தமிழர் வரலாறும் பண்பாடும்/காற்று - ஷெல்லியும் பாரதியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


காற்று –
ஷெல்லியும் பாரதியும்

ஒட் (ode) என்பது ஆங்கிலக் கவிதை உருவங்களில் ஒன்று. கடல், காற்று, வானம்பாடி, நைட்டிங்கேல், (பறவை) முதலியவற்றை முன்னிலையாகப் புகழ்ந்து, தமது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் வெளியிடுவதற்கு இவ்வுருவத்தை ஆங்கிலக் கவிஞர்கள் கையாண்டுள்ளார்கள்.

ஷெல்லியின் ‘மேல் காற்றிற்கு’ (To the westwind) கீட்வின் ‘நைட்டிங்கேலுக்கு’ என்ற முன்னிலைப் பனுவல்கள் ஆங்கில இலக்கியத்தின் அழகுமிக்க படைப்புகள்.

இச்சிறு கட்டுரையில் ஷெல்லியின் ‘மேல் காற்றை’யும், பாரதியின் ‘காற்று’ என்ற கவிதையையும் ஒப்பு நோக்கி இருவரும் ஒரே பொருளைக் கவிதைப் பொருளாகக் கையாண்டிருக்கும் முறையைக் கவனிப்போம். ஷெல்லி 1792 முதல் 1822 வரை வாழ்ந்தவன். இங்கிலாந்தில் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்ற காலத்தில் பாடியவன், வளர்ச்சி பெறும் காலத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடக் கையாண்ட தத்துவங்களிலும், கோஷங்களிலும் நெஞ்சைப் பறி கொடுத்தவன். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற உயர்ந்த லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவன். நிலப்பிரபுத்துவம் மக்களின் ஆன்மாக்களை அழுத்தி வதைக்கிறது என்று எண்ணி அதன் விடுதலைக்காகப் போராட எண்ணியவன். சுதந்திரம் என்ற அருவமான லட்சியத்தை வழிபட்டவன். இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உலகத்தைப் படைக்க ஆர்வம் கொண்டவன். இவ்வாறான இளமைச் சிந்தனைகளில் கவிதைச் சிறகுகளால் பறந்து கண்ட புதிய கற்பனை உலகை நனவாக்கப் பேராசை கண்டவன்.

ஆனால் கற்பனை மட்டும் லட்சியத்தை அடைய உதவுவது இல்லை. முதலாளித்துவ சித்தாந்தங்களின் போலித்தன்மையை அவன் எளிதில் உணர்ந்தான். இனிய சொற்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் வஞ்சகத்தை ஷெல்லியின் கூர்மையான அறிவு அறிந்து கொண்டது. மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையே இருந்த முரண்பாட்டை ஷெல்லி உணர்ந்தான்.

அவன் கனவுகளின் ஒளி மழுங்கியது. அவனது கற்பனைச் சிறகுகள் ஒடிந்தன. வெள்ளம் போல் பாய்ந்த உணர்ச்சி வெள்ளம் வற்றி வறண்டது. அவனது உள்ளத்தில் எழுதி அழகு பார்த்து வந்த புதிய உலகம் என்னும் கோலச் சித்திரம் வர்ணம் இழந்து அலங்கோலமாக மாறிற்று. அவனது இதயம் வெடித்து ரத்தம் பீறிட்டது. சோகம் அவனை ஆட்கொண்டது. இச்சோகம் தனி மனிதனின் சோகமல்ல. சமுதாய சோகத்தின் பிம்பமே அது. அவனது ஆகாயக் கோட்டைகள் சரிந்ததினால் ஏமாற்றமும் துன்பமும் அவன் மனதை வாட்டின. இம் மனநிலையில் அவன் இத்தாலிக்குச் சென்றான். ஆர்னோ என்னும் சிற்றூரில் தங்கினான். அங்கு அவனுடைய ஒரே மகன் இறந்து போனான். புத்திர சோகம் மேலிட்டது. கனவுகள் கலைந்ததால் ஏற்பட்ட சோகமும், சொந்த இழப்பால் தோன்றிய சோகமும் இணைந்து ஷெல்லியின் உள்ளத்தை நிரப்பிற்று. கவிதை ஊற்று தூர்ந்து விட்டது.

