும். இந்தி மொழி புழக்கத்தில் இல்லாத பிராந்தியங்களின் மக்கள் விரும்பும் வரை, ஆங்கில மொழியை அகற்ற மாட்டேன்”. நேரு உறுதி மொழி - என்ற தலைப்பில், பிரமரின் படத்துடன், மேற்கண்ட வாசகம் 11.11.62 “விடுதலை" தாளேட்டில் வந்தது போலவே, எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரமாக இந்திய யூனியன் சர்க்காரால் வெளியிடப்பட்டது. போர் மேகம் சூழ்ந்திருந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு இந்த வாக்குறுதி ஒரு பேரொளியாய் வழி காட்டியது. இன்றளவும் இதைத் தான் இந்தி எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டி, இதனை ஏன் சட்டமாக்கக்கூடாது எனக் கேட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அண்ணாமலைப் பல்கலை கழகத் துணைவேந்தராக சர் சி.பி. ராமசாமி அய்யர் நியமனம் பெற்றார் 14.11.62 அன்று,

' பெரியார், தமது 84ஆவது பிறந்த நாள் விழா பெரியார் திடலில் கொண்டாடப்பட்டபோது, நடிகவேள் ராதா அளித்த 10,000 ரூபாய் நன்கொடையைப் பெற்றுக் கொண்டாரல்லவா? அப்போதே வாக்களித்தவாறு - ராதா பெயரில் அங்கே ஒரு மன்றம் - ஹால் - கட்டப்படும்; அரங்கு அமைக்கப்படும். அதற்கு ராதா மன்றம் என்றே பெயர் சூட்டப்படும் என்றெல்லாம் கூறியவாறு - 18.11.62 அன்று பெரியார் தலைமையில், திரைப்பட அதிபர் பி.ஏ, பெருமாள் மன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார். ராஜாஜி சீனப் போர் குறித்துத் தாறுமாறான கருத்துகள் கூறுவதைக் கண்டித்து, அவருக்குப் பரம்பரைப் புத்தி, காட்டிக் கொடுப்பது போகுமா? - என்று எழுதினார் பெரியார். பார்ப்பான் புத்தி பார்ப்பனீயம்தான்; இன்றைய வடக்கெல்லை நெருக்கடிதான் எப்படி? என்ற தலைப்புகளிலும், சீனப்போர் குறித்து, நவம்பர் இறுதி வாரத்தில், “விடுதலை” தலையங்கப் பகுதியில் எழுதி வந்த பெரியார், இருவாரங்களுக்குத் தமது சுற்றுப் பயணத்திற்கும் சிறிது ஓய்வளித்திருந்தார். கிருஷ்ணமேனன் விலகி, பம்பாயிலிருந்து ஒய். பி. சவாள் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். ராஜாஜி பம்பாயில் பேசும்போது, வருணாசிரம் அமைப்பு முறைகளும் சாதிகளும் இருக்கு வேண்டியதுதான் - என்று பேசினார். தமிழ்நாட்டு அமைச்சர் ஆர். வெங்கட்ராமனே, பூச்சாரியார் தேசிய அரசு அமைய வேண்டும் என்றும் சீனப் பிரச்சினையை அய், நா. சபைக்கு எடுத்துச் சென்று அமெரிக்க ஆதரவு பெற வேண்டும் என்றும் சொல்லி வருவது சரியல்ல என்றார். 23. 11.62 வரை தமிழக முதல்வரின் போர்நிதி 1 கோடி ரூபாயாகத் திரண்டிருந்தது.

கரூரில் 15.12.62 நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டிற்குப் பெரியார் தலைமை தாங்கினார். வே. ஆனைமுத்து திறப்பாளர். மறுநாள் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தலைவர். தி.பொ. வேதாசலம், திறப்பாளர் கி. வீரமணி. திருவாரூர் தங்கராசு, சிவகங்கை சண்முகநாதன், ஈரோடு அப்பாவு, காங்கிரசுக்குப் போன ஈரோடு பி. சண்முக வேலாயுதம், கம்யூனிஸ்ட் முகவை ராசமாணிக்கம், தமிழ் தேசியக் கட்சி சம்பத், கண்ணதாசன் ஆகியோர் இந்த மாநாடுகளில் பங்கேற்றனர். குடி அரசுப் பதிப்பக வெளியீடுகளான பகுத்தறிவு நூல்கள் இந்த மாநாடுகளில் மலிவாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று பெரியாரே அறிவித்திருந்தார்.

திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் தோழர்கள் முன்பு தென்னந்தோப்பு வழங்கியது போக, இப்போது வேறொரு தோப்பும், கட்டடமும் பத்தாயிரம் ரூபாய் பெறுமானத்தில் அன்பளிப்பாகச் சாசனம் செய்து தந்தனர். திருவாரூர் தங்கராசு பகுத்தறிவு என்ற வார இதழ் துவக்கி நடத்தினார். குருசாமி துரோகம் செய்து போன பின்னர்,“விடுதலை”யில் கண்ணீர்த் துளிகளைத் தாக்கி அன்றாடம் செய்தி வெளியிடும் பழக்கம் குறைந்திருந்தது. ஆனால் 26.12. 62 அன்று “தென்றல் திரை”யில் வந்த ஒரு கார்ட்டூன் எடுத்தாளப் பட்டிருந்தது; “சட்டி சுட்டிதடா கை விட்டதடா ” என்று அண்ணா திராவிட நாடு பிரச்சினையைப் போட்டு உடைப்பதாக

தேசிய அரசு அமைக்கச் சொல்ல ராஜாஜிக்கு என்ன யோக்கியதை இப்போது? - என்ற கருத்தோடு பெரியார் 1963-ஆம் ஆண்டைத் துவக்கியிருந்தார். ராஜாஜியும் சும்மாயில்லாமல், கல்கியில், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திராவிடநாடு பிரச்னையைத் தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் என்று எழுதினார். பெரியார், நமது பழங்கால அரசர்கள் பார்ப்பன தாசர்களாக இருந்து, தமது சொத்தில் பெரும்பகுதியை மான்யமாக வழங்கியுள்ள மடமை குறித்து எழுதினார். “ மது விலக்கு மாபெரும் முட்டாள் தனம்” என்ற தலையங்கக் கட்டுரை 29.11.62 பெரியார் எழுதியதன் எதிரொலியாச் 22.1.63 அன்று கும்பகோணத்தில் மிகத் தைரியமான முயற்சியாகப் பெரியார் தலைமையிலேயே, மது ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப் பெற்றது. புதுமையாய்த் தோன்றிற்று?

10.1.63 அன்று: “விடுதலை”யில் பெரியாரின் சீரிய அறிவிப்பு ஒன்று வெளிவந்தது. திருச்சியில் கட்டடம் ஒன்று விற்க, முன்பணமெல்லாம் பெற்றுக் கொண்ட ஒரு கட்டடச் சொந்தக்காரர். பேராசையால், தவறு செய்ய முயன்ற போது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க. அக்கட்டடத்தை இறுதியாகப் பெரியார் வாங்கச் செய்தார். அதில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படும். 10 முதல் 16 வயது வரை உள்ள ஆண்-பெண் அநாதைப் பிள்ளைகள் விண்ணப்பம் போடலாம். சாப்பாடும் இலவசம். தச்சு, அச்சு, தையல், இயந்திர சம்பந்தமான தொழில்கள் கற்றுத் தரப்படும் - என்பது பெரியாரின் அன்பழைப்பு!

நிறுத்தப்பட்டிருந்த பெரியாரின் நகரும் வீடு' புறப்படத் தொடங்கியது 11.1.63 முதல். இந்தச் சுற்றுப் பயணம் முழுவதும் பெரியார் பேசிய பொதுக் கூட்டங்கள் யாவுமே திராவிடர் கழகச் சார்பில், சீன ஆக்கிரமிப்புக் கண்டனக் கூட்டங்களாகும். உழவர் உழைப்பின் பயனை நுகரும் அறிவுத் திருநாள் என்ற தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியினைப் பெரியார் விடுத்தருளினார். “விடுதலை"யில் சீனப் போர் எதிர்ப்புச் செய்திகள் - மத்திய அமைச்சர்கள் நேரு மற்றவர்களின் படங்களோடு, அன்னாரின் வீரமிக்க பேச்சுகள் - ஆகியவை பிரதான இடம் பெற்றன. பெரியார், வெளியூர்களில் பேசிய கூட்டச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஒரு வாரம் கழித்தே வெளியாகி வந்தன.

தமிழ் தேசியக் கட்சித் தலைவர் சம்பத் உடல் நலமின்றி மருத்துவ மனையிலிருந்து, 17.1.63 அன்று இல்லம் திரும்பியதாக அவரது “தமிழ்ச்செய்தி” கூறிய செய்தியினை“விடுதலை” எடுத்தாண்டிருந்தது. சுயமரியாதைச் சுடரொளியும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழாய்ந்தவருமான தோழர் ப. ஜீவானந்தம் 18.1.63 அன்று காலை 6-30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவமனையில் இயற்கை அடைந்தார். பின்னாளில், பெரியார் ஜீவாவின் படத்தினைத் திறந்து வைத்துப் பாராட்டியதோடு, அன்னாரின் சிலை அமைக்கப்பட விருப்பதாக பாலதண்டாயுதம் செய்தி சொன்னவுடன், ரூ.150நன்கொடையும் வழங்கினார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 1962-ல் சம்பத் போட்டியிட்டபோது, பெரியார், அங்கு யாரையும் ஆதரிக்கவில்லை. இந்த நிலைக்கு முரணாக குருசாமி “விடுதலை”யில் சம்பத்தைக் தாக்கி வந்தார், நேரிடையாகவும் மறைமுகமாகவும், திராவிடர் கழகத்தில் சம்பத்தின் ஆதிக்கம் வந்து விடுமோ என்று அவர் அஞ்சினார். பெரியார் விரைவில் மறைந்து விடுவார்; பிறகு தாமே தலைவர், வாரிசு எனத் தாடி கூட வளர்த்தார் குருசாமி. இவரைப் போன்றே இன்னொருவரும் உட்பகையாய் இருந்திருக்கிறார். இவர் மணியம்மையைக் கண்டு பொறாமையால் புழுங்கியிருக்கிறார். இவர்தான் திருச்சி ப்ளீடர் தி.பொ. வேதாசலம், இவர்கள் இருவருமே இன்கம்டாக்ஸ் துறைக்குக் கடிதம் எழுதிப் பெரியாரின் சொத்துக்களுக்கு வரி விதிக்கச் சொன்னார்களாம்! 29.1.63 “விடுதலை“மீண்டும் ஒரு துரோகத்தை வெளிப்படுத்திற்று. அதில் பெரியாரின் குறிப்பு கூறுகிறது - வேதாசலம்: 2, 3 ஆண்டுகட்கு முன்பே விலக்கப்பட்டார். போனால் போகிறதென்று கழக நிகழ்ச்சிகளில் பேச்சாளராக அனுமதித்து வந்தேன் என்று, பெரியாரின் பெருந்தன்மைக்குச் சரியான எடுத்துக் காட்டாகவும், வேதாசலத்தை அவர் எந்த அளவு மதித்து வந்தார் என்பதைக் காண்பிக்கவும், அதே தேதியில் தி.பொ. வேதாசலனார் பெரியாருக்கு வரைந்த கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் பின்னுமொரு பெருஞ்சிறப்பு, அன்றைய ”விடுதலை" பெரியார் கிழித்த கோட்டைத் தாண்டாத நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள், துரோகிகளைப் பற்றித் தீட்டிய முடங்கலும் வெளியாகி இருக்கிறது.

7.2.63 அன்று பண்ணுருட்டியில் பெரியார் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரையில் துரோகிகள் முளைப்பது புதிதல்ல. அவ்வப்போது நானும் வெட்டிக் கொண்டுதான் வந்திருக்கிறேன். அண்ணாதுரை போகும்போது அய்யாவிடம் 5 லட்சம் சொத்தை விட்டுப் போகிறோம் என்றார். குருசாமி போகும்போது அய்யோ 30 லட்சம் சொத்தைப் பெரியார் வைத்துக் கொண்டிருக்கிறாரே என்றார். 13 வருடத்தில் 5 என்பது 30 ஆனது என் சாமர்த்தியம் தானே? முப்பது லட்சம் சரியல்ல, 15 லட்சம் என்றாலும் அதில் இவருக்கு என்ன கஷ்டம்?" என்று கேட்டார் பெரியார்.

ஆங்காங்கு தாமே நேரில் இருந்து மாவட்டத் தோழர்களை வரச்செய்து கழக அமைப்புகளைத் திருத்தியமைத்துப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப் பெரியார் விரும்பினார். முதல் கட்டமாகத் தென்னார்க்காடு மாவட்டக் கழகக் கூட்டம் 10.2.63 அன்று விழுப்புரத்தில் பெரியார் முன்னிலையில் கூடித், தலைவராக கு.கிருட்ணசாமி, துணைத் தலைவர்களாகப் பண்ணுருட்டி நடேசன், திண்டிவனம் ஜெயராமன், செயலாளர்களாகப் புவனகிரி சச்சிதானந்தம், நெல்லிக்குப்பம் சுப்ரமணியம், பொருளாளராக கோ. சாமிதுரை ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது.

தென்னார்காடு மாவட்டம் கல்லக்குறிச்சியைச் சார்ந்த கோ.சாமிதுரை எம்.ஏ. பி.எல்., பட்டம் பெற்று வழக்கறிஞராகி மாவட்ட அளவில் கழகப் பணியாற்றி வந்தவர். அமைதியாகவும் அடக்கமாகவும் பெரியார் வழி நடந்து
இன்று திராவிடக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக ஆற்றலுடன் விளங்கி வருகின்றார், மாநில அளவில்,

பிரிவினைத் தடைச்சட்டத்தை எதிர்த்து 25.1.63 அன்று மாநிலங்களவையில் அண்ணா பேசினார். பின்னர் ஒரு முறை ‘உங்கள் பிரிவினைத் தடைச் சட்டம், தேர்தலில் ஈடுபடுவதால் எங்களைத் தடுக்கலாம். ஆனால் தேர்தலில் நிற்காத திராவிடர் கழகத்தை உங்கள் பிரிவினைத் தடைச் சட்டம் என்ன செய்ய முடியும்?’ என்று அண்ணா கேட்டதை 21.2.63 “விடுதலை” பிரசுரித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கே.எஸ். ராமமூர்த்தி என்ற பார்ப்பன வழக்கறிஞர் நேரடி நியமனம் பெற்றதைக் கண்டித்து 19.2.63 “விடுதலை” ஐகோர்ட்டில் பார்ப்பன ஆக்கிரமிப்பு என்ற மகுடத்தின் கீழ் தலையங்கம் தீட்டியிருந்தது. 20ந் தேதி பெரியாரே எழுதியிருந்தார், பீடிக்கு வரி விதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு யோசனை தெரிவித்து, பெண்ணாடத்தில் ஒரு திருமண விழாவில் பேசும்போது பெரியார், எங்கள் சுய மரியாதைப் பிரச்சாரத்தின் விளைவுதானே இருதார மணத்தடைச் சட்டம் வந்தது? என்று கேட்டார். மேலும், பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி, உத்தியோக உரிமை ஆகியவை பெருகியதும் எங்களால் தானே? என்று கேட்டார் பெரியார்.

இந்தியக் குடி அரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் 28.2.63 இரவு 10.30 மணிக்குக் காலமானார். பெரியார் திருச்சியிலும் தஞ்சையிலும், குருசாமி, வேதாசலம் ஆகிய இருவரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தாம் இவர்களுக்கு மரியாதை காரணமாக நீண்ட தவணை தந்து விட்டதாகவும், இவர்களைவிட அண்ணாத்துரை நூறு மடங்கு யோக்கியர் என்றும், மிக்க வேதனை கலந்த வருத்தத்துடன் உண்மைகளை ஒளிவிடச் செய்ய நேர்ந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில், இவர்களை விட அண்ணாத்துரை ஆயிரம் மடங்குமேல் என்றே பெரியார் பேசி இருக்கிறார்.

ஆண்டுதோறும் சென்னை எழும்பூரில் நடைபெறும் கைத்தறிக் கண்காட்சியில், இந்த ஆண்டு, சட்டசபை சபாநாயகர் எஸ். செல்ல பாண்டியன் தலைமையில் 11.3.63 அன்று பெரியார் பேசினார். 13ந் தேதி “விடுதலை” ஒழுங்கீனமான நடத்தைக்குத் தண்டனை என்ற மகுடத்தின் கீழ், தலையங்கக் கட்டுரையைப் பெரியார் எழுதி, சட்ட மன்றங்களில் வெளி நடப்புச் செய்வது தவறு, தேவையற்றது என்று கண்டித்தார். மற்றும், பிரிவினைத் தடைச் சட்டத்தை வன்மையாக எதிர்த்தார். இதனால் ஒரு பத்தாயிரம் இருபதாயிரம் பேரைச் சிறையில் தள்ளிட, டெல்லி திட்டமிடுகிறதா? நானும் விரைவில் பிரிவினைத் தடுப்புச் சட்ட மறுப்பு மாநாடு கூட்டப் போகிறேன் என்று முடித்திருந்தார் பெரியார். பிரிவினை உணர்ச்சியைச் சட்டத்தால் தடுத்துவிட முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, முந்தின நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் பெரியார் முழக்கமிட்டார். சென்னைப் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு வர்த்தகர் அண்ணாமலை கவுண்டரையும், கழகத் தோழர் மயிலை சம்பந்தனையும் பெரியாரும் மணியம்மையாரும் 12ந் தேதியன்று மாலையில் கண்டு, விசாரித்து வந்தனர்.

காமராசர் ஆட்சியே தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் தொடர்ந்து ஒரு பெட்டிச் செய்தி. இதில் கல்வித் துறையின் சாதனைகள் - அதாவது எஸ். எஸ். எல்.சி. வரையில் இலவசக்கல்வி, மதிய உணவு, படிப்போர் எண்ணிக்கை பெருகியுள்ளது. 15% இப்போது 37% ஆகியிருக்கிறது. ஆரம்பக்கல்வி கட்டாயமாகியுள்ளது. கல்விக்கான பட்ஜெட் 1946-47ல் 6.59 கோடி 1963-64ல் 28.71 கோடி என்பன போன்ற புள்ளி விவரங்கள், பிற எழுச்சியூட்டும் செய்திகள், சாதனைகள் ஆகியவை நாள்தோறும் வேறு வேறாக"விடுதலை" ஏட்டில் 1963 மார்ச் 15 முதல் வெளியிடப்பட்டன. அதேபோல், ஆச்சாரியாரும் அவர் கும்பலும் ஆட்சிக்கு வந்தால், என்ற தலைப்பின் கீழ் இன்னொரு பெட்டிச் செய்தியில் - ராஜாஜியின் குலக் கல்வித் திட்டம், ஆரம்பப்பள்ளிகளை மூடியது, தொழில் கல்லூரிகளில் பார்ப்பனர்க்கே சலுகையளித்தது போன்ற விவரங்கள் தரப்பட்டு வந்தன. இன்னொரு புறத்தில், ராமநவமியை ஒட்டி, ராமாயணப் பாத்திரங்களின் யோக்கியதையைப் பெரியாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ந்து விளக்கி வந்தன. ஏழெட்டு ஆண்டுகளாய் இயங்காமலிருந்த திராவிட மாணவர் பிரச்சாரப் பயிற்சி நிலையம் இந்த ஆண்டு துவங்கும் எனப் பெரியார் அறிவித்தார்.

கந்த புராணத்தையும் இராமாயணத்தையும் பெரியார் ஒப்பிட்டு, ஆரியர்கள் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்த போது, இங்கே ஆரிய நாகரிகம் பரவாமல் தடுத்த திராவிட வீரர்களைப் போரிட்டு வென்றதாக முதலில் எழுதப்பட்ட சிவபரமான நூல் ஸ்கந்த புராணம் என்பது; பின்னர் வைணவபரமான நூலாக அதிலுள்ள சம்பவங்கள் - பாத்திரங்களைப் பேரும் இடமும் மாற்றி இராமாயணம் எழுதப்பட்டது. அதன் பிறகு புராணமாக எழுத இடமில்லாததால், இராமாயணம் - பாரதம் எல்லாம் இதிகாசம் என்று கூறி விட்டனர். இவையெல்லாம் ஏதோ உண்மையில் நடந்ததாகக் கற்பனை செய்து கொண்டனர் தமிழ்ப் புலவர்கள். முதலில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் பூசாரி கந்த புராணம் எழுதினார். தமிழ் மக்கள் மூடத்தனத்தால், எல்லாம் மெய்யாகவே நடந்த கதை என்று, மோசம் போனார்கள். .

பெரியாரின் இந்த ஆராய்ச்சி ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும். அடுத்தபடியாகத் தமிழ் நாட்டில் ஐந்து சட்ட மன்றத் தொகுதிகள் காலியாகியிருந்தன. அவற்றுள் இரண்டு, வழக்குகளில் உட்பட்டிருந்தன. மிகுதியான மூன்றுக்கும் இடைத்தேர்தல்களுக்கான தேதிகள் குறிப்பிடப்பட்டன. தமிழர்களுக்கு இது சோதனைக்காலம் என்று சுட்டிக் காட்டிய பெரியார், இடைத்தேர்தல்கள் மூன்றிலும் காமராசர் நிறுத்தும் காங்கிரஸ் வேட்பாளரையே தமிழ் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்; உங்களுக்குக் காமராசரின் மனித தர்மம் வேண்டுமா? ஆச்சாரியாரின் மனுதர்மம் வேண்டுமா? என்று கேட்டார். தங்கக் கட்டுப்பாடு சட்டத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொற்கொல்லர் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டாமா? என்று காமராசரும் மாயூரத்தில் 17.4.63ல் “விடுதலை" கேட்டதையும், முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. சாதி ஒழிய வேண்டுமா? நீடிக்க வேண்டுமா? சாதி ஒழிய வேண்டு மென்று காமராசர் ஆட்சியும் அதை ஆதரிக்கும் திராவிடர் கழகமும் பாடுபடுகின்றன. சாதி நீடிக்க வேண்டுமென்று சுதந்திரா, கண்ணீர்த் துளி, நாம் தமிழர், தமிழரசு, கம்யூனிஸ்டு, சோஷலிஸ்டுக் கட்சிகள் கோருகின்றன. இராமன் ஆண்டால் நல்லதா? இராவணன் ஆண்டால் நல்லதா? - இப்படியெல்லாம் பளிச்சிடும் விளம்பர முறைகளை "விடுதலை" கையாண்டது! நான்கூனேரி, போடிநாயக்கனூர், திருவண்ணாமலை என்னும் வரிசைப்படி, நிரலாக இடைத் தேர்தல்கள் நடைபெற இருந்தன; முறையே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகச் சுதந்திரா, சுயேச்சை, தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இம்மூன்று தொகுதிகளிலும்.

முன்னர் அறிவித்தவாறு பெரியார் நேரிலிருந்து தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டியைத் திருத்தி அமைத்தார். அரியலூரை அடுத்த அயன் ஆத்தூர் என்ற சிற்றூரில் 20.4.63 அன்று சாதி ஒழிப்பு வீரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, உடல் புல்லிக்க, உள்ளம் பெருமிதமடையச் சிறப்புடன் நடைபெற்றது. தேசப்பட எரிப்புப் போரில் குதித்து இரண்டாண்டு தண்டனைகளை அனுபவித்து, மீண்டவர் ஒருவர், 1½ ஆண்டு ஏழு பேர், 9 மாதம் பன்னிரண்டு பேர், மைனர் சிறையிலிருந்தவர் 4 பேர் பெரம்பலூரை அடுத்த கூடலூரில், பெரியாரின் எடைக்குச் சமமாக மிளகாய் வழங்கப்பட்டது. 21ந் தேதி சிதம்பரம் வட்ட சாதி ஒழிப்பு மாநாடும், திராவிடர் கழக மாநாடும் வல்லம்படுகையில் நடைபெற்றன. முன்னதை கி. வீரமணி தலைமையில் சேலம் ச.திரு. அழகரசன் திறந்து வைத்தார். பின்னதை பெரியார் தலைமையில் ஆர்.சண்முகநாதன் திறந்து வைத்தார். இந்த மாநாட்டில் மீதமான பணத்தைக் கொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்திற்கு அங்கேயே ஒரு மனைக்கட்டு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

நேருவின் வாக்குறுதி இந்திப் பிரச்சினையில் தகர்க்கப்பட்டுவிட்டது எனக் கூறி, சம்பத், அரசியல் சட்டத்துக்குத் தீயிடும் கிளர்ச்சியை நடத்த இருந்தார். 28.4.63 அன்று அவர் கைது செய்யப்பட்டு 4.3.63 அன்று விடுதலை செய்யப்பட்டார். நேரு புதி உறுதிமொழி ஒன்றைத் தெரிவித்தார். அதன்படி, 12 ஆண்டுகட்குப் பின்னர் ஆட்சி மொழி பற்றி ஆராயும் குழுவில் இந்தி பேசாத பகுதியைச் சார்ந்த பிரதிநிதிகள் அதிகம் இருப்பார்கள் என்பதே அது.

மன்னார்குடியில் வட்ட திராவிடர் கழகக் கட்டடத்துக்காகப் பெரியார், தாமே 1000 ரூபாய் வழங்கி, மேலும் நிதியளிக்குமாறு வேண்டுகோளும் வெளியிட்டார். நான்குனேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பெரியாரும் “விடுதலை" ஆசிரியர் கி. வீரமணி எம்.ஏ.பி.எல்., அவர்களும் மே 8 முதல் 10 வரை சுற்றுப்பயணம் செய்தார்கள். ஆச்சாரியாரால் என்னை, அதாவது சுயமரியாதைக் கொள்கையை அழிக்க முடியவில்லை அந்த ஆத்திரத்தில் தான் அவர் காமராசரை ஒழிக்கப் பார்க்கிறார். இங்கே இந்தி எதிர்ப்பு வீரராகத் காட்சி தருகிறாரே, அவரது சுதந்திரக் கட்சியின் கொள்கை அதுவா என்றால், இல்லை. கண்ணீர்த்துளிகள் இந்த மண் குதிரையை நம்புகிறார்களே - என்று பெரியார் உண்மை நிலவரத்தை விவரித்தார். இந்தியைத் தடுக்க முடியாவிடில் பதவி துறப்பேன் என்று வீர முழுக்கமிட்டார் காமராசர்.

மே, ஜூன் மாதங்களில் பெரியார் நிறைய திருமணங்களை நடத்தி வைத்தார். சுயமரியாதை முறைத் திருமணங்களைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திப் பெரியார் மகத்தான சாதனை புரிந்திருக்கிறார்; உயர்நீதி மன்றம், சுய மரியாதைத் திருமணம் சட்டப்படிச் செல்லாதெனத் தீர்ப்பு வழங்கிய பின்னும், அவரது சுயமரியாதை முறையிலான திருமணங்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமாக நடந்து வருகின்றன. பெரியாரே இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணகர்த்தா - என்று 14.5.63 "லிங்க்" ஆங்கில இதழ் பாராட்டுக் கட்டுரை தீட்டியது. சிங்கப்பூர் திராவிடர் கழகம் தனது 16வது ஆண்டு விழாவினை மே முதல் நாள் சிறப்புடன் நடத்தியது. தாயகம் சென்று திரும்பிய மாயூரம் நாகரத்தினம் கழக வளர்ச்சி பற்றி விளக்கினார்.

இந்தி எதிர்ப்புக்குழு ஒன்று - சுதந்திரா, தி.மு.க., முஸ்லிம் லீக் கட்சியைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஏன் பிற எதிர்ப்புக் கட்சிகளை இணைக்கவில்லையென "விடுதலை" கேலி செய்தது தற்கால அரசியல் நிலை என்ற தலைப்பில் சென்னைக் கடற்கரையில் டி.எம். சண்முகம் எம்.சி. தலைமையில் பெரியாரும் வீரமணியும் 2.6.63 அன்று விளக்கமளித்தனர்: ஜூன் முதல்தாள், தேனாம்பேட்டை பிள்ளைப் பேறு விடுதி ஒன்று சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படவிருத்ததற்குப் பெரியார் அடிக்கல் நாட்டினார். திராவிடர் கழக சென்னை மாவட்டத் தலைவர் டி.எம். சண்முகம் தலைமை ஏற்றார். திராவிட முன்னேற்றக் கழக மேயர், துணைமேயர்களாக குசேலரும், வேதாசலமும் வரவேற்றனர்.


