உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார், நீலமணி/பெண்கள் மாநாடு சூட்டிய 'பெரியார்' பட்டம்

விக்கிமூலம் இலிருந்து
27. பெண்கள் மாநாடு சூட்டிய
'பெரியார்' பட்டம்

★ சகோதரிகளே! ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் செய்ய முடியும் என்பேன்.

★ பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்; அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே!

★ நமது பெண்கள் தங்களைப் பிறவி அடிமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

★ பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும், சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.

★ இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும்; இழிவையும்; அடிமைத் தனத்தையும் விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

- தந்தை பெரியார்

நாகம்மையாரின் மரணத்திற்குப் பிறகு ஈ.வெ.ரா. சுயமரியாதைப் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

பல மகாநாடுகளைக் கூட்டினார். காரசாரமாகக் குடி அரசுப் பத்திரிகையில் விமரிசனங்கள் எழுதினார்.

பெரியார் குடி அரசு இதழில் ஒருநாள்; 'இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்' என்பதை, தமக்கே உரிய பாணியில் விளக்கி, விரிவாக ஒரு தலையங்கம் எழுதினார். விளைவு? அந்தத் தலையங்கத்திலுள்ள ஆட்சேபகரமான விஷயங்களுக்காக ஆசிரியர் ஈ.வெ.ராவும்; அதனை அச்சிட்டதற்காக, ஈ.வெ.ராவின் தங்கை கண்ணம்மாவும் கைது செய்யப் பட்டார்கள்.

ஈ.வெ.ராவுக்கு ஆறுமாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

அப்பொழுது, அதே சிறையில், ஈ.வெ.ராவின் நண்பரான சி. இராசகோபாலாச்சாரியாரும் இருந்தார்.

இருவரும் சேர்ந்து பொதுச்சேவையில் ஈடுபடலாம் என இராசகோபாலாச்சாரியார் எண்ணினார். ஆனால் ஈ.வெ.ரா -

'என் வழி தனி வழி' என்று இருந்து விட்டார்.

அரசாங்கம் பகுத்தறிவு இயக்கப் பத்திரிகைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. பல பகுத்தறிவுப் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன; பல பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த சமயம், ஜஸ்டிஸ் கட்சியின் சிறப்புப் பேச்சாளராக விளங்கிய எம்.ஏ., பட்டதாரியான அறிஞர் அண்ணாவை, ஈ.வெ.ராவின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் வெகுவாகக் கவர்ந்தன.

1935 - ம் ஆண்டு திருப்பூர் மகாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவைச் சந்தித்துப் பேசிய அறிஞர் அண்ணா பொதுவாழ்வில் ஈடுபடத் தான் விரும்புவதாகக் கூறினார்.

சட்ட சபைக்கான தேர்தல் வந்தது. 1937 - ஆம் ஆண்டு பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி தோற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் மந்திரிசபையின் முதல் அமைச்சராக சி. இராசகோபாலாச்சாரியார் பதவி வகித்தார்.

தமிழ் நாட்டுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்று இராசகோபாலாச்சாரி திட்டம் கொண்டு வந்தார்.

ஈ.வெ.ரா இந்தியைத் தமிழ்ப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்குவதை கண்டித்து எதிர்த்தார். தனது 'குடியரசு', 'விடுதலை' இதழ்களில், விமர்சனம் எழுதினார். பொதுக் கூட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசினார்.

1937 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மகாநாடு நடந்தது. இதில் அறிஞர் அண்ணாவும், பெரியாருடன் சேர்ந்தார். ஈ.வெ.ராவும், அண்ணாவும் காரசாரமாகப் பேசினார்கள். முதல் அமைச்சர் வீடு முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அறிஞர் அண்ணா கைதாகி சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து எழுதும் விடுதலைப் பத்திரிகையின் ஆசிரியர் ஈ.வெ.ரா; அச்சிடும் ஈ.வெ. கிருஷ்ணசாமி இருவர் மீதும் அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது.

இருவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பெரியாரை அண்ணா, மகிழ்வுடன் வரவேற்றார். இதனால் நாட்டில், கிளர்ச்சியும் மறியலும் அதிகரித்தது.