தந்தை பெரியார், நீலமணி/அறிவியல் மேதை - தந்தை பெரியார்
"மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் செனரலாவதை விட அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆக வேண்டும். இயற்கை சிந்தனா சக்தி வளர்க்கப்பட வேண்டும்."
- தந்தை பெரியார்
'பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள், அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை' என்பது பெரியாரின் கருத்து. தோல்வியைக் கண்டு அவர் துவண்டதில்லை. உயர்ந்த பதவியை வகிக்க வேண்டுமென்கிற ஆசையே பெரியாருக்கு என்றுமே இருந்ததில்லை. 1939 -ம் ஆண்டு ராஜாஜி பதவி இழந்தபோது, சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பெரியாரிடம், வைசிராயும், கவர்னரும் கேட்டுக் கொண்டனர்.
பெரியார் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதே போல் சென்னை முதல் மந்திரிப் பதவி இருமுறை பெரியாரைத் தேடிவந்தது. இராசகோபாலாச்சாரியாரே, வற்புறுத்தினார்.
தனக்கு எந்தப் பதவியுமே வேண்டாம் என்று கூறிவிட்டார். - 'சேவை என்பது கூலியை உத்தேசித்தோ; தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல; மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான்' - என்பது பெரியாரின் கருத்து.
'சமுதாயத் துறைக்குப் பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்' என்று கூறிய பெரியாரின் மனம் -
- 'தமிழனை எப்படியெல்லாம் உயர்த்தலாம்; மற்றவருக்குச் சமமாகத் தமிழனை எப்படித் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம்' - என்பதைப் பற்றியே சிந்தித்த வண்ணமிருந்தது.
அதன் விளைவு -
1942 -ம் ஆண்டு 'திராவிடநாடு' பிரிவினைக் கொள்கையைப் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். அது பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
1943 -ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் முதலாவது திராவிடர் கழக மகாநாட்டைக் கூட்டி, தனித் தமிழ்நாடு வேண்டுமென்றார்.
பெரியார், ஒரு தனி சமுதாய மேம்பாட்டு நோக்கம் கொண்டவராக என்றும் இருந்ததில்லை.
எந்தக் கருத்தையும் - எந்தச் செயலையும் உலக அறிவியல் நோக்கோடு பார்ப்பவராகவே திகழ்ந்தார்.
எதையும் முன்னரே ஆராய்ந்து கூறும் உலகியல் பார்வையாளராகவும் திகழ்ந்தார்.