தந்தை பெரியார், கருணானந்தம்/021-021

விக்கிமூலம் இலிருந்து

 
19. சிறந்தார்
சிறப்பு இயல்புகள் - இதயப்பாங்கு - பழக்க வழக்கங்கள் - பின்பற்றத்தக்க தனிமனித ஒழுங்கங்கள் -
பண்புகள் - பண்பாடுகள் - புறந்தோற்றமும் அகத்தழகும்.

ற்றுக்கண் அடைபட்டு விட்டது. இனி அறிவு ஊற்றுச் சர்ந்து புதிதாக நீர்பெருக வழியில்லை. ஏற்கனவே சுரந்து பெருகிய நீர்தான் அருவியாய் இழிந்து ஓடைகளில் ததும்பி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. வற்றாத செல்வம் வறண்டது; வறுமை திரண்டது! வெறுமை நிறைந்தது!

புத்தி மார்க்கம் கண்டதால் புத்தரெனப் பெயர் பெற்றார் சித்தார்த்தர். மக்களிடையே புகுந்து மடமை ஒழிக்கப் பாடுபட்டார். அவர் கொள்கை இன்று உலகெலாம் பரந்து கிடக்கின்றது; ஓரளவு மாறுதல்களுக்குள்ளான போதிலும் பகுத்தறிவு மார்க்கங்கண்ட இராமசாமி, மக்களிடையே புகுந்து அவர்களுக்காக அயராது பாடுபட்டதால் தந்தை பெரியார் ஆனார். இன்று அவர் கொள்கைகள் உலகத்தால் வியப்புடன் ஆராயப்படுகின்றன. மனிதாபிமான அடிப்படையில் அமைந்த அவர் கொள்கைகள்தாம் இன்று தமிழகத்தை ஆள்வதோடு எதிர்கால உலகை ஆளவும் போகின்றன. அவரில்வாத நேரத்தில் அந்தப் பெருமகனாரின் சிறப்புகளை நினைவு கூர்வதுதான் பொருத்தமுடையதாகும்.

பெருந்தன்மைக் குணம், பரந்த உள்ளம், இரக்க மிகு பண்பு. இளகிய மெல்லிதயம் இவை பலாச்சுளைபோல் உள்ளிருக்க; முள் நிறைந்த பலாத்தோல் போல் புறத்தே காணப்பெறும் மேடைத் தோற்றத்தின் முரட்டுத்தன்மை, மூடமதியைச் சாடும் வேகம், அநீதி எனில் பொங்கி எழும் சீற்றம், அச்சந்தயை தாட்சண்யத்திற்கடங்காத ஆண்மைத் திண்மை இவற்றை மட்டுமே பார்த்து அணுகிட அஞ்சி நெருங்காதோரே அநேகர், பெரியாரிடம்!

திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துறையும் மழலைகளைப் போலவே, இந்தத் தமிழகத்துக் கோடானு கோடி பின்னடைந்த மக்களையும் தவிக்கவிட்டுப் போன ஏத்தலின் எண்ணிலா அருளாட்சித் திறன்களை எண்ணுதல் இன்பந் தருவதாகும்; அன்போடியைந்த நன்றிக் கடனாற்றுதலுமாகும்!

யாருக்காவது பெரியார் பொருளுதவி செய்தால்-(பலருக்குச் செய்துள்ளார் வெளியில் தெரியாமல், தனது டைரியில் குறித்துக் கொண்டு அதைச் சொல்லிக் காட்டி வெளிப்படுத்தவே மாட்டார். ஆனால், பண விஷயத்தில் யாராவது நாணயக் குறைவாக நடந்தால், அவர்களை மன்னிக்கவே மாட்டார். தவறு செய்தவர் நேர்மையாகத்தாமே ஒத்துக் கொண்டால், அத்தோடு மறந்து விடுவார் நாணயங்காக்கும் பெரியார்!

