உள்ளடக்கத்துக்குச் செல்

தனித் தமிழ்க் கிளர்ச்சி/அம்மானை

விக்கிமூலம் இலிருந்து

அம்மானை

மூன்று பெண்மணிகள் கூடி ஒருவகையான காய்களை மேலேபோட்டுப் பிடித்துக்கொண்டும், தொடை தடை விடைகளுடன் ஒருவர்க்கொருவர் உரையாடிக்கொள்ளும் முறையில் இன்னிசையுடன் பாடிக்கொண்டும் விளையாடுகின்ற ஒரு வகையான ஆட்டத்திற்கு அம்மானை என்று பெயர். இந்நிலையை அமைத்துப் பாடுகின்ற பாட்டிற்கு அம்மானைப் பாட்டு என்று பெயர். இப்பாட்டு (பெரும்பான்மையும்) ஐந்து அடிகளை உடையதாய் ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பெறும்.

தொடை : ஒரு பெண் ஒரு செய்தியை (தொடுத்து) அறிவிப்பதாக முதல் இரண்டடிகளும் இருக்கும்.
தடை : முதற்பெண் அறிவித்ததற்கு, இரண்டாவது பெண் (தடுத்து) குறுக்குக் கேள்வி போடுவதாக மூன்றாவது நான்காவது அடிகள் இருக்கும்.
விடை : அவ்விரு பெண்களின் தொடை, தடைகட்கேற்ப ஒரு நல்ல முடிவோ, தீர்ப்போ மூன்றாவது பெண் (விடுப்பதாக) கூறுவதாகக் கடைசி அடி இருக்கும்.
எனவே, மூன்று பெண்மணிகள் தொடை, தடை, விடைகளுடன், ஒருவர்க்கொருவர் உரையாடிக் கொள்வதாக அமையப் பெறும் சிறப்பால் அம்மானைப் பாடல்கள் அழகாயிருப்பதும், படிப்பதற்கு இனிமை தருவதும் வழக்கம். மூவர் பேச்சின் முடிவிலும் அம்மானை எனும் சொல் அழகுடன் மிளிரும். இம்முறையாக, மூன்று பெண்மணிகள் கூடி முடிவுகட்டித் தனித்தமிழ்க்கிளர்ச்சி செய்வதாக இந்நூல் அமைக்கப் பெற்றுளது.
தனித்தமிழ்க் கிளர்ச்சி

அம்மானை

பெண்களின் பேச்சு


தமிழ்த் திருநாள்

பொங்குகபால் எனமுழக்கம் புரிகின்ற தைத்திங்கட்
பொங்கல்தான் தமிழ்க்குரிய புதுத்திருநாள் அம்மானை
பொங்கல்தான் தமிழ்க்குரிய புதுத்திருநாள் ஆமாயின்
தங்குதி பாவளியின் தகுதியென்ன அம்மானை
தீபா வளிவாடை தெற்குவீசிற் றம்மானை (1)

தமிழ்ச் சிறப்பு

இனித்திடுநம் தமிழ்மொழிதான் இன்னொன்றன் துணையின்றித்
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழிகாண் அம்மானை
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழியே யாமாகில்
திணித்துமிக ஆரியச்சொல் சேர்த்ததேன் அம்மானை
திணித்தனர் ஆரியர்தம் திறமையினால் அம்மானை (2)


குறிப்புரை :- முதற்செய்யுள் வடநாட்டுக் கொள்கையாகிய தீபாவளியென்னும் வாடைக்காற்றுத் தெற்கிலுள்ள தமிழ்நாட்டில் வந்து வீசிப்பரவியது.


2-ஆம் செய்யுள்-தனித்தியங்கல் = பிறமொழிச் சொற்களின் உதவி தேவையின்றித் தானே தனித்தியங்குவது.

நீதி நெறிமுறையே நின்றுநாம் ஆராயின்
ஆதி முதல்மொழிநம் அருந்தமிழே அம்மானை
ஆதி முதல்மொழிநம் அருந்தமிழே யாமாகில்
ஓதி அனைவரும் உணர்ந்தனரோ அம்மானை
உணரும் பருவந்தான் உற்றதுகாண் அம்மானை (3)

கள்ளமில்தெ லுங்குதுளு கன்னடம லையாளமெனும்
பிள்ளைபல பெற்றவள்நம் பெருந்தமிழ்த்தாய் அம்மானை
பிள்ளைபல பெற்றவள்நம் பெருந்தமிழ்த்தா யாமாகில்
எள்ளுவண்ணம் ஆரியம்போல் இறக்கவில்லை யம்மானை
இறவாத இறைவன்நிகர் இன்தமிழ்த்தாய்க் கம்மானை (4)


நாளும்இந் நாட்டிற்கு நடுமொழியாய் நனிநின்று
ஆளும்வன் மைதமிழுக் கடுத்ததுகாண் அம்மானை
ஆளும்வன் மைதமிழுக் கடுத்ததுவே யாமாகில்
மீளுதலில் அடிமையில்முன் மேவியதேன் அம்மானை
மேவியது நம்தமிழர் மிரண்டதினால் அம்மானை (5)

கற்றார் களிப்பெய்தக் கவின்சிறந்த நயமீந்து
வற்றா வளமுடைத்து வண்தமிழ்காண் அம்மானை
வற்றா வளமுடைத்து வண்தமிழே யாமாகில்
பற்றார் பலகுறைகள் பகருவதேன் அம்மானை
பகரல் கடல்முதலாம் பகைவரினால் அம்மானை (6)


4-கிளைமொழிகளாகிய பல பிள்ளைகளைப் பெற்றும், தமிழ் இளமை குன்றவில்லை; பேச்சுவழக்கு இறந்த ஆரியம் போல் இறக்கவுமில்லை. ஆதலின் அது கடவுளை ஒத்தது.

6. கடற்பெருக்காலும், தமிழ்நாட்டில் குடிபுகுந்த பிறராலும் பல தமிழ்நூல்கள் அழிந்தன.

பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்ததுபோல்
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானை
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்கு
வழியுடன்ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானை
தமிழ்என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை (7)

அயல்மொழியில் இல்லாத அரியதொரு ழம்முதலாம்
இயல்பொலியாம் எழுத்துக்கள் இன்தமிழ்க்குண்டம்மானை
இயல்பொலியாம் எழுத்துக்கள் இன்தமிழ்க்குண்டாமாயின்
முயல்வுறுஆ ரியஎழுத்தை மொழிவதெங்ஙன் அம்மானை
இயலினிய நம்தமிழ்க்கவ் இடியொலியேன் அம்மானை (8)

வயல்வளஞ்சேர் தென்னாட்டு வண்மொழியாம் தமிழினிலே
அயல்மொழிகட்கில்லாத அகப்பொருளுண் டம்மானை
அயல்மொழிகட்கில்லாத அகப்பொருளுண் டாமாயின்
மயல்மிக்க காமுகரோ மாண்தமிழர் அம்மானை
காமமில்லை அதுதெய்வக் காதல்காண் அம்மானை (9)

சாதலே வந்திடினும் சற்றும் சலியாநற்
காதலினும் இனியதுநம் கவின்தமிழே யம்மானை
காதலினும் இனியதுநம் கவின்தமிழே எனின் அதனை
ஓதல்நம் இளைஞர்க்கு உயர்வன்றோ அம்மானை
மணப்பதன்முன் தமிழ்நூலை மணக்கவேண்டும் அம்மானை (10)


7. அகச்சான்று உள்ளுக்குள்ளாய் உடன்பொருந்திய நற்சாட்சி. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமையென்பது நேர்பொருள்.

8. தமிழ், மனிதர் தோன்றிய முதற்காலத்தில் தோன்றியதாதலின் கடுமையில்லாத ழ முதலிய இனிய எழுத்துக்களுடன் தோன்றியது.

9. அகப்பொருள் காதலன் காதலிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையறுத்துக்கூறும் இலக்கணம், இவ்விலக்கணம் தமிழில்மட்டுமே உள்ளது.

10. இளைஞர்க்குத் தமிழ்க்காதலே இன்றியமையாதது (முக்கியம்).

தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும்
வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானை
வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்த
வானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானை
வாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை (11)

இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில்
பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானை
பிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோ
பிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானை
பிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை (12)

அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள்
தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானை
தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் தோன்றுதற்குத்
தமிழ்நாட்டில் சிறப்பென்ன தங்கியுள தம்மானை
தமிழைவிடச் சிறப்பென்ன தங்கவேண்டும் அம்மானை (13)

மன்னிய தெய்வம் மதுரையில் பாண்டியனாய்
நண்ணியதா நூற்கள் நவில்கின்ற அம்மானை
நண்ணியதா நூற்கள் நவில்கின்ற எனினங்கு
நண்ணிய காரணத்தை நவின்றிடுவாய் அம்மானை
நண்ணியது தமிழ்ச்சுவையை நாடியே அம்மானை (14)


11. தமிழின்பம் அறியாதவரே தேவஉலகத்தை உயர்ந்ததென்பார்கள்.

12. பிறவாத முத்தி (மோட்சம்) வேண்டாம். தமிழ்நாட்டில் பிறந்து பிறந்து தமிழின்பத்தைச் சுவைப்பதே முத்தி.

13. இனிய தமிழ் பேசப்படுவதால் தமிழ்நாடு என்றாலேயே ஓர் இன்பம் தோன்றுகிறது.

14. சிவனும் சிவையும் முருகனும் பாண்டிய மன்னர்களாய் மதுரையில் வாழ்ந்தமைக்குக் காரணம் தமிழின்பத்தைச் சுவைக்கவேண்டும் என்னும் ஆவலே.

பொய்தானும் இல்லையிது பொருத்தமே தெய்வத்தை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் அம்மானை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் என்பதுதான்
மெய்தான் எனின்தமிழ்க்கு மேன்மையன்றோ அம்மானை
தமிழ்க்குள்ள மேன்மை தமிழர்க்கும் அம்மானை (15)

முத்தமிழ்

குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்
இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானை
இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினே
பயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானை
சிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை (16)

இயற்றமிழ்

புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்
மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானை
மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்
ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானை
உள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை (17)


15. தெய்வத்தைத் தமிழால் வைதாலும் வாழ்வுண்டாகும்.

16- சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முச்சுவையும் அமைந்த செந்தமிழ் நூல்.

17. சில புராணக் குப்பைகள் ஆரியத்திலிருந்து தமிழ்க்கு வந்தன.

இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்
தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள தம்மானை
தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள தாமாயின்
வடமொழியி னின்றுசில வந்ததேன் அம்மானை
வடவர்முன் திருவடியே வஞ்சித்தார் அம்மானை (18)

புதுமைமிகும் நயம்பலதாம் புலப்படுத்தித் தமிழ்மொழியில்
பொதுமறையாம் திருக்குறள்தான் பொருந்தியுளதம்மானை
பொதுமறையாம் திருக்குறள்தான் பொருந்தியுளதாமாகில்
மதிகெடுக்கும் வடவரது மனுநூலேன் அம்மானை
ஓரம்சொல் மனுநூலை ஒதுக்கவேண்டும் அம்மானை (19)

இசைத்தமிழ்

இசைப்பின் இறைவனையும் இன்புறுத்தும் இயல்புடைய
இறையிற் சிறந்தமொழி இன்தமிழே யம்மானை
இசையிற் சிறந்தமொழி இன்தமிழே யாமாகில்
இசையரங்கில் இறுதியிலே இசைப்பதேன் அம்மானை
இசைப்பதற்குக் காரணம்நம் ஏமாற்றம் அம்மானை (20)

காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்
பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானை
பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினே
பீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானை கள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை (21)


18. ஆரியர்கள் தமிழில் உள்ள சில கதைகளைத் தம் ஆரியத்தில் மறைவாக மொழிபெயர்த்துக்கொண்டு, பின்னர் இது இங்கிருந்துதான் தமிழில் போயிற்று என்று கூறுகின்றனர்.

