தந்தை பெரியார், நீலமணி/தந்தை பெரியார் பிறந்த மண்ணின் பெருமை
மண்ணின் பெருமை
பிறந்த மண்ணின் பெருமை...
“நம் நாட்டுக்கு மனிதன் செய்ய வேண்டிய முக்கிய தொண்டு மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்குவதுதான்.
நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தப் பற்றுமின்றி மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்கு தடையின்றிச் சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும் பொறுப்புமாகும்.
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற உதவ வேண்டும்.
மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் என் ஆசை.”
- தந்தை பெரியார்
பூவுடன் சேர்ந்த நார் மட்டுமல்ல; சில பெயர்களுடன் சேர்ந்த ஊரும் மணம் பெறும். மேலை நாட்டில் ஒருவரிடம் இந்தியா பற்றிக் கேட்டபோது; "காந்தி நாடா?" என்று கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டாராம்.
அதே போல -
"ஈரோடு", என்றால் தந்தை பெரியார் பிறந்த ஊர் என்று இன்று உலகெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த ஈரோடு நகரம் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும்.
சேர மன்னர்களான சங்கர்கள் பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள், ஒய்சளர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும் மைசூர் மன்னர்கள் ஆட்சியிலும் இப்பகுதி இருந்தது.
மைசூர் மன்னர், 'சிக்க தேவராயன்' தெற்கில் படையெடுத்தபோது அவருக்கும் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதருக்கும் ஈரோட்டுக்கு அருகில் போர் நடந்தது.
இப்போரில் சொக்கநாதர் வெற்றி பெற முடியாமல் ஈரோடு கோயமுத்தூர் பகுதிகளை மைசூர் மன்னரிடம் (கி.பி. 1676)ல் இழக்க வேண்டியதாயிற்று.
மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில் ஈரோடு செழிப்புமிக்க நகரமாக விளங்கிற்று. ஆனால் -
மராத்தியர் ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளினால் இந்நகரம் பெரிதும் சேதமுற்றும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மீண்டும் சிறப்புப் பெற்றது. ஈரோடு கி.பி. 1871ல் நகராட்சி ஆயிற்று. இந்நகரிலிருந்த பாழடைந்த கோட்டைப் பகுதிகள் நீக்கப்பட்டன.
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த தாராபுரம், ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம் வட்டங்களும், காங்கேயம் துணை வட்டமும் அடங்கிய பகுதிகள் பிரிக்கப்பட்டு 17.9.1979 இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது பெரியார் மாவட்டம் என்று தந்தை பெரியாரின் பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பெரியார் மாவட்டத்தின் தலைமையிடமாக ஈரோடு நகர் விளங்கி வருகிறது.
காவிரி நதியின் கரையிலுள்ள ஈரோடு நகரில் நமது பண்பாட்டுச் சின்னங்கள் பல இடம் பெற்றுள்ளன.
இனி -
இந்த ஈரோட்டுக்குத் தன் பிறப்பால் தன் ஈடு இணையற்ற தொண்டுகளால் பெருமை சேர்த்த கதாநாயகரைச் சந்திக்கலாம்.