தாம் செய்து வருவது நன்றி கிட்டாத பணி- Thankless job என்பது நன்கு தெரிந்திருந்தும், சமுதாய நலனுக்காக அதையே தொடர்ந்து செய்து வந்தார். அதனால், நிச்சயம் தம்மிடம் நன்றியோடு நடந்து கொள்ளக் கடமைப்பட்டோர் கூட, மறந்து விட்டால், அதைப் பொருட்படுத்தும் பழக்கமே இல்லாது போயிற்று, பெரியாரிடம் அதே தேரத்தில் தமக்கு யாரும் உதவி செய்தால் அல்லது செய்வதாகச் சொல்லிவிட்டால் கூடப்போதும் அவருக்குத் தாம் மிகவும் கடன்பட்டதாக எண்ணிக் கொள்வார். உதாரணமாகக் காரில் செல்லும் போது, பாதை தெரியாமல் வழிப்போக்கரிடம் கேட்டு, அவர் சொன்னால், அவருக்குத் தாமே நன்றி - (Thanks) சொல்லிய பின்புதான் டிரைவர் காரை எடுக்க அனுமதிப்பார் பெரியார்.

பொதுப் பணியில் ஈடுபடுவோர் தமது சொந்த (Self) மான அவமானங்களை ஒரு பொருட்டாய்க் கருதக் கூடாது என்பது தன்மானத் தந்தை பெரியாரின் கொள்கை. திருக்குறளில் வேறு எதை விரும்பாவிட்டாலும்வட, “குடிசெய் வார்க்கில்லை பருவம் மடி செய்து மானம் கருதக்கெடும்” என்ற குறளை அவர் மிகவும் விரும்புவார்.

அவர், பதவிகளைத் துச்சமாக மதித்தார். ஆனால் பதவிகளில் இருப்போரைப் பெரிதும் மதித்தார். இதற்கு எடுத்துக் காட்டுகள் பெரியாரின் வாழ்க்கையில் ஏராளமாக உண்டு. அவரைச் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருக்கச் சொல்லி 1939 -ஆம் ஆண்டிலேயே சவர்னர் வேண்டினார். இராஜாஜியும் கேட்டுக் கொண்டார். பதவிக் கூண்டில் சிக்கிக்கொள்ள அந்தச் சுதந்திரச் சிங்கம் விரும்பியதேயில்லை பெரியார் பொதுவாழ்க்கையில் இறங்கிய நாளிலிருந்து, தமிழகத்தில் முதலமைச்சர்களாக வீற்றிருந்தவர் அத்தனை பேருமே அவருடைய நண்பர்களாகவோ, தோழர்களாகவோ, தொண்டர்களாகவோதான் இருந்திருக்கிறார்கள். தம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருப்பினும், தம்மைக் காணிவருவோர் யாவரேயாயினம். பெரியார் எழுந்து நின்று, இருகை கூப்பி வணங்கி, “வாங்க வாங்க” என்று பரிவோடும் மரியாதையோடும் அழைத்து, அமரச் செய்வார். வெளிவாயில் வரை சென்று, அவர்களை வழியனுப்பி வைப்பார். முன்பே அறிமுகமானவர்களாக இருப்பின், அவர்கள் பெற்றோர், குடும்பத்தார், சுற்றத்தார், மற்றும் ஊரார் எல்லாரையும் நினைவு கூர்ந்து நலம் விசாரிப்பார் பெரியார்.

பதவியிலிருப்போரை நாம் மதித்து நடந்தால்தான் அவர்களை மக்கள் மதிப்பார்கள் என்று கருதி, அய்யா வாங்க என்று பணிவோடு பேகவார் பெரியார். பெரியவர் என்ன சொன்னார். அய்யா எதாவது பேசினாரா?' என்று, அமைச்சர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் வயது பற்றிக் கருதாமல், பதவி பற்றிக் கருதி, அவர்களில்லாத நேரத்திலும் மரியானதயோடு விசாரிப்பார். குன்றக்குடி அடிகளாரிடம் 1953-ஆம் ஆண்டு முதல் பெரியாருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கொள்கை, நடைமுறைகளில் இருவரும் இரு வேறு துருவங்களாயினும், இருவரது இலட்சியமும் ஒன்றேயாதலின் அன்போடு பழகி வந்தனர். பெரியாரை விட அடிகளார் 45 வயது இளையவர், எனினும், அடிகளாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'மகா சந்நிதானம் சுவாமி அவர்களைப் பிரார்த்தித்துத் கொள்கிறேன்' என்று தான் பெரியார் சொல்லுவார்.