7.8 இரு நாட்களும் பெரியார் போடித் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். காமராசர் ஆட்சி நீடித்தால் தமிழர்கள் நூற்றுக்கு நூறு பேரும் படித்து விடலாம் என்று உறுதி தெரிவித்தார். நாங்குநேரியிலும், போடியிலும் காங்கிரஸ் வேட்பாளரே வென்றனர். பெரியாரும் அளவிலா ஆனந்தமுற்றார். முந்திய திங்கள் 27ம் நாள் திருத்துறைப் பூண்டியில் பேசிய பெரியார், ஓட்டளிக்கும்போது மக்கள் நலத்துக்குக் கேடானவர் வந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்; நேரு, காமராசர் கரத்தைப் பலப்படுத்துங்கள் என்றார்.


90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற பெரியார் ராமசாமி. இந்த வயதிலும் ஓயாது போராடுகிறார். அடுத்த கிளர்ச்சி என்ன என்று துடிக்கிறார். அறிவிக்கும் வரையில் அடுத்த போராட்டம் எதை எதிர்த்து என்பதை அவரே அறிவாரோ என்னவோ -என்பதாக "பிளிட்ஸ்" இதழ் 8.6.63 அன்று பாராட்டி எழுதியது. பள்ளிகள், கல்லூரிகளில் விண்ணப்பம் போடும்போது சாதிப் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று தமிழக அரசு தரப்பில் ஒரு செய்தி வெளியான போது, உண்மையில் அப்படிக் கோரப்பட்டால், மீண்டும் பிராமணர் ஓட்டல் பெயரழிப்புப்போர் துவக்க நேரிடும் என்று "விடுதலை" எச்சரித்தது. இந்த ஏற்பாடு சாதியை ஒழிக்காது; மறைமுகமாகப் பார்ப்பனரை உயர்த்தி விடும் என்பது புரிந்தது.


ஈ.வெ.கி. சம்பத் திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்திற்குக் காங்கிரஸ் ஆதரவாளராகப் பேசச் சென்றார். பெரியாரும் 24 முதல் 27 வரை தொகுதியில் பேசினார்: - காமராசரால்தான் தமிழ் மக்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது: இனியும் ஏற்படும். ஆச்சாரியாரின் அடிவருடிகளான கண்ணீர்த்துளிகளால் என்ன சாதிக்க முடியுமெனப் பெரியார் கேட்டார். எனினும் திருவண்ணாமலைத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ப.உ. சண்முகம் வென்றார். பின்னர், பெரியார் சேலம் அன்னதானப்பட்டியில் 1.7.63 அன்று திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் பற்றிக் குறிப்பிட்டார். "நான் பத்தாயிரம் பேர் அடங்கிய பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவன் அதோ எம்.ஜி.ஆர். என்று கூவிக்கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர்கூட மீதி இல்லை, அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை என்று தெரிந்ததும், எல்லாருமே திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டேன்" என்று, மக்கள் மனோநிலையைச் சுட்டிக் காட்டினார் பெரியார்.

மைசூர் மாநில அரசு 100க்கு 50 இடம் பிற்படுத்தப்பட்டோருக்கு என முன்னர் அறிவித்தது போக, இந்த ஆண்டில் கல்லூரிகளில் 100க்கு 23 இடம், குறைந்த மார்க் வாங்கியவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது. வர்ணாசிரம தர்மக் காவலனான "சுதேமித்திரன்” ஏடு இந்த ஏற்பாட்டைப் பாராட்டி எழுதியதைப் படித்ததும், பெரியாருக்கு ஆச்சரியம் ஆச்சரியம் அதிசயம் அதிசயம்!" என்று தலைப்பிட்டு 27.6.63ல் தலையங்கம் தீட்டியுள்ளார். தஞ்சை திராவிடர் கழகத் தலைவர் கோ. ஆளவந்தார் 7.7.63 அன்று இயற்கை எய்தினார். திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணெய் நல்லூரில் சாதி ஒழிப்பு, திராவிடர் கழக மாநாடுகளில் கலந்து கொண்டிருந்த பெரியார் விரைந்து தஞ்சை வந்து, மறுநாள் மாலை 3 மணியளவில் அன்னாரின் சடலத்துக்கு மாலை சூட்டி மரியாதை தெரிவித்தார். தஞ்சை திராவிடர் கழகக் கட்டடம் பெரிதாக்கப்பட நிதி தேவை என்று பெரியாரே "விடுதலை"யில் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிதிக்குழுவில் இடம்பெற்ற தஞ்சை வர்த்தகர் கா.மா. குப்புசாமி, சுற்றத்தாருடன் கழகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், பின்னர் மாவட்ட அளவில் தனது தொண்டினை விரிவு படுத்தியவர். இப்போது மத்திய திராவிடர் கழகப் பொருளாளராக அரும் பணியாற்றி வருபவர். பொதுச் செயலாளருடன் கீழ்த்திசை நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வந்தவர்.

பார்ப்பானுக்கே பதவி கொடுத்து நன்மை செய்து வந்த காங்கிரஸ், இப்போது தமிழர் கைக்கு மாறி, தமிழர்களுக்கு நன்மை செய்து வருகிறது. இதை எதிர்க்கின்ற பார்ப்பனருக்குக் கண்ணீர்த் துளிகள் துணை போவதா? இது இனத்துரோகமல்லவா? என்று பெரியார் அடியக்கமங்கலத்தில் வினா தொடுத்தார்.

இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் பன்னாடை முறையில்லை, யாரும் நிறுத்தப்பட்டமாட்டார்கள் என்று சென்னை சட்ட மன்றத்தில் 8.8.63 அன்று மகிழ்வான செய்தி அறிவிக்கப்பட்டது அரசினரால்.

ஈரோடு பொதுக் கூட்டத்திலும், திருச்சியையடுத்த பொன்மனைப்பட்டி தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் கூட்டத்திலும் கலந்து கொண்டு சென்னை வந்து சேர்ந்த பெரியாருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று காத்திருந்தது. “கே.பிளான்” என்றழைக்கப்பட்ட காமராசர் திட்டம் என்ற ஏற்பாட்டின்படிக் காங்கிரஸ் கட்சியின் முதிய தலைவர்கள் பதவி விலகுதல் என்பதாகும் அது. காமராசரைப் பதவியிலிருந்து இறக்கிடவே முக்கியமாய் இது அறிவிக்கப்பட்டதாக, அப்போது சில அரசியல் நோக்கர்கள் கருதினர். பெரியார் இதைக் கேள்வியுற்றதும் காமராசருக்கு ஒரு தந்தி அனுப்பினார். தாங்களாகவோ, பிறர் அறிவித்த கருத்துக்கிசையவோ, முதலமைச்சர் பொறுப்பு நீங்குதல் - தமிழர்கட்கும், தமிழ் நாட்டுக்கும், தங்களுக்கும் தற்கொலைக்கொப்பானதேயாகும் என்பதே வாசகம் 10.8.63 அன்று மயிலை வீரப்பெருமாள் கோயில் தெருவின் கூட்டத்தில் பேசுங்கால், பெரியார், காமராசர் போல் வேறு ஆள் கிடையாது. சீனப் படையெடுப்பு நேரத்தில், பொதுவாகவே முதலமைச்சர்கள் பதவி விலகுவது பைத்தியக்காரத்தனம். தேசப்பற்று, தேச ஒற்றுமை இவைகளைவிட மானந்தான் முக்கியம் என்றார். இதே கருத்தைப் பன்னிரண்டாந் தேதி "விடுதலை"யிலும் தலையங்கமாக வெளியிட்டார்.

திருவாரூர் தங்கராசு நடத்திய பகுத்தறிவு இதழில் - அடுத்த முதல்வராக பக்தவத்சலம் வரக்கூடாது என்ற கருத்து வெளியிடப் பட்டிருந்தது. 17.8.63 அன்று பெரியார் ஓர் அறிக்கையில் இது என் கருத்தல்ல; காமராசர் யாரை ஏற்படுத்தினாலும் வரவேற்கத்தக்கது என்று கூறியிருந்தார். பெரியார் அடுத்துத் தமது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நிறையக் கூட்டங்களில் பேசினார். செப்டம்பர் 30-ஆம் நாள் தாம் பதவி விலகுவதாகவும், புதிய தலைவர் அக்டோபர் 2-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்படுவாரென்றும், காமராசர் 28.8.63 அன்று செய்தியை வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் காமராஜ் சாகரை 7.9.63 அன்று ஆர். வெங்கட்ராமன் தலைமையில் காமராசரே திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேரு அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டது. இதைக் கண்டித்துப் பெரியார், வீரமணி, ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் திருச்சியில் டி.டி.வீரப்பா தலைமையில் 31.8.63 அன்று பேசினார்கள். ஆனால் ராஜாஜியோ, நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்று சுயராஜ்யா இதழில் எழுதினார். செப்டம்பர் 8-ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் பெரியார், சமூக விரோதிகள் என்ற தலைப்பில் பேசினார். தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைந்து போய்விட்டது. பார்ப்பானும் அவனுக்கு அடுத்ததாக மலையாளியும் தமிழ் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார்களே - என்றார் பெரியார். 12-ம் நாள் சென்னை மாநிலக் கல்லூரியில் பெரியார், சென்னைக் கல்லூரிகள் தமிழ் மன்றத்தில் சொற்பொழிவாற்றினார். சென்னை பெரியார் திடலில் அமைக்கப்பட்ட ராதா மன்றத்தைப் பெரியார், சபாநாயகர் செல்ல பாண்டியன் தலைமையில், 17.9.63 அன்று திறந்து வைத்தார். பெரியாரின் 85-ஆவது பிறந்தநாள் விழாவில் சம்பத், வீரமணி, ராதா, தங்கராசு, டி.எம். சண்முகம் பங்கேற்றனர்.

பெரியார் தமது 85 ஆவது பிறந்த நாள் செய்தி வழங்கினார்:“நம்மக்கள் 100க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்றவர்கள். படித்த மக்களிலும் 100க்கு 99பேர் மூடநம்பிக்கையில் மூழ்கிப் பேராசை கொண்டவர்கள். அப்படிப் பட்டவர்கள், நமது திட்டங்கள் தங்கள் சுயநலத்திற்குக் கேடு என்பதாகவே கருதி, நம் மீது வெறுப்பு கொள்கிறார்கள், மருந்து சாப்பிடுவதற்குக் குழந்தைகள் எதிர்புக்காட்டுவது போன்றதாகவே இந்த எதிர்ப்பை, வெறுப்பை நான் கருதி இலட்சியம் செய்யாமல் தொண்டாற்றி வருகிறேன். வீணாகிவிட்டன என்று சொல்ல முடியாமல் நாடும், கொடுமைக்கும் மடமைக்கும் உள்ளான நமது சமுதாயமும் நல்ல வண்ணம் முன்னேறி வருகின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்ட நமது சமுதாயம் கல்லி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலியவற்றில் எண்ணிக்கைக்கு ஏற்ற, விகிதாச்சாரம் அடைய வேண்டும் என்கிற இலட்சியத்தைப் பெறும்படியான பணியை இந்த 85-ஆம் ஆண்டு வேலைத் திட்டமாகக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டு இருந்தேன், பார்ப்பான் தன்னுடைய அழிவுக்கே இதன் வெற்றி காரணமாகிவிடும் என்று புரிந்து கொண்டு, தன்னுடைய எல்லாவற்றையுமே செலவழித்து, இதை நிறைவேற விடாமல் செய்வான் என்பதும் தெரியுமாதலால், இது மிகக் கடினமான வேலைத் திட்டம் என்றும் கருதினேன்.

இப்போது பார்ப்பானுக்குப் புதிய பலமும் சேர்ந்து கொண்டது. அது என்னவென்றால் பார்ப்பானைப் போலவே நம் நாட்டு மைனாரிட்டிகளான முஸ்லீம்களையும், கிறிஸ்துவர்களையும் இப்போது பார்ப்பான் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ஆச்சாரியார் முஸ்லீம்களை மயக்கிடவே, காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். நேருவின் சோஷலிசக் கொள்கை, இஸ்லாம் கிறிஸ்துவ சமுதாயத்தினர்க்குக் கேடு தரும் என்று புரஸ் கிளப்பி, அந்தக் கிறிஸ்துவர்களையும் இணைத்துக் கொண்டார். இந்த முக்கூட்டுக் குழுவினரும் தாங்களே எதிலும் வெற்றியடைய முடியாது எனக் கண்டு, தங்கள் சுயநலத்துக்காக, நம் இனத்துக்குக் கேடு செய்து வாழ முடிவு செய்து, ஆச்சாரியாரை அண்டியிருக்கும் கண்ணீர்த் துளிகளை ஆதரித்துத்தான் காமராசரைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று சதித் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முஸ்லீம் - கிறிஸ்துவ சமுதாயத்துக்குத் தனித்தொகுதி கொடுத்து ஒதுக்கிவிட்டால் பெரும் அளவிற்கு அவர்கள் தொல்லை ஒழியும். அத்தோடு கூடவே, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் தமிழர், பார்ப்பனர், முஸ்லீம், கிறிஸ்துவர் என்கிற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திலுள்ள எல்லாத் துறைகளிலும் பிரித்துவிட்டால் தமிழ் நாட்டை, தமிழ் மக்களைப் பிடித்த எல்லாக் கேடுகளும் ஒழிந்தே போகும்.

முதலாவதாக, நம்நாட்டு ஆட்சியில் நாம் அடைய வேண்டிய வகுப்பு உரிமைக் கிளர்ச்சி செய்வதை உடனடித் திட்டமாய்க் கொண்டிருக்கிறேன். நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஊழல் பெருகி விட்டதாகவும், கண்ணீர்த்துளி உறுப்பினர்கள் சொத்துச் சேர்த்து விட்டதாகவும், 'லிங்க்' இதழில் செய்தி வந்திருப்பதாக விடுதலை 20.9.63 அன்று குறிப்பிட்டுக் காட்டியது. ஞானசூரியன் என்ற பகுத்தறிவு நூலாசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி 23.9.63 அபுரோடு என்ற இடத்தில் காலமானார். 1963 செப்டம்பர் 24-ஆம் நாள் தமிழ் நாடு சட்டமன்றக் காங்கிரசின் தலைவராக மீஞ்சூர் பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி பார்வையாளராக அனுப்பப்பட்டிருந்தார். “வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்” என்று, அவர் முதல்வரானதை ஏற்றுக் கொண்டு,"விடுதலை" தலையங்கம் தீட்டியது. தஞ்சையில் தந்தை பெரியாரின் 85ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 5.10.63 அன்று பெரியாருக்கு 85 பொருட்கள், வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுமாறு வழங்கி, மகிழ்ச்சி கொண்டாடினர். சென்னை மாநகராட்சியினரால் அமைக்கப்பட்ட காமராசரின் முழு உருவச்சிலையைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 9.10.69 அன்று திறந்து வைத்தார்கள். தி.மு.க. ஆட்சியில் இது நடைபெற்றது. ஒரு சிறப்பு!

மேலும், உயிரோடிருக்கும் யாருடைய சிலையையும் பிரதமர் அதுவரை திறந்ததில்லை ; காமராசருக்குத் தனிச் சலுகைபோல வந்து நிறைவேற்றினர் என்பதும் சிறப்பிலும் சிறப்பு. காமராசர் அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டம் சூட்டப்பட்டதற்கிணங்க, அவர் பின்னாளில் அம்மாதிரிச் செயல்களில் ஈடுபட நேர்ந்தது. காமராசர்; நாடெங்கும் கிருபானந்தவாரியாரின் கதாகாலட்சேபம் நடைபெற்றால் நல்லதென்று கருத்துத் தெரிவித்தார். 18.12.63 அன்று சென்னை தேனாம்பேட்டையில் பேசிய பெரியார், “காமராசருக்குப் புத்தி கெட்டுவிட்டதா?" என்று கேட்டார். காமராசரே ஆயினும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்குத் தடையாயிருக்கப் பெரியார் ஒருப்படமாட்டார் என்பது இதன் மூலம் நாட்டுக்கு விளக்கமாயிற்று! அமெரிக்க ஜனாதிபதியும், உலக மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவருமான, ஜான் எஃப் கென்னடி 2.11.63 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 13.10.63 அன்று, சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டி, எல்லா ஊர்களிலும் அரசியல் சட்டம் 17வது மொழிப் பிரிவுப் பகுதிக்குப் பொது இடத்தில் தீ மூட்டுவது என்று முடிவு
செய்தது. சென்னையில் அரசியல் சட்டத்தை எரிப்பதற்காக, அறிஞர் அண்ணா வந்த போது, வழியிலேயே 5,11.63 அன்று கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். மாவட்டந்தோறும், அறிவிக்கப்பட்ட தி.மு.க. முன்னணியினர். அரசியல் சட்ட எரிப்பில் ஈடுபட்டுக் கைதாயினர். மதுரை முக்கிய களமாயிருந்தது. மதுரை முத்து, தென்னரசு குழுவினர் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றனர். கலைஞர் கருணாநிதி, என்.வி. நடராசன், மன்னை நாராயணசாமி ஆகியோர் மீது, தூண்டிவிட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. அரசியல் சட்ட எரிப்பு மூலம் இந்தி எதிர்ப்புப் பணிக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும் தன் பங்கினைச் செலுத்திவிட்டது!

“தேர்தல் பேய், தாண்டவம் ஆடப்போகிறது" என்று 1984 புத்தாண்டுச் செய்தி போலப், பெரியார், வரவிருக்கும் மாநகராட்சி நகராட்சி மன்றத் தேர்தல்களை மனத்திற் கொண்டு, "விடுதலை"யில் தலையங்கம் தீட்டினார். புவனேஸ்வரில் காமராசர் தலைமையில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ், சமதர்மத்திட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆவடியில் உருவாக்கப் பெற்ற ஜனநாயக சோஷலிசம், தீவிரமாகக் காங்கிரசால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் மேலும் முன்னேற்றப் பாதையின் மைல்கல்லாகவே, புவனேஸ்வரி மாநாடு விளங்கக் கண்டு பெரியார் - வரவேற்றார். டி.டி. வீரப்பா தலைமையில், 6ந் தேதி திருச்சியில் பேசும்போது, பெரியார் காங்கிரஸ் இப்போது மிகவும் மாறிவிட்டது, ஆவடி மாநாட்டிற்குப் பிறகு நில உச்சவரம்புச் சட்டம் நிரை வேற்றப்பட்டது. கல்வித் துறையில் பின்தங்கிய வகுப்பினர் முன்னேறுவதற்கான நல்ல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சாதி ஒழிப்பிலும் காங்கிரஸ் இப்போது அக்கறை காட்டிவருகின்றது. ஆகவே நானும் காங்கிரஸின் தீர்மானங்களை ஆதரிக்கிறேன். இப்போது காங்கிரசின் சோஷலிசப் போக்கினால், கம்யூனிஸ்டுகளும் காங்கிரசை ஆதரிப்பதால், நான் இனி கம்யூனிஸ்டுகளை எதிர்க்க மாட்டேன். அதனால், வரவிருக்கும் நகர மன்றத் தேர்தல்களில், காங்கிரசை பலப்படுத்தாமல் இருந்ததால்தான், இது வளர எல்லாருக்கும் கல்வி, உடை, உணவு, வீடு கிடைக்கவில்லை . இனி கிடைக்கும் என்றெல்லாம் கூறியதோடு, எழுதவும் செய்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேசி வருவதையும், பெரியார் கண்டித்து, இது நாணயமாகாது என்ற இடித்துக் கூறவும் தவறவில்லை . 'திராவிடர் கழகம் காங்கிரசோடு இணைவது இயலாது! ஆதலால் எங்களைத் தவிரத் தனிப்பட்டவர்கள் யாரும் காங்கிரசில் சேருவதை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்ற பெரியார் பச்சைக்கொடி காண்பித்தார்!"

தமிழ் தேசியக் கட்சி, தானும் நகரசபைத் தேர்தல்களில் போட்டி விடுவதாக அறிவித்தது. ஈரோடு நகரமன்றத் தலைவராயிருந்த ஆர். கே. வெங்கடசாமி நாயக்கர் 8.1.64 அன்று மரணமடைந்தார். இவரது மாமனார் கரிவரதசாமி நாயக்கர் "குடி அரசு" கேஷியராக இருந்து பணியாற்றி வந்தவர். பெரியார் படத்துடன் “விடுதலை” காலண்டர்கள் வெளி வந்து விற்பனை ஆயின. குடி அரசு, பகுத்தறிவுப் பதிப்பக வெளியீடுகள், திருச்சி பெரியார் மாளிகையில் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. பம்பாய் இல்லுஸ்ட்ரேடட் வீக்லி' தெழில், கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பில், பெரியார், "நமது முன்னேற்றத்திற்குத் தடை - இந்து மதம், பார்ப்பனர், ஜனநாயகம் ஆகியைவைதான்" என்று ஆணித்தரமாகக் கூறியிருந்தார். - 26.1.64 - அன்று விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பெரியார் காமராஜரால் தான் சமதர்ம ஆட்சியே மலர்கிறது என்று பேசினார். பொங்கல் வாழ்த்துச் செய்தியில், காஃபி சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திப், பால், மோர் சாப்பிடும்படியும், இறைச்சியுணவை அதிகமாகச் சாப்பிடும் படியும் மக்களைக் கேட்டுக் கொண்டார். தனி நாடு எப்போது கேட்கப்பட்டது; ஏன் கேட்கப்பட்டது என்பதற்கான தமது விளக்கத்தினையும் பெரியார் அளிக்க முன் வந்தார். “தினமணி" போன்ற ஏடுகளில், தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து போனதாகக் கூக்குரல் எழும்பியதால், பெரியார் அதை மறுத்துக் - கல்வித்தரம் குறைந்து போனதாகக் கூறுவது அறிவிலிகள் அல்லது பார்ப்பனக் கூலிகளின் குற்றச்சாட்டு" என்று வெகுண்டெழுந்து விளம்பினார்.

ஆந்திர மாகாணத்தில், பஸ்ரூட்டுகள் வழங்கப்பட்டது. சம்பந்தமாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்று, மாநில அரசுக்கு விரோதமாக வழங்கப்பட்டதால், முதல் மந்திரியாயிருந்த நீலம் சஞ்சீவரெட்டி, தமது பதவியை ராஜினாமா செய்து, மேலிடத்துக்குக் கடிதம் வரைந்தார். இந்த ராஜினாமாவை மேலிடம் ஒப்புக் கொள்ள வேண்டாம். உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படிச் செய்வதே தவறு என்று பெரியார் வாதாடி, பிப்ரவரி 5,6 நாட்களில் "விடுதலை"யில் தலையங்கம் எழுதினார்.

நகரசபைத் தேர்தல் பிரச்சாரம், சூடாகவும் சுவையாகவும் இருந்தது. காங்கிரஸ், சுதந்தரா, முஸ்லிம் லீக், தி.மு.க. என்னும் கண்ணீர்த்துளிகள் இவர்களுக்கு ஓட்டுப் போடும் ஓட்டர்களுக்கு, ஓட்டு ஒரு கேடா? என்று ஆவேசமாகக் கேட்டார் பெரியார். 19.2.64 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில், அவரோடு டி.செங்கல்வராயன். கி.வீரமணி, சம்பத், கண்ணதாசன், பாலதண்டாயுகம் ஆகியோரும் பேசினர். “சுதேசமித்திரன்" ஏடு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கிண்டல் செய்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள், “விடுதலை"யில் எடுத்தாளப்பட்டன. அதே போல “இந்தியன் எகஸ்பிரஸ்" ஏடு சென்னையில் இப்போது ஆளுங்கட்சியின் (தி.மு.க.) கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூடத் தராதீர்கள் என்று மக்களைக் கோரிய வேண்டுகோள், “விடுதலை”யிலும் இடம் பெற்றது. காமராசர் தேர்தல் பிரசாரத்தில் பம்பரமாய்ச் சுழன்றார்.

வடசென்னைப் பகுதியில், 18.2.64 அன்று பேசும்போது “திமுகவினர் தி.க.விலிருந்து பிரிந்து பத்து வருடங்களில் நல்ல “பிசினஸ்” செய்து விட்டார்கள். இவர்களை நம்பாதீர்கள். இவர்களுக்குச் சொந்தத் தலைமை கூட இல்லை ; இரவல் (ராஜாஜி) தான்! வேட்டைக்காரன் (எம்.ஜி.ஆர்.) வருவான். ஏமாந்துவிடாதீர்கள்“ என்று காமராஜ் பேசினார். சென்னை மாநகராட்சி, அரசாங்க வேலை வாய்ப்பு அலுவலக வாயிலாகத் தனக்கு ஊழியர்களை நியமிக்க மறுக்கிறது என்று உள்ளாட்சி அமைச்சர் மஜீத் குற்றம் சுமத்தினார். ‘இது மாநகராட்சியின் உரிமைகளில் தலையிடுவதாகாதா? என்றது நிர்வாகத்திலிருந்த தி.மு.க..!’ வரிகள் அதிகமாகிவிட்டன. ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டன என்று கட்டுப் பாடான பிரச்சாரத்தில் ”விடுதலை“யும் ஈடுபட்டிருந்தது. சென்னையே பிரதான மையமாக இருந்தது. எனினும் தேர்தல் முடிவுகள் வேறு விதமாயிருந்தன! 23.2.64 பிற்பகல் 3.30 மணி வரையில் ”விடுதலை"வெளியிட்ட முடிவுகளின் படி காங்கிரஸ் 16, கம்யூனிஸ்டு 1, சுயேச்சை 1, கண்ணீர்த்துளிகள் 7. முற்றும் முடிந்தபின், 25.2.64 அன்று வெளியானவாறு, காங்கிரஸ் 40, கண்ணீர்த்துளிகள் 19, முஸ்லீம் லீக் 5, கம்யூனிஸ்டு 1, சுயேச்சை 4, காங்கிரஸ் 86 வட்டங்களிலும் தி.மு.க. 83 வட்டங்களிலும் சென்னையில் போட்டியிட்டன. தி.மு.க. ஆட்சியே சென்னை மாநகராட்சியில் தொடர்ந்தது!

9.2.64 அன்று பாபநாசத்தில் அஞ்சல் ஊழியர் மாநில மாநாட்டில் பெரியார் பேசினார். தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை தீர ஒரே பரிகாரம், சமதர்மத் திட்டம்தான். அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளத்தில் வேற்றுமை அதிகமாயிருத்தல் கூடாது. தொழிலாளர்களும் தமது அரசிடம் விசுவாசமாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சுயலாபத் தூண்டுதலால், தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் போராட்டத்தில் இறங்கக் கூடாது. என்றெல்லாம் அறிவுரை புகன்றார் பெரியார். லாரி, பஸ், கார் விபத்துகளைத் தடுக்கவும் பெரியார் ஓர் ஆலோசனை கூறினார். அதாவது, ஒருமுறை விபத்துக்குள்ளான வண்டிகளின் ஒட்டுநருடைய லைசன்சையே பறிமுதல் செய்துவிட வேண்டும் என்பதுதான் அந்த யோசனை. மேலும், நம்முடைய இழிவான நிலைமைகளுக்குக் காரணமே, நம்மில் ஒருவருக்கொருவர் அபிமானமில்லை; இழிவைப் பற்றி நமக்குக் கவலையேயிருப்பதில்லை - என்று காரணங் கூறினார் பெரியார்.

