தமிழின்பம்/கலையின் விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து



38. கலையின் விளக்கம்

"அழகிய பொருளால் என்றும் அடைவது ஆனந்தமே" என்று ஆங்கிலக் கவிஞர் ஒருவர் அருளிப் போந்தார். கண்ணினைக் கவரும் அழகையும், கருத்தினைக் கவரும் அறிவையும் தெய்வ நலங்களாகக் கருதி வழிபட்ட பெருமை பாரத நாட்டினர்க்கு உரியதாகும். அழகினைத் திருமகள் என்றும், அறிவினைக் கலைமகள் என்றும் கொண்டு பாரத முன்னோர் போற்றினார்கள். வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் கலைமகளைப் பாரதியார் போற்றும் முறை சாலச் சிறந்ததாகும்.

இவ்வுலகில் வழங்கும் கலைகளைக் கவின்கலையென்றும், பயன்கலை என்றும் பகுத்துக் கூறுவதுண்டு. கண்ணையும் செவியையும் கவர்ந்து, அவற்றின் வாயிலாக மனத்திற்கு இன்பம் ஊட்டும் கலைகள் கவின் கலைகளாகும். மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பலதிறப்பட்ட பொருள்களை ஆக்கிக்கொள்வதற்குச் சாதனமாகிய கலைகள் பயன்கலைகள் எனப்படும். இவ்விரு வகைக் கலைகளின் வடிவமாக நாமகள் விளங்குகின்றாள் என்னும் உண்மையைப் பாரதியார் நன்கு அருளிப் போந்தார்.

செஞ்சொற் கவி இயற்றும் கலைவாணர் கருத்திலும், உள்ளொளி வாய்ந்த உரவோர் மனத்திலும், உலகினர்க்கு ஒளிநெறி காட்டும் உயரிய மறையிலும், கலைமகள் மகிழ்ந்துறைகின்றாள். இன்னும், இன்னிசை வீணையை மலர்க்கரத்தி லேந்திய கலைமகள், மக்கள் பேசும் மழலை மொழியிலும், மாதர் இசைக்கும் மதுரப் பாட்டிலும்; கீதம் பாடும் குயிலின் குரலிலும், சிறை யாரும் மடக்கிளியின் செந்நாவிலும் அமர்ந்திருக்கின்றாள். அன்றியும், மாட கூடங்களை அழகு செய்யும் ஓவியங்களிலும், கோயில்களில் அமைந்த சீரிய சிற்பங்களிலும் கலைமகள் விளங்குகின்றாள். எனவே, செவியினைக் கவரும் இயற்கவியும் இன்னிசையும், கண்ணினைக் கவரும் ஓவியமும் சிற்பமும் அறிவுத் தெய்வம் உறையும் இடங்களாகும்.

இவ்வுலகில் வாழும் மக்களுக்குப் பயன்படும் பொருள்களை ஆக்கி அளிக்கும் தொழிலாளர் பலராவர். இரும்பை யுருக்கி வெம்படை வடிக்கும் கருங்கைக் கொல்லரும், திண்ணிய மரத்தைத் தரித்து முரித்துப் பணிசெய்யும் தச்சரும், குழைத்த மண்ணாற் பாண்டங்களை வனையும் குயவரும், பட்டாலும் பருத்தி நூலாலும் ஆடைகளை நெய்யும் சாலியரும் உலக வாழ்க்கைக்குப் பயன்படுங் கலைகளைப் பயின்று பணி செய்கின்றார்கள். அன்னார் பணிகளிலும் கலை மாது பண்புற்று இலங்குகின்றாள்.

இன்னும் வேதம் பயிலும் வேதியரும், வீரம் விளைக்கும் வேந்தரும், வான்பொரு ளீட்டும் வணிகரும், தாளாண்மையிற் சிறந்த வேளாளரும் ஒருங்கே வணங்கும் விழுமிய தெய்வம் அறிவுத்தெய்வமேயாகும். மாந்தரது உள்ளத் தாமரையில் இனிதுறைந்து, அவர் அறிவினுக்கறிவாய் நின்று, புன்னெறி விலக்கி நன்னெறி காட்டும் தெய்வம் கலைத்தெய்வமே. மேலோரென்றும் கீழோரென்றும் எண்ணாது, செல்வரென்றும் வறிஞரென்றும் கருதாது, முதியரென்றும் இளையரென்றும் பாராது, 'எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் அறிவினை விரும்புவோர் அனைவரும் வருக' என்று அருள் கூர்ந்து அழைத்திடுந் தெய்வம் அறிவுத் தெய்வமே யன்றோ?