19. திருக்குறள் உலகப்பொதுநூல். மனுநூல் ஒருவர்க்கு ஒரு விதமாகவும் மற்றொருவர்க்கு மற்றொரு விதமாகவும் ஓரங்கூறும் வடநூல்.

20. இசையரங்கு - இசைக்கச்சேரி; இறுதி - கடைசி.

21. பல தமிழிசைகளின் பெயர்கள் பிறமொழியில் மாற்றி மறைக்கப்பட்டன. செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்
பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானை
பைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்
இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானை
என்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை (22)

ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)
உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை யம்மானை
உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை எனிற்செவியால்
பருகாத வடமொழியில் பாடுவதேன் அம்மானை
பாடவிடும் தமிழரினிப் பழியடைவார் அம்மானை (23)

நாடகத் தமிழ்

நாடகத்தால் காமம் நனிபெருகும் என்றெண்ணி
நாடகத்தைச் சிலமூடர் நசுக்கினர்காண் அம்மானை
நாடகத்தைச் சிலமூடர் நசுக்கியதி னால்மனிதர்
வீடகத்தே காமத்தை வெறுத்தனரோ அம்மானை
வெறுக்கவில்லை நாடகம் ஓர் விழுச்செல்வம் அம்மானை. (24)

நாளெல்லாம் உழைத்துழைத்து நலியடையும் மாந்தர்க்கு
நீளும்சோர் வுநாடகத்தால் நீங்குங்காண் அம்மானை
நீளும்சோர் வுநீங்குமென்று படமுதல்வர் நெடுங்குப்பைக்
கூளமாம் நாடகங்கள் குவிக்கலாமோ அம்மானை
குவிப்பதினால் தமிழ்ப்பெருமை குன்றுதடி யம்மானை (25)


22. தமிழ்மொழி ஆராய்ச்சியில்லாதவரே தமிழில் இசையில்லை என்று உளறுவார்கள்.
23. கோயில்களில் வடமொழிப் பாடல்கட்கு மக்கள் உருக வில்லையாதலால், இனியாயினும் தமிழ்ப்பாடல்களாலேயே வழிபாடாற்றச் செய்யவேண்டும்.
24. நாடகத்தால் நாட்டில் காமம்முதலிய தீயஒழுக்கங்கள் பாவுமெனக் கருதிச் சிலர் நாடகத்தை அழித்ததால் தமிழ்நாடகம் குறைந்தது.
25. திரைப்பட முதலாளிகள் சிலர் பயனற்ற கதைகளைப் பரப்புவதால் தமிழ் நாடகத்தின் பெருமை குன்றுகின்றது.
ஏர்திருந்து வளமுடைய இன்தமிழ்நாட் டினில்இன்று
சீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் அம்மானை
சீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் என்றிடினச்
சீர்திருத்த வழியொன்று செப்பிடுவாய் அம்மானை
நாடகத்தால் சீர்திருத்தம் நாட்டவேண்டும் அம்மானை (26)

தமிழர் நாகரிகம்

நாகரிகத் தினைப்பெரிதும் நாடுகின்ற இவ்வுலகில்
நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழர் அம்மானை
நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழ ராமாயின்
நாகரிகம் எதுவென்று நவின்றிடுவாய் அம்மானை
நயமான நற்குணமே நாகரிகம் அம்மானை (27)

விருந்து புறத்திருக்க விலாப்புடைக்க உண்ணாநம்
அருந்தமிழ் தாய்பலரை ஆதரித்தாள் அம்மானை
அருந்தமிழ்த் தாய்பலரை ஆதரித்த தாற்பின்னர்
வருந்தும் வறுமையின் வாய்ப்பட்டாள் அம்மானை
பட்டதுகேள் பகைவர்செய் பழிச்செயலால் அம்மானை (28)

உரங்குன்றா நெஞ்சுடைய உயர்தமிழர் எவரிடமும்
இரங்குகின்ற நெஞ்சம் இயைந்தவர்காண் அம்மானை
இரங்குகின்ற நெஞ்சம் இயைந்தவர் என்றாலவ்
இரக்கந்தான் நன்றாமோ எதிரியிடம் அம்மானை
ஏமாறா(து) அவரிடமும் இரங்கலாம் அம்மானை (29)


26 - பல துறைகளிலும் சீர்திருத்தம் செய்விக்கும் நாடகங்களே நாட்டிற்குத் தேவை.
27 - ஆடையணிகள் முதலியவற்றால் செய்துகொள்ளும் வெளியழகு நாகரிகமன்று. உள்ளழகாகிய நயமான நற்குணமே நாகரிகம்.
28 - விருந்தோம்பியதால் வறுமை வந்துவிட வில்லை. விருந்தாய் வந்த பகைவரின் துழ்ச்சியினாலேயே வறுமைவந்தது.
29 - எதிரியாயிருப்பினும் இரங்கலாம். ஆனால் ஏமாந்து விடக்கூடாது. திறத்தினில் மிக்கநம் திண்தமிழர் எஞ்ஞான்றும்
அறத்துறை மாறாத ஆன்றோர்காண் அம்மானை
அறத்துறை மாறாத ஆன்றோரென் றாலவர்கள்
மறத்துறை அறியாத மண்டுகளோ அம்மானை
புறப்பொருளில் அவர்தமது போர்மறங்காண் அம்மானை (30)

அடையும் எளியவர்கட்(கு) அகமகிழ்ந்தே கொடுக்கும்
கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழர் அம்மானை
கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழ ராமாயின்
படையின்றி அவர்பொருளைப் பறிக்கலாமே அம்மானை
பறித்துபறித்(து) அயலார்கள் பரவினர்காண் அம்மானை (31)