டெல்லி உச்சநீதி மன்றம், பெரியாருக்குப் புதிய பணி ஒன்றைத் தர, உதவியாயிருந்து விட்டது! தமிழ்நாட்டில் அரசு நிறைவேற்றிய உச்சவரம்பு நிலச்சட்டம் செல்லாதென, நிலச்சொந்தக்காரர் சிலரது ஆட்சேபணையில் தீர்ப்பு வழங்கியது. 9.3.64 அன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்ட அரசியல் சட்டம் 14-ஆவது பிரிவுக்கு இந்தச்சட்டம் முரணானதாம்! சிலிர்த்தெழுந்தார் பெரியார்! “தயாராகி விட்டோம்” என்று சூளுரைத்தார்! “நில உச்சவரம்புச் சட்டம் செல்லாதாமே?" என்று கெக்கலித்தார். நீதிமன்ற அநீதிகளைப் பட்டியலிட்டு, நிரல்படக் காண்பித்தார். ஆர்.எஸ் மலையப்பன் என்ற கலெக்கடர் மீது குற்றம் சுமத்திய தீர்ப்பு; அழகர்சாமி அரசு வக்கீலாக நியமிக்கப்பட அக்ரகார எதிர்ப்பு; வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாதென்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; மைசூர் அரசின் பிற்படுத்தப்பட்டடோர் இட ஒதுக்கீடு செல்லாதென்ற தீர்ப்பு - ஆந்திர பஸ்ரூட் வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு - ஆகியவை இந்தச் சந்தர்ப்பத்தில் பெரியாரால் அழகுடன் எடுத்துக் காட்டப்பட்ட பாங்கு, பாராட்டத்தக்கதாயிருந்தது.

14.3.64 அன்று கரூரில், சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் பொதுக் கூட்டம் கே.எஸ். ராமசாமி தலைமையில், பெரியாருடன், வீரமணி, ஆனைமுத்து இருவரும் பேசினர். 29.3.64 எல்லா ஊரிலும் கண்டன நாள் கொண்டாடுமாறு. முதலில் அறிக்கை வெளியிட்டுப், பின்னர் ஏப்ரல் 19-ஆம் நாள் என்று மாற்றிப் பெரியார் 20.3.64 அன்று திருத்தம் வெளியிட்டார். மார்ச் 15 திருவாரூர், 17 தஞ்சை, 18 கடலூர் சிதம்பரம், 19 சேலம், 20 திருச்சி, 21 நெல்லை, 22 மதுரை, 23 கோவை, 24 நாகர்கோயில் - என்று தமிழ் நாட்டில்' பரந்த அளவில் உடனடியாகச் சுற்றுப் பயணம் செய்து, பெரியார் இந்த நீதிப்போக்கினைக் கண்டித்து முழக்கமிட்டார்! மற்ற ஊர்களிலும் 19.4.64 அன்று பொதுக் கூட்டம் நடத்தி, உச்சநீதி மன்றத் தீர்ப்பின் பாதகத்தை விளக்கி, இந்தத் தீர்ப்பு நீதியற்றது; உள் எண்ணம் உடையது: வெறுக்கத் தக்கது என்று தீர்மானம் நிறைவேற்றி, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, ஜனாதிபதி, பிரதமர், “விடுதலை“ அலுவலகம் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும் என்று அறிவித்தார் பெரியார். “தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றம் நிறைவேற்றிய, மந்திரி சபை முடிவான, இந்த உச்சவரம்புச் சட்டத்தை, ஓர் அன்னக்காவடிப் பார்ப்பான் மகன். யாரையோ கெஞ்சி, எப்படியோ பதவிக்கு வந்தவன், மாற்றி விடுவதா? ஜனாதிபதியை, கவர்னரை, பிரதமரை, மந்திரிகளைக் கண்டிக்கிற போது - இந்த ஜட்ஜ்களை நாங்கள் கண்டிக்கக் கூடாதா? பிறகு என்ன சுதந்திரம் வேண்டியிருக்கிறது நமக்கு? எனக்கு உள்ள பிரச்சினை எல்லாம் பார்ப்பான் ஜட்ஜாக வரக் கூடாது என்பது தான்! இந்த சுப்ரீம் கோர்ட் ஏற்பட்ட 1950 முதல் இந்த 1964 வரை ஒரு தமிழன் அங்கு ஜட்ஜாக நியமிக்கப்பட்டதுண்டா ?” - என்று பதில் பகர முடியாத கேள்விகளைக் கணைகளாகத் தொடுத்தார் பெரியார்!

‘கல்கி’ இதழில், நீதிமன்றத்தைப் பெரியார் மதிப்பதில்லை சட்டத்துக்குத் தகுந்தபடி அரசியல் சாசனம் வளைந்து கொடுப்பதா இல்லாவிடில் அரசியல் சாசனத்துக்குத் திருத்தம் தருவதா?‘ என்று கேட்டதற்கும் பெரியார் சொல்லி விட்டார் - ’நீதியை மதிக்கிறேன் ஆனால் நீதி மன்றத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்கை என்று 17-வது திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, உச்சவரம்புச் சட்டம் செல்லுபடியாக்கப்படும் என்ற அரசுத் தரப்பில் நம்பிக்கை நல்கப்பட்டது.

புவனேஸ்வர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய பின், டெல்லி சென்ற காமராசருக்குத் தலை நகரம் சிறப்பு மிக்க வரவேற்பு வழங்கிற்று. சாரட்டில் அமர்த்தி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சத்தியம் -நீதி-நேர்மையின் சின்னமாவார் காமராஜ் என்று டெல்லிய பிரதேசக் காங்கிரஸ் தலைவர் வர்ணித்தார். சென்னை திரும்பி, காமராசர், 29.3.64 அன்று பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்குப் புனித ஆடை போர்த்தினார். அந்த விழாவில் சம்பத் கண்ணதாசன், அனந்தநாயகி, சின்ன அண்ணாமலை, உமாபதி, ஜெமினி கணேசன், திருவாரூர் தங்கராசு, எஸ்.டி. சுந்தரம் ஆகியோரும் பங்கு பெற்றனர்.

சேலம் மாவட்டத்தில், 7.3.64 அன்று, இடைப்பாடியில், பெரியார் பேசும் போது, ராஜா ராம்மோகன் ராயின் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளுக்கு ஆங்கிலேயர் ஆதரவு தந்ததால், சநாதனிகள் ராணுவத்தாரைத் தூண்டிவிட்டு, அதற்குச் சிப்பாய்க் கலகம் என்று நல்ல காரணங்காட்டி, நல்ல பெயரைச் சுதந்தரத்தின் பேரால் உண்டாக்கினர். அவரது முற்போக்கான பிரம்ம சமாஜத்துக்குப் போட்டியாகப், பழைமை வாதிகள் கூடி, ஆரிய சமாஜம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி விட்டார்கள். சாதாரண மணியடிக்கும் பூசாரிப் பார்ப்பானை, இராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உயர்த்திவிட்டு ஒரு முட்டாள் பார்ப்பனரல்லாத பட்டதாரி வாலிபன் விவேகானந்தனை, அவனுக்குச் சீடனாக்கி, அமெரிக்காவுக்கும் அனுப்பினார்கள் பார்ப்பனர்கள்! ஒரு வெள்ளைக்கார மாது அன்னிபெசண்ட். அந்த அம்மாளைக் கொண்டு, பிரம்ம ஞானசங்கம் ஏற்படுத்தினார்கள். சாதாரண ஆத்மா, தங்களுக்கு அனுகூலமாக இருந்த வரையில் அவரை மகாத்மா ஆக்கினார்கள். பிறகு தீர்த்துக் கட்டினார்கள் - என்று, இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த, வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த, சில நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார் பெரியார்!

கேரள மாநிலத்தில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளின் இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோருக்குச் சலுகை காட்டியது செல்லாது என, அரசு உத்தரவையே ரத்துச் செய்தார் ஒரு ஐகோர்ட் பார்ப்பன நீதிபதி. அரசு டிவிஷன் பெஞ்ச் அப்பீலுக்குச் சென்ற போது, அதே ஐகோர்ட்டின் பார்ப்பனரல்லாத நீதிபதி இருவர் அரசு ஆணை செல்லும் என்று தீர்ப்புக் கூறினார்கள். ஒரே ஐகோர்டில் ஆளைப் பொறுத்து நீதி மாறுபடும் விசித்திரத்தை, “இதோ கேரளா உதாரணம்” என்ற தலையங்கத்தின் வாயிலாக, 8.4.64 “விடுதலை” எடுத்துக் காட்டியது. அன்றே, சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் கொண்டாடும் போது, நிறைவேற்றப்படும் தீர்மான வடிவம், ஒரு நமூனா அமைப்பில், விளக்கமாகத் தரப்பட்டுமிருந்தது.

யானை வேட்டைக்குத்தானே நாம் செல்கிறோம் என்பதால், வழியில் எதிர்ப்படும் நரிகளை விட்டு வைப்பதில்லை பெரியார்; ஆதரவின்றிக் கிடக்கும் ஆடுகளைத் தூக்கிவிடவும் தவறுவதில்லை ! அண்ணாமலை யூனிவர்சிட்டியில் பார்ப்பனர் ஆதிக்கம் என்ற தலையங்கத்தில் 6.4.64 அன்று, சர்.சி.பி. ராமசாமி அய்யரின் ஆணவ அட்டகாசங்களைக் குறிப்பிட்டுக் ‘காமராசர் போன பின்பு, பார்ப்பனர்க்குத் தைரியமும் துணிவும் ஏற்பட்டுவிட்டது. செட்டி நாட்டரசர் இதில் உடனே தலையிட வேண்டும். பார்ப்பனரல்லா மாணாக்கர்க்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என எழுதினார் பெரியார். “மாயூரம் வட்ட தி.க. தலைவர் சவுரிராசன், திருவிளையாட்டம் என்ற தம் ஊரில் தமது சொத்தெல்லாம் செலவழித்து நடத்தி வரும் உயர்நிலைப் பள்ளியை நானே பார்த்திருக்கிறேன். அதைச் சீர்திருத்த, நன்கொடையாக ரூ.200/- இப்போது நானும் தந்திருக்கிறேன். தோழர்களும் உதவிட வேண்டுகிறேன்” என்று பெரியார் கனிவுரை நல்கினார். 11.4.64 “விடுதலை” யில் வில்லிவாக்கத்தில் ஏப்ரல் 11-ஆம் நாள், குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டை சம்பத் திறந்து வைத்தார். இரவு, குலதெய்வம் ராஜகோபால் ‘நாலுந் தெரிந்தவன்’ நாடகம் நடத்தினார். மறுநாள் திராவிடர் கழக மாநாட்டையொட்டித், தலைவரான பெரியாரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். வீரமணி திறப்பாளர், இரவு கண்ணதாசனின் ‘கோணிப் புளுகன் கோயபெல்ஸ்’ நாடகம்!

அருப்புக்கோட்டை இடைத்தேர்தலில் பேசிய ராஜாஜி “காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படிபோல் விழவேண்டும்” என்று பேசியிருந்தார். “இவருக்கு என்ன, பைத்தியம் பிடித்துள்ளதா?“ என்று கேட்டு, ‘செங்கான் கடையில் ஆச்சாரியார்’ எனும் மகுடமிட்ட தலையங்கத்தை, 14.4.64 ”விடுதலை" பூண்டிருந்தது.

மிக்க எழுச்சியுடன் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் திருவல்லிக்கேணி கடற்கரையில் 19-ந்தேதி குழுமியிருந்தனர். ‘சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் ஆகிய இரண்டுமே அரசு நிர்வாகத்தில் எப்போதும் தலையிடாதவாறு, இனி வரும் 17-ஆவது திருத்தம் அமைந்து, அரசியல் சட்டத்தில் இடம்பெற வேண்டும்’ என்று பெரியார் அழுத்தமாக உரைத்தார். இந்தச் சொற்பொழிவில் பார்ப்பனர் எதற்கும் துணிந்தவர் எவ்வளவு உயரப் பறந்தாலும் ஊர்க் குருவிதால் பருந்தாகாது' என்ற உண்மை ஒன்றை - மர்மமான விஷயம் ஒன்றைப் பெரியார் திடீரென்று அம்பலப்படுத்தி, மக்களை அதிசயக் கடலில் அமிழ்த்தினார். சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிப் பார்ப்பனர், பொய்யான வயதைக் கொடுத்துப், பதவி நீடிப்புப் பெற்றுள்ள உண்மையே அது அவர் கொடுத்துள்ள வயதின்படி, அவர் தம்பியைவிட அவர் இளையவராகிறார்! இந்தக் கூட்டத்தில் பெரியார் இரு குழந்தைகளுக்குக் காமராஜ் என்று பெயர் சூட்டினார்! 19.4,64 நாடெங்கும் சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் கொண்டாடிய விவரம், அடுத்த ஒரு மாதம் வரையில் தொடர்ந்து “விடுதலை”ஏட்டில் வெளிவந்தது! தனிப்பட்டோர் பலரும் எதிர்த்துக் குரலெழுப்பிய பட்டியலும் இடம் பெற்று வந்தது!

தமது 74-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏழு நாட்களே எஞ்சியிருந்த நிலையில் ஏப்ரல் 22-ஆம் நாள் புதுவைக்குயில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - கனகசுப்புரத்தினக் கவிஞர் கோமான் - இயற்கை எய்தினார். காலை 8-30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவ மனையிலிருந்து, அன்னாரது சடலம் புதுவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மகனார் மன்னர் மன்னனால் எரியூட்டப் பெற்றது. சாகா இலக்கியத்துச் சகாப்தம் படைத்த புதுமைப் பாவேந்தனுக்குப் புதுவை அரசு பெருமையூட்டிற்று, பின்னாளில்!

இராமாயணக் குறிப்புகள் என்ற தலைப்புடன் ஏப்ரல் முதல் அக்டோபர் திங்கள் வரை நாள்தோறும் வெவ்வேறு விவரங்களுடன், வான்மீகன், கம்பன் புரட்டுகள் “விடுதலை” முதல் பக்கத்தில், பெட்டிச் செய்தியாக, 178 துணுக்குகள் பிரசுரமாயின், பின்னர் இது நூலாகவே தொகுக்கப் பெற்றது. திருச்சியிலுள்ள சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தும் பல்வேறு பள்ளிகளுக்கான விளம்பரங்கள் தினமும் “விடுதலை”யில் இடம்பெற்று வந்தன. கம்யூனிஸ்டுக் கட்சி இந்தியாவில் இரண்டாகப் பிளந்தது. பார்ப்பனத் தலைமையுடன் இடது சாரிக் கட்சி உதயமாகிவிட்டது. தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் ‘தமிழ்ச் செய்தி’ என்ற தினசரிப் பத்திரிகை ஒன்றினை சம்பத் தொடங்கினார். இதன் ஆரம்பவிழா சென்னை பெரியார் திடல் ராதா மன்றத்தில், ஏ.எல். சீனிவாசன் தலைமையில் காமராசரால் நிகழ்த்தப் பெற்றது. மணலி கந்தசாமி, உமாபதி, சின்ன அண்ணாமலை, பாலதண்டாயுதம், ஜெயகாந்தன், கே. ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரைத்தவர்கள். மே 24-ஆம் நாள் இது தொடங்கப் பெற்றது.


பெரிய நகரங்களில் மட்டுமே மாநாடு நடத்தி வந்த மரபினை மாற்றத்தான் பெரியார் வில்லிவாக்கத்தில் இரு மாநாடுகள் நடத்திக் காட்டினார். இது கூடச் சென்னை மாநகருக்கு அருகே இருக்கிறது! ஆனால் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கும் திருத்துறைப் பூண்டிக்கும் இடையிலுள்ள மிகச் சிறிய கிராமமாகிய கச்சணம் என்ற மாரில், 26.4.64 அன்று, 50 காசு கட்டணத்துடன், திராவிடர் கழக மாநாட்டை நடத்திக் காட்டினார் பெரியார். வரவேற்புக் குழுத் தலைவராக வி.கணபதியும் செயலாளராக சு.சாந்தனும் இருந்தனர். மே மாதத்தில் பெரியார் சுற்றுப்பயணம் செல்லவில்லை . 24-ந் தேதியன்றுதான் தொடங்கினார். இடையில் திருச்சியில் புதிய பணி ஒன்றைத் துவக்கினார்.

‘சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு ஈ.வெ.ரா. அறிவிப்பு’ என ஒன்று, மே ஏழாம் நாள் “விடுதலை”யில் காணப்பட்டது. “திருச்சியில் வே.ஆனைமுத்து நிர்வாகியாக இருந்து 30 நாள் பயிற்சி தந்து, பகுத்தறிவுப் பிரச்சாரப் படை ஒன்றினை உருவாக்கப்படும்; அறிவு, ஒழுக்கம் நாணயம் உள்ள தோழர்கள் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்" என்று பெரியார் வேண்டுகோள் விடுத்தார். இது பின்னர் ஜூன் திங்கள் 15-ஆம் நாளிலிருந்து செயல்பட்டது.

இதற்கிடையில் காரைக்கால் பகுதியிலுள்ள அம்பகரத்தூர் என்ற சிற்றூரில் காளிகோயில் ஒன்றில் எருமைக்கடா பலி கொடுக்கும் வழக்கம் இன்றும் நடைபெற்று வருவதைக் காரை சி.மு. சிவம் போன்ற தோழர்கள் சுட்டிக்காட்டி, இந்த பலியைத் தடுக்கக் கழகத்தின் சார்பில் முயற்சி எடுக்க விரும்பினர். அதனால் 21-ந் தேதியன்று மூடநம்பிக்கைத் தடுப்பு பற்றிப் பெரியார் அறிக்கை வெளிவந்து விட்டது. சென்னையிலிருந்து வீரமணியும், ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்களும் காரைக்கால் பகுதிக்குச் சென்றனர். பிரச்சினை வலிவு பெற்று விட்டது. கழகத் தோழர்கள் அங்கே குவிந்தனர். காரைக்கால் நிர்வாக அதிகாரி முன்வந்து. இதை அடியோடு நிறுத்துவற்கு இப்போது காலம் போதாது; இந்த ஆண்டு ஒரே ஒரு எருமைக்கடா பலியோடு நிறுத்துகிறோம். அடுத்த ஆண்டு முதல் அடியோடு பலியை ஒழித்து விடுகிறோம் என உறுதி கூறவே, 26-ந்தேதி, அந்த விழா சிறப்புக்குன்றி, நடந்து முடிந்தது.

ஆனால் 1964 மே 27-ஆம் நாள் ஆசிய ஜோதியே அணைந்து போய்விட்டது. பிற்பகல் 2.30 மணிக்குப் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் காலமாகி விட்டார்கள். செய்தி கேட்ட மனித குலமே கதறியழுதது. பூவும் (ரோஜா) அழுதது. புவியே அழுதது. தர்மபுரி மாவட்டத்திலிருந்த பெரியார், தமது தாள முடியாது துயரச் செய்தியைத் தொலைபேசி வழியே தெரிவிக்கச் செய்தார். சமதர்மச் சிற்பி நேருவின் மறைவால் காங்கிரசுக்குத் தலைமையே போய் விட்டது. காமராசர் இருக்கிறார் என்றாலும், நேருவைப் போல், உலகம் சுற்றிய மேதாவிலாசம் குறைவுதானே? என்று பெரியார் அங்கலாய்த்தார்.

சென்னை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அண்ணாவைக் கலைஞர் சந்தித்துச் செய்தி கூறவே, அவரும் மனமுடைந்து, கலைஞர் வாயிலாகத் தமது எல்லையற்ற துயரை இயம்பினார். பெரியார், சேவத்தில் கழகச் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், 29.5.64 அன்று, தமது அனுதாப உரையைக் கண்ணீரோடு கலந்துரைத்தார். “கேட்டவுடன் பெரும் அதிர்ச்சியும் தாள முடியாத துக்கமும் அடைந்தேன். பிரதமர் நேரு அவர்களை இழந்ததன் மூலம் நாட்டில் பரிகரிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அவர் விட்டுக் சென்ற காரியம் நிறைவேறுமா என்று எண்ணிப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இனிநாள் என்ன செய்வேன்? நமது தொண்டுதான் அவரும் செய்கிறார் என்று கண்ணை மூடிக்கொண்டு அவரது கட்சியை ஆதரித்தேன். பொது மக்களாகிய நீங்கள் இனியும்: காங்கிரசை ஆதரித்து, அவர் விட்டுச் சென்ற காரியம் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார் பெரியார். நேரு மறைவில் கூட ஆகாசவாணி, அக்கிரகார வாணியாகப் பணியாற்றியது. நேருவைக் கேலி செய்து பேசிய ராஜாஜிக்குதான் வானொலியில் இரங்கலுரையாற்றும் வாய்ப்புத் தரப்பட்டது. நேருவின் உடலுக்குப் பேரன் சஞ்சய் எரியூட்டினார். இடைக்காலப் பிரதமராக நந்தா பொறுப்பேற்றார். நேருவின் உயிலைச் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் நாட்டுக்கு அறிவித்தார். மூடநம்பிக்கையற்ற பகுத்தறிவு வாதியான நேரு, “நான் இயற்கையை ரசிப்பவன் ஆதலால் கையளவு சாம்பலைக் கங்கையில் கரைக்கவும். மிகுதியாக உழவர் உழைக்கும் வயலில் போடவும். எனக்கு எத்தகைய மதச் சடங்குகளிலும் நம்பிக்கை கிடையாது“ என்றார் 31.5.64 சென்னை கடற்கரையில் நடத்திய அனுதாபக் கூட்டத்தில் பெரியார், ”நேரு பகுத்தறிவு வாதி. புத்தருக்குப் பின் தோன்றிய தத்துவ ஞானி“ என்று புகழ்ந்தார். ”விடுதலை"யில் ‘பகுத்தறிவுவாதி நேரு' என்ற தலைப்பில் தினமும் ஒரு பெட்டிச் செய்தி. அவரது கருத்துகளைத் தாங்கிப் பல நாள் வரிசைபட வெளியிடப்பட்டு வந்தது. நில உச்சவரம்புச் சட்டத்தைச் செல்லுபடியாக்கிட, அரசியல் சட்டத் திருத்தம், 19-வது திருத்த மசோதாவை, நாடாளுமன்றம் நிறைவேற்றித் தந்தது.

“விடுதலை” ஏட்டின் வெள்ளிவிழா 6.6.64 அன்று. ஓராண்டுக்குள் 5,000 சந்தாக்களாவது சேர்க்கப்பட்டால் தான், அதில் ஏற்பட்டுவரும் நட்டத்தைச் சரிகட்ட முடியும் என்றும், அதிலும் 2,500 சந்தா அடுத்த 2 மாதத்திற்குள் தேவை என்றும், வீரமணியின் தொண்டுகளைச் சிறப்பித்தும் பெரியார் எழுதினார். அரசு விளம்பரங்களோ, பிற விளம்பரங்களோ ”விடுதலை" யில் வருவதில்லை. மாதம் இரண்டொரு சினிமா விளம்பரங்கள் வந்தன. லால் குடி வட்டம் பெருவளப்பூரில் பெரியாரின் எடைக்குச் சரியாக மிளகாய் அன்பளிப்பாக வழங்கினார்கள். 10-ஆம் தேதி அடுத்து. 13, 14 நாட்களில், திருவையாறு சாதி ஒழிப்பு, திராவிடர் கழக மாநாடுகள் பெரியார் சிறப்புரையாற்றுகையில், “தோழர்கள் செருப்பையும், துடைப்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டு, ஊரூராய்ச் சென்று, வீதியில் அவைகளை அடித்துக்கொண்டே சாதியே ஒழிந்து போ! என்று சொல்ல வேண்டும்” என்று கூறினார். ஆத்திரம் கொப்பளிக்க அவ்வாறு கூறினரே ஒழியப் பிற்பாடு, அதற்கான திட்டமோ, நாளோ பெரியார் குறிப்பிடவில்லை.

காமராசர், சங்கரநயினார்கோயிலில் பேசும்போது, 12.6.67 அன்று, 1967- ல் என்ன, 1977-ல் கூடக் காங்கிரசை அசைக்க முடியாது என்றார் பெரியார் அதே நாளில் கீழ்வேளூரில் ‘நாத்திக ஆட்சியே சமதர்மம் அளிக்கும்’ என்று பேசினார். “விடுதலை“ சந்தா பற்றி மீண்டும் நினைவூட்டிப் பெரியார் விடுத்த வேண்டுகோள், ”விடுதலை"யில் பெட்டிச் செய்தியாக வந்தது. பெரியார் திருச்சியில் தங்கிப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளை நடத்த இருப்பதால், மே 17க்குப் பிறகு அந்த வகுப்புகள் முடியும் வரையில் தோழர்கள் பெரியாரைக் கூட்டங்களுக்கு அழைக்காதிருக்குமாறு புலவர் கோ. இமயவரம்பன் அறிவித்தார். புதுவையில் 17.6.64 அன்று நடந்த பாரதிதாசன் இரங்கல் கூட்டத்தில் நேரு, பாரதிதாசன் இருவர் மறைவுக்குமே பெரியார் வருந்தினார். அடுத்த நாட்களில் பெரியார் 10.7.64 வரை திருச்சியில் தங்கியிருந்தார். ஜூலை மாதத்தில் சுற்றுப் பயணம் குறைவுதான். ஆனால் ஆகஸ்டில் அதை நிறைவு செய்து விட்டார்.

காமராசரின் 62-ஆவது பிறந்த நாளான ஜூலை 15-ல், “விடுதலை” பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தது; “காமராஜரும் பார்ப்பன வீழ்ச்சியும்” என்று, அடுத்தது தலையங்கமும் தீட்டியது. 20ந் தேதி காமராஜர் சென்னைக்கு வந்தபோது, பிரம்மாண்டமான வரவேற்பு வைபவங்கள், பார்த்தோரைப் பிரமிக்கச் செய்தன ஊர்வலத்தில் 5 லட்சம் மக்கள், 1,000 அலங்கார டிரக்குகள், 500 பஸ்கள் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் 15 லட்சம் மக்கள் அன்று சென்னைக்கு வருகை தந்த பெரியாரும், மணியம்மையாரும் காலையில் காமராஜர் இல்லம் சென்று, நேரில் வாழ்த்துக் கூறினர். வெளியில் வந்து, அழைத்துச் சென்று, அமர்த்தி, உரையாடி, வாயில் வரை வந்து, வழியனுப்பி வைத்தார் காமராசர். அன்று காலை 10.30 மணிக்கு, சென்னைப் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த, முதலமைச்சர் பக்தவத்சலத்தையும், பெரியாரும் மணியம்மை யாரும் கண்டு, நலம் விசாரித்தனர். காமராசர் பிறந்த நாள் விசேடங்களை நேரில் கண்ணுற்ற பெரியார் இது பெரிய தேசிய விழா, போலிருந்தது என்றே குறிப்பிட்டிருந்தார். காமராசர் படத்துடன், அவரது “சமதர்மம் பற்றிய பொன்மொழிகள்“, ”விடுதலை"யில், கட்டத்துக்குள், தொடர்ந்து 15 நாட்கள் வரை பிரசுரமாயின.

ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் தமிழ்நாடு என்றும் வழங்குவதுதான் அரசின் முடிவு என்று அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் 24.7.64-ல் அறிவித்தார்.

“எதிரிகளால் குறை சொல்ல முடியாத அரசாங்கம் காங்கிரஸ் அரசாங்கம். இதனிடம் சமதர்மத் திட்டம் இருப்பதால் காங்கிரசில் மக்கள் சேருவதும் இதை ஆதரிப்பதும் தவறல்ல” என்று ஜூலை 19 முதல் 21 வரை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பல கூட்டங்களில், காரைக்கால் பகுதிக்குள், பெரியார் சொற்பொழிவாற்றினார். சென்னையை அடுத்த ஆலந்தூரில் 23-ம் நாளன்று கடவுள் ஒழிப்பு மாநாடு, புதிதாக நடைபெற்றது; காஞ்சி சி.பி. ராசமாணிக்கம் தலைமையில், வீரமணி திறந்து வைத்தார். பெரியார், எம்.ஆர். ராதா, தங்கராசு கலந்து கொண்டனர். தீர்மானங்களை விளக்கிப் பெரியாரே ”விடுதலை"யில் எழுதினார். செப்டம்பர் 1ம் நாள் “கேரவன்” இதழ் காமராசரைப் பாராட்டி எழுதிய கட்டுரையில், பெரியாரின் பணியினையும் சிறப்பித்திருந்தது!

