தமிழின்பம்/கண்ணகிக் கூத்து
12. கண்ணகிக் கூத்து
சிலப்பதிகாரம் என்னும் நாடகக் காவியம் தமிழ் நாட்டு மூவேந்தர்க்கும் உரியதாகும். கதைத் தலைவியாகிய கண்ணகி சோழ நாட்டிலே பிறந்தாள்; பாண்டி நாட்டிலே தன் கற்பின் பெருமையை நிறுவினாள்; பின்பு சேரநாடு போந்து வானகம் எய்தினாள். ஆகவே, நூலாசிரியர், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டு வந்த முந்நாட்டின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார். இவ்வுண்மை,
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக".
என்று சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கிக் கூறுமாற்றால் இனிது விளங்கும். இவ்வாறு, முந்நாட்டின் பெருமையையும் எழுதப் போந்த ஆசிரியர் அவற்றின் அரசியல் முறைகளையும், சமய நெறிகளையும், பிறவற்றையும் குறிப்பாகக் கூறியருளினார். ஆகவே, முந்நாட்டின் நீர்மையையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் தமிழ்மொழியில் சிலப்பதிகாரம் ஒன்றேயாம்.
மூவேந்தர்க்கும் உரிய நூலாக விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ் நயங்களும் அமைந்த அரிய நூலாகவும் திகழ்கின்றது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் இயற்றமிழ், இனிய சொற்களால் மாந்தர் அறிவினைக் கவர்ந்து உயரிய இன்பம் அளிப்பதாகும். இசைத் தமிழ், செவியின் வாயிலாக உள்ளத்தைக் கவர்ந்து உலப்பிலா இன்பம் பயப்பதாகும். நாடகத் தமிழ், இயற்றமிழின் அழகையும், இசைத் தமிழின் சுவையையும், காட்சியின் நலத்தோடு கலந்தளித்து மனத்தை மகிழ்விப்பதாகும். நாடகசாலைக்குச் சொல்வோர், மணிமுடி தரித்த மன்னரும், மதிநலஞ் சான்ற அமைச்சரும், வெம்படை தாங்கிய வீரரும், நல்லணிபுனைந்த நங்கையரும், பிறரும் அரங்கத்தில் நடிக்கக் கண்டு களிப்புறுவர்; பண்ணார்ந்த பாட்டின் இசைகேட்டு இன்புறுவர்; நாடகக் கதையில் அமைந்துள்ள கருத்தினை அறிந்து நலமுறுவர். இவ்வாறு கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்பமும் பயனும் ஒருங்கே எய்துவிக்கும் தன்மையாலேயே தமிழ்நாட்டு அறிஞர் நாடகத் தமிழைப் போற்றி வளர்ப்பாராயினர்.
மாந்தரை ஒழுக்க நெறியில் நிறுத்துதற்கு நாடகம் ஒரு சிறந்த கருவியாகும் என்பர். நல்ல நாடகங்களைக் காணும் மக்கள் அறத்தாறறிந்து ஒழுகத் தலைப்படுவர். உயிர்க்கு நலம் பயக்கும் உயரிய உண்மைகளைக் கொண்ட கதைகளே முற்காலத்தில் நாடக மேடைகளில் நடிக்கப்பட்டமையால், மக்கள், பெரும்பாலும் நன்மையில் நாட்டமும், தீமையில் அச்சமும் உடையராய் வாழ்ந்தார்கள். ஆனால், இக்காலத்தில், புன்னெறிப் பட்டோரை இன்புறுத்திப் பொருள் கவரும் நோக்கமே பெரும்பாலும் நாடக சாலையை இயக்குகின்றது. அதனாலேயே, தற்காலத்தில் நாடகங்களைக் காண்பதுவும் தீதென்று தக்கோர் கருதுகின்றனர்.