மருந்தா யினும்தமிழ் மக்கள் பிறர்க்களித்து
விருந்தோம்பும் வேளாண்மை விரும்புபவர் அம்மானை
விருந்தோம்பும் வேளாண்மை விரும்பிமிகச் செய்திடினே
வருந்திப்பின் வறுமையால் வாடாரோ அம்மானை
அவ்வருத்தம் அவர்கட்கோர் அணிகலமாம் அம்மானை (32)

பொன்னான நம்தமிழர், புல்லிய எண்ணமுடன்
இன்னாமை செய்தார்க்கும் இனிமை செய்தார் அம்மானை
இன்னாமை செய்தார்க்கும் இனிமை செய்தால்
துன்னும் பகைவரினால் துயர்விளையும் அம்மானை
துயர்விளைக்கும் பகைவரினித் துயருறுவார் அம்மானை (33)


30 - புறப்பொருள் என்றால், போர்மறம் முதலியவற்றைக்கூறும் இலக்கணம், இவ்விலக்கணத்தால் அமைந்த தமிழ் நூற்களில் தமிழரின் போர்த்திறத்தைக் காணலாம். போரென்றால் அறப்போராகும்.
32- பிறர்க்கு உதவியதால் உண்டான கேடு தமிழர்கட்கு ஓர் அணிகலமாகும்.
33 - பிறரை மன்னிப்பது தமிழர் நாகரிகம் என்றெண்ணி இனியும் தமிழர்க்குத் துயர்விளைப்போர் இயற்கையால் துயரடைவர்.

வீரம்

பூரித்துத் தோட்கள் புடைத்திடப் போர்செய்யும்
வீரத்தில் சிறந்தவர்நம் வியன்தமிழர் அம்மானை
வீரத்தில் சிறந்தவர்நம் வியன்தமிழர் எனினிந்நாள்
ஓரத்தில் கைகட்டி ஒதுங்குவதேன் அம்மானை
உளவுசெய்து மாற்றார்கள் ஒதுங்கவைத்தார் அம்மானை (34)

தாய்மார்களே முன்பு தமிழ்நாட்டில் தம்மிளஞ்
சேய்களைப் போருக்குச் செல்லவிட்டார் அம்மானை
சேய்களைப் போருக்குச் செல்லவிட்டார் எனினின்று
தாய்மார்கள் போரென்றால் தயங்குவதேன் அம்மானை
தயக்கத்தை ஆண்பதரே தந்துவிட்டார் அம்மானை (35)

சமயம்

புதுப்புதிய சுவைதன்னைப் புலனாக்கும் தமிழ்மொழிதான்
மதிப்புள்ள சங்கநூல் மாண்புடைய தம்மானை
மதிப்புள்ள சங்கநூல் மாண்பிருக்கப் பித்தான
மதச்சண்டை நம்தமிழில் மண்டியதேன் அம்மானை
மண்டியதவ் ஆரியர்செய் மயக்கத்தால் அம்மானை (36)

உய்வதனைக் கருதி உயர்ந்திடுநம் தமிழ்முன்னோர்
தெய்வ வணக்கந்தாம் செய்துவந்தார் அம்மானை
தெய்வ வணக்கந்தாம் செய்பவரை இன்றுசிலர்
எய்வதுபோல் கடுமொழியால் எதிர்ப்பதேன் அம்மானை
எதிர்க்கலாம் ஆரியர்கள் ஏய்ப்பதையே அம்மானை (37)


34,35- வீரம் செறிந்த தமிழ்மக்களை மயக்கி எதிரிகள் கோழைகளாக்கி விட்டனர். ஆடவரின் அடக்குமுறையால் பெண்டிரும் கோழைகளாயினர்.
36,37,38- ஆரியர் கூட்டுறவால் தமிழ் நாட்டில் மதச்சண்டைகளும், செயற்கை வழிபாட்டு முறைகளும் பெருகின. இதனால், தெய்வ வணக்கமே எதிர்க்கப்படும் நிலைமையை அடைந்தது. உண்மையில் தெய்வ வணக்கம் வேண்டாம் என்பது கருத்தன்று. இயற்கை வடிவுடைய இறைவனை முன்தமிழர்
இயற்கை முறைக்கேற்ப ஏத்தினர்காண் அம்மானை
இயற்கை முறைக்கேற்ப ஏத்தினரே யாமாகில்
செயற்கை முறைபலபின் செறிந்ததேன் அம்மானை
செறிந்தது வடவர்தம் சேர்க்கையால் அம்மானை (38)

கோவில்

காண்டகு பல்வடிவாய்க் காட்சி யளிக்கின்ற
ஆண்டவனுக் கனைவருமே அருங்குழந்தை அம்மானை
ஆண்டவனுக் கனைவருமே அருங்குழந்தை எனிற்சிலரை
ஈண்டுகோயி லில்விடாமல் இழிப்பதேன் அம்மானை
விடாதவரே வெளியேற வேண்டுமினி அம்மானை (39)

ஆரியர்கள் ஆட்சிசெயும் அரியதமிழ்க் கோயிலெலாம்
சீரியநம் தமிழரைச் சேர்ந்தனவே அம்மானை
சீரியநம் தமிழரைச் சேர்ந்தனவே எனின்தமிழர்
கோரியதோர் உள்ளிடத்தைக் குறுகலமோ அம்மானை
குறுகியினித் தம்முரிமை கொள்ளவேண்டும் அம்மானை (40)

திருமணம்

காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்
காதல் மணமேயக் காலத்தில் அம்மானை
காதல் மணமேயக் காலத்தி லாமாயின்
ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானை
சாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை (41)