19.4.1961-ல் உதயமான சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி 6.9.1964 அன்று அஸ்தமனமாகி விட்டது; அதாவது காங்கிரசுடன் இணைந்து விட்டது. பெரியார் திடலில் அந்தோணிப் பிள்ளை ஆகியோர் காமராசரிடம் தங்கள் தமிழ் தேசியக் கட்சியை ஒப்படைக்கும் விழா. மாலையில், கடற்கரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு, இவர்கள் ஊர்வலமாகச் சென்று, அங்கு வரவேற்கப்பட்டார்கள். அதிலிருந்து, 1967 வரை சம்பத், காங்கிரசின் மிகப்பெரிய பிரச்சார பீரங்கியாக முழங்கி வந்தார்; ஒரு நாள் கூட ஓய்வின்றிச் சுற்றுப் பயணம் செய்தார். த.தே.க, காங்கிரசுடன் இணைந்த செய்தி “விடுதலை”யில் விளம்பரமாக வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு “விடுதலை” பெரியார் 86-வது பிறந்த நாள் மலர், 200 பக்கங்களுடன், ஒரு ரூபாய் விலையில், சிறப்பாகக் கொணரப்பட்டது. 10.9.64 அன்று கேரளாவில், தாழ்த்தப்பட்டவரும் காங்கிரஸ் முதலமைச்சருமான சங்கர் கவிழ்க்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

17.9.64 தந்தை பெரியார், 86-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாள், திருச்சியிலுள்ள பெரியார் பயிற்சிக் கல்லூரிகளின் நிறுவனர் நாளில் பெரியாருடன் 1,000பேர் விருந்துண்டனர்; சம்பத், வீரமணி சொற்பொழிவாற்றினர். திருச்சியில் கல்லூரி ஒன்றை நிறுவிட, 5 லட்சம் ரூபாய் வழங்கியருளினார் வள்ளல் ஈ.வெ.ரா. பெரியார். வழக்கம் போலப் பிறந்த நாள் செய்தியும் ஈந்திடத் தவறினாரல்லர்: “நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து, 86-வது ஆண்டில் புகுகிறேன். என்ன செய்து விட்டாய்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில், நீங்களே தான் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, கழிப்பிணித்தன்மை இன்றி, உழைத்தேன். திருட்டு புரட்டு மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள் தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாக்க கொண்டு, எனக்குச் சரியென்று பட்டதையும், தேவை என்று பட்டதையும், செய்தேன். அதுவும், ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன். வாழ்வில், செயலில் நான் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும், அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு, முயற்சியில் சளைக்காமல், நடந்து கொண்டுதான் வருகிறேன். நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்து வரவில்லை என்பதும், எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயம். நான் 1,034 பிறை கண்டவன்; அதனால் முழு வாழ்நாள் வாழ்ந்து விட்டேன்!"

எனவே, கிரமப்படிப் பார்த்தால், உங்களிடம் நான் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான், எனது நேர்மையான கடன் அதற்கேற்ப எனக்குப் புத்திக் கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞாபகக் கோளாறு அதிகமாகிவிட்டது. பேசப்பேசப், பேச்சுத் தொடர் மறந்து போகிறது. வெகு கெட்டிக்காரத்தனமாய்ச் சமாளித்துக் கொள்கிறேன். காது 10க்கு 40 பங்கு சப்தம் கேட்பதில்லை. (செவிடு) கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் மைக்கா 12 பாயிண்டு) க்குமேல் படிக்க முடிவதில்லை ; கண்களில் கண்ணீர் வந்து மறைத்து விடுகிறது. நடை 10 எட்டு, அதாவது, 15 அடி தூரத்துக்கு மேல் நடந்தால், நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் களைப்பு வந்து விடுகிறது. அதுவும் துணைப் பிடிப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை . ஹெர்ணியா (குடல் இறக்கம்) என்னும் நோய் இருப்பதில், உட்கார்ந்திருக்கும் போது, ஒரு இளநீர் அளவு பரிமாணம் குடல் இறங்கி, சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நின்றால் ஃபுட்பால் (உதை பந்து) அளவுக்குப் பெருகிப் பெரு வலி கொடுக்கிறது. இந்தக் காரணங்களில் நானே என்னைக் “கண்டெம்டு மேன்” (தள்ளப்பட்ட மனிதன்) என்றே கருதி வாழ்ந்து வருகிறேன்.

இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவதிப்படாமல் இருக்கும் வண்ணம், நோய் தெரியாமல் இருக்க, டாக்டர் குளோராஃபார்ம் (மயக்க மருந்து) கொடுப்பது போல், பணம். பண்டம் தாராளமாகக் கொடுத்து உற்சாகப்படுத்தி விடுகிறீர்கள்.

திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த 5 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. வகுப்புவாரி உரிமைக்காகவும் சமதர்மத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருந்தாலும், இப்போது பிரச்சார அளவில் இருந்தால் போதும்! எப்போதுமே கிளர்ச்சிக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படக் கூடாது!

இன்று தமிழர் சமுதாயத்திற்கு மாத்திரமல்லாமல், ஏழை எளியவர் சமுதாயத்திற்கும், இரட்சகர் என்கிற முறையில் காமராசர் இருந்து வருகிறார். காமராசரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு நமது ஆதரிப்பு, ஆட்சிக்கும் காங்கிரசுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதுவரை நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதி விடாதீர்கள். அரசியல் ரீதியில் இன்று காங்கிரசுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது நமது இயக்கம்தான். பார்ப்பான் குள்ள நரி ஆகி விட்டான்: முஸ்லீம் லீக் இன்று செல்லாக்காசு ஆகிவிட்டது. கண்ணீர்த்துளி, நாட்டுக்கு நியூசென்சாகி விட்டது. இது யாரால், இதற்குக் காங்கிரஸ் என்ன செய்து விட்டது?

சலிப்படையாமல் நமது தோழர்கள், கடவுள் மத சாஸ்திர சம்பிரதாய ஒழிப்புக் காரியங்களில், நம் தனிமையை எப்போதும் மறந்து விடாமல், தொண்டாற்றலாம்

1963-64 ஆகிய இந்த 85-வது வயதில் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நாட்கள் 165, பேசிய பொதுக் கூட்டங்கள் 139, கலந்து கொண்ட கழக மாநாடுகள் 6, நடத்தி வைத்த திருமணங்கள் 20 என்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது!

மண்ணச்ச நல்லூரில் பெரியாருக்குக் காளைகள் பூட்டிய டிரக் வண்டி ஒன்று வழங்கப்பட்டது. சொந்த நகரமாகிய ஈரோட்டில் எடைக்கு எடை மஞ்சள் அன்பளிப்பு: நகர மன்ற வரவேற்பு, முதலாளி சாயபு அவர்களால். பெரியார் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தகவலை அதிகார பூர்வமாக அந்தத் தகவலுடைய சேகரிப்பாளரான டாக்டர் எஸ். விஜயலட்சுமி அறிவித்தார். காஞ்சியில், பெரியாரின் எடைக்கு இருமடங்கு எடையுள்ள அரிசி வழங்கப்பட்ட போது, அதைக் கூட்டுறவுச் சங்க விநியோக முறை மூலம் மக்களுக்கே தரச் சொன்னார். கரூரில் துலாபாரம் நடத்திக் கைத்தறிப் போர்வைகள் அளித்தனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவர் என். சிவராஜ் தமது 72-வது வயதில் 29.9.64 அன்று மறைந்தார். வீரமணியின் மைத்துனி சூரிய குமாரிக்கும், கல்லூரி விரிவுரையாளர் தோழர் சா.கு. சம்பந்தத்துக்கும் பெரியார் திடலில் 27.9.64 அன்று திருமணம் என்னும் செய்தி அறிவிப்பும், அழைப்பும், பெரியார் மணியம்மையார் கையொப்பங்களுடன் வழங்கப்பட்டது. “உணவு நெருக்கடியை வியாபாரிகளே செயற்கையாக உண்டாக்கி விடுகிறார்கள். அதனாலேயே அவர்களுக்கிருந்த மரியாதை போய் விட்டது. இல்லாததை இருப்பதாகப் பத்திரிகையாளர்கள் பெரிது படுத்துகிறார்கள். உணவு சம்பந்தமான செய்திகளையாவது Pre-censor அரசு செய்ய வேண்டும்“ என்ற கருத்துக்களைப் பெரியார் ”விடுதலை"யில் எழுதினார்.

சேலத்தில் அக்டோபர் 10, 11 தேதிகளில் நடந்த ஊர்வலம்: பொதுக்கூட்டம் ஆகியவற்றில், பெரியார் கலந்து கொண்டார். பி. ரத்தினசாமிப் பிள்ளை , எஸ்.என்.ஏ. அஜீஸ் (தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர்-மிக இளமையில் காலமாகிவிட்டார்) பால தண்டாயுதம், சம்பத், கண்ணதாசன் பங்கேற்றனர். சிவாஜி கணேசன், தான் பெரியாராக நடித்து ஒரு திரைப்படம் எடுக்கப்பபோவதாக அறிவித்தார். (இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை! ) நன்றி கூறும் முகத்தான் பெரியார், “கலையுலகில் மறுமலர்ச்சி உண்டாக்கும் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் ” என்று குறிப்பிட்டார். 15.10.64 அன்று பக்தவத்சலத்தின் 68-வது பிறந்த நாளில் “நாமும் வாழ்த்துகிறோம்” என்று எழுதிற்று “விடுதலை” “சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா இலங்கைச் சிக்கல் தீர்ந்தது. 3 லட்சம் தமிழர்கள் அங்கு குடியுரிமை பெறுவார்கள்; 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்“ என்ற செய்திக்கு முதற் பக்க முக்கியத்துவம் தந்தது ”விடுதலை".

திருவள்ளூரில் பெரியாரின் எடைக்குச் சமமாகக் காய்கறிகள் வழங்கினார்கள். 21.10.64ல் அங்கே பேசும்போது, “நண்பர் அண்ணாதுரையும், கருணாநிதியும் அடுத்தபடியாக நாங்கள்தான் ஆளப்போகிறோம் என்கிறார்களே. அப்படியே ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சாரியார் சொல்படிதானே ஆளுவார்கள்?“ என்று கேட்டார் பெரியார். (பதில் முரண்பாடாகிவிட்டதே 1967ல்) நவம்பர் 15, 16, 17 தேதிகளில் பெரியார் பெங்களூர் சென்று வந்தார். 5, 11.64 முதல் ”விடுதலை“யில் பெரியார் அன்று சொன்னார்” என்ற தலைப்பில் பெரியாரின் கருத்துக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு, இறுதியில் “இதனை ஆட்சி இன்று செய்கிறது" என்று முடியும் வண்ணமாகத் தொடர்ச்சியான பெட்டிச் செய்திகள் அன்றாடம் பிரசுரமாயின. ஆந்திர மாநிலத்திலிருந்து சந்திராரெட்டி, தமிழ்நாடு பிரதம நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 21, 22 ஆகிய இரு நாட்களிலும் திருச்செங்கோடு கே.பரமசிவம் நடத்தும் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பெரியாருக்கு எம்.ஜி.ஆர் கருப்புச்சால்வை போர்த்திப் புகழ்ந்து போற்றினார். டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஏ.சுப்பையா ஆகியோர் முதல் நாளும், மந்தா கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வாணன், ஜி.டி. நாயுடு ஆகியோர் இரண்டாம் நாளும் பங்கேற்றார்கள். திருவாரூரில், டிசம்பர் 1ம் நாள், பெரியார் பிறந்தநாள் விழாவில் துலாபாரம் நடத்தி, அரிசி வழங்கிய போது, பெரியார் அதனைப் பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவுக்கு அளித்திடச் செய்தார். திருவாரூர் நகர்மன்ற வரவேற்ப்பு, தலைவர் கே.டி.ஆர் கோபால கிருஷ்ண ராஜுவால் வழங்கப்பெற்றது. விழாக்கோலம் பூண்டிருந்த ஆரூரில், சிவாஜி கணேசன். கோபாலசாமி தென் கொண்டார். கவிஞர் கண்ணதாசன் கலந்து கொண்டனர். பெரியார் காவியம் பாடுவதாகக் கண்ணதாசன் அறிவித்தார் (இன்னும் பாடியதாகத் தெரியவில்லை) தஞ்சையில் சீமைக்கறவைப்பச் பெரியாருக்கு அளிக்கப்பட்டது. திருச்சியில் பால்; திருப்பத்தூரில் 2 புதுக்காசு; சேந்தமங்கலத்தில் சவ்வரிசி ஆகியவை துலாபாரத்தில் தரப்பட்டவை. வ.ஆ. திருப்பத்தூரில் நகராட்சித் தலைவர் தி.மு.கழக சின்னராஜு வரவேற்பளித்தார். “விடுதலை”யில் 25.12.64 1¼ பக்க அளவில் பெரியார்,“நாட்டின் பெருங்கேடு பார்ப்பனர் - வர்த்தகர். வக்கீல்” என்பதாக விளக்கங்களுடன் தலையங்கம் எழுதினார்.

1954 டிசம்பர் 25-ஆம் நாள், கிறிஸ்துமஸ் தினத்தன்று வீசிய கடும்புயலால், தனுஷ்கோடி கடற்கரை சேதமுற்றது. பெரியார் - மணியம்மையார், சிதம்பரம், ரெங்கம்மாள் சிதம்பரம் ஆகியோருடன் -29ந் தேதி பாம்பன் பகுதியில் படகில் சென்றார். அங்கு மீட்புப் பணிகைளப் பார்வையிட அமைச்சர் ராமய்யா வந்திருந்தார். மூன்றாண்டுகளாக அமைச்சராயிருந்த அவரைப், பெரியாருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, மன்னிக்கணும். நான் இதுவரை அய்யாவைப் பார்த்ததில்லை. என்றார் பெரியார்! குற்ற உணர்வுடன் தலை குனிந்தார் ராமய்யா!

நாகை வழக்கறிஞரும், கழகப் பெரியவருமான டி.கே. விசயராகவலு, 28.12.64 அன்று இயற்கை எய்தினார்.

1965-ஆம் ஆண்டின் முதல் திங்கள் பெரியாருக்குத் துலாபார மாதமாகவே அமைந்ததோ? ஜனவரியில் இடைவெளியின்றிச் சுற்றுப் பயணம் செய்த பெரியாருக்குக் குளித்தலையில் எடைக்கு எடை பெட்ரோல், நக்கசேலத்தில் வெங்காயம், கோவையில் வெல்லம், சிதம்பரத்தில் காப்பிக் கொட்டை; பண்ணுருட்டியில் பிஸ்கட், அரகண்டநல்லூரில் மணிலா எண்ணெய், குடியாத்தத்தில் கைத்தறி நூல் நிறுத்து வழங்கப்பட்டன. எந்தப் பெரியாருக்கு அளிக்கப்படும் ஒரு சிறிய பொருளும் வீணாகாமல் நலிந்த மக்களுக்கு, நல்லமுறையில் பயன்படும், என்று நம்பி மக்கள் வழங்குகின்றார்களோ, அந்தப் பெரியார், அதற்கேற்பவே தமக்குத் தரப்பட்ட பெட்ஷீட்டுகளைத் தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கலெக்டர் வழியாக அனுப்பி வைத்தார், பொங்கல் பரிசாக! புயல் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க நினைத்துக் கொண்டிருப்பதாகப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அறிவித்ததும், பெரியார் மனமிக மகிழ்ந்து, அவர் படத்துடன் இச்செய்தியை “விடுதலை" முதல் பக்கம் வெளியிடச் செய்தார். தி.மு.க. சார்பில் 3,000 ரூபாயைக் கலைஞர் மு.கருணாநிதி 1.1.65 அன்று முதல்வரிடம் வழங்கினார். துர்காபூரில் அகில இந்தியக் காங்கிரசுக்குக் காமராசர் தலைமை தாங்கித் தமிழில் உரையாற்றினார். அதன் ஆங்கிலமொழி பெயர்ப்பு, உறுப்பினர்களுக்கு அச்சிட்டு வழங்கப்பட்டது. கேளம்பாக்கம் சுயமரியாதை இயக்கப் பெரியவர் வி. தி. பொன்னுசாமி, தமது 65ம் வயதில், 10.1.65 அன்று இயற்கை எய்தினார். தமது மூன்று பெண்களையும் வெவ்வேறு சாதி மாப்பிள்ளைகளாகத் தேடிக் கொடுத்துச் சாதி ஒழித்த தன்மான வீரர் இவரது மூத்த மருமகன் டார்ப்பிடோ ஜனார்த்தனம்!

“விடுதலை” பொங்கல் மலரில் “பெரியார் அகராதி" ஒன்று புதுமையுடன் பொலிந்தது. தெரிந்து கொள்ள வேண்டிய, அர்த்தமுள்ள சொற்களாகிய அவை, வருமாறு:- அரசியல் - பித்தலாட்டக்காரர்களின் பிழைப்பு, ஆத்மா. அயோக்கியர்களின் கண்டுபிடிப்பு-மன்னிப்புக்கு அப்பாற்பட்டது, இராமாயணம் - பார்ப்பனரின் புரோசீஜர் கோட், கற்பு- பெண்ணடிமை ஆயுதம், சாதி - மனிதனை மனிதன் இழிவு படுத்துவது, சமயம் சாதிக்கு வித்து, கடவுள்-சமயத்தின் காவலன், பார்ப்பான்· இம் மூன்றையும் படைத்த கர்த்தா, குருக்கள்-மோட்சலோகக் கைகாட்டி, கோயில் -அறிவு பணம் இரண்டையும் இழக்கும் இடம், சத்தியாக்கிரகம் - சண்டித்தனம், உண்ணாவிரதம்-தற்கொலைக் குற்றமுள்ள நோய், தியாகம் - அர்த்தமில்லாச் சொல், சோதிடம் - சோம்பேறிகள் மூலதனம், புராணங்கள்-புளுகு மூட்டைகள், புலவர்கள் - பழைமைக் குட்டையில் படிந்து ஊறிய பாசி, மோட்சம்-முடிச்சுமாறிகளின் புரட்டு, உற்சவம் - கண்ணடிக்கும் கான்பரன்ஸ், வக்கீல் - சேலைகட்டாத தாசி, வியாபாரி - நாணயமற்ற லாப வேட்டைக்காரர் எப்படி?

சம்பத்தின் “தமிழ்ச் செய்தி” ஏட்டின் பொங்கல் மலரில் “தமிழ் ஒரு நியூசென்ஸ், தமிழ்ப் புலவர்கள் சமூக துரோகிகள்“ என்று பெரியார், புதிதாகக் கட்டுரை ஒன்று வழங்கியிருந்தார். தமிழ்ப் புலவர்களும் பண்டிதர்களும் தமிழ்க் கலைஞர்கள்தான்! அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாதவாறு புராண இதிகாச நூல்களையே திரும்பத் திரும்பப் புகுத்தி வந்தார்கள். தமிழ் மொழியால் மக்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட எதுவுமே செய்யவில்லை - என்று கடுமையாகச் சாடியிருந்தார். அதேபோல, மதுரை நெடுமாறனின் “குறிஞ்சி” இதழில் சில கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார் பெரியார், அதன் பொங்கல் சிறப்பு மலரில்! மாணவர் அமைதியின்மைக்குக் காரணமென்ன என்ற வினாவுக்கு விடையளிக்க வந்த பெரியார்-அரசாங்கத்தின் பலவீனமும் தாட்சண்யமும் நம் மாணவர்களிடையே கட்டுப்பாடின்மையும் காலித்தனமும் பெருகுவதற்குக் காரணம் - என்றார். அதேபோலப் பெரியாரிசம் பொங்கல்மலர் கட்டுரையில், சமதர்மத் திட்டம் என்றால் எல்லா மக்களுக்கும், ஒன்று போல, ஒரே நேரத்தில் புகுத்தப்பட வேண்டும், என்று கருத்தறிவித்தார் பெரியார்.

16.1.65 அன்று சிதம்பரத்தில், பெரியாரின் நாய் காணாமல் போய், “விடுதலை”யில் அறிக்கை வெளியிடப்பட்டது. டேஷ் ஹவுண்ட் இனத்தைச் சேர்ந்த 6 வயதுள்ள டிட்டோ அல்லது மாதோர் என்ற பெயருடையது அது. சீர்காழித் தோழர்கள் மூலமாக ஒரு வாரத்திற்குள் அது திரும்பக் கிடைத்த பின்னரே பெரியாருக்குத் திருப்தி! 17ந் தேதி பெரியார் விழுப்புரத்தில் பேசும்போது, இந்தித் திணிக்கும் பிரச்சினைக்கே இப்போது இடமில்லை - என்று குறிப்பிட்டதைப், பெரியார் இந்தியை எதிர்க்கவில்லை என்ற பொருள்பட, “இந்தியன் எக்ஸ்பிரஸ்” மிகஅவசரமாகச் செய்தி வெளியிடவும், 19-ந் தேதி “விடுதலை”யில் அந்தச் செய்தியை அப்படியே வெளியிட்டுத் தாம் பேசியதையும் குறிப்பிட்டு, “இப்படித் திசை திருப்புவது அசல் அக்கிரகாரத்தனமல்லவா?” என்று பெரியார் கேட்டார்.

26.1.1965 அன்று இந்தி அரியணை ஏறும் நாள் ஆட்சி மொழி என்கிற அந்தஸ்து பெறும் நாள், அது. நமக்குத் துக்க நாள். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி பறக்க விடுங்கள், சுமார் 1,000 ஊர்களில் மட்டும் நமது எதிர்ப்பினைக் காட்டினால் போதும் என்று அண்ணா கூறியிருந்தார். இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாணவர் நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, 25ந் தேதியே மறியல் செய்வதாக மாணவர் தீர்மானித்திருந்தார்கள். சென்னையிலும் மதுரையிலும் மாணவத் தலைவர்கள் அரசியல் சட்ட மொழிப் பிரிவுக்குத் தீ வைத்தார்கள். ஆறு பேர் தீக்குளித்தும் இரண்ட பேர் நஞ்சருந்தியும் தமிழகத்தில் இந்தியை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தார்கள், உலக வரலாற்றில், மொழி காக்கும் போரில், இவ்வளவு அதிக விலை தரப்பட்டதில்லை !

‘தமிழ் தாழவும், தரங்கெட்ட இந்தி ஆளவும், தருக்கர் தர்பார் ஆணையிடுகிறது. உன் கண் எதிரே கன்னித் தமிழுக்கு ஆபத்து சூழ்கிறது’ என்று “முரசொலி”எழுதியதையும் ராஜாஜி, 'இந்தியால் தமிழ் கெடாது என்று முரண்பாடாக எழுதியதையும், “விடுதலை” எடுத்துக் காட்டியதோடு, 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாட்களும் தொடர்ந்து, “இந்தி எதிர்ப்பல்ல; காங்கிரஸ் எதிர்ப்பே !“ என்று தலையங்கமும் தீட்டியது. 25-ந் தேதி பெரியாரே, “பண்டிதர்களே! என்னைக் காயாதீர்கள், திருந்துங்கள்!” என்று ஒரு தலையங்கக் கட்டுரை தீட்டி, பாரதி பாடலில் “மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற பகுதியைத் தமக்கு ஆதரவாக்கியிருந்தார். அப்பாவி மாணவரைத் தூண்டி விட்டு, நாடெங்கும் அராஜகமும் காலித்தனமும் நடைபெறுவதாக, “விடுதலை" கூறியது. முன்னதாக, 25ந் தேதியே தி.மு.க. தலைவர்கள் கைதானார்கள். கருப்புக் கொடி ஏற்றப்பட்ட வீடுகளில் சுதந்திரங் காக்கும் படையினர் கலவரம் செய்து, போலீசார் துணையுடன் கொடிகளை இறக்க முயன்றார்கள். அப்படி ஒரு முயற்சியில், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன், நடிகமணி டி.வி. நாராயணசாமி இருவரும் வழக்குக்கு ஆட்பட்டனர். முதலமைச்சர் பக்தவத்சலம், உரிய முன்னேற்பாடுகள் செய்யாமல், அலட்சியமாயிருந்து விட்டுப், பின்னர் அடக்கு முறையை அவிழ்த்து விட்டார். போலீஸ் போதாமல், ராணுவமும் சுட்டது பிப்ரவரி 12-ல்.

1965 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 13 வரையில் தமிழகத்தில் நிலவிய நிலைமைக்கு வரலாற்று ஆசிரியர்கள் என்ன பெயர் சூட்டுவரோ- பெரியார், இதை எழுச்சி என்று ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை. மொழிக்காக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் என்றும் நம்பத் தயாராயில்லை. தமிழ் நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ரயில்களே ஓடாத நிலைமை இதற்கு முன்னுமில்லை, பின்னுமில்லை! ‘இந்தி ஒழிக’ என்று பொறிக்கப்படாத வாகனங்களே தெருக்களில் நடமாட முடியவில்லை ; சொல்லாத மனிதர்களே வீதிகளில் நடமாட முடியவில்லை ; பெரிய மனிதர்களையே காணோம்! இளைஞர்கூட அல்ல; சின்னஞ்சிறார்கள் நாட்டையே ஆக்கிரமித்து. ஆட்சி புரிந்தனர்! ராஜாஜியோ, அண்ணாவோ, மாணவர் கிளர்ச்சியைத் தூண்டவுமில்லை; இப்படி நடக்குமென எதிர்பார்க்கவுமில்லை! அரசினரே இந்நிலையை எதிர்பார்க்கவில்லையே!

“இந்தியைத் திணிப்பதில்லையென அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதி மொழியை அரசினரும் மீறாத போது, ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக், கண்ணீர்த் துளிகள் செத்த பாம்பை எடுத்து ஆட்டு கின்றனர்” என்று பெரியார் அரசாண்ட நல்லூரில் 1965 ஜனவரி 19-ம் நாள் பேசியது, பிப்ரவரி 1-ஆம் நாள் “விடுதலை”யில் வெயிடப் பட்டது. ஜனவரி 26 குடியரசு நாடான்று சென்னைக் கடற்கரையில் பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராசர், மத்திய துணை அமைச்சர் அழகேசன், தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம், அமைச்சர் வெங்கட்ராமன் ஆகியோர் “சட்டப்படி இந்தி கட்டாயமில்லை. இது தி.மு.க. தூண்டுதல்” என்று அபாண்டமாகக் குற்றஞ்சாட்டினர். சண்டிகாரில் பேசிய பிரதமர் சாஸ்திரி, ஆங்கிலம் நீடித்து வரும்போது வீண் கிளர்ச்சி ஏன்?" என்றார். உள்துறை அமைச்சர் நந்தா உறுதிமொழி தந்தார். பெங்களூரிலிருந்து காமராசர் “இந்திக்காரர்கள் அவசரப் பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்! ஆகையால் நேருவின் உறுதி மொழியை நாம் காப்பாற்றியே தீரவேண்டும்! அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.கழகம் இந்திப் பிரச்சினையைக் கட்சி நலனுக்கு உபயோகிப்பது வருந்தத்தக்கது" என்றார். காலவரம்பின்றி இங்கிலீஷ் நீடிக்க வேண்டும். இதற்குத் தமிழக அரசும் போராடும் - என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம் 5.2,65 அன்று.

