தந்தை பெரியார், நீலமணி/தந்தை பெரியார் அமரர் ஆனார்
"நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருங்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
- "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகி விடுவீர்கள் - "
என்று - வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி, நான் உங்களை அடக்கு முறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளி விடுங்கள்."
"ஒருவனுடைய எங்தக் கருத்தையும் மறுப்பதற்கு, யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."
- தந்தை பெரியார்
(கு. 13.4.30; 12:2)
அண்ணாவின் ஆட்சியை அனைத்துத் தமிழக மக்களும் திறந்த மனத்துடன் வரவேற்றனார்.
எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என்று தமிழ் மொழி தலை நிமிர்ந்து நின்றது. 'இது தமிழ் நாட்டை ஆளுகிற தமிழரின் ஆட்சி’ என்பதை அறிஞர் அண்ணா தமது ஒவ்வொரு அரசு ஆணைகளின் போதும் நிருபித்து வந்தார்.
'மெட்ராஸ் ஸ்டேட்' என்று மெல்லிய ஆங்கிலத்தில் வெள்ளையன் வைத்த பெயருக்கு விடை கொடுத்தார்.
'சென்னை மகாணம்' என்று அதுவரை அழைக்கப் பட்டு வந்ததை; 'தமிழ்நாடு' என்கிற புதிய பெயரிட்டு அழைக்க ஆணை பிறப்பித்தார்.
1967 - ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்ட சபையில் நிறை வேறியது.
பெரியார் காங்கிரசில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாகச் சொன்ன சொல், 'தமிழ்நாடு' என்கிற வார்த்தை அது இன்று அண்ணாவின் ஆட்சியில் சட்ட பூர்வமாக நிறைவேற்றுப்பட்டது.
'ஸ்ரீ, ஸ்ரீமதி' என்கிற வடமொழிச் சொற்கள், திரு என்றும் திருமதி என்றும்; குமாரி என்கிற சொல் 'செல்வி' யாகவும் இடம் பெற ஆணை பிறப்பிக்கப் பட்டது.
களிப்பில் பூரித்துப் போயிருந்த பெரியாருக்கு 17.9.1967 அன்று முதல் முதலில் திருச்சியில் சிலை வைத்து பெருமைப் படுத்தினார் அண்ணா.
பெரியார் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள்; குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலோடு; சட்ட பூர்வமானதாக ஆக்கப்பட்டது.
1968 -ம் ஆண்டு பெரியார் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர்; பிற்படுத்தப் பட்டோர்; சிறுபான்மையினர் மகா நாட்டிற்குச் சென்று சிறப்புச் சொற்பொழி வாற்றினார்.
1968 -ல் தனித்தமிழ்நாடு கோரி, டில்லி ஆதிக்கக் கண்டன நாள் மேற்கொண்டார்.
அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக் கழகம் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தது.
அழைப்பை ஏற்ற அண்ணா தமது சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள 15.4.1968 அன்று சென்னையை விட்டுப் புறப்பட்டார்.
உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்ற அண்ணா 12.5.1968 சென்னை திரும்பினார்.
கடுமையான உழைப்பின் காரணமாக அண்ணா உடல்நலம் குன்றினார். 10.9.68 அன்று சிகிச்சைக்காக, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
பெரியார் மீண்டும் தமது சுயமரியாதை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
தமிழகம் முழுதும் அண்ணாவின் ஆட்சியைப் பாராட்டிப் பேசினார்.
அதுவரை 'ஆகாஷ்வாணி' என்று வழங்கிய பெயர், 'வானொலி என்று மாற்றப்பட்டது.
6.11.68 அன்று அண்ணா சிகிச்சைமுடிந்து சென்னை திரும்பினார்.
1.12.68 அன்று 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் திருவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் உடல்நிலை சரியில்லாததால், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று டாக்டர்களும் நண்பர்களும் கூறினர்.
அண்ணா பிடிவாதமாக விழாவில் கலந்து கொண்டு; அற்புதமாக உரையாற்றி பல்லாயிரக் கணக்கான மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். பின்னர் ராஜாஜியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
பொங்கல் புது நாளில், கலைவாணர் சிலை திறப்பு விழா நடந்தது. அதிலும் பிடிவாதமாக அண்ணா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அடுத்த வாரம் அண்ணா படுத்த படுக்கை ஆனார். அமெரிக்க டாக்டர்கள் வந்தனர்.
புற்றுநோய் மருத்துவமனையில் அண்ணாவுக்கு சிகிச்சை நடந்தது.
எதுவும் பலன் அளிக்கவில்லை. 2.2.69 அன்று இரவு 12.20க்கு அண்ணாவின் உயிர் பிரிந்தது. பெரியார் இடி விழுந்த மரம் போல் கலங்கிப் போனார்.
அண்ணாவின் ஆட்சியை, கலைஞர் கருணாநிதி தொடர்ந்தார்.
12.11.1971-ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியாரை 'இரணியா' என்னும் குடல்வாத நோய் பெரிதும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. பெரியார் தன் உடல்நலனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன் தொண்டுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
1973-ம் ஆண்டு பிறந்தது. அது தமிழர்களின் நினைவில் என்றுமே மறக்க முடியாத ஆண்டாக நிலை பெற்று விடுமென்று யாருமே எண்ணவில்லை.
1973, டிசம்பர் 8, 9, 12 ஆகிய தேதிகளில், 'இன ஒழிப்பு மகாநாடு' சிறப்பாக நடைபெற்றது. பெரியார் அதில் கலந்து கொண்டு பேசினார்.
19.12.1973-ம் நாள் தியாகராய நகரில், 'சிந்தனையாளர் மன்றத்தின் மகாநாடு' சிறப்பாக நடைபெற்றது. பெரியார், உற்சாகத்துடன் அதில் கலந்து கொண்டார்.
- அதுவே, பெரியார் ஆற்றிய கடைசிச் சொற் பொழிவாக அமையும் என்று - அப்போது யாரும் கனவு கூடக் காணவில்லை.
நோயின் கடுமை, திடீரென்று தீவிரமடைந்து, தந்தை பெரியார் உடனடியாக வேலூரிலுள்ள, சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல மருத்துவர் குழாம் ஒருங்கிணைந்து போராடியும்; விடுதலை பெறத் துடித்த பெரியாரின் உயிரை நிறுத்தி வைக்க முடியவில்லை. 24.12.1973ம் நாள் காலை 7.31 மணி அளவில் தனது, 95-வது வயதில், லட்சக் கணக்கான மக்களைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு தந்தை பெரியார் அமரரானார்.
'பெரியார் வாழ்க’, என்று விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே, அரசாங்க மரியாதையுடன், முப்பத்தாறு முறைகள் பீரங்கி குண்டுகள் முழங்க, இராணுவ பாண்டுகள் சோககீதம் இழைக்க, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் புனித உடல் சமாதியில் வைக்கப்பட்டது. தந்தை பெரியார் மறைந்து விட்டாலும் அவர் விடடுச் சென்ற கொள்கைகள் என்றும் தமிழர்களுக்கு வழிகாட்டும்.