40 - கோயிலுக்குள் தமிழர்கள் புகுந்தாலும், குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்லக்கூடாதாம். இனி இது முடியாது.
41 - காதலனும் காதலியும் கருத்தொருமித்த காதல் மணமே வேண்டற்பாலது.
நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்
செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானை
செந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்
வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானை
வந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை (42)

தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்
தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதிகாண் அம்மானை
தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே தகுதியாம் என்பதைநம்
தமிழ்க்கிழவர் சிலரின்று தடுக்கின்றா ரம்மானை
தடுப்பவரை மணமக்கள் தடுக்கவேண்டும் அம்மானை (43)

அரசர்

பல்லார் வணக்கப் படைப்புக்கா லந்தொட்டே
பல்லாண்டு தமிழ்மன்னர் பாராண்டார் அம்மானை
பல்லாண்டு தமிழ்மன்னர் பாராண்ட துண்டாயின்
வல்லாரோ அரசியலில் வகுத்துரைப்பாய் அம்மானை
ஐயமானால் குறளிலுள்ள அரசியல்பார் அம்மானை (44)

வடநாடு முழுவதையும் வண்தமிழ்கொண் டாண்டசேரன்
வடஇமயங் கொள்இமய வரம்பனாம் அம்மானை
வடஇமயங் கொள்இமய வரம்பன் இருந்ததுண்டேல்
படையுடன் சென்றொருகை பார்ப்போம்நாம் அம்மானை
பார்த்தல் தவறாம்நம் பகுதிபோதும் அம்மானை (45)


42,43 தமிழரின் திருமண நிகழ்ச்சிகளைத், தமிழ்ப் பெரியார் ஒருவரே, தமிழினாலேயே நிகழ்த்த வேண்டும். இல்லையேல் மணமக்கள் மணக்க மறுக்கவேண்டும்.
44. திருக்குறளிலுள்ள அரசியல் எனும் பகுதியில் அரசியல்துறை பலபட வகுத்து விரிக்கப்பட்டுளது. தமிழரின் வன்மைக்கு இதுவே போதிய சான்று பகரும். மடியின்றித் தம்முயிர்போல் மன்னுயிரைக் காத்ததமிழ்
முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானை
முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்
அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானை
ஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை (46)

புலவர்

அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்
சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானை
சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்
இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானை
நன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை(47)

வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்
அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானை
அரசர் அடங்கிமிக அரசாண்டா ராமாகில்
அரசரினும் புலவர்தம் ஆற்றலென்ன அம்மானை
ஆற்றல் தமிழ்தந்த ஆற்றலே அம்மானை (48)


45 - அன்று வடக்கே படையெடுத்துச் சென்று, வடநாடு முழுவதையும் வென்று, இமயமலையில் தமிழ்க்கொடி நாட்டி, இந்தியா முழுவதும் தமிழையே பொதுமொழியாக வைத்து ஆண்டதால் இமயவரம்பன் என ஒரு சேரன் பெயர் பெற்றான். ஆனால், இன்று தமிழ்நாடு தமிழர்க்குக் கிடைத்தால் போதும்.
48 - பண்டையக் காலத்தில் அரசர்கள் தமிழ்ப்புலவர்களின் வாக்கைத் தட்டாது அடங்கி அரசாண்டு வந்தார்கள். காரணம் புலவர்களின் தமிழாற்றலே. இசைமிக்க ஒருசேரன் இனியஒரு புலவர்க்கு
விசிறிதன் கைக்கொண்டு விசிறினன்காண் அம்மானை
விசிறிதன் கைக்கொண்டு விசிறியது மெய்யாகில்
விசிறிய காரணத்தை விளம்பிடுவாய் அம்மானை
காரணந்தான் தமிழறிந்த காதலே யம்மானை (49)

அயலார்

தமிழ்நாட்டில் தமிழ்ச்சோற்றைத் தகுதியுடன் மிகஉண்டு
தமிழுக்கே கேடுசெய்வோர் தங்கியுளார் அம்மானை
தமிழுக்கே கேடுசெய்து தங்கியுள்ள அவர்தம்மைத்
தமிழர்கள் தண்டிக்கத் தயங்குவதேன் அம்மானை
தயங்குவதற்குக் காரணம்நம் தண்ணளியே அம்மானை (50)

தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்தி
வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானை
வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள்
படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானை
பதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை (51)

கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்கு
உடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானை
உடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின்
அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானை
அடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை (52)


49. பண்டு, மோசிகீரனார் என்னும் புலவர் வழிநடந்த களைப்பால் அரண்மனைக் கட்டில் ஒன்றில் அறியாது படுத்து உறங்கிவிட்டார். அவ்வரண்மனைக்குரிய சேர அரசன் புலவரைத் தண்டிக்காது, விசிறி கொண்டு விசிறினான். காரணம் தமிழ்ப்பற்றே.
50 - தண்ணளி - கருணை
51 - சிலர் தமிழை வளர்ப்பதுபோல் நடித்து மறைமுகமாக வடமொழியை வளர்க்கின்றனர். இத்தகைய சூழ்ச்சிக்கு இனியும் இடங்கொடுப்பின் நாம் பதவியற்றுப் பதராவோம். தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசில
தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானை
தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின்
தமிழ்க் குருதி அவர்க்கில்லாத் தன்மையேன் அம்மானை
குருதி வட நஞ்சுதீண்டக் குலைந்ததுகாண் அம்மானை (53)

இடையிற்பல் லாண்டுகளாய் இன்னலுற்ற தமிழரினி
வடவர்க்கு அடிமைசெயும் வகைகொள்ளார் அம்மானை
வடவர்க்கு அடிமைசெயும் வகைகொள்ளா ராமாயின்
வடவரோ டொன்றிநாம் வாழ்வதெங்ங்ன் அம்மானை
ஒன்றியே கேட்போம்நம் உரிமையினை அம்மானை (54)