“அடக்குமுறைதான் அராஜகத்திற்குப் பரிகாரம்” என்ற தலையங்கத்தில் 8.2.65 “விடுதலை”யில் பெரியார் எழுதினார்: - “அடக்கு முறையில்லாத ஆட்சி அநாகரிக ஆட்சி (Anarchism) யே ஆகும், ஜனவரி 26 அன்றைய தினம் கண்ணீர்த் துளிகளை லட்சியம் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்று அரசுக்குச் சொன்னேன். இல்லா விட்டால் கடினமான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னேன். இரண்டும் செய்யவில்லை. தேர்தலைப்பற்றி இப்போதே நீங்கள் கவலைப்பட வேண்டாம். சுதந்திரக் கட்சி, கண்ணீர்துளிக் கட்சி இரண்டையும் சட்ட விரோத மென்று தடை செய்யுங்கள். பத்திரிகைகளுக்கு வாய்பூட்டுச் சட்டம் போடுங்கள். அதே சமயம், இந்தி விஷயமாய் அரசாங்கத்தின் கொள்கை இன்னதுதான் என்று, தெளிவாக வெளியிடுமாறு காமராஜரை வேண்டுகிறேன்” என்பதாக,

இதற்குப் பிறகு பெரியாரது வேன் திருச்சியில் மடக்கப் பட்டதாகவும், சென்னையில் “விடுதலை” அலுவலகம் தாக்கப் பட்டதாகவும், செய்திகளும், வதந்திகளும் பரவின. இவ்வளவு நாள் பொறுத்துப் பார்த்துத் தமக்குச் சம்பந்தமில்லாவிடினும், நல்ல எண்ணத்தினால், கிளர்ச்சியைக் கைவிடுமாறு அண்ணா 10.2.65 அன்று வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து, “பூனை கோணியிலிருந்து வெளி வந்து விட்டது” என்று “விடுதலை” கேலி செய்தது. 10.2.65 “விடுதலை” முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், பெரியாரின் பயங்கரமான அறிக்கை ஒன்று வந்தது. உஷார் | கத்தியையும் பெட்ரோலையும் விட வேறு வகை இல்லை. என்னுடைய வேன் தாக்கப்படுகிறது. அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் கத்தியும், பெட்ரோல் டின்னும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நிலைமையைப் பார்த்து நான் மறுபடி சொல்லப் போவதை எதிர்பார்த்திருங்கள். இப்போது அடையாளம் கண்டு வைத்துக் கொண்டால் போதும்“ என்று அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது. அதற்கு மறுநாளே “பொறுத்திருங்கள், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்று அமைதிப்படுத்தி, ”நான் யாருக்கும் பயந்து கொண்டு இந்த 2-வது அறிக்கை விடவில்லை“ எனவும் பெரியார் கூறியிருந்தார். ஆயினும், அதே ஏட்டின் 2-ம் பக்கத்தில் ”என்னையே எச்சரிக்கிறார்கள்; அரசாங்கத்தின் யோக்கியதை அப்படியிருக்கிறது!‘’ என்று, கலெக்டரும் போலீஸ் சூப்பரின் டெண்டெண்டும் தம்மிடம் வந்து எச்சரிக்கை செய்ததையும் குறிப்பிட்டிருந்தார் பெரியார்

மார்ச் 7-ம் நாள் வரை அரசு எல்லாக் கல்விக் கூடங்களையும் மூடிவிட்டது. மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியமும், ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமாச் செய்தனர். பிறகு ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “பார்ப்பனர் சிப்பாய்க் கலகத்தைத் தூண்டி விட்டது போலவே இப்போதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டனர். ஏனென்றால் அடிபடுவது பார்ப்பானல்லவே!“ என்றார் பெரியார். தர்மபுரியில் இடைத் தேர்தலைத் தள்ளிப் போடுங்கள் என்று “விடுதலை” எழுதி, அவ்வாறே, 22.2.65 நடைபெற இருந்தது, 10.4.65க்குத் தள்ளிப் போடப் பட்டது. “விடுதலை”யில் பெரியார் பிறந்த நாள் விழாக்கள், துலாபாரக் காட்சிகள் புகைப்படங்களாகத் தினந்தோறும் வெளி வந்தன. “ஆட்சி மொழிச் சட்டத்தைத் திருத்திப் பயத்தைப் போக்க வேண்டும்“ என்ற காமராசர் வேண்டுகோளும், ‘காலித்தனத்தைப் படங்கள் போட்டுப் பத்திரிகைகள் தூண்டின’ என்ற பக்தவத்சலம் ‘கண்டு பிடிப்பும்’ ”விடுதலை“யில் முதல் பக்கத்தின் ஏழு காலத் தலைப்புச் செய்திகள். “16.2.65 அன்று மு.கருணாநிதி கைது. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எனத் தெரிகிறது” என்று “விடுதலை” ஏடு அறிவித்தது. “திருச்சியிலும் கண்ணீர்த் துளி சட்டமன்ற உறுப்பினர்களும், தோழர்களும் கைதாயினர்; கிளர்ச்சியினால் ரயில்வேக்கு 7 கோடி நட்டம்" என்றும் பிரசுரித்தது.

“சுதந்திரப் போராட்டத்திற்குப் பயந்து ஆங்கிலேயன் வெளியேறவில்லை . உலகயுத்தம் காரணமாய் இந்தியாவுக்கு விடுதலை தந்து விட்டுச் செல்ல நினைத்தான்” என்று ராஜாஜி சென்னை கோகலே ஹாலில் 8.2.65 அன்று பேசியது கண்டு, “ராஜாஜி உண்மையைக் கக்கி விட்டார்!” என்றார் பெரியார்! ஏன் எனில், இதுவே பெரியார் கருத்தல்லவா? பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 4,5 கூட்டங்களுக்கு மேல் பெரியார் வெளியில் பயணம் மேற்கொள்வில்லை, திருச்சியில் “திராவிடமணி” இதழ் நடத்திய டி.எம்.முத்து 18.2.65ல் காலமானார்.

23.2.65 அன்று அறிக்கையில், தமிழ்நாடு மாணவர் கவுன்சில், நடந்த சம்பவங்களுக்கு வருத்தந் தெரிவித்து, இனி, உள்நாட்டு நிலவரம் சரியில்லாததை முன்னிட்டுக் கிளர்ச்சி நிறுத்தப்படுகிறது. முதியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துவிட்டது. “நான் மறியலில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாணவர்களைத், தடையை மீறாதீகள் என்று சொல்லத்தான் போனேன்” என்று குன்றக்குடி அடிகளார் தன்னிலை விளக்கம் தந்திருந்தார். இங்கிலிஷே
இணை மொழியாக நீடிக்கும் என்று பிரதமர் சாஸ்திரி கூறினார். “சுதேசமித்திரன்”, “மாலை முரசு”, “தினத்தந்தி”, “முரசொலி ‘’, ”மாலைமணி”, ஆகிய பத்திரிகைகளின் மீது அரசு வழக்குத் தொடர்ந்தது. “மாலைமணி” இளங்கோ , முரசொலி மாறன், தினத்தந்தி டி.ஆர, பீம்சிங் கைதாயினர். மத்திய அரசு உபரி பட்ஜெட்டும், தமிழக அரசு புதுவரியில்லாத பட்ஜெட்டும், இந்த ஆண்டுக்குச் சமர்ப்பித்தன.

“சர்க்காருக்கு நல்ல படிப்பினை” என்று 2.3.65ல் பெரியார் “விடுதலை” தலையங்கம் தீட்டினார். இப்போது கட்டாய இந்தி கிடையாது கட்டாய இந்தி நுழைந்த போதே எதிர்த்தவன் நான்தானே? இந்தியும் வேண்டும், ஆங்கிலமும் வேண்டும் என்று நான் சொல்லவில்லையே! அறிஞர் அண்ணாத்துரையும் நாவலர் நெடுஞ்செழியனும் முத்தமிழ்க் காவலரும்தானே சொல்லி வருகிறார்கள் - இந்தி அரசியல் மொழி என்ற நிலைமையிலிருந்து இனி அதை எடுக்க முடியாது! ஆங்கிலமும் இருக்கும் என்ற உறுதி மொழியைப் பெறலாம். ஆனால் 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள் இவ்வளவு கலவரம் செய்தும் கூட அவர்களில் யாருமே இப்போது கைதாகவில்லையே?“ என்றார் பெரியார். அடுத்த நாளும், ”நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பீர்களானால், சொல்கிறேன்; 'இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன்! ஆனால், நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சினை அல்ல; அரசியல் பிரச்சினைதான்! பதவியில் இருந்தபோது இந்தியைப் புகுத்திய ஆச்சாரியார், இப்போது பதவி கிடைக்காததால் எதிர்க்கிறார் என்னைப் பொறுத்த வரையில் காமராசர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்றால், காமராசர் ஆட்சி இந்தியை ஒழித்துவிடும் என நம்புவதால், முதலில் காமராசர் ஆட்சி நிலைக்கவே பாடுபடுவேன்!“ என்று ”என்னைப்பற்றி“ எனுந்தலைப்பின் கீழ், தலையங்கம் எழுதினார் பெரியார் ”விடுதலை"யில் ,

மார்ச் 6ம் நாள் “கேரவன்” இதழ் பெரியாரின் கருத்தையே ஆதரித்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கான சூழ்ச்சியே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, என எழுதிற்று. மாணவர்கள் மீது தொடரப்பட்ட எல்லா வழக்குகளையும் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. முன் கூட்டியே திட்டமிட்டிருந்தால் அரசு நாசத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று பெரியார், மார்ச் 8-ல் கருத்தறிவித்தார். அடுத்த நாள் முதல் “விடுதலை”யில் பெரியாரின் மூன்று பெட்டிச் செய்திகள் கவர்த் திழுத்தன. “ஓ தமிழே! உனக்கு ஏன் 247 எழுத்து? 30, 35 போதுமே என்று ஒன்று; ”ஹே தமிழா! நீ சுத்தத் தமிழனாயிருந்தால் இனி... பத்திரிகையைப் படிக்க மாட்டேன் என்று கையெழுத்துப் போட்டு அனுப்பு. நான் அதற்கு நாள் குறிக்கிறேன்” என்று இன்னொன்று: “சிந்தி! சிந்தி! நீ தமிழன் என்று சொல்லிக் கொள்ள உன் நடத்தையில், உன் கடவுளில், உன் மதத்தில் உள்ள தனிக்குறிப்பு என்ன?” என மற்றொன்று!

வைக்கம் வீரர் பெரியாரைக் கேரளா மீண்டும் வரவேற்று, அழைத்துச் சிறப்பித்துப் பாராட்டிப், போற்றிப் புகழ்ந்தது. 11.3.65 தேன் கார்த்திகைப் பள்ளியில், டி.கே. மாதவன் நினைவுக் கல்லூரிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டினார் பெரியார். தலைமை தாங்கியவர் ஈழவ சமுதாயத் தலைவரும், அண்மையில் கவிழ்க்கப் பட்டவருமான கே. சங்கர், முன்னாள் முதலமைச்சர்! எஸ்.என். டி. பி. யோகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட பெருமக்கள் பெரியாரை மிகவும் கொண்டாடினர்; ஆங்கிலத்தில் பெரிய வரவேற்பு மடல் வழங்கினர்; தென்காசி வந்து அழைத்துச் சென்று சிறப்புச் செய்தனர். கேரளாவில் இடைத் தேர்தல் நடந்து, அதிக இடம் பெற்ற இடது சாரிக் கம்யூனிஸ்டும் அறுதிப் பெரும்பான்மை பெறாமையால், மீண்டும் 25.3.65 அன்று. புதிய சட்டசபையும் கலைக்கப்பட்டு விட்டது ஜனாதிபதியால்!

பெரியார் மார்ச் மூன்றாம் வாரத்தில் சென்னையில் பேசினார். “சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட நாசங்கள், இந்த ஆட்சியை ஒழிப்பதற்கான சதியே ஆகும்! இந்த ஆட்சி போய் விட்டால், அடுத்தது பார்ப்பன ஆட்சிதானே வரும்? சோஷலிச எதிரிகளால்தான், மாணவர்கள் அவர்களுக்குப் பகடைக் காய்களாக ஆனதால்தான், இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டன! இதை எழுச்சி என்று சொல்வது முட்டாள்தனம்! கோழைத்தனமாகும். இதில் வெற்றி பெற்றுவிட்டதாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நினைக்கிறார்கள். இது வெற்றியா? வெட்கக்கேடான தோல்வியா? என்று சிந்திக்க வேண்டும்! இவ்வளவு அக்கிரமங்களையும் செய்த பார்ப்பானோ, பத்திரிக்கைக் காரர்களோ, பணங் கொடுத்துத் தூண்டிவிட்டவர்களோ அகப்படாமல் தப்பித்துக் கொண்டார்கள்! கூலிக்குச் செய்தவர்களைத் தேடிப் பிடித்து வருகிறது இந்த வீர அரசாங்கம். அப்பாவித் தமிழர்களே! பார்ப்பான் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளுங்கள் பாவம், கருணாநிதி மட்டும் மாட்டிக்கொண்டார்! அவர் தோழர்களே, அவரை மாட்ட வைத்திருப்பார்கள்.

இப்போது சங்கராச்சாரியார்கூட, ஆயுதம் வைத்துக் கொள்வது தற்காப்புக்காக அவசியந்தான், என்று சொல்லி விட்டார். காங்கிரசையும் நாம் ஏதோ பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர நம்ப முடியாது என்பது, அண்மையில் நடந்த சம்பவங்களால் அறிந்து கொண்டு விட்டோம் என்று இந்தக் கருத்துகளைப் பேசியும் எழுதியும் பெரியார் வெளிப்படுத்தினார். தொடர்ந்து, தர்மபுரி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசவும் புறப்பட்டு விட்டார்.

26.5.6 அன்று மதுரை முத்து குழுவினர் ஐவருக்குச் சிறைத்தண்டனை. மு.கருணாநிதி, என்.வி. நடராசன் இருவருக்கும் ஆறுமாத தண்டனை செஷன்ஸ் கோர்ட்டில் ஊர்ஜிதமாயிற்று. கருணாநிதி வேறு வழக்கில் பாளையங் கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். “கருணாநிதியை விடுதலை செய்“ என்று ஒரு சுவரொட்டியும், பக்கத்திலேயே, “கொலை கொள்ளை தீயிடல் அரசியலாகாது, அறமும் அன்று, குற்றம் புரிந்தோரை விடாதே!” என்று வேறொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன- என்று “விடுதலை” செய்திகளை வெளியிட்டது!

“தருமபுரி வோட்டர்களே, உஷார்! கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்! - கண்ணீர்த்துளிகள் கூட்டுச் சதிக்கு இடந்தராதீர்!“ என்று ”விடுதலை“ எச்சரித்தது. “1963ல் வல்லவரே! நல்லவரே! வழி காட்டுங்கள்! என்றார்கள்” என்றும் “விடுதலை” சுட்டிக் காட்டியது. தர்மபுரியில் 35, 863 வாக்குகள் பெற்றுக் காங்கிரஸ் வென்றது; 24,000 வாக்குகள் பெற்றுத் தி.மு.க. தோற்றது. பெரியாரும், காமராசரும், சம்பத்தும் பத்திரிகைகளைச் சாடினார்கள்! பெரியாரோ- “தர்மபுரி ஜஸ்டிஸ் கோட்டையாகும். அதனால்தான் ஜெயித்தது. காங்கிரஸ் காரர்களே! மூட நம்பிக்கைகளை ஒழித்திடுங்கள் நெற்றியைச் சுத்தப்படுத்துங்கள்! பகுத்தறிவில்லாமல் சமதர்மம் நிலைக்காது!” என்றார். “பார்ப்பானை பிராமணன்! என்று சொல்கிறவன் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது தன்னைக் கீழ்மகன், நாலாம் சாதி என்று ஒப்புக் கொண்டவனாக இருக்க வேண்டும்!” “கோயிலுக்குள் உருவச்சிலை இருக்கும் (கர்ப்பக் கிரகம்) இடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படாதவன், “சாமி கும்பிடக் கோயிலுக்குச் செல்வது, தன்னை இழி பிறவி, கீழ்மகன் என்பதை ஏற்றுக் கொள்வதாகும்" இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டுமாறு, பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆண்டின் வேலைத் திட்டமாக, ராமநவமியன்று, கம்பராமாயணம் என்று ஒரு காகிதத்தில் எழுதித் தீயிட்டுச் சாம்பலை விவரத்துடன், “விடுதலை“ அலுவலகத்திற்கு அனுப்புமாறு, பெரியார் ஆணையிட்டார், ஏப்ரல் 8, 9தேதிகளில்! அதன்படியே, சுவர்களில் சாம்பல் பொதித்துப் பத்தாந் தேதி முதல், “விடுதலை” அலுவலகத்துக்கு அஞ்சல் வந்து குவிந்தது தமிழ்நாடு எங்கணுமிருந்தது! “வருணாசிரம தர்மம் தழைக்கிறது எப்போதோ, அப்போதுதான் பாரதம் ஷேமம் அடையும்” என்று சங்கராச்சாரியார் கூறியதை, மறுத்துக் கண்டித்து, “இது அறிவின்மையா? ஆணவமா?“ என்று பெரியார் கேட்டார். “ஐகோர்ட்டும் அரசாங்கமும்” என்ற தலையங்கத்தில் பார்ப்பனரல்லாத ஜில்லா ஜட்ஜ், தலைமை மாகாண நீதிபதி ஆகியவர்களின் பெயர்களைக் குறிப்பீட்டு, “ஏன் இவர்களை ஐக்கோர்ட் ஜட்ஜாகப் போடக் கூடாது?” என்றே, வெளிப்படையாகக் கேட்டார் பெரியார்.

தஞ்சாவூரில் காய்கனி மார்க்கெட்டுக்குக் காமராசர் மார்க்கெட் என்று ஏப்ரல் 16ம் நாள் பெரியார் பெயரிட்டார். கல்லக்குறிச்ரியில் 18ம் நாள் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. “விடுதலை“ ஏட்டுக்குச் சந்தா செலுத்தும் நிகழ்ச்சி, விமரிசையாக அங்கு நடைபெற்றது. பெரியாருக்கு வெல்ல துலாபாரமும் செய்யப்பட்டது. இந்த மாதத் திட்டத்தில் நெல், அரிசி, மணிலா, காய்கறி, கண்ணாடிக் குவளைகள், உப்பு, வெங்காயம் ஆகியவை பல ஊர்களிலும் பெரியாரின் எடைக்குச் சமமாக அன்புடன் அளிக்கப்பட்டன. 24 ராணிப் பேட்டை , 26 திருவண்ணாமலை நகராட்சிகள் பெரியாருக்கு வரவேற்பளித்தன. சென்னை மாநகராட்சியில் ஊழல்கள் நடப்பதாகவும், கண்ணீர்த்துளிக் கவுன்சிலர்களே தங்கள் நிர்வாகத்தைக் குறை கூறுவதாகவும், “ விடுதலை”யில் அடிக்கடி சேதிகள் வந்தன. நீண்டகால இயக்கப் பிரமுகர் வேலூர் ஈ.திருநாவுக்கரசு 3.5.1965 மாலை 7.30 மணிக்கு மறைந்தார். “விடுதலை” துணைத் தலையங்கம் தீட்டி மரியாதை செய்தது.

திருநெல்வேலி நகரமன்றம் மே 8-ம் நாள் பெரியாருக்கு வரவேற்பளித்த போது, “அரசியல் கட்சிகளால் நகர நிர்வாகம் பாழாகிறது; நம்முடைய மக்கள் இன்னும் ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லை “ என்று பெரியார் கருத்துக் கூறினார். கும்பகோணம் திராவிடர் கழகத் தோழர்களும், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி, கா.பா. பழநி ஆகியோரும் முயன்று, 5,000 ரூபாய் செலவில், பெரியாருடைய வேனைப் புதுப்பித்துத் தருவதாக முடிவெடுத்து, அவ்வாறே, மே இறுதியில், பெரியார் பிறந்தநாள் விழா எடுத்து, அங்கு வண்டியை அளித்தனர். காமராசர் திருச்சியில், “தகுதி திறமை பேசுகின்ற மோசடி ஒழிய வேண்டும்” என்று தீவிரமாகப் பேசினார். தமிழ் நாட்டின் 9 மாவட்டங்களில் 18 நாட்களில் 1,600 மைல் சுற்றுப் பிரயாணம் செய்து சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காமராசருக்கு மகத்தான வரவேற்புத் தரப்பட்டது. பெரியாருடைய பிரச்சாரப் பயிற்சி வகுப்பு நடத்தும் முறையில், மேலும் சிறிது அபிவிருத்தியுள்ள திட்டம் ஒன்று வகுக்கப் பட்டிருப்பதாக, வே.ஆனைமுத்து அறிவித்தார். அதன் பிரகாரம், பெரியாரவர்கள் திருச்சி மாவட்டத்தில், ஜூன் 18 முதல் 28 முடிய சுற்றுப் பயணம் நிகழ்த்தும் போதே, சில குறிப்பிட்ட ஊர்களில், பகற் பொழுதில், பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள் என்பதாகும்.

ஜூன் மாதம், பெரியாரைத் திருச்சியில் “ஆனந்த விகடன் துணையாசிரியர்கள் சாவி, மணியன் இருவரும் பேட்டி கண்டு, கட்டுரை வெளியிட்டனர். அதில் வ.வே.சு. அய்யரைப் பற்றிப் பெரியார் குறிப்பிட்ட சில விவரங்களை மறுத்து, அய்யர் மகனும், இன்னொருவரும் தெரிவித்த கருத்துக்களையும்; அவற்றுக்குப் பெரியார் அளித்த விளக்கத்தையும் “ஆனந்தவிகடன்” பிரசுரித்திருந்தது. அவற்றிலிருந்து, பெரியாரின் கருத்து சரியெனவே நிரூபணமாயிற்று. பெரியாருக்குத் திண்டுக்கல் தோழர்கள் தங்கள் பகுதி விளை பொருளான சிறுமலைப் பழத்தைத் துலாபாரம் செய்தனர். “ஆட்சியினரும் சமதர்மத் திட்டத்துக்கு எதிர்ப்பாகி வருகின்றனர்! சம உரிமை வழங்கப்படாவிடில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் முன்னேறுவது எங்ஙனம்?” என்று பெரியார் ஆத்திரத்தோடு கேட்டார். பக்தவத்சலம் ஆட்சியில், பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் பெற்றுப் படிப்படியே உயர்ந்து வருவதைக் கண்காணித்ததால், இப்படிச் பேச நேரிட்டது! செக்ரெடேரியட்டா? அக்ரகாரமா?“ என்ற ”விடுதலை" ஜுன் 19ந் தேதியில் தலையங்கமே எழுதியிருந்தது.

“கம்பனும் இராஜாஜியும் ஒரே தன்மையர்கள் - கம்பன் பார்ப்பன அடிமை, தமிழர் துரோகி; இராஜாஜி தமிழர் விரோதி; தமிழர் துரோகி; இவர்கள் இருவரையும் பாராட்டுகின்ற தமிழனே கீழ்மகனாக்கப்படுகிறான்“ என்று வேதனையோடு எழுதினார் பெரியார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராயிருந்து கொண்டு, பல்லாற்றானும் தமிழர்க்கு இன்னல் விளைத்து வந்த சச்சிவோத்தமரைக் கண்டித்து, ”சர். சி. பி. யின் கரை கடந்த அக்கிரமம்“ என்று தலைப்பிட்டுப் பெரியார், 29.6.65 ”விடுதலை“யில் எழுதினார். முதலமைச்சர் கோயில் திருப்பணிகளில் அதிகக் கவனம் செலுத்துவது கண்டு, மிக்க எரிச்சலுடன், “பக்தவத்சலம் கோயில் குட்டிச் சுவர்களுக்குச் சாயம் பூசி வருகிறார். நாமெல்லாம் என்ன எருமை மேய்க்கிறோம் என்று நினைக்கிறாரா முதன் மந்திரியார் துணிந்து விட்டார்! நமக்கென்ன? இனி நாமும் துணிவோமே!” என்று, கும்பகோணம் கூட்டத்திலேயே, பெரியார் தெரிவித்த கருத்துக்கிசைய, “விடுதலை”யும் "முதல் மந்திரியின் திருப்பணி” என்ற தலையங்கம் தீட்டிற்று.

கரூரில், கவிஞர் தஞ்சை வாணன் எழுதி, சிவாஜி கணேசன் நடித்த ‘களங்கண்ட கவிஞன்’ நாடகத்துக்குப் பெரியார் தலைமை தாங்கி, 21.6,65 அன்று பாராட்டிப் பேசினார். அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் நடந்த பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளில் பேசுகையில், இந்த ஆட்சியைத் தட்டிக் கேட்க நமக்குத் தானே உரிமை உண்டு? தவறான பாதையில் போகத் தொடங்கி விட்டது; இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்த மாதம் மாநாடு கூட்டிக் கிளர்ச்சி துவக்க முடிவு செய்வோம் என்று முழங்கினார் பெரியார். “தகுதி திறமை பேசும் அயோக்கியத்தனம்“ என்ற தலைப்பின் கீழ், ”விடுதலை“யில் இரண்டு நாள் தலையங்கம் எழுதினார். ரெவின்யூ அதிகாரிகளிடையே பாகுபாடு பற்றி விளக்கினார். ”சாதாரண தாலுக்காபீஸ் குமாஸ்தா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், கிரஸ்ததார், தாசில்தார், டிப்டி கலெக்டர் ஜில்லா கலெக்டர் என்று படிப்படியே உயர்ந்து வந்து, சுமார் 25, 30 வருட அனுபவமும், ரெவின்யூ சர்வே, அக்கவுண்ட் ஆகிய எல்லாத் துறைகளையும் கரைத்துக் குடித்து விட்டு வருகிறவரைவிட, எப்படியோ, யாரையோ பிடித்து, எங்கோ பாஸ் செய்து விட்டு, நேரே ஐ.ஏ.எஸ். ஆக வருகிற பச்சகானாக்கள் (சிறு பிள்ளைகள்) எப்படிச் சிறந்தவர்கள் ஆக முடியும்?“ என்று விவரமாகவே கேட்டார், பெரியார்! “விடுதலை”யில், கிறிஸ்துவர்களுக்கு எண்ணிக்கை மீறிய உத்தியோகச் சலுகை தரப்படுவதைக் கண்டித்து எழுதியதைச் சுட்டிக் காட்டி, தூத்துக்குடி காங்கிரஸ் எம்.எல்.சி.யான ஜே. பொன்னுசாமி வில்லவராயர், கிறிஸ்துவர்கள் அந்நியர்களல்லவே, என்று கடிதம் எழுதியிருந்தார். அதையும் பிரசுரித்து, 22.6.65 அன்று, “விடுதலை” ஆசிரியர் பதிலும் - “அதாவது, யாராயிருந்தாலும் அவரவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்துக்கு மேல் அனுபவித்து வருவதை இடித்துத் காட்டுவதே எங்கள் பணி. அதை நாங்கள் சரியாகவே செய்து வருகிறோம்" என்று வெளியாகியிருந்தது.

பெரியாரின் பேச்சுக்கு உடனடிப் பயனாக, இந்தக் கல்வியாண்டில், தமிழகத்தில் 110 புதிய உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுக் கல்வி நீரோடை தங்குதடையின்றிப் பொங்கிப் பரவியது, மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு பி.யூ.சி.க்கு 7,000 இடங்கள் என்ற பூரிப்பான செய்தி தரப்பட்டதையடுத்து, சென்னைப் பல்கலைக் கழகத்தைப் பாராட்டிய “விடுதலை” இதற்கு முரணான போக்கைக் கையாளும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் கண்டிக்கவும் தவறவில்லை . 5 லட்சம் ரூபாய் பெரியார் வழங்கிட, இந்த ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி திருச்சியில் துவங்கப் படுவதற்கான சூழ்நிலைகள் தோன்றின. மூன்றாவது பல்கலைக் கழகம் அமையும் அறிகுறிகள் தென்பட்டதால், அது அமைவதற்கு ஏற்ற இடம் திருச்சிராப்பள்ளிதான், என்று பெரியார் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. இடம் 350ல் இருந்து 400 என ஆக்கியதால், சர்.சி.பி. பாராட்டப் பெற்றார்.