யாராவது வந்திருக்கும் போது பெரியார் தமக்கு அருகிலுள்ள ஒரு பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்து விட்டால், அதிலிருந்தே சாடை புரிந்து கொள்ள வேண்டும்; போகச் சொல்கிறார் என்று! மேலும், வருபவர் பெரியாரை முகத்துக்கு நேரே ஏதாவது கூறிப் புகழத் தொடங்கினால், அதனால் மயங்கி விடமாட்டார்; ஆனால், ஆள் ஏதோ ஏமாற்றப் பார்க்கிறார் என்று எச்சரிக்கை ஆகிவிடுவார்.!

சாப்பாட்டு நேரத்தில் விருந்தினர் வந்து விட்டால் பெரியார் மிகவும் மகிழ்ச்சி கொள்வார். பொதுவாகவே, மற்ற நேரங்களை விடக் குதூகலத்துடன் பெரியாரைக் காணக் கூடிய வேளையே, உணவு கொள்ளும் வேளைதான்! “அம்மா!” என்று அழைத்து - நாகம்மையார் காலத்திலும் சரி, மணியம்மையார் காலத்திலும் சரி - அவர்களுக்கு உடனே உணவு பரிமாறச் சொல்வார். தலைவர்கள் வீட்டில் நண்பர்களையோ, தொண்டர்களையோ, அலுவலகப் பணியாளர்களையோ சாப்பிடச் சொல்லும் பழக்கம் அந்தக் காலத்தில் பெரியாரிடம் மட்டுமே இருந்தது!

சாப்பிடுவோரின் உண்கலத்தை நன்கு கவனித்து, அவர் எதை விரும்பிச் சாப்பிடுகிறாரோ அதை மீண்டும் பரிமாறச் செய்வார் பெரியார். இறுதிவரை அவர் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுகின்றாரா என்றும் கவனிப்பார். கலத்தில் ஏதாவது விட்டுச்சென்றால், ‘பண்டத்தைப் பாழாக்கலாமா?’ என்று மிகவும் கோபித்துக் கொள்வார். அவருடைய பழக்கமே, தமது உண்கலத்தில் பரிமாறப்பட்ட உணவை மீதியாக்காமல் சாப்பிட்டு, அஜீர்ணத்தால் அவதிப்படுவது தானே! நேற்று ஒரு பண்டத்தைச் சாப்பிட்டு, அது செரிக்காமல் தொந்தரவு கொடுக்கிறது என்று தெரிந்தாலும், இன்றும் அதே பண்டம் வைக்கப்பட்டால், மறுக்காமல் சாப்பிட்டுத் துன்பப்படுவது வாடிக்கை, பெரியாருக்கு:

வெளியூர்ப் பயணங்களின்போது தம்முடன் வருகின்ற தோழர்கள், உதவியாளர்கள், டிரைவர் முதலியோரும் சாப்பிட்டார்களா என்று தெரிந்து கொள்வார், பெரும்பாலும் உடன் அமர்த்திக்கொண்டே உண்பார்; அல்லது அவர்கள் சாப்பாடு முடிந்த பிறகே புறப்படுவார், இதுவும் பெரியாரின் தனிப் பண்பாடாகும்.