கல்வி

திட்டின்றித் தமிழ்நாடு திகழவேண்டின் யாரும்
கட்டாயக் கல்விதனைக் கற்கவேண்டும் அம்மானை
கட்டாயக் கல்விதனைக் கற்பின் அனைவர்க்கும்
தட்டாமல் உயர்தொழிலைத் தருவாரோ அம்மானை
எத்தொழிலா யினும்யாரும் இயற்றவேண்டும் அம்மானை (55)


52- தமிழுக்குக் கேடு செய்பவர் தாமே இனி அழிவர். அறக்கடவுளே தண்டித்துவிடும்.
53 - முன்பு சில தமிழர்களே தமிழைத் தாழ்த்திப் பேசினர். வடமொழிப்பித்து என்னும் நஞ்சு தீண்டியதால் அவருடைய தமிழ்க்குருதி (இரத்தம்) குலைந்தது போலும்.
54 - தமிழர் இடையில் பல்லாண்டுகளாய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டு வருந்தின ராதலின் இனியும் அது முடியாது. தம்முரிமையைப் பெற்றுக்கொண்டு வட இந்தியரோடு ஒன்றிவாழலாம்.
55 - எல்லோரும் கட்டாயக் கல்விகற்றால் எல்லோர்க்கும் உயர் தொழில் (உத்தியோகம்) கிடைக்குமா? என்று கேட்கின்றனர் சிலர். கற்றாலும் சரியே, எவரும் எத்தொழிலையும் செய்யக் காத்திருக்க வேண்டும். பல்வகை இன்பம் படைத்துமே காக்கும்நற்
செல்வம் தமிழர்க்குச் செந்தமிழே அம்மானை
செல்வம் தமிழர்க்குச் செந்தமிழேல் அத்தமிழ்க்
கல்வி பலர்கற்காக் காரணம்என் அம்மானை
அறியாமை காரணம் இன்(று) அகன்றுவிட்ட தம்மானை (56)

அடுத்துமே பள்ளிதனில் அருங்கல்வி பெறாதோர்க்குப்
படத்தினால் கல்விதனைப் பரப்பலாம் அம்மானை
படத்தினால் கல்வி பரவுமென்றாற் படத்தை
நடத்துபவர் அதில்கருத்து நாட்டவேண்டும் அம்மானை
நாட்டின் நம்நாட்டிற்கே நலமுண்டாம் அம்மானை (57)

ஏர்மிகு பல்வளங்கள் இயையத் தமிழர்வாழ்
ஊர்தோறும் நூல்நிலையம் ஒன்றுவேண்டும் அம்மானை
ஊர்தோறும் நூல்நிலையம் ஒன்றுவேண்டு மாமாயின்
சீர்மிகுபன் னுல்தோன்றிச் செழிக்குமன்றோ அம்மானை
செழிக்கத் தமிழ்மொழியும் சிறப்புறும் அம்மானை(58)

பெண்கள் முன்னேற்றம்

மடுக்கும் பிழைப்பிற்கா மக்களெலாம் ஒரு தொழிலை
அடுக்குமுன் கல்விதனில் ஆழவேண்டும் அம்மானை
அடுக்குமுன் கல்விதனில் ஆழவேண்டும் என்றிடினே
அடுப்பூதும் பெண்கட்கும் படிப்பெதற்கு அம்மானை
அடுப்பூதல் ஒருதொழிலென் றறிந்திடுவாய் அம்மானை (59)


57 - பள்ளிக்கூடங்களில் படிக்கமுடியாத முதியோர் பெண்கள் முதலானோர்க்குத் திரைப் (சினிமா) படத்தின் வாயிலாகக் கல்வியைப் புகட்டவேண்டும்.
58 - ஊர்தோறும் நூல்நிலையம் ஏற்பட்டால் பல துறை நூற்கள் பெருகித் தமிழ் செழிக்கும்.
59 - எத்தொழில் செய்வோர்க்கும் கல்வி தேவை. சமையலும் ஒரு தொழிலாதலின் பெண்கட்கும் கட்டாயக் கல்வி தேவை. நன்மக்களைப் பெற்று நாட்டிற்கு நலனளிக்கும்
பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் அம்மானை
பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் எனினின்று
புன்மக்கள் சிலர்தடைதான் புரிகின்றார் அம்மானை
புரிபவர்கள் கொலைதமிழ்க்குப் புரியவாராம் அம்மானை (60)

பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்
பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானை
பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்
பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானை
எனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை (61)

சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்
கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானை
கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீ
நேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானை
சங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை (62)

காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்
தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானை
தாய்கட்கு வீரம் தழைக்கின் அவர்பெற்ற
சேய்கட்கும் வீரம் செழிக்குமன்றோ அம்மானை
புறநானூற் றாலதனைப் புரிந்திடலாம் அம்மானை (63)


60 - பெண்களின் தமிழுணர்ச்சிக்குத் தடைசெய்கின்றனர் சிலர். அது, தமிழையே கொலை செய்வதாகும்.
61 - பெண்புத்தி பின்புத்தி என்று பிதற்றும் பேதமையை மறந்து, இனியேனும் பெண்களை முன்னேற்றவேண்டும்.

62 - சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையார், பொன் மொழியார் முதலிய சிறந்த பெண்புலவர்களே, பெண்களின் மதிநுட்பத்திற்குச் சான்றாவார்கள்.
63. ஒரு மறத்தாய் வயதிற் சிறிய ஒரே மகனைச் சண்டைக்கனுப்பி, அவன் மார்பில் புண்பட்டு இறந்ததைக் கண்டு மகிழ்ந்த வரலாறு புறநானூறு எனும் தமிழ் நூலில் காணக்கிடக்கின்றது. ஆதலின் தாய்க்கு வீரம் இருப்பின் சேய்க்கும் (பிள்ளைக்கும்) வீரம் இருக்கும்.