சென்னையில் நடைபெற்ற நீதித்துறைப் பெரியோர்களின் கருத்தரங்கு ஒன்றில், சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்க ஒரு சட்டம் தேவை என்ற கருத்து முன்னிடம் பெற்றதை ஒட்டி, “விடுதலை"யும் அரசினரை வலியுறுத்தியது. மேலும், வகுப்புவாரி உரிமை நம் பிறப்புரிமை; அதில் கைவைக்காதீர்கள், என்றும் அரசை எச்சரித்தது. “கடவுள் நம்பிக்கை ஒழிந்தால், சாதியும் தானே ஒழியும்!” என்றார் பெரியார். “ராஜாஜி புராணக் கருத்துகளில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். அதை விட்டு விட்டு, அவர் எங்களுடன் சேரவில்லை. அது போலவே நாங்களும் எங்கள் கொள்கையை விட்டு விட்டு, அவர் கருத்தை ஏற்றுக் கொண்டு விடவில்லை” என்பதாக, 11.7.65-ல் அண்ணா சொன்னார்: ஆறுதலான செய்தி! பெரியாரின் “தகுதி திறமை பேசும் அயோக்கியத்தனம்” என்ற தொடர் தலையங்கத்தின் 3-ம் பகுதியில், பணம் கொடுத்து, மார்க் வாங்கிப் பாஸ் செய்கிற மோசடி பற்றிப் பெரியார் விளக்கியிருந்தார்.

“காமராசர் பல்லாண்டு வாழ்க” என்று 15.7.65 அன்று, அவரது 63- வது பிறந்த நாளில், “விடுதலை“ வாழ்த்துக் கூறியது. “திருச்சியில் 1,26,000 ரூபாய் வழங்கியதைப் பெற்றுக்கொண்டு, ”காங்கிரசை முறியடிக்க யாராலும் முடியாது மற்றக் கட்சிகளிடம் ஒரு திட்டமும் இல்லையே!” என்றார் காமராசர். “கண்ணீர்த் துளிகளுக்கு ஆட்சி நடத்த யோக்கியதை ஏது? அதனால் இந்த முறையும் காங்கிரஸ் வெற்றி உறுதிதான்!” என்று எழுதினார் பெரியாரும் சம்பத்தும் சுற்றுப் பயணங்கள் தொடர்ந்தார். காமராசர் சமகர்மப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டும் அகில இந்தியக் காங்கிரசுக்குத் தலைவராகக் காமராசரே நீடிக்க வேண்டும், என்ற கருத்து பலமாக இருந்ததால், அதற்கேற்பக் காங்கிரசின் விதிகளைத் திருத்த முயன்ற போது, பெங்களூரில், மொரார்ஜி தேசாய் தமது மனச்சாட்சி இடத்தரவில்லையென மறுப்புத் தெரிவித்தார். மொரார்ஜி பார்ப்பனரானதால், துரோக புத்தியும் பழி வாங்கும் உணர்ச்சியும் கொண்டிருப்பதாகப் பெரியார் எடுத்துரைத்தார்.

தம்முடைய மணிவிழாவில், பல்வேறு நல்ல பணிகளுக்காகப் பத்து வட்சம் ரூபாய் வழங்கிய செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையச் செட்டியார் அவர்களுக்குத் திருச்சியில் ஒரு விழாவில் பெரியார் பொன்னாடை போர்த்தினார். பெரியாரும் மணியம்மையாரும் தோழர்களுடன் சென்னையில் ராஜா சர் இல்லம் சென்று, அவருக்கு நேரில் வாழ்த்துக் கூறினார்கள். 2.8.1965 “விடுதலை”யில் பெரியார் மிக்க மனவருத்தத்துடன் நமது முதல்வர்' என ஒரு தலையங்கக் கட்டுரை தீட்டினார். "எஸ். எஸ். எல்.சி. தேறியவர்கள் எல்லாருக்குமே கல்லூரியில் இடந்தரமுடியுமா? என்று நமது முதலமைச்சர் கேட்டாராம்! எந்த நாட்டிலும் ஜாதிகள் இல்லையே? இங்கு எப்படியும் பார்ப்பான் 100க்கு 100 இடம் பெற்றுவிடுவானே? நம்மவனுக்குத்தானே இடம் கிடைக்காது? இமய உச்சிக்கும், பசிபிக் ஆழத்துக்கும் ஒப்பிட முடியுமா? இந்த மாகாணத்தில் வருடந்தோறும் கல்விக்காகச் செலவழிக்கிற 40 கோடி ரூபாயில், இந்த நாட்டுக்கு உரியவனுக்குப் பங்கு இல்லையா? அரசாங்கம் உடனே ஒரு சுற்றறிக்கையாவது விடவேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதலுரிமை கொடுத்துவிட்டு, மற்றதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று. நமது முதல் மந்திரியார் செய்வாரா? அவரோ மேல் ஜாதி"

தொடர்ந்து பெரியார் எழுதி வந்தார்; சமுதாய நீதியை வழங்கித், தற்காலக்கல்வி நெருக்கடியைத் தீருங்கள் என்று. “காங்கிரஸ் ஜாதியை ஒழிக்கிறது, பணக்காரனை ஒழிக்கிறது; அப்பேர்ப்பட்ட காங்கிரசை ஒழிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் விபீஷணராக இருக்கிறது. உழவர் கட்சி, குடி அரசுக் கட்சி, முத்து ராஜு கட்சி, நாம் தமிழர், தமிழ் அரசு, இடதுசாரி கம்யூனிஸ்டு, ஆச்சாரியாரின் கட்சி, வியாபாரிகள் கட்சி இவை அத்தனையும் சேர்ந்து காங்கிரசை பலவீனப் படுத்துவது சமூகத் துரோகமல்லவா?” என்று பெரியார் வினவினார். “மரியாதைக்குரிய குன்றக்குடி அடிகளாரைக் கோர்ட்டுக்கு வரச்சொல்லி 500 ரூ. அபராதம் போடுவதா? தமிழன் ஆட்சியே தமிழர்க்குக் கேடாவதா? பதவி முழுவதும் பார்ப்பனுக்கா? வகுப்புரிமை பெற இயலாதென்றால் இந்திய யூனியனிலிருந்து விலகுங்கள். தமிழகம் பிரிந்தாலன்றிக் குறைதீர வழியில்லை. மதவெறியுள்ள ஆட்சியில், சமதர்மம் எப்படி வரமுடியும்? இந்த மந்திரிகளே, எல்லாரும் தகுதியற்ற மந்திரிகள்! இந்த அரசாங்கமே நமக்குத் தகுதியில்லை !” - ஆகஸ்ட் 10 முதல் 16 வரை சென்னையின் பல முக்கிய பேட்டைகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பெரியாரின் முழக்கம் இவ்வாறுதான் இருந்தது!

“குடும்பக் கட்டுப்பாடோ, கருத்தடை செய்வதோ இயற்கைக்கு மாறானது; சுயக் கட்டுப்பாடுதான் தேவை என்று ராஜாஜியின் பிற்போக்கு வாதத்தைச் சாடியது ”விடுதலை" கண்ணீர்த் துளிக் கட்சியைச் சார்ந்த நடிகர்களான எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி ஆகியோர் மீது நடந்த வழக்கில், 100 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதச் சிறைவாசம் விதிக்கப்பட்டது. இன்னொரு நடிகரான எம்.ஜி. ராமச்சந்திரன் 8.8.65 அன்று பெரியார் திடலில் நடந்த காமராசர் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் கலந்துகொண்டு, காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி என்றார். பெரியாரையும் பாராட்டினார். மலேயாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சிங்கப்பூர் தனி நாடாகப் பிரகடனம் செய்து கொண்ட நிகழ்ச்சி, ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி தந்தது! அறிஞர் அண்ணா கீழ்த்திசை நாடுகளில் வெற்றிகரமான ஒரு சுற்றுப் பயணம் சென்று 21.8.65 அன்று குதூகலத்துடன் திரும்பினார்.

நாகப்பட்டினத்தில், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் கூடி, பெரியாரின் 87ம் பிறந்த நாளில், ரூ.40,000 நிதி திரட்டி உதவுவதெனத் தீர்மானித்தது. திருச்சி காஜாமலையில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி 24.8.65 அன்று தமிழக முதல்வர் பக்தவத்சலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 54 லட்சம் ரூபாய் பணம் உதவிய கல்வி வள்ளல் பெரியாருக்கு, முதல்வர் பொன்னாடை போர்த்தினார். பெரியாரைப் பேசச் சொல்லவில்லை. கல்வாரி பிரின்சிபால் கமலக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் சொக்கலிங்கம் தலைமை ஏற்றார்.

“இந்திய அரசியல் சட்டம் மோசடியானது. இந்திய அரசியல் சட்டம் பித்தலாட்டமானது. தமிழர்களுக்குத் திராவிட மக்களுக்குத் துரோகமானது. இந்திய அரசியல் சட்டம் யோக்கியமற்ற தன்மையானது. இதை இயற்றிய அரசியல் நிர்ணயசபை, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. அரசியல் சட்டம் இயற்றுகின்ற காரியத்துக்காகவும் அது தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல! சுதந்தரமே மோசடியானது தான்” என்ற கருத்தினைப் பெரியார் எழுதினார். ஆகாச வாணியில் பி.எஸ் சிவஸ்வாமி அய்யர், ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் சேலம் விஜயராகவாச்சாரியார், எஸ். சத்திய மூர்த்திய அய்யர் ஆகிய நான்கு பெரு மக்களின் பிறந்த நாள் விழாக்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். என்ற வர்ணாசிரம தர்மச் செய்தியை, “விடுதலை” 1.9.65 அன்று பெட்டிச் செய்தியாக வெளியிட்டுக் காண்பித்திருந்தது

பாகிஸ்தான் சீனா இருநாடுகளும் வட இந்தியப் பகுதிகளில் தொல்லை தந்துவந்தன. “தம் துரோகிகளை நம்பியும், பார்ப்பனர்களின்- பத்திரிகைகளின் காட்டிக்கொடுக்கும் தன்மையை நம்பியும் படையெடுத்த பாகிஸ்தான், ஒரு போதும் நம்மை வெல்ல முடியாது. பொது மக்கள் ஐந்தாம் படையினரின் விஷமங்களுக்கு இடந்தரக் கூடாது. கண்ட்ரோல், ரேஷன் முதலியவற்றால் நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தாமல், நம் அரசுக்குப் போர் முயற்சிகளில் நாம் உதவ வேண்டும்." என்று பெரியார் தமது சுற்றுப் பயணத்தின்போது பிரச்சாரம் புரிந்தார். இந்த ஆண்டு தமது 87வது பிறந்தநாள் விழா அன்று பெரியார் பெங்களூரில் இருந்தார். ஜி.டி. நாயுடு அங்கு சென்று வாழ்த்துக் கூறியதோடு, கோவையில் குறிப்பிடத்தக்க ஒரு விழாவுக்கு, அதன் விவரம் கூறாமலே, பெரியாரிடம் தேதி பெற்றுச் சென்றார். காங்கிரஸ்காரரான திருமதி கமலா யாதவ் அம்மையார் தலைமையில், பெங்களூரில், பெரியார் பிறந்த நாள் விழாவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் கண்டன நாளும் சீருடன் கொண்டாடப் பெற்றன. சனகம்மையார் பெரியாருக்குப் பண ஆடை போர்த்தினார். சி.டி. அரசு, விசாலக்குமி சிவலிங்கம் வாழ்த்திப் பேசினார்கள்.

பெரியாரின் 87-வது ஆண்டு பிறந்த நாள் செய்தி இப்படியாக அமைந்திருந்தது; “இந்தியாவுக்குச் சமீபத்தில் வந்திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம் ஒரு பார்ப்பனர் - இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம். அந்த ரஷ்யர், பல விஷயங்களைப் பற்றிச் சங்கராச்சாரியாரிடம் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும், உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஓர் இயக்கம் நடத்துகிறாரே, அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன -? என்று கேட்டாராம். அதற்குச் சங்கராச்சாரியார்-ஆமாம்! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அதன் பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும், அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்."

இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன? என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார். அவர் இப்படி என்னைக் கேட்கும் போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். 'அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும். நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனருக்கு வந்த நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்து விட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததையெல்லாம் திரும்பவும் பெற்றுக் கொண்டு, மேலேற நல்ல வசதி ஏற்பட்டது.

அது மாத்திரமில்லாமல் நானும் பார்ப்பனச் சுதந்திரத்தை எதிர்க்கின்ற வேலையை விட்டு விட்டேன். இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம், என்ற ஆணவம் எனக்கு. காமராசரிடத்தில் வைத்த, அளவுக்கு மீறிய நம்பிக்கை வேறு. இப்போது காமராசர் ஆட்சியை விட்டுப் போய் விட்டாலும், அசல் பார்ப்பனீய ஆட்சியே நடைபெற்றாலும் கூட நான் அதை வெளியில் சொல்லி, அழுது, திருப்திப்படக் கூடிய நிலைமை கூட இல்லாமல், காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் விட்டேன். இது பார்ப்பனர்களுக்கு லாபமான விஷயமாகி விட்டது' என்று நான் பதில் சொன்னேன். அந்த ரஷ்யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.

ஆம். இன்று பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக் கட்டத்-தோல்வியடையச் செய்யப் பாடுபட்டாலும், அப்பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப, எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள, பக்த கோடிகளான மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

இந்த நிலையில் எனக்குள்ள ஆறுதல் என்னவென்றால், இவ்வளவு எதிர்ப்பிலும் ஏமாற்றத்திலும்கூட, எனது தொண்டுக்குச் சாதகமாக இருக்கும் சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும், சுயநலமற்றுத் தியாக உணர்வுடன், எவ்விதப் பிரதிப் பிரயோஜனமும் எதிர்பாராமல், ஒழுக்கம் நாணயம் என்பதிலிருந்து ஒரு சிறிதும் வழுவாமல் தமிழ் தாட்டில், சென்னை முதல் குமரி வரை, ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து ஆதரவளித்து, உற்சாகமூட்டி வருவதுடன், படிந்து தொண்டாற்றியும் வருவது எனக்கு உயிரூட்டிச் சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. நமது இயக்கத்தால், உழைப்பால், மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல், மனமாற்றம் ஏற்பட்டு வருவதை உணருகிறேன்.

நாம் காங்கிரசைக் ‘காப்பாற்றும்’ தொண்டில் இறங்காமல் இருந்து, இந்த 10, 12 ஆண்டுகளில் 2,3 முறை பதினாயிரக் கணக்கில் சிறை சென்று, காங்கிரசை எதிர்த்திருந்தால், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை, கல்வி முன்னேற்றம், சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி, முழு ஆலயப் பிரவேசம் ஆகியவற்றில் பல உரிமைகள் பெற்றிருப்போம். என்ன செய்வது? இனியும் நாம் ஒன்றரை ஆண்டுக் காலத்திற்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நமது தொண்டுக்கு நன்றி காட்டாவிட்டாலும், நமது இலட்சியத்திற்குக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் இருக்கலாம். ஆனால், அப்படியில்லாமல், நம்மால் காங்கிரசாட்சிக்கு ஒரு பயனும் இல்லை, தொல்லைதான் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது; தமது நிவர்த்தி இல்லாத முட்டாள் தனத்தைப் பற்றி, வெட்கப்பட வேண்டியதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?

கும்பகோணத்தில் கவிஞர் கண்ணதாசனின் “நான் ராஜாவானால்?” என்ற நாடகம் 19.9.65ல் நடந்தது. நாடகத்தில் ரசபாவம் வேண்டும். மூட நம்பிக்கைகள் அரசியல் துறையிலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டும் - என்று பெரியார் பேசினார். சிவாஜி கணேசனோ- நாங்கள் கமர்ஷியல் ஆக்டர்கள், கண்ணதாசன் அரசியல் ஆக்டர் என்றார், பெரியார், “நம்முடைய நாடு சுதந்திரம் பெறாமலும், நம்முடைய கடவுள் மதம் ஆகியவை யோக்கியமாக இராமலும், நம்மிடையே ஒழுக்கம் நாணயம் இராமலும் இப்படியே இருந்தால், நாமும் மடையர்களாகத்தான் இருந்து வருவோம்”- என்று எழுதினார். இல்லஸ்ட்ரேட் வீக்லி“ என்னும் ஆங்கில இதழாசிரியர் எ.எஸ். இராமன் என்னும் பார்ப்பனர், அண்ணாவை பேட்டி கண்டார். இ.மு.க.வில் பிராமணர் சேரலாமா என்ற கேள்விக்குப் பிராமணர் சேருவதை வரவேற்கிறேன் என்றும், ராஜாஜி சேருவதானால் அவருக்கு உங்கள் கட்சியின் தலைமையான பதவியைத் தருவீர்களா என்னும் வினாவுக்கு, ஆம், அது தி.மு.க.வுக்குச் சிறப்பான நாளாகும் என்றும், அண்ணா பதில் கூறியிருந்ததை, 30.9.65 “விடுதலை” எடுத்தாண்டு, “நவீன விபீஷண சரணாகதி” என மகுடமிட்டிருந்தது. சீனா, பாகிஸ்தான் படையெடுப்பில் இந்திய அரசுக்கு விரோதமான கருத்துக்களைக் கூறி வந்ததால் திண்டிவனத்தில் ராஜாஜியின் “சுயராஜ்யா“ “கல்கி” இதழ்களுக்குத் தீயிடப்பட்டது. பின் சென்னை அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

2.10.65 அன்று, புதிதாக அமைந்த தர்மபுரி மாவட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். கோவையில் அக்டோபர் 3-ம் நாள், விஞ்ஞான மேதையும் தொழில் முனைவருமான ஜி.டி.நாயுடு, ஓர் ஒப்பற்ற புதுமையினைப் புகுத்தினார். பெரியாருடைய தொண்டுக்குக் கிடைத்த பலன்; வேறெங்கோ போக வேண்டிய பணம் தொழிற் கல்விக்கு வருகிறது, என்று நாயுடு குறிப்பிட்டவாறு, அவரது நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய வித்யா தீர்த்த சுவாமிகள் பயிற்சிப் பள்ளியைப் பெரியார் திறந்து வைத்து, “நான் என் Policy மாற்றுவதுண்டு. ஆனால் என் Principle என்றும் மாறாது. எனது தொண்டினால் சங்கராச்சாரிகள் மனமாற்றம் காக்க நான் பெருமைப்படுகிறேன். அவரது உதவி, தொழில் கல்விக் கூடத்துக்குக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். இதைப் பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாரு பாராட்டுக்கு உரியவர். எனக்குச் சென்னையில் டிராம் ஷெட் இடத்தை வாங்கித் தந்தவரே நாயுடுதான் என்று பெரியார் பேசினார். சர்.பி.டி. இராஜன் மேல் நாட்டில் இருந்து வர முடியாததால், ஈ.வெ.ராமசாமிப் பெரியார் பயிற்சிப் பள்ளியை, நாடாளுமன்ற உறுப்பினர் ராம கிருஷ்ணன் திறந்து வைத்தார். டி.எம். நாராயணசாமிப் பிள்ளை தலைமையில் தி.சு. அவிநாசிலிங்கஞ் செட்டியார் வாழ்த்திப் பேசினார். சர்.சி.வி. ராமன் விஞ்ஞானக் கண்காட்சியைத் திறந்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக சங்கராச்சாரியாரின் பணி இதுதான் என்பது, அங்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்டது; இது பெரியாரின் அறிவுப் பணிக்குக் கிட்டிய பெரு வெற்றியாகும். இந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் “விடுதலை”யில் 20.11.65 அன்று அச்சாகி வெளிவந்தன.

“அந்தோ சுயமரியாதைச் சுடரொளி மறைந்தது” என்று 12.10.65 “விடுதலை” துணைத் தலையங்கம் எழுதி வருந்திட, முந்திய நாள், தமது 59 -ஆம் வயதில், 17 ஆண்டுகள் “விடுதலை” ஆசிரியராகப் பணியாற்றிய குத்தூசி குருசாமி மறைக்கார் ஐயனாவரம் இடுகாட்டில் நடந்த அனுதாபக் கூட்டத்திற்குத் தி.பொ. வேதாசலம் தலைமை தாங்கினார். தொண்டு வீராசாமி, கி.வீரமணி, எம்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஈ.வெ.கி. சம்பத், நடிகர் டி.கே. சண்முகம், அறிஞர் சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் இரங்கலுரையாற்றினர். அருப்புக் கோட்டை எஸ்.என், கருப்பையா விடுத்த ஒரு வேண்டுகோளில், பெரியார் தமது வேனிலிருந்தவாறே பிரச்சாரம் செய்ய நாம் வசதி செய்து தரவேண்டும் என்றார். (பின்னாளில் அவ்வாறே செய்யப்பட்டது)

சென்னை பெரியார் திடலில் அமைந்த “விடுதலை” பணிமனையின் புதிய கட்டடத்தைப் பெரியார் தலைமையில் குன்றக்குடி அடிகளார், 31.10.65 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைத்துத் “தமிழர் இல்லம் என, ஒரு வீட்டை அறிவிக்கும் பலகை போல, எல்லா வீடுகளிலும் “விடுதலை” ஏடு வரவழைக்கப் பட வேண்டும்" என்று அறிவுரை இயம்பினார். “பத்திரிகைத் தொழில் பெரிதும் அயோக்கியர்களிடம் சரணடைந்துவிட்டது. அப்பத்திரிகைகளுக்கு அடிமையாகிறவன் கோழை; அப்பேர்ப்பட்ட பத்திரிகைகளை வெறுத்து ஒதுக்குகிறவனே வீரனென்று பெரியார் எழுதினார்.

காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கா இந்தியாவுக்கா என அங்கே வாக்கெடுப்பு நடத்த வேண்டும், என்ற கருத்தினை ராஜாஜி தெரிவிக்கையில், தமிழ் நாட்டுக்குப் பார்ப்பான் வேண்டுமா வேண்டாமா என்று ஒட்டெடுக்கத் தயாரா என “விடுதலை“ வினா எழுப்பியது. திங்கட்கிழமை ஒரு வேளை பட்டினி இருந்து, மிச்சப்படுத்திப், போர் நிதிக்குத் தாருங்கள் என்று பிரதமர் சாஸ்திரி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தங்கம் நிறையத் தேவை என்றும் தெரிவித்திருந்தார். அவர் தமிழகத்துக்கு வருகை தந்தபோது, 1,11,11,111 ரூபாய் யுத்த நிதி தரப்பட்டது. சினிமா நடிகர்கள் நிறையத் தங்க நகைகளைத் தந்தார்கள். சிவாஜிகணேசன் அவ்வாறு தந்தபோது, “நன்கொடையா? கடன் பத்திரமா?” என்று பிரதமர் கேட்க, நன்கொடை தான் என இவர் பதில் சொல்ல, அவர் மகிழ்ந்து போனார் “விடுதலை” போர்ச் செய்திகட்கும், மத்திய அமைச்சர்களின் பேச்சுகளுக்கும், முக்கியத்துவம் தந்தது. போரைப் பற்றிப் பெரியார் அக்டோபர் 29ல் கும்பகோணத்தில், மாவட்டத் தலைவர் தோலி ஆர்.சுப்பிரமணி தலைமையில் பேசினார். நவம்பர் 1-ம் நாள் மயிலாப்பூரில், டி.எம். சண்முகம் தலைமையில் பெரியாருடன் வீரமணியம் டி.வி. தெட்சணா மூர்த்தியும் பேசினார்கள், பெரியார், 4 வேலாயுதம்பாளையம், 5 ஈரோடு, 8 சிதம்பரம், 14 சேலம், 15 முதல் 19 வரை சென்னை , 21, 22, பெங்களூர், 23 காஞ்சிபுரம் என்று சுற்றுப்பயணம் சென்ற போதும், போர் நிலவரங்குறித்துப் பேசி வந்தார். சேலம் கல்லூரிச் சரித்திரப் பேராசிரியர் தி.வை. சொக்கப்பா, சிறந்த பகுத்தறிவாளர். அன்னார் ஓய்வு பெற்றதை முன்னிட்டுச் சேலம் அன்பர்கள் பெரியார் வாயிலாக 2,000 ரூபாய் பொற்கிழி வழங்கினர். பெரியார் தாமும் ரூபாய் 100-ம், அடிகளார் ரூ.101ம், அன்பளிப்பாகத் தந்தனர். கல்வி அதிகாரி சு. செல்லப்பன் பாராட்டுரை நல்கினார்.

“உத்தியோக மண்டலத்தில் தமிழர்கள் கதி” என்று தலைப்பிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டு, எவ்வளவு பார்ப்பனர் உயர் மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் எனப், பெரியார் “விடுதலை”யில் தலையங்கமே தீட்டினார். 27.4.65 முதல் 3.12.65 வரை உடல் நலிவுற்றுச் சென்னைப் பொது மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்ற பின்னர், 4.12.65 முதல், பிரயாணம் தொடர்ந்தார். கும்பகோணம் இயக்கப் பெரியவர் கே.கே. நீலமேகம், டிசம்பர் 17ம் நாள் மறைந்தார். “விடுதலை” அலுவலகம், 15ம் நாள் முதல் ரண்டால்ஸ் ரோடுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ராதா மன்றத்தில், அரசுத்துறை சார்பில் நடந்த, காய்கறிகள் கோழிகள் காட்சி ஒன்றைச், சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணமே, பெரியார் சுற்றிப் பார்த்துக், கோழி வளர்ப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் அது நல்ல சத்துணவைத் தருகிறது. அதாவது கோழி முட்டை தவிரக் கோழியும் நல்ல உணவாகுமே" என்றார். (சம்பத் இதைக் கேட்டுத்தான் கோழிப்பண்ணை வைத்தாரோ, என்னவோ?)

கம்யூனிஸ்டுத் தீவிரவாதிகளான இடதுசாரிகளில், பாதுகாப்புக் கைதிகளாக இருந்த சிலரை, வெளியே விடுவதற்கு இணங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல் கைதிகளுக்குச் சந்தர்ப்பம் கொடுப்பது விரும்பத் தக்கதாகும் என்று கூறியதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, ஜட்ஜுகளுக்குச் சிந்திக்க சக்தி வேண்டும் என்றார். திருச்சியில் ஒரு நீதிமன்றத்தில், பாமரர் ஒருவரைக் கூண்டிலேற்ற நேர்ந்த போது, எம்.எஸ். வெங்கட்ராமய்யர் என்ற வக்கீல் பார்ப்பனர் “நீதிமன்றம் இப்போது ஒரு காமராஜைப் பார்க்கப் போகிறது (The honourable court will see one Kamaraj now)” என்று பகிரங்கமாகக் கேலி செய்தார். முத்துக்குமாரசாமி என்ற தமிழ் வழக்கறிஞர், “ஏன் ஓர் அகில இந்தியத் தலைவரைக் கிண்டல் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். சிவசுப்ரமணிய அய்யர் என்ற இன்னொரு பார்ப்பன வக்கீல் “அதில் என்ன தப்பு?” என்று கேட்டார். பார்ப்பனரின் மனப்போக்கை வெளிப்படுத்த, இதைக் கண்டித்துப் பேசப் போவதாக விளம்பரப்படுத்தியே, பெரியார், டிசம்பர் 18-ல், திருச்சியில், ஒரு பொதுக்கூட்டமே நடத்திக் கண்டித்தார். சங்கராச்சாரியார், திருமணங்களைச் சிக்கனமாக 500 ரூபாய் செலவில் முடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். “நல்ல யோசனைதான். நாட்டில் லஞ்சம் குறையும், பார்ப்பனர்கள்தான் லஞ்சம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள். லஞ்சப் பணத்தில்தான் ஆடம்பரமாகப் பெண்களின் திருமணம் நடத்துவார்கள். இதில் சங்கராச்சாரியார் சொல்வதை எவன் கேட்பான்?” என்று எழுதினார் பெரியார்.