துவக்க நாட்களில் குதிரை பூட்டிய சாரட்டு வண்டியில் சவரி செய்தவர், பிறகு ஒரு கார் வைத்திருந்தார். இடைக்காலத்தில் 1944; வரை ஈரோட்டில் ஒரு சாதாரண ஒற்றை மாட்டு வண்டிதான் பெரியாரிடம் இருந்தது; யுத்த காலமாக இருந்ததால் கார் வைத்துச் கொள்ளவில்லை. இரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்து, வந்தார். வேறு யாராவது அவருக்காக இரண்டாம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு டிக்கட் வாங்கி வந்துவிட்டால்கூட, வருத்தப்படுவார்; அதைத் திருப்பித் தந்து, மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்; அதில் மிச்சமாகும் பணத்தை நிதியில் சேர்த்து விடுவார் பெரியார்! புகைவண்டி வருவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே நிலையத்தை அடைந்துவிடுவார். இதை யாராவது தாமதப்படுத்தினால், அவர்கள் பெரியாரின் கடுங்கோபத்துக்கு ஆளாக வேண்டும்!

குறிப்பிட்ட நேரம் தவறாமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லும் Punctuality என்னும் பண்பினை அவரளவு சரியாகக் கடைப்பிடித்த தலைவர் உலகிலேயே வேறு எவருமிலர். அதே போல், தாம் ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் கட்டாயம் எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் சென்று விடுவார்.

காலை 6 மணிக்குமேல் பெரியார் உறங்குவதில்லை. காலைக் கடன்களை முடிக்கும் போதே சில பத்திரிகைகளைப் படித்து முடித்து விடுவார். இரண்டு மூன்று இட்லியும் காப்பியும் காலை உண்டி. மீண்டும் பத்திரிகை படித்தல், பேசிக்கொண்டிருந்தல், புத்தகம் படித்தல், எழுதுதல், கடிதங்கள் பார்த்துப் பதில் வரைதல், மதிய உணவு கட்டாயம் புலாலுடன். பின்னர் சிறிது பொழுது கண் அயர்தல், பிஸ்கட், மலைவாழைப்பழம், காப்பி -சிற்றுண்டி. பயணநேரங்களில் வேனிலேயே உண்ணல், உறங்கல்! இரவு உணவு பெரும்பாலும் இட்லி, ஓய்வாகச் சாய்ந்து கிடப்பது அவர் வாழ்க்கையில் நடவாத ஒன்று. கார் பேட்டரி ஓட்டத்தில் சார்ஜ் ஆவது போல், பெரியாருடைய உடலும் உழைப்பில்தான் உற்சாகம் பெற்றது.

5 முழ வேட்டி (பின்னாட்களில் கயிலி); உடம்பில் உள்ளே மெல்லிய வெள்ளைத் துணியில் அரைக் கைச்சட்டை! அதிலுள்ள பையில் மணிபர்ஸ்! மேலே முக்கால்கை கருப்புச் சட்டை (1945 முதல்) அதன் பைகளில் - டயரி. கண்ணாடிக் கூடு, முக்கிய காகிதங்கள், தடியான பேனா, பின்னாட்களில் ஒரு பெரிய லென்ஸ்ஆகியவை. மேலே, துடைப்பதற்காகும் துண்டு ஒன்று; எப்போதும் நீங்காத பிரம்புக் கைத்தடி; குளிர் காலத்தில் ஒரு கம்பளிச்சால்வை; செருப்புகள், பழைய ஃபிரேமில் அடங்கிய மூக்குக் கண்ணாடி - குளிப்பதும், துணிகளைத் துவைப்பதும், உடை மாற்றுவதும் அன்றாடக் கடமைகளாகக் கருதியோ, அவரே விரும்பியோ செய்து கொண்டதில்லை, என்றுமே! அம்மையாரின் தொண்டில் இவையும் இணைந்தவை! |

"நான் (Decency) சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதிகப் பணம் கொண்ட, - மக்கள் கவனத்தை ஈர்க்கத்தக்க - ஃபாஷன் நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல; (Simple) சாதாரணக் குறைந்த தன்மையில் முடியும் என்று சொல்வேன்" என்கிறார் பெரியார்.

கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் இவற்றிலிருந்து வேறுபட்ட தல்லவா சிக்கனம்? இது சேமிப்புக்கு அடிப்படையாயிற்றோ சிக்கனமாயிருந்து சேமித்த சொத்துகள், இன்று எப்படிப் பல்கிப் பெருகிச் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ஆதாரமாக நிறைந்து விளங்குகின்றன! பெரியார் என்ற தனி மனிதரின் எளிமைதானே இதற்குக் காரணம்?

