தந்தை பெரியார், நீலமணி/முதல் - சிறை அனுபவம்
"இன்றையச் சுதந்திரத்திற்கு, முதன் முதல், நானாகவே சிறைக்கும் போகிறேன் என்று இந்த நாட்டில், ஏன் இங்தியாவிலேயே சிறைக்குப் போனது, நானும் எனது குடும்பமும்தானே...
"நிலம், காணி இவையெல்லாம் எவ்வளவு சேர்த்து வைத்திருந்தாலும், அவன் செத்துப் போனதும், அவனது என்று சொல்ல மாட்டார்கள். அவனுடைய மகனது என்றுதான் கூறுவார்கள். இது இயல்பு. தனது என்று கூறும்படியானது தொண்டு ஒன்றுதான். மற்றவர்களுக்காகப் பலனை எதிர்பாராமல் தொண்டு செய்வது தான்."
- தந்தை பெரியார்
எதையும் வித்தியாசமாய்ச் சிந்தித்துச் செயல்பட்டால் அது மக்கள் மனதைக் கவரவே செய்யும்.
மதுவிலக்கு பிரசாரத்தில், யாரும் நினைத்தறியாத ஒரு புதிய கோணத்தில் செயல்பட்டார் ஈ.வே.ரா.
மறியல் செய்து பிறரது உடைமைகளைச் சேதம் செய்யவில்லை அவர். மாறாக - மது ஒழிப்பிற்காக தனது சொத்தையே அழித்தார்.
ஈ.வே.ரா. தென்னை மரங்களை வெட்டிய நிகழ்ச்சி ஈரோட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. மக்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரம் அடைந்தது.
அரசாங்கம் விழித்துக் கொண்டது.
மறியல் போராட்டத்தைத் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு போட்டது. காங்கிரசு தொண்டர்கள் தடை உத்தரவை மீறிச் செயல்பட வேண்டும் என்று சொன்னார்கள்.
ஈ.வே.ரா. நூறு தொண்டர்கள் தடை உத்தரவை மீறிச் செயல்பட வேண்டும் என்று சொன்னார்.
போலீசார் அவரையும் நூறு தொண்டர்களையும் கைது செய்தனர். நீதிமன்றம் அனைவருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியது.
1921-ம் ஆண்டு நவம்பர் 21 நாள் ஈ.வே.ரா. முதன் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் நகரம் முழுதும் கலவரம் பரவியது. ஈ.வே.ரா.வுக்குப் பிறகு யார் கள்ளுக் கடை மறியலை முன்னின்று நடத்தப் போகிறார்கள் என்று அரசாங்கம் அலட்சியமாக எண்ணியது.
புலியை முறத்தால் விரட்டிய விரத்தமிழ் பெண்களின் பரம்பரை வற்றிவிடவில்லை என்பதை அரசு விரைவிலேயே உணர்ந்தது.
ஈ.வே.ரா.வின் மனைவி நாகம்மையாரும், அவரது தங்கை கண்ணம்மாவும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் நகரெங்கும் பரவியது.
வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெளியே வந்தனர்.
நாகம்மையுடனும் கண்ணம்மையுடனும் கை கோர்த்துக் கொண்டு கள்ளுக்கடையை நோக்கி மறியல் செய்யப் புறப்பட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத அரசாங்கம் ஆழ்ந்து யோசனை செய்தது.
பெண்களைக் கைது செய்தால் ஊரில் பெருங் கலவரம் மூளும். அதனால் ஆயிரக் கணக்கில் மக்கள் சிறை செல்லுவர்.
இதைத் தவிர்க்க ஒரே வழி -
தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இப்போராட்டத்தில் ஈ.வே.ரா.வின் குடும்பம் முழுதும் ஈடுபட்டதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் உற்சாகமானார்கள்.
தமிழ்நாடு முழுதும் கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரமடைந்தது.
தமிழகத்தில் மது விலக்குப் போராட்டத்திற்காக காந்திஜி தமிழ்நாடு வந்தபோது ஈ.வே.ரா. வீட்டில்தான் தங்கினார்.
அங்குதான் மதுவிலக்குப் போராட்டத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டது.
அவர் எண்ணியது போல் தமிழகம் கள்ளுக்கடைப் போராட்டத்தில் சிறப்பான பணியாற்றியது. இதைப் பற்றி காந்திஜி கூறுகையில் -
கள்ளுக்கடைப் போராட்டத்தின் வெற்றி ஈரோடிலுள்ள நாகம்மை, கண்ணம்மாள் ஆகிய இரு பெண்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதிகள் ஆவார்கள் என்று பெருமையுடன் கூறினார்.