யுத்த நிலைமை தொடர்வதால் 1967 பொதுத் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்ற கருத்துக் கூறப்பட்டது. உடனே பெரியார் “எதிரிகள் வெள்ளைக்கொடி பறக்க விட்டுவிட்டார்கள். சுதந்திரா, கண்ணீர்த்துளி, தமிழ் அரசு ஆகிய கட்சிகள் 1967-ல் தேர்தல் வேண்டாம் என்கிறார்களாம். இவர்கள் தேர்தலில் நிற்பார்கள். நல்லவண்ணம் தோற்பார்கள். ஏன் தோற்றீர்கள்? என்றால், பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து விட்டது என்பார்கள். இவர்கள் பேச்சுக்குச் செவி சாய்க்க வேண்டாம்” என்று எழுதினார். சேலத்தில் ராஜாஜியின் 88வது பிறந்த நாள் விழாவில் 31.12.55 அன்று கலைஞர் மு.கருணாநிதி, மதுரை முத்து. கே. ராஜாராம் எம்.பி., சென்னை மேயர் மைனர் மோசஸ் ஆகியோர் பங்கேற்றதை, “விடுதலை“ எள்ளி நகைத்தது! டெல்லியில் டி.டி.கே. ராஜினாமாச் செய்யவும், சுசீந்திரசவுத்ரி என்ற வங்காளி நிதியமைச்சராகவும், சி.எம். பூனாச்சா என்ற கன்னடியர் ராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். கவர்னர்கள் தங்களுக்கு ஏதோ குறைகள் இருப்பது போல விண்ணப்பித்ததைத் கண்டித்து, ”இவர்களும் அரசாங்க சிப்பந்திகள்தானே? தனிச்சலுகை எதற்கு? பார்க்கப்போனால் இந்தப் பதவியே வீண்பளுகானே?“ என்று கவர்னர்கள் முறையீடு கேலிக் கூத்தே என்னுந் தலையங்கம், “விடுதலை”யில் 31.12.65 அன்று பெரியார் எழுதியிருந்தார். அடுத்து, கவர்னர் லீவின் தொல்லை என்று ஒரு கருத்தும் தெரிவித்தார். அதாவது கவர்னர்கள் அடிக்கடி லீவில் செல்வதால், பிரதம நீதிபதி ஆக்டிங் கவர்னராகி விடவே, நீதிமன்ற வேலைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், அப்போது தமிழ்நாட்டைப் பொறுத்துப், பெரியார் விரும்பாத சிக்கல் ஒன்று! மைசூர் மகாராஜா தமிழக கவர்னர், இவர் அடிக்கடி லீவில் செல்லவே, பிரதம நீதிபதி சந்திராரெட்டி கவர்னராகத் தற்காலிக அலுவல் பார்க்க; சீனியர் நீதிபதியாகிய மா.அனந்த நாராயணன் ஐ.சி.எஸ். பிரதம நீதிபதியாக விளங்கிய சிக்கல்தான் அது! தேவையில்லாமல், சட்டம் பயிலாத ஒரு பார்ப்பனர், உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக வந்ததைப் பெரியார் பலமுறை பகிரங்கமாகக் கண்டித்து எழுதினார், பேசினார்; இதற்காகப் பக்தவத்சலம் ஆட்சியைக் குறை கூறினார்!

தொழிலாளர் என்கிற இனத்தையே ஒழித்துவிட்டு, முதலாளி கண்ட்ராக்டர் பங்காளி என்கிற முப்பிரிவினர் தாம் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும். அப்போது தான் தொழிலாளர் வேலை நிறுத்தம் போன்ற தொல்லைகளும், இதற்கேற்பத் தொழிலாளர் சட்டம் இயற்றுதலும் ஒழியும் - என்ற தமது கருத்தைப் பெரியார் 1.1.1966 தலையங்கம் மூலமாகத் தெரிவித்து வலியுறுத்தினார். “திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி சும்மா ராஜிநாமா செய்யவில்லை. மிக பலத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார். டிடிகே டிவிஎஸ் கம்பெனிகளுக்கு, எண்ணற்ற சலுகை காட்டினாராம். அவர் மீது நடவடிக்கை வேண்டாமா? ராஜிநாமா போதுமா? பார்ப்பன நீதியும், தர்மமும் இப்படித்தானா? இதில் அரசாங்கத்தின் Stand என்ன?” என்று பெரியார் எழுதித் தீர்த்துவிட்டார்!

ஜனவரி 8-ம் நாள் பெரியார் திடலில் சிவாஜிகணேசனின் “வேங்கையின் மைந்தன்" நாடகம் நடந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துணைமேயராயிருந்து, சம்பத்தோடு போன மணிவண்ணன் உதவிக்காக நடந்தது இது. பெரியாரும், காமராசரும்; அப்போதுதான் காங்கிரசில் சேர்ந்த டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டனர். கண்ணதாசன் வரவேற்றார். நமக்கு மானஉணர்ச்சியும் துணிவும் ஊட்டியவர் பெரியார்தான் என்று காமராசர். பாராட்டினார். தலைவர் காமராசரால்தான் நம் தமிழ் நாட்டுக்கு விமோசனம் ஏற்பட்டது; கல்வி பெருகியது என்று பெரியார் பாராட்டினார். வசூலான தொகையாகிய 3,000 ரூபாயைக் காமராசர் வழங்கினார். நடிகர் திலகம் சிவாஜி 1,200 ரூபாய் வழங்கினார். வள்ளல் பெரியாரும் 1000 ரூபாய் வழங்கியருளினார். இந்த நேரத்தில் பெரியார், தாம் ரஷ்யாவில், கருத்து மிக்க 3, 4 நாடகங்கள் பார்த்ததாகக் குறிப்பிட்டு, அவற்றில் ஒரு கதையையும் சொன்னார். பாதிரி ஒருவர் ஒரு மகானுடைய சமாதிக்குப் பக்கத்தில் அமர்ந்து, அவர் பெருமைகளைச் சொல்லி, ஏராளமாகப் பொருள் குவித்து வந்தார். அவருடைய மகன் கட்டுப்பாடில்லாமல் திரிந்ததால், அவனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து, இதை வைத்து எங்காவது போய்ப் பிழைத்துக் கொள் என்றாராம். சில நாள் கழித்து அவனும் ஏதோ ஒரு மகானுடைய சமாதி எழுப்பி, அதன் மூலமாக வருவாயை உண்டாக்கிப் பெருமையுடன் வாழ்ந்து வரக் கேள்விப்பட்டு, அவனைப் பார்த்து, யாரடா இந்த மகான் என்று கேட்டாராம் அப்பா, யாரிடமும் உண்மையைச் சொல்லி விடாதீர்கள்! நீங்கள் கொடுத்தீர்களே கழுதைக் குட்டி அது செத்துப் போய்விட்டது அதைத்தான் இங்கே புதைத்து விட்டுச், சமாதி கட்டி, மகான் சமாதி என்று மகத்துவம் உண்டாக்கினேன் என்றானாம். அட மடையா! நான் வைத்திருக்கும் சமாதி மட்டும் எந்த மகானுடையது என்று நினைத்தாய்? இதே கழுதையினுடைய தாய்க்கழுதையின் சமாதிதான் அது, என்றாராம் தந்தை! இதன் மூலமாகப் பாதிரிகளின் மோசடிகளை விளக்கி, மக்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குகிறார்கள் ரஷ்யாவில். இங்கு அப்படியில்லையே? என்றார் பெரியார்.

ரஷ்யாவில், டாஷ்கண்டில், கோசிஜின் முயற்சியால் சந்தித்துப் பேசிய அயூப்கான்-லால்பகதூர் சாஸ்திரி பேச்சு வார்த்தைகளில், நல்ல திருப்பம் ஏற்பட்டது. “டாஷ்கண்ட் முடிவினால் இந்தியாவுக்குத் தொல்லை நீங்கிற்று: பாகிஸ்தானுக்குத் தோல்வி நீங்கிற்று; கோசி ஜின்னுக்கு உலகப்புகழ் கிடைத்தது“ - என்று பெரியார் கருத்துக் கூறினார். ஆனால் அந்தோ! இந்த வெற்றியைத் தொடர்ந்து சாஸ்திரியின் திடீர் மறைவுச் செய்தியும் கிட்டியது. பெரியார் திருச்சியிலிருந்து தொலை பேசி வாயிலாக ”விடுதலை"க்கு அனுதாபச் செய்தி அனுப்பினார். அடுத்த பிரதமர் சவானாக இருக்கலாம் எனப் பெரியார் யூகித்தார், அவர் மராட்டியர் என்பதால் ஆனால் ராஜாஜி, தன் விருப்பம் நந்தா என்று தெரிவித்தார். இதற்குள் இந்திராகாந்தியின் பெயர் அடிபட்டது. காமராசரால் ஆதரிக்கப்பட்டவர்யாராயிருந்தாலும் சரிதான். அது இந்திராவானாலும் நல்லதே என்று பெரியார் கருதினார். 19.1.66 அன்று, பிரதமர் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இந்திராகாந்திக்கு 355 வாக்குகளும், மொரார்ஜி தேசாய்க்கு 169 வாக்குகளும் கிடைக்கவே, முறைப்படி இந்திரா பிரதமரானார். 66ல் ஆசைப்பட்ட மொரார்ஜிக்கு, 77-ல் கிடைத்தது இந்தியப் பிரதமர் பதவி! இந்தத் தேர்தல், சமதர்மத்திற்கும்-ஜாதி, பணதர்மத்திற்கும் இடையில் நடந்த போராட்டமே எனப் பெரியார் கணக்கிட்டார்.

மத்திய சுகாதார அமைச்சர் சுசீலா நய்யார் தகுதி திறமை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். “இவர் யாரென்றே நாட்டுக்குத் தெரியாது! இருக்கிற பதவியினால் இப்படிப் பேசுகிறார்களா இந்த அம்மையார்? இது என்ன முட்டாள்தனமா? அல்லது யோக்கியமற்றதனமா?" என்று பெரியார் மிகுந்த ஆத்திரமும் சினமும் கொப்புளிக்கக் கேட்டார். தஞ்சையில், கீழ ராஜ வீதியில், கழகத்திற்கென வாங்கப்பட்ட பெரியார் இல்லம், புதுப்பிக்கப்பட அவசியம் ஏற்பட்டது. ஏற்கனவே அந்தப் பழைய கட்டடம் வாங்கவும் பெரியாரே 12,500 ரூபாய் வழங்கினார். இப்போதும் 8,500 ரூபாய் தந்தார். நடிகவேள் ராதா ரூ.3,000 பெறுமான இரும்பு வாரைகள் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார். (ஆனால் தரவில்லை) தஞ்சை மாவட்டக் கழகத்தினரும் நன்கொடை திரட்டினர். அனைத்தும் சேர்ந்து, ரூ.34,000 மதிப்புள்ளதாக உருவாக்கப்பட்ட அக்கட்டடத்தை எம்.ஆர். ராதா, ஜனவரி 23ம் நாள் திறந்து வைத்தார்; பெரியார் சிறப்புரை நிகழ்த்தினார். பெரியார் பிறந்த நாளையொட்டி 30.1.66 அன்று, சேலத்தில், 117 வெவ்வேறு பொருள்கள், சுமார் 3,000 ரூபாய் மதிப்புள்ளவற்றை பெரியாருக்கு அன்பளிப்பாகப் பலரும் உதவினார்கள். 31- ம் நாள் சென்னை தண்டையார்பேட்டையில், ஜீவானந்தம் சிலை திறப்பு விழாவை ஒட்டி, ஜீவா வாழ்க்கை வரலாறு என்று கே.பாலதண்டாயுதம் எழுதிய நூலைத் தாட்டே தலைமையில் பெரியார் வெளியிட்டார். முந்திய நாள் நடைபெற்ற சிலை திறப்பு விழாவுக்கே, பெரியாரை அழைத்தபோதிலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேறு சிலருடன், தாமும் அன்று பங்கு பெற விருப்பமில்லை என்றே, மறுநாள் வந்தார் பெரியார். முதல் நாள் பி.சி. ஜோஷி, காமராசர், பக்தவத்சலம், இராஜாஜி, ம.பொ.சிவஞானம், ஈ.வெ.கி. சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நிதி திரட்டிட 1,000 ரூபாய், 100 ரூபாய் நன்கொடைச் சீட்டுகள் அச்சிட்டதைச் சுட்டிக் காட்டிப் பணக்காரர் ஆதரவு பெருகியிருப்பதாக “விடுதலை செய்தி வெளியிட்டது. அத்துடன், நாட்டில் பணத்திருட்டுகளும், லஞ்சமும், ஊழலும் நிர்வாகத்தில் அதிகமாகியிருக்கக் காரணம், யாவும் பார்ப்பன மயமாயிருப்பதுதான் என்ற பெரியாரின் பெட்டிச் செய்தியும் பிரசுரமாயிற்று. குன்றக்குடி அடிகளார் கிண்டி பொறியியற் கல்லூரியில் உரையாற்றுகையில், பத்திரிகைகள் சோதிடத்தைப் பரப்பி வருவது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்றார். ஜெய்ப்பூர் காங்கிரசில் தலைமை ஏற்ற காங்கிரஸ் தலைவர் காமராசர், உற்பத்தியில் மாநில அரசே பெரும் பங்கு கொண்டு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரியார் பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் தங்கியிருந்தார். “விடுதலை” தலையங்கப் பகுதி பெரியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. நாட்டிலுள்ள கட்சிகளின் தன்மை, அவற்றின் தற்கால எதிர்கால நிலவரம் வரவிருக்கும் தேர்தல், இவை பற்றி “ஜனநாயகம்“ என்ற தலைப்பில் மூன்று கட்டூரைகள். ”சட்டசபை கவுரவம்” என்னும் மகுடமிட்டு, ஜனநாயகம், தேர்தல், சட்டமன்ற நடப்பு இவை நல்லவண்ணம் பாதுகாக்கப்பட்டுப் பயனுடன் நடைபெற, உரிய சில சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று ஒரு கட்டுரை. “ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்“ என்ற புரட்சிகரமான கட்டுரை ஒன்று. பாகிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்; அதற்காக ஒத்துழைக்கிறேன். ஆனால் இந்தியா மீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்! ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்! இங்கு வந்து கம்யூனிசக் கொள்கை பேசியதற்காக, என்னால் ஆதரிக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி அரசால், சிறையிடப்பட்டவன் இன்றுள்ள கம்யூனிஸ்டுகளைவிட, நான்தான் தமிழ்நாட்டில் உண்மையான கம்யூனிஸ்டு - என்றெல்லாம் விளக்கமாக இரு கட்டுரைகள் பெரியார் எழுதினார். இவற்றுக்குச் சில விளக்கங்களை அளிக்க பாலதண்டாயுதம் விரும்பியபோது, அதற்கும் பெருந்தன்மையுடன் வாய்ப்புத் தந்து, அவரது கட்டுரை ஒன்றையும் 26.2.66 ”விடுதலை"யில் பிரசுரிக்கச் செய்தார் பெரியார்.

தமிழனது பழம் பெருமை என்பது காட்டுமிராண்டித்தனமேயாகும். கம்பனும், இளங்கோவனும் காட்டுமிராண்டிகளே ஆவார்கள். புளுகு இலக்கியத்துக்குப் பரிசு தருவதானால் இவர்களுக்கு தரலாம். அறிவுப் பிரச்சாரம் செய்வதற்கு எங்களைத் தவிர இந்த நாட்டில் வேறு நாதி ஏது?. என்று சாடுவதற்கு ஒரு தலையங்கம், ஜோசியம் சொல்லுகிறவனுக்கு அடிப்படையானவை பித்தலாட்டம், மோசடி, ஆகியவை: ஜோசியம் கேட்பவனுக்கு அடிப்படை முட்டாள்தனம், பேராசை ஆகியவை - எனப் படம் பிடித்துக் காட்டுவதற்கு ஒரு கட்டுரை, டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது தனிப்பட்ட முறையில் நமக்கு விரோதமில்லை. ஆனால் பொது வாழ்க்கையில் உள்ளவர் ஒழுக்கமாயிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கட்டாயம் அவர்மீது விசாரணை நடத்தியே தீரவேண்டும் - என வலியுறுத்தி ஓர் தலையங்கம், காங்கிரஸ் மாநாடு ஜெய்ப்பூரில் கூடிக் கலைந்துவிட்டது; இனிக் காங்கிரசின் அடுத்த வேலைத் திட்டம் என்ன? காமராசர் கவனம் செலுத்தியாக வேண்டும். காமராசரின் சமதர்மத் திட்டங்களை இன்னும் நல்ல முறையில் பிரச்சாரம் செய்யப் பத்திரிகைகள் வேண்டும். புதிதாகவும் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் நட்டம் வரும். அதற்காகப் பின் வாங்கக் கூடாது. என்னுடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பத்திரிகை நடத்தி நட்டமானால் ஒரு ஜில்லாவின் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு ஈடு செய்யத் தயார் என்று அறைகூவல் பாணியில் ஓர் தலையங்கம்.

பிப்ரவரி முதல் வாரம் “கரண்ட்” இதழ், தென்னாட்டின் தலைவர் காமராஜ் அல்ல; அண்ணாதுரைதான் என்று புகழ்ந்து எழுதிவிட்டது! மதுரைப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுப் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் முதலாவது துணைவேந்தரானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சி.பி. ராமசாமி அய்யருக்குப் பிறகு யார் என்பது வினாக்குறியாகவே விளங்கியது. பெரியாருடைய சுயமரியாதைத் திருமண விளக்கவுரை கிராமபோன் தட்டாக வெளிவந்து, ஒரு செட் விலை எட்டு ரூபாய் எனக் கழகத்தின் மூலம் விற்பனை ஆகிவந்தது. 24.2.66 அன்று, என்.எஸ். சம்பந்தம் அவர்களின் மாமனாரான மத்தூர் ராஜாகிருஷ்ணன் அவர்கள் மறைவுக்குப் பெரியாரும் மணியம்மையாரும் சென்று துக்கம் விசாரித்தனர். 7.3.66 அன்று, சென்னையில் திரைப்பட அதிபர் ஜி.என். வேலுமணியின் மகன் சரவணனுக்கும் சாந்திக்கும் திருமணம், பெரியாரும் காமராசரும் கலந்து கொள்ள ஏற்பாடு. தவிர்க்க இயலாத காரணங்களால் காமராசர் இருக்க இயலவில்லை. வரவேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர், கலையுலக ரத்தினங்களில் ஒருவர் - என்றார் பெரியார். யாராவது ஒருவர் ஒரு உதவி நமக்குச் செய்தால் நன்றி என்று சொல்லலாம். பெரியாரைப்போல் நமக்காகவே வாழ்கின்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, அவர்கள் சொல்வதுபோல் நடந்து காட்டுவதாகும் என்றார் புரட்சி நடிகர். மணமக்கள் சார்பில் பெரியாருக்கு வெள்ளிக் கைத்தடி வழங்கப் பெற்றது. மத்திய அரசும், மாநில அரசும், உபரி பட்ஜெட்டுகளைச் சமர்ப்பித்து, 1967-ம் ஆண்டு தேர்தல் வரவிருப்பதை நினைவூட்டின!

நம் நாட்டில் ஜனநாயகம் பெரும்பாலும் காலிகள் நாயகமாகவேயிருக்கிறது. சட்டம் மீறுகிறவர்கள் தேர்தலில் நிற்காமல் தடுக்க வேண்டும். இல்லாவிடில் vagabonds ஆட்சியே வந்து சேரும்! எனவேதான் அடுத்த தேர்தலிலும் காங்கிரசே பெருவாரியாக வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர்க் கட்சிகளை உதாசீனம் செய்து விடுங்கள்! தமிழர் வரலாற்றிலேயே, காமராசர் ஆட்சிக் காலந்தான் ஒரு திருப்பு மையமாகும். மறந்து விடாதீர்கள் - என்று பெரியார் சென்னையில் ராமாயண எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டத்தொடரில் கூறி வந்தார். “வால்மீகி ராமாயணம் கம்பராமாயணம் என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கொளுத்துங்கள், கூட்டத்தில் கூடி நின்று!“ என்பதாகப் பெட்டிச் செய்தி “வீடுதலை”யில் வந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தில் மார்ச் 19 சோஷலிச விழாவும், 20 பெரியார் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றன. பெரியாருடன், காங்கிரஸ்காரர்களான கோபாலசாமி தென்கொண்டார், பொறையாறு பார்த்தசாரதி ஆகியோரும் பங்கேற்றனர். 31-ல் திருச்சியில், ராமாயண எரிப்புப் பொதுக் கூட்டத்தில் பெரியாரும், ஆனைமுத்து, செல்வேந்திரன், வீரப்பா, பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். “30.3.66 முதல் 5.4.66 வரை இராமாயண எரிப்பு வாரம் கொண்டாடிக் கொளுத்திச் சாம்பலாக்கிக் காட்டுங்கள்! கொளுத்துங்கள், கொளுத்துங்கள்!” என்று பெரியாரும் “விடுதலை”யும் ஊக்கம் தந்தது குறிப்பிடத் தக்கதாகும். வால்மீகியைவிடப் புளுகன் கம்பனே என்ற, தமிழாய்ந்த பொறியாளர் பா.வே. மாணிக்க நாயகரின் முடிவு, “விடுதலை”யில் பிரசுரமாயிற்று.

சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் பிரதம நீதிபதியாகத் தகுதி வாய்ந்த உயர் அனுபவசாலி ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்- அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி தமிழருக்கே தரப்பட வேண்டும் - என்பன பெரியாரின் வேண்டுகோள் துணுக்குகளாகும். இராமாயணம் ஆபாசக் களஞ்சியமே என்ற தலைப்பில் தொடர் துணுக்குகள் “விடுதலை” முதல் பக்கத்தில் முக்கிய கட்டடச் செய்திகளாக வந்தன. நாடெங்கும் ராமாயண எரிப்புப் போர்ச் செய்திகள் “விடுதலை” அலுவலகத்துக்கு வந்து குவிந்தன.

கல்லூரிகள், தொழில் கல்லூரிகள் அதிகரிக்கப்படும்; மின்சார பம்பு வசதிகள் பெருகும்; ரிசர்வ் பேங்க் அருகில் நால்வழிச் சுரங்கப் பாதை திறப்பு- என்ற அரசுத் தரப்புச் செய்திகள் தேர்தலுக்கான கட்டியங் கூறின!

ஏப்ரல் இரண்டாம் வாரம் சென்னையில் பல கூட்டங்களில் பெரியார் சொற்பொழிவு நிகழ்த்தினார். “காமராசரை ஒழித்தால், சமதர்மத் திட்டத்தை ஒழித்த மாதிரி ஆகும் என்பதால்தான், பார்ப்பனர் காங்கிரசை ஒழிக்க நினைக்கின்றனர். இன்று நம் நாட்டில் நடப்பது இனப்போரே ஆகும். மத மூட நம்பிக்கைக்காரர்களால் சம தர்மத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. மனு தர்ம ஆட்சியைக் கொண்டு வரப் பாடுபடும் ஆச்சாரியாருக்குக் கண்ணீர்த் துளிகளே நாற்காலிகளாகி விட்டன. எனவே கண்ணீர்த் துளிகளின் புரட்டுப் பேச்சுக்களைக் புறக்கணியுங்கள். ஏசு, நபி, புத்தர், அம்பேத்கார் நால்வருமே தியாக சீலர்கள். அவர்களைப் பின்பற்றி ஒழுக்க சீலர்களாக விளங்குங்கள்" - என்றெல்லாம் பெரியார் பேச்சு அமைந்திருந்தது. கொழுந்துவிட்டு எரியும் பெரு நெருப்பில், ஒரு டின் பெட்ரோலை ஊற்றினார் முதலமைச்சர் பக்தவத்சலம்.

3.5.65 அன்று, முதல் தமிழ் நாவலாசிரியரான மாதவய்யாவின், புதல்வர் அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். “இது தமிழர்களுக்குப் பேரிடியான செய்தி! பக்தவத்சலம் ஆட்சிக் கொடுமை! 10.5.66 துக்க நாள் கொண்டாடுங்கள். பார்ப்பன ஆதிக்கத்திற்கே பாடுபட்டு வருகின்ற இந்த பக்தவத்சலம், ஆச்சாரியாரின் அத்யந்த சீடர். இவரைப் போய்த் தமது இடத்தில் வைத்தாரே காமராசர்! அது எவ்வளவு தவறாகப் போய் விட்டது? பக்தவத்சலம் ஒழிக" என்று பெரியார் போர்க்கொடி உயர்த்தினார்; தொடர்ந்து விளக்கக் குறிப்புகளும் எழுதி வந்தார்| 10ந் தேதி சென்னையில் நகர் போலீஸ் 41 - வது சட்டத்தின்படி ஊர்வலம் செல்லக் கூடாதென்று சொல்லி அதிகாரிகள் கேட்டதன் பேரில், கூட்டம் உண்டு; ஆனால் ஊர்வலம் இல்லை, அதையும் நானாக நிறுத்தவில்லை என்றும், கூட்டத்தில், பக்தவத்சலம் பதவி விலகட்டும். தமிழ்நாடு தனிநாடு ஆவதே நம் இழிவுகள் எல்லாம் நீங்குவதற்கான ஒரே பரிகாரம் - என்றும் பெரியார் முழங்கினார்!

இவர் எதிரியின் ஒற்றர் ஆவார், என்னைத் தவறாக நினைக்காதீர்கள் காங்கிரஸ்காரர்களே! நான் காங்கிரஸ் விரோதி அல்லன்! தமிழர்களுக்கு விகிதாச் சாரப்படி உரிமை வேண்டும். அது தடுக்கப்பட்டால், தடுக்கும் எதையுமே நான் எதிர்ப்பேன்! இப்போது சாதி - மத உணர்ச்சி வலுத்துவிட்டது. உயிரைக் கொடுக்க உறுதி கூறி உடனே நூறு தோழர்கள் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள். பார்ப்பான் வேறு; நாம் வேறுதான்; இதோ பாருங்கள்! தவறு செய்த கிருஷ்ணமாச்சாரியைப் பார்ப்பனர்கள்தானே காப்பாற்றுகிறார்கள். சாணக்கியர் ஆச்சாரியாரிடம் நமது விபீஷணர்கள் சரணாகதி அடைந்து கிடக்கிறார்களே! பார்ப்பன உணர்ச்சியுடன் சலுகைகள் செய்து வருகிற நமது தொழிலமைச்சர் (ஆர். வெங்கட்ராமன்) விசாரணைக்கு உட்படத் தயாரா என்று, வேறு யாராவது கேட்கிறார்களா? சர்வம் பூணூல் மயம்! இதோ பட்டியலைப் பாருங்கள் எல்லாம் சரியாக வேண்டுமானால், மீண்டும் காமராசரே முதலமைச்சராக வரவேண்டும் சங்கராச்சாரியாரையும் பகிஷ்கரியுங்கள். இவர் நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்வது மதத்தைப் பரப்ப அல்ல. காங்கிரசை ஒழிக்கவே, அரசியல் பிரச்சாரம் செய்கிறார்! - என்றார் பெரியார். |

13.6.66 அன்று மாலை 5 மணிக்கு 50 கழகத் தோழர்கள் அமைதியாக மயிலையில் சங்கராச்சாரியாருக்குக் கருப்புக் கொடி பிடித்தார்கள். மயிலாப்பூரில் திருவள்ளுவர் சிலை திறக்க வந்த தத்துவஞானி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் - இந்தியக் குடி அரசுத் தலைவர் - “திருவள்ளுவர் நாத்திகவாதத்தை மறுக்கிறவர்" என்று, ஏனோ, எதனாலோ, எப்படியோ, தேவையில்லாத, தவறான, கருத்தைக் கூறிச் சென்றார். பெரியாரின் குற்றச்சாட்டுகளுக்குப் பக்தவத்சலத்தின் பதில் என்ன என்று மதுரையில் நிருபர்கள் கேட்டபோது, தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்று தப்பித்துக் கொண்டார் முதல்வர். 23.6.66 அன்று சர்தார் உஜ்ஜல்சிங் தமிழக கவர்னரானார்.

