தமிழின்பம்/தெய்வம் படும் பாடு

விக்கிமூலம் இலிருந்து

30, தெய்வம் படும் பாடு[1]

தெய்வம் படும் பாடு தெய்வத்துக்குத்தான் தெரியும். அடியார் கையில் அகப்பட்டு எத்தனை அடியும் அவதியும்பட்டிருக்கிறது. தெய்வம் எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்டிருக்கிறது! தொண்டர் என்று பேர் படைத்த மிண்டர்களுள் ஒருவன் தெய்வத்தைக் கல்லால் எறிந்தான்; மற்றொருவன் பிரம்பால் அடித்தான், பித்தன் என்று ஏசினான் இன்னொரு தொண்டன். "தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே"

கும்பகோணத்திற்கு அருகே சத்தி முற்றம் என்ற சிற்றுார் உள்ளது. அங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது. “சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே" என்று பாடினார் திருநாவுக்கரசர். நாளடைவில் சத்தி முற்றம் என்ற பெயர் சத்திமுத்தம் ஆயிற்று. அதிலிருந்து உருவெடுத்தது ஒரு காதற்கதை சத்தியாகிய உமாதேவி ஈசனைக் காதலித்து முத்தமிட்ட இடம் அதுவே என்ற முடிவு கட்டினர் சிவனடியார். அதற்கு அடையாளமாகச் சத்தி சிவனை முத்தமிடும் கோலத்தில் அமைந்த திருவுருவமும் அவ்வாலயத்தில் நிறுவப் பெற்றது. அடியார்மீது வைத்த கருணையால் சத்தியின் முத்தத்தையும் சகித்துக்கொண்டு அந்த ஆலயத்துள் அமர்ந்திருக்கின்றார் ஈசன். சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம் பெயர். ஆழ்வார்களுள் நால்வர். அத் திருப்பதியைப் பாடியருளினர். "திருவிண்ணகர் சேர்ந்த அப்பன், தன் ஒப்பார் இல்லப்பன்' என்று நம்மாழ்வார் பாடிப் போற்றினார். அவர் திருவாக்கின் அடியாக ஒப்பிலியப்பன் என்ற திருநாமம் அப்பெருமாளுக்கு அமைந்தது. காலப் போக்கில் ஒப்பிலியப்பன் என்பது 'உப்பிலியப்பன்' என மருவிற்று. உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் அவ்விண்னகருக்கு அமைந்தது. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்துப் பரவலாயிற்று. அதன் விளைவாக இன்றும் உப்பில்லாத திருவமுதை அப் பெருமாளுக்கு அளிக்கின்றார்கள். ஒப்புவமை யில்லாத் தலைவன், அடியார் தரும் உப்பில்லாத உணவையும் உட்கொண்டு, தியாகத்தின் திருவுருவாக அத் திருப்பதியிலே காட்சி தருகின்றார்.

வருண ஜெபம் செய்தால் பருவ மழை பெய்யும் என்பது வைதிகக் கொள்கை. ஆயினும், மழை பெய்விப்பதற்குக் குறுக்கு வழி யொன்று சில ஊர்களிலே கையாளப்படுகின்றது. ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் அமர்த்துள்ள பிள்ளையாருடைய மூச்சைப் பிடித்துவிட்டால் மழை கொட்டும் என்பது கொச்சையன்பர்களின் நம்பிக்கை. அதற்காகப் பிள்ளையாரைச் சுற்றிக் களிமண்ணால் ஒரு கோட்டை கட்டுவர் : தண்ணிரைக் கொண்டுபோய் அதில் கொட்டுவர்; பிள்ளையார் கண் அளவிற்குத் தண்ணிர் நிறைந்தவுடன் மழைக் குறி ஏதேனும் தோன்றுகிறதா என்று விண்ணை நோக்குவர். கார்மேகம் ஒன்றையும் காணாவிட்டால் அவரைச் சுற்றியுள்ள தண்ணிரில் காரமான மிளகாய்ப் பொடியைக் கரைப்பர். இவ்வாறு பாமரமக்கள் எடுக்கும் மூச்சுப்பிடி விழாவில் சில வேளை மழை பெய்வதும் உண்டு. இது பிள்ளையார் படும் பாடு.