புத்தகம் வாங்குவதில் அவர் சிக்கனம் கூடப் பார்ப்பதில்லை , "ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது. 50 ரூபாய் விலை, ஆனால் நமக்கு உதவக்கூடியது!" என்று தயக்கத்துடன் தலையைச் சொரியும் வீரமணியை விளித்து, "இந்தாப்பா! இரண்டு புத்தகமாக வாங்கி வா!" என்று பளிச்சென்று கூறி, உள்சட்டைப் பையிலுள்ள பர்சை எடுத்து, மெல்லத் திறந்து, மெல்ல ஒரு நூறு ரூபாய்த்தாளை வெளியில் எடுத்து, மீதியை மெல்ல ஒருமுறை எண்ணிப் பார்த்து, மீண்டும் பர்சை உள் சட்டைப்பையில் மெதுவாகத் திணித்து, வாய்ப்புறத்தில் ஓர் ஊக்கை மாட்டிப், பின்பு, டயரியை வெளியில் எடுத்து, தேதியுடன், 100 ரூபாய் செலவுக்கான விவரத்தை மறக்காமல் அதில் குறித்துக் கொள்வார் பெரியார்.

இரயில் பயணம் செய்யும் காலத்தில் சந்திப்புகளில் வண்டி மாற்றும்போதும், ஏறும் போதும், இறங்கும்போதும் - கையிலுள்ள பெட்டி , ஹோல்டால் போன்ற தமது லக்கேஜ்களை எடுப்பதற்குக் கூலி போர்ட்டர்களை அழைக்க மாட்டார். இருக்கின்ற சாமான்களில் தாமே ஒன்றை முந்திக் கையில் எடுத்துக் கொள்வார். உடன் வருகின்ற மற்றவர்கள் ஆளுக்கு ஒரு சாமான் சுமந்துதானே தீர வேண்டும்? மிகுந்த கனமான 3, 4 புத்தகச் சிப்பங்களை அப்போதெல்லாம் மணியம்மையார் பொறுமையுடன் தூக்கிச் செல்வதுண்டு. "நானே ஒரு மூட்டையைச் சுமக்கும் போது, அதன் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, அது ஓர் அவமானம் தரக்கூடிய இழிவான செயல் என்று நான் கருதியதில்லை" என்று பெரியாரே சொல்கிறாரே

தந்தையார் வெங்கட்டநாயக்கர் தம் சொத்துகளை ஒரு டிரஸ்டாக ஏற்படுத்திடக் காரணமே, பெரியாரல்ல; பெரியவர் ஈ.வெ.கி. தான். அவர் மிகுந்த செலவாளி. ஈ. வெ. கிருஷ்ணசாமியாரின் முதல் மனைவி நாகம்மாள், சேலம் தாதம்பட்டி எம். ராஜுவின் அத்தை. இவருக்குப் பிறந்த ரங்கராம், தாயாரம்மாள் ஆகிய இரு குழந்தைகளும் மதனப்பள்ளி சானடோரியத்தில் இறந்து விட்டனர். இங்கிலாந்தில் பயின்று வந்தவரான ரங்கராமுக்கு, ஆனைமலையில் ரங்கநாயகி அம்மையாரைப் பெண்பார்த்து வைத்திருந்தபோது, அவர் இறந்து போனதால், ஈ. வெ.கி. தமது முதல் மனைவி உயிருடன் இருந்தபோதே, இந்த ரங்கநாயகி' அம்மாளை இரண்டாந்தாரமாக மணந்து கொண்டார். இவருக்கு மிராண்டா (தீன தயாளு) சம்பத்து (சம்பத் குமார வேங்கடவரதன்) இரு குழந்தைகள் பிறந்த பின்னரே, 1927ம் ஆண்டில் முதல் மனைவி நாகம்மாள் மறைந்து போய்விட்டார். சிக்கனமில்லாத ஈ.வெ.சி. ஒரு முறை 10,000 ரூபாய் கடன்பட்டு விட்டார். வெங்கட்டநாயக்கர் அறிந்து வருந்தி, பத்தாயிரம் ஒரு ரூபாய் வெள்ளிப்பண நாணயங்களை ஒரு விகப்பலகை மீது வரிசையாக அடுக்கி வைத்து. “இந்தாப்பா கிருஷ்ணா உன்னை இன்றைக்கு நான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறேன்! இனிமேலாவது, இதோ உன் தம்பி ராமனைப் போலச் சிக்கனமாக நடந்து கொள்!" என்று கூறினார். தந்தையார் பார்வையில் பெரியார் எப்படிக் கருதப்பட்டார் என்பதை விளக்கும் நிகழ்ச்சியன்றோ இது!