விழுப்புரத்தில் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளைப் பகலில் நடத்திவிட்டு, மாலை நேரங்களில் வெளியூர் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று வந்தார் பெரியார். இராமாயண எரிப்புப் போரை மும்முரமாக நடத்துவதற்கு ஏன் பெரியார் முனைந்தார் என்பதை இங்கே விளக்குகின்றார்:- பார்ப்பனர்கள் வரப்போகின்ற தேர்தலிலே, கடவுள் மத சாஸ்திர புராண இதிகாசங்களின் பெயர்களால் ஏமாற்றி, மயக்கி, வெற்றி பெறலாம் என்கின்ற எண்ணத்தின்மீது, இப்போது எங்கு பார்த்தாலும், எந்த ஊரிலும் இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய புராண இதிகாசங்களின் மூலமாகப் பிரச்சாரம் செய்தும், செய்வித்தும் வருகிறார்கள்.

ஏற்கனவே நாம் இவைகளாலேயே முட்டாள்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மூடநம்பிக்கைக்காரர்களாகவும் ஆகிப், பல்லாயிர வருட காலமாக நமது நாட்டில் நாம் கீழ்சாதி மக்கள், ஈனப் பிறவிகள் என்பதை ஏற்று, பார்ப்பனருக்கு அடிமையாய் இருந்து வாழ்ந்து வந்தாலும், இன்று காங்கிரஸ் ஆட்சியின் பயனாய்ச் சிறிது கண்திறந்து, அறிவு பெற்று வருவதை ஒழிப்பதற்கு, வேறு வகையில்லை என்று கண்ட பார்ப்பனர் மறுபடியும் இந்தப் பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் பிரச்சாரத்தைப் பற்றி எண்ணும் போது அதில் 10-ல் ஒரு பங்குகூட நமது பிரச்சாரம் இல்லை என்றாலும், தயங்காமல் நம்மால் கூடியதைச் செய்து தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக இப்போது நாம் செய்துவரும் பிரச்சாரம் நீங்கள் அறிந்ததேயாகும். இனியும் தேர்தல் வரையிலும் நமது கழகத் தோழர்கள் எல்லாருமே, நம் இயக்கப் புத்தகங்களைத் தருவித்து, விஷயங்களை உணர்ந்து, ஆங்காங்கு அந்தந்த ஊரில், மறுப்புப் பிரச்சாரம் செய்து வர வேண்டியது மிக்க அவசியமாகும். இதை அனுசரித்து, நான் சொல்லும் விஷயங்களைச் சற்றுக் கவனமாகத் தெரிந்து, அதன்படி கூடுமானவரை நடந்து கொள்ள வேண்டுமெனக் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ராமநவமி போன்ற பண்டிகை நாட்களில், பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும், நல்ல வண்ணம் பிரச்சாரம் செய்ய முற்படுவார்கள். அதனால் நம் மக்கள் ஏமாறாமல் காப்பாற்றப்பட, நம் கழகத் தோழர்கள் ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து, மேற்சொன்ன பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு, இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் ஆகியவை தமிழர்களை இழிவுபடுத்துவதற்கென்றே ஆக்கப்பட்ட பொய்யும் கற்பனையும் ஆபாசமும் நிறைந்த நூல்கள் ஆகும். ஆகவே இந்த மூன்று சொற்களையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிக் கையில் வைத்துக் கொண்டு, சொற்பொழிவின் முடிவில், கூட்டத்தில் மக்களுக்குத் தெரியும்படியாக நெருப்பினால் கொளுத்திச் சாம்பலாகும்படிச் செய்து காட்டவும்.

இந்தப்படி ஒவ்வொரு கூட்டத்திலும் எத்தனை பேர் செய்து காட்டக்கூடுமோ அத்தனை பேர்களும் அந்தப்படி எழுதப்பட்ட துண்டுக் காகிதத்தை, மக்கள் அறியும்படிக் கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கிக் காட்டவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் கட்டளைப் படியே 11.8. 66 அன்று சென்னையிலும், பிற இடங்களிலும் இராமாயணம் கொளுத்தப்பட்டது என்பதைக் கூறவும் வேண்டுமா?

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டது. 10 லட்ச ரூபாய் தேர்தல் நிதி திரட்டும் பொறுப்பினை அண்ணா, தனது கழகப் பொருளாளர் கலைஞரிடம் நம்பிக்கையோடு தந்துவிட்டார். அவரும் கச்சை கட்டிக் கொண்டு களத்தில் குதித்து விட்டார், ஒரே நாளில் கொடி விற்பனையில் லட்ச ரூபாய் சேர்ந்தது. காமராசரையும் காங்கிரஸ் சமதர்மத்தையும் கேலி செய்யும் ‘காகிதப்பூ’ என்னும் நாடகத்தை எழுதித், தாமே நடித்து, நிதி திரட்டினார்; நிதியும் குவிந்தது. பெரியாருக்கு அறவே பிடிக்காத சுதந்திரக் கட்சி-அதாவது ராஜாஜி-யின் முழு ஆதரவும் தி.மு.க.வுக்கே கிடைத்து வந்தது. முஸ்லீம் லீக், இடதுசாரி கம்யூனிஸ்ட் நாம் தமிழர், தமிழரசுக் கழகம்
போன்ற கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணியில் உறுதியுடன் நின்றன.

நேரு மறைந்த பின்னர், காமராசரும் மாநில ஆட்சியை விட்டு விலகிப் போன பின்னர், பெரியாருக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை. எனினும், தம்மை நம்பியவரை நட்டாற்றில் விட மனமின்றித் தமக்கு நேரிட்ட ஏமாற்றங்களையும் அவமதிப்பையும் பொருட்படுத்தாமல், 1967 தேர்தலிலும் காங்கிரசுக்காகப் பிரச்சாரம் செய்து விடுவது என்ற முடிவில், தம்மைத் தாமே அடிக்கடி தேற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும், சலிப்பும், தளர்வும் பெரியாருக்கு நேரிட்டு வந்தன. தனிப்பட்ட முறையில், காமராசரைத் தவிர, பெரியாரிடத்தில் கனிவோடு நடந்து கொண்ட காங்கிரஸ் மந்திரிகள் வேறு எவருமிலர் பார்ப்பனரல்லாத சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களிலும், இனவுணர்வு படைத்த மிகச் சிலரே, பெரியாரை மதித்துப் போற்றியவர். ஆட்சியிலுள்ள அதிகாரிகளிலும், பார்ப்பனரல்லாதாரும்கூடப் பெரியாரிடம் அணுக அஞ்சியே ஒதுங்கினர். அரசியல் ரீதியாகவும், தங்களுக்கு என்றே முழு நேரப் பிரச்சாரம் செய்து வரும் திராவிடர் கழகத்தைக் காங்கிரஸ் கட்சியோ, கட்சிச் சார்பான ஏடுகளோ அங்கீகரிப்பதில்லை. மாறாகத், தாக்கிய சம்பவங்கள் உண்டு அரசு விளம்பரம், செய்தி முதலியவை “விடுதலை” க்குத் தரப்பட்டதே கிடையாது! இன மானங்காக்கும் ஒரே இலட்சியத்துக்காகப் பெரியார் இந்தத் தடவையும் காங்கிரசை ஆதரித்தார், மனப்பூர்வமாக!

17.9.1966 பெரியார் 87 ஆண்டுகளைக் கடந்து 88ல் பொன்னடி பதித்திடும் நாள். வழக்கம் போல் கழகத் தோழர்களுக்குப் பெரியார் தமது பிறந்தநாள் செய்தி ஒன்றை அருளினார்:- "எனக்கு இன்று 88-ஆம் ஆண்டு பிறக்கிறது. நான் பேராசைக்காரனாக இல்லாமல், இயற்கையை ஓரளவுக்காவது உணர்ந்தவனாக இருப்பவன். ஆனால் உங்கள் எல்லாரிடமும் முடிவுப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியவன் ஆவேன். அது மாத்திரமல்லாமல் நான் சிறிதளவு பகுத்தறிவு உடையவனாக இருந்தால் என் வாழ்வில் எனது லட்சியத்தில் முழுத் திருப்தியடைந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியவனாவேன். என் உடலைப் பற்றிய எவ்விதக் கவலையும் இன்றி, நேர்ந்தபடி நடந்து, கிடைத்ததை எல்லாம் நேர்கூறு இன்றி உண்டு, அனுபவித்து வந்த நான், 87 ஆண்டு முடிந்து 88-ம் வயதில் புகுகிறேன் என்ற அதிசயத்தை நினைத்துத்தான், இனிமேலும் வாழ ஆசைப்படுவது பேராசை என்று குறிப்பிட்டேன்.

அது போலவேதான். ஒரு சார்பும் இல்லாதவனாகத் தனித்து, எந்த ஓர் ஆதரவும் அற்றவனாகி, என்னையே எண்ணி நின்று, பாமர மக்கள், படித்தவர்கள், பிறவி ஆதிக்கக்காரர்களாகிய பார்ப்பனர்கள், சர்வ சக்தியுள்ள பத்திரிகைகாரர்கள், போதாக் குறைக்கு அரசாங்கத்தார் ஆகிய அனைவருடைய வெறுப்புக்கும் அதிருப்திக்கும் எதிர்ப்புக்கும் விஷமப் பிரச்சாரத்திற்கும் தண்டனை கண்டனங்களுக்கும் ஆளாகி இருந்து, எதிர்ப்பையும், போராட்டங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்துப் பொது மக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை - இவை கனவு அல்ல, உண்மை நினைவே, காரிய சாத்தியமே - என்று கூறிவந்து, அவைகளின் நடப்புகளையும், நடப்புக்கு ஏற்ற முயற்சிகளையும் நேரில் கண்டு களிக்கிறேன் என்ற கருத்தில் தான், எனது இலட்சியத்தில் என் தகுதிக்கு ஏற்ற அளவில் முழுத்திருப்தி அடைகின்றேன் என்று குறிப்பிட்டேன்.

நான் காங்கிரசிலிருந்து விலகிய போதே, இனி இந்தியாவின் ஆட்சி ஜனநாயகமாகத்தான் இருக்க வேண்டும் என்று முதல் முதல் கருதியவன் நான்தான்! அதனால்தான் ஜனநாயகம் என்ற வடமொழிக்கு நேரான “குடி அரசு" என்பதாக என் பத்திரிகை துவக்கினேன். குடி அரசு ஆட்சியின் கொள்கை சமதர்மமாக இருக்க வேண்டுமென்று, 1927, 28 சுயமரியாதை மாநாடுகளில் தீர்மானங்கள் இயற்றி, 1930 ஈரோடு மாநாட்டில் சமதர்மத்துக்கு விளக்கத் தீர்மானங்களாகச் சில நிறை வேற்றினோம்:- நபர் ஒன்றுக்கு 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் - கூடாது. அதுவும் உழுகிறவனுக்குத் தான் நிலம் இருக்க வேண்டும். பண்டங்கள் உற்பத்தி செய்வோருக்கும் உபயோகிப்போருக்கும் இடையில், எந்த உருவத் தரகர்களும் இருக்கக் கூடாது. கல்வி விஷயம், எல்லாருக்கும் பத்தாம் வகுப்பு வரை, அதாவது இன்றைய எஸ்.எஸ்.எல்.சி. வரை, சர்க்கார் அளிக்கும் இலவசக் கல்வியாக இருக்க வேண்டும். உயர்தரக் கல்லூரிக் கல்விக்கு அவரவர் தங்கள் செலவிலேயே கற்று வரும்படிச் செய்ய வேண்டும்.

ஆனால், இன்று எல்லா மக்களுக்கும் எல்லாச் செலவையுமே சர்க்கார் ஏற்று, இலவசக் கல்வியாக ஆக்கப் போவதாகத் தெரிகிறது. ஆகவே மேலே குறிப்பிட்ட எனது கனவுகள் நினைவாக, நேரிடையாகச் செயல்படுவது எனக்குத் திருப்தி அளிக்கக் கூடியவை அல்லவா? எனவே, நான் எனது இலட்சியத்தில் மனக் குறையடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கின்றேன். இதை 4, 5 மாதங்களுக்கு முன் காமராசர் வெளியிட்டார். பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை - என்பதாகப் பேசினார்.

இனி எனக்கேதாவது குறை, கவலை இருக்குமானால் அது, மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை, காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலக்கை என்றுமே அடைய முடியாது என்பதோடு, அதிகக் காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆனால், சண்டித் தொல்லையாகவே கருதுகிறேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும், தொல்லைக்கு ஆளாவது சகஜம்தான்!

எனது அருமைத் தோழர்களுக்கு - தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனையின்றி ஆதரித்து, காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பதுதான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும். தேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக் கொண்டு, போர்முனைக்குச் செல்லும் போர்வீரன் போல், தாய் தந்தை மனைவி மக்களிடம் பயணம் சொல்லிக் கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும்..."

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆணவம் மிகுந்து விட்டது. இந்தத் தடவை அது ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால்தான் அது வழிக்கு வரும் என்ற பரவலான கருத்தும் தமிழகத்து மக்களின் உள்ளத்தின் அடித்தளத்தில் முளைவிடத் தொடங்கியது. இராயபுரத்திலுள்ள ஐந்தாறு சிறுவர்கள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்றே பெரியார் நம்பிக் கொண்டிருந்தார். பெரியாரின் எதிர்ப்பு, யானை தன் மத்தகத்தால் குட்டிகளை மோதியே, தாக்குதலுக்குப் பழக்குவதுபோல், எத்தகைய எதிர்ப்புகளையும் தாங்கச் செய்வதற்கான வல்லமையைத் தமக்குத் தருகின்ற பயிற்சி என்று அண்ணா கருதி வந்தார். அதனால், அண்ணா மிகுந்த ராஜதந்திரத்துடன், காங்கிரசுக்கு எதிர்ப்பான கட்சிகளை ஓரணிக்குள் கொண்டு வந்தார். கூட்டணி என்று அமைக்காமலே, தொகுதி உடன்பாடு முறையைப் புகுத்தி, வெற்றிகரமான உடன்பாடுகளை மற்றக் கட்சிகளுடன் அண்ணா செய்து கொண்டார். எறும்பையும் மூட்டைப்பூச்சியையும் நசுக்குவது போல் அழித்து விடுவேன் என்று முன்பு மிரட்டிய ராஜாஜியே தன்னை ஆதரிக்குமாறு செய்து விட்டார் அண்ணா. நம்முடைய கட்டை விரலை வெட்டுவதாகச் சொன்ன காமராசர், தமிழ் நாட்டு அரசியலை விட்டு விலகி டெல்லி அரசியலில் கலந்துவிட்டார். அதனால் தமிழகத்து நிலவரம் புரியாமல், “நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்“ என்று சபதம் போட்டுவிட்டார். “ஆகட்டும் பார்க்கலாம்” என அண்ணா முனைந்து பணியாற்றினார். பெரியாரை எந்த மேடையிலும் தாக்குவதே கிடையாது!

பெரியாரால் பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்ட காமராசர், அகில இந்திய அரசியலில் இணையற்ற செல்வாக்குப் படைத்தவராக வினங்கினார். நேரு காலத்தில் கிடைத்த காங்கிரஸ் தலைமைப் பதவி, சாஸ்திரி காலத்தில் தொடர்ந்து, இந்திரா காலத்திலும் நீடித்தது. பிரதமர்களையே உருவாக்கும் மகா வல்லமை படைத்தவராக ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் உயர்ந்திருப்பதை, இந்தியப் பார்ப்பனர் எத்தனை நாளைக்குப் பொறுத்துக் கொள்ள முடியும்? பூரி சங்கராச் சாரியார் மற்ற சங்கராச்சாரியார்களைவிட முரடர். அரசியல்வாதிகளுக்கு உண்டான அழுத்தம் உள்ளவர். முன்பு பத்திரிகையாசிரியராக இருந்திருக்கிறார். உணவுக்காகப் பசுக்களைக் கொல்வது பாவம்; இந்து தர்மத்துக்கு விரோதம்; பசுவதையைச் சட்டப்படித் தடுக்க முழுமையான ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என்ற சாக்குச் சொல்லித், தான் உண்ணாவிரதம் தொடங்குவதாக விளம்பரம் செய்தார். காந்தியாருடைய உண்ணாவிரதத்தையே சண்டித்தனம்; வெற்றியளிக்காத சாதனம் என்றெல்லாம் கண்டித்த பெரியார், பூரிசங்கராச்சாரியாரை விடுவாரா?

"பசுவைக் கொல்வது மாத்திரம் கூடாதது என்பதற்கு என்ன அவசியம் என்பது நமக்குப் புரியவில்லை . பால் கறக்கும் பெண் மாடு நல்ல நிலையில் இருந்தால், அந்தப் பசுவை யாரும் கொல்லுவதில்லை. வேலைக்கு லாயக்காக இருக்கும் ஆண் மாட்டையேகூட நம் நாட்டில் யாரும் கொல்வதில்லை.

இது எப்படியோ இருந்தாலும், உலகில் பொதுவாக 100க்கு 95 மக்களுக்குப் பசு ஒரு ஆகாரப் பண்டமாய் இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 46 கோடி மக்களில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் 10 கோடி போக, ஆதித் திராவிட மக்கள் சுமார் 6 கோடி போக, மீதி உள்ள 30 கோடி மக்கள் மாத்திரமே பசு மாமிசம் சாப்பிடாதவர்களாக இருக்கலாம். எனவே, இந்தியாவில் மூன்றில் ஒரு பாகம், அதாவது 100க்கு 33 மக்களுக்கு ஆகாரமாய், உணவாய் இருக்கும் ஒரு ஜீவனைக் கொல்லக் கூடாது என்றால், இதில் ஆணவம் தவிரக் கூடாது என்பதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? உலகில் உண்மையாய் மாமிசம் சாப்பிடாதவர்கள் - 300 கோடியில் சுமார் 20 லட்சம் பேர் கூட இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக, இவர்கள் மனம் புண்படும் என்பதற்காக, அல்லது இவர்களது மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்பதற்காக, யாரும் மாட்டைக் கொல்லக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும் என்று ஒருவர் உண்ணா விரதம் இருந்தால், அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்துத்தான் காப்பாற்ற வேண்டும்!

நான் எனது 25 வயதிலிருந்தே மாட்டு மாமிசம் சாப்பிட்டு இருக்கிறேன். பல தடவை, மாட்டு மாமிசம் சாப்பிட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, எழுதியிருக்கிறேன். இன்றைய நிலைமையில் ஏழைகள் மாமிசம் சாப்பிட வேண்டுமானால், மாட்டு மாமிசந்தான் மலிவாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது. மாட்டு மாமிசத்தில், நாம் சாப்பிடும் மற்ற மாமிசத்தைவிட உணவுச் சத்து அதிகமாக இருக்கிறது. மேலும், பன்றி, கோழி, மீன், பறவைகளைப் போல, மலம் பூச்சி புழு முதலிய அசிங்கத்தை மாடு சாப்பிடுவதில்லை! ஆதலால் மாடு வதை கூடாது என்பது ஒரு நாளும் அறிவுடைமை ஆகாது. அதை வலியுறுத்துகிறவர்கள் யாராயிருந்தாலும், அரசாங்கமானாலும், அவர்கள் மரியாதையாய் வேறு நாட்டிற்குப் போய் விடுவதே மானமுள்ள காரியமாகும்." (விடுதலை 17.10.1966)

டெல்லியில் உள்துறை அமைச்சரான நந்தா, பெரியார் கூற்றுப்படி ஒரு சரியான அழுக்கு மூட்டை. சோதிடப் பித்தர். சாது சந்நியாசிகளின் அடிமை. இவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர். நிறைவேறாத ஏக்கம் மிகுந்தவர். இவரது ஆதரவு பூரிசங்கராச்சாரிக்கு இருந்தது போலும்! 6.11.66 “விடுதலை“ தலையங்கத்தில் பெரியார் இந்த போலிச் சாதுக்களின் போக்கிரித்தனத்தைக் கண்டித்துப் 'பார்ப்பனர்களே இப்போது நாட்டில் அராஜகத்தைத் தூண்டுகிறார்கள். இனி அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றெல்லாம் பேசி வருகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் இனி மந்திரிகளைத் தாக்கிக் கொல்ல வேண்டியதுதான் பாக்கி என்னும் விதத்தில், காலித்தனங்களையும் வன்முறைகளையும் செய்கிறார்கள். எச்சரிக்கையாயிருக்க வேண்டும்” என்று எழுதினார்.

7.11.66 அன்று டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இந்து மத வெறியர்களால் நடத்தப்பட்டது. பூரி, சிருங்கேரி மட சங்கராச்சாரியார்கள் தலைமை ஏற்றார்கள். சாதுக்கள், சந்நியாசிகள் எனப்படுவோர், பல்லாயிரக் கணக்கில் திரண்டார்கள். பசுவதை கூடாது என்று கூறி, மனித வதையில் இவர்கள் இறங்கினார்கள்! ஆர்ப்பாட்டத்தில், வழக்கம் போல் சம்பந்தமில்லாத காலிகளும் இறங்கினார்கள். போலீசார் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை . குண்டுக்குச் சிலர் இரையானார்கள். பல வீடுகள் தீக்கிரையாயின.

இந்த அமளி நடந்தபோது காமராஜர் தமது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். காலிகள் திட்டமிட்டு அவர் இல்லத்தைத் தாக்கியதோடு, நாற்புறமும் சூழ்ந்து நெருப்பும் வைத்து விட்டனர். கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு காமராஜர் தப்பிப் பிழைக்க உதவியவர் கோதண்டபாணி என்னும், திராவிட முன்னேற்றக் கழகத் தமிழ்த் தோழர் ஒருவராவார்!

இந்தக் காலித் தனத்தைக் கண்டு உண்மையிலேயே பெரியார் மிகவும் மனம் பதறிப், பதைத்துப் போனார். 15.11.1966 “விடுதலை”யில் தீவிரமான ஓர் அறிக்கை வெளியிட்டார் பெரியார்.

"இந்தியா முழுவதிலுமிருந்து பார்ப்பன சாதுக்கள், சந்நியாசிகள் ஆயிரக்கணக்கில் டெல்லியில் கூடிக் கலவரம் செய்திருக்கிறார்கள். பசுவதை தடுத்தல் என்பது பொய்யான ஒரு காரணமேயாகம். காரணம், பார்ப்பனருடைய வர்ணாசிரம தர்மத்துக்குக் கேடு வந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக்கியதும் காமராஜர் என்கின்ற ஒரே காரணந்தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கிய காரணமாகும்.

பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கிறதென்பது, அப்துல்காதர் ஆடி அமாவாசையன்று தன் தகப்பனாருக்குத் தர்ப்பணம் கொடுத்தார் என்பது போன்ற கதையேயாகும். எல்லா ஆரியர்களுக்கும் மாடுதான் முக்கிய ஆகாரமாய் இருந்திருக்கிறது. இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட மக்களுக்குப் பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன்தான் நம்புவான்?

நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல் ஓர் இரட்சகர் இதுவரை தோன்றியதில்லை. அதனால்தாள் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும், காமராஜர் மீது ஒரு கண் வைத்து இருக்கின்றார்கள். அவர் இருந்த வீட்டைக் கொளுத்தினார்கள். காமராஜருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டமில்லை, அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள். அவ்வளவு தான் பிறகு நம் நாடு வர்ணாசிரம தர்ம நாடாகிவிடும். பலருக்கும் நாதியற்ற நிலை ஏற்படும். பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படியோ இருக்கட்டும்; இனிக் காமராஜர் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொருவரும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றைத் தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். சீக்கியர்களது மத தர்மம் போல், கண்டிப்பாகக் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காரியம் காமராஜரைப் பாதுகாக்க அல்ல! நம் நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ஜாதி (சூத்திர) மக்களை இழவிலிருந்தும், அடிமை நிலையிலிருந்தும், படுகுழிப் பள்ளத்தில் இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கத்தான்!"

பூரிசங்கராச்சாரியார் பசுவதையைத் தடுக்கத் தம்மைத் தாமே வதைத்துக் கொண்டு உண்ணாவிரம் இருக்கத் தொடங்கினார். இவ்வளவு காலித்தனங்களையும் மறைக்க இப்படி நாடகமாடினால் அரசு வேடிக்கை பார்க்குமா? அவரைக் கைது செய்தது. பெரியார் மிகவும் மகிழ்ச்சியுற்றார். குன்றக்குடி அடிகளாரைக் கைது செய்தபோது சும்மாயிருந்தவர்கள், இதற்கும் சும்மாயிருக்க வேண்டியதுதானே யோக்கியத் தன்மை என்றார். நாடெங்கும் நமது தோழர்கள் சர்க்கரை, மிட்டாய் வழங்கி மகிழ்ச்சி கொண்டாடுங்கள். சங்கராச்சாரியாரைக் கைது செய்ததற்காக டெல்லி அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். சட்டத்தை மீறுகிறவர்கள் யாராயிருந்தாலும், ஒன்று போல் சமமாக நடத்தப்படுவார்கள் என்று காட்டிக் கொண்டதற்காகப் பாராட்டுகிறேன் - என்று பெரியார் நவம்பர் 24-ம் நாள் “விடுதலை”யில் எழுதினார்.

காமராசரைத் தாக்க முயன்ற சங்கராச்சாரிக் கூட்டத்தைக் கண்டித்து, நாடெங்கும் கண்டன நாள் நடத்திப் பிரச்சினையைப் பெரிதாக்க முதலில் எண்ணிய பெரியார், இந்த ஒரு சங்கராச்சாரி என்ற தனிப்பட்ட மனிதரைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி, நாம் ஏன் ஆயிரக்கணக்கில் சிறை சென்று, நமது தோழர்களின் சக்தியை விரயமாக்க வேண்டும், என்று சிந்தித்துக், கருத்தினை மாற்றிக் கொண்டார். “தேர்தல் நேரத்தில் எதிரிகள் இதைத் தங்களுக்குப் பலமாக எடுத்துக் கொள்வார்கள். ஆகையால், தோழர்களே! உங்கள் வேகத்தைத் தேர்தலில் காண்பியுங்கள்! தேர்தலுக்குப் பிறகு நமக்கு நம் வேலை நிறைய இருக்கிறது" என்றார் பெரியார்.

சென்னை விருகம்பாக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகம், 1966 டிசம்பர் 29,30,31, 1967 ஜனவரி 1 ஆகிய நான்கு நாட்களும் மாநாடு நடத்திற்று. அண்ணா தலைமையில், கலைஞர் மாநாட்டைத் துவக்கினார். காஞ்சி கல்யாணசுந்தரம் கொடியேற்றினார். ஏ.கோவிந்தசாமி கலைவாணர் பெயராலமைந்த கண் காட்சியைத் திறந்தார், தீவுத்திடலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தின் தலை விருகம்பாக்கத்தை அடைந்தபோது, வால் தீவுத் திடலிலேயே இருந்தது. 15,000 சைக்கிள், 500 பஸ், பல லட்சம் மக்கள்! மாநாடும், ஊர்வலமும், மக்களின் ஆரவாரமும் ஓர் அரசியல் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பினால், அந்த வெற்றி தி.மு. கழகத்திற்கே கிடைக்கும் - என்று பத்திரிகைகள் கருத்துரைத்தன,

பார்ப்பனப் பத்திரிகை விளம்பரங்களும், சினிமாக் கவர்ச்சியும் கூட்டத்தைச் சேர்க்கலாம். ஆனால் கொள்கை அடிப்படையில் மக்களின் ஓட்டைச் சேர்க்க அவர்களால் முடியாது. இந்த முறையும் காமராஜரின் காங்கிரஸ்தான் தமிழ் நாட்டை ஆளும்-என்று திடமாக நம்பித், தம் பணியை முடுக்கிவிட்டார் பெரியார், 1966-ல்!

1967-ல்?