அன்று (தமிழ்ச் சங்கம்)

இளமைப் பொலிவுடைய இன்தமிழ் அக்காலம்
வளமதுரைச் சங்கத்தில் வளர்ந்ததுகாண் அம்மானை
வளமதுரைச் சங்கத்தில் வளர்ந்ததா மாகில்
வளர்த்தநல் தாயரைநீ வகுத்துரைப்பாய் அம்மானை
புலவரும் வேந்தருமே புகழ்தாயர் அம்மானை (64)

இன்று

முற்காலத் தமிழாட்சி முற்றும் உணர்ந்துவரும்
தற்காலத் தமிழிளைஞர் தமிழ்வெறியர் அம்மானை
தற்காலத் தமிழிளைஞர் தமிழ்வெறிய ராமாயின்
பிற்காலம் தமிழ்த்தாயே பேரரசி யம்மானை
பேரரசி யோடவளே பெருந்தெய்வம் அம்மானை (65)

தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்பு
தமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானை
தமிழ்தமிழசெந் தமிழென்று தவித்தவரைக் கொடியசில
தமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானை
வெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை (66)

உரிமை

இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்
தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானை
தனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ள
இனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானை
எதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை(67)


65 - தற்காலத் தமிழிளைஞர்கள் தமிழ்ப்பித்தராகத் திகழ்வதால், இனி தமிழ்த்தாயே தமிழ்நாட்டிற்கு அரசியும், தெய்வமும் ஆவாள்.
66 - முன்பு, தமிழுணர்ச்சி ததும்பியவரை வெறுத்தவர்களெல்லோரும் இன்று தமிழை விரும்புகின்றனர்.
67 - இணைந்த இந்தியாவை எதிர்த்து மாறுபடாமலேயே தமிழரின் தனியுரிமையரசைக் கேட்டு வாங்கிக் கொள்ளவேண்டும். திண்ணியநல் மறஇளைஞர் திகழ்ந்து விளங்கிடும்
தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானை
தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்
நண்ணு பிறநாட்டார் நகருவரோ அம்மானை
நகராது தமிழ்க்குழைத்தால் நலம் பெறலாம் அம்மானை (68)

தழைத்த தமிழ்மொழிக்கும் தமிழர்க்கும் நன்மையுற
உழைப்போர்க்கே தமிழ்நாடு உரியதுகாண் அம்மானை
உழைப்போர்க்கே தமிழ்நாடு உரியதாம் என்றக்கால்
உழைப்பின்றிச் சிலரிங்கு உறங்குவதேன் அம்மானை
உறங்குபவர் நாட்டிற்கு ஒரு சுமையாய் அம்மானை(69)

ஆக்கம்

அமிழ்தான வளம்பலதாம் அமைந்த திருநாடாம்
தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமைவேண்டும் அம்மானை
தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமைவேண்டு மாயிடினே
இமிழ்கடல்சூழ் உலகாட்சி இயற்றுமோ அம்மானை
இயற்றல் தமிழ்க்கெளிதாம் இயற்கையுமாம் அம்மானை (70)

இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரிய
தனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானை
தனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்
தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானை
இல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை (71)


68 - தமிழ்நாடு தமிழர்க்கே இருப்பினும் தமிழ்க்குத் தீங்கு செய்யாது உழைத்தால் பிறநாட்டினரும் தமிழ்நாட்டில் வாழலாம்.
69 - உழைப்பின்றி உண்டுகளித்து உறங்குபவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை. பெருஞ் சுமையே அவர்கள்.
70 - தமிழ்நாட்டு நிலையங்கள் ஒவ்வொன்றிலும் தமிழே தலைமைப் பதவியேற்று ஆட்சி செய்யவேண்டும். அவ்வாட்சி தமிழ்க்கு மிக எளிதே.
71 - தமிழர்கள் இயன்றவரை தனித்தமிழிலேயே எழுதவேண்டும். தமிழில் சில சொற்கள் இல்லையேல் புதிதாய் உண்டாக்க வேண்டும்.
பழித்தற் கிடமின்றித் தமிழ்நாட்டுப் பண்புகளை
எழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவேண்டும் அம்மானை
எழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவில்லை எனினினிமேல்
விழித்த தமிழ்மக்கள் விடுவரோ அம்மானை
விடமாட்டார் அன்னவரை வெறுத்திடுவார் அம்மானை (72)

வீசும் புகழொளிசால் வியன்தமிழர் எஞ்ஞான்றும்
பேசும் போதாங்கிலத்தில் பேசுவதோ அம்மானை
பேசும்போதாங்கிலத்தில் பேசவேண் டாமெனின்
காசுபல செலவிட்டுக் கற்கலையோ அம்மானை
கற்றதுவெள் ளையராண்ட காலத்தில் அம்மானை (73)

சீர்கொண்ட வளமிகு செந்தமிழ் நாட்டிலுள
ஊர்களின் ஆங்கிலப்பேர் ஒழியவேண்டும் அம்மானை
ஊர்களின் ஆங்கிலப்பேர் ஒழியவேண்டு மாமாயின்
நேர்கொண்ட ஆங்கிலத்தின் நிலையென்ன அம்மானை
ஆங்கிலரோ டாங்கிலமும் ஆங்கிலவாம் அம்மானை (74)

தமிழ்மக்கட் கினியென்றும் தடையின்றித் தனித்தகுதித்
தமிழ்பெயர்கள் தமையேநாம் சாற்றவேண்டும் அம்மானை
தமிழ்ப்பெயர்கள் தமையேநாம் சாற்றவேண்டு மாமாயின்
தமிழல்லாப் பெயர்களின்று தங்கினவே அம்மானை
போனது போகஇனிப் புதுக்கிடுவோம் அம்மானை (75)


73,74, ஆங்கிலேயராட்சியில் கற்ற ஆங்கிலத்திலேயே இனியும் பேசலாகாது. ஊர் முதலியவற்றிற் குள்ள ஆங்கிலப் பெயரையும் ஆங்கிலரோடு அனுப்பிவிட வேண்டும்.
75 - போனது போக, இனியாயினும் தமிழ்மக்கட்குத் தமிழ்ப் பெயர்களையே வைக்கவேண்டும்.
இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்கு
நண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானை
நண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினே
தண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானை
தாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை (76)

தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறு
கோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானை
கோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின்
வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானை
சுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை (77)

ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயை
ஈங்கினிமேல் தலைமகளாய் இருத்தவேண்டும் அம்மானை
ஈங்கினிமேல் தலைமகளாய் இருத்தவேண்டு மாமாயின்
பாங்கான இந்திதனைப் பரப்புவரே அம்மானை
பரப்பவிடின் தமிழ்முன் போல் பதவியறும் அம்மானை (78)

பொய்ஞ்ஞானம் நீக்கிப் புத்துணர்ச்சி பெறச்செய்யும்
மெய்ஞ்ஞானத் துறைதமிழில் மேவியுள தம்மானை
மெய்ஞ்ஞானத் துறைதமிழில் மேவியுள தேயன்றி
விஞ்ஞானத் துறைதானும் வீற்றுளதோ அம்மானை
வீற்றிருந்தே அழிந்ததினி விரித்திடலாம் அம்மானை (79)


76. தண்ணீர், சோறு எனும் தமிழ்ச்சொற்கள் தாழ்ந்தன வென்றும், ஜலம், சாதம் எனும் வடமொழிச் சொற்களே உயர்ந்தன என்றும் எண்ணும்படி ஆரியர் செய்துவிட்டனர். இனி இது பலிக்காது.
77. கோயிற்பணி செய்யும் குருக்கள்மரபில் தோன்றிய சுந்தரரையே நோக்கி, என்னைத் தமிழால் பாடு என்று சிவபெருமானே அறிவித்தாராம்.
78 - தமிழ் நாட்டில் தமிழைவிட இந்திக்குச் செல்வாக்குத் தந்தால் முன்போல் தமிழின் பதவி கெடும்.
தமிழல்லா மொழிகளில் தங்கியநற் கருத்துளைத்
தமிழில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் அம்மானை
தமிழில் மொழிபெயர்த்துத் தந்தால் இனிமேல்நம்
தமிழில் புதுச்சொற்கள் தழைக்குமால் அம்மானை
தழைக்கின் அதுவுமொரு தனியழகாம் அம்மானை (80)

உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்
அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானை
அயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்
உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானை
உயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை (81)

தமிழ்நாட்டெல்லை

நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லை
தென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானை
தென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்
இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானை
எதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை(82)


79,80 - தமிழில் இருந்த விஞ்ஞானம் முதலிய பல துறைநூற்கள் கடற்கோள் முதலியவற்றால் அழிந்தன. இனி அயல்மொழிகளிலுள்ள விஞ்ஞான முதலியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளவேண்டும்.

81 - எல்லாக் குலத்தினரும் பலதுறை நூற்களைக் கற்றால் உயர்ந்த குலத்தோர்க்குத் தாழ்ந்த குலத்தோர் அடங்கமாட்டார்கள் என்று சிலர் குறுகிய நோக்குடன் கூறுகின்றனர். இனியும் உயர்வுதாழ்வு கருதின் செங்கோல் தண்டிக்கும். ஒறுப்பு - தண்டனை.

சென்னை தமிழருக்கே

முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்
சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானை
சென்னை தமிழருக்கே சேரவேண்டின் ஆந்திரர்கள்
முன்னித் தமதாக்க முயலுவதேன் அம்மானை
முயலவே விட்டால்நாம் மூடராவோம் அம்மானை (83)

தனித்தமிழ்க் கிளர்ச்சி

அன்றுபோல் நம்தமிழர் ஆக்கங்கள் பலபெற்று
என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டும் அம்மானை
என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டின் தமிழர்க்கு
இன்று தமிழ்நாட்டில் என்னவேண்டும் அம்மானை
தனித்தமிழ் நற்கிளர்ச்சிதான் வேண்டும் அம்மானை (84)


82,83,84 - தமிழ் நாட்டில் வடஎல்லை திருப்பதி, தென்னெல்லை குமரி. இது பழைய நூற்களிற்கண்ட உண்மை. எனவே, இவ்வெல்லைக் குட்பட்ட சென்னையை ஆந்திரர் தமதாக்க முயல்வது மிகக் கொடுமை. தமிழர் அறநெறியில் தனித்தமிழ்க் கிளர்ச்சி செய்யவேண்டும்.

சுந்தர சண்முகனாரின் உழைப்புகளுள் சில

தமிழ் அகராதிக்கலை
தமிழ் இலத்தீன் பாலம்
கெடிலக்கரை நாகரிகம்
தமிழர் கண்ட கல்வி
தைத்திங்கள்
அம்பிகாபதி காதல் காப்பியம்
கெளதமப் புத்தர் காப்பியம்
மர இனப் பெயர்த் தொகுதி -1
மர இனப் பெயர்த் தொகுதி -2
உலகு உய்ய!
பாரதிதாசரொடு பல ஆண்டுகள்
கருத்துக் கண்காட்சி
தமிழ்க் காவிரி
கடவுள் வழிபாட்டு வரலாறு
தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு
மக்கள் குழு ஒப்பந்தம்
மர இனப் பெயர் வைப்புக் கலை
மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்
மாதவம் புரிவாள் (தாவர இயல்)
பால காண்டப் பைம்பொழில்
அயோத்தியா காண்ட ஆழ்கடல்
கிட்கிந்தா காண்டத் திறனாய்வு
சுந்தர காண்டச் சுரங்கம்
தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்
ஆழ்கடலில் சில ஆணி முத்துகள்
சிலம்போ சிலம்பு - தித்திக்கும் திறனாய்வு
ஆரணிய காண்ட ஆய்வுத்திறன்
தமிழ் அங்காடி
இயல் தமிழ் இன்பம்