தனிப்பட்டவர் யாருக்காகவும் எவரிடத்திலும் எப்போதும் பெரியார் சிபாரிசு செய்ததில்லை ; ஒரே ஒருவருக்காக மட்டும் மூன்று முதலமைச்சர்களிடத்தில் பரிந்துரை புரிந்துள்ளார். கல்வித்துறை இயக்குநராக்குமாறு காமராசரிடமும், கல்வி ஆலோசகராகப் போடுமாறு அண்ணாவிடத்திலும், துணைவேந்தராக்குமாறு இரண்டு தடவை கலைஞரிடமும், பெரியார் தாமே தமது இயல்புக்கு மாறாகச் சிபாரிசு செய்திருக்கிறார்.

பல மருத்துவ மனைகளுக்கும் சென்று, அங்கு கோரிக்கையில்லாமல், பெற்றோர் யாரென்றும் தெரியாமல், கை விடப்பட்டுக் கிடக்கும் குழந்தைகளைக் (Foundlings) கேட்டு வாங்கி வந்து, வைக்கம், வளர்மதி, பாப்பு, அமலா என்றெல்லாம் பெயர் சூட்டி, அவர்களை அன்போடு செல்லமாகப் பெரியார் வளர்த்து வந்த பாங்கு, பார்த்தவரைப் பரவசமாக்கும் இந்தக் குழந்தைகளில் ஒன்று வளர்ந்து, மங்கைப் பருவம் எய்தி, ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டபோது, பிரிவாற்றாமையால் பெரியாரே கண்ணீர் சிந்தி விட்டார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

சட்டத்தை மதிப்பவர் பெரியார்; சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதையே எப்போதும் அவர் விரும்புவார். சட்டத்துக்குப் புறம்பாகத் தாம் எப்போதாவது தவறி நடக்க நேர்ந்து விட்டால், தக்க தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்.

“என் மனைவி முடிவெய்தியபோதும், நான் சிறிதும் மனங்கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை! என் தாயார் இறந்த போதும், இயற்கைதானே? 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா இது பேராசை அல்லவா? என்று கருகினேன். என் அண்ணன் மகன் சங்கராமைப் பத்து வயதில் லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்தோம். 20 வயதில் ஊர் திரும்பிய அவன் இறந்து போனதற்காகவும் பதறவில்லை ; சிதறவில்லை !" “என்று பெரியார் எழுதியுள்ள அனுதாப உரைகளைப் படிக்கும் போது, இவருக்கு எவ்வளவு கல்மனது - இறுகிய நெஞ்சம் - இளகாதபாறை உள்ளம் - என்றெல்லாம் எண்ணத் தோன்றும்! ஆனால், அவரது கட்டுரை இத்தோடு நின்றுவிடவில்லை; நீள்கிறது-"பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. காரணம் - மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது, அவர்களது நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொது நலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே, தமிழர்களைக் காணுந்தொறும், நினைக்குந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது.

செல்வம் நினைவு பெரியாரை எவ்வளவு தூரம், எதற்காக வாட்டியது என்பது புரியும்போது, பொது நல ஊழியர்கள் பால் அவருக்கிருந்த பற்று, பாசத்தின் உயர்வு, வெளிப்படுகின்றதல்லவா?

