உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார், நீலமணி/அறிஞர் அண்ணா அரியாசனம் ஏறினார்

விக்கிமூலம் இலிருந்து

36. அறிஞர் அண்ணா
அரியாசனம் ஏறினார்

"பிறப்பதும் சாவதும் இயற்கை. ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மட்டார்கள்.

நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும்."

- தந்தை பெரியார்

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

மிகப் பெரிய கட்சியான காங்கிரசை எதிர்த்து; ஒரு புதிய விடியலுக்கான பாதையை வழி வகுத்த தேர்தல் அது.

பொதுத் தேர்தலில், காங்கிரசையும் காமராசரையும் பெரியார் ஆதரித்தார்.

அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அதை எதிர்த்துக் கடுமையாகப் பிரசாரம் செய்தார். அண்ணாவை ஆதரிக்கக் கூடாது என்ப தோடு; அண்ணாவை எதிர்த்து தி.மு.க. மேடையிலேயே நாடெங்கும் பிரசாரம் செய்து, தி.மு.க. ஆட்சி அமைப்பதை எதிர்த்துப் பெரிதும் பாடுபட்டார்.

அறிஞர் அண்ணா, காங்கிரசின் பழைய பாரம்பரியத்திலிருந்து; கழகத்தின் முற்போக்கான புதிய பாதைக்குத் தமிழக மக்களை அழைத்துச் சென்று மகிழ்வூட்டினார்.

பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து போனதாக மற்றவர் கண்களுக்குத் தோன்றினாலும், பெரியாரின் ஆரம்பப் பள்ளியில் பயின்றவர் அண்ணா.

பெரியாரின் கொள்கைகளும்; முற்போக்குக் கருத்துக்களுமே அண்ணாவின் மனதிலும் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

நல்லவற்றை யார் செய்தால் என்ன? பெரியாரின் நகலாகவே அண்ணா தமது ஆட்சியில் புரட்சியை ஊட்டினார்.

'செகரடேரியட்' என்பது 'தலைமைச் செயலகமாக' மாறியது.

'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டது, 1967 - ஜூலை முதல் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டு சட்ட சபையில் நிறைவேறியது.

ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரிகள் - திரு, திருமதி, செல்வி என்று அழகு தமிழில் அழைக்கப்பட்டனர்.

பெரியாரால் நடத்திவைக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைத்தது. இப்படி 'எங்கும் தமிழ்', 'எதிலும் தமிழ்' என்று பெரியார் எண்ணினார். அண்ணா நிறைவேற்றினார். நின்ற காங்கிரஸ் வேட்பாளரைப் புகழ்ந்து பேசினார்.

அவருக்கே ஒட்டு அளிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார்.

முந்தையத் தேர்தலைப் போலவே, இம்முறையும் தி.மு.கழகம் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்று காங்கிரஸ்காரர்களை போலவே பெரியாரும் எண்ணியே எதிர்ப்புப் பிரசாரம் செய்தார்.

ஆனால் -

கோழி மிதித்து குஞ்சு சாகுமா..?

அண்ணா அமோக வெற்றி பெற்று விட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசு கட்சியைத் தோற்கடித்ததுடன், பெருவாரியான வாக்குகள் பெற்று ஆட்சியையும் பிடித்துவிட்டது.

காமராசரும் - காங்கிரசுகாரர்களும் நிலைகுலைந்து போனார்கள்.

இப்போது கோட்டை அவர்கள் கையில், அண்ணா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தார். இப்படியொரு இன்ப அதிர்ச்சியைத் தமிழ் மக்கள் தருவார்கள் என்று அண்ணா எதிர்பார்க்கவே இல்லை.

கையில் வந்து விழுந்த கழகத்தின் வெற்றிக் கனியை ஏந்திக் கொண்டு நேராக திருச்சியை நோக்கி விரைந் தார்.

மனம் சோர்ந்து போயிருந்த பெரியார் அப்போது திருச்சியில் போய் தங்கியிருந்தார். சற்றும் எதிர்பாராமல் அண்ணா தம்முன் வந்து பணிவுடன் நின்றதைக் கண்ட பெரியார் எழுந்து வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தார். மறுநிமிடம் மகிழ்ச்சிப் பெருக்குடன் அண்ணா, பெரியாரின் கரங்களை இறுகப் பற்றிய வண்ணம் "இந்த ஆட்சியைத் தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்" என்றார். நன்றிப் பெருக்கால் பெரியாரின் விழிகளில் கண்ணீர் பளபளத்தது.