இந்நிலையில் மேல் காற்று அடிக்க ஆரம்பித்தது. இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகளை இது சிதற அடித்தது. வெறியாட்டக்காரனது மந்திர சக்தியின் முன்பு விழுந்தடித்து ஓடும் பிசாசுகளைப் போல அவை ஓடின. இறகு கொண்ட விதைகளைத் தாங்கிச் சென்று ஈரமான தரையின்மேல் காற்று விட்டுவிட்டது. அவை முளைத்தன. இவ்வாறு இயற்கையின் அழிவு சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் மேற் காற்று செயல்படுவதை ஷெல்லி கண்டான்.

"Wild spirit which art
moving every where
Destroyer and preserver
hear oh here!"

பூமியில் மட்டுமின்றி வானத்திலும் மேல்காற்று தனது அழிவு ஆற்றலைப் புலப்படுத்தியது. வானத்தில் காணப்படும் மேகங்களை, கடலிலும் வானத்திலும் இருந்து உதிர்ந்த இலைகளாகக் கவிஞன் கூறுகிறான். அவற்றை பூமியின் இலைகளைச் சிதறிப்படிது போலவே மேல் காற்று அலைக்கழிக்கிறது. கள்வெறியோடு, தெய்வ வெறியாடும் தேவராட்டியின் கூந்தலைப் போல அவை பறந்து பரட்டையாகத் தோன்றுகின்றன. சாகின்ற ஆண்டின் சமரகீதமாக மேல் காற்று சங்கம் ஊதுகின்றது. இருளினின்றும், ஈரத்தை உறிஞ்சி மேகமாக்கி மழை பொழியவும் மின்னல் வெட்டவும் மேல் காற்று செயல் புரிகின்றது. இச்செயல்களில் மேல் காற்றின் அழிக்கும் சக்தியைக் கவிஞன் உணர்கிறான்.

இவ்வாறே கவிஞன் மாறி மாறி பல காட்சிகளை நம் கண் முன் கொணர்ந்து காற்றின் அழிவுச் சக்தியையும், உணர்வில் பதிய வைக்கிறான்.

ஆனால் காற்றின் முழு வலிமையையும் கண்ணால் கண்டுவிடமுடியாது என்று எண்ணிய கவிஞன் தானே இலையாகி, மேகமாகி, கடலாகி, காற்றாகி, ஆற்றாக அனுபவிக்க ஆசைப்படுகிறான். இவ்வாறு உலகின் துன்பங்களிலிருந்து விடுபட்டு காற்றின் மீது ஏறித் திரிய ஆசைப்படும் கவிஞன், காற்றின் வலிமையால் தனது உள்ளத்தில் வலுவேற வேண்டும் என்று விரும்புகிறான்.

இளமையில் காற்றைப் போலவே ஷெல்லி எவருக்கும் அடங்காத தன்மை பெற்றிருந்தான். அதனைப் போலவே தனது கவிதைக்கு ஆற்றல் உண்டு என நம்பியிருந்தான். தன் பாட்டினால் இவ்வையத்தை மாற்றி விடலாம் என்று கனவு கண்டான். இக் கனவுகள் கலைந்த பின் தோன்றிய ஏமாற்றம், வாழ்க்கையின் மீது அவனுக்குச் சலிப்பைத் தோற்றுவித்தது. தனது வலிமையின்மையை நினைக்க அவனுக்குச் சோர்வு தோன்றியது.

இந்நிலையில் காற்றின் வலிமையை அவன் காண்கிறான். தன் வலிமையின்மையையும், சோர்வையும், சலிப்பையும், நம்பிக்கை யின்மையையும் போக்கித் தனது சொற்களில் வலிமை பெய்யுமாறு காற்றை வேண்டிக்கொள்கிறான். இலைகளைத் துளிர்க்கச் செய்யும் காற்று தனது உள்ளத்தையும் புதுப்பிக்க வேண்டும். உதிர்ந்து விட்ட இலைகளை உலகெங்கும் பரப்பும் காற்று தனது வலுவிழந்த சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும். இலைகள் மண்ணோடு சேர்ந்து புதிய செடிகளுக்கு உரமாவது போல தனது சிந்தனைகளைப் புதிய உலகம் தோன்ற வழிகோல வேண்டும். தனது குரலைக் காற்று தனது வீணையாக மீட்டி, உலகெங்கும் அதன் நாதம் பரவச் செய்ய வேண்டும். தற்போது நீறு பூத்த அனல் போன்று செயல் வலிமை குன்றிக் கிடக்கும் தனது சிந்தனைகளைக் காற்று சுவாலை விட்டெரியச் செய்து, மாந்தர் மனங்களில் இருளை ஒட்டி ஒளிவீசச் செய்ய வேண்டும்.