பெரியாருக்கு இசையில் ஈடுபாடும், ஞானமும் உண்டு. நகைச்சுவை உணர்ச்சியும், நையாண்டியும் நளினமாக இழையோட, அவர் சில நேரங்களில் பேசுவதுண்டு. தெற்குச் சீமையிலிருந்து தொண்டர் ஒருவர் குடும்பத்துடன் பெரியாரைக் காணவந்தார். அடுக்கடுக்காகப் பத்துப் பன்னிரண்டு பிள்ளைகள் அவருக்கு. அவர் சென்றதும், அருகிலிருந்த தமது தோழர்களிடம் பெரியார், “அய்யாவுக்கு ஊரில் தொழில் எப்படி?” என்று கேட்டார்; பிள்ளை பெறுவது தவிர வேறு வேலை இல்லையோ?' என்பதையே நாசுக்காகக் கேட்டார்!

1970-ல் பம்பாய்ப் பயணத்தின் போது தஞ்சை கா.மா. குப்புசாமியின் கார் ஒன்றும் பெரியாரின் வேனைத் தொடர்ந்து வந்தது. ஆடவர்கள் காரிலும், மகளிர் வேனிலும் பயணம் செய்தனர், எங்கேயாவது வேன் நின்றால், காரிலிருக்கும் ஆண்கள் இறங்கி ஓடி, அய்யா என்ன?" என்று வேனுக்குள் ஏறுவார்கள். "அவர்கள் உண்மையில் என்னைப் பார்க்கவா இப்படி ஓடிவருகிறார்கள்? ஏன் அம்மா?" என்பார் பெரியார். தத்தம் மனைவிமார்களைக் காணும் ஆவலில் வருவதாக, இலைமறைகாயாகப் பெரியார் எடுத்துக் காட்டினார்!

சீனாவில் ஆடவரும் மகளிரும் ஒரேமாதிரியான Unisex ஆடை அணிவது போல் நம் நாட்டிலும் இருக்க வேண்டும் என்பது பெரியார் கொள்கை. இதை முதலில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அமுல் செய்யலாம் என்று ஒருவர் ஆலோசனை கூறினார். பெரியாரின் அருகிலிருந்த மணியம்மையார், “அப்படியானால் 110 செட் டிரஸ் வேண்டுமே" என்றார்கள் “அம்மாவுக்கா?" என்று கேட்டு, நிறுத்திக் கொண்டார் பெரியார். அனைவரும் கொல்லென்று சிரித்ததும், அம்மாவுக்கு விஷயம் புரிந்து, வெட்கத்துடன் ஓடிவிட்டார்கள் உள்ளே!

பெரியாருக்கு அபாரமான எஞ்சினீரிங் ஸ்கில் இருந்தது. பந்தல்கள், கட்டடங்களுக்கு அவரே கைத்தடியால் அளவெடுத்துக், கையினால் பிளான்கள் வரைந்துள்ளார். எஸ்டிமேட் தாமே போட்டு விடுவார்.

சர். சி.வி. ராமன் ஒரு நாத்திகர் என்பதும், பெரியாரிடம் ஈடுபாடு உள்ளவர் என்பதும் பலருக்குத் தெரியாது. அதனால் நமசிவாயம் லேப் என்று ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்காகப் பூண்டிக்கு அவரை அழைத்த நீரியல் விஞ்ஞானி பி.குமாரசாமியிடம் “நீங்களும் என்னைப் போல ஒரு நாத்திகர் என்பதால் வருகிறேன். இந்தச் சம்பிரதாயமெல்லாம் எனக்குப் பிடிக்காது” என்றார் சி.வி. ராமன்.