தமிழ்நாட்டிலுள்ள சிறந்த திருக்கோவில்களுள் ஒன்று வைத்தீசுரன் கோவில். புள்ளிருக்கு வேளூர் என்பது அதன் பழம் பெயர். அங்குள்ள ஈசன் வைத்தியநாதன். மருத்துவருளெல்லாம் பெரிய மருத்துவன்: வன்பினியையும் தீர்க்க வல்லவன். "பிரிவிலா அடியார்க்கு என்றும் தீரா நோய் தீர்த்தருள வல்லான்" என்று திருநாவுக்கரசர் அப் பெருமானைப் பாடினார். பிறவியென்னும் பெரும்பிணிக்கு ஏதுவாகிய "இருள் சேர் இருவினையும்" துடைக்க வல்ல வைத்தியநாதனை "வினை தீர்த்தான்" என்று பொது மக்கள் போற்றுவாராயினர். 'வினை தீர்த்தான்' என்ற பெயரைக் கேள்வியுற்றார் வசைபாடும் திறம் வாய்ந்த ஒரு கவிஞர். உடனே புறப்பட்டது வசைப் பாட்டு.

"வாதக்கா லாம்தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் புத்திரற்கு - மாதரையில்
வந்தவினை தீர்க்க வகையறியான் வேளுரான்
எந்தவினை தீர்த்தான் இவன்!"

என்று கவிஞர் பாடிய பாட்டையும் வஞ்சப் புகழ்ச்சியாக நெஞ்சார ஏற்றுக்கொண்டு வைத்திகரன் கோவிலில் வாழ்கின்றார் செஞ்சடைக் கடவுள். உமாதேவி மயில் வடிவாக இறைவனைப் போற்றிய இடம் மயிலாப்பூர் என்பர். அவ்வூரிலே அம்மன் கோயில் ஒன்று உள்ளது. முண்டகக் கண்ணியம்மன் கோயில் என்பது அதன் பெயர். அன்பினால் வழிபடும் தொண்டர்களுக்கு முண்டக் கண்ணியாகவா காட்சியளிப்பாள் உமையம்மை? கண்டோர் கண்களைக் குளிர்விக்கும் கண்களல்லவோ அம்மையின் கண்கள்? கருணை பொழியும் கண்கள் முண்டக் கண்களாக இருக்க முடியுமோ? என்ற எண்ணமெல்லாம் நம் மனத்தில் எழுகின்றன. மயிலையில் வாழும் அவ்வம்மையின் உண்மையான பெயரை அறிந்தால் ஐயமும் திரிபும் அகன்றுவிடும். முண்டகக் கண்ணி என்பது அவள் பெயர்: முண்டகம் என்பது தாமரை, சிறப்பு வகையில் செந்தாமரையைக் குறிக்கும். அருளுருவாகிய அம்மையின் செவ்வரி படர்ந்த அழகிய கண்களை வியந்து முண்டகக் கண்ணி என்று ஆன்றோர் பெயரிட்டனர். அதை முண்டக் கண்ணியாகச் சிதைத்து விபரீதம் விளைத்துவிட்டது நம் மக்களின் சிறுமை.

பழனிமலைக்கு அருகே அயிரை என்ற மலை ஒன்று உண்டு. அம்மலையிலே கொற்றவை கோயில் கொண்டாள். வெற்றி தரும் தெய்வமாகிய கொற்றவையை மன்னரும் வீரரும் முன்னாளில் வழிபட்ட செய்தி பதிற்றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களிற் கூறப்படுகின்றது. நாளடைவில் அயிரை மலை என்பது ஐவர் மலையென மருவிற்று. பாண்டவர் ஐவருக்கும் உரியது. அம்மலை என்ற கதை பிறந்தது. பெண் வடிவத்தில் காட்சியளித்த கொற்றவை "ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினரி” என்று புகழப்படும் பாஞ்சாலியாயினாள். பாஞ்சாலி யானாலும் பராசக்தியின் அருள் குன்றாது அம்மலையில் நின்று நிலவுகின்றது. இத்தகைய அரும் பெருங் கருணையே அறிந்தன்றோ.

"வெறுப்பவே செய்யும் என்சிறு மையைதின் பெருமையினால்

பொறுப்பவனே.”

என்று மனம் நெகிழ்ந்து பாடினார் மாணிக்க வாசகர்!


  1. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எழுதியது.