தமிழ்நாட்டு நாடக மேடையில் நடைபெறும் கோவலன் என்னும் நாடகம் பழந்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்திலுள்ள சிறந்த கதையைத் தழுவி எழுந்தததாகும். ஆயினும் நாடகக் கண்ணகிக்கும் காவியக் கண்ணகிக்கும் உள்ள வேற்றுமை புல்லுக்கும் நெல்லுக்குமுள்ள வேற்றுமையைப் போன்றது. கோவலனைக் 'கோவிலன்' என்றும், கண்ணகியைக் ‘கர்னகி என்றும் சிதைத்து வழங்கும் சிறுமை ஒரு புறமிருக்க, கற்பின் கொழுந்தாகிய கண்ணகி, நாடக மேடையில் ஆவேசமுற்று வெறியாட்டயர்வதும், தவறிழைத்த பாண்டியன் மார்பைப் பிளந்து அவன் குடரை மாலையாக அணிந்து குருதியிலே திளைத்துக் கூத்தாடுவதும் அருவருக்கத்தக்க காட்சியன்றோ? பெண்மைக்குரிய நாணமும் மென்மையும் அமைந்த நல்லியற் கண்ணகியை அலகைபோல் அலற வைத்தல் அழகாகுமோ? காளியாட்டங்கண்டு கல்லார் உள்ளங்களிக்கும் என்னும் காரணத்தால் கண்ணகியின் மென்மையை அழித்தல் முறையாகுமோ? அன்றியும், நீதி வழுவா நெறி முறையில் நின்ற நெடுஞ்செழியனது உயிரை வலிந்து பிழிதலும் வேண்டுமோ? நீதி தவறியது என்று அறிந்த பின்னர் அவ்வரசன் உயிர் வாழ இசைவானோ?
நாடகக் கண்ணகியின் தன்மை இவ்வாறாக, காவியக் கண்ணகியின் செம்மையையும் மேன்மையையும் சிறிது காண்போம்; மதுரை மாநகரில் கோவலன் கொலையுண்டிறந்தான் என்றறிந்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்து, நீதியை நிலை நிறுத்துமாறு அவன் மாளிகையினுள்ளே சென்றாள். காவி மலரனைய கண்கள் கண்ணிர் சொரிய, கருங்கூந்தல் விரிந்து கிடக்க, சிலம்பைக் கையிலேந்திக் கொற்றவன் முன்னே போந்த கண்ணகியின் கோலத்தை,
"மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும்”
என்று சிலப்பதிகாரம் உருக்கமாக உரைக்கின்றது. கண்ணீர் உகுத்துநின்ற கண்ணகியைப் பாண்டியன் குழைந்து நோக்கி, 'மனம் வருந்தி வந்த மாதே! நீ யார்?' என்று வினவினான். அதற்கு மாற்ற முரைக்கப் போந்த மங்கை, “அரசனே கன்றை இழந்த பசு ஒன்று மனங் கரைந்து கண்ணிர் வடிக்கக் கண்டு, அவ் ஆன்கன்றைக் கொன்ற தன் அருமந்த மைந்தன் மீது தானே தேராழி ஊர்ந்து முறைசெய்த சோழ மன்னனது புகழமைந்த புகார் நகரமே என் பதியாகும். அந்நகரில் மாசாத்துவானுக்கு மகனாய்த் தோன்றி, ஊழ்வினைப் பயனால் உன் நகரிற் புகுந்து, என் சிலம்பை விற்கப் போந்த வீதியில் உன் ஆணையால் கொலையுண்டிறந்த கோவலன் மனைவியே யான்” என்று கொதித்துக் கூறினாள். அப்பொழுது அரசன் “மாதே! கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோலன்று. அது நீதியின் நெறியே யாகும்” என்று நேர்மையாய் உரைத்தான்.
கோவலன் குற்றமற்றவனென்றும், அவனைக் குற்றவாளி என்று கொன்ற கொற்றவன் தவறிழைத்தான் என்றும் ஐயந்திரிபற விளக்க வந்த கண்ணகி காவலனை நோக்கி, “அரசே! என் கணவன் கள்வனல்லன்; அவனிடம் இருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று. அதன் இணைச் சிலம்பு இதோ, என் கையில் உள்ளது! இதனுள்ளே அமைந்த பரல் மாணிக்கம்” என்று திறம்பட உரைத்தாள். அப்பொழுது, மன்னவன் மனம் பதைத்து, தன் காவலாளர் கோவலனிடமிருந்து கொணர்ந்த சிலம்பினை எடுத்துவந்து, கண்ணகியின் முன்னே வைத்தான். அச் சில்லரிச் சிலம்பைக் கண்ணகி தன் செங்கையால் எடுத்து நோக்கிக் காவலன் கண்ணெதிரே உடைத்தாள். சிலம்பின் உள்ளே இருந்த மாணிக்கம் விரைந்தெழுந்து அரியணை மீதமர்ந்திருந்த அரசனிடம் தானே நேராகச் சான்று பகர்வதுபோல் அவன் முகத்தில் தெறித்து விழுந்த மாணிக்கத்தைக் கண்டான் மன்னன். அந்நிலையில் அவன் வெண்குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது. பொற் கொல்லன் சொற் கேட்டுப் பிழை செய்த யானோ அரசன்? யானே கள்வன்; இதுகாறும் என் வழிமுறையில் இத்தகைய பிழை செய்தார் எவருமிலர். இன்றே என்னுயிர் முடிவதாக என்று அவன் மயங்கி மண்மீது விழுந்தான். விழுந்த மன்னன் எழுந்தானல்லன்.
"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுகஎன் னாயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.”
என்று சிலப்பதிகாரம் இரங்கிக் கூறுகின்றது. காவலன் மயங்கி விழுந்து மாண்டதைக் கண்ட கோப்பெருந்தேவி, கணவனை இழந்து நின்ற கண்ணகியின் அடிபணிந்து பிழை பொறுக்குமாறு வேண்டினாள். இங்ஙனம் அறநெறி பிழைத்த அரசனுக்கு அறமே, கூற்றாக அமைந்தது. அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம் என்பது தமிழ் நாட்டு அரசியற் கொள்கையாகும். இவ்வுண்மையை உணர்த்துதல் சிலப்பதிகாரத்தின் குறிக்கோள் என்பது,
"அரைசிய்ல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”
என்ற அழகிய அடிகளால் அறியப்படும். அரசியல் பிழைத்தோரை அறமே ஒறுக்குமென்றும், கற்பமைந்த மாதரை மக்களும் தேவரும் போற்றுவரென்றும், வினையின் பயனை விலக்கலாகா தென்றும், இவ்வுலக மாந்தர் அறிந்து வாழுமாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது இதனால் இனிது விளங்கும். இவ்வுண்மைக்கு முற்றும் மாறாக, அரசியல் பிழைத்த பாண்டியன் அறத்தால் ஆவி துறவாது, கண்ணகியின் மறத்தால் ஆவி துறப்பதை நாடக மேடையிலே காண்கின்றோம்! கணவனான கோவலனையன்றி ஆடவர் எவரையும் சிந்தையாலும் தொடாச் செம்மை வாய்ந்த கண்ணகி, பாண்டியன் மெய் தீண்டி, அவன் மார்பைப் பிளந்து, உயிரைப் பருகப் பார்க்கின்றோம்! இவ்வாறு, தமிழ் நாட்டு மன்னர் அறமும், மாதர் கற்பும் நிலைகுலையுமாறு நிகழ்த்தப்பெறும் கூத்தைக் கண்டு கல்லார் நெஞ்சம் களிக்குமெனினும் பழந்தமிழ் நாட்டின் பெருமை பாழ்படுவதைக் கண்டு பயனறிந்தோர் வருந்துவர்.