இத்தகைய தெய்வத்தை நிறைமொழி மாந்தர் மறைமொழியாற் போற்றினார்கள். அறிவறிந்த மாந்தர் ஆண்டுதோறும் எண்ணும் எழுத்தும் அமைந்த ஏடுகளை வரிசையாக அடுக்கிக் கலைவிழா எடுத்தார்கள்; விரையுறு நறுமலர் தூவி வணங்கினார்கள்; வண்ணமும் சாந்தமும் வழங்கினார்கள். இவ்வாறு ஆண்டு தோறும் நிகழும் நாமகள் விழாவினைக் கண்ட பாரதியார்,

"செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளிர்!
                   சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
                   வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
                   வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை யிடுவோர்
                   சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம்"

என்று சாற்றியருளினார். ஆண்டிற்கொரு முறை கலையேடுகளை எடுத்தடுக்கி மலர்மாலை புனைவதும், சந்தனம் சாத்துவதும், மந்திரம் முரல்வதும், வந்தனை புரிவதும், உயரிய வழிபாடென்று கருதுதல் பெருந்தவறாகும். 'பொக்க மிக்கவர்' பூவையும் நீரையும் கலைமகள் பொருளாகக் கருதமாட்டாள். கலைவடிவாய நாமகள் விரும்பும் வழிபாடுதான் யாதோ என்றறிய விரும்புவோர்க்குப் பாரதியார் நல்வழி காட்டுகின்றார். தமிழ் நாட்டிலுள்ள வீடுதோறும் கலையின் ஒளி திகழ வேண்டும். வீதிதோறும் இரண்டொரு கல்லூரி இலங்க வேண்டும். நகரந்தோறும் கலாசாலைகள் ஓங்க வேண்டும். கல்வி நலம் அறியாத கசடர் வாழும் ஊர்களை எரியினுக்கு இரையாக்க வேண்டும். இவ்வாறு அறியாமையை அழித்து ஒழித்து யாண்டும் கலையின் ஒளி விளங்கச் செய்தலே நாமகளின் அருள் பெறுதற்குரிய நல்ல வழிபாடென்று பாரதியார் அறிவிக்கின்றார்.

நாட்டிலுள்ள ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமென்னும் உண்மையை,

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
                 இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
                 ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
                 பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
                 ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்”

என்று பாரதியார் அறிவித்துப் போந்தார். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே அறத்தின் பெருமையை அறிந்து, அதனை ஆர்வமுற வளர்த்த நாடு தமிழ் நாடாகும். வருந்தி வந்தவர் அரும்பசி களைந்து அவர் திருந்திய முகங்கண்டு திளைத்த நாடு இந் நாடாகும். கொழுகொம்பின்றிக் குழைந்து கிடந்த சிறு முல்லைக் கொடியின் துயர் கண்டு தரியாது, அக்கொடி படருமாறு தன் பொற்றேரை நிறுத்திச்சென்ற புரவலன் வாழ்ந்த நாடு இந் நாடாகும். வழி நடந்து செல்லும் ஏழை மக்கள் வெங்கதிரோன் கொடுமையால் வாடி வருந்தா வண்ணம் இனிய சாலைகளும் சோலைகளும் அமைத்து, அறம் வளர்த்த நாடு இந் நாடாகும். மும்மை சால் உலகுக்கெல்லாம் முதல்வனாய இறைவனுக்குச் செம்மை சான்ற கோயில்களும் கோட்டங்களும் எடுத்த நாடு இந் நாடேயாகும். இங்ஙனம் அன்னசாலைகள் அமைத்தலும், ஆலயங்கள் எடுத்தலும், சாலைகள் வகுத்தலும், சோலைகள் வளர்த்தலும் சிறந்த அறங்களே எனினும், அறிவை வளர்க்கும் கல்லூரிகள் நிறுவுதலே தலைசிறந்த அறமென்று பாரதியார் அறிவுறுத்தினார்.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்னும் உண்மையைப் பழந் தமிழ் மக்கள் பொன்னே போல் போற்றினர். கல்வி நலம் வாய்ந்தவரே மக்களாவரென்றும், அந்நலம் அமையப்பெறாத மானுடர் விலங்கனைய ரென்றும், பழந் தமிழ்ப்பனுவல் பகுத்துரைக்கின்றது. 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்றார் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர். எனவே, உடம்பினை வளர்க்கும் அன்ன சாலையினும் உயிரினை வளர்க்கும் அறிவுச்சாலை சிறந்ததென்று அறைதலும் வேண்டுமோ? கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியாய இறைவன் கல்லார் நெஞ்சில் நில்லான் என்னும் உண்மையை உணர்வோமாயின், இறைவனை வணங்குதற்குரிய ஆலயங்களை அமைப்பதற்கு முன்னே அறிவினை வளர்க்கும் கல்லூரிகளை அமைத்தல் வேண்டும் என்பது இனிது விளங்குவதாகும். இதனாலேயே, கலை நலமறியாது வருந்தும் எளியவர்க்கு எழுத்தறிவிக்கும் அறம், ஏனைய அறங்களினும் நூறாயிரம் மடங்கு மேலான தென்று பாரதியார் அறிவித்தார். இத்தகைய கல்விச் சாலைகளை நாடெங்கும் நாட்டுதலே கலைமகளின் திருவுள்ளத்தை மகிழ்விக்கும் உயரிய வழிபாடாகும். கல்லூரிகளிற் போந்து எண்ணும் எழுத்தும் பயிலும் மாணவர் கண்ணெதிரே, கலைமகளின் வீணையும் கையும் விரிந்த முகமலரும் விளங்கித் தோன்றும்.