"Scatter as from an
unextinguished hearth
Ashes and sparks, my words
among man kind"

இச்சிந்தனைகள் அவனுடைய சோர்வைப் போக்குகின்றன. இருண்ட பனிக்காலம் என்றும் நீடித்து விடாது. அது மறைந்து வசந்த காலம் தோன்றத்தானே செய்யும்? கவிஞனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தனது குறிக்கோள் நிறைவேறும் என்ற உற்சாகம் தோன்றுகிறது. புதிய உலகத்தைப் பற்றிய கனவுச் சித்திரங்கள் மறுபடி அவன் உள்ளத்தில் எழுகின்றன.

".................of wind,
If winter comes can spring
be far behind?'

என்ற கேள்வியோடு பாட்டை முடிக்கிறான் ஷெல்லி.

ஷெல்லியின் கவிதைகளில் பாரதிக்கு ஈடுபாடு அதிகம். தன்னை அவன் பெருமையாக ‘ஷெல்லிதாசன்’ என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டதுண்டு. ஷெல்லியின் சமூக உணர்வும், மனிதாபிமானமும், புரட்சி மனப்பான்மையும், பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்தன. ஷெல்லியின் சொல்லாட்சியும், உவமைச் சிறப்பும், உள்ளத்தை அள்ளும் கவிதாவேகமும், சிந்தனைச் சிறப்பும், தூய்மையான உணர்ச்சிகளும், பாரதிக்கு ஷெல்லியின் மீது பெருமதிப்பை உண்டாக்கின.

இந்திய நாட்டின் சூழ்நிலையில், தேசிய எழுச்சி தோற்றுவாய்க் கட்டத்தில் சிறு ஊற்றாகத் தோன்றிய காலத்தில் அதன் வளர்ச்சியைத் தீர்க்கதரிசனமாகக் கண்ட பாரதி, ஷெல்லியின் ‘சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்’ என்ற கோஷங்கள், வளர்ச்சிக்கேற்ற கோஷங்கள் என உணர்ந்தான்.

பாரதியின் வாழ்க்கை நிலையும், சுதந்திர இயக்கத்தின் ஆரம்பகால வேதனைகளும், பாரதியின் மனத்தில் வேதனையை உண்டாக்கின. ஆயினும் அவன் மக்கள் உணர்வோடு ஒன்றி நின்றதால் ஷெல்லியைப் போலச் சோர்வடையவில்லை. ‘என் நெஞ்சில் ரத்தம் பீறிடுகிறது.’ என்று எழுதவுமில்லை.

ஷெல்லியின் ‘மேல் காற்று’ என்ற கவிதைதான் பாரதியின் ‘காற்று’ என்னும் வசன கவிதைக்குக் கருவாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அவற்றில் காணப்படும் கருத்து ஒற்றுமை இதனை வலியுறுத்தும்.

ஆனால் பாரதியின் ஆழ்ந்த மனிதாபிமானமும் தன்னம்பிக்கையும், கொள்கைப் பற்றும் ஷெல்லியின் கவிதையில் அவ்வளவு முனைப்பாகக் காணப்படவில்லை.

இனி ‘காற்று’ என்னும் வசன கவிதையின் சிந்தனைப் போக்கைச் சுருக்கமாக அறிந்து கொண்டு பாரதிக்கும் ஷெல்லிக்கும் உள்ள ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராய்வோம். அவற்றின் அடிப்படையில் பாரதியின் தனித்தன்மை எது எனக் காண முயலுவோம்.

பாரதி கதை சொல்லத் தொடங்குகிறான். வீட்டு மேடையின் ஒரு பந்தலில் இரு கையிறுகள். கந்தன் வள்ளியம்மை என்பவை அவற்றின் பெயர்கள். இவை ஒன்றையொன்று நெருங்கித் தழுவிக் கொள்ளு கின்றன. காற்று நிற்கிறது. அசைவு நிற்கிறது. கவிஞன் முன் சோதி ரூபமாக வாயு தேவன் தோன்றுகிறான். கவிஞனுடைய கேள்விகளுக்கு விடை கூறுகிறான்.

‘நான் விழிக்கச் செய்கிறேன்’, அசையச் செய்கிறேன் நான் சக்தி குமாரன்.

இக்கதையில் பாரதி காற்றின் ஆக்க சக்தியைப் புகழ்கிறான். ஆக்க சக்தியைக் காதலாக உருவம் கொடுக்கிறான். ஆக்க சக்தியின் சிறப்பான அம்சம் காதல். அது படைப்பின் அடிப்படை, ஷெல்லி விதை முளைப்பது காற்றின் ஆக்க சக்தியென்றான். பாரதி காற்றின் காதலில், காற்றின் ஆக்க சக்தியைப் புலப்படுத்துகிறான்.

ஷெல்லியும் கடலின் அடியில் காற்றுப் புகுந்து அழிவு செய்வதைக் கூறுகிறான். பாரதி இதனையும் ஒரு காட்சியாக மாற்றிக் கூறுகிறான்.

நடு கடல், தனி கப்பல்
வானமே, சினந்து வருவது போன்ற புயல்காற்று,
அலைகள் சாரி வீசுகின்றன, நீர்த்துளி படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன. சூறையாடுகின்றன,
கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது;
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது.

பாறையில் மோதிவிட்டது.


ஹதம்!

இரு நூறு உயிர்கள் அழிந்தன!! கப்பல் விபத்திலிருந்து யுக முடிவிற்கு அழைத்துச் செல்கிறான் பாரதி,

‘ஊழி முடிவும் இப்படித்தான் இருக்கும்
உலகம் ஒரே நீராகி விடும். தீ நீர்
சக்தி காற்றாகி விடுவாள்,
சிவன் வெளியிலே யிருப்பான்.’

இவ்விரண்டு கதைகள் கூறி பாரதி ஷெல்லியின் முடிவுக்கே வருகிறான்.

‘காற்றே யுக முடிவு செய்கின்றான்,
காற்றே காக்கின்றான்,’

ஷெல்லியின் சொற்கள் இவை:

"Destroyer and Preserver
hear of hear'

இந்நடு நாயகச் சிந்தனையிலிருந்து கிளைகளாகப் பிரிந்து தன்னுடைய தத்துவம் முழுவதையும் உதாரணங்கள் மூலம் பாரதி வெளிப்படுத்துகிறான்.

பாரதிசாக்தேயன், சக்தி அவன் அதிதேவதை, புராதனக் கிரேக்கர்களின் இயற்கை வணக்கம் அவனுடைய மதத்தில் ஒரே அம்சம். இதனால் பெருங்கடலைக் கலக்கும் காற்றின் வலிமையையும் மேகங்களை மோத விடும் காற்றின் ஆற்றலையும் பாரதி கண்டு வியப்புற்று காற்றினை வணங்குகிறான்.

‘காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இறைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றொடொன்றுமோதவிட்டு,
இடி இடிக்கச் சொல்லி வேடிக்கைப் பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?

காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகிறோம்.’

பாலைவனத்தில், ஒட்டகைக் கூட்டங்களும், மனிதர்களும், புழுக்கள் போல் காற்றின் வலிமையால் மணலில் புதையுண்டு சாகின்றனர்.

‘அவன் செயல்கள் கொடியன’

என்று காற்றின் அழிக்கும் ஆற்றலைப் பற்றி தன் கருத்தைப் பாரதி கூறுகிறான்.

இனி புராணக் கதைகளில் வரும் காற்றின் பரம்பரையைக் கூறுகிறான்.

‘வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்’

காற்றே உயிர் என்ற சித்தர் கருத்தை இங்கு பாரதி வலியுறுத்துகிறான்.

இவ்வளவும் படர்க்கையாகக் கவிக் கூற்றாகக் கூறி அந்தக் கவிஞன் இனி முன்னிலையாகக் காற்றினிடம் பேச்சு தொடங்குகிறான். இது ஷெல்லியின் ‘ஒட்’ என்ற முன்னிலைப்பனுவலை ஒத்திருக்கிறது. ஷெல்லி காற்றின் ஆற்றலின் முன் செயலற்றிருக்கிறான். அது விரும்பினால் தான் அதன் மீது பறக்க முடியும். அதன் கருணையால் தான் அவனது சிந்தனைத் தீப்பொறிகள் உலக மக்களிடையே பரவி சுவாலை விட்டு எரிய முடியும். ஆனால் பாரதி காற்றிற்குக் கட்டளை இடுகிறான். காற்றிற்கு வணக்கமும் செலுத்துகிறான். வேத ரிஷிகளின் வணக்க முறையையும், தற்கால விஞ்ஞானிகளின் இயற்கையை வெல்லும் தன்னம்பிக்கையையும், பாரதி இணைக்க முயலுகிறான்.

‘காற்றே வா!
எமது உயிர் நெருப்பை நீடித்து
நல்லொளித் தருமாறு நன்றாக வீசு,
பேய் போல வீசி அதனை அவித்து விடாதே!
மெதுவாக நல்ல நயத்துடன் வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழி படுகிறோம்’

காற்று உலகிலுள்ள அழுக்கைப் போக்குகின்றான். அது போல உள்ளத்திலுள்ள அழுக்கையும் சுத்தம் செய்கிறான். அவன் வரும் இடத்தை மாந்தர் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

காற்று நொய்ந்தவற்றை அழித்து விடுவான். வலிமையுள்ள வற்றை மேலும் வலுப்படுத்துவான். அவனைப் பயன்படுத்த மனிதப் படைப்புகள் வலிமையாக இருக்கவேண்டும்.

‘ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் செய்வோம்
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்து வோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று
நமக்குத் தோழனாக வருவான்.’

இவ்வாறு காற்றைத் தோழமை கொள்ளும் வழியைப் பாரதி நமக்கு உபதேசிக்கிறான்.

காற்று மழையைக் கொண்டு வருகிறான். தமிழன் நனைகிறான். தங்க நல்ல வீடு இல்லை.

‘நனைவதால் ஜுரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள்.’

நோய் வருவது விதியினால் என்று சொல்லும் சாத்திரங்களைப் பாரதி பாடுகிறான்.

‘உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல் இருப்பன வற்றையும் மறந்துவிட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார்ப் பொய்க் கவிதைகளை மூடரிடம் காட்டி வயிறு வளர்க்கிறார்கள்.’

அசைவனைத்தும் காற்றின் செயல். வையகத்தின் உயிர் காற்று. அதனைப் பாரதி போற்றுகிறான். மீண்டும் வேத ரிஷிகளின் பாணியில் பாரதி காற்றை வணங்குகிறான்.

‘காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்கு கின்றோம்.
உயிர் வாழ்க!’

உயிர் மாயையல்ல. உயிர் உண்மை அதனை வாழ்த்துகிறான் பாரதி, பாரதி கவிதைகளின் ஜீவநாதம் இது. ஷெல்லியில் இது தெளிவாக ஒலிக்கவில்லை.

‘புலவர்களே காலையில் எழுந்தவுடன்
உயிர்களை யெல்லாம் போற்று வோம்.’

இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறான் பாரதி. இரு கவிஞர்களின் ஒற்றுமைகளையும் மேலே கண்டோம். உயிர் மீது பாரதி கொண்டிருந்த பெரும் பற்று ஷெல்லியின் கவிதையில் இல்லை. இப்பற்றுதான் பாரதியை மனித வர்க்கத்தின் வருங்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்தது. காற்றை அடக்கியாளும் மனோவலிமையை அவனுக்கு அளித்தது. ஷெல்லியோ தனது காய்ந்த உள்ளம் தளிர்க்க காற்றைத் துணை செய்யக் கோருகின்றான். பாரதியோ,

‘தென்னையின் காற்று சலசல
வென்றிடச் செய்து வரும் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டு ஏறித்தரியும் வீர்
உள்ளம் படைத்து விட்டோம்.’

என்று பாரதி பெருமையோடு பேசுகிறான்.