1955-ஆம் ஆண்டு தேசியக்கொடி எரிப்புப் போராட்டம் நடத்துவதாகப் பெரியார் அறிவித்திருந்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். அவரது தலையீட்டிலும் உறுதிமொழியிலும் பெரியார் தமது போராட்டத்தை ஒத்தி வைத்தார். முதலமைச்சருடன் அரசியல் ரீதியாகச் சரியான, சுமுகமான சூழ்நிலை இல்லை பெரியாருக்கு! அப்போது தஞ்சைப் பகுதியில் புயல், வெள்ளத்தால் பலத்த சேதம். பெரியார் தமது அரசியல் மாற்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, மனிதாபிமான உணர்வு. உந்தியதால் முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாய் 7.12.1955 அன்று அனுப்பி உதவினார்.

"எனக்குச் சுதந்தர நினைப்பு! சுதந்தர அனுபவம், சுதந்தர உணர்ச்சி உண்டு. அதை உங்கள்மூன் சமர்ப்பிக்கின்றேன் என்னைப் போலவே உங்களது சுதந்தர நினைப்பு, சுதந்திர அனுபவம் சுதந்தர உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக் கொள்ளக் கூடியவைகளை ஒப்பித், தள்ள வேண்டியவைகளைத் தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரில்தான் நான் எதையும் தெரிவிக்கின்றேன்” என்கிறாரே; இவர்தாம் பெரியார்.

“சுயமரியாதை இயக்கம் என்கிற இஞ்சினைப் பலப்படுத்தி, அது சரியாக ஓடத், தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால், பிறகு எந்த இயந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத், தோல்பட்டையை மாட்டிவிட்டாலும், அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் (Government) இருக்க வேண்டும் என்கிற கவலை யாருக்கும் வேண்டியதில்லை”

எவ்வளவு நம்பிக்கையோடு நவிலப் பெற்ற தெம்பூட்டும் மொழிகள் இவை! பெரியார் தவிர வேறு யாரால் சொல்ல இயலும்?

இந்தியாவில் இந்திரா ஆட்சி உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது, பத்திரிகைத் தணிக்கை முறை அமுலானபோது, மிசா சட்டத்தின் கீழ் பல கட்சித் தலைவர்கள் சிறையிடப்பட்டபோது, பச்சைத் தமிழர் காமராசர் மனம் வெதும்பி மறைந்த போது, தனித் தமிழராட்சியை டிஸ்மிஸ் செய்து - முதன் முறையாகத் தமிழகத்தில் குடிஅரசுத் தலைவராட்சி அமுலானபோது, அட்வைசர்கள் எனும் பார்ப்பன அதிகாரிகள் தந்தை பெரியாரின் 60 ஆண்டு உழைப்பின் பலனை அழித்தொழித்த போது, சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்ட போது, தி.க., தி.மு.க. தலைவர்கள் பலரைச் சிறையிலிட்டு அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தபோது, ஓராண்டுக்கு மேலும் கொடிய அடக்குமுறை ராணுவ ஆட்சிபோல் தலை விரித்தாடியபோது, அனைத்துக்கும் முடிவு கட்டுவது போல், மத்திய ஆட்சியில் காங்கிரஸ் ஒழிந்து - சுதந்திரம் பெற்ற 30 ஆண்டுக் காலத்திலேயே முதன் முறையாக ஜனதாக்கட்சி அரசுக்கட்டிலில் அமர்ந்த போது, மாநிலத்தில் அய்யா-அண்ணா வழி என்று சொல்லிக் கொள்ளும் திராவிட பாரம்பர்ய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியே ஆளவந்த போது, இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டிய மணியம்மையாரை இழிவுபடுத்தியபோது, இந்திரா காந்தியைக் கொல்ல முயன்றதாக அரசு வழக்குத் தொடுத்தபோது, மணியம்மையார் மறைந்தபோது, பிற்பட்டோராகிய சரண்சிங் பிரதமரான போது. வகுப்புரிமைக்கு மாநில அரசு குழி பறித்தபோது -அய்யோ, பெரியார் இல்லையே! என்று தமிழகம் விடுத்த ஏக்கப் பெருமூச்சு காதில் கேட்டிருக்குமே!

எங்கே அந்தப் பெரியார்?
 எங்கே ?
எங்கே தந